Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

24. மந்திராலோசனை


ஆரம்பத்தில் வழக்கமான யோக க்ஷேம விசாரணைக்குப் பிறகு கொடும்பாளூர் பெரிய வேளார் அங்கே கூடியிருந்தவர்களை பார்த்துக் கூறலுற்றார்:-

"நான் யார் யாருக்குத் தூது அனுப்பினேனோ, அவர்களில் ஏறக்குறைய எல்லாரும் வந்து இங்கே கூடியிருக்கிறீர்கள். திருக்கோவலூர் முதுகிழவரான மலையமான் அரசர் மட்டும் வரவில்லை. அவர் வர முடியாததற்குத் தக்க காரணம் இருக்கும் என்றே நினைக்கிறேன். மிகவும் அபாயகரமான காரியம் என்று பலரும் கருதக்கூடிய காரியத்தைப் பற்றி யோசிக்க நாம் இங்கே வந்திருக்கிறோம். சோழ குலத்தாரிடமும், சுந்தர சோழ சக்கரவர்த்தியிடமும் நாம் எல்லாரும் எவ்வளவு பக்தி கொண்டவர்கள் என்பது உலகம் அறிந்தது. அதை எவ்வளவோ தடவை எவ்வளவோ காரியங்களில் நிரூபித்திருக்கிறோம். ஆனாலும் நாம் சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு விரோதமாக இங்கே கூடியிருக்கிறோம் என்று நம் எதிரிகள் குற்றம் சாட்டக்கூடும். சக்கரவர்த்தியை எதிர்த்து யுத்தம் செய்யப் படை திரட்டி வந்திருக்கிறோம் என்றுகூட அவர்கள் சொல்லலாம். ஆனால் சக்கரவர்த்தியை நாம் தனிப்படப் பார்க்க முடிகிறதில்லை. அவருடைய அந்தரங்க விருப்பத்தை அறிய ஒரு நிமிஷங்கூட அவரிடம் தனித்துப் பேச முடிவதில்லை. ஏன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. சக்கரவர்த்தியின் தேக சுகத்தை உத்தேசித்து அவரைத் தஞ்சைக் கோட்டையில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் பழுவேட்டரையர்கள் அவரைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எல்லோரும் என்ன கருதுகிறீர்களோ, தெரியவில்லை..."

சேனாதிபதி இந்த இடத்தில் சிறிது நின்றதும், "ஆம், ஆம்," "அதுதான் உண்மை!" "சக்கரவர்த்தியைச் சிறையில்தான் வைத்திருக்கிறார்கள்", என்று அக்கூட்டத்தில் பல குரல்கள் எழுந்தன.

"உங்கள் ஆமோதிப்பிலிருந்து நாம் எல்லாரும் ஒத்த உணர்ச்சியும், ஒரே நோக்கமும் கொண்டவர்கள் என்று ஏற்படுகிறது. விஜயாலய சோழர் காலத்திலிருந்து எத்தனையோ ஆயிரமாயிரம் வீரர்கள் இன்னுயிரைப் போர்க்களத்தில் பலிகொடுத்து இந்தச் சோழ சாம்ராஜ்யம் இந்த மகோந்நத நிலைக்கு வந்திருக்கிறது. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே நமக்கெல்லாம் பெருமையாயிருக்கிறது. அப்படிப்பட்ட சோழ குலத்துக்கும், சாம்ராஜ்யத்துக்கும் எவ்விதக் குறைவும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கே நாம் இங்கே கூடியிருக்கிறோம். சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்வதற்கு அல்ல. சக்கரவர்த்தியின் எதிரிகள் அவரை மூன்று வருஷ காலமாகச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்று காரணம் சொல்லுகிறார்கள். தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த திருமேனியரான விஜயாலய சோழர், எண்பதாவது பிராயத்தில் திருப்புறம்பயம் போர்க் களத்தில் வந்து இரண்டு கைகளில் இரண்டு கத்திகளை ஏந்திச் சக்கரமாகச் சுழற்றி அவர் புகுந்து சென்றவிடமெல்லாம் எதிரிகளின் தலைகளை மலைமலையாகக் குவித்தார்! அத்தகைய வீரர் வம்சத்தில் பிறந்த சுந்தர சோழர் தேக அசௌக்கியத்தைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு வெளியில் வரவே மறுக்கிறார் என்றால், அது நம்பக்கூடிய காரியமா? சக்கரவர்த்தியைச் சிறை வைத்திருக்கும் துரோக சிந்தனையாளர், பில்லி சூனிய மாய மந்திர வித்தைகளைக் கொண்டு அவருக்குச் சித்தக் குழப்பத்தையும் உண்டாக்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது. சக்கரவர்த்தியின் சித்தம் சரியான நிலையில் இருந்தால், தமக்குப் பீமார்ஜுனர்களைப் போன்ற இரண்டு வீராதி வீரப் புதல்வர்கள் இருக்கும்போது, போர்க்களத்தையே கண்ணால் கண்டறியாத மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட விரும்புவாரா?..."

இப்போது பலர் ஒரே சமயத்தில், "சக்கரவர்த்தியின் விருப்பம் அதுவென்று நமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டார்கள்.

"நமக்கு நேர்முகமாகத் தெரியாதுதான். பழுவேட்டரையர்கள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம். ஆனால் நம் முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் கூட அதை நம்புகிறார்..."

"அநிருத்தரும் அவர்களோடு சேர்ந்திருக்கலாம்; யார் கண்டது?" என்றார் கூட்டத்தில் ஒருவர்.

"அப்படியும் இருக்கலாம், அதன் உண்மையை அறிந்து கொள்வது நாம் இங்கே கூடியிருப்பதன் ஒரு முக்கிய நோக்கம். இன்றைய தினம் இத்தஞ்சை மாநகரில் உலவி வரும் வதந்தியை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் அதை நம்பவில்லை. சக்கரவர்த்தியை உயிரோடு தரிசிக்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைக்கும் என்றே நம்பியிருக்கிறேன். அப்படி அவரைத் தரிசிக்கும்போது பட்டத்தைப்பற்றி அவருடைய விருப்பம் என்னவென்பதை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வோம். ஒருவேளை சக்கரவர்த்தியே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் விருப்பத்தைத் தெரிவித்தார் என்றால், அதை நீங்கள் எல்லாரும் ஒப்புக்கொள்வீர்களா?..."

"மாட்டோ ம்! மாட்டோ ம்!" என்ற பெருங் கோஷம் எழுந்தது.

"நானும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், சக்கரவர்த்தி தெளிவுள்ள சித்தமுடையவராயிருந்தால் அவ்விதம் ஒரு நாளும் தெரிவிக்க மாட்டார். பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்திலேயே பட்டத்து உரிமைபற்றி விஷயம் தீர்ந்து முடிவாகிவிட்டது. சுந்தர சோழரும் அவருடைய சந்ததிகளுமே தஞ்சைச் சிங்காதனம் ஏறவேண்டும் என்று அந்த மன்னர் உயிர் விடும் தறுவாயில் கூறியதை நானே என் செவிகளினால் கேட்டேன். கேட்டவர்கள் இன்னும் பலரும் இங்கே இருப்பார்கள். காலஞ் சென்ற மகானாகிய கண்டராதித்தர் தம் குமாரனுக்கு இராஜ்யம் ஆளும் ஆசையே உண்டாகாத விதத்தில் அவனை வளர்க்க முயன்றார். அவருடைய தர்மபத்தினியாகிய பெரிய பிராட்டியார், - சிவபக்தியே உருக்கொண்டவரான செம்பியன் மாதேவடிகள், - மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டக் கூடாதென்பதில் பிடிவாதமாயிருப்பதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம். இதற்கெல்லாம் ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கத் தான் வேண்டும். அப்படியிருக்கும்போது, சுந்தர சோழர் ஏன் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட ஆசைப்படுகிறார்? அவர் சித்தம் சரியாயில்லை என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமும் கூறுகிறேன். வீர பாண்டியனைக் கொன்று பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்த பிறகு, பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வந்த ஈழத்து அரசனைத் தண்டிப்பதற்காக என் சகோதரன் படை எடுத்துச் சென்றான். அவனுக்கு உதவியாகப் போதிய சைன்யங்களையும் தளவாடங்களையும் அனுப்பத் தவறிவிட்டோ ம். அதனால் அவன் போர்க்களத்தில் வீர மரணம் எய்த நேர்ந்தது. சோழ நாட்டின் வீரப் புகழுக்கு நேர்ந்த அந்தக் களங்கத்தைத் துடைத்துக்கொள்ளும் பொருட்டு நானும் பொன்னியின் செல்வரும் சென்றோம். ஈழத்துப் படைகளை நிர்மூலமாக்கினோம். அநுராதபுரத்தைக் கைப்பற்றினோம். மகிந்தனை மலை நாட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளச் செய்தோம். தனாதிகாரி பழுவேட்டரையர் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை யென்பது உங்களுக்கெல்லாம் தெரியும். உங்களில் இங்கே வந்திருக்கும் வர்த்தக மகா ஜனத்தலைவர்கள் உணவுப் பொருள்களை அனுப்பிப் பேருதவி செய்தீர்கள். ஆனாலும் நம் வீரர்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்கும்படி நேர்ந்தது. அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு மகிந்தன் படைகளை நிர்மூலமாக்கியது எதனால்? சோழ குலத்து மா வீரர்களுக்குள்ளே ஈடில்லா மா வீரராகிய பொன்னியின் செல்வர் அளித்த உற்சாகத்தினாலேதான்! அப்படிப்பட்ட வீரப்புதல்வனுக்குத் தந்தையாகிய சக்கரவர்த்தி அளித்த பரிசு என்ன? இராஜத் துரோகம் செய்துவிட்டதாக அபாண்டம் சுமத்தி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதுதான்! சித்தசுவாதீனம் உடைய ஒருவர் இவ்வாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியுமா?..."

"சேநாதிபதி! மறுபடியும் சக்கரவர்த்தியின் கட்டளையைப் பற்றியே பேசுகிறீர்கள். சக்கரவர்த்திதான் அக்கட்டளையை அனுப்பினார் என்பதற்கு என்ன அத்தாட்சி?" என்று சபையிலிருந்தவர்களில் ஒருவர் கேட்டார்.

"அதற்கு அத்தாட்சி ஒன்றுமில்லை. அதன் உண்மையைப் பற்றி நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பியுந்தான் இங்கே நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். சக்கரவர்த்தியின் சம்மதமின்றி இத்தகைய கட்டளை பிறந்திருக்கக் கூடுமானால், இந்தச் சோழ சாம்ராஜ்யம் எவ்வளவு பயங்கரமான நிலைமையில் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பின்னால் நிகழ்ந்தவற்றையும் எண்ணிப் பாருங்கள். சிறைப்படுத்த வந்த வீரர்கள் இளவரசரைச் சிறைப்படுத்த மறுத்துவிட்டார்கள். இளவரசர் தாமாகவே தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பார்த்திபேந்திர பல்லவனுடைய கப்பலில் ஏறி வந்தார். அந்தக் கப்பல் புயலில் சிக்கிக் கொண்டதாம். அப்போது இளவரசர் கடலில் மூழ்கிமாண்டதாக ஒரு வதந்தி புறப்பட்டது. இதை நான் நம்பவேயில்லை. பொன்னியின் செல்வனை சமுத்திரராஜன் அபகரித்திருக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினேன். அந்தக் கப்பலில் வந்த மற்ற எல்லாரும் உயிர் பிழைத்திருக்கும்போது இளவரசர் மட்டும் எப்படிக் கடலில் மூழ்கி மாண்டிருக்க முடியும்? ஆகையால் இளவரசர் கரை ஏறியதும் அவரைச் சிறைப்படுத்தச் சதி நடந்திருக்கவேண்டும். அந்தச் சூழ்ச்சியை அறிந்துகொண்ட இளவரசர் தப்பிச் சென்று எங்கேயோ பத்திரமாயிருக்கிறார்; சரியான சமயத்தில் வெளிப் புறப்பட்டு வருவார் என்று நம்பியிருந்தேன். உங்களில் பலரும் அப்படி நம்பியதாகத் தெரிவித்தீர்கள். நமது நம்பிக்கை நிறைவேறியது. நாகைப்பட்டினத்தில் புயல் அடித்த அன்று இளவரசர் வெளிப்பட்டார் என்பதாகவும், சோழ நாட்டு மக்கள் அவரை விஜய கோலாகலத்துடன் வரவேற்றுத் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்களுக்குப் பக்க பலமாக இருக்கும் உத்தேசத்துடனேயே நாமும் இவ்விடம் வந்து சேர்ந்தோம். ஆனால் வஞ்சகச் சூழ்ச்சிக்காரர்கள் மறுபடியும் தங்கள் கை வரிசையைக் காட்டிவிட்டார்கள்..."

"என்ன? என்ன?" என்று பலர் கவலைக் குரலில் கேட்டார்கள்.

"நான் இந்தக் கூட்டத்துக்கு வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அச்செய்தி கிடைத்தது. இன்று காலையில் திருவாரூரிலிருந்து இளவரசர் புறப்படவிருந்த சமயத்தில் அவர் ஏறிவந்த யானைக்கு மதம் பிடித்து, யானைப்பாகனைத் தூக்கி எறிந்துவிட்டதாம். யானை தெறிகெட்டு ஓடி விட்டதாம். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் இளவரசரும் காணாமற் போய்விட்டாராம்!..."

"ஐயையோ!", "இது என்ன விபரீதம்?" "தெய்வமும் வஞ்சகர்களின் கட்சியில் இருக்கிறதா?" - என்று இப்படிப் பலர் அங்கலாய்க்கத் தொடங்கினார்கள். அவர்களைச் சேநாதிபதி கையமர்த்தி அமைதியாயிருக்கச் செய்தார்.

"செய்தியை முதலில் கேட்டதும் நானும் கதிகலங்கிப் போனேன். ஒருவாறு சமாளித்துக் கொண்டுதான் இந்தக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். இளவரசர் அருள்மொழிவர்மர் போர் முனையில் எத்தகைய நிகரில்லாத வீரம் உடையவரோ, அப்படியே அறிவாற்றலிலும் நிகரற்றவர், வஞ்சகர்களின் சூழ்ச்சி வலையில் அவ்வளவு சுலபமாக அகப்பட்டுக் கொண்டுவிடமாட்டார். சீக்கிரத்தில் அவரைப் பற்றி நல்ல செய்தி ஏதேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கிடையில் நாம் என்ன செய்யவேண்டும், இந்த இக்கட்டான நிலைமையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!"

இவ்விதம் சேநாதிபதி தாம் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிந்ததும், மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களுடைய கருத்துக்கள் முக்கியமான விஷயங்களில் ஏறக்குறைய ஒரு மாதிரியாகவே இருந்தன. சில்லறை விவரங்களில் மட்டுமே மாறுப்பட்டன. அங்கே உள்ளவர்களின் பிரதிநிதிகள் நாளைய தினம் சக்கரவர்த்தியை நேரில் சந்தித்துப் பேச வசதி கோரவேண்டும் என்றும், அதற்கு வாய்ப்புக் கிடைத்தால் சக்கரவர்த்தியிடம் "மதுராந்தகன் சோழ சிங்காதனம் ஏறுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று தெளிவாகத் தெரிவித்து விடவேண்டும் என்றும் பலர் கூறினார்கள். "ஒன்று, பழுவேட்டரையர்களுடைய சர்வாதிகாரப் பதவிகளிலிருந்து சக்கரவர்த்தி அவர்களை நீக்கிவிடவேண்டும்; அல்லது சக்கரவர்த்தி தஞ்சாவூரை விட்டுப் பழையாறைக்குப் போய்விடவேண்டும்" என்று இன்னும் சிலர் வற்புறுத்தினார்கள்.

"ஆதித்த கரிகாலருக்கு ஏற்கெனவே யுவராஜ்ய பட்டாபிஷேகம் ஆகியிருப்பதால் அவரே அடுத்து பட்டத்துக்கு உரியவர்; அவராகப் பட்டம் வேண்டாம் என்று மறுதளித்தால் அடுத்தபடி சிங்காதனத்துக்கு உரிமையாளர் அருள்மொழிவர்மர்தான். இதைச் சந்தேகத்துக்கு இடம் வையாமல் சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவரையும் ஒப்புக்கொள்ளப் பண்ணவேண்டும்" என்றார்கள், வேறு சிலர், சக்கரவர்த்தியைச் சந்திப்பதற்கே வாய்ப்புக் கிடைக்காவிட்டால், கோட்டைக் கதவுகளைத் திறப்பதற்கு மறுத்தால், கோட்டையை முற்றுகையிட வேண்டியதுதான் என்று சிலர் சொன்னார்கள். "முற்றுகை எதற்காக? உடனடியாகக் கோட்டைக்கதவுகளையும் மதிள்களையும் தகர்க்கும்படி வீரர்களை ஏவ வேண்டியதுதான்!" என்று சிலர் கூறினார்கள். இளவரசரைப் பற்றிச் செய்தி வரும் வரையில் காத்திருப்பது நல்லது என்றும் ஆதித்த கரிகாலருக்கு ஆள் அனுப்பி அவரையும் தருவித்துக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் கருதினார்கள்.

"அதற்காகவெல்லாம் காத்திருப்பதில் என்ன பயன்? பழுவேட்டரையர்களின் ஆதிக்கத்திலுள்ள சுந்தர சோழப் பெரும்படை கொள்ளிடத்துக்கு அக்கரையில் மழ நாட்டில் இருந்து வருகிறது. தற்சமயம் கொள்ளிடத்திலும் மற்ற நதிகளிலும் பெருவெள்ளம் போவதால் அப்படைகள் இங்கு வர முடியாது. ஆகையால் கோட்டையை தகர்த்துச் சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்களின் சிறையிலிருந்து மீட்பதற்கு இதுவே தக்க சமயம்" என்று வற்புறுத்தினார்கள் வேறு சிலர்.

இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருக்கையில், கூடாரத்தின் வாசலில் காவல் புரிந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் அவசரமாக உள்ளே வந்து சேனாதிபதியின் காதில் ஏதோ கூறினான். அவர் கூட்டத்தினரைப் பார்த்து, "இதோ வந்து விடுகிறேன். சற்றுப் பேசிக்கொண்டிருங்கள்" என்று சொல்லி விட்டு வெளியேறினார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com