Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

42. பூங்குழலியின் கத்தி


பாழடைந்த மண்டபத்திலிருந்து பூங்குழலியைத் தேடிக் கொண்டு சென்ற வந்தியத்தேவன், அவள் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டான். இலேசான விம்மல் அவளிடமிருந்து வந்து கொண்டிருந்தது.

குரலை மிகவும் நயப்படுத்திக் கொண்டு, "பூங்குழலி!" என்றான்.

சத்தம் கேட்ட பூங்குழலி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

"நீ தானா?" என்று சொல்லி மறுபடியும் திரும்பிக் கொண்டாள்.

"நான்தான்! என்பேரில் உனக்கு என்ன கோபம்?"

"உன் பேரில் எனக்கு எந்தவிதக் கோபமும் இல்லை."

"பின்னே ஏன் உனக்கு இவ்வளவு சிடுசிடுப்பு?"

"எனக்கு ஆண் பிள்ளைகளைக் கண்டாலே பிடிக்கவில்லை."

"இளவரசரைக் கூடவா?"

பூங்குழலி திரும்பிக் கண்களில் கனல் எழும்படி வந்தியத்தேவனைப் பார்த்தாள்.

"ஆமாம்; அவரைத்தான் முக்கியமாகப் பிடிக்கவில்லை!" என்றாள்.

"அப்படி அவர் என்ன குற்றத்தைச் செய்துவிட்டார்?"

"என்னை அவருக்கு ஞாபகமேயில்லை. என்னை அவர் முகமெடுத்துக் கூடப் பார்க்கவில்லை."

"உன்னை அவருக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. நான் உன்னைப் பற்றிக் கூறியதும், 'ஓ! சமுத்திர குமாரியை எனக்குத் தெரியாதா?' என்றார்.

"பொய் சொல்லுகிறாய்."

"நீயே நேரில் வந்து கேட்டுக்கொள்."

"என்னை நினைவிருந்தால், ஏன் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?"

"அவர் பேசினார்; நீதான் மறுமொழி சொல்லாமல் ஓடி வந்துவிட்டாய்."

"அந்தமாதிரி பேச்சை நான் சொல்லவில்லை. தெரிந்தவர்களைப் பார்த்தால், 'என்ன? ஏது?' என்று விசாரிப்பது கிடையாதா? நீ சொல்வது பொய்! அவர் என்னை முகமெடுத்தே பார்க்கவில்லை."

"பூங்குழலி! அதற்கு ஒரு காரணம் இருக்கிறது."

"என்ன காரணம்?"

"இளவரசருக்கு இப்போது ரொம்ப கஷ்டகாலம்."

"யார் சொன்னது?"

"எல்லா ஜோசியர்களும் சொல்லியிருக்கிறார்கள். குடந்தை சோதிடர் என்னிடமே சொன்னார்."

"உன்னிடம் என்ன சொன்னார்?"

"இளவரசருக்குக் கொஞ்சநாள் வரையில் கஷ்டத்துக்கு மேல் கஷ்டமாக வந்து கொண்டிருக்கும் என்று சொன்னார். அவரைச் சேர்ந்தவர்களுக்குக்கெல்லாம் கஷ்டங்கள் வரும் என்று சொன்னார். இது இளவரசருக்கும் தெரியும். ஆகையினால் அவர் யாரும் தம்மோடு சிநேகிதமாக இருப்பதை விரும்பவில்லை. தமக்கு வரும் கஷ்டம் தம்மோடு போகட்டும், என்று நினைக்கிறார்."

"நீ மட்டும் ஏன் அவரோடு சிநேகமாயிருக்கிறாய்?"

"நீ சற்று முன் பார்க்கவில்லையா? என்னையும் சண்டை பிடித்துத் துரத்த அவர் பிரயத்தனப்படுகிறார். நடுச் சாலையில் ஒரு காரணமும் இல்லாமல் அவர் என்னோடு கத்திச் சண்டை போட்டார். நீங்கள் வந்ததினால் சண்டை நின்றது."

"அவர் துரத்தினாலும் நீ அவரை விட்டுப் போக மாட்டாயா?"

"மாட்டவே மாட்டேன். அவருக்கு வரும் கஷ்டங்களையெல்லாம் நானும் பகிர்ந்து அநுபவிப்பேன்."

"அவரை உனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறதா?"

"ஆமாம்; ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது."

"எதனால் பிடித்திருக்கிறது?"

"காரணம் சொல்லத் தெரியாது. அவரைப் பார்த்தவுடனே அவர்மேல் பிரியம் ஏற்பட்டு விட்டது".

"எனக்கும் அப்படித்தான்!" என்றாள் பூங்குழலி. உடனே தான் அவ்விதம் மனம் திறந்து சொல்லிவிட்டதைப் பற்றி வருந்தி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

"உனக்கு இளவரசரிடம் பிரியம் என்று எனக்குத் தெரியும். ஆகையினால் தான் உன்னை அழைத்துப் போக வந்தேன். என்னுடன் வா!"

"வரமாட்டேன்!" என்று பூங்குழலி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

"வராவிட்டால் பலவந்தமாக உன்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு போவேன்."

"அருகில் நெருங்கினால் இதோ கத்தி இருக்கிறது ஜாக்கிரதை!" என்று பூங்குழலி தன் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் காட்டினாள்.

"பாவிப் பெண்ணே! எதற்காக என்னைக் குத்திக் கொல்ல வருகிறாய்? இளவரசரிடம் உன்னைப்பற்றி ஞாபகப்படுத்தினேனே, அதற்காகவா?"

"நீ பொய் சொல்லுகிறாய்; அவரிடம் என்னைப் பற்றி நீ ஒன்றுமே சொல்லவில்லை!"

"போனால் போகட்டும்; இளவரசரைப் பிடித்துக்கொண்டு போக இரண்டு கப்பல்கள் வந்திருப்பதாகச் சொன்னாய் அல்லவா அதை அவரிடம் வந்து சொல்லிவிட்டு அப்புறம் எப்படியாவது தொலைந்து போ!"

"எல்லா விவரங்களும் சேநாதிபதியிடம் சொல்லி விட்டேன்."

"இளவரசர் உன்னிடம் நேரில் கேட்டு அறிய விரும்புகிறார்".

"அவர் முன்னால் வந்தால் நான் ஊமையாகி விடுவேன்."

"ஊமைச்சிகளிடத்தில் இளவரசருக்கு ரொம்பப் பிரியம்!"

"சீச்சீ! நீ பரிகாசம் செய்கிறாய்!" என்று சொல்லிப் பூங்குழலி கத்தியை ஓங்கினாள்.

"அப்படியானால் நீ என்னுடன் வரப் போவதில்லையா?"

"இல்லை!"

"சரி; நான் போகிறேன்! என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இரண்டு அடி எடுத்து வைத்தான். மறுபடியும் சட்டென்று திரும்பிப் பூங்குழலியின் கையிலிருந்து அவளுடைய கத்தியைப் பிடுங்கி வீசி எறிந்தான்!

வீசி எறிந்த கத்தி வெகுதூரம் சுழன்று சுழன்று சென்று ஓர் அடர்ந்த புதரில் விழுந்தது. கத்தி விழுந்த இடத்திலிருந்து 'வீல்' என்று குரல் கேட்டது.

அது மனிதக் குரலா, ஏதேனும் ஒரு விலங்கு அல்லது பட்சியின் குரலா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.

கத்தியைப் பிடுங்கியதும் வந்தியத்தேவனைக் கடுங்கோபத்துடன் பார்த்த பூங்குழலி மேற்கூறிய சப்தத்தைக் கேட்டதும் கத்தி விழுந்த இடத்தை ஆர்வத்துடன் நோக்கினாள். பிறகு, இருவரும் வியப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மெள்ளமெள்ள நடந்து கத்தி விழுந்த இடத்துக்கருகிலிருந்து புதரை நெருங்கிப் பார்த்தார்கள். செடிகளிலும் தரையிலும் புது இரத்தம் சிந்தியிருந்தது. மற்றபடி அங்கு மனிதரும் இல்லை; விலங்கும் இல்லை. பூங்குழலியின் கத்தியையும் காணவில்லை!

"பார்த்தாயா பூங்குழலி! நான் கூறியதன் உண்மை இப்போதாவது தெரிகிறதா? இளவரசரை நாலா பக்கமும் அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன. எந்த நேரத்தில் எந்த இடத்திலிருந்து எப்படிப்பட்ட அபாயம் வருமென்று சொல்ல முடியாது. தற்செயலாக உன்னுடைய கத்தியைப் பிடுங்கி நான் விட்டெறிந்தேன். அதிலிருந்து இங்கே யாரோ பதுங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. எதற்காக பதுங்கியிருக்க வேண்டும் என்று நீயே யோசித்துப் பார்! இளவரசரைச் சமயம் பார்த்துத் தீர்த்துக் கட்டுவதற்காகத்தான்! கோடிக்கரைக்கு நான் வந்ததற்கு முதல் நாள் இரண்டு பேரை உன் அண்ணன் படகேற்றி அழைத்துப் போனதாகவும், அவர்களைப் பற்றி உனக்குச் சந்தேகம் தோன்றியதாகவும் சொல்லவில்லையா? அதை ஞாபகப்படுத்திக் கொள்! இப்படிப்பட்ட சமயத்தில் இளவரசரிடம் பிரியம் உள்ளவர்கள் அவரை விட்டுப் போகலாமா?" என்று வந்தியத்தேவன் மூச்சு விடாமல் பேசி நிறுத்தினான்.

"அவர் என்னைப் போகச் சொன்னால் என்ன செய்வது?" என்று பூங்குழலி கேட்டாள்.

"அவர் போகச் சொன்னாலும் நாம் போகக்கூடாது!"

பூங்குழலி சற்று யோசித்துவிட்டு, "இங்கே பதுங்கியிருந்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டாமா?" என்றாள்.

"அது நம்மால் முடியாத காரியம். இந்த அடர்ந்த காட்டில் எங்கேயென்று தேடிக் கண்டுபிடிப்பது? அதிக நேரம் தாமதித்தால் இளவரசருக்கு உண்மையாகக் கோபம் வந்துவிடும். நம்மை விட்டுவிட்டு எல்லாரும் போய்விடுவார்கள்! பேசாமல் என்னுடன் வா"

"சரி வருகிறேன்!" என்று பூங்குழலி கூறினாள்.

இருவரும் மற்றவர்கள் இருந்த மண்டபத்தை நோக்கி நடந்தார்கள்.

மண்டபத்திலிருந்தவர்கள், வந்தியத்தேவனும் பூங்குழலியும் அருகில் வந்ததும், மேற்படி சம்பவத்தைப்பற்றியே கேட்டார்கள்.

"எதற்காகக் கத்தியை எறிந்தாய்? 'வீல்' என்ற சத்தம் கேட்டதே, அது என்ன சத்தம்?" என்று வினவினார்கள்.

"புதரில் ஏதோ மிருகம், சிறுத்தையோ அல்லது நரியோ பதுங்கியிருந்ததுபோல் தோன்றியது. அதனால் இவளுடைய கத்தியைப் பிடுங்கி வீசி எறிந்தேன். கிட்டப் போய்ப் பார்த்தோம். ஒன்றும் இல்லை" என்றான் வந்தியத்தேவன்.

"அது போனால் போகட்டும்; இந்தப் பெண்ணிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்!" என்றார் சேநாதிபதி.

பூங்குழலி வந்ததிலிருந்து இளவரசரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசர் அப்போது அவளை ஏறிட்டுப் பார்த்தார்.

'சீச்சீ! இந்த நெஞ்சு எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறது? தொண்டையில் வந்து ஏதோ அடைக்கிறதே, அது என்ன? கண்ணில் எதற்காகக் கண்ணீர் தளும்புகிறது! அசட்டுப் பெண்ணே! உன் தைரியம் எல்லாம் எங்கே போயிற்று? அலை கடலையும், பெரும் புயலையும் கண்டு கலங்காத உன் உள்ளம் ஏன் இப்போது இப்படித் தத்தளிக்கிறது? கொடிய பயங்கர வேங்கைப் புலியின் கொள்ளிக் கண்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிவு படைத்த உன் கண்கள் ஏன் இப்போது மங்கல் அடைகிறது! பெண்ணே! மறுபடியும் பைத்தியக்காரி என்ற பட்டம் சூட்டிக் கொள்ளாதே! இளவரசரை நிமிர்ந்து பார்! அவர் கேட்கும் கேள்விகளுக்குக் கணீர் என்று மறுமொழி சொல்லு! உன்னை என்ன செய்துவிடுவார்? கருணை மிகுந்தவர், தயாளு என்று உலகமெல்லாம் சொல்கிறதே! பேதைப் பெண்ணாகிய உன்னை இளவரசர் என்ன செய்து விடுவார்?...'

"சமுத்திரகுமாரி! என்னை உனக்கு நினைவிருக்கிறதா?" என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.



முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com