Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

50. குந்தவையின் கலக்கம்

செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவள் இளைய பிராட்டி குந்தவை தேவி. அழகில் ரதியையும், அறிவில் கலைமகளையும் அதிர்ஷ்டத்தில் திருமகளையும் ஒத்தவள். சுந்தர சோழ சக்கரவர்த்தி முதல் சோழ நாட்டின் சாதாரண குடிமக்கள் வரையில் அவளைப் போற்றினார்கள். அரண்மனையில் அவள் காலால் இட்டதைத் தலையினால் செய்ய எத்தனையோ பேர் காத்திருந்தார்கள். சிற்றரசர்கள் தங்கள் குலத்தில் வந்த அரசிளங் குமரிகளுக்குக் குந்தவை தேவியின் பணிப்பெண்ணாக இருக்கும் பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பாரத நாட்டில் அந்நாளில் பேரரசர்களாக விளங்கிய பலரின் பட்டத்துக்குரிய அரச குமாரர்கள் இளைய பிராட்டி குந்தவையின் கைப்பிடிக்கும் பாக்கியத்துக்குத் தவம் கிடந்தார்கள்.

அத்தகைய சகல பாக்கியங்களும் வாய்க்கப் பெற்ற இளைய பிராட்டி அளவில்லாத சோகக் கடலில் மூழ்கி இருந்தாள். ஆதித்த கரிகாலனுக்கு அவள் சொல்லி அனுப்பிய எச்சரிக்கையெல்லாம் பயனிலதாய்ப் போயிற்று. சம்புவரையர் மாளிகைக்குப் போக வேண்டாமென்று அவனுக்கு அவள் அவசரச் செய்தி அனுப்பியிருந்தாள். அவளுடைய வார்த்தைக்கு எப்போதும் மிக்க மதிப்புக் கொடுக்கக்கூடிய அருமைத் தமையன் இந்த வார்த்தையைத் தட்டிவிட்டுக் கடம்பூர் அரண்மனைக்குப் போனான். அங்கே மர்மமான முறையில் அகால மரணமடைந்தான். நந்தினி, கரிகாலனுக்கும் தனக்கும் அருள்மொழிக்கும் சகோதரி என்றே அவள் நம்பியிருந்தாள். நந்தினி ஏதோ ஒரு காரணத்துக்காக அவன் மீது வஞ்சம் கொண்டிருந்தாள் என்பதையும் அறிந்திருந்தாள். நந்தினியின் கையினாலேயே கரிகாலன் மரணம் அடைய நேர்ந்திருந்தால் அதைக் காட்டிலும் சோழ குலத்துக்கு ஏற்படக் கூடிய அபகீர்த்தியும், பழியும் வேறெதுவும் இல்லை. கரிகாலன் மரணத்துக்குப் பிறகு நந்தினி என்ன ஆனாள் என்பது தெரியவில்லை.

அருமைத் தமையனைப் பறிகொடுக்க நேர்ந்தது அவளுக்கு எல்லையில்லாத் துயரத்தை அளித்தது. உயிர் பிரிந்து இரண்டு நாளைக்குப் பிறகும் அவனுடைய திருமுகத்தில் குடிகொண்டிருந்த வீரக் களையை நினைத்து நினைத்து உருகினாள். ஆகா! என்னவெல்லாம் அந்த மகாவீரன் கனவு கண்டு கொண்டிருந்தான்? கரிகால் பெருவளத்தானைப் போல் இமயமலை வரையில் திக்விஜயம் செய்து அம்மாமலையின் சிகரத்தில் புலிக் கொடியை நாட்டப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தானே? அப்படிப்பட்டவனுடைய திருமேனி அரை நாழிகைப் பொழுதில் எரிந்து பிடி சாம்பலாகி விட்டது. சோழ நாட்டில் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டது. அப்படிக் கலந்த மண்ணிலிருந்து வருங்காலத்தில் ஆயிரமாயிரம் வீராதி வீரர்கள் தோன்றுவார்கள். சோழ நாட்டிலிருந்து நாலா திசைகளிலும் செல்லுவார்கள். கடல் கடந்து தூர தூர தேசங்களுக்குச் செல்வார்கள். வீரப் போர்கள் புரிந்து சோழ சாம்ராஜ்யத்தின் எல்லையை விஸ்தரிப்பார்கள். போகுமிடங்களிலெல்லாம் வானளாவிய கோபுரங்களை உடைய கோவில்களை எழுப்புவார்கள். அவை சோழ நாட்டின் பெருமையை உலகுக்கு எடுத்து இயம்பிய வண்ணம் கம்பீரமாக நிற்கும். தமிழையும் தமிழ்க் கலைகளையும் சைவ வைஷ்ணவ சமயங்களையும் பரப்புவார்கள். மூவர் தேவாரப் பதிகங்களும் ஆழ்வார்களின் பாசுரங்களும் கடல் கடந்த நாடுகளிலெல்லாம் ஒலி செய்யும். "வெற்றி வேல்! வீர வேல்!" என்னும் வெற்றி முழக்கங்கள் கேட்கும்....

இவையெல்லாம் வெறும் கனவு அல்ல. நடக்கக்கூடியவை தான். அருள்மொழிவர்மன் பிறந்த வேளையின் விசேஷம் பற்றிப் பெரியவர்களும் சோதிடர்களும் அனுபவம் வாய்ந்த தாய்மார்களும் சொல்லியிருப்பதெல்லாம் உண்மையானால், கரிகாலன் கனவு கண்டவையெல்லாம் அருள்மொழிவர்மன் மூலமாக நினைவாகக் கூடும். ஆனால், அதற்கு எத்தனை இடைஞ்சல்கள் குறுக்கே நிற்கின்றன? ஆகா! இச்சிற்றரசர்கள் தங்களுக்குள் பூசல் விளைவித்துக் கொண்டு என்ன விபரீதங்கள் விளைவிப்பார்களோ, தெரியவில்லை. மலையமானும், வேளானும் அருள்மொழிவர்மனைச் சிம்மாசனம் ஏற்றியே தீருவதென்று ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள். பழுவேட்டரையர்களும் அவர்களுடைய நண்பர்களும் மதுராந்தகனுக்காகப் படை திரட்டி வருகிறார்கள். சக்கரவர்த்தியோ அடுத்தடுத்து நேர்ந்து விட்ட இரு பெரும் விபத்துக்களால் சோகக் கடலில் ஆழ்ந்திருக்கிறார். யாரிடமும் எதைப்பற்றியும் பேச மறுக்கிறார். இளம் பிராயத்தில் தாம் செய்த பாவத்தை எண்ணி எண்ணிப் பச்சாதாபப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தேறுதல் மொழி சொல்லக் கூட யாருக்கும் தைரியமில்லை. அவருடைய செல்வக் குமாரியாகிய தனக்கே அவரை அணுக அச்சமாயிருக்கிறதென்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேன்!

அருள்மொழிவர்மன் இராஜ்யத்தைத் தியாகம் செய்யச் சித்தமாயிருக்கிறான். மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டி வைத்து விட்டுத் தான் சோழர் படைகளுடன் கடல் கடந்து திக்விஜயம் செய்ய விரும்புகிறான். ஆனால், அதற்கும் எதிர்பாராத முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது. ஏதோ காரணத்தினாலோ, சோழ நாடே போற்றிப் பணியும் முதிய பிராட்டியான செம்பியன் மாதேவி தம் மகனுக்குப் பட்டம் கட்டுவதை ஆட்சேபிக்கிறார். காலஞ்சென்ற தமது கணவரின் கட்டளை என்கிறார். இந்தச் சிக்கல்களெல்லாம் எப்படித் தீரப் போகின்றனவோ, தெரியவில்லை.

இப்படிச் சோழர் குலத்தைப் பற்றியும் சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றியும் ஏற்பட்டிருக்கும் கவலைகள் எல்லாம் போதாதென்று குந்தவையை இன்னொரு பெருங்கவலை வாட்டி வதைத்தது. அவளுடைய உள்ளம் கவர்ந்த வாணர்குல வீரனைப் பாதாளச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆதித்த கரிகாலனுடைய மரணத்துக்கு அவனைப் பொறுப்பாக்க முயல்கிறார்கள். இதில் அந்தப் பல்லவ குலத்துப் பார்த்திபேந்திரன் பிடிவாதமாக இருக்கிறான். பாட்டனார் மலையமான் ஒருவேளை தான் சொன்னால் கேட்டு விடுவார். ஆனால் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கும் ஒருவன் விஷயத்தில் பெண்பாலாகிய தான் எப்படித் தலையிடுவது? தமையனாகிய ஆதித்த கரிகாலனைக் காட்டிலும் வழிப்போக்கனாக வந்த வந்தியத்தேவன் பேரில் தனக்கு அதிக அபிமானம் என்று ஏற்பட்டால், அதைவிட அபகீர்த்தி வேறு என்ன இருக்கிறது? பார்த்திபேந்திரன் வேணுமென்றே அத்தகைய அபகீர்த்தியைப் பரப்பக் கூடியவன். கரிகாலன் கொலையுண்டு கிடந்த இடத்தில் வந்தியத்தேவனைக் கையும் மெய்யுமாகச் சம்புவரையரும், கந்தமாறனும் பிடித்ததாகப் பார்த்திபேந்திரன் சொல்கிறான், இது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் கரிகாலனை ஒரு நிமிடமும் விட்டுப் பிரியக் கூடாது என்று தான் கூறிய வார்த்தையை வந்தியத்தேவர் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆதித்த கரிகாலனைக் கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு முயன்று அதில் வெற்றி காணமுடியாமல் தோல்வியுற்றிருக்க வேண்டும்.

ஆனால் இதைப்பற்றிய உண்மையை எப்படி அறிந்து கொள்வது? வந்தியத்தேவரைத் தான் போய்ப் பார்க்க முயன்றாலும், அவரைச் சிறையிலிருந்து இங்கே தருவித்தாலும் வீண் சந்தேகங்களுக்கும் பழிச் சொற்களுக்கும் இடங்கொடுக்கும். தன்னைப்பற்றி யாரும் எதுவும் சொல்லத் துணியமாட்டார்கள். அப்படிச் சொன்னாலும் கவலையில்லை. ஆனால் கரிகாலனுடைய மரணத்துக்கு அருள்மொழிவர்மனையே காரணமாக்கவும் சில வஞ்சகர்கள் முயன்று வருகிறார்கள். தான் அவசரப்பட்டு ஏதாவது செய்வதால், அவர்களுடைய கட்சிக்கு ஆக்கம் உண்டாகி விடக்கூடாது அல்லவா?

தெய்வமே! தேவி! ஜகன்மாதா! பிறந்ததிலிருந்து ஒரு கவலையுமின்றி வாழ்ந்திருந்த எனக்கு எப்பேர்ப்பட்ட சோதனையை அளித்துவிட்டாய்?....

இவ்வாறெல்லாம் குந்தவையின் உள்ளம் எண்ணி எண்ணிப் புண்ணாகிக் கொண்டிருந்தது. கரிகாலனுடைய மரணச் செய்தியும், வந்தியத்தேவர் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் செய்தியும் வந்தது முதல் இளைய பிராட்டி இரவில் ஒரு கணமும் தூங்க முடியவில்லை. இந்தச் சிக்கலான நிலைமை தீர்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க யோசித்து யோசித்து, பல வழிகளை யோசித்து, ஒவ்வொன்றையும் நிராகரித்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய உயிருக்குயிரான தோழி வானதியிடம் கூட மனம் விட்டுப் பேசுவதற்கு மறுத்தாள். வானதியும் அவளுடைய மனோநிலையை ஒருவாறு உணர்ந்து கொண்டு ஏதும் பேசாமலும் கேட்காமலும் இருந்தாள். குந்தவைக்குப் பக்கத்தில் பெரும்பாலும் நிழல் போல் தொடர்ந்து இருந்துகொண்டு அந்த நிழலைப் போலவே மௌனமாகவும் இருந்து வந்தாள்.

அவ்விதம் சமயோசிதம் அறிந்து குந்தவையின் சிந்தனைகளில் குறுக்கிடாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து வந்த வானதி, அன்றைக்குத் திடீரென்று இளைய பிராட்டியை நெருங்கி, "அக்கா! அக்கா! தங்களைப் பார்ப்பதற்காக ஒரு பெண் வந்திருக்கிறாள். கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். பார்த்தால் பரிதாபமாயிருக்கிறது!" என்று சொன்னதும் குந்தவைக்கே சிறிது வியப்பாகப் போய்விட்டது.

"அவள் யார்? என்ன விஷயம் என்று நீ கேட்கவில்லையா?" என்றாள்.

"கேட்டேன், அக்கா! அதைச் சொன்னால் தங்களுக்கு எரிச்சல் வருமோ, என்னமோ! சம்புவரையர் மகள் மணிமேகலையாம்! சின்னப் பழுவேட்டரையர் மாளிகையில் சம்புவரையர் குடும்பத்தைச் சிறை வைத்திருக்கிறார்கள். இவள் ஒருவருக்கும் தெரியாமல் வழி விசாரித்துக் கொண்டு ஓடி வந்திருக்கிறாள். என்ன காரியம் என்று கேட்டால், தங்களிடம் நேரிலேதான் சொல்வேன் என்கிறாள். அவளுடைய கண்ணீர் ததும்பிய முகத்தை நீங்கள் பார்த்தால் உடனே உங்களுடைய மனம்கூட மாறிவிடும்!" என்றாள் வானதி.

"அப்படியானால், என் மனம் கல்மனம் என்றா சொல்கிறாய்?" என்றாள் குந்தவை கோபமாக.

"தங்களுக்கு உண்மையிலேயே கல்மனம்தான். அக்கா! இல்லாவிட்டால், வந்தியத்தேவரைப் பாதாளச் சிறையில் விட்டுவிட்டுச் சும்மா இருப்பீர்களா?" என்றாள் வானதி.

"சரி, சரி, அந்தப் பெண்ணை இங்கே வரச் சொல்!" என்றாள் குந்தவை.

வானதி மானைப்போல் குதித்தோடி, மறுநிமிடம் மணிமேகலையை அழைத்துக் கொண்டு வந்தாள்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com