Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கடவுள்களின் மீது கள்ளப் பண வழக்கு?

ஆனாரூனா


ஆற்றுப் படுகைகளிலும் நீர்வழித் தடங்களிலும் ஆக்கிமிரத்துக் கட்டப்பட்ட கட்டடங்களால் ஆறுகளில் ஓடவேண்டிய வெள்ளம் ஊர்களுக்குள் பாய்ந்தது. இதனால் உயிர்கள் அழிந்தன; பயிர்கள் அழிந்தன. பல ஆயிரம் பேரின் வாழ்க்கையே கேள்விக்குறியானது. இந்தப் பேரிழப்புக்குப் பிறகு, ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக முன்னாள் அதிமுக பிரமுகரும் இப்போதைய புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகத்தின் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் சில கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட பெரும் பெரும் கட்டடங்கள் இடிக்கப்படும் போது சில கேள்விகளும் எழுகின்றன. இந்தக் கட்டடங்களைக் கட்ட அனுமதி கொடுத்தவர்கள் மீது நட வடிக்கை வேண்டாமா?

Tirupathi Temple இந்தக் கட்டடங்களுக்கு மின்சாரம் வழங்கியவர்கள் கைது செய்யப்பட வேண்டாமா? தண்ணீர் தந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? கல்லூரிகளைக் கூட இடிக்கத் துணிந்தவர்கள் அங்கங்கே ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோயில்களை இடிக்காமல் விடுவது ஏன்? கல்விக் கூடங்களாவது சில மடையர்களை அறிவாளிகளாக்குகின்றன. இந்தக் கோயில்களோ அறிவாளி வேடத்தில் பல முட்டாள்களையே வளர்க்கின்றன.

மத உணர்வுக்கு மதிப்பளிப்பவர்கள் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது ஏன்? மதமும் மனிதர்களுக்கானதுதான் என்கிறார்களா? அரசியலும் மனிதர்களுக்கானதுதான். அரசியல் தொழிற்சங்கக் கூட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் வீதிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள் மத ஊர்வலங்களுக்கு வீதிகளைப் பயன்படுத்த அனுமதிப்பது ஏன்?

அரசியல் - தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள் வெறும் கேளிக்கை விழாக்கள் அல்ல. அவை அரசுகளின், அதிகார பீடங்களின் கொடுமை களுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காகப் போராடும் ஜனநாயக வழி முறைகள்.

மத விழாக்கள் மனிதர்களுக்கு அவசியமான ஒன்றல்ல. எந்தக் கடவுளும் எந்தக் காலத்திலும் மனித குலத்துக்குத் தேவைப்பட்டதே இல்லை. எந்தக் கடவுளும் எனக்கு விழா எடு என்று கேட்டதும் இல்லை.

இல்லாத ஒருவர், கேட்காத ஒன்றுக்குச் சட்டபூர்வமாக அனுமதி வழங்குவது ஏன்?

அரசியல் கூட்டங்களால் பொதுமக்களின் போக்குவரத்தும் இயல்புநிலையும் பாதிக்கப் படுகிறது என்றால் மத விழாக்களால் மட்டும் பொதுமக்கள் பாதிக்கப்படலாமா? வருமான வரித் துறையினர் திடீர் என்று அதிரடியாகச் சோதனை போட்டுச் சில காகிதங்களையும் (அவை ஆவணங்கள், சொத்து சம்பந்தமான ஆதாரங்கள் என்கிறார்கள்) கொஞ்சம் நகை - பணங்களையும் கைப்பற்றுகிறார்கள். நன்று.

ஆனால் எந்தத் தொழிலும் செய்யாமல், தம்படிக் காசு கூட முதலீடு செய்யாமல் இந்தியப் பொருளாதாரத்தையே அமுக்குகிற அளவுக்குக் கோயில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய்களும், டன்கணக்கில் ஆபரணங்களும் நிலங்களும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனவே இந்தச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாதது ஏன்?

பத்து ரூபாய்க்கு ஒரு படையையே அனுப்பித் துருவித் துருவிக் கேள்வி கேட்டு, ‘கடமையைச் செய்யும்’ நிதி அமைச்சகம், கோயில்களுக்குள் நுழைய மறுப்பது ஏன்?

கோயில் சொத்துக்கள் அனைத்தும் இலஞ்சப் பணங்கள் அல்லவா? ‘காணிக்கை’ என்பது கையூட்டு அல்லவா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவிலிருந்து ஒருவர் ‘செக்’ அனுப்பினார். அதைத் தனது வங்கிக் கணக்கில் சேர்த்தார் முதல்வர். இதற்காக ஒரு வழக்கே நடக்கிறது. அன்னியச் செலாவணி மோசடி என்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். சட்டப்படி இது தவறு என்றாகுமானால், எந்த முகவரியும் இல்லாமல் யாரோ சில அப்பாவிகள், அல்லது வர்த்தகச் சூதாடிகள், அல்லது ஏமாற்றுப் பேர்வழிகள், கோயிலுக்குக் காணிக்கை செலுத் அது நியாயமாகி விடுமா? இதற்காக எந்தக் கடவுள் மீதாவது எந்த வழக்காவது போடப்பட்டதுண்டா?

கடவுள் மீது வழக்குப் போட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் அப்படி ஒருவர் இல்லை. இல்லாத ஒருவர் பெயரால். இத்தனை ஆண்டுகளாக எத்தனை மோசடிகள்? இந்த மோசடிகளையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்காமல் என்னத்தைக் கிழிக்கப் போகிறீர்கள்?


(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஜனவரி 2006ல் வெளியான கட்டுரை)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com