Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஒளிக்கதிர்
ஆனாரூனா


கிழக்கிலும், மேற்கிலும் மதத்தின் எதிரொலி: மிகப் பெரும்பான்மையான இந்தியர்கள் தம்முடைய நாடு ஒன்றே மதப்பிடிப் புடையதென்றும், ஐரோப்பா முழுவதும் நாஸ்திகமாகி விட்டதென்றும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இத்தவறான எண்ணத்தை கிப்லிங், டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்ற நூலாசிரியர்கள் மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக் கின்றனர். இராதாகிருஷ்ணன் எழுதுகிறார்:

``மனிதனுக்கும், கடவுளுக்குமிடையே உள்ள முரண்பாடே மேற்கத்திய பண்பாட்டின் முக்கிய தன்மையாகும். அங்கே மனிதன் கடவுளின் ஆளுமையை எதிர்க்கிறான். அவன் மானிடத்தின் பயனுக்காக கடவுளிடமிருந்தே நெருப்பை (சக்தியை)த் திருடுகிறான். ஆனால், இந்தியாவில் மனிதன் கடவுளின் படைப்பாவான்.’’
அவர் முழு வேதாந்தியாக இருந்திருந்தால், மனிதன் கடவுளின் படைப்பென்று கூறியிருக்க மாட்டார். இதைத் தான் ஜோடிக் குதிரைச் சவாரியென்பது! இன்னும் பாருங்கள்!

``இந்தியப் பண்பாட்டின், நாகரிகத்தின் இரகசியம், அதனுடைய பிற்போக்கான பரந்த மனப்பான்மையே யாகும்.’’

Budhar இந்தியப் பண்பாடும், நாகரிகமும் இந்துக்களில் மூன்றில் ஒரு பகுதியினரைத் தாழ்த்தப் பட்டவர்களாக்குவதில் எப்படி வெற்றியடைந்தது? பிரம்மாவின் முகத்திலிருந்தே ஜாதி வேற்றுமைகள் தோன்றின என்று கூறி தேசிய ஒருமைப்பாடே எப்படி ஏற்படாமல் செய்துவிட்டது? எல்லாவற்றிலும் சிறந்த மனிதனை எப்படிப் பசுலின் கால்களிலும், குரங்கின் கால்களிலும் விழச் செய்தது? பாவத்தைக் கழுவப் பசுஞ் சாணத்தையும், சிறுநீரையும் எப்படி மனிதனைக் குடிக்க வைத்தது? மனித அழுக்கையும், சிறுநீரையும் உட்கொண்டால் சித்த புருஷர்களாகும் வழி முறையை எப்படிக் காட்டியது? பாதி எண்ணிக்கையரான பெண்களைச் சாதாரண மனித உரிமைகளையும் அளிக்காமல் எப்படி ஆண்களுக்கு அடிமையாக்கியது? ஆயிரத்து நானூறு வருடங்கள் வரை `உடன் கட்டை ஏறுதல்’ என்னும் பெயரால், கோடிக் கணக்கான இளம் பெண்களை எப்படித் தீயிட்டுக் கொளுத்தியது? எழுபது வயதுக் கிழவர்களும் பச்சிளம் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர் களை எப்படி இளவயதிலேயே விதவைகளாக்கியது? `உயர் குலத்தோர்’ எனப்படுவோரின் குடும்பங்களில் திருட்டுத்தனமான கருச்சிதைவுகளும், சிசுக் கொலை களும் செய்ய எப்படி அனுமதி வழங்கியது? இத்தனையும் பார்த்தும் மனிதன் ஆத் திரமடையாமல் எப்படி அவனைச் செயலற்றவனாக்கி விட்டது? பல்வேறு ஜாதி வேற்றுமைகளையும், குல வேறுபாடுகளையும் கடந்து அவற்றினுள்ளே இருக்கும் கடுமையைப் பார்க்காதவாறு எப்படிச் செய்ய முடிந்தது? நன்னடத்தை, துர்நடத்தை ஆகியவற்றின் எல்லைகள் ஒன்றையொன்று தொடாதவாறு எப்படி `விஞ்ஞான பூர்வமாக’ப் பிரிவினை செய்ய முடிந்தது?

இவையெல்லாம் ``பிற்போக்கான பரந்த மனப்பான்மை’’யினால்தான் செய்ய முடிந்தது. காரணம், ``இந்தியாவில் மனிதன் கடவு ளின் படைப்பாவான்.’’

சர் இராதாகிருஷ்ணன் போன்ற பக்தர்களும், தத்துவ மேதைகளும் பல நூற்றாண்டுகளாகச் செய்துவந்த `திருப்பணி’யால் இன்று இந்தியா உயிரற்ற முண்டமாகி விட்டதை நாம் ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்கிறோம். இவர்களைப் போன்றோருக்கு மேற்கத்திய நாடுகளில் இத்தனை வெற்றி கிட்டவில்லை. அதனாலேயே அங்கே இடையிடையே புரட்சிகள் வெடித்து வந்தன. இன்றைய ஐரோப்பா அடிமைச் சமுதாயம், நிலவுடைமை, முதலாளித்துவம் ஆகிய சமுதாய அமைப்புகளைக் கடந்து, பொதுவுடைமை அமைப்பிலே ஏறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்றும் ஒரு சில கோடிக்கணக்கான மக்களைக் கொடுங்கோன்மை ஆட்சிக்குட்படுத்தலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்து பக்தர்களும், தத்துவ மேதைகளும் அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஐரோப்பாவில் இப்படிப் பட்ட பக்தர்களும், தத்துவ அறிஞர்களும் இல்லை யென்று கருதிவிட வேண்டாம்.

`கடவுள்’ என்னும் கருத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்! வரலாறு பல தவறுகளைச் செய்து கொண்டே முன்னேறுவதால், பிரபஞ்சத்தின் பின்னால் ஓர் அற்புத சக்தியெதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. அவ்வற்புத சக்தி திட்டமிட்டபடி ஒரு குறிப்பிட்ட பாதையிலே உலகத்தை முன்னேறச் செய்வதுமில்லை. இந்த இரண்டாம் உலகப் போரின் மூன்றாம் ஆண்டில் மதப் பிரசாரத்திற்கு வாய்ப்பிருப்வர்கள் பிரார்த்தனை நாட் களைக் குறிப்பிடலாம்; ஆனால், இன்று நடந்து வரும் இரத்தக் களறியைப் பார்க்கும்போது, நல்லிதயம் படைத்த சர்வ வல்லமை யுள்ள கடவுள் என்பவர் ஒருவர் இருந்திருந்தால், இக் கொடுமைகளே நிகழ்ந்திருக்காது. போரில் நிகழும் நிகழ்ச்சி களைக் கண்டால், ஒன்று கடவுள் மிகக் கொடியவராக இருக்க வேண்டும் அல்லது கையாலாகாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கடவுளை நம்புவதும், அவர் புகழ் பாடுவதையும் காட்டிலும் அவரைத் திரும்பியும் பார்க்காமலிருப்பதே மேல்!

நாம் முன்பே கூறியுள்ளது போல், உண்மையில் உலகம் முரண்பாடுகளிலிருந்து குணாம்ச மாறுதலின் மூலம் முன்பிருந்ததிலிருந்து நிச்சயிக்கப்படாத திசையை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. இம்மாறுதலில் மனிதனுக்கும் பங்குண்டு. அவன் தன் உணர்ச்சிகளையும், செயல் திறனையும் பயன்படுத்தி உலக வளர்ச்சிக்குத் துணை புரிகிறான். பெருமளவில் காரணப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைகிறான். அதன் மூலம் மாறுதலின் திசையையும், வாய்ப்பினையும் தனக்கு அனுகூலமாக அமைத்துக் கொள்வதில் வெற்றி பெறுகிறான். எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து விடுவதே புத்திசாலித்தனம் என்று கருதுமளவிற்கு மனி தன் ஒரு காலத்தில் கடவுள் எண்ணத்தால் கவரப்பட்டான். ஆனால், தர்க்கத்தின், அறிவின் அடி விழுந்ததும் மத்தியகால ஐரோப்பா அல்லது இந்தியாவைச் சேர்ந்த தர்க்கவியலாளர்கள் ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னால் ஒரு காரணத்தைத் தேட முற்பட்டனர். என்றுமே முடிவுறாத காரணப் பரம்பரையை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக அவர்கள் ஒரு `பரம காரண’மான கடவுளிடம் வந்து நின்று விட்டனர். கடவுளுக்குப் பின்னாலுள்ள காரணத்தையும் எவராவது கேட்கத் துணிந்தால், சாஸ்திர சர்ச்சையில் கார்க்கி, யாக்ஞவல்கியரை இப்படிப் பட்ட கேள்வி கேட்டபோது, அவர் கார்க்கியை `உன் தலை உருண்டு விடுமே’ன்று பயமுறுத்தியதைப் போலவே, மற்றவர்களும் கேள்வி கேட்பவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், நாம் ஏற்கனவே சொன்னதைப் போல, எந்த ஒரு காரியமும் ஒரேயொரு காரணத்தால் நிகழ்வதில்லை; அதன் பின்னால் பல காரணங்கள் இருக்கும். அந்த நிலையில் காரண-காரிய விதியால் ஒரேயொரு காரணத்தை யல்ல, பல காரணங்களை அடைகிறோம். அப்படி யென்றால் அங்கே கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன வாய்ப்பிருக்கிறது?

சொல்லும், செயலும் இணைவது குறித்து நாம் கூறிவந்துள்ளோம். அறிவில் சிறந்த அறிஞர்கள் உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், அவர்களில் பலருடைய செயல் அறிவுடன் தொடர்பு கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக இங்கே டாக்டர் காமதா பிரசாத் ஜாய்ஸவால் அவர்களையே எடுத்துக் கொள்வோம். அவர் வரலாற்று தத்துவ மேதையாக இருப்பதால் கடவுளை நம்புவதில்லை; ஆனால், ஜோதிடத்தை மிக அதிகமாக நம்புகிறார். ஜோதிடர் களுக்கு அவர் பெருமதிப் பளிக்கிறார். அவருடன் விவாதித்தால் ஒரு பொதுவுடைமைச் சமுதாய அமைப்பில் வேலையில்லாத் திண்டாட் டம் இருக்காது. பசி பட்டினி இருக்காது, நாளை பற்றிய கவலை இருக்காது, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற் றிய அச்சம் இருக்காது, ஆகவே அந்தச் சமுதாயத்தில் ஜோதிடம், ஆரூடம் போன்றவைகளை நம்பிச் செல்பவர்கள் இருக்க மாட்டார் களென்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். ஜாய்ஸ வால் அவர்களின் கூர்மையான அறிவு விளங்காத எத்தனையோ சரித்திர இரகசியங்களைப் புரிய வைத்துள்ளது. ஆனால், ஜோதிடம் விஷயத்தில் அவருடைய அறிவு வளராமலேயே போய் விட்டது. ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்ஸில் வாழ்ந் திருந்த புகழ்பெற்ற கணித அறிஞரான எமில் ஃப்லி மோரியன்கூட கைரேகை முதலிய மூட நம்பிக்கைகளுக்குப் பலியாகியிருந்தார். அவரைப் போலவே விஞ்ஞானத்தில் நோபல் பரிசு பெற்ற சர் ஆலிவர் லாட்ஜ் தன் மகன் இறந்த வேதனையில் துயருற்று `செத்தவர்களுடன் பேசும் கலை’ என்னும் வலையில் விழுந்திருந்தார். `பாலி’ மொழியிலும், பவுத்த மதத் திலும் புகழ்பெற்ற அறிஞராக விளங்கிய திருமதி ரீஸ் டேவிசின் நிலைமையும் இப்படித்தான் ஆயிற்று. சென்ற உலகப் போரில் அவருடைய மகன் கொல்லப்பட்டதிலிருந்து, அவர் தமது ஆராய்ச்சிப் பணிகளிலும், பழைய நூல்களைப் பதிப்பிப்பதிலும்கூட `பேய்களின்’ உதவியை நாட ஆரம்பித்து விட்டார்.

ஒரு பக்கம் மெத்தப் படித்த மேதாவித்தனம் - மறுபக்கம் மூடத்தனத்தின் பயங்கர இருள் - இப்படிப் பட்ட உதாரணங்கள் நூற் றுக்கணக்கில் தேறும். `புவி ஈர்ப்புச் சக்தி’யைக் கண்டு பிடித்த சர் ஐஸக் நியூட்டன் (கி.பி. 1642 - 1727) ஒரு யுக புருஷரான அறிஞர் என்ப தில் ஐயமில்லை. கணிதத்திலும், இயந்திர இயலிலும் தமக்கிருந்த ஆழ்ந்த அறிவால் அவர் `புவி ஈர்ப்புச் சக்தி’ என்னும் சித்தாந்தத்தைக் கண்டுபிடித்தார். நியூட்டன் தமது அறிவால் பிரபஞ்சத்தின் விதிகளை விளக்கித் தனது தலைவிதியை நிர்ணயிப்பவனாக மனிதனைத் தயார் செய்ய விரும்பனார். ஆனால், மறுபக்கம் அதே நியூட்டன் `பைபிளி’ல் தேவ தூதரான டேனியல் கூறிய எதிர்காலம் பற்றிய வாசகங்கள் எப்பொழுது உண்மை யாகப் போகின்றதென்று கணக்குகள் போட்டு வீணாகக் குழம்பிக் கொண்டிருந்தார்.

தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com