Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

உலக உணவு நெருக்கடிக்கு வளர்ந்த நாட்டு கொள்கை, நுகர்வே காரணம்
பேராசிரியர் டிம் லாங் / - தமிழில் ஆதி

லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உணவுக் கொள்கை பேராசிரியர் திமோத்தி லாங், உணவுத் துறையில் முன்னணி சிந்தனையாளர். உணவு பாதுகாப்பு, உணவு ஏற்றத்தாழ்வு, ஊட்டச்சத்து, உணவு சுதந்திரம்-உணவு கட்டுப்பாடு இடையிலான போட்டி ஆகியவை தொடர்பாக விரிவாக எழுதியுள்ளார். உலக சந்தையில் அடிப்படை உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிரடி உயர்வு அவருக்கு ஆச்சரியம் தருவதாக அமையவில்லை. இந்த நெருக்கடி தொடர்பாக உணர்ந்து கொள்ளாமல், உலகம் தூக்கத்தில் நடப்பது போல சென்று கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து அவர் எச்சரித்து வருகிறார். உலக உணவு நெருக்கடி பற்றி அவரது சிந்தனைகள்:

- உணவு நெருக்கடிக்கு நவீன தொழில்நுட்பங்களால் தீர்வு கண்டுவிட முடியுமா?

food_crisis 1970களில் சூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளை பஞ்சம் தாக்கியது. அப்போது உணவு நெருக்கடி பெரிய பிரச்சினையாக எழுந்தது. அப்பொழுது பசுமை புரட்சி மூலம் பயிர்களில் கலப்பினத் தொழில்நுட்பம் புகுத்தப்படுவது நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்ததால், உற்பத்தி சார்ந்த அணுகுமுறை உணவு நெருக்கடியை மீட்டது. ராக்பெல்லர் அறக்கட்டளை மற்றும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற முக்கிய உணவுப் பயிர்களில் அப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன் பசுமைப் புரட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தைப் போலவே, தற்போதைய உணவு நெருக்கடியை மரபணு மாற்றம் சீரமைத்துவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இன்று நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினையின் விரிவு மற்றும் ஆழத்தை பார்க்கும்போது மரபணு மாற்றம் போன்ற தொழில்நுட்பங்களால் உணவு நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதே எனது நம்பிக்கை.

- உணவு நெருக்கடியை விரிவாக எப்படி விளக்குவீர்கள்?

உணவு நெருக்கடியை பாதிக்கக் கூடியதாக எட்டு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்:

எரிசக்தி: ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. 95 சதவிகித உணவுப் பொருட்கள் கச்சா எண்ணெய் போக்குவரத்தை சார்ந்து இயங்குபவை. விவசாய உற்பத்தியில் கிடைக்கும் லாபங்கள் அனைத்தும் உரம் மற்றும் இயந்திரமயமாக்கலை (கச்சா எண்ணெயைச்) சார்ந்துள்ளன. கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரிஎரிபொருள்களைக் கருதுவது இனிமேலும் சரி என்று சொல்ல முடியவில்லை. உயிரிஎரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரித்தால் உணவு உற்பத்திக்கான நிலம் குறையும். அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து எரிபொருள் தேவையில் 10 சதவிகிதத்தை உயிரிஎரிபொருள்கள் மூலம் பூர்த்தி செய்ய, 30 முதல் 70 சதவிகித உணவுப் பயிர்களை கைவிட வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் சாத்தியமில்லாதது.

உணவுப் பொருள் விலை: உணவுப் பொருட்களின் விலை அதிவேகமாக உயருகிறது. இதற்கு யூக வணிகம் காரணமல்ல. பல பத்தாண்டுகளாக சேமிப்பு அளவுகள் மிகக் குறைவாகவே இருந்தன. 1980களில் இருந்து தலைக்கு இவ்வளவு என்று கிடைக்கும் உணவின் அளவு குறைந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவு 2006யைவிட, 2007ல் 5 சதவிகிதம் அதிகரித்தது. இதற்கு உமி நீக்கிய தானியம், உணவு எண்ணெய் ஆகிய இரண்டின் விலை உயர்வே காரணம். உயிரிஎரிபொருள் உற்பத்தியில் அதிகம் இடம்பெறும் தானியங்கள் இவை. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவு 2008ல் 13 சதவிகிதம் அதிகரிக்கும் என்று உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது வளர்ந்த நாடுகளுக்கு கடினமான ஒன்றாகவும், வளரும் நாடுகளுக்கு பயங்கரமானதாகவும் மாறக்கூடும்.

மக்கள்தொகை: அதிவேகமாக உயர்ந்து 2007ல் மக்கள்தொகை 660 கோடியாக உள்ளது. 2050ம் ஆண்டுக்குள் இது 910 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நகர்மயமாக்கம் முற்றுப்புள்ளி வைக்க முடியாதது போலத் தோன்றுகிறது. 1961ம் ஆண்டில் 100 கோடி பேர் நகரங்களில் வாழ்ந்தனர், 1986ல் அது 200 கோடியானது, 2003ல் அது 300 கோடியானது. 2018ல் அது 400 கோடியாகவும், 2030ல் அது 500 கோடியாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1798ம் ஆண்டில் தாமஸ் மால்தூஸ் எச்சரித்தது என்னவென்றால், மக்கள்தொகை ஜியோமெட்ரிக் முறையில் அதிகரித்தாலும், உணவு விநியோகம் அரித்மெடிக் முறையில் அதிகரிக்கிறது என்று கூறினார். இந்தக் கொள்கை முன்பு உண்மையில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் மக்கள்தொகை வளர்ச்சியும், உணவுத் தேவைகளும் கணக்கிட முடியாதவையாக இருக்கின்றன. ஆனால் அனைவரது வயிற்றையும் நிரப்பியாக வேண்டுமே. அதற்கு அதிவேக நடவடிக்கை தேவைப்படுகிறது. இதற்கு உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் அல்லது வேளாண் முறைகளை மாற்ற வேண்டும். எது நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தொழிலாளர்: இது முந்தை பிரச்சினையுடன் தொடர்புடையது. நகர்மயமாக்கம் தவிர்க்க முடியாதது என்றால், கிராமப்புறங்களில் யார் வேலை பார்ப்பார்கள்? நிலப் பயன்பாட்டு மாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எப்பொழுதும் வாழ்க்கை கடினமாக இருக்கிறது, அதற்கான வெகுமதியோ மிகக் குறைவாக இருக்கிறது, பாதுகாப்பின்மை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அரசு கொள்கைகள் பெரிய விவசாயிகளை மையமிட்டதாக உள்ளன. ஏனென்றால் உபரி உற்பத்தி செய்வதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உலகிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகளே. அவர்களுக்குத்தான் புதிய வசதிகள் செய்துதர வேண்டும். தீர்வின் ஒரு பகுதியாக அவர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு மாற்றாக இனிமேலும் கச்சா எண்ணெய் கிடைக்காது என்ற நெருக்கடி உருவாகும்போது, இயந்திரமயமாக்கலின் அர்த்தம் என்னவாக இருக்கும்? கச்சா எண்ணெயை சார்ந்து இயங்கி வரும் உலகம், மீண்டும் வயல்களில் வேலை செய்ய தொழிலாளர்களை நாடப் போகிறதா? பார்ப்போம்.

நிலம்: பயிர் செய்வதற்கு உரிய நிலப் பகுதிகள் என்பது கடல்மட்டம், வடிகால் வசதி, முதலீடு போன்றவற்றைப் பொருத்தது. தற்போது உள்ளதைவிட இன்னும் 12 சதவிகித நிலத்தை பயிர் உற்பத்திக்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எல்லையில் உள்ள நிலங்கள் குறைந்த உற்பத்தியை தருவதாகவும், அதிக செலவு பிடிக்கக் கூடியதாகவும் இருக்கும். காலநிலை மாற்றம், நிலப் பயன்பாட்டு மாற்றங்களை பெருமளவு மாற்றக் கூடியது. சமீபத்தில் பிரிட்டனில் நடந்த ஓர் ஆய்வில், அங்குள்ள நுகர்வோர் பயன்படுத்தும் உணவின் அளவு, அவர்களிடம் உள்ள நிலம் மற்றும் கடலைவிட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்தது. பிரிட்டன் மக்கள் நிலங்களை அகங்காரத்துடன் பயன்படுத்துகிறார்கள்.

நமது 'திறன்மிக்க உணவு அமைப்பு', உண்மையில் மற்ற மக்களின் நிலத்தில் இருந்து சுரண்டப்பட்டது. நவ காலனியத்தை அடிப்படையாகக் கொண்ட சந்தையில், நம்மிடம் உள்ள அதிகப்படியான பணம் இதை சாத்தியமாக்குகிறது. 60 ஆண்டுகளாக அறிவியல்பூர்வமான வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மத்தியில் பிரிட்டன் நுகர்வோர் தற்போதும் உற்பத்தி செய்யப்படும் உணவில் 25 சதவிகிதத்தை வீணாக்குகிறார்கள். வரலாற்று ரீதியில் பார்த்தால், இது பழைய வகையான வீணாவதில் இருந்து (நிலம் சீர்கேடு அடைதல் மற்றும் கிடங்கில் வீணாதல்), புதிய வகையான வீணாவதாக மாறியிருக்கிறது (வீடுகளில் வீணாவது, நிலத்தை தோண்டி மேடாக்குவது)

நீர்: உலகள அளவில் உள்ள குடிக்கத்தக்க நன்னீரில், வீடுகளில் 10 சதவிகிதம், தொழிற்சாலையில் 20 சதவிகிதம், விவசாயத்தில் 70 சதவிகிதம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது 92 சதவிகித மக்களுக்கு நன்னீர் போதிய அளவு கிடைத்து வருகிறது. 2025ல் இது 62 சதவிகிதமாகக் குறைந்துவிடும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு நன்னீர் தேவைப்படுகிறது என்பது, அப்பொருள் வெளியிடும் பசுமையில்ல வாயு அளவுக்கு இணையாக முக்கியமானது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவு பொருள் விற்பனையில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தணிக்கை செய்து வெளியிட வலியுறுத்த வேண்டும். இப்படி முத்திரையிடுவது பெரும் பலன் தரும்.

எதிர்காலத்தில் பெரும் தண்ணீர் நெருக்கடி காத்திருக்கிறது என்பதால், ஊதாரித்தனமாக தண்ணீரை பயன்படுத்துவதை முதலில் கைவிட வேண்டும். பிரிட்டனில் அதிக நன்னீர் இருப்பது போலப் படுகிறது. ஆனால் உண்மை என்ன? சமூகநீதிக்கு புறம்பாக மற்ற மக்களின் நன்னீரை நாம் சுரண்டி வருகிறோம். ஒரு கிளாஸ் பீருக்கு 75 லிட்டர் தண்ணீர், ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூசுக்கு 190 லிட்டர் தண்ணீர், ஒரு ஹம்பர்கர் (உணவுப் பண்டம்) 2,400 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.

வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், உணவு வர்த்தகம் என்பது எல்லைகளைத் தாண்டி தண்ணீரை இடம்பெயர்த்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஒவ்வோர் ஆண்டும் 20 நைல் நதிகளில் ஓடும் அளவு தண்ணீர், வளரும் நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பிரெட் பியர்ஸ் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம்: இது நமது பட்டியலில் உள்ள மிகப் பெரிய ஆபத்து. ஸ்டெர்ன் அறிக்கையின்படி காலநிலை மாற்றத்துக்கு காரணமாக உள்ள பசுமையில்ல வாயுக்கள் வெளியீட்டில் 14 சதவிகிதம் விவசாயத்தை சார்ந்தது. வேளாண் மாசு வாயு வெளியீட்டில், 38 சதவிகித உரங்கள் காரணமாகவும், 31 சதவிகிதம் கால்நடை வளர்ப்பு காரணமாகவும் உருவாகின்றன. காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு ஆகும் செலவை தனது அறிக்கையில் சேர்க்கத் தவறிவிட்டதாக ஸ்டெர்ன் தெரிவித்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் உணவு அமைப்பை மாற்றியமைப்பது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். இந்தப் பிரச்சினை எதிர்காலத்தில் கடுமையாக தாக்காமல் இருக்க, எப்பொழுதும் போல சுற்றுச்சூழல் தவறுகளை தொடர்ந்து கொண்டிருப்பதை முதலில் கைவிட வேண்டும்.

food_crisis ஊட்டச்சத்து மாற்றம்: இந்தச் சொல் பொருளாதார வளம் பெருகுவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பானது. வளரும் நாடுகளில் தற்போது இது நிகழ்ந்து கொண்டுள்ளது. அங்கு உடல்நலத்துக்கான செலவு தற்போது பெரும் அழுத்தமாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளில் நுகர்வோரின் உணவுப் பழக்கம் மாறுகிறது. சர்க்கரை, குளிர்பானம், இறைச்சி, பால் பொருட்களை அவர்கள் அதிகம் உண்டு வருகின்றனர். இதன்காரணமாக நோய் தாக்கும் முறைகள் மாறி வருகின்றன. உணவு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் உருவாகும் தீராத நோய்களான இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, உடல்பருத்தல் உள்ளிட்டவை தொடர்பான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. வளரும் நாடுகளில் ஏற்கெனவே மிக மோசமான நிலைமையில் ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த அதிகரிப்பு நிகழ்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

- இவற்றை அடிப்படையாகக் கொண்டு எப்படி தீர்வு காண்பது?

மேற்கண்ட எட்டு அம்சங்களும் உலக உணவு கொள்திறளை பாதிக்கும் மிகப் பெரிய அடிப்படைக சவால்களாகும். இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. ஒருங்கிணைந்து மாபெரும் கொள்கை மாற்றங்களை உருவாக்கக் கோருபவை. இதை கொள்கை மதிப்பீட்டாளர்கள் உணர்ந்து வருகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் உணரவில்லை. உணவு நெருக்கடி பிரச்சினைக்குத் தீர்வாக 'சந்தை சக்திகளிடம் விட்டுவிடுவோம்' அல்லது 'விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்', 'உதவி வழங்குதல் மற்றும் சந்தையை அணுகும் நடைமுறையை எளிதாக்கினால் எல்லாம் சரியாகிவிடும்' என்று அரசியல்வாதிகள் பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருகின்றனர்.

பூமியின் வளங்கள் கணக்கற்றது என்று முன்முடிவுடன் மனிதர்கள் இனிமேல் செயலாற்றக் கூடாது. இப்பொழுதுள்ள நமது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றை தொடரலாமா? கட்டாயம் மாற்றம் செய்தாக வேண்டுமா? என்று தீர்மானகரமாக முடிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

- தற்போதைய உணவு நெருக்கடிக்கு காரணம் யார்?

தற்போதைய உணவு நெருக்கடி வளரும் நாடுகளை மட்டும்தான் பாதிக்கிறது என்று பலரும் கருதுகிறார்கள். வளரும் நாடுகள் இப்படி அவதிப்படுவதற்கு, வளர்ந்த நாடுகள் எடுத்த முடிவுகள்தான் காரணம்.

இந்த உணவு நெருக்கடிக்கு வளர்ந்த நாடுகளில் உள்ள கொள்கை வகுப்பாளர்களும் அளவுகடந்து நுகரும் நாடுகளும் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதன் மீது இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். மேலே நான் கூறிய எட்டு அடிப்படைகளுக்கு அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது முக்கியம். மேற்கத்திய சந்தைகளை வெளிச்சக்திகள் தடுமாறச் செய்கின்றன என்று அந்நாடுகள் கூறி வருகின்றன, இது அப்பட்டமான பொய்.

- உணவு உற்பத்தி, உலக மக்களின் பசியைத் தீர்த்திருக்கிறதா?

'கடந்த 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதைப் போல உணவு அமைப்பை தீவிரப்படுத்த வேண்டும். 'உற்பத்திமயம்' (றிக்ஷீஷீபீuநீtவீஷீஸீவீsனீ) என்று கூறப்படும் முறையைத் தொடர வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உணவை உற்பத்தி செய்து, உணவு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் 'உற்பத்திமயம்' கூறியது. அறிவியலும், முதலீடும் உற்பத்தியை அதிகரித்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடும் என்று உற்பத்திமயத்தை உருவாக்கியவர்கள், கொள்கை வகுப்பாளர்களிடம் சமாதானம் செய்திருந்தார்கள். 1940களில் இது பலன் தந்தது. ஆனால் இன்று பலன் தராது.

சுற்றுச்சூழலில் உணவு உற்பத்தி என்ன வகையான பாதிப்புகளை உருவாக்குகிறது என்று ஆராய வேண்டும். வளங்குன்றாத உணவு அமைப்பை உருவாக்க வேண்டும். பூமியில் எதை உற்பத்தி செய்ய முடியும், மனிதர்களுக்கு என்ன தேவை என்ற இரண்டு அம்சங்களையும் சமநிலையில் வைக்க வேண்டும். இது மிகக் கடினமானது. பூமிக்கும், மனித உடல்களுக்கும் ஒரு சேர நலன் பயக்கும் வளங்குன்றாத உணவை கண்டு பிடிக்க வேண்டும்.

'உலக உணவு அமைப்பு' பற்றி இரண்டு பார்வைகள் உண்டு. 'உற்பத்தியமயம்' கொள்கைப்படி பார்த்தால் 'உலக உணவு அமைப்பு' வெற்றிகரமாகச் செயல்படுகிறது எனலாம். கடைகளில் உணவுப் பொருள்கள் வழிந்து நிரம்பியிருக்கின்றன.

ஆனால் வளங்குன்றா வளர்ச்சி நோக்கிலிருந்து பார்த்தால், 'உலக உணவு அமைப்பு' என்பது உலகை முழு சீர்குலைவுக்கு அழைத்துச் செல்வது போலிருக்கிறது. நமது கொள்கைகள் மூளைக் கோளாறு கொண்டதாக இருக்கின்றன. ஒரு பக்கம் ஒட்டுமொத்த வெற்றி போலத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் ஒட்டுமொத்த தோல்வியும் உண்டு. உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், உற்பத்தி அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அதற்கு மிகப் பெரிய விலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

- இதற்கு தீர்வு காண்பதற்கு முன் நம் முன் உள்ள பிரச்சினைகள் என்ன?

நமது அடிப்படைத் தத்துவம் வளங்குன்றா வளர்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், உடல்பருத்தல், ஊட்டச்சத்து குறைவு ஆகிய புதிய அக்கறைகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அப்படிப் பார்த்தால் நிறைய கேள்விகள் தோன்றுகின்றன. கச்சா எண்ணெய் தீர்ந்துவிட்டால் என்ன ஆகும்? நிலத்தை முறையாக பயன்படுத்துவற்கான எல்லை என்ன? நகர்மயமாகிவிட்ட உலகில், வேளாண் அமைப்புகள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும்? ஆரோக்கியமான, வளங்குன்றாத உணவு அமைப்பு எது?

- உணவு நெருக்கடிக்கான தீர்வு எப்படி உருவாகும்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, 'ஒழுங்கு கொண்ட மாற்றம்' சாத்தியம் என்றே நம்பினேன். இப்பொழுது அது சாத்தியம் என்று தோன்றவில்லை. ஆனால் இப்பொழுது 'நிகழ்வுகள்'தான் அனைத்தையும் திறம்பட வழிநடத்தி வருகின்றன. இனிமேல் அதிர்ச்சிதான் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பகுத்தறிவாளர் என்ற வகையில், அந்த அதிர்ச்சி சிறியதாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

அதிர்ச்சிகள் குழப்பமானவை, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. தவறான உணவுக் கொள்கைகள் காரணமாக, ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் சாலைகளில் நாம் நடைபிணம் போல் நடந்து கொண்டிருப்போம் என்று தோன்றுகிறது. கண்டுகொள்ளப்படாத அந்தத் தவறான கொள்கைகளை தடுப்பதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். உணவுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு பதிலாக, உணவு சுதந்திரத்தின் பக்கம்தான் நாம் நிற்க வேண்டும்.

- ஆதி

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com