Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

39. "இதோ யுத்தம்!"

வந்தியத்தேவன், "உறையிலிருந்து கத்தியை எடுங்கள்!" என்று சொன்ன உடனே, இளவரசர் "இதோ எடுத்துவிட்டேன்!" என்று பட்டாக் கத்தியை உருவி எடுத்தார். அதே சமயத்தில் வந்தியத்தேவனும் உறையிலிருந்து கத்தியை எடுத்தான். அவை பிரம்மாண்டமான ராட்சதக் கத்திகள். அநுராதபுரத்துப் போதி விருட்சத்தின் அருகில் குதிரைகளுடன் வந்து நின்றவர்கள் அந்தக் கத்திகளையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

இளவரசர் குதிரையிலிருந்து கீழே குதித்து, "வா இறங்கி! உன்னுடைய அதிகப் பிரசங்கத்தை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது! இங்கேயே ஒரு கை பார்த்துவிட்டுத்தான் போகவேண்டும்!" என்று கடுமையாகக் கூறியதும், வந்தியத்தேவன் திகைத்துப் போனான். இது விளையாட்டா, வினையா என்று அவனுக்குத் தெரியவில்லை. எனினும் இளவரசர் குதிரையிலிருந்து பூமியில் இறங்கி விட்டபடியால் அவனும் இறங்க வேண்டியதாயிற்று.

"என்ன ஐயா! ஏன் தயங்குகிறீர்! நேற்றிரவு என்னை நீர் அவமானப்படுத்தப் பார்த்தீர் அல்லவா? உம்முடைய பாட்டன் வீட்டு அரண்மனை முற்றத்தில் என் பாட்டன்மார்கள் வந்து காத்திருந்தார்கள் என்று சொல்லவில்லையா? அவர்களுடைய குடை, சிவிகை ஆகியவற்றைப் புலவர்கள் தட்டிக்கொண்டு போவதைப் பார்த்துப் பொருமினார்கள் என்று கூறவில்லையா? அதை நினைத்துப் பார்க்கப் பார்க்க எனக்குப் பொறுக்க முடியவில்லை இரண்டில் ஒன்று தீர்த்துக்கட்டிவிட்டுத்தான் இங்கிருந்து புறப்படவேண்டும்!" என்று சொல்லிக்கொண்டு இளவரசர் இரண்டு கையினாலும் தமது பட்டாக்கத்தியின் அடியைப் பிடித்து சுழற்றிக்கொண்டே வந்தியத்தேவனிடம் அணுகினார்.

ஆம்; அது சாதாரண கத்தி அன்று என்பதாகச் சொன்னோமே? எவ்வளவு பலசாலியானாலும் அதை ஒரு கையினால் தூக்கி நிறுத்துவதே பெரிய காரியம். இரண்டு கையினாலும் பிடித்துக் கொண்டால்தான் கத்தியைச் சுழற்றவும் எதிரியைத் தாக்கவும் முடியும்.

இளவரசர் அவ்விதம் இரு கையினாலும் கத்தியைச் சுழற்றியபோது அவரைப் பார்த்தால் அரண்மனையில் சுகபோகங்களில் வளர்ந்த கோமள சுபாவம் படைத்த ராஜகுமாரனாகத் தோன்றவில்லை. பழைய காலத்து வீராதி வீரர்களான பீமனையும், அர்ச்சுனனையும், அபிமன்யுவையும் போல் விளங்கினார். இன்னும் திருமேனியில் தொண்ணூற்றாறு புண்சுமந்த விஜயாலய சோழரையும், யானை மேல் துஞ்சியவரான இராஜாதித்த தேவரையும் ஒத்து, அவர்களுடைய வழியில் வந்தவர் தாம் என்பதை ஞாபகப்படுத்துமாறு வீர கம்பீரத் தோற்றத்துடன் திகழ்ந்தார்.

வந்தியத்தேவனும் இரண்டு கையினாலும் கத்தியைப் பிடித்துச் சுழற்றத் தொடங்கினான். ஆரம்பத்தில் அவனுடைய மனத்தில் குழப்பமும் தயக்கமும் குடிகொண்டிருந்தன. போகப் போக, மனம் திடப்பட்டது. வீர வெறி மிகுந்தது. எதிரி தன் போற்றுதலுக்கு உரிய இளவரசர் என்பது மறந்தது. எதற்காக இந்தச் சண்டை என்னும் எண்ணமும் மறைந்தது. எதிரியின் கையில் சுழலும் கத்தி ஒன்றே அவனது கண்முன் நின்றது. அக்கத்தியினால் தாக்கப்படாமல் தான் தப்புவது எப்படி, அதைத் தட்டி எறிந்து விட்டு எதிரியைக் காயப்படுத்துவது எப்படி என்ற ஒரே விஷயத்தில் அவன் கவனமெல்லாம் பதிந்திருந்தது.

கத்திகள் சுழலும் வேகமும் அவை ஒன்றின் மேல் ஒன்று மோதி 'டணார்', 'டணார்', என்ற ஒலியை எழுப்பும் வேகமும் முதலில் சவுக்ககாலத்தில் தொடங்கி, மத்திம காலத்தைத் தாண்டி, துரித காலத்துக்கு வந்தன. இளவரசருடைய காரியம் முதலில் ஆழ்வார்க்கடியானுக்கும் விளங்கவில்லை. ஆனாலும், அதில் ஏதோ ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்று அவன் கருதினான். வருகிறவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், அவர்கள் இன்னார் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் செய்ய வேண்டியதை நிர்ணயிப்பதற்கும் அது ஓர் உபாயமாயிருக்கலாம். ஆகவே அந்த இரு வீரர்களுடைய குதிரைகளையும் சாலை மத்தியில் குறுக்கே நிற்கும்படி விட்டு, அவற்றின் தலைக் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு ஆழ்வார்க்கடியான் காத்திருந்தான்.

சாலையில் எதிர்ப்புறமிருந்து வந்து கொண்டிருந்த குதிரை வீரர்கள் நெருங்கி வந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் புலிக் கொடி பறந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியானுடைய கவலை நீங்கியது. வருகிறவர்கள் நம்மவர்கள் தான் ஆனால் யாராயிருக்கும்?

அவர்களில் முன்னால் வந்த கட்டியக்காரர்கள் அந்த விஷயத்தைப் பறையறைந்து அறிவித்தார்கள்.

"ஈழத்துப் போரில் மகிந்தனைப் புறங்கண்ட இலங்கைப் படைகளின் சேநாதிபதி வைகையாற்றுப் போரில் வீர பாண்டியன் தலை கொண்ட கொடும்பாளூர்ப் பெரிய வேளார்பூதி விக்கிரம கேசரி மகாராஜா விஜயமாகிறார்! பராக்!" என்று ஒரு இடி முழக்கக் குரல் ஒலித்தது.

"பல்லவ குலத் தோன்றல் - வைகைப் போரில் வீர பாண்டியன் தலை கொண்ட வீராதி வீரர் - வடபெண்ணைப் போரில் வேங்கிப் படையை முறியடித்த பராக்கிரம பூபதி - பார்த்திபேந்திர வர்மர் விஜயமாகிறார்! பராக்" என்ற இன்னொரு இடி முழக்கக் குரல் ஒலித்தது.

இப்படிக் கட்டியம் கூறியவர்களுக்குப் பின்னால் சுமார் முப்பது குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்களுள் நடுநாயகமாகக் கம்பீரமான வெள்ளைப் புரவிகளின் மீது சேநாதிபதி பெரிய வேளாரும், பார்த்திபேந்திரனும் வீற்றிருந்தார்கள். குதிரை வீரர்களைத் தொடர்ந்து அம்பாரியுடன் ஒரு பெரிய யானை வந்தது.

இன்னும் சிறிது தூரத்துக்குப் பின்னால் வந்த காலாட் படை புழுதிப் படலத்தின் மங்கலடைந்து காணப்பட்டது. முன்னால் வந்த குதிரை வீரர்கள் வழியில் ஏற்பட்ட தடையினால் அதிருப்தி அடைந்தவர்களாகத் தோன்றினார்கள்.

"யார் அது?", "விலகு!", "வழி விடு!" என்று சில குரல்களும் கேட்டன.

பின்னர் அக்கூட்டத்தின் 'கசமுச கசமுச' என்ற இரகசியப் பேச்சு வார்த்தைகளும் "ஓஹோ!" "ஆஹா!", என்ற வியப்பொலிகளும் எழுந்தன.

வீரர்கள் குதிரைகள் மீதிருந்து குதித்தார்கள். கத்திச் சண்டை போட்டவர்களைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்.

பூதி விக்கிரம கேசரியும், பார்த்திபேந்திரனுங்கூடக் குதிரை மீதிருந்து பூமியில் இறங்கிவிட்டார்கள். வீரர்களின் முன்னணியில் வந்து நின்றார்கள்.

பார்த்திபேந்திரன் படபடத்தான். விக்கிரம் கேசரியிடம், "பார்த்தீர்களா? வல்லத்தானைப் பற்றி நான் சொன்னது உண்மையா, இல்லையா? சுத்த அதிகப் பிரசங்கி! இளவரசரிடமே தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டான். இதை நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா?..." என்று தன் கையிலிருந்த கத்தியை ஓங்கினான்.

பூதி விக்கிரம கேசரி அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்தார். "கொஞ்சம் பொறுங்கள், பார்க்கலாம்! என்ன அற்புதமான கத்திப்போர்! இந்த மாதிரி பார்த்து எத்தனையோ நாள் ஆயிற்று" என்றார்.

சற்றுப் பின்னால் வந்த காலாள் வீரர்கள் - சுமார் முந்நூறு பேர் - அவர்களும் வந்து சேர்ந்தார்கள். வட்ட வடிவமாக நின்று வேடிக்கை பார்க்கலானார்கள்.

இதற்குள் யானை மேல் அம்பாரியிலிருந்து ஒரு பெண் கீழே இறங்கினாள். குதிரைகளுக்கும், வீரர்களுக்கும் இடையிடையே அவள் புகுந்து வந்து வேடிக்கை பார்த்த வட்டத்தின் முன்னணியில் நின்று கொண்டாள். அவளுடைய முகத்தில் அச்சமயம் குடிகொண்டிருந்த கிளர்ச்சியை இப்படியென்று சொல்ல முடியாது. கத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது. சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் தன் கூந்தலில் செருகியிருந்த காம்புடன் கூடிய நீலோத்பல மலரை எடுத்துக்கொண்டாள். அதை இப்படியும் அப்படியும் சுற்றிச் சுழற்றத் தொடங்கினாள். கத்திகள் சுழன்ற தாளத்துக்கு இசைய அவளுடைய கையிலிருந்த பூவின் தண்டு சுழன்றது. இந்தப் பெண் யார் என்று வாசகர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆம்; பூங்குழலியை அவர்கள் மறந்திருக்க முடியாதல்லவா? சிறிது நேரம் வரையில் அவளுடைய முகத்துக்கும் எதிரே இளவரசர் முகம் தெரியும்படியாக அவ்வீரர்கள் நின்று போரிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பாதி விட்டம் சுற்றி வந்தனர். கடைசியில் வந்தியத்தேவனுடைய முகம் பூங்குழலியின் முகத்துக்கு எதிராக வந்தது. இடையிடையே வந்தியத்தேவனுடைய கண்கள் சுற்றிலும் பெருகி வந்த வீரர் கூட்டத்தைக் கவனித்து வந்தன. அப்போது பூங்குழலியையும் பார்த்து விட்டன. திடீரென்று அந்தப் பெண்ணைப் பார்த்த வியப்பினால் ஒரு கணம் அவன் கவனம் சிதறியது. அந்த ஒரு கண நேரமே இளவரசருக்குப் போதுமாயிருந்தது. வந்தியத்தேவனுடைய கத்தியின்மீது தேவேந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் போல் இளவரசரின் கத்தி தாக்கியது. வாணர்குல வீரன் தடுமாறினான். அவனுடைய கைப்பிடியிலிருந்து நழுவிப் பட்டாக் கத்தி கீழே விழுந்தது.

சுற்றிலும் கூடியிருந்தவர்கள் அச்சமயம் எழுப்பிய ஆரவாரம் அலை கடலின் ஓசையை ஒத்திருந்தது. அவ்வளவு ஆரவாரத்தையும் மீறிக்கொண்டு ஓர் இளம் பெண்ணின் உற்சாகமான சிரிப்பொலி கேட்டது. வந்தியத்தேவன் கீழே விழுந்த கத்தியை மீண்டும் எடுப்பதற்குப் பிரயத்தனம் செய்தான். இதற்குள் இளவரசர் பாய்ந்து சென்று அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

"நீர் என்னுடைய வாளுக்குத் தோற்கவில்லை. வாளுக்கு வாள் சமமான லாகவத்துடன் போரிட்டீர். ஆனால் ஒரு பெண்ணின் கண் வாளுக்குத் தோற்றீர்! இதில் அவமானம் ஒன்றுமில்லை. எல்லாருக்கும் நேரக்கூடியதுதான்!" என்றார்.

வந்தியத்தேவன் அதற்கு ஏதோ சமாதானம் சொல்ல ஆரம்பித்தான். அதற்குள் சேனாபதி பூதி விக்கிரம கேசரியும் பார்த்திபேந்திரனும் அவர்களை நெருங்கி வந்து விட்டார்கள்.

"இளவரசே! இந்தப் பிள்ளையை நான்தான் தங்களிடம் அனுப்பினேன்! இவன் ஏதாவது தவறாக நடந்து கொண்டு விட்டானா? கொஞ்ச நேரம் கதிகலங்கிப் போய்விட்டோம்!" என்றார்.

"ஆம், தளபதி! இவருடைய ஏச்சை என்னால் பொறுக்க முடியவில்லை. 'இலங்கையில் யுத்தம் நடக்கிறது என்றார்களே, யுத்தம் எங்கே? யுத்தம் எங்கே?' என்று கேட்டு, என்னைத் துளைத்துவிட்டார். 'இதோ யுத்தம்!' என்று காட்டினேன்!"

இவ்வாறு இளவரசர் கூறியதும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் மறுபடியும் ஆரவாரம் செய்தார்கள்.

சேநாதிபதி வந்தியத்தேவனுடைய அருகில் வந்து அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். "அப்பனே! இம்மாதிரி கத்திச் சண்டை பார்த்து எத்தனையோ நாள் ஆயிற்று! இளவரசருக்குச் சரியான துணைவன் நீ! சில சமயம் அவருக்கு இப்படித்தான் திடீர் திடீர் என்று தோள் தினவு எடுக்கும்! 'குஞ்சரமல்லன்' என்று பெயர் பெற்ற பராந்தக சக்கரவர்த்தியின் வம்சத்தில் பிறந்தவர் அல்லவா? அவருடன் நேருக்கு நேர் நின்று சண்டை பிடிக்க முடியாதவர்கள் அவருடன் நெடுநாள் சிநேகமாயிருக்க முடியாது!" என்றார்.

இதற்குள் இளவரசர் பார்த்திபேந்திர பல்லவரின் சமீபமாகச் சென்று, "ஐயா! தாங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். தங்களைச் சந்திப்பதற்காகவே விரைந்து வந்தேன். காஞ்சியில் தமையனார் சௌக்கியமா? என் பாட்டனார் எப்படியிருக்கிறார்?" என்று கேட்டார்.

"தமையனாரும் பாட்டானாரும் தங்களுக்கு மிகவும் முக்கியமான செய்தி அனுப்பியிருக்கிறார்கள். இலங்கைக்கு வந்து தங்களைக் கண்டுபிடிப்பதற்கே நாலைந்து தினங்களாகிவிட்டன. இனி ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை..." என்று பார்த்திபேந்திரன் கூறுவதற்குள் இளவரசர்.

"முக்கியக் காரியமாக இல்லாவிட்டால் தாங்களே புறப்பட்டு வருவீர்களா? இனி ஒரு கணமும் தாமதிக்க வேண்டியதில்லை. இப்போதே செய்தியைத் தெரிவிக்க வேணும்!" என்றார்.

இச்சமயம் அவர்கள் சமீபத்தில் வந்த சேனாதிபதி பெரிய வேளார், "நடுச்சாலையில் இத்தனை பேருக்கு நடுவிலே ஒன்றும் பேசமுடியாது. அதோ ஒரு பாழும் மண்டபம் தெரிகிறதே! அங்கே போகலாம்! நல்ல வேளையாக இந்த இலங்கையில் பாழும் மண்டபத்துக்குக் குறைவு கிடையாது!" என்றார்.

சாலைக்கு அப்பால் கொஞ்ச தூரத்திலிருந்து பாழும் மண்டபத்தை நோக்கி அனைவரும் போனார்கள்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com