Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஆனா அந்த மடம், ஆகாவிட்டா சந்தை மடம்
ஆதவன் தீட்சண்யா


1.
இந்திய சமூகம் சாதிரீதியான தனித்தனி தொகுப்புகளாக பிரிக்கப்பட்டும் அதேநேரத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுமுள்ளது. எந்தச் சூழலிலும் இச்சாதிகள் தம்மை சமமாகக் கருதி இணங்கி வாழ முடியாதவாறு கடும் விதிகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பன்மப் படிநிலை பாகுபாட்டை உருவாக்கி நிலைநிறுத்தத் தேவையான தத்துவபலத்தை கிறித்தவமோ இஸ்லாமோ வழங்கவில்லை. கி.மு.1500களில் இந்தியப் பரப்புக்குள் நுழைந்த ஆரியர்களின் ஒதுக்குவதும் ஒதுங்குவதிலுமிருந்து தொடங்குகிறது இந்தப் பாகுபாடும் புறக்கணிப்பும்.

சடங்குகள், யாகங்கள், பரிகாரங்களால் உருக்கொண்டது ஆரியர்களின் வேதமதம். அது சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்தது. வேதத்தின் முதன்மையை ஏற்காதவர்களை அவர்ணர்களாக்கி ஒதுக்கிவைத்தது. இந்துமதத்தின் தொடக்கம் இதுவென்றால், சமத்துவமின்மையின் மீதே அது கட்டப்பட்டது என்ற முடிவுக்கும் வரமுடியும். அதன் கொடுமைகளுக்கு எதிரான புத்தரின் போதனைகள் செல்வாக்கு பெற்று ஒரு மதமாகப் பரவிய காலத்தில் சமூகத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தனர் வேதமதத்தினர். பௌத்தத்தை அரசமதமாக ஏற்று ஆண்டு வந்த பிருகத்ரதனைக் கொன்ற புஷ்யமித்ர சுங்கனால் கி.மு.185வாக்கில் வேதமதம் உயிர்ப்பிக்கப்பட்டது. இன்றைய இந்துமதத்தின் தொடக்கமாக இதைக் கொள்வோமானால், அது அன்பிலும் அகிம்சையிலும் அல்லாமல்- பௌத்தர்களின் ரத்தங்குடித்து கொலைக்களத்தில் உருவானது என்ற முடிவுக்கு வரலாம்.

ஓதுதலும் ஓதுவித்தலுமாகிய தனது வர்ணக்கடமையிலிருந்து வழுவி, புஷ்யமித்திரன் ஆயுதமேந்தி அரசதிகாரத்தைக் கைப்பற்றியதை நியாயப்படுத்தியும், பௌத்தம் கோலோச்சிய காலத்தில் தளர்ந்துபோன வர்ணப்பாகுபாட்டை மீண்டும் இறுகப்படுத்தவும் சுமதி பார்கவா புதிய மனுஸ்மிருதியை எழுதினார். வர்ணத்தூய்மையின் சிதைவை சாதியாக உருவாக்கியதும், தொடத்தக்க- தொடத்தகாத சாதிகள் என்று இருகூறாகப் பிரித்ததும், ஒவ்வொரு சாதியையும் என்றென்றைக்கும் இணையமுடியாத அநேக உட்சாதிகளாகப் பிரித்ததுமாகிய இந்த புதிய மனுஸ்மிருதியிலிருந்து இந்துமதம் தொடங்கியதெனில் அதன் காலம் கி.மு.163 க்கு பின்பானது என்றாகிறது.

இப்படி வரலாற்றின் எந்தக் கட்டத்திற்குள் நுழைந்தாலும் இந்துமதத்தின் தொடக்கம் ஆரியர் நுழைவுக்கு அப்பாற்பட்டதல்ல. இந்த குறுகியகால வரலாற்றை ஒப்புக்கொள்வதில் உள்ள சங்கடங்களைத் தவிர்க்கவே இந்துமதம் ஆதியந்தமற்றது - சனாதனமானது என்ற புனைவுகளால் அலங்கரிக்கப்படுகிறது. சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க பெர்ஷியர்களால் சூட்டப்பட்டப் பெயரே இந்து என்பது. ‘சிந்து என்ற நதிப் பெயரிலிருந்து தோன்றிய ஹிந்து என்ற சொல்...’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்ட்ரீய சர்வநாச சங்கத்தின் தலைவர்களில் ஒருவராயிருந்த எம்.எஸ்.கோல்வால்கரும் (ஞானகங்கை, பாகம்-1,பக்-143).

முகலாயர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் அல்லாதாரை இந்துக்கள் என்று குறிப்பது பரவலானது. ஆன்மீக மொழியில் சிக்கலாக்கி சொல்வதாயின் ‘அதுவாக இல்லாததால் இது’. கடவுள், புனிதநூல், வழிபாட்டுத்தலம் என்று எதுவுமே பொதுவாயின்றி வெவ்வெறு வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்த மக்கள் அனைவரையும் இந்து என்ற பொதுச்சொல்லால் விளித்தமையால் வந்த வினைதான் இந்துமதம். பின்னாளில் அது, நடப்பிலிருந்த எல்லா வழிபாட்டு முறைகளிலிருந்தும் சாதியமைப்புக்கு இசைவான கருத்துக்களை உட்செரித்துக் கலவையானது. ஆகவே ஒரு மதத்திற்குரிய தனித்த வரையறைகள் எதையும் கொண்டதல்ல இந்துமதம். சுயமும் உள்ளீடுமற்ற இந்த மொக்கைத்தனம்தான் இந்துமதத்தின் தனித்தன்மை- எல்லாவற்றையும் உள்ளடக்கும் நெகிழ்வுத்தன்மை என இந்துத்வாவினரால் கொண்டாடப்படுகிறது.

2.
இந்தப் பின்புலத்தோடு, அர்ஜூன் சம்பத்தின் ‘சேரவாரும் ஜெகத்தீரே..’ என்ற கட்டுரையை (தினமணி, 25.03.08) வாசித்தால் ‘உலகின் மூத்ததும் முழுமையானதுமான இந்து சமயம்’ என்கிற அவரது வாதத்திலுள்ள மோசடிகளை உணரமுடியும். தனது மதத்தின் மதிக்கத்தக்க நெறிகள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லாததால் ‘வையும், வள்ளுவரும், வள்ளலாரும், விவேகானந்தரும் போற்றிய சமயம் இந்து சமயம்’ என்று புளுகுகிறார். வையும் வள்ளுவரும் வாழ்ந்த காலத்தில் உருவாகியேயிராத ஒரு மதத்தை அவ்விருவரும் போற்றினராம். தாய் தகப்பனுக்கு முன்பே பிள்ளை பிறந்துவிட்டது என்கிற அபத்தத்திற்கு நிகரானது இது. வரலாறு நெடுக படுகொலைகளை நிகழ்த்தியவர்களின் இன்றைய வாரீசான இந்துமதத்தை, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் நெஞ்சம் என்று ஜீவாபிமானத்தால் கசிந்துருகும் வள்ளலார் எப்படி போற்றியிருக்க முடியும்?

இந்துசமயத்தில் மரியாதையில்லை, அரவணைப்பு இல்லை என்று பிற மதம் தழுவிய தலித்துகள் அங்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் சாதி இழிவுகளுக்கும் ஆளாகி வருவது குறித்து கவலைப்படுவதாக கூறிக்கொள்ளும் அவர், தலித்துகளை தாய்மதமான இந்துமதத்திற்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எங்கள் மதத்திற்கு திரும்பி வந்தால் சமமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவீர்கள் என்றழைக்க அவரது மதத்தின் யோக்கியதை ஒத்துழைக்கவில்லை. எனவே, அங்கே போய் அவமானப்பட்டு கிடப்பதற்கு பதில், இங்கே வந்து அவமானப்படுங்களேன் என்கிறார். இந்த அறைகூவலுக்குள் மறைந்திருக்கும் மோசடிகள் எவையென்றால், தலித்துகளின் தாய்மதமெனவும் தமிழ்ச்சமயம் எனவும் இந்து மதத்தை முன்னிறுத்துவதுதான். ( தமிழ், தமிழன் பெருமை பேசி தாம்தூம் தையத்தக்கா என்று ஆட்டம் போடும் தமிழினத் தலைவர்கள் யாரும் இந்துத்வவாதிகளின் இத்தகைய மோசடிகள் குறித்து இன்னும் ஏன் எண்பதடி உயரத்துக்கு எகிறி குதிக்கவில்லை என்ற கேள்வி இவ்விடத்தில் எழுகிறதா உங்களுக்கு?)

வர்ணமுறைக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலித்துகள் அதனாலேயே இந்துமதத்திற்குள் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்களுக்கு தாய்மதம் என்று ஒன்று இருக்குமானால் அது பௌத்தமே. சாக்கியர் என்பதே சக்கிலியர் என்று மருவியதாக அருந்தியர்களும் தம்மை பௌத்தத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். 1911ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், வேதத்தின் முதன்மையையும், பார்ப்பனப் புரோகிதத்தையும் ஏற்க மறுக்கும் பத்துவகையான வாழ்வியல் கூறுகளுடையோரை தலித், பழங்குடிகளென வகைப்படுத்தியதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும். தனித்துவமான வாழ்வியல் பண்புகளையுடைய தலித்துகளை இந்துக்கள் என்ற நெல்லிக்காய் மூட்டையில் சேர்த்துக்கட்டிய வரலாற்று மோசடிகளுக்கு எதிராகத்தான் அயோத்திதாசர் தன்னை ‘பூர்வபௌத்தன்’ என்று அறிவித்துக்கொண்டார். ‘தீண்டப்படாத இந்துவாய்ப் பிறந்தது என் அவலம், ஆனால் இந்துவாய் இறக்கமாட்டேன்’ என்று 1935 டிசம்பர் 13ம் நாள் அம்பேத்கர் பிரகடனம் செய்ததும் இதன்பொருட்டே.

தனது தந்தையும் முன்னோர்களும் பக்தியில் சிறந்த இந்துக்களாய் இருந்தும், கல்வியறிவு பெறுவதையும் ஆயுதம் ஏந்துவதையும் சொத்து சேர்ப்பதையும் இந்து மதத்தின் கட்டுப்பாடுகளே தடுத்தன என்பதை சுட்டிக் காட்டிய அம்பேத்கர் இதே அனுபவங்கள் ஒவ்வொரு தலித்துக்கும் நேர்ந்திருப்பதை அம்பலப்படுத்தினார். முனிவர்களைப்போல பேசிக்கொண்டே கசாப்புக்காரர்களைப்போல செயல்படுகிற, எறும்புகளுக்கு ஒருபக்கம் சர்க்கரை போட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் சகமனிதனின் தாகத்துக்கு தண்ணீர்தர மறுக்கிற இந்துக்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாமென அவர் தலித்துகளை எச்சரித்தார்.

அதேநேரத்தில் ‘கிறித்தவமோ, இஸ்லாமோ, சீக்கியமோ அன்றிப் பிற எந்த மதத்திற்கோ நாம் மாறினாலும் நமது நலன்களைப் பெற நாம் தொடர்ந்து போராடியே தீரவேண்டும் என்ற உண்மையை நன்கறிவோம். இஸ்லாத்தில் சேருவதன் மூலம் நவாபுகளாகவோ, கிருத்துவத்தில் சேருவதன் மூலம் நாமனைவரும் போப்பாண்டவராகவோ ஆகிவிட முடியுமென்று கனவு காண்பது அறிவீனம்’ ( அ.தொ.நூ.37, பக் 136) என்ற தெளிவோடுதான் அம்பேத்கர் மதமாற்றத்தை முன்வைத்தார். சாதியத்தால் குறுக்கீடு செய்யப்பட்ட இந்திய மனம் எங்கும் எந்தநிலையிலும் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிராகவே இயங்கும் என்பதால், இங்கு கிறித்தவமும், இஸ்லாமும்கூட சாதியத்தின் செல்வாக்கிற்குள் முழுகிவிட்டதை உணர்ந்தே அவர் இவ்விரண்டு மதங்களையும் நிராகரித்து பின்னாளில் பௌத்தத்தை முன்வைத்தார்.

இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தமது கூட்டு மனநிலையில் தகித்தெழும் கலகவுணர்வின் வெளிப்பாட்டு வடிவமாகவே மதமாற்றத்தை தலித்துகள் இன்றளவும் கைக்கொள்கின்றனரேயன்றி வேறொரு வெங்காய மயக்கமும் அவர்களிடம் இல்லை. ‘ஆனா அந்த மடம், ஆகாவிட்டா சந்(ஆ)த மடம்’ என்ற சொலவடை மதம் குறித்த தலித்துகளின் பார்வையோடு நடைமுறைப் பொருத்தம் கொண்டதாகும்.

3.
தொடக்ககால கிறித்தவ மறைப்பணியாளர்கள், இந்துத் துறவிகளைப் பார்த்து அவர்களைப் போலவே காவியுடுத்தி உத்திராட்சமும் கட்டைச் செருப்பும் அணிந்தனர். பெயருக்குப் பின்னால் ஐயர் என்று சேர்த்துக்கொண்டனர். ஆதிக்கசாதியினரை கிறித்தவராக்கிவிட்டால் மற்ற சாதியினரையும் இழுத்துவிடலாம் என்ற நப்பாசையில் அப்படியான முயற்சிகளில் இறங்கினர். கிறித்தவத்திற்கு மாறிய ஆதிக்கசாதியினர் அந்த மதத்தையும் மாசுபடுத்தியதன் விளைவுதான் இன்று அர்ஜூன் சம்பத்தின் அங்கலாய்ப்பில் காணப்படும் பாரபட்சங்களும் தீண்டாமைகளும். ஆக இந்துமதமும் அதன் சாதியும்தான் இங்குள்ள எல்லா மதங்களும் பாழ்பட மூலக்காரணம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாமல் இவர் பிறமதங்கள் மீது பழிபோடுவதும்கூட மோசடியில் ஒரு வகையே. கிறித்துவத்தஆயும் இஸ்லாத்தையும் பார்த்துத்தான் சாதியொடுக்குமுறை என்ற ஒன்று இருப்பதையே அறிய நேர்ந்த அப்பாவியைப் போன்று வாய்ச்சாமர்த்தியம் காட்டுகிறார்.

தன்னை பிடித்துவைத்திருக்கும் இந்து மதத்திலிருந்து வெளியேற நூறுநூறானக் காரணங்கள் ஒரு தலித்துக்கு இருக்கும்போது, அயல் மதத்தாரது படையெடுப்பினால் வாள்முனையிலும், ஏழ்மையில் உழல்கிறவர்களுக்கு பொருளாதார ஆதாயங்களைக் காட்டியுமே இங்கு மதமாற்றங்கள் நிகழ்ந்தது நிகழ்கிறது என்பதே இந்துத்வாவின் ஜோடனைக் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இஸ்லாமிய, கிறித்தவ ஆட்சிகளுக்கு முன்பாகவே இவ்விரண்டு மதங்களும் இந்தியப் பகுதியோடு தொடர்பு கொண்டிருந்தாலும் இன்றளவும் அவை சிறுபான்மையாகவே உள்ளன. பின்பு, அதிகாரத்தையும் நாட்டின் கருவூலத்தையும் கைப்பற்றிய இஸ்லாமிய மன்னர்களும், கிறிஸ்தவ பிரிட்டிஷாரும் ஒட்டுமொத்த இந்தியரையும் மதம் மாற்ற அவர்கள் ஆட்சியிலிருந்த காலஅளவு போதுமானதுதான். தத்தமது மதங்களை பெரும்பான்மையாக்கி இருக்கமுடியும். ஆனால் அவர்களின் நோக்கம் மதப்பிரச்சாரமோ மதமாற்றமோ அல்ல, நாட்டைக் கைப்பற்றி கொள்ளையடிப்பதுதான்.

பெரும்பாலும் அவர்கள் சாதிமுறைக்குள்ளோ இந்து மதத்திற்குள்ளோ தலையிடவில்லை. மட்டுமல்ல, தமது மதங்களின் தனித்தப் பண்புகளை இந்துமதம் அரித்துக் கொண்டிருப்பதை தடுக்காதவர்களாகவும் இருந்தனர். ‘பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்டம் எனக்கு’ என்பதுபோல இந்த நாட்டுக்கு வந்த எல்லாமதங்களும் இங்குள்ள சாதிமுறைமையோடு இணக்கம் கொண்டிருப்பதை நிறுவிக் காட்ட இங்கு உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை.

ஒருவேளை அர்ஜூன் சம்பத்தின் அழைப்பை ஏற்று ஏழெட்டுத் தலைமுறைகளுக்கு முன்னால் மதம் மாறிய ஒருவர் வந்தால் அவரை வெறும் இந்து என்று ஏற்றுக்கொள்கிற ஏற்பாடு இந்து மதத்திற்குள் இருக்கிறதா? மதம் மாறி பல தலைமுறைகள் கடந்ததில் பூர்வஜாதி மறைந்து இப்போது வெறும் மத அடையாளத்தோடு நிற்கும் ஒருவரை எந்த சாதிக்குள் அடைப்பது என்ற சிக்கல் இந்துமதத்திற்குள் இருப்பதால்தான், அது ஒரு பிரச்சார மதமாக இல்லாமலிருக்கிறது. எனவேதான் இந்துமதத்தை தழுவுமாறு யாரும் வற்புறுத்தப்படுவதில்லை. சேரவாரும் ஜெகத்தீரே என்று அழைப்பதிருக்கட்டும், பிறமதத்திலிருந்து வருவோரை சேர்த்துக்கொள்வீரா அகத்தீரே... என்று தன் சொந்த மதத்தாரை கேட்க வேண்டும் அர்ஜூன் சம்பத்.

இருக்கட்டும். இந்துமதத்துக்கு திரும்புங்கள் என்று தலித்துகளை அழைப்பதன் பின்னுள்ள தந்திரங்கள்தான் என்ன? ஒருவேளை அவர்கள் திரும்பினால்- அவர்களது சாதி ஏற்கனவே தெரியுமென்பதால்- இங்கேயும் தலித்துகளாகவே நீடிக்கவிடுவதில் சிக்கலொன்றும் இல்லை என்பதுதான். மதம் மாறிய தலித்துகள் தம்மை மதஅடையாளத்துக்குள் மட்டுமே பொருத்திக் கொள்ள விரும்பினாலும் மற்றவர்கள் அவர்களை சாதியாகவே பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் தாய்மதத்திற்கு வருமாறு தலித்துகளுக்கு மட்டுமே அறைகூவல் விடுக்கப்படுகிறது. தாய்மதத்திற்கு திரும்புமாறு ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் விடுத்த அறைகூவல்களும்கூட இப்படி வெத்துவேட்டு ஆரவாரம்தானேயன்றி அந்தரங்கசுத்தியானதல்ல.

பிறமதத்தார் தலித்துகளுக்கு கொடுமையிழைப்பதாக அரற்றும் அர்ஜூன் சம்பத், இந்துமதத்தார் நிகழ்த்தும் வன்கொடுமைகள் குறித்து எப்போதாவது வாய்திறந்திருக்கிறாரா? எதிர்த்துப் பேசக்கூடாதென்று தலித்துகள் வாயில் மலத்தைத் திணித்தபோது, அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது அரைடவுசர் கூட்டாளிகளின் வாய்கள் காலியாகத்தானே இருந்தன... பின் ஏன் எதுவோ திணிக்கப்பட்டதைப்போல இறுக மூடிக்கொண்டிருந்தார்கள் வாயை?

இல்லாத பொல்லாதக் காரணங்களை இட்டுக்கட்டி பாபர் மசூதியை இடிக்க கடப்பாரை தூக்கிய இவர்கள், இதோ இவர்களது மூக்குக்குக் கீழே மதுரை பேரையூர் உத்தாபுரத்தில் தலித்துகள் ஊருக்குள் வரக்கூடாதென்று எழுப்பப்பட்டிருக்கும் மதில்சுவரை இடிக்க ஏன் கிளம்பவில்லை? இந்துமதத்திற்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது- எல்லோரும் வாருங்கள் மலமள்ளப் போகலாம் என்று எப்போதாவது அறைகூவல் கொடுத்திருக்கிறாரா? இல்லையே. பிறகென்ன வாய்ப்பந்தல்? என்ன இழிவுகள் நேர்ந்தாலும் தாங்கிக்கொண்டு எங்கள் மதத்திற்குள்ளேயே இருக்கவேண்டும் என்று வற்புறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

தலித்துகளும் பிற்பட்ட மக்களும் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், தமிழில் அர்ச்சனை- பாடுதல் போன்ற உரிமைகளை ஏதோ இந்துமதத்தின் நற்பண்பில் விளைந்தவைபோல காட்டுவதற்கும் அவர் துணிந்திருக்கிறார். இந்துமதத்தில் இருக்கிறவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாமென்பது, இங்கே வந்தால் இடஒதுக்கீடு கிடைக்கும் என்று பிறமதத்திலிருப்பவரிடம் ஆசைவார்த்தை கூறும் மலிவான உத்திகள் நிரம்பிய இந்தக் கட்டுரை இந்துத்வாவினர் சமகால நிகழ்வுகளையும்கூட திரிப்பதில் வல்லவர்கள் என்பதையே அம்பலப்படுத்துகிறது.

4.
எந்தப்பக்கமும் சாராதிருப்பதில் உள்ள சௌகர்யங்களை முன்னிட்டு நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்க மனோபாவத்தின் பிரதிநிதியாக ‘ நடுநிலை நாளேடு’ என்று வந்து கொண்டிருந்தது தினமணி. சுதந்திரப்போராட்ட காலத்தில் தொடங்கப்பட்டது, தேசிய உணர்வு மிக்கது, அவசரநிலைக் காலத்தில் தணிக்கைக்கு உள்ளானது, கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுவது என்பது போன்ற பழைய பெருங்காய டப்பா வாசனையும் பாவனையும் அதற்குண்டு. தினமணியின் செய்திகள் நம்பகமானவை (?) என்ற நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்தியை திரையாகப் பிடித்துக்கொண்டு தினமணி, இந்துத்வாவின் ஊதுகுழலாக வெளிப்படையாக செயல்படுகிறது. எனவே அதற்கு உண்மைகளை விடவும் பொய்யும் புனைவும் விருப்பமானவையாக உள்ளன. அதற்கான ஒப்புதல் வாக்குமூலம், இந்த கட்டுரையை வெளியிட்ட நோக்கத்தில் மறைந்திருக்கிறது.

(தினமணிக்கு எழுதப்பட்ட இந்த மறுப்பு இந்த தேதிவரையிலும் பிரசுரிக்கப்படவில்லை. மாற்றுக் கருத்தை மதிக்கும் அதன் மாண்பு வாழ்க வாழ்க...)

- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com