Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 3
கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

43. நந்தி மண்டபம்

மறுநாள் பிற்பகல் மீண்டும் பெரிய பிக்ஷு பொன்னியின் செல்வனைப் பார்ப்பதற்கு வந்தார். அவரிடம் பல கேள்விகள் கேட்பதற்கு இளவரசன் துடித்துக் கொண்டிருந்தான். சின்ன பிக்ஷுவிடம் அவன் கேள்வி கேட்டு விவரம் அறிந்து கொள்ளச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. "ஐயா! எல்லாம் குருதேவர் தெரிவிப்பார்" என்று ஒரேவித மறுமொழிதான் திரும்பத் திரும்ப வந்தது.

குருதேவர் வந்ததும், "இளவரசே! இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

"ஐயா உடம்பு என்னை மிகவும் தொந்தரவு படுத்துகிறது. 'எதற்காக சோம்பிப் படுத்திருக்கிறாய்? எழுந்து ஓடு! குதிரை மேல் ஏறு! நதியில் குதித்து நீந்து! யானையுடன் சண்டைபோடு! வெறுமனே படுத்திராதே!' என்கிறது. வயிறும் வெகு சுறுசுறுப்பாயிருக்கிறது. சின்ன பிக்ஷு கொண்டு வந்து கொடுத்த உணவெல்லாம் போதவில்லை. ஆச்சாரியரே! இத்தனை நாள் நான் கடும் சுரம் நீடித்து நினைவு தவறியிருந்தேன் என்பதையே நம்ப முடியவில்லை. தங்களுடைய மருந்து அவ்வளவு அற்புதமான வேலை செய்திருக்கிறது!" என்று சொன்னான் பொன்னியின் செல்வன்.

"ஐயா! உடம்பின் பேச்சை ரொம்பவும் நம்பிவிடக் கூடாது. சுரம் தெளிந்ததும் அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் அசட்டையாயிருந்தது, இரண்டாந் தடவை சுரம் வந்துவிட்டால் உயிருக்கே ஆபத்தாகப் போய்விடும்!"

"குருதேவரே! என்னுடைய உயிருக்கு வரக்கூடிய ஆபத்தைப் பற்றி நான் அவ்வளவாகப் பயப்படவில்லை...."

"தாங்கள் கவலைப்படவில்லை; சரிதான்! ஆனால் இந்தச் சோழ நாட்டில் உள்ள கோடி மக்கள் சென்ற நாலைந்து தினங்களாக எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், தெரியுமா? நாடு நகரங்களெல்லாம் அல்லோலகல்லோலப் படுகின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரையில் கண்ணீர் விடுகிறார்கள்...."

"ஐயா! தாங்கள் சொல்லுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. ஜனங்கள் எதற்காக அவ்வளவு வருத்தப்பட வேண்டும்? ஒருவேளை நான் இந்தச் சுரம் குணமாகிப் பிழைக்க மாட்டேன் என்ற எண்ணத்தினாலா? சூடாமணி விஹாரத்தில் தாங்கள் எனக்குச் சிகிச்சை செய்து வருகிறீர்கள் என்று தெரிந்திருக்கும் போது ஜனங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?"

"இளவரசே! தங்களுக்குச் சுரம் என்பதும், தாங்கள் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதும் ஜனங்களுக்குத் தெரியாது. இந்த நகரத்தின் மாந்தர்களுக்கு அது தெரிந்திருந்தால், இந்த விஹாரத்தில் இவ்வளவு அமைதி குடி கொண்டிருக்குமா? மதில் சுவர்களையெல்லாம் இடித்துத் தகர்த்துக்கொண்டு அத்தனை ஜனங்களும் தங்களைப் பார்க்க இங்கு வந்திருக்க மாட்டார்களா? அன்று காலையில் தாங்கள் கடலில் மூழ்கிவிட்டதாகச் செய்தி வந்தபோது இந்த நகரின் மாந்தர் எழுப்பிய ஓலத்தையும் பிரலாபத்தையும் தாங்கள் கேட்டிருந்தால்.... ஏன் இந்த விஹாரத்துக்குள்ளேயே அன்று காலை கண்ணீர்விட்டுக் கதறாதவர் யாரும் இல்லையே?"

பொன்னியின் செல்வன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, "குருதேவரே! இது என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே? நான் கடலில் முழுகிவிட்டதாகச் செய்தி வந்ததா? எப்போது வந்தது? யார் அத்தகைய பயங்கரச் செய்தியைக் கொண்டு வந்தது? எதற்காக?" என்று கேட்டான்.

"யார் கொண்டு வந்தார்களோ, தெரியாது! ஒருநாள் காலையில் அந்தச் செய்தி இந்த நகரமெங்கும் பரவிவிட்டது. தங்களை இலங்கையிலிருந்து கோடிக்கரைக்கு ஏற்றி வந்த கப்பல் சுழல் காற்றில் அகப்பட்டு மூழ்கி விட்டதாக ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். கோடிக்கரையோரமாக தனாதிகாரி பழுவேட்டரையர் தங்களை எவ்வளவோ தேடியும் தங்கள் உடல்கூட அகப்படவில்லையென்றும், ஆகையால் கடலில் முழுகிப் போயிருக்க வேண்டும் என்றும் பராபரியாகச் செய்தி பரவிவிட்டது. அதைக் கேட்டு விட்டு நான்கூட இந்த விஹாரத்தின் வாசலில் நின்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு பிக்ஷு வந்து, நோயாளியை ஏற்றிக் கொண்டு ஒரு படகு விஹாரத்தின் பின்புறத்துக் கால்வாயில் வந்திருப்பதாகத் தெரிவித்தார். நான் உடனே வந்து பார்த்த போது படகில் உள்ள நோயாளி தாங்கள்தான் என்பதைக் கண்டேன். பிறகு மூன்று நாட்களாகச் சிகிச்சை செய்து வந்தோம். நேற்றுத்தான் தங்களுக்கு நினைவு வந்தது."

"ஆச்சாரியரே! என்னைப் படகில் ஏற்றிக்கொண்டு வந்தது யார்? சொல்ல முடியுமா?"

"ஒரு இளைஞனும், ஒரு யுவதியும் படகு தள்ளிக்கொண்டு வந்தார்கள்."

"ஆம், ஆம்; எனக்குக்கூட கனவில் கண்டது போல் நினைவுக்கு வருகிறது. அந்த இளைஞனும் யுவதியும் யார் என்று தெரியுமா? இளைஞன் வாணர் குலத்து வந்தியத்தேவனா?"

"இல்லை, ஐயா! அவன் பெயர் சேந்தன் அமுதன் என்று சொன்னான். சிவ பக்தி மிக்கவன் என்று தோன்றியது. பெண்ணின் பெயரை நான் அறிந்து கொள்ளவில்லை. தேக திடமும் மனோவலியும் வாய்ந்தவள்..."

"அவன் யார் என்று நான் ஊகிக்க முடியும். ஓடக்காரப் பூங்குழலி; தியாக விடங்கரின் மகள். அவர்கள் என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று சொல்லவில்லையா?"

"இல்லை! இளவரசே! நான் அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்கவும் இல்லை."

"நான் இங்குப் பத்திரமாயிருக்கிறேன் என்று தாங்கள் யாருக்கும் தெரியப்படுத்த வில்லையா?"

"இல்லை, ஐயா! யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று தங்களை அழைத்து வந்தவர்கள் சொன்னார்கள். தங்கள் உடல் நிலையை முன்னிட்டுச் சொல்லாமலிருப்பதே நல்லது என்று நானும் எண்ணினேன்."

"ஆச்சாரியரே! இதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது. என்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி என் தந்தை மும்முடிச்சோழ மகாராஜா கட்டளையிட்டிருந்தார். அதற்கிணங்கவே நான் இலங்கையிலிருந்து புறப்பட்டேன். நடுவில் ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. சக்கரவர்த்தியின் கட்டளைக்கு விரோதமாக நான் நடந்தேன் என்று குற்றம் சாட்டுவதற்காக இந்தச் சூழ்ச்சி நடந்திருப்பதாகத் தோன்றுகிறது. நான் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் கதை கட்டி விட்டிருக்கிறார்கள். குருதேவரே! என்னைத் தாங்கள் இந்தச் சூடாமணி விஹாரத்தில் ஏற்றுக்கொண்டதே இராஜத் துரோகமான காரியம். மேலும் வைத்திருப்பது பெருங்குற்றமாகும். உடனே என்னைத் தஞ்சாவூருக்கு அனுப்பி விடுங்கள்...."

"இளவரசே! தங்களுக்கு இடங் கொடுத்ததற்காக எனக்கு இராஜ தண்டனை கிடைப்பதாயிருந்தால் அதைக் குதூகலத்துடன் வரவேற்பேன். அதன் பொருட்டு இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்தை இடித்துத் தள்ளி மண்ணோடு மண்ணாக்கி விடுவதாயிருந்தாலும் பாதகம் இல்லை..."

"தங்களுடைய பரிவைக் குறித்து மகிழ்கிறேன், குருதேவரே! ஆனாலும், என்னைக் கொண்டு வந்தவர்களிடம் ஒன்றும் விசாரியாமல் எப்படி என்னை ஏற்றுக் கொண்டீர்கள்?"

"விசாரிப்பதற்கு அவசியம் என்ன? கடும் சுரத்தோடு வந்த தங்களை வரவேற்றுச் சிகிச்சை செய்வதைக் காட்டிலும் என்னைப் போன்ற பிக்ஷுக்களுக்கு வேறு என்ன உயர்ந்த கடமை இருக்க முடியும்? மேலும் தங்களுடைய திருத்தமக்கையார், குந்தவை தேவியார், தாங்கள் இங்கு வந்து சிலநாள் தங்கக்கூடும் என்று முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்."

"ஓ! அப்படியா! இளைய பிராட்டியா அவ்விதம் சொல்லி அனுப்பியிருந்தார்? எப்போது?"

"தாங்கள் இங்கு வருவதற்கு சில நாளைக்கு முன்பு. தங்களைக் கொண்டு வந்த சேந்தன் அமுதனும், 'இளைய பிராட்டியின் விருப்பம்' என்றுதான் கூறினான்."

"குருதேவா! என்னை அழைத்து வந்தவர்கள் இருவரும் உடனே திரும்பி போய்விட்டார்களா? அவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? அவர்களைப் பார்த்தாவது, சில விவரங்கள் எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்."

"ஐயா! பதட்டம் வேண்டாம். அவர்கள் இருவரும் இந்த நகரத்திலேதான் இருக்கிறார்கள். தினம் ஒருமுறை வந்து தங்கள் உடல் நிலையைப் பற்றி விசாரித்துப் போகிறார்கள். இன்றைக்கு ஏனோ இதுவரையில் வரக் காணோம்...."

அச்சமயத்தில் சின்ன பிக்ஷு வந்து குருதேவரைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தார். ஆச்சாரிய பிக்ஷு, "இதோ வந்து விட்டேன், ஐயா!" என்று கூறிவிட்டு வெளியே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவர் திரும்பி வந்தபோது இளவரசன் அருள்மொழிவர்மனுடைய பரபரப்பு மேலும் அதிகமாகியிருப்பதைக் கண்டார்.

"ஆச்சாரியரே! இனி ஒரு கணமும் நான் இங்கே தங்கியிருக்க முடியாது. சக்கரவர்த்தியின் கட்டளையை மீறி நான் இங்கே வந்து ஒளிந்திருந்தேன் என்ற பழியை ஏற்க நான் விரும்பவில்லை. என்னால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கு எந்த விதமான தீங்கு நேரிடுவதையும் விரும்பவில்லை" என்றான் இளவரசன்.

பெரிய பிக்ஷு மலர்ந்த முகத்துடன், "உண்மையில் அத்தகைய பெரும் பொறுப்பை நானும் இனி வகிக்க முடியாது. தங்களுடைய விருப்பத்துக்கு விரோதமாக ஒரு கணமும் தங்களை நான் இங்கு வைத்திருக்க விரும்பவில்லை இந்தக் கணமே தாங்கள் புறப்படலாம். கால்வாயில் படகு ஆயத்தமாய்க் காத்திருக்கிறது!" என்றார்.

"எங்கே போவதற்கு?"

"அது தாங்கள் தீர்மானிக்க வேண்டிய காரியம். தங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்த இருவரும் படகுடன் தங்களை அழைத்துப் போக வந்திருக்கிறார்கள்."

இளவரசன் சிறிது தயங்கினான். ஆச்சாரிய பிக்ஷுவின் முகத்தில் மர்மமான புன்னகை பொலிவதைக் கண்டு, "இதில் இன்னும் ஏதேனும் சூழ்ச்சி இருக்கக்கூடுமோ?" என்று வியந்தான்.

"அவர்கள் இருவருமே திரும்ப வந்திருக்கிறார்களா? எதற்காக என்று சொல்லவில்லையா?"

"சொன்னார்கள். இந்த விஹாரத்திலிருந்து ஒரு நாழிகை தூரத்தில், கால்வாயின் கரையில் நந்தி மண்டபம் ஒன்று இருக்கிறது. அதில் தங்களைப் பார்ப்பதற்காக இரண்டு பெண்மணிகள் வந்து காத்திருக்கிறார்களாம்."

இளவரசன் அவசரமாகக் கட்டிலிலிருந்து இறங்கினான். "ஆச்சாரியரே! உடனே படகுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்! இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே" என்றான்.

பிக்ஷு இளவரசனைக் கையினால் தாங்கிக் கொண்டு கால்வாய்க்கரை வரையில் சென்றார். ஆனால் இளவரசனுடைய நடையில், நாலு நாளைக்கு மேலாகக் கடுஞ்சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்ததின் அறிகுறி ஒன்றும் தென்படவில்லை. ஏறுபோல் நடந்து பொன்னியின் செல்வன் கம்பீரமாக வருவதைக் கண்டு சேந்தன் அமுதன், பூங்குழலி இருவருடைய முகங்களும் மலர்ந்தன.

அருள்மொழிவர்மன் படகில் ஏறி உட்கார்ந்ததும் பிக்ஷு அவனைப் பார்த்து, "ஐயா! தங்களுக்கு ஏதேனும் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அதை இந்தச் சூடாமணி விஹாரத்துப் பிக்ஷுக்கள் அனைவரும் பெரும் பாக்கியமாகக் கருதுவோம். தாங்கள் திரும்பவும் இங்கு வந்து ஒருவாரம் தங்கி உடல் வலிவு பெற்றுப் போவது நலம்!" என்றார்.

"குருதேவரே! நான் திரும்பி வருவேன் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. இல்லாவிடில் இவ்வாறு மற்ற பிக்ஷுக்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டிருக்க மாட்டேன்!" என்றான் இளவரசன்.

படகு நகரத் தொடங்கியதும் சேந்தன், பூங்குழலி இருவரையும் மாறி மாறிப் பார்த்து, "இக்கால்வாயின் வழியாக நீங்கள் என்னை அழைத்துக்கொண்டு வந்தபோது நீங்கள் தேவலோகத்தவர்கள் என்றும், சொர்க்கத்துக்கு என்னை அழைத்துப் போகிறீர்கள் என்றும் எண்ணியிருந்தேன். என்னை ஏமாற்றி விட்டீர்கள். சந்நியாசி மடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள்! போனால் போகட்டும்; கடலில் நீந்திக் கை சளைத்து நினைவிழந்து போனதிலிருந்து நடந்ததையெல்லாம் உங்களிடம் கேட்க வேண்டும். அதற்கு முன்னால், நந்தி மண்டபத்தில் எனக்காகக் காத்திருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள்" என்றான் இளவரசன்.

இருவரையும் பார்த்து அருள்மொழிவர்மன் கேட்ட போதிலும், பூங்குழலி வாய் திறக்கவில்லை. சேந்தன் அமுதன்தான் மறுமொழி கூறினான். குந்தவைப் பிராட்டியும் கொடும்பாளூர் இளவரசியும் ஆனைமங்கலத்துக்கு வந்திருப்பதையும், அங்கிருந்த நந்திமண்டபத்துக்கு வந்து காத்திருப்பதையும் தெரிவித்தான்.

"ஆகா! எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் அந்தப் பெண்ணை எதற்காக இளையபிராட்டி இங்கேயும் அழைத்து வந்திருக்கிறார்?"

சேந்தன் அமுதன், "ஐயா! தமிழ்நாட்டுப் பெண்களிடையே இப்போது ஒரு சுரம் பரவிக் கொண்டிருக்கிறது. புனிதமான சைவ சமயத்தை விட்டுவிட்டுப் புத்த மதத்தைச் சேர்ந்து பிக்ஷுணிகள் ஆகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்றான்.

"அப்படி யார், யார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?"

"கொடும்பாளூர் இளவரசி அவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இதோ இந்தப் பெண்ணரசியும் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறாள்!"

"இரண்டு பேர்தானே, அமுதா! அதனால் சைவ சமயத்துக்கு நஷ்டம் வந்துவிடாது! இலங்கையில் பிக்ஷுணிகள் தவ வாழ்க்கை நடத்தும் மடங்கள் பலவற்றை நான் அறிவேன். வேண்டுமானால் நானே இவர்களை அழைத்துப் போய்ச் சேர்த்து விடுகிறேன்!" என்று பொன்னியின் செல்வன் கூறவும் சேந்தன் அமுதன் நகைத்தான்.

பின்னர் கடலிலிருந்து இளவரசனும், வந்தியத்தேவனும் கரையேறியதிலிருந்து நிகழ்ந்தவற்றையெல்லாம் சேந்தன் அமுதன் தான் அறிந்தவரையில் கூறினான். பொன்னியின் செல்வன் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு வந்ததுடன், தன்னுடைய ஞாபகங்களையும் ஒத்துப் பார்த்துக் கொண்டு வந்தான்.

"அதோ நந்தி மண்டபம்!" என்று பூங்குழலி கூறியதும், இளவரசன் அவள் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினான்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com