Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruPonniyin SelvanPart 3
கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

41. மதுராந்தகன் நன்றி

முதன் மந்திரியின் கரம் மதுராந்தகன் மேல் பட்டதும் அவன் அலறினான்.

"ஐயோ! அப்பா! செத்தேன்! என்னைத் தொட வேண்டாம். என் கால்கள்! போச்சு! போச்சு!"

அநிருத்தர் அவனைத் தூக்குவதை நிறுத்தி விட்டு, "இளவரசே! தங்களுக்கு என்ன நேர்ந்தது? தங்கள் கால்களுக்கு என்ன நேரிட்டது?" என்று கவலையுடன் கேட்டார்.

"என் கால்கள் முறிந்தே போய்விட்டன; நடக்க முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை!"

முதன் மந்திரி திரும்பிப் பார்த்து, "அடே! பல்லக்கை இவ்விடம் கொண்டு வாருங்கள்!" என்று தம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார்.

பின்னர், "ஐயா! இந்த விபத்து எப்படி நேர்ந்தது? தாங்கள் மழையில் தனியாகக் கிடக்கும் காரணம் என்ன? தங்களோடு வந்த பரிவாரங்கள் எங்கே? தங்களை இவ்விதம் விட்டு விட்டு அவர்கள் எப்படிப் போகத் துணிந்தார்கள்! அவர்களுக்கு என்ன தண்டனை விதித்தாலும் போதாதே?" என்றார்.

"முதன் மந்திரி! யாரையும் தண்டிக்க வேண்டாம்! யார் பேரிலும் குற்றம் இல்லை. மாலை நேரத்தில் குதிரைமேல் ஏறிக்கொண்டு நான்தான் தனியாகக் கிளம்பினேன். நதிக்கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பெரிய மின்னல் மின்னி இடி இடித்தது. குதிரை மிரண்டு ஓடியது. நான் இந்த மரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டு கீழே விழுந்து விட்டேன். குதிரை எங்கேயோ போய் விட்டது. விழுந்த வேகத்தில் கால் முறிந்து விட்டதோ அல்லது சுளுக்கிக்கொண்டு விட்டதோ தெரியவில்லை. எழுந்து நிற்கவும் முடியவில்லை, நல்ல வேளையாகத் தாங்கள் இச்சமயம் இங்கு வந்தீர்கள்!"

"ஏதோ தங்களுடைய தந்தை, மகானாகிய கண்டராதித்த தேவர் செய்த புண்ணியந்தான், இந்த மட்டும் நான் இங்கே வரும்படி நேர்ந்தது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருங்கள். பல்லக்கில் தங்களை ஏற்றி விடுகிறேன். மற்ற விவரங்கள் எல்லாம், நாதன்கோவிலில் அடியேனின் இல்லத்துக்குப் போன பிறகு கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்" என்றார் அநிருத்தர்.

பல்லக்கு அருகில் கொண்டு வந்து இறக்கப்பட்டதும், முதன் மந்திரி இளவரசரை மெதுவாகப் பிடித்துத் தூக்கி பல்லக்கினுள் கிடத்தினார். ஆட்களிடம், பல்லக்கைத் தூக்கிக் கொண்டு மெள்ள, மெள்ள அசங்காமல் போகவேண்டும் என்று கட்டளையிட்டார். தாமும் பல்லக்கின் அருகிலேயே தொடர்ந்தாற்போல் நடந்து சென்றார்.

சிறிது நேரத்துக்கெல்லாம் நாதன் கோவில் என்று வழங்கிய சுந்தர சோழ விண்ணகரத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த ஊர்ப்பெருமாள் கோயிலுக்கு அருகில் முதன் மந்திரி அநிருத்தரின் மாளிகை ஒன்று இருந்தது. அதற்குள் இளவரசர் மதுராந்தகரைத் தூக்கிச் சென்று அங்கிருந்த கட்டிலில் கிடத்தினார்கள். விளக்கு வெளிச்சம் கொண்டுவரச் சொல்லிப் பார்த்ததில் கால் முறியவில்லையென்றும் வெறும் சுளுக்குத்தான் என்றும் தெரிந்தது.

இளவரசர் கொண்டிருந்த பீதியும் சிறிது தெளிந்தது. பெருமாள் கோவிலிலிருந்து வந்த பிரசாதங்களை, இருவரும் அருந்தினார்கள்.

பின்னர் முதன் மந்திரி, "இளவரசே! இனி இரவு நிம்மதியாகத் தூங்குங்கள்! பொழுது விடிந்ததும் தங்கள் உசிதம் எப்படியோ அப்படிச் செய்யலாம். நான் தஞ்சைக்குத்தான் போகிறேன். என்னுடன் வருவதாயிருந்தால், தங்களைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்!" என்றார்.

"ஐயா! தாங்கள் எனக்கு எவ்வளவோ தீங்கு செய்திருக்கிறீர்கள். அதற்கெல்லாம் பரிகாரம் இன்று செய்து விட்டீர்கள். இன்று எனக்குச் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். அதற்கு எப்போதும் நன்றி செலுத்துவேன். ஒருவேளை இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நான் அமரும்படி நேர்ந்தால் தங்களையே முதன் மந்திரியாக வைத்துக்கொள்வேன்!" என்றான் மதுராந்தகன்.

அநிருத்தர் அதிசயக்கடலில் முழுகிப் போனதாகப் பாவனை செய்து, "இளவரசே! சோழகுலத்துக்கு நான் கடமைப்பட்டவன். இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஆலோசனை சொல்வதும் இயன்ற உதவி செய்வதும் என் கடமை. ஆகையால் தாங்கள் தனிப்பட எனக்கு நன்றி செலுத்த அவசியமில்லை. ஆனால் தங்களுக்கு நான் ஏதோ தீங்கு செய்திருப்பதாகச் சொன்னீர்களே அதுதான் எனக்கு விளங்கவில்லை. நான் தங்களுக்கு மனமறிந்து எந்தத் தீங்கும் செய்ததாக ஞாபகமில்லை. தாங்கள் சற்றுப் பெரிய மனது செய்து தெரியப்படுத்தினால் அதற்குப் பிராயச்சித்தம் என்ன உண்டோ அதைச் செய்து விடலாம்!" என்றார்.

"ஐயா அநிருத்தரே! தாங்கள் மகா கெட்டிக்காரர், அறிவாளி, இராஜதந்திர நிபுணர் என்பதெல்லாம் உலகமறிந்த விஷயம். ஆனால் தங்கள் கெட்டிக்காரத்தனத்தை என்னிடம் காட்ட வேண்டாம். தாங்கள் எனக்குச் செய்திருக்கும் தீங்கு எவ்வளவு கொடுமையானது என்பது எனக்குத் தெரியாது என்றும் எண்ண வேண்டாம். ஆனாலும் இன்று தாங்கள் எனக்குச் செய்த உதவியை முன்னிட்டு அதையெல்லாம் மறந்து விடப்போகிறேன். என்னுடைய நன்றியைத் தங்களுக்கு எந்த விதத்தில் தெரியப்படுத்தலாம் என்று சொல்லுங்கள். ஏதாவது பிரதி உபகாரம் செய்யக் கூடியது இருந்தால் கூறுங்கள்."

அநிருத்தர் புன்னகை புரிந்து, "ஆம், இளவரசே! தாங்கள் நன்றியைச் செலுத்த வழி ஒன்று இருக்கிறது. தங்களிடம் இந்தக் கிழவன் கோர வேண்டிய வரம் ஒன்றும் இருக்கிறது. இனி இம்மாதிரி குதிரை ஏறித் தனிவழியே கிளம்ப வேண்டாம். முன்னும் பின்னும் பரிவாரங்கள் சூழ ரதத்தில் பிரயாணம் செய்யுங்கள். அதைவிடப் பல்லக்கில் பிரயாணம் செய்வது நலம், காலம் கெட்டிருக்கிறது. பல காரணங்களினால் மக்கள் மனக்கொதிப்பு அடைந்திருக்கிறார்கள். இன்றைக்குப் பழையாறையில் பார்த்தீர்களே! ஆகையால் திறந்த பல்லக்கில் பிரயாணம் செய்வதைக் காட்டிலும், மூடு பல்லக்கில் பிரயாணம் செய்வது நல்லது. பழுவூர் இளைய ராணியின் பல்லக்காக இருந்தால் ரொம்ப விசேஷமாயிருக்கும். யாரும் சந்தேகிக்கவே மாட்டார்கள்!" என்றார்.

மதுராந்தகன் அசந்து போனான். அவன் முகத்தில் மறுபடியும் பயத்தின் அறிகுறி காணப்பட்டது. சற்றுப் பொறுத்துச் சமாளித்துக் கொண்டு, "முதன் மந்திரி! என்ன வார்த்தை சொன்னீர்! பழுவூர் இளையராணியின் மூடு பல்லக்கில் என்னைப் பிரயாணம் செய்யச் சொல்வதின் கருத்து என்ன? என்னை அவமானப்படுத்துவது உமது நோக்கமா?...." என்றான்.

"இளவரசே! பழுவூர் ராணியின் பல்லக்கில் பிரயாணம் செய்வதைத் தாங்கள் அவமானமாகக் கருதுவதை நான் அறியேன். எப்போதிருந்து இந்த எண்ணம் தங்களுக்கு உண்டாயிற்று? முன்னேயெல்லாம் அடிக்கடி தாங்கள் அவ்விதம் போய்க்கொண்டிருப்பது வழக்கமாயிருந்ததே? கடைசியாக, கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குப் போய்த் திரும்பிய பிறகு இந்த நல்ல முடிவுக்குத் தாங்கள் வந்திருக்க வேண்டும்..."

மதுராந்தகன் மேலும் திகில் கொண்டான். அவன் முகத்தில் பயப்பிராந்தியின் சாயல் பரவிற்று. "முதல் மந்திரி! கடம்பூர் மாளிகைக்கு நான்....நான்...." என்று தடுமாற்றத்துடன் ஏதோ சொல்வதற்கு ஆரம்பித்தான்.

"இளவரசே! கடம்பூர் மாளிகைக்குத் தாங்கள் ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்று தனாதிகாரி பெரிய பழுவேட்டரையருடன் போயிருந்தீர்கள் அல்லவா? அதைத் தான் சொல்கிறேன். அப்போது தாங்கள் இளைய ராணியின் பல்லக்கிலே போய்விட்டுத் திரும்பினீர்கள். அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லைதான். பல்லக்குப் பிரயாணம் என்னைப் போன்ற கிழவர்களுக்கு உகந்தது. உங்களை போன்ற இளைஞர்கள் யானை மீதோ, குதிரை மீதோ பிரயாணம் செய்வதுதான் உசிதம். ஆனால் குதிரைப் பிரயாணத்துக்குத் தகுந்த பயிற்சி வேண்டும். தங்களுக்கு உடம்பு சரியானதும் நானே அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்..."

"அன்பில் அநிருத்தரே! ஜாக்கிரதை! மேலும் மேலும் என்னை அவமானப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்கிறீர். இன்றைக்கு ஏதோ இந்த அசந்தர்ப்பம் நேரிட்டு விட்டபடியால் எனக்குக் குதிரை ஏற்றமே தெரியாது என்று முடிவு கட்டி விட்டீர். ஏதோ ஒரு சமயம் பல்லக்கில் சென்றபடியால் எப்போதும் பழுவூர் ராணியின் மூடு பல்லக்கில் நான் போவதாகச் சொல்லுகிறீர். உம்முடைய பிராயத்தையும் இன்றைக்கு நீ எனக்குச் செய்த உதவியையும் நினைத்துப் பொறுத்தேன்..."

"இளவரசே! தங்களுடைய பொறுமை எனக்கு மிக மகிழ்ச்சி தருகிறது. 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பது முதுமொழி. தமிழகத்தின் மாபெரும் புலவர் என்ன கூறுகிறார்?

'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை'

நிலம் தன்னைத் தோண்டுகிறவர்களைப் பொறுத்துக் கொண்டிருக்கிறது. பொறுத்துக் கொள்வது மட்டுமா? தோண்டுகிறவர்களுக்குத் தூய தண்ணீரையும் அளித்து உதவுகிறது. பூமிக்கு உள்ள இந்தக் குணம் பூமியை ஆள நினைப்பவர்களுக்கும் இருக்க வேண்டும். என்னைப் போன்ற கிழவன் ஏதாவது அனுசிதமாகச் சொன்னாலும் பூமி ஆள விரும்பும் தாங்கள், பொறுத்துக் கொள்ளுவது தான் உசிதம்."

"ஐயா! என்ன சொல்லுகிறீர்! நான் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆள விரும்புவதாகக் குற்றம் சாட்டுகிறீரா?" என்று கேட்டான் மதுராந்தகன். அவனுடைய உதடுகள் துடித்தன; புருவங்கள் நெறிந்தன. பயம் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாறி வந்ததென்பதற்கு அறிகுறிகள் தென்பட்டன.

ஆனால் முதல் மந்திரியோ சிறிதும் பதட்டமில்லாமல், "இளவரசே! குற்றம் சாட்டுகிறேன் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆள விரும்பினால், அது எப்படிக் குற்றமாகும்? வீராதி வீரரான விஜயாலய சோழரின் குலத்தில் உதித்தவர் தாங்கள். மகானாகிய சிவஞான கண்டராதித்தரின் திருப்புதல்வர். இந்தச் சோழ சிம்மாசனம் ஏறுவதற்குத் தங்களுக்குப் பூரண உரிமை உண்டு. அதைத் தாங்கள் விரும்புவது குற்றம் எப்படி ஆகும்? அது குற்றம் என்றும் ஆகையால் அதற்காக இரகசியமான சதி முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும் யாராவது தங்களுக்கு யோசனை சொன்னால் அதைத் தாங்கள் நம்ப வேண்டாம். இளவரசே! இந்தக் கிழவனுடைய வார்த்தையைக் கொஞ்சம் செவி சாய்த்துக் கேளுங்கள். தங்களுடைய பெற்றோர்களின் விருப்பம் ஒரு விதமாயிருந்தது. தாங்களும் அதற்கு இணங்கிச் சிவபக்தியில் ஈடுபட்டிருந்தீர்கள். இப்போது தங்கள் மனம் மாறியிருக்கிறது. அதைப் பற்றிக் குற்றம் கூற யாருக்கும் பாத்தியதை இல்லை. தங்களுடைய உரிமையைத் தாங்கள் பகிரங்கமாகக் கோரலாம். சக்கரவர்த்தியிடமே தங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தலாம். அதை விடுத்துக் கேவலம் காலாமுகக் கூட்டத்தாரின் ஆதரவைக் கோருவதற்காக அமாவாசை இருட்டில் தன்னந்தனியாகக் கொள்ளிடக் கரைக்குப் போக வேண்டிய அவசியமில்லை. அல்லது சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரியில் திருடர் கூட்டத்தைப் போல் கூட்டம் போட்டுச் சதிப் பேச்சுப் பேச வேண்டிய அவசியமும் இல்லை. இந்த மாதிரியெல்லாம் தங்களுக்கு யோசனை கூறுகிறவர்கள் தங்களுடைய பரம விரோதிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்!"

மதுராந்தகன் பெருங் குழப்பத்துக்கு உள்ளானான். முதன் மந்திரிக்கு இவ்வளவு விஷயங்களும் தெரிந்திருக்கின்றன என்று எண்ணியபோது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. அதே சமயத்தில் பீதி ஒரு பக்கமும், பீதி காரணமாக ஆத்திரம் ஒரு பக்கமும் பெருகிக் கொண்டிருந்தன.

"ஐயா தங்களுக்கு இவையெல்லாம் எப்படித் தெரிந்தது? எந்தத் துரோகி என்னுடன் சிநேகமாயிருப்பது போல் நடித்துக் கொண்டு தங்களிடமும் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறான்?" என்று கேட்டான்.

"தாங்கள் அதை அறிய முயல்வதில் பயனில்லை. இந்தப் பரந்த இராஜ்யமெங்கும் எனக்குக் கண்கள் இருக்கின்றன! காதுகளுமிருக்கின்றன! நான் அறியாமல் எதுவும் இந்த நாட்டில் நடைபெற முடியாது...."

"அப்படியானால், சக்கரவர்த்திக்கும் இவையெல்லாம் தெரியுமா?" என்று மதுராந்தகன் கேட்டான்.

"இல்லை; அவருக்குத் தெரியாது, என் கண்களும், காதுகளும் தெரிவிக்கும் எத்தனையோ இரகசியங்கள் என் நெஞ்சகத்தில் பதிந்து கிடக்கின்றன. அவசியமும் அவசரமும் நேர்ந்தால் ஒழிய அவை வெளியில் வரவே வரா...."

"ஆம், ஆம்; தங்களுடைய நெஞ்சகத்தில் எவ்வளவோ பயங்கரமான இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அவை மட்டும் வெளியில் வந்தால், இந்தச் சோழ சாம்ராஜ்யமே நடு நடுங்கிப் போகாதா?" என்றான் மதுராந்தகன். அவனுடைய குரலில் இப்போது இதற்கு முன் இல்லாத கபடமும், வஞ்சகமும் தொனித்தன.

முதன் மந்திரி அதைக் கவனித்தும் கவனியாதவர் போல் கூறினார் "சக்கரவர்த்தி என்னுடைய ஆப்த நண்பர். ஆனால் அவர் அறியாத இரகசியங்களும் என் நெஞ்சில் இருக்கின்றன. சுந்தர சோழர் கொடிய நோய் வாய்ப்பட்டிருக்கிறார். பல காரணங்களினால் அவர் மனம் ஏற்கனவே, புண்ணாகியிருக்கிறது. சிற்றரசர்களின் சதிச் செயலைப் பற்றி அவரிடம் சொல்லி மேலும் அவர் நெஞ்சைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. இளவரசே! தங்களுடைய காரியங்களைப் பற்றிய வரையில் நான் சக்கரவர்த்தியிடம் ஒரு நாளும் சொல்ல மாட்டேன் தாங்கள் நம்பியிருக்கலாம்."

"ஐயா! அன்பில் அநிருத்தரே! இந்தப் பேதை மதுராந்தகன் பேரில் தங்களுக்குத் திடீரென்று இவ்வளவு அபிமானம் தோன்றக் காரணம் என்ன?" என்று மதுராந்தகன் கேட்டு விட்டு ஏளனச் சிரிப்புச் சிரித்தான்.

"இளவரசே! தங்களிடம் திடீரென்று எனக்கு அபிமானம் பிறந்துவிடவில்லை. சுந்தர சோழரின் புதல்வர்களைப் போலவே தான் தங்களிடமும் நான் எப்போதும் அபிமானம் வைத்து வந்திருக்கிறேன். அதைக் காட்டிக் கொள்வதற்கு இதற்கு முன்னால் சந்தர்ப்பம் ஏற்படவில்லை...."

"இன்றைக்கு அச்சந்தர்ப்பம் கிடைத்தது! நான் குதிரை மேலிருந்து விழுந்து காலை ஒடித்துக் கொண்டதால் ஏற்பட்டது. ஆனாலும் சில நாளைக்கு முன்னாலேயென்றால், என்னை அந்த மரத்தடியிலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு வந்திருப்பீர்..."

"நாராயணா; நாராயணா! இது என்ன வார்த்தை, இளவரசே!"

"ஐயா! எனக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ண வேண்டாம். எதைச் சொன்னாலும் நம்பக்கூடிய அப்பாவி என்று நினைக்க வேண்டாம். நான் என் தாயாரின் கர்ப்பத்தில் இருந்தபோதே எனக்கு எதிராக நீர் சதி செய்யத் தொடங்கினீர். நான் இந்தப் பூமியில் பிறந்ததும் என்னைக் கொன்று விடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தீர்....அதோ, உம்முடைய முகத்தில் ஆச்சரியத்தின் அறிகுறியைக் காண்கிறேன். அதெல்லாம் எனக்கு எப்படித் தெரிந்தது என்று வியப்படைகிறீர், இல்லையா? இந்தச் சோழ நாட்டில் பயங்கர இரகசியங்கள் பலவற்றை அறிந்தவர் நீர் ஒருவர்தான் என்று எண்ண வேண்டாம்!"

அநிருத்தரின் முகம் இப்போது உண்மையாகவே அதிசயமான காட்சி அளித்தது. அதில் கணத்துக்கு ஒரு சாயல் தோன்றி மறைந்தது. கடைசியில் வருந்தி வருவித்துக் கொண்ட புன்னகையுடன் முதன் மந்திரி "ஆம், இளவரசே! நான் அவ்விதம் இறுமாந்திருந்தது உண்மைதான். இன்றைக்குக் கர்வபங்கமாயிற்று. தாங்கள் பிறந்தவுடனே சிசுஹத்தி செய்ய ஏற்பாடு நடந்திருக்கும் பட்சத்தில் தாங்கள் எப்படி பிழைத்தீர்கள்? அந்த இரகசியத்தையும் கூறி விட்டால் கிருதார்த்தனாவேன்!" என்றார்.

"எனக்கு எவ்வளவுதான் தெரியும் என்று சோதிக்கிறீர் போலும்! நல்லது; சொல்கிறேன். சிசுஹத்தி செய்வதற்கு தாங்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள் குழந்தை பிறந்ததும் ஆணா பெண்ணா என்று கூடப் பாராமல் அவசரப்பட்டு எடுத்துக் கொண்டு போனார்கள் பெண் குழந்தை என்று தெரிந்ததும் தங்களிடம் வந்து சொன்னார்கள். பிழைத்துப் போகட்டும் என்று அக்குழந்தையைக் கோயில் பட்டர் ஒருவரிடம் ஒப்புவித்து வளர்க்கச் சொன்னீர்கள். பெண் குழந்தை பிறந்த அரை நாழிகை நேரத்தில் நான் பிறந்தேன். அதை நீங்கள் எதிர் பார்க்கவேயில்லை. என்னுடைய ஜாதக பலமும் சரியாயிருந்தது. அதனால் நான் உயிர் பிழைத்தேன். தங்களுடைய திட்டம் தவறிப் போனது பற்றி அறிந்த பிறகும், என்னைச் சிம்மாசனம் ஏறவிடாமல் தடுப்பதற்குப் பல சூழ்ச்சிகள் செய்தீர்கள். என்னைச் சிவபக்தனாக, அதாவது பைத்தியக்காரனாக வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்தீர்கள். அதிலும் தவறிப் போனீர்கள். நான் தாங்கள் விரும்பியது போல் அவ்வளவு முழுப் பைத்தியக்காரனாகி விடவில்லை. ஐயா! முதன் மந்திரியே! ஏன் இப்படி ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருக்கிறீர்? இவையெல்லாம் உண்மையில்லை யென்று ஒரேயடியாகச் சாதிப்பது தானே?"

முதன் மந்திரி உண்மையில் ஸ்தம்பித்துப் போய்த்தான் உட்கார்ந்திருந்தார். ஒருவாறு பேசும் சக்தியை வருவித்துக் கொண்டு "இளவரசே! தங்களுக்கு இவ்வளவெல்லாம் விவரங்கள் தெரிந்திருக்கும் போது நான் இல்லையென்று சாதிக்கப் பார்ப்பதில் என்ன பயன்?" என்றார்.

"ஆமாம்; பயனில்லைதான்! என்னிடம் திடீரென்று நீர் பரிவு கொண்டதன் காரணமும் எனக்குத் தெரியும். ஆதித்த கரிகாலனை உமக்குப் பிடிக்காது. அருள்மொழிவர்மனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க எண்ணியிருந்தீர். அவனைக் கடல் கொண்டு விட்டதனால் இப்போது என்னிடம் பரிவு கொண்டிருக்கிறீர்! ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன். முன்னர் நீர் எனக்குச் செய்த தீங்குகளையெல்லாம் மறந்துவிடப் போகிறேன். இன்று நீர் எனக்குச் செய்த உதவிக்கு நன்றியும் செலுத்துவேன். இன்று முதல் நீர் என் கட்சியில் இருப்பதாகச் சொல்லும் பட்சத்தில் நான் சிம்மாசனம் ஏறியதும் உம்மையே முதன் மந்திரியாக வைத்துக் கொள்ளவும் விரும்புகிறேன்!" என்றான் மதுராந்தகன்.

"இளவரசே! தங்களுடைய வார்த்தைகள் என்னைப் புளகாங்கிதம் அடையச் செய்கின்றன!" என்றார் அன்பில் அநிருத்தப் பிரம்மராயர்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP