Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

17. யானை எறிந்தது!

சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த அன்றைக்கு முதல் நாள், நாகைப்பட்டின நகர மாந்தரின் விருந்தினராக இளவரசர் அருள்மொழிவர்மரை நாம் விட்டு விட்டு வந்தோம். விருந்தெல்லாம் முடிந்த பிறகு அலங்கரித்த யானைமீது ஏறி இளவரசர் புறப்பட்டார். எண்ணற்ற மக்கள் அவரைத் தொடர்ந்து 'தஞ்சைக்கு வருவோம்' என்று கிளம்பினார்கள். அன்றிரவு இளவரசரும் அவருடன் வந்த ஜனங்களும் திரு ஆரூர் வந்து சேர்ந்தார்கள்.

திரு ஆரூர் மக்கள் இளவரசர் வருகையை முன்னதாக அறிந்திருந்தபடியால், அவருக்கு இராஜரீக வரவேற்பு அளித்து இராஜோபசாரங்கள் செய்தார்கள். பழம் பெரும் பதியான திரு ஆரூரின் குணவாசலிலிருந்து குடவாசல் வரையில் மக்கள் திரண்டு நின்றார்கள். நாலு இராஜ வீதிகளும் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி ஜனக்கூட்டம் நிறைந்திருந்தது. வீடுகளின் முகப்புக்கள் எல்லாம் தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. திரு ஆரூர்ச் சோழ மாளிகையையும் அதிகாரிகள் அலங்கரித்திருந்தார்கள். இளவரசருக்கு மட்டுமின்றி அவருடன் வரும் திரளான மக்களுக்கும் விருந்தளிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

முதல் நாளிரவு திரு ஆரூர் வழியாகவும் கொடும் புயல் சென்றிருந்தது. ஆனால் இளவரசர் வருகையில் உண்டான குதூகல கோலாகலப் புயல், முதல் நாள் அடித்த புயலை அடியோடு மறக்கச் செய்துவிட்டது. வீதிகளிலெல்லாம் வாத்திய முழக்கங்களும், ஆடல் பாடல்களும், குரவைக் கூத்துக்களும், பொம்மையாட்டங்களும், வீர முழக்கங்களுடன் கூடிய கத்தி விளையாட்டு - கழி விளையாட்டுக்களும் நடந்து கொண்டிருந்தன.

தஞ்சாவூர்ச் சோழ குலத்தினர் தில்லையம்பலத்தில் ஆடும் நடராஜப் பெருமானின் கோயிலுக்கு அடுத்தபடியாகத் திரு ஆரூரில் உள்ள தியாகராஜப் பெருமானின் ஆலயத்திடம் விசேஷ பக்திகொண்டு, ஏராளமான மானியங்கள் அளித்திருந்தார்கள். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் மட்டும் அது வரையில் திரு ஆரூர் வந்ததில்லை. ஆகையால் கோயிலுக்கு இளவரசர் அவசியம் வரவேண்டுமென்று ஆலயத்தார் வற்புறுத்தினார்கள். இளவரசரும் கோயிலுக்குப் போனார். பல காரணங்களினால் அவருடைய உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தபடியால் இறைவனுடைய திருக்கோலங்களில் அவருடைய மனம் பூரணமாக ஈடுபட முடியவில்லை. அர்ச்சனை ஆராதனைகள் முடிந்து இறைவனுடைய பிரசாதங்களும் பெற்றுத் திரும்பும் சமயத்தில், ஆலயத்தார்களைப் பார்த்து இளவரசர் "இந்தக் கோயிலின் இறைவருக்குத் தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்தது?" என்று கேட்டார்.

தேவர்களுக்குள் மகாதேவரும், மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள்புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப்பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டுத் தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். அந்தத் தவத்தையும் கைவிட்டுத் தேவர்களின் நன்மைக்காக உமையை மணந்தது பற்றிக் கூறினார்கள். எல்லா உலகங்களும் இறைவர், பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றிப் பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியது பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள்.

அத்தகைய தியாகராஜப் பெருமான், கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திரு ஆரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதிச் சோழன் பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டுத் தன் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்.

இவையெல்லாம் அருள்மொழிவர்மரின் உள்ளத்தில் நன்கு பதிந்தன. இதுகாறும் புத்த பகவானுடைய தியாகத்தை நினைந்து நினைந்து வியந்து கொண்டிருந்த இளவரசர், தேவ தேவரான சிவபெருமானைத் தியாக மூர்த்தியாகச் சித்தரிக்கும் வரலாறுகளைப் பற்றி எண்ணி எண்ணி வியக்கத் தொடங்கினார். மேலைத் தேசங்களிலே கடவுளின் திருப்புதல்வராகப் போற்றப்படும், அவதார புருஷன் மக்களின் நலத்துக்காகச் சிலுவையில் அறையப்பட்டு மாண்டார் என்ற வரலாறும் அவர் காதுக்கு எட்டியிருந்தது. இவற்றையெல்லாம் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, மனிதனுக்குத் தெய்வத்தன்மை அளிக்கக் கூடியது தியாகந்தான் என்னும் எண்ணம் அவர் மனதில் வேர் ஊன்றியது. ஆதலின் அவரைச் சூழ்ந்துள்ள மக்கள் அனைவரும் தம் மீதுள்ள அன்பின் மிகுதியினால் தம்மைத் தஞ்சைச் சிங்காதனத்தில் அமர்த்திப் பட்டம் சூட்ட விரும்புவது பற்றி அவர் மனம் அளவில்லாத வேதனை அடைந்தது. இவர்களுடைய அன்புச் சிறையிலிருந்து தப்புவது எப்படி என்பது பற்றியும் தீவிரமாக யோசிக்கலானார்.

ஆலய வழிபாட்டுக்குப் பிறகு திரு ஆரூர் மக்கள் இளவரசருக்குப் பெருவிருந்து அளித்தார்கள். அவரை உபசரிக்கும் பொருட்டுப் பற்பல கேளிக்கைகளை நடத்தினார்கள். அவற்றிலெல்லாம் இளவரசரின் உள்ளம் ஈடுபடாவிட்டாலும் வெளிப்படையாக உற்சாகம் காட்டி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் ஏறக்குறைய நடுநிசியில் இளவரசர் சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கே சில விபரீதமான செய்திகள் காத்திருந்தன. தஞ்சைக்கு மேற்கே பலமான மழை பெய்தபடியால் காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றின் கிளை நதிகளிலும் பெரு வெள்ளம் வந்து பல இடங்களில் கரை உடைத்துக் கொண்டதாகவும், ஒரே வெள்ளக் காடாக இருப்பதால் மேற்கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்துவது கஷ்டமாயிருக்குமென்றும் சொன்னார்கள். இரண்டு நாள் திரு ஆரூரில், தங்கி, வெள்ளம் வடிந்த பிறகு புறப்படுவது உசிதம் என்று தெரிவித்தார்கள். இதற்கு இளவரசர் இஷ்டப்படவில்லை. தஞ்சையை உடனே அடைய வேண்டுமென்ற பரபரப்பு அவர் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. நதி உடைப்புக்களும், வெள்ளமும் அவருடைய அந்த ஆர்வத்தைத் தடை செய்துவிடக்கூடுமா, என்ன? ஆம்; இத்தனை ஜனங்களும் பரிவாரங்களும் புடை சூழப் போவதாயிருந்தால் பிரயாணம் தடைப்படத்தான் செய்யும். தாம் மட்டும் தனியே யானை மீது ஏறிச் சென்றால் பிரயாணம் தடைப்படவேண்டிய அவசியமில்லை. யானைக்கு அண்டாத ஆழம் உடைய நதி எதுவும் தஞ்சைக்குப் போகும் வழியில் இல்லை. அப்படியிருந்தாலும் இளவரசருக்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தண்ணீரிடத்தில் அவருக்கு எப்போதும் அச்சம் ஏற்பட்டதில்லை. பொன்னி நதி அவருடைய அன்னைக்கு மேலான அன்புடையவள் ஆயிற்றே? சின்னஞ்சிறு குழந்தைப் பிராயத்தில் தான் முழுகிப் போகாமல் காப்பாற்றிய காவேரித் தாய் இப்போது தன்னைக் காப்பாற்ற மாட்டாளா?

இந்தப் பெருந் திரளான மக்களிடமிருந்து எப்படித் தப்பித்துச் செல்வது என்பதுதான் கேள்வி. அயோத்தியின் மக்களிடமிருந்து இராமர் இரவுக்கிரவே தப்பிச் சென்றது பொன்னியின் செல்வருக்கு நினைவு வந்தது. அவ்விதமே அவரும் இரவில் ஜனங்கள் தூங்கும் சமயத்தில் போய்விட்டால் என்ன? எல்லாவற்றுக்கும் யானைப் பாகனிடம் எந்த நேரத்திலும் புறப்பட ஆயத்தமாயிருக்கும்படி சொல்லி வைப்பது நல்லது.

இந்த எண்ணம் தோன்றியதும் யானைப்பாகனை அழைத்து வரும்படி அரண்மனைச் சேவகனுக்கு இளவரசர் கட்டளையிட்டார். சேவகன் வீதிக்குச் சென்று பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்தான். யானை மட்டும் வாசலில் கட்டியிருக்கிறதென்றும் யானைப்பாகனைக் காணோம் என்றும் தெரிவித்தான்.

"ஒருவேளை வீதிகளில் நடைபெறும் ஆடல்பாடல் களியாட்டங்களைப் பார்க்கப் போயிருப்பான். அவன் திரும்பி வந்ததும் அழைத்து வா! அல்லது யாரையாவது சிலரை அனுப்பித் தேடிப் பார்க்கச் சொல்!" என்று இளவரசர் கட்டளையிட்டார்.

"ஆகட்டும், அரசே! படகோட்டி முருகய்யன் என்பவன் ஒருவன் மாளிகை வாசலில் வந்து காத்திருக்கிறான். தங்களை அவசரமாகப் பார்க்கவேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடிக்கிறான்!" என்றான் சேவகன்.

படகோட்டி முருகய்யனை இத்தனை நேரம் மறந்திருந்தது பற்றி இளவரசர் பச்சாதாபங்கொண்டார். தாம் இரகசியமாகத் தப்பிச் செல்வதற்கு அவன் ஒருவேளை உதவியாயிருந்தாலும் இருப்பான். அவனை உடனே தம்மிடம் அனுப்பும்படி அரண்மனைச் சேவகனுக்குக் கட்டளையிட்டார்.

முருகய்யன் இளவரசரிடம் வந்ததும் அவருடைய காலில் விழுந்து, தேம்பி அழத் தொடங்கினான் இந்த மூட பக்தனைச் சமாதானப்படுத்துவதும் அவனிடம் விஷயங்களைக் கிரஹிப்பதும் சிரமமான காரியந்தான், ஆயினும் செய்யவேண்டும். முருகய்யன் தனது துயரத்தின் காரணத்தைக் கூறினான் அதன் விவரமாவது; முருகய்யன் நாகைப்பட்டினத்திலேயே தன் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டான். திரு ஆரூர் வந்து சேர்ந்த பிறகு அவளும் அங்கு வந்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காக ஜனக் கூட்டத்தினிடையில் அலைந்து சுற்றினான். ஒரு ஜாம நேரம் தேடிய பிறகு இராஜ வீதியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சந்தின் முனையில் அவன் மனைவியும், இளவரசர் ஏறிவந்த யானையைச் செலுத்திய யானைப்பாகனும் போவதைக் கண்டான். அவர்கள் சந்தில் புகுந்ததும் மிக வேகமாக நடந்து சென்றார்கள். முருகய்யனும் தொடர்ந்து போனான். கடைசியாக ஒரு வீட்டின் வாசலில் நின்றார்கள். அங்கே இன்னொரு மனிதன் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அவனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். பிறகு மூன்று பேரும் சேர்ந்து போனார்கள். முருகய்யனுக்கு ஏதேதோ சந்தேகங்கள் உதித்தன. தன் மனைவியின் ஒழுக்கத்தைப் பற்றியே ஐயம் கொண்டான். உண்மையைக் கண்டுபிடிக்க ஆத்திரம் அடைந்தான். ஆகையால் அவர்களைப் போய்ப் பிடித்துவிடாமல் பின்னாலேயே போனான். அவர்கள் ஊரைத் தாண்டி வாய்க்கால் - வயல் வரப்புகள் வழியாகச் சென்று கடைசியில் ஒரு மயானத்தை அடைந்தார்கள். முருகய்யனுடைய உள்ளம் பயங்கரத்தை அடைந்தது. ஆயினும் அவன் விடாமல் சென்று மயானத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். ராக்கம்மாளுடனும், யானைப்பாகனுடனும் வழியில் சேர்ந்து கொண்ட மனிதன், மயானத்தில் சாம்பலைப் பூசிக்கொண்டு ஏதேதோ பயங்கரமான மந்திரங்களை உச்சரித்தான். பிறகு யானைப்பாகனைப் பார்த்து, "நாளைக் காலையில் உன் உயிருக்கு ஆபத்து வரப்போகிறது! ஜாக்கிரதையாயிருந்து பிழை!" என்றான். யானைப்பாகன் கதி கலக்கத்துடன், "என்ன ஆபத்து? எவ்விதம் வரும்? தெரிந்தால் அல்லவா பிழைக்கலாம்?" என்றான். மந்திரவாதி "யானைக்குத் திடீர் என்று மதம் பிடிக்கும்! நீ அருகில் சென்றதும் உன்னைக் கீழே தள்ளிவிட்டு ஓடும்! உன்னால்தான் யானைக்கு மதம் பிடித்தது என்று ஜனங்கள் எண்ணுவார்கள். உன் கையிலுள்ள அங்குசத்தைப் பிடுங்கி உன்னைக் கொன்று விடுவார்கள்!" என்றான் மந்திரவாதி. "ஐயையோ! தப்புவதற்கு வழி என்ன?" என்று யானைப்பாகன் கேட்டான். "நாளைக் காலையில் யானையிடம் நெருங்காமலிருந்து விடு!" என்றான் மந்திரவாதி. "அது எப்படி முடியும்? பின்னால் இராஜ தண்டனைக்கு உள்ளாக நேரிடுமே?" என்று யானைப்பாகன் அலறினான். "அப்படியானால், என் வீட்டுக்கு வா! மந்திரித்த கவசம் தருகிறேன்; அதை அணிந்து கொண்டு போ! கையில் அங்குசத்தைக் கொண்டு போகாதே!" என்றான் மந்திரவாதி. "அப்படியே ஆகட்டும், ஐயா! இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து நேருமா?" என்று யானைப்பாகன் கேட்டான். "அது எப்படிச் சொல்ல முடியும்? இளவரசர் வந்து கேட்டால் அல்லவோ சொல்லலாம்?" என்றான் மந்திரவாதி.

முருகய்யன் அதற்குமேல் அங்கே நிற்க மனமில்லாமல் ஓடி வந்துவிட்டான். நாளைக் காலையில் யானைக்கு மதம் பிடிக்கப்போகும் செய்தியை இளவரசரிடம் சொல்லி எச்சரிப்பதற்காகவே முக்கியமாக ஓடி வந்தான்... இதையெல்லாம் கூறிவிட்டு முருகய்யன் மீண்டும் தேம்பி அழுதான்.

"அப்பனே! ஏன் அழுகிறாய்? நீதான் சமயத்தில் வந்து எச்சரிக்கை செய்துவிட்டாயே? இனி, நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றார் பொன்னியின் செல்வர்.

"ஐயா! இதிலெல்லாம் என் மனைவி சம்பந்தப்படுவது பற்றித் தான் வருந்துகிறேன். ராக்கம்மாளைப் பற்றி என்ன நினைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. அவளைப்பற்றிய பழைய சந்தேகங்கள் திரும்பி வருகின்றன!" என்றான் முருகய்யன்.

"அவளை நான் திருத்திவிடுகிறேன். நீ கவலைப்படாதே! உடனே திரும்பிப் போ! யானைப்பாகனை எப்படியாவது தேடிப் பிடித்து அழைத்துக்கொண்டு வா!" என்றார் இளவரசர்.

படகோட்டி முருகய்யன் போன பிறகு பொன்னியின் செல்வர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். முருகய்யன் கண்டது, கேட்டது இவற்றின் பொருள் என்னவாயிருக்கும் என்று ஊகத்தினால் அறிய முயன்றார். பழுவேட்டரையர்களின் உத்தேசம், பாண்டி நாட்டுச் சதிகாரர்களின் முயற்சி, இவற்றைக் குறித்து இளையபிராட்டி கூறியதை இளவரசர் நினைவு படுத்திக் கொண்டார். அந்தச் சதிகாரர்களின் முயற்சியில் இது ஒன்றாயிருக்கலாம். அல்லது வெறும் அசட்டுத்தனமாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், காலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு, நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பிரயாணத்துக்கு ஆயத்தமானார். மாளிகை வாசலுக்கு வந்தார். அங்கே கட்டியிருந்த யானை இளவரசரைப் பார்த்ததும் ஆதரவோடு துதிக்கையை நீட்டி அவரைத் தடவிக் கொடுத்துக் கொஞ்சியது. "யானைக்கு மதம் பிடிக்கும்" என்று மந்திரவாதி கூறியதாக முருகய்யன் சொன்னது இளவரசருக்கு நினைவு வந்தது. மதம் பிடிக்கும் என்பதற்கு அறிகுறி எதுவும் இல்லை.

"யானைப்பாகன் எங்கே?" என்று இளவரசர் உரத்த குரலில் கேட்டார். உடனே பல குரல்கள் "யானைப்பாகன் எங்கே?" என்று எதிரொலி செய்தன.

இளவரசரைப் போலவே அதிகாலையில் பிரயாணத்துக்கு ஆயத்தமாக ஜனங்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களிடையே அகப்பட்டுக்கொண்டு முன்னால் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்த முருகய்யனைப் பார்த்தார். அவனை நோக்கிச் சமிக்ஞை செய்யவே ஜனங்கள் அவனுக்கு வழிவிட்டார்கள். முருகய்யன் அருகில் வந்து இரவில் வெகுநேரம் தேடிய பிறகு தன் மனைவியை மாத்திரம் கண்டுபிடித்ததாகவும், அவள் தான் மயானத்துக்குப் போனதையெல்லாம் அடியோடு மறுத்து, முருகய்யனுக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்று கூறியதாகவும், யானைப்பாகன் அகப்படவே இல்லை என்றும் சொன்னான்.

"அதைப்பற்றிக் கவலை இல்லை, முருகய்யா! யானையின் காலைக் கட்டியுள்ள சங்கிலியை அவிழ்த்து விடு!" என்றார் இளவரசர்.

முருகய்யன் அவ்வாறு அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கும் போதே, "இதோ யானைப்பாகன் வந்துவிட்டான்!" என்று ஒரு குரல் கேட்டது. "வந்துவிட்டான்! வந்துவிட்டான்!" என்று பல குரல்கள் ஒலித்தன.

கையில் அங்குசத்துடன் யானைப்பாகன் ஓடிவந்து கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் அவசர அவசரமாக விலகிக் கொண்டு அவனுக்கு வழிவிட்டார்கள்.

பொன்னியின் செல்வரும் "நல்ல வேளை!" என்று பெருமூச்சு விட்டு, யானைப்பாகன் ஓடி வந்துகொண்டிருந்த திசையை நோக்கினார்.

பாவம்! ஒருநாள் இரவு அநுபவத்தில் அவன் எவ்வளவு மாறிப் போயிருக்கிறான்? பயப்பிராந்தி கொண்டவனாக அல்லவா தோன்றுகிறான்?

ஒரு கையில் அங்குசம் வைத்துக்கொண்டிருந்த யானைப் பாகன், யானையின் அருகில் வந்து அதன் துதிக்கையை இன்னொரு கையால் தொட்டான்.

யானை உடனே அவனைத் துதிக்கையால் சுழற்றிப் பிடித்துத் தலைக்கு மேலே தூக்கியது. கேட்டவர்கள் பீதி கொள்ளும்படியாகப் பிளறிவிட்டு, யானைப்பாகனை வீசி எறிந்தது! யானைப்பாகன் வெகு தூரத்திலே போய் விழுந்தான். அவன் கையில் வைத்திருந்த அங்குசம், இன்னும் அப்பாலே போய் விழுந்தது.

"யானைக்கு மதம் பிடித்துவிட்டது!" என்ற பயங்கரம் நிறைந்த குரல் அந்த ஜனக் கூட்டத்திலே எழுந்தது. ஜனங்கள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள்!

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com