Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

45. சிறைக் கப்பல்


கண்மூடிக்கண் திறக்கும் நேரத்தில் 'யானை இறவு' என்னும் கடல் துறை பின்னுக்குச் சென்றது. பின்னர், கானகத்து மரங்கள் பின்னோக்கி ஓடின. வானத்துப் பறவைகள் பின் நோக்கிப் பறந்தன. ஓடைகள், குளங்கள், ஊர்ப்புறங்கள், கோயில்கள், மண்டபங்கள் எல்லாம் பின்னோக்கிப் பாய்ந்து மறைந்தன. மான் கூட்டம் ஒன்று அந்த யானையுடன் சிறிது தூரம் போட்டியிட்டு ஓடப் பார்த்தது. மான்களும் தோல்வியடைந்து பின்தங்கின. யானை மட்டும் முன்னால் முன்னால் முன்னால் போய்க் கொண்டிருந்தது. எத்தனை தூரம், எத்தனை நேரம் என்றெல்லாம் பூங்குழலிக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இன்னமும் ஈழ நாட்டிலேதான் இந்த யானை போய்க் கொண்டிருக்கிறதா என்று மட்டும் பூங்குழலிக்கு வியப்பாயிருந்தது.

இத்தனை நேரம் அந்தத் தீவை மூன்று தடவை கடந்து போயிருக்கலாமே? இல்லை, இல்லை! இந்த யானை ஈழ நாட்டைக் கடந்து செல்லவில்லை. பூலோகத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. பூலோகத்தின் தென் முனையிலிருந்து வடமுனைக்குப் போய்க் கொண்டிருக்கிறது! இதன் முதுகில் ஏறிக்கொண்டு நானும் பூமியைப் பிரதட்சணம் செய்கிறேன். நான் மட்டுமா? இளவரசருந்தான்!

முதலில், யானை மதம் பிடித்து ஓடத் தொடங்கியதும், பூங்குழலிக்குக் கொஞ்சம் பயமாய்த் தானிருந்தது. பயத்துடன், என்ன நிகழ்கின்றது என்று தெரியாத தயக்கமும் இருந்தது. இரண்டு மூன்று தடவை இளவரசர் அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தார். பின்னர் அவளுடைய பயமும் தயக்கமும் மறைந்தன. எல்லையற்ற உற்சாகம் அவளை ஆட்கொண்டது. கொஞ்ச நேரம் வரை இப்பூவுலகில் ஒரு மத்தகஜத்தின் மீது ஏறிச் சென்றாள். திடீரென்று எப்படியோ சொர்க்கத்துக்குப் போய்விட்டாள். சொர்க்கத்தில் தேவேந்திரனுடைய ஐராவதத்தின் பேரில் அவள் வீற்றிருந்தாள். ஐராவதம் வான வீதிகளில் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. கற்பக விருட்சங்கள் அவள் மீது சுகந்த மலர்களைப் பொழிந்தன. கந்தவர்கள் இன்னிசைக் கருவிகளிலிருந்து இனிய சுவரங்களை எழுப்பிக்கொண்டு அவள் பின்னோடு பறந்து வந்தார்கள். அப்ஸர ஸ்திரீகள் நடனமாடிக்கொண்டு வந்தார்கள். ஊர்வலம் சென்ற வான வீதியின் இருபுறமும் நட்சத்திர தீபங்கள் சுடர்விட்டு ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்தன! இப்படிப் பல பல யுகங்கள் சென்றன!

இதோ, ஐராவதத்தின் வேகம் குறைகிறது. திடீரென்று அது பூலோகத்துக்கு வந்துவிட்டது. ஈழ நாட்டின் காடுகளுக்கே வந்துவிட்டது. யானைப்பாகன் குனிந்து அதன் மத்தகத்தைத் தட்டிக்கொடுக்கிறான். அதன் காதண்டை ஏதோ சொல்கிறான். சேச்சே! அவன் யானைப்பாகன் அல்ல; தேவேந்திரன் அல்லவா? - இல்லை இளவரசர் அல்லவா இவர்?

நாலுபுறமும் மரங்கள் சூழ்ந்த ஒரு குளத்தின் கரையிலே வந்து யானை அமைதியாக நின்றது.

பூங்குழலி சிறிது கவலையுடன், இளவரசரை வரவேற்று உபசரிப்பதற்காக ஜனக்கூட்டம் வந்து அக்கரையில் நிற்கிறதோ என்று பார்த்தாள். இல்லை! பின்னால் குதிரைகள் தொடர்ந்து வருகின்றனவோ என்று பார்த்தாள் அதுவும் இல்லை! குளத்தைப் பார்த்தாள், அதில் பூத்திருந்த அல்லி மலர்களும் செங்கழுநீர்ப் பூக்களும் அப்படி அப்படியே கொடிகளுடன் பிய்த்துக் கொண்டு வந்தன. அவளை நாலு புறமும் சூழ்ந்து கொண்டன. கன்னங்களிலும் தோள்களிலும் உடம்பு முழுவதும் அந்த மலர்கள் அவளைத் தழுவிக்கொண்டு மகிழ்ந்தன. பின்னர் அப்பொல்லாத மலர்களின் கொடிகள் அவளை இறுக்கிப் பிடித்து அமுக்கி மூச்சுத் திணறச் செய்தன. உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கி அப்பூங்கொடிகளின் பிடியிலிருந்து பூமிக்குத் தலைகீழாய் வந்தது போலிருந்தது. யானை தன் பெரிய முன்னங்கால்களை மடித்துக் குனிந்தது. பிறகு பின்னங் கால்களையும் மடித்துக்கொண்டு தரையில் படுத்தது. இளவரசர் யானையின் கழுத்திலிருந்து கீழே குதித்தார். "பூங்குழலி! யானைமேலிருந்து இறங்குவதற்கு மனம் இல்லையா?" என்றார்.

பூங்குழலி உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு தன் நினைவை அடைந்தாள். "ஐயா! சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வருவது கஷ்டந்தானே?" என்று முணு முணுத்துக்கொண்டு இறங்கினாள்.

யானை மீண்டும் எழுந்து குளக்கரையிலிருந்த ஒரு பெரிய மரத்தின் கிளையை ஒடித்துத் தன் அகண்ட வாய்க்குள்ளே திணித்துக் கொண்டது.

அருள்மொழிவர்மர் குளத்தின் கரையோரமாகச் சென்று உட்கார்ந்தார். தயங்கி நின்ற பூங்குழலியையும் அருகில் வந்து உட்காரச் சொன்னார்.

தெளிந்த நீரில் பூங்குழலியின் முகம் பிரதிபலித்தது. யானையின் ஓட்டத்தினாலும் அச்சமயம் நேர்ந்த உள்ளக் கிளர்ச்சியினாலும் அவள் முகம் செக்கச் செவேலென்று ஆகிச் செங்கழுநீர்ப் பூவுடன் போட்டியிட்டது.

நீரில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்த வண்ணம் இளவரசர், "சமுத்திர குமாரி! உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!" என்றார்.

அல்லி மலர்களும், செங்கழுநீர்ப் பூக்களும் மீண்டும் இடம் பெயர்ந்து வந்து பூங்குழலியின் உடல் முழுவதும் முத்தமிட்டன! "உன்னை ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது தெரியுமா?" என்று இளவரசர் கேட்டார்.

பூங்குழலியின் கண் முன்னால் வானமும் வையமும் குளமும் அதிலுள்ள மலர்களும் குளக்கரையிலிருந்த மரங்களும் சுழன்று சுழன்று வந்தன.

"எனக்குத் தெரிந்த ஒவ்வொருவரும், நான் அவர்கள் இஷ்டம்போல் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நீ ஒருத்தி மட்டும் என் விருப்பத்தின்படி நடக்கச் சந்தோஷத்துடன் சம்மதித்தாய்! இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன் சுமுத்திர குமாரி!"

பூங்குழலியின் உடம்பு ஒரு யாழ் ஆயிற்று. அவளுடைய நரம்புகள் எல்லாம் யாழின் நரம்புகள் ஆயின. பொன் வண்ண விரல்கள் அந்த நரம்புகளை மீட்டித் தேவகானத்திலும் இனிய இசையை எழுப்பின.

"சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து என் பிரயாணத்தை தடை செய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள்! சேநாதிபதி நாம் வரும் வழியில் பல இடையூறுகளை உண்டு பண்ணினார். நமக்கு முன் அவசரமாக ஆள் அனுப்பிக் கிராமவாசிகளை உபசாரம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். பார்த்திபேந்திரர் விரைந்து திரிகோணமலைக்குப் போயிருக்கிறார். அங்கிருந்து கப்பல் ஏறி நமக்கு முன்னால் தொண்டைமானாற்றின் முகத்துவாரத்துக்கு வந்து விட வேண்டுமென்பது அவருடைய உத்தேசம். ஆகா! அவர்களுடைய சூழ்ச்சி எனக்குத் தெரியாது என்று நினைத்தார்கள்! உன் உதவியினால் அவர்களுடைய சூழ்ச்சியைத் தோற்கடித்தேன்..."

பூங்குழலிக்குச் சட்டென்று தான் செய்த காரியம் என்னவென்பது நினைவு வந்தது. அவளை நரகலோகத்தில் யம தூதர்கள் உயிரோடு செக்கிலே போட்டு ஆட்டுவது போலிருந்தது.

"ஐயா! அவர்கள் எல்லாரும் தங்களை எதிரிகளிடம் சிறைப்படாமல் தப்புவிக்க முயன்றார்கள். நான் பாவி! தங்களைச் சிறைப்படுத்த அழைத்துப் போகிறேன்!" என்று கூறிவிட்டு விம்மினாள் பூங்குழலி.

"அடேடே! இது என்ன? உன்னைப்பற்றி நான் எவ்வளவோ நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தேன். நீயும் அவர்களைப் போல் ஆகிவிட்டாயே?"

"என் சுய புத்தியினால் இந்தப் பாதகத்தை நான் செய்யவில்லை. தங்களுடைய ஆசை வார்த்தையில் மயங்கிப் பைத்தியமாகி விட்டேன். இப்போது புத்தி தெளிந்தது. நான் போகிறேன்..." என்று சொல்லிவிட்டு பூங்குழலி குதித்து எழுந்தாள். அவள் ஓடிப் போகாமல் தடுப்பதற்கு இளவரசர் அவளுடைய கரத்தை இலேசாகத் தொட்டுப் பற்றினார்.

அச்சமயத்தில் தேவலோகத்துக் கன்னிகைகளுக்கு வேறு வேலை இருக்கவில்லை. அவர்கள் வெண்ணிலவின் சாற்றை சந்தனக் குழம்புடன் கலந்து பூங்குழலியின் மீது தெளித்தார்கள். அவள் முற்றும் சக்தி இழந்து, செயலிழந்து மீண்டும் கீழே உட்கார்ந்தாள். இரண்டு கரங்களிலும் முகத்தை மூடிக்கொண்டு விம்மத் தொடங்கினாள்.

"சமுத்திர குமாரி! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல எண்ணினேன். நீ இப்படி அழுவதாயிருந்தால் சொல்வதற்கில்லை. உடனே புறப்பட வேண்டியதுதான்."

பூங்குழலி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

"அதுதான் சரி, கேள்! இவர்கள் எல்லாரும் என்னைச் சிறைப்படாமல் காப்பாற்ற முயல்கிறார்கள் என்று சொன்னாயே? அது உண்மைதான். அது எதற்காகத் தெரியுமா?"

"தங்கள் பேரில் அவர்கள் வைத்திருக்கும் அன்பினால் தான். நான் ஒருத்தி மட்டுந்தான் பாதகி!..."

"பொறு, பொறு! என்பேரில் எல்லாருக்கும் அன்புதான்! எதற்காகத் தெரியுமா? யாரோ சோதிடர்களும் ரேகை சாஸ்திரிகளும் சொல்லியிருக்கிறார்களாம் - நான் ஒரு காலத்தில் சக்கரவர்த்தி ஆகப் போகிறேன் என்று. ஆகையால் ஒவ்வொருவரும் என்னைச் சிம்மாசனத்திலே தூக்கி வைத்து என் தலையிலே ஒரு கிரீடத்தையும் சுமத்திவிடப் பார்க்கிறார்கள். பேராசை பிடித்தவர்கள்!"

"ஐயா! அவர்கள் அப்படி ஆசைப்பட்டால் அதில் தவறு என்ன? இந்த லோகத்துக்கு மட்டுந்தானா, மூன்று உலகத்துக்கும் சக்கரவர்த்தியாகத் தாங்கள் தகுதி வாய்ந்தவர் அல்லவா?"

"ஆகா! நீயும் அவர்களைப் போலத்தான் பேசுகிறாய்! பெண்ணே! இவ்வுலகில் அரண்மனையைப் போன்ற சிறைக்கூடம் வேறில்லை; சிம்மாசனத்தைப் போன்ற பலிபீடமும் இல்லை; கிரீடம் அணிவது போன்ற தண்டனை வேறு கிடையவே கிடையாது. இதையெல்லாம் மற்றவர்களிடம் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; நீயாவது ஒப்புக் கொள்வாய் என்று நினைத்தேன்."

பூங்குழலியின் கண்ணிமைகள், பட்டுப் பூச்சியின் சிறகுகளைப்போல் அடித்துக் கொண்டன. அவள் ஆர்வம் ததும்பிய அகன்ற கண்களினால் அரசிளங்குமாரரை நோக்கினாள்.

"சமுத்திரகுமாரி! உண்மையாகச் சொல்! உன்னை வாழ்நாளெல்லாம் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்படி சொன்னால் உட்கார்ந்திருப்பாயா?" என்று இளவரசர் கேட்டார்.

பூங்குழலி சிறிது நேரம் யோசனை செய்தாள். பின்னர், "மாட்டேன்!" என்று தெளிவாகச் சொன்னாள்.

"பார்த்தாயா? பின்னே என்னை மட்டும் அந்தத் தண்டனைக்கு ஏன் உள்ளாக்க விரும்புகிறாய்?"

"தாங்கள் இராஜ குலத்தில் பிறந்தவர் அல்லவா?"

"இராஜ குலத்தில் பிறந்ததினால் என்ன? நல்லவேளையாகக் கடவுள் என்னை இந்த தண்டனைக்கு உள்ளாக்க விரும்பவில்லை. இராஜ்யம் ஆளுவதற்கு என் மூத்த சகோதரர் இருக்கிறார்; என் பெரிய பாட்டனாரின் மகன் ஒருவரும் இருக்கிறார். அவரும் இராஜ்யம் ஆள ஆசைப்படுகிறார்..."

"ஆகா! அது தங்கள் காதுக்கும் எட்டிவிட்டதா?" என்றாள் பூங்குழலி.

"நல்ல கதை! எனக்குத் தெரியாது என்று நினைத்தாயா என்ன? ஆகையால் தஞ்சாவூர்ச் சிம்மாசனம் அதன்பேரில் உட்காருவதற்கு ஆள் இல்லாமல் தவிக்கப் போவதில்லை. அத்துடன் எனக்குக் கிரீடம் சுமந்து ஆளும் இராஜ்ய ஆசையும் இல்லை!..."

"தங்களுக்கு எதிலேதான் ஆசை?" என்று கேட்டாள் பூங்குழலி.

"அப்படிக் கேள், சொல்லுகிறேன்! சற்றுமுன் இந்த மத்த கஜத்தின் மீது உட்கார்ந்து பிரயாணம் செய்தோமே? அம்மாதிரி வனங்கள் வனாந்தரங்கள் எல்லாம் புகுந்து சண்டமாருதம் போல் சுற்றி வருவதில் எனக்கு ஆசை. கப்பல்களில் ஏறிக் கடல்களைக் கடந்து செல்வதில் ஆசை. உயரமான மலைகளின் உச்சிச் சிகரங்களின் மேல் ஏறுவதில் ஆசை. கடல்களுக்கு அப்பால் இந்த இலங்கையைப் போல் எத்தனையோ இலங்கைகளும், பரதகண்டத்தைப்போல் எத்தனையோ பெரிய பெரிய கண்டங்களும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கேயெல்லாம் போய் அந்தந்த நாடுகளில் உள்ள அதிசயங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசை!..."

இளவரசர் கூறும் மொழிகளை அப்படியே விழுங்குவாள் போல் பூங்குழலி வாயைத் திறந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள். ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகவே, "ஐயா! அங்கேயெல்லாம் போகும்போது என்னையும் அழைத்துப் போவீர்களா?" என்று கேட்டாள்.

"நான் சொன்னவையெல்லாம் என் ஆசைகள். அவை நிறைவேறப் போகின்றன என்று யார் கண்டது?" என்றார் இளவரசர்.

பூங்குழலி கனவு லோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தாள். "ஐயா! அப்படியானால் தாங்கள் எதற்காக இப்போது தஞ்சாவூருக்குப் போக வேண்டும்?" என்றாள்.

"அதைச் சொல்லத்தான் ஆரம்பித்தேன். அதற்குள் நீ பேச்சை மாற்றி எங்கேயோ கொண்டுபோய்விட்டாய். சமுத்திரகுமாரி! இந்த இலங்கைத் தீவில் வாய்திறந்து பேசும் சக்தியற்ற ஊமை ஸ்திரீ ஒருத்தி அங்குமிங்கும் சித்தப்பிரமை கொண்டவள் போல் சுற்றிக் கொண்டிருக்கிறாளே? அவளை உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் இளவரசர் அருள்மொழிவர்மர்.

பூங்குழலி அடங்கா வியப்புடன், "தெரியும், இளவரசே! எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றாள்.

"காரணம் பிறகு சொல்லுகிறேன். அந்த ஸ்திரீயை உனக்கு எப்படித் தெரியும்? அவளைப் பற்றி என்ன தெரியும்?" என்று கேட்டார்.

"ஐயா! நான் குழந்தை வயதில் என்னைப் பெற்ற தாயை இழந்தேன். பிறகு எனக்கு அன்னையின் அன்பை அளித்தவள் அந்த மூதாட்டிதான். அவள் என் குரு; என் தெய்வம், அவளைப் பற்றி வேறு என்ன கேட்கிறீர்கள்?"

"அந்த மூதாட்டிக்கு நிரந்தரமான வாசஸ்தலம் ஏதாவது உண்டா? எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பவள்தானா?"

"கோடிக்கரையிலிருந்து இலங்கையை நெருங்கி வரும்போது பூதத்தீவு என்று ஒரு தீவு இருக்கிறது. அதில் ஒரு பாறைக்குகை இருக்கிறது. அங்கேதான் அந்த அம்மாள் பெரும்பாலும் இருப்பாள். அவ்விடத்தில்தான் தங்களை நான் முதன் முதலில் பார்த்தேன்."

"என்னை அங்கே பார்த்தாயா?"

"ஆம்! அந்தப் பாறைக் குகையில் சில அழகான சித்திரங்களை அந்த அம்மாள் எழுதியிருக்கிறாள். அந்தச் சித்திரங்களில் தங்கள் உருவத்தையும் கண்டேன்! பிறகு ஒரு நாள் கோடிக்கரையில் தங்களை நேரில் பார்த்தபோது, அதனால்தான் பிரமித்துப் போனேன்."

"ஓ! இப்போது எல்லாம் எனக்குத் தெரிகிறது. விளங்காத விஷயமும் விளங்குகிறது. சமுத்திரகுமாரி! அந்த மூதாட்டிக்கும் எனக்கும் உள்ள உறவைப் பற்றியும் உனக்குத் தெரியுமா?"

"ஏதோ உறவு இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். ஆனால் இன்ன உறவு என்று தெரியாது!"

"பூங்குழலி! அந்த மூதாட்டி என் பெரியதாயார். நியாயமாகத் தஞ்சாவூர் சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டிய பெருமாட்டி அவள்!..."

"கடவுளே! அப்படியா?"

"ஆனால் விதியின் எழுத்து வேறு விதமாயிருந்தது யார் என்ன செய்யமுடியும்? என் தந்தையின் உள்ளத்தில் ஏதோ ஓர் இரகசியத் துன்பம் இருந்து வேதனைப்படுத்தி வருகிறது என்று சில சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. அதன் உண்மையை இப்போது தான் கண்டுபிடித்தேன். என் பெரிய தாயார் இறந்து விட்டதாக என் தந்தை எண்ணிக் கொண்டிருக்கிறார். தம்மால் இறந்து விட்டதாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறார். அவள் இறக்கவில்லை, உயிரோடிருக்கிறாள் என்பதை அவருக்கு நான் போய்ச்சொல்ல வேண்டும். சொன்னால் அவர் இருதயத்தின் தாபம் தணியும்! அவரை அரித்துக்கொண்டிருக்கும் மன வேதனை தீரும். சக்கரவர்த்தியின் உடல் நிலை சரியாக இல்லை என்றுதான் உனக்குத் தெரிந்திருக்குமே? மனித வாழ்க்கை அநித்தியமானது. எப்போது என்ன நேரிடும் என்று யாரும் சொல்வதற்கில்லை. வானத்தில் சில நாளாகத் தூமகேது ஒன்று தோன்றி வருகிறது. அதைப்பற்றி ஜனங்கள் பலவாறு பேசிக் கொள்கிறார்கள். சக்கரவர்த்தியின் மனமும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இந்த நிலைமையில், விபரீதமாக எதுவும் நேர்வதற்கு முன்னால் நான் கண்டுபிடித்த விவரத்தை அவருக்குத் தெரிவித்துவிட வேண்டும். சமுத்திர குமாரி! அதற்காகவேதான் நான் அவசரமாகத் தஞ்சைக்குப் போக விரும்புகிறேன். நீ எனக்குச் செய்யும் உதவி எவ்வளவு முக்கியமானது என்று இப்போது தெரிகிறது அல்லவா?"

ஆர்வத்துடன் இளவரசரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலி ஒரு பெருமூச்சு விட்டாள். "கடவுளே! மனித வாழ்க்கையில் ஏன் இத்தனை இன்பத்துடன் துன்பத்தையும் வைத்தாய்?" என்று முணுமுணுத்தாள்.

பிறகு இளவரசரைப் பார்த்து, "ஐயா! இந்தப் பேதையினால் தங்களுக்கு ஏதேனும் உதவி ஏற்பட்டால் அது என் பூர்வ ஜன்ம பாக்கியம். ஆனால் இதற்கு என் உதவி ஏன்? சேநாதிபதி முதலியவர்களிடம் சொல்லியிருந்தால் அவர்கள் தங்களை தஞ்சைக்கு அனுப்பியிருக்க மாட்டார்களா?" என்றாள்.

"இல்லை அவர்கள் யாரிடமும் சொல்ல நான் விரும்பவில்லை. என்னை எப்படியாவது சிம்மாசனம் ஏற்றுவதில் முனைந்திருக்கும் அவர்களுக்கு இது ஒன்றும் முக்கியமாகத் தோன்றாது. என் தந்தையின் அந்தரங்கத்தை அவர்களிடமெல்லாம் சொல்வதற்கும் நான் இஷ்டப்படவில்லை. சொன்னால் அவர்கள் புரிந்து கொண்டிருக்கவும் மாட்டார்கள். உன்னிடம் இன்னொரு உதவியும் கோருகிறேன். சமுத்திர குமாரி! அதற்காகவே முக்கியமாக இங்கே யானையை நிறுத்தினேன். எனக்குச் சக்கரவர்த்திப் பட்டமும் சாம்ராஜ்ய சிம்மாசனமும் அளித்த ஜோசியர்கள் என் வாழ்க்கையில் பல அபாயங்கள் - பல கண்டங்கள் - ஏற்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரயாணத்தில் அப்படி ஏதாவது எனக்கு நேர்ந்துவிட்டால்... என் தந்தையை நான் சந்திக்க முடியாமல் போய்விட்டால் நீ சக்கரவர்த்தியிடம் போக வேண்டும். எப்படியாவது அவரைச் சந்தித்து என் பெரியம்மை உயிரோடிருக்கிறாள் என்பதை அவரிடம் சொல்ல வேண்டும். அவர் இஷ்டப்பட்டால் அந்த மூதாட்டியை அவரிடம் அழைத்துப் போக வேண்டும். இந்தக் காரியத்தையெல்லாம் செய்வாயா பூங்குழலி?"

"தங்களுக்கு ஒரு கண்டமும் நேராது; அபாயம் தங்களிடம் நெருங்கப் பயந்து ஓடும்; கட்டாயம் பத்திரமாய்த் தஞ்சாவூர் போய்ச் சேர்வீர்கள்...."

"ஒருவேளை எனக்கு ஏதாவது நேர்ந்தால் நான் கோரியபடி செய்வாய் அல்லவா?"

"கட்டாயம் செய்கிறேன், இளவரசே!"

"இந்த முக்கியமான காரியத்தை வேறு யாரிடம் நான் ஒப்புவிக்க முடியும்? நீயே சொல், பார்க்கலாம்."

"என்னிடம் ஒப்புவிக்க வேண்டிய காரியத்தை ஒப்புவித்தாகி விட்டது. இத்துடன் என் உபயோகம் தீர்ந்துவிட்டதல்லவா? நான் விடைபெற்றுக் கொள்ளலாமா?" என்றாள் பூங்குழலி. அவளுடைய குரல் கண்ணீரின் ஈரப்பசையோடு கலந்து வந்தது.

"ஆகா! அது எப்படி? தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தை இன்னும் நாம் அடையவில்லையே? சோழ நாட்டுப் போர்க்கப்பல்களை இன்னும் காணவில்லையே? அதற்குள் எப்படி விடை பெற்றுக் கொள்ளலாம்? கோபித்துக்கொள்ளதே! இன்னும் சிறிது நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு என்னுடைய சகவாசத்தைப் பொறுத்துக் கொள். யானை மேல் மறுபடியும் ஏறி இன்னும் கொஞ்ச தூரம் என்னுடன் வா! புலிக்கொடி பறக்கும் கப்பலைத் தூரத்தில் கண்டதும் நீ என்னை விட்டுப் பிரிந்து செல்லலாம்!" என்றார் இளவரசர்.

மறுமொழி ஒன்றும் சொல்லாமல் பூங்குழலி யானை நின்ற இடத்தை நோக்கி நடந்தாள் இளவரசரும் சென்றார். அவருடைய வார்த்தைக்குப் படிந்து யானை மண்டியிட்டுப் படுத்தது. இருவரும் அதன் முதுகில் ஏறிக் கொண்டார்கள். முன்போல் யானையை இளவரசர் விரட்டவில்லை. ஆயினும் விரைவாகவே நடந்து சென்றது.

"சமுத்திரகுமாரி! எனக்கு மிகவும் பிடித்த சில காரியங்களைப் பற்றிச் சொன்னேனே? உனக்குப் பிடித்தவை என்னவென்று சொல்ல வேண்டாமா?" என்றார் அருள்மொழிவர்மர்.

"எருமை வாகனத்தின் மீது வரும் எமனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நள்ளிரவில் பாறை உச்சியின் மீது நின்று கொண்டு கொள்ளிவாய்ப் பிசாசுகளை நேரம் போவதே தெரியாமல் பார்ப்பதற்கு ரொம்பவும் பிடிக்கும்..."

"நல்ல விசித்திரமான குணமுள்ள பெண் நீ!"

"தங்கள் சிநேகிதர் கூறுவதை போல் பைத்தியக்காரப் பெண் என்று சொல்லுங்கள். அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். அப்புறம் சிறிய படகில் ஏறி அலைகடலின் நடுவில் போய்க் கொண்டே இருப்பதற்கும் பிடிக்கும். அதிலும் கடலில் சுழற்காற்று அடித்ததோ, என் உற்சாகம் எல்லை கடந்துவிடும். அப்போது படகு ஒருசமயம் அலை ஊச்சியில் ஏறி வானுலகத்தை எட்டிப் பிடிக்கும்; மறுகணம் பாதாளத்தில் தடாலென்று விழும். அதைப் போல் எனக்குப் பிடித்த காரியம் வேறொன்றுமில்லை. சற்று முன்னால் இந்த யானை வெறி கொண்டதுபோல் ஓடி வந்ததே, அப்போதும் எனக்கு அவ்வளவு உற்சாகமாகவே இருந்தது!"

"ஆ! பூங்குழலி! முருகப் பெருமான் உன்னுடைய புன்னகையை நாடி வந்திருந்தால் அடியோடு தோற்றிருப்பார்! யானை முகனை அனுப்பிக் குறமகள் வள்ளியைப் பயமுறுத்தினாரே, அந்த யுக்தி ஒன்றும் உன்னிடம் பலித்திராது!" என்றார் இளவரசர்.

அவர்கள் தொண்டைமான் நதியின் முகத்துவாரத்தை அணுகியபோது, "ஆ! இது என்ன?" என்று பூங்குழலி கூச்சலிட்டாள்.

"என்ன? என்ன?" என்று இளவரசர் ஆவலுடன் கேட்டார். "புலிக் கொடியுடன் கூடிய மரக்கலங்கள் நான் பார்த்த இடத்தில் இல்லையே? என்னைப் பற்றித் தாங்கள் என்ன நினைப்பீர்கள்? சேநாதிபதி என்மீது சந்தேகப் பட்டதுபோல் தங்களை ஏமாற்றி அழைத்து வந்தவள் ஆகி விட்டேனே!" என்றாள்.

"அப்படி நான் ஒரு நாளும் நினைக்க மாட்டேன். பூங்குழலி! நீ பொய் சொல்லி என்னை வஞ்சித்து அழைத்து வர எவ்வித முகாந்தரமும் இல்லை..."

"ஏன் இல்லை, இளவரசே, காதல் காரணமாக இருக்கலாம் அல்லவா? உலகமெல்லாம் அழகில் மன்மதனையும், வீரபராக்கிரமத்தில் அர்ச்சுனனையும் நிகர்த்தவர் என்று போற்றும் பொன்னியின் செல்வர் மீது மோகங் கொண்டு ஒரு பேதைப் பெண் இம்மாதிரி செய்திருக்கலாம் அல்லவா?"

"பெண்ணே! சேநாதிபதி இங்கே இச்சமயம் இருந்திருந்தால் ஒருவேளை அவ்வாறு சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால் உன் மனத்திலும், என் மனத்திலும் அத்தகைய பைத்தியக்கார எண்ணங்களுக்கு இடமில்லை."

"ஐயா! பழையாறை அரண்மனையில் வானதி தேவி என்று வீரர்குலத்து இளவரசி ஒருத்தி இருக்கிறாளே, அவளைப் பற்றியும் அப்படித் தாங்கள் சொல்வீர்களா?"

"ஆம், ஆம்! அதை நான் மறந்துவிடவில்லை. இந்தச் சேநாதிபதியும் என் தமக்கையும் சேர்ந்து அந்தப் பெண்ணை என் கழுத்தில் கட்டிவிடப் பார்க்கிறார்கள். சோழ குலச் சிம்மாசனத்தில் அமரவேண்டும் என்ற ஆசையினால் அந்தப் பேதைப் பெண்ணுக்கும் அத்தகைய ஆசை ஒரு வேளை இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல, பூங்குழலி! அது போகட்டும்! நீ பார்த்தபோது கப்பல்கள் எங்கே இருந்தன?" என்று இளவரசர் கேட்டார்.

"அதோ அந்த முனையில்தான் நின்று கொண்டிருந்தன! எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது!" என்றாள் பூங்குழலி.

"அதனால் என்ன? கொஞ்சம் அப்பால் இப்பால் நகர்ந்து சென்று நிற்கக் கூடும் அல்லவா? எல்லாவற்றுக்கும் கடற்கரை வரையில் போய்ப் பார்த்துவிடுவோம்!" என்றார் இளவரசர்.

"கப்பல்கள் போயிருந்தால் நல்லதாய்ப் போயிற்று. இப்பொழுது எதற்காகப் போய்த் தேடவேண்டும்?" என்றாள் பூங்குழலி.

"ஆகா! நீ அப்படி நினைக்கலாம். ஆனால் எனக்கு அதைப் போல் ஏமாற்றம் தருவது வேறொன்றுமில்லை!" என்றார் இளவரசர்.

முந்நூறு வருஷத்துக்கு முன்னால் இலங்கை இளவரசனாகிய மானவன்மன் காஞ்சிபுரத்தில் வந்து சரண் புகுந்திருந்தான். அவனுக்கு இராஜ்யத்தை மீட்டுத் தருவதற்காக மாமல்ல சக்கரவர்த்தி ஒரு பெரும்படையை அனுப்பினார். அவர் அனுப்பிய படைகள் இந்தப் பிரதேசத்திலேதான் வந்து இறங்கின. அச்சமயம் தொண்டைமான் ஆறு உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடைதான் இருந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும் படைகள் இறங்குவதற்கும் சௌகரியமாவதற்கு அந்த ஓடையை வெட்டி ஆழமாகவும் பெரிதாகவும் ஆக்கினார்கள். பிறகு அந்த ஓடை தொண்டைமானாறு என்று பெயர் பெற்றது. முகத்துவாரத்தின் அருகில் அந்த நதி வளைந்து வளைந்து சென்றது. இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தன. இதனால் கடலிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாதபடி கப்பல்கள் நிற்பதற்கு வசதியாக இருந்தது.

அவ்வாறு பூமிக்குள் ஆறு புகுந்து தண்ணீர் நிறையத் தேங்கியிருந்த இடம் ஒன்றிலேதான் இளவரசரைச் சிறைப்பிடிக்க வந்த மரக்கலங்களைப் பூங்குழலி பார்த்திருந்தாள். முதலில் பார்த்த இடத்தில் அந்த மரக்கலங்கள் இப்போது காணப்படவில்லை. அதாவது பாய்மரங்கள், கொடிகள் முதலியவை தென்படவில்லை. அந்த இடத்தை மேலும் நெருங்கிப் பார்த்தபோது ஓர் அதிசயமான காட்சி புலப்பட்டது. கப்பல் ஒன்று வெள்ளத்தை விட்டு அதிக தூரம் பூமிக்குள்ளே சென்று சேற்றிலே புதைந்து போயிருந்தது. அதன் பாய் மரங்கள் கொடிகள் முதலியவை ஓடிந்ததும் சிதைந்தும் கிடந்தன. அதில் மனிதர்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. இரண்டு நாளைக்கு முன்னால் அவள் பார்த்த கப்பல்களிலே அது ஒன்று என்பது பூங்குழலிக்கு நன்கு தெரிந்தது. இளவரசரைச் சிறைப் பிடித்துக்கொண்டு போவதற்கென்று வந்த கப்பல்களில் ஒன்று, அதுவே சேற்றிலே சிறைப்பட்டுக் கிடப்பதைக்கண்டு பூங்குழலி ஆச்சரியக் கடலில் மூழ்கினாள்!


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com