Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

இன்று இலங்கையில் ஈழம் - நாளை இந்தியாவில் தமிழகமா?
தில்லி ஆட்சியாளர்களுக்கு ஒரு கேள்வி!

இராசேந்திர சோழன்

சிங்கள அரசு தமிழீழத்தில் நடத்தி வரும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தின் பல்வேறு பிரிவு மக்களும் பல்வேறு வகையான போராட்டங்களின் வழி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றுபட்டு போர் நிறுத்தம் கோரியதோடு மட்டுமின்றி, தமிழக சட்டமன்றமே இது தொடர்பாக இருமுறை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதுடன் தற்போது “ஐயகோ’ தீர்மானத்தையும் அனுப்பியிருக்கிறது.

தவிர, தமிழக முதல்வர் தலைமையில் தமிழக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஏற்கெனவே தில்லி சென்று பிரதமரிடம் நேரடியாக இக்கோரிக்கையை வலியுறுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்குப் பின்னும், போர் நிறுத்த நோக்கில் தில்லி அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதோடு மட்டுமல்ல, சிங்கள அரசுக்கு அளித்து வந்த ராணுவ உதவிகளையும் படைப் பயிற்சிகளையும் நிறுத்த வில்லை. பிரச்சினை தீவிரமடைந்த இந்த நான்கு மாத இடைவெளியில் இலங்கையின் சிறப்புத் தூதராக பசில் ராஜபக்ஷே இந்தியா வந்தார். பிறகு ராஜபக்ஷே வந்தார். அதேபோல இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர மேனன் சென்றார். பிறகு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்றார்.

ஆனால் அனைவருமே “பயங்கரவாத எதிர்ப்பு”, “இந்திய - இலங்கை நல்லுறவு” பற்றிப் பேசியதாகவும், அது மேலும் பலப்பட்டிருப்பதாகவும் வெளியே வந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார்களே தவிர, யாரும் போர் நிறுத்தம் பற்றிப் பேசியதாகச் சொல்லவில்லை. அதற்கான முயற்சி களையும் மேற்கொள்ள வில்லை.

இதற்குக் காரணம் தில்லி அரசின் அயலுறவுக் கொள்கையும், அது சார்ந்து இலங்கையுடனான இந்திய அரசின் அணுகுமுறையும், இந்த அணுகுமுறையை மாற்றியமைக்கக் கூடிய வகையில் தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளே ஒற்றுமையின்றி இவை தங்களுக்குள்ளே போட்டி போட்டுக் கொண்டு தில்லி அரசுக்கு காவடி தூக்குவதும்தான் என்பது பலரும் அறிந்த செய்தி.

இதனால்தான், போரை நிறுத்த முன்வராத தில்லி அரசு, வாரக் கட்டளை போல் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும் போது அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்காத தில்லி அரசு தற்போது ஈழப் போராளிகளை அழித்தொழிக்க, அவர்கள் அங்கிருந்து தப்பி வெளியேறி விடாமல் இருக்க சிங்கள ராணுவத்துக்குத் துணையாகத் தனது கப்பற் படையை அனுப்பி உதவி வருகிறது.

மொத்தத்தில் தன் சொந்த நாட்டில் உள்ள ஆறரைக் கோடித் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களது உணர்வுகளை மதிக்காமல், தன் ஆதிக்க நலனுக்காக, அண்டை நாட்டில் உள்ள ஒண்ணரைக் கோடி சிங்களவர்க்கு அடியாள் சேவகம் செய்வதையே தன் கொள்கையாகக் கொண்டு இயங்கி வருகிறது தில்லி அரசு.

இப்படிப்பட்ட சூழலில் தமிழக மக்களின் மனநிலை, அவர்களின் கொதி நிலை எப்படிப்பட்டதாக இருக்கும். இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

ஊர் உலகமெல்லாம் இதுபோன்று உரிமைகளுக்காகப் போராடிய மக்களுக்கு நாம் எவ்வளவோ உதவினோம். ஆனால் நம் கண்ணெதிரில், கூப்பிடு தூரத்தில் வதையும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாமல் கைகளும் கட்டப்பட்டு, வாய்ப்பூட்டும் போடப் பட்டுள்ளவர்களாக இருக்கிறோமே என்கிற ஆதங்கம், வேதனை தமிழக மக்களிடையே நிலவுகிறது.

இப்படிப் போராடும் மக்களுக்கு தில்லி அரசும் தானாக எதுவும் செய்யாமல் தங்களையும் எதுவும் செய்ய விடாமல், சிங்கள அரசின் கொலை பாதகச் செயலுக்குத் துணைபோகிறதே என்கிற மனக் குமுறலும், இம் மனக்குமுறலில் தமிழகம் இறையாண்மை மிக்க ஒரு தேசமாக, தனக்கென்று சுதந்திரமான அரசமைப்புச் சட்டமும், படையும் கொண்ட ஒரு நாடாக இருந்திருந்தால், இந்நேரம் ஈழ மக்களுக்கு நம் விருப்பம்போல் உதவியிருக்கலாமே, தமிழக மீனவர்களையும் காப்பாற்றியிருக்கலாமே என்கிற ஆதங்கமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, தில்லி அரசு இதைக் கவனத்தில் கொண்டு சும்மா மேம்போக்கில் இதைத் ‘தேசத் துரோகம்’ ‘பிரிவினை வாதம்’ என்பதாகக் குற்றம் சாட்ட முயலாமல் இதற்கான வித்து எது, எங்கிருந்து இவ்வுணர்வுகள் உதிக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதைக் களைய முற்பட வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். இலங்கை இனவெறி அரசை முழு முச்சோடு ஆதரிக்கும் இந்தியா இலங்கையில் ஈழத்தின் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் போய்ப் பார்த்து சில செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1948இல் அதிகாரம் கைக்கு வரப்பெற்ற சிங்களர்கள் படிப்படியான நடவடிக்கைகள் மூலம் தமிழின ஒடுக்கு முறையை மேற்கொண்டு 1970 இல் தரப்படுத்தல் திட்டம் கொண்டு வந்து, தமிழக இளைஞர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறித்தபோது தொடங்கப்பட்டதுதான் “தமிழ் மாணவர் பேரவை”.

அவ்வமைப்பு அமைதி வழியில் நடத்திய பல போராட்டங்களை சிங்கள அரசு ஆயுதப்படை கொண்டு குரூரமாக ஒடுக்கியதன் விளைவாக, அம்மாணவர் களிலிருந்து பதிலுக்கு ஆயுதம் ஏந்தி போராடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்கிற முடிவில் தோற்றம் பெற்றவைதான் “போராளி அமைப்புகள்”. இன்று அப்போராளிகள் அமைப்பை ஒடுக்க இலங்கை அரசுக்கு தில்லி அரசு உதவலாம். தற்காலிகமாக அதில் வெற்றியும் பெறலாம். ஆனால் போராளிகளை, போராட்ட உணர்வை முற்றிலுமாக ஒழித்து விட முடியாது என்பது தெளிவு. காரணம், போராட்டக் களத்தில் கள சூழலுக்கு ஏற்ப போராளிகளுக்கு ஏற்ற இறக்கங்களோடு, சில முன்னேற்றங்களோ, பின்னடைவுகளோ ஏற்படலாமே தவிர, போராட்டம் முற்றிலுமாக மறைந்து விடாது. போராட்டங்களுக்கான புறக் காரணங்கள் நிலவும் வரை அது ஏதாவதொரு வடிவில் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று எழும். போராட்டம் தொடரும் என்பதே அறிவியல். உலக வரலாறு மெய்ப்பிக்கும் உண்மையும் இதுவே.

எனவே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தொழித்து விட முடியாது என்பதையும் இந்திய அரசு இன்று இலங்கை அரசுக்கு செய்து வரும் உதவிகளுக்காக இலங்கை அரசு என்றென்றைக்கும் தில்லிக்கு விசுவாகமாகவே இருந்துவிடாது, மாறாக அது எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுடனோ, சீனாவுடனோ கைக்கோர்த்து இந்தியாவை எதிர்க்கும் என்பதையும் தில்லி ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்துடன், சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்த உதவிகள் தமிழகத்தில் என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தும், ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் தில்லி ஆட்சியாளர்கள் உணரவேண்டும். இப்போதே தமிழகத்தின் தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரலை, உணர்வை தில்லி அரசு புறக்கணித்து இலங்கைக்குத் தொடர்ந்து உதவி வருவது தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும் விரக்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

இது, தமிழகமும் தமிழக மக்களும் இந்தியாவின் ஓர் அங்கமா இல்லையா? நம் உணர்வுகளை மதிக்காமல் தில்லி ஏன் இப்படி இனப் பகைமையோடு நடந்து கொள்கிறது, ஒருவேளை தமிழகமோ, தமிழர்களோ இந்தியாவில் வேண்டாம் என்று கருதுகிறதா என்கிற சந்தேகத்தையும் எழுப்பி வருகிறது.

பிற மாநில மக்களுக்கெல்லாம் ஏதாவது பாதிப்பு என்றால் உடனுக்குடன் தலையிடும் தில்லி, தமிழர் பிரச்சினை என்றால் மட்டும் அது நதி நீர்ப் பிரச்சினை என்றாலும் சரி, வேறு எந்தப் பிரச்சினையானாலும் சரி, எதிலும் மெத்தனமாக இருக்கிறதே அல்லது அதற்கு எதிராகவே செயல்படுகிறதே என்கிற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இந்த உணர்வு அலட்சியப் படுத்த முடியாதது. இதை இப்படியே விட்டால் காலப்போக்கில் இது தில்லி அரசின்பால் என்றென்றைக்கும் மாறாத காயம் ஆறினாலும் வடு மறையாக, தீராத இனப்பகையை உருவாக்கி விடும். இது தமிழர்களை தில்லிக்கு எதிராகக் கோபாவேசத்தோடு களம் இறங்கிப் போராட வைக்கும்.

இப்படிப்பட்ட போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்கி விடலாம் என்று அரசு நினைத்தால் அந்த எண்ணம் ஈடேறாது. ஈழத்தில் அமைதி வழியில் போராடிய மக்கள், சிங்கள ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்கு முறைக்கு எதிராக எப்படி ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்களோ அது போன்ற நிலைக்குத் தமிழகத் தமிழர்களும் தள்ளப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே, சாரமாக தில்லிக்கு நாம் உணர்த்த விரும்புவது இதுதான்.

1. தில்லி ஆட்சியாளர்கள் இன்று தமிழக உணர்வுகளை மதிக்காமல் சிங்கள அரசுக்கு தொடர்ந்து உதவி தமிழக மக்களைப் புறக்கணித்தால் நாளை தமிழக மக்கள் தில்லியைப் புறக்கணிப்பார்கள்.

2. தில்லி அரசு தமிழீழத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவளித்து போராளிகளை ஒடுக்க முயன்றால், நாளை தமிழகத்திலும் அதுபோன்ற போராளிகள் உருவாகி ஆதிக்கங்கள் தங்களுக்குள் ஒன்றுபடுவது போல, போராளிகளும் தங்களுக்குள் ஒன்றிணைய முயல்வார்கள்.

3. தில்லி அரசு இன்று இலங்கை இறையாண்மையைப் பற்றிக் கவலைப்பட்டு, அதைக் காப்பாற்ற இலங்கை அரசுக்கு உதவினால் நாளை இந்திய இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படும் நிலை உருவாகும்.

இது ஏதோ மிரட்டலோ அச்சுறுத்தலோ அல்லது மேடைப் பேச்சுகளில் கைத்தட்டல்களுக்கோ முழங்கப்பெறும் வீர வசனங்களோ அல்ல. இது ஓர் அறிவியல் கோட்பாடு. உண்மை. அந்த வகையில் இந்திய ஆட்சியாளர்களுக் கான அறிவுறுத்தல். அவ்வளவே.

இந்த உண்மையை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். ஏற்கெனவே வடக்கே காஷ்மீர், வடகிழக்கே நாகலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், மிசோராம், திரிபுரா முதலியன தில்லிக்குத் தலைவலியாக இருந்து வருகின்றன. அந்த வரிசையில் தமிழகமும் ஒரு தலைவலியாக மாறவேண்டுமா என்பதை ஆட்சி யாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் ஈழம் போல் இந்தியாவிலும் ஒரு தமிழகம் உருவாவதைத் தடுக்க தில்லி உடனடியாக ஈழத்தில் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி : ஜூனியர் விகடன்.

- இராசேந்திர சோழன்

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com