Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழச் சிக்கலும் இடதுசாரிகளும்

இராசேந்திர சோழன்

varadharajan 1970-களில் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் உள்ள சிற்றூர்ப் புறங்களில் எங்காவது கூட்டம் நடந்தால் கூட அங்கு ‘வீரம் செறிந்த வியட்நாம் மக்களின் போராட்டத்தைப் பற்றிப் பேசாமல் கூட்டத்தை முடிக்கமாட்டார்கள் நம் இடதுசாரிகள். இது நியாயமானதுதான். உலகின் எந்த மூலையிலும் போராடும் மக்களுக்கு எல்லாத் தரப்பு மக்களும் ஆதரவு தரவேண்டும் என்கிற அடிப்படையில் இது தேவையானதுதான். ஆனால், இதே நியாயத்தின் அடிப்படையில் அண்டையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, கடும் இன்னல்களுக்கு மத்தியில் போராடிவரும் ஈழத்தமிழ் மக்களுக்கும் குரல் கொடுக்க வேண்டியதுதானே.

என்றாலும் பக்கத்தில் இப்படி ஒரு போராட்டம் நடப்பதாகவே கண்டு கொள்ளாமல் அது எது பற்றியும் கவலைப்படாமல் நீண்ட காலம் மௌனம் சாதித்து வந்தார்கள் நம் இடதுசாரிகள். இதில் தற்போதுதான் சமீப சில நாள்களாக மௌனம் கலைத்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க போராட முன்வந்திருக்கிறது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (சி.பி.ஐ.).

ஏற்கெனவே தமிழக மீனவர்களைக் காக்க இலங்கைத் தூதரகம் முன் மறியல் நடத்திய கட்சி கடந்த 02-10-2008 அன்று தமிழகம் முழுக்க, மாநாகராட்சிகளிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் ஒருநாள் அடையாளப் பட்டினிப் போராட்டத்தை நடத்தியது. இதற்கான அறிவிப்பு வந்த உடனேயே, ஏற்கெனவே ஈழத்திற்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழுவும், இன்னும் பல தமிழ் அமைப்புகளும் தானாக முன் வந்து ஆங்காங்கே இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இதற்குத் தங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்தன.

ஆனாலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இச் சிக்கலுக்காக இதுவரை இன்னும் எதுவும் அசையவில்லை. அவர்கள் இதுவரை ஈழத்துக்காக தனியாக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை என்பதோடு 02-10-2008 அன்று நடைபெற்ற போராட்டத்திலும் தங்கள் கட்சித் தோழர்களோடு திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு அதற்கு ஆதரவு அளிக்க முற்படாமல் வெறுமனே பேச்சாளர்களாக மட்டுமே சிலர் வந்து கலந்து கொண்டு “மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் - மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில்” என்று கிளிப்பிள்ளை போல தங்கள் கட்சி நிலைப்பாட்டினை எடுத்துரைக்கும் மேடையாக அதனைப் பயன்படுத்திக் கொண்டு பேசி முடித்த உடனேயே விருந்தாளி போன்று நடையைக் கட்டினர்.

மனித குலத்தை அனைத்து வகையான ஒடுக்குமுறையிலிருந்தும் விடுவிக்கும் ஒரே தத்துவம் மார்க்சியமே என்பது ஒர் அறிவியல் உண்மை. பொருளியல் ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, மத ஒடுக்குமுறை, மொழி ஒடுக்குமுறை, தேசிய இன ஒடுக்கு முறை என எந்தவித ஒடுக்குமுறையானாலும் எல்லாவித ஒடுக்குமுறைக்கும் இது பொருந்தும். ஆனால் இப்படிப்பட்ட மகத்தான தத்துவத்தை வழங்கிய மார்க்சியத்தின் பேரால் கட்சி நடத்தும் சி.பி.எம். ஈழமக்களின் தேசிய இன ஒடுக்குமுறை பற்றி தானாக எந்தவிதக் கண்டனக்குரலும் எழுப்பாமல், யாராவது நடத்தும் போராட்டத்தில் நானும் பங்காளிதான் என்பதுபோல் வந்து வாலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறது.

இவர்களுக்கு, இவர்களது கட்சிக்காரர்கள், இவர்களது வெகுசன அமைப்பு சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே உறைக்கும். அதற்கு மட்டுமே குரல் கொடுப்பார்கள். வேறுயாருக்கும் குரல் கொடுக்கமாட்டார்கள், அப்படியே கொடுப்பதானாலும், பாதிப்பு கூட்டணிக் கட்சியால் ஏற்படுவதானால், குரலை அடக்கி வாசிப்பார்கள். கண்டன வாசகத்தைத் திருத்தி கூட்டணி மனம் கோணாமல் அதை சாந்தப்படுத்துவார்கள். அப்படித்தான் மதுரை தினகரன் ஊழியர் படுகொலையில் அப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் அடக்கி வாசித்தார்கள். தற்போது ரெட்டணை சம்பவத்தின் போது கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதால் துள்ளிக் குதித்தார்கள்.

சரி, இது அவர்கள் அரசியல். அது எப்படியும் கிடந்து விட்டுப் போகட்டும். இதில் நமது கேள்வி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிமை மறுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா. மார்க்சியத்தில் அதற்கு இடம் உண்டா இல்லையா. மார்க்சிஸ்டுகள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். கூடவே இன்னொன்று, இ.க.க. ஈழச்சிக்கலுக்காக தழிழகத்தில் ஒருநாள் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள் சரி. மகிழ்ச்சி. வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் ஒரு அகில இந்தியக் கட்சி இதற்கு தமிழகத்தில் மட்டும்தான் போராட்டம் நடத்தவேண்டுமா. இந்தியா முழுக்க தங்கள் அமைப்புள்ள இடங்களிலெல்லாம் நடத்த முடியாதா. இப்படி நடத்தினால் இந்தியா முழுக்க இப்பிரச்சனை தெரியும். அங்கங்குள்ள சனநாயக சக்திகளுக்கும் செய்தி போகும். அச்சக்திகளும் இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும். தில்லி அரசுக்கும் ஒரு நெருக்கடி ஏற்படும். இல்லையா? ஆனால் ஏன் அப்படிச் செய்யவில்லை.

உலகப் பிரச்சனைகளுக்கெல்லாம் அகில இந்தியப் போராட்டம் நடந்துபவர்கள் இப்பிரச்சனைக்கு மட்டும் தமிழகத்தோடு போராட்டத்தை வரைமுறைப்படுத்திக் கொண்டது ஏன், இது தமிழனுக்கு மட்டுமேயான பிரச்சனை என்று கருதுவதாலா? வடக்கே குசராத்துக்கு, அசாமுக்கு, பாபர் மசூதிக்கு, ஒரிசாவுக்கு எல்லாம் இங்கே தமிழன் குரல் கொடுக்கவேண்டும். ஆனால் தமிழனுக்காக தமிழர்களின் சகோதர ரத்தத்துக்காக வடக்கே யாரும் குரல் கொடுக்க மாட்டார்களா. குரல் கொடுக்க வைக்க வேண்டுவது கட்சியின் கடமைதானே. போனது போகட்டும், இனி மேலாவது செய்வார்களா என்பதே கேள்வி.

eelamwar இத்துடன் இன்னொரு செய்தியும். 123 அணு ஒப்பந்தத்திற்கு இந்த ஆட்டம் ஆடிய இடதுசாரிகள் குறிப்பாக, இ.க.க.மா. ஈழ மக்களுக்கு எப்போதாவது குரல் கொடுத்திருப்பார்களா? சிங்கள அரசுக்கான தில்லி அரசின் உதவியைத் தடுத்து நிறுத்தக் கோரியிருப்பார்களா? தில்லி அரசு சிங்கள அரசுக்கான உதவிகளைத் தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று எப்போதாவது இதற்காக கோரிக்கை வைத்திருப்பார்களா? போகட்டும். இப்போதாவது கோரட்டுமே பார்ப்போம்.

ஆக, இப்படி இடதுசாரிகள் ஒருபக்கம், தமிழ்நாட்டில் தில்லிக்கு ஆதரவு தந்து வரும் தமிழக கட்சிகள் ஒரு பக்கம், எல்லாம் ஓரணியில் திரண்டு, ஈழச் சிக்கலுக்கு அழுத்தம் கொடுத்து குரல் கொடுத்தால் போதும். தில்லி அரசு ஒரு வழிக்கு வரும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பு இருந்தும் தமிழக கட்சிகள், தமிழகத் தலைவர்கள் இந்த வாய்ப்பை நழுவவிட்டு, ஈழ மக்கள் இன்னலை அனுபவிக்க அனுமதித்து வருகிறார்களே, இது நியாயமா? வரலாறு இவர்களை மன்னிக்குமா? என்பதை நினைக்கthத்தான் வேதனையாக இருக்கிறது.

தி.மு.க.வின் நீலிக் கண்ணீர்

ஈழச் சிக்கலில் உறுதியான எந்த நிலைபாடும் எடுத்து அந்த மக்களுக்கு உதவ முன்வராமல், இதில் தில்லி அரசின் நிலைபாடே தன் நிலைபாடு என்று ஈழ மக்களுக்கு துரோகம் செய்து வரும் தி.மு.க. இச்சிக்கலில் மக்கள் எழுச்சி கொள்ளும்போதெல்லாம் தானும் இதில் அக்கறையோடு இருப்பதாகக் காட்டிக் கொள்ள அவ்வப்போது சில போலிப் போராட்டங்கள் நடத்தி நீலிக் கண்ணீர் வடித்து வருகிறது.

ஈழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி உணர்ந்து தமிழக மக்களும், ஈழ ஆதரவு அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் இன உணர்வு அமைப்புகளும் தொடர்ச்சியாக போராட்டக் களத்தில் குதிக்க ‘தன் தமிழினத் தலைவர் பட்டம்’ எங்கே கழன்று போய் விடுமோ என்கிற அச்சத்தில் 6-10-2008 அன்று மயிலை மாங்கொல்லையில் கூட்டம் போட்டது, கூட்டத்தில் உருப்படியான நடவடிக்கை எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் பிரதமருக்குத் தந்தி கொடுக்க அறிவித்தது. ஏற்கெனவே மன்மோகன் சிங் கழிப்பறையில் பயன்படுத்திக் கொள்ள அனுப்பிய எண்ணற்ற கடிதங்கள், சட்டமன்றத் தீர்மானங்கள் போதாதென்று தாள் பற்றாக்குறையைப் போக்க, தற்போது தந்தி கொடுக்க அறிவிப்பு கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது.

இதுவன்றி சுவரொட்டி ஒன்றும் அடித்து தமிழ்நாடு முழுக்கவும் ஒட்டியிருக்கிறார்கள். வாசகம் என்ன தெரியுமா. ‘இந்திய அரசே, இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்து’. அங்குள்ள தமிழர்களை ஈழத் தமிழர் என்று சொல்லக்கூடத் திராணியற்று வெளிப்பட்டுள்ளதுடன், வாசகங்களும் ஒப்புக்கு ஒப்பாரி வைப்பதாகவே அமைந்துள்ளன.

நாம் கேட்கிறோம். தமிழ் இன உணர்வாளர்கள் கேட்கிறார்கள். தி.மு.க. நினைத்தால் ஈழச் சிக்கலுக்காக ஒரு எழுச்சி மிகு போராட்டம் நடத்த முடியாதா? தில்லி அரசுக்கு நிர்ப்பந்தம் தந்து பணிய வைக்க முடியாதா. தில்லி அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஈழ மக்களுக்கு உதவச் செய்ய முடியாதா. முடியும். ஆனால் அதற்கு மனமில்லை. இந்த லட்சணத்தில், ஈழச் சிக்கலில் தில்லி அரசு தாயுள்ளத்தோடு உதவுவதாக பாசாங்கு வேறு. இப்படிப்பட்ட பாசாங்கு வார்த்தைகளும், பசப்பல் வரிகளும் தானே தமிழினத்தையே வஞ்சித்து, அதன் உரிமைகளை குழி தோண்டிப் புதைத்து வருகிறது.

ஈழச் சிக்கலும் கிறித்துவ அமைப்புகளும்

ஒரிசாவில் கிறித்துவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இங்கு தமிழகத்தில் கிறித்துவ அமைப்புகள் பலதும் தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு சனநாயக மனித உரிமை அமைப்புகளும் ஆதரவு தந்து வருகின்றன. நல்லது. உலகின் எந்த மூலையில் மனிதம் பாதிக்கப்பட்டாலும் எல்லாரும் சேர்ந்து கண்டிக்க வேண்டியதுதான். குரல் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் இந்த நியாயம் பலருக்கும் அவரவர் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே தெரிகிறது. அதற்கு மட்டுமே குரல் கொடுக்க வைக்கிறது.

காட்டாக ஈழ மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக என்ன விதமான துன்பமெல்லாம் பட்டு வருகிறார்கள். சிங்க இன வெறி இராணுவ நடவடிக்கைகள் அப்பாவித் தமிழர்களை எப்படியெல்லாம் கொன்றழித்து வருகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், இதுவன்றி சிங்கள ராணுவம் கல்வி நிலையங்கள், தேவாலயங்கள் மீது குண்டு மழை பொழிந்தபோது உலக கத்தோலிக்கத் தலைவர் போப் எத்தனை அறிக்கை விட்டிருப்பார். அப்போதெல்லாம் இங்குள்ள கிறித்துவர்களுக்கு மனம் இரங்கவில்லையா, ஈழத்தில் கொல்லப்படுவது மனித உயிர்களாகத் தெரியவில்லையா, கிறித்துவத்தில் சேர்ந்தால் தான் அவன் மனிதன் இல்லாவிட்டால் அவன் மனிதன் இல்லையா அவன் உயிர் போனால் பரவாயில்லையா. அன்பைப் போதித்த ஆண்டவர் யேசுவின் போதனைகளைப் பின்பற்றி வரும் கிறித்துவர்களது மனித நியாயம் இதுதானா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

போனது போகட்டும், இனியாவது இக்கிறித்துவ அமைப்புகள் ஒரிய கிறித்துவர்களுக்கு குரல் கொடுக்கும் அதேவேளை ஈழத் தமிழர்களுக்கும் குரல் கொடுக்கட்டும். ஆமென்.

ஈழச் சிக்கல் நீட்டிப்புக்கு இன்னொரு காரணம்

ஈழச்சிக்கலில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததற்கு, அதன் அயலுறவுக் கொள்கை, அரச உறவுகள் சார்ந்த கோட்பாட்டு நிலைபாடுகளுக்கு அப்பால் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சக ஏ.கே. அந்தோணி ஒரு மலையாளி. பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மலையாளி. வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஒரு மலையாளி. இப்படி இப்பிரச்சினைகள் சார்ந்த அமைச்சர், ஆலோசகர், செயலாளர் அனைவருமே தமிழர் அல்லாதவராக, குறிப்பிட்ட ஒரு தேசிய இனம் சார்ந்தவராக இருந்தால் அவர்களுக்குத் தமிழர்கள் பற்றி எப்படி அக்கறை வரும்?

எங்காவது மலையாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு உணர்வு துடிக்கும். ஆனால் பாதிக்கப்படுவது தமிழன்தானே என்பதானாலும், இதில் அக்கறையற்ற போக்கு நிலவ வாய்ப்புண்டு.

- இராசேந்திர சோழன்

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com