Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நூல்

இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்
இராசேந்திர சோழன்

தமிழீழ விடுதலைப் போராட்த்தைத் தணிக்க, போராளி இயக்கங்களைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தன் ஆதிக்க நலனுக்கேற்ப மேற்கொண்ட நட வடிக்கையின் விளைவாக இலங்கை அரசோடு ஏற்படுத்திக் கொண்டதே ராஜீவ் செயவர்த்தனே ஒப்பந்தம். ஏற்னெவே நாம் குறிப்பிட்டிருந்த, இலங்கையுடனான இந்திய அரசின் அணுகுமுறையிலிருந்து நாம் இப்பிரச்சினைiயை நோக்க புரிந்து கொள்ள வேண்டும்.

Thileepan and Prabakaran இலங்கை அரசை பலவீனப்படுத்தி அது தன்னைச் சார்ந்திருக்க வைக்கும் நோக்கில் ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளித்து வந்ததை நாம் அறிவோம்.இப்படி பயிற்சி பெற்ற குழுக்கள் 1985ஆம் ஆண்டு தங்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஈழத் தேசிய விடுதலை முன்னணி (நுசூடுகு) என்னும் அமைப்பை உருவாக்கி, கீழ்க்கண்டுள்ள 5 கோரிக்கைகளை முன் வைத்து, இதனடிப்படையில் கூட்டாகச் செயல்படுவது என முடிவெடுத்தன.

1. இலங்கையின் ஆதிக்க அடக்குமுறையிலிருந்து ஈழத்தின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் மீட்டல்

2. ஈழத் தமிழ்த் தேசியத்தின் தன்னுரிமையை உறுதி செய்கிற தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்த பட்சத் திட்டத்தையும் ஏற்காதிருத்தல்.

3. பரந்துபட்ட மக்கள் போராட்டப்பாதையை முன்னெடுத்தல்

4. சுதந்திரத் தமிழ் ஈழத்தை சோஷலிசக் குடியரசாகக் கட்டி எழுப்புதல்.

5. உலக ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கப் பட்டியலிலிருந்து ஈழத்தை முற்றாக விடுவித்து அணி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்.

இக்கோரிக்கைகளையும், இதனடிப்படையிலான போராட்டக் குழுக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளும் இந்திய அரசுக்கு அச்சமூட்டின. இது இப்படியே தொடர்ந்தால், தனி ஈழம் மலர்ந்தால் அதன் தாக்கம் தமிழகத்திலும் ஏற்படும் என்று எண்ணிய இந்திய அரசு, தன் உளவுத்துறை அமைப்பான ‘ரா’ மூலம் இப்போராளிக் குழுக்களுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், இக்குழுக்களை அழைத்து வைத்து, ஈழச் சிக்கலுக்குத் தான் முன்வைக்கும் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவும் கட்டாயப் படுத்தியது.

இதற்காக இந்தியா 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போராளிக் குழுக்களை அழைத்து வைத்து பூட்டான் தலைநகரான திம்புவில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து, இந்தியாவில் தன்னதிகாரமற்ற மாநிலங்களுக்கு உள்ளது போன்ற அற்ப அதிகாரங்களை ஈழத்திற்கு வழங்குவதான ஒரு திட்டத்தை முன்வைத்து அதை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியது. ‘ரா’வின் சதிவலைக்கு சில போராளிக் குழுக்கள் பலியாக, போராளிக் குழுக்களுக்குள்ளே பிரிவும், மோதலும் உருவாகியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா திம்பு பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து பெங்களூர், சென்னை, தில்லி என பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இலங்கை அரசுடன் கலந்து ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி அதை விடுதலைப் புலிகள் அமைப்பையும் ஏற்கச் செய்ய நிர்ப்பந்தித்தது. புலிகள் அமைப்பு அதை ஏற்க மறுத்த தருணத்தில் இந்திய அதிகாரிகள் சிலர் 1987 ஜூலையில் யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனைச் சந்தித்து, ராஜீவ் அவருடன் பேச விரும்புவதாகக் கூறி தில்லிக்கு அழைத்து வந்து அசோகா விடுதியில் தங்க வைத்தனர். அப்போது தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர்.

கிட்டத்தட்ட இல்லச் சிறைபோல அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்ட பிரபாகரனிடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை உடன்பாடு பற்றிச் சொல்லி அதன் நகல்களைக் கூட அவர் முழுமையாய்ப் படித்தறிய வாய்ப்பில்லாமல், அதை ஏற்கச் சொல்லி வற்புறுத்தினர். அவர் மறுக்கவே, பிற போராளி அமைப்பு களை அதை ஏற்க வைத்து, ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க, இதுவே ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் எனப்படுகிறது.

இவ்வொப்பந்தத்தில் இந்தியா சார்பில் கையொப்பமிட 1987 ஜூலை 29 அன்று ராஜீவ் கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். மறுநாள் 20-07-09 அன்று ராணுவ அணி வகுப்பு மரியாதை ராஜீவுக்கு அளிக்கப்பட்ட போதுதான் சிங்கள கப்பற்படை படையாள் ஒருவன் ராஜீவ் காந்தியைத் துப்பாக்கியால் தாக்கியதும், ராஜீவ் தலை குனிந்து ஒதுங்கி அத்தாக்குதலில் இருந்து தப்பித்து வந்ததும்.

இந்த ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை புலிகள் அமைப்பும் ஏற்க வில்லை. அப்போதைய இலங்கை பிரதமர் பிரேமதாசா உள்ளிட்ட 11 அமைச்சர்களும் ஏற்கவில்லை.

இப்படி இருதரப்பு எதிர்ப்புக்கும் இடையே வலுவந்தமாக இவ் வொப்பந்தம் திணிக்கப்பட்டது. அதாவது பிரபாகரனை தில்லி வரவழைத்து, அவரை அசோகா விடுதியில் சிறைப் பிடித்து வைத்து, ராஜீவ் இலங்கை போய் கையொப்பமிட்டு அதை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் மிக முக்கியமான ஒரு பிரிவு போராளிகள் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது. இதற்காகவே இந்தியாவிலிருந்து இந்திய அமைதிக் காப்பு படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் ஈழத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தங்கள் தலைவரைச் சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு இந்தியா இவ்வொப்பந்தத்தைத் திணிக்க முயன்றது கண்டு ஈழமக்கள் கொதித் தெழுந்தனர். இந்திய ராணுவம் தங்கள் மண்ணில் நுழைய விடாமல் பெண்கள், குழந்தைகள் உள்பட மக்கள் ஒன்று திரண்டு மறியல் போராட்டங்களில் ஈடு பட்டனர்.

இதைப் பார்த்த தில்லி அரசு அம்மக்களைச் சமாதானப் படுத்த பிரபாகரனை விடுவித் து அவரை ஈழம் அனுப்பியது. புலிகள் தரப்பில் இக்கட்டான நிலை, சிங்கள இனவெறித் தாக்குதல் ஒருபுறம், விருப்பமில்லாத ஒப்பந்தத்தை ஏற்க நிர்ப்பந்திக்கும் இந்தியா ஒருபுறம். முற்றாக இதை எதிர்த்தால் ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகள். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை இப்போதைய சூழலில் பகைத்துக் கொள்வதும் சரியான உத்தியாய் இருக்காது என்று உள்ள நிலையை ஈழ மக்களுக்கு விளக்கி, அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கிறார் பிரபாகரன்.

1987 ஆண்டு ஆகஸ்டு 2ஆம் நாள் அன்று யாழ்ப்பாணம் அடுத்த சுதுமலை என்னுமிடத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த மாபெரும் மக்கள் திரள் கூட்டத்தில் தற்போது நிலவும் சூழலையும் இந்திய அரசின் நிலைப்பாட்டையும் விளக்கிய பிரபாகரன், இப்போதைய நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு தருவதைத் தவிர வேறு மாற்று இல்லை என அறிவித்தார். அடையாளப் பூர்வமாக மட்டும் சில ஆயுதங்களை ஒப்படைத்து போராளிகள் தற்காப்பாக பெரும் பகுதியைப் பாதுகாத்து மறைத்து வைத்தனர் போராளிகள்.

இந்திய அரசோ, இலங்கை அரசோ உடன்பாட்டின் அற்ப சொற்ப நடவடிக்கைகளைக் கூட நிறைவேற்றித் தர முன்வரவில்லை. இந்நிலையில்தான் புலிகள் அமைப்பின் இளைஞர், மருத்துவக் கல்லூரி மாணவர் திலீபன் யாழ் நகரில் 1987 செப். 15 ஆம் நாள் கீழ்க்கண்டுள்ள 5 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார்.

1. பயரங்கரவாதச் சட்டத்தின் கீழ் சிறைப் படுத்தப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும்.
2. வடக்கு கிழக்கு பகுதிகளில் நிகழ்த்தப்படும் வலுவந்த சிங்களக் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும்.
3. இடைக்கால அரசு அமைக்கப்படும்வரை நிவாரணப் பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும்.
4. இடைக்கால அரசு அமைந்த பிறகே காவல் நிலையங்கள் அமைக்கப் பட வேண்டும்.
5. சிங்கள ஊர்க்காவல் படையினரிடமிருக்கும் ஆயுதங்களைத் திரும்பப் பெறவேண்டும்.

ஆனால் இந்தக் கோரிக்கைகள் எதையும் சிங்கள அரசு நிறைவேற்றாத, இந்திய அரசும் அதற்கு வற்புறுத்தாத நிலையிலேயே திலீபன் பட்டினிப்போர் தண்ணீர் கூட அருந்தாமலே 12 நாள் தொடர்ந்து செப். 26 அன்று இறுதியடைந்தார்.

இதற்குப்பின், சமாதான உடன்படிக்கை நடப்பில் இருக்கிற நம்பிக்கையில் இயல்பாய் வெளியில் நடமாடிய புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 புலிகளை சிங்கள அரசு கைது செய்து கொழும்பு கொண்டு செல்ல முயன்றபோது, இந்த நம்பிக்கைத் துரோகத்தைத் தடுத்து நிறுத்த போராளிகள் இந்திய அரசை, அமைதிக் காப்புப் படையைக் கோரியபோதும் அதைக் காதில் வாங்காது அதில் 12 போராளிகள் சயனைடு அருந்தி இறக்கக் காரணமானது இந்திய அரசு.

இவையனைத்தும் ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் இந்திய அரசின் மீதும் இந்திய ராணுவத்தின் மீதும் கோபத்தைத் தூண்ட மக்கள் அமைதிக் காப்புப் படையை எதிர்க்கக் தொடங்கினர். அதை அடக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய ராணுவம் சிங்கள ராணுவத்தை விடவும் மிகவும் கொடுமையாகவும் மூர்க்கத் தனமாகவும், இழிவாகவும் கேவலமாகவும் நடந்து கொள்ள சிங்கள அரசே இந்திய ராணுவத்தின் இருப்பை விரும்பாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் 1989இல் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வி.பி.சிங் பிரதமர் பொறுப்பேற்க, 1990இல் அவர் இந்திய அமைதிக் காப்புப் படையைத் திரும்பப் பெற ஆணையிட்டார்.

இவ்வாறாக இந்திய அரசு தனது ஆதிக்க இலக்கை நிறைவேற்ற இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி முகத்தில் கரி பூசிக் கொண்டு திரும்பி வந்தது. அப்போது ஏற்பட்டு நிறைவேறாத ஒப்பந்தமே ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் எனப்படுகிறது. ஈழச்சிக்கலில் இலங்கை இப்படி இந்தியாவை மாட்டிவைத்து இலங்கையில் சமாதானத்தை நிலை நாட்டுகிறேன் என்கிற பெயரில் இந்தியா படையை அனுப்பி வைத்து, அதற்கு 2050 கோடி ரூபாய் செலவிட்டதுடன், தன் தன் படையாள்களையும் 1,100 பேரை இழக்க வைத்ததை வைத்துத்தான், பின்னாளில் இலங்கை அதிபர் பொறுப்புக்கு வந்த சந்திரிகா “ஈழச் சிக்கலில் இந்தியா தூக்கு மாடிக் கொள்ள கயிறு திரித்துத் தந்தவர் ஜெயவர்த்தனே” என்று துல்லியமாகக் குறிப்பிட்டார்.

ஆனால் இவரும் பாரிசில் கல்வி கற்ற சனநாயக முற்போக்குவாதி போல தன்னைக் காட்டிக் கொண்டு முந்தைய இனவெறி அரசுகள் போல் ‘தமிழின அழிப்புப் போரில்’ ஈடுபட்டதை வைத்துத்தான் இவரது நிலையை விளக்க புலிகள் அமைப்பினர் இவரை பாரிஸ் தொப்பியும், சிங்கள சப்பாத்தும் அணிந் தவர் சந்திரிகா என்று குறிப்பிட்டனர். சப்பாத்து என்றால் காலணி. அதாவது சந்திரிகா தோற்றத்துக்குப் பாரிஸ் தொப்பியணிந்த சனநாயக வாதி. ஆனால் காலில் இருப்பதோ சிங்கள சப்பாத்து, பிற்போக்கு இனவெறி என்பது இதன் பொருள்.

ஆக இலங்கை அரசை யார் ஆண்டாலும் எந்தக் கட்சி ஆண்டாலும் அது சிங்கள இன வெறி அரசாகவே இருக்கிறது என்பதும் அந்த சிங்கள இனவெறி அரசக்கு ஆதரவாகவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பதுமே உண்மை. இந்திய அரசின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு கூறே ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- இராசேந்திர சோழன்

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com