Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

3. சித்தப் பிரமை

வானத்தில் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. பிறைச் சந்திரன் நீலக் கடலில் மிதக்கும் வெள்ளி ஓடத்தைப் போலப் பவனி வந்து கொண்டிருந்தான்.

காற்றின் வேகம் அதிகமாயிருந்தது. கடல் குமுறியது; வெள்ளலைக் கைகளை நீட்டிக் கரையில் நின்றவர்களைத் தன்பால் இழுக்க முயன்றது.

"ஏன் நிற்கிறாய்? சீக்கிரம் சேற்றைக் கழுவிக் கொள்! வீட்டுக்கு உடனே போக வேண்டும். இல்லாவிட்டால் இன்று எனக்குச் சோறு கிடைக்காது. அண்ணி சோற்றுப் பானையைக் கவிழ்த்து விடுவாள்!" என்றாள் பூங்குழலி.

"இங்கே கடலின் ஆழம் அதிகமா?" என்று வந்தியத் தேவன் கேட்டான்.

"உன்னைப்போல் பயங்கொள்ளியை நான் பார்த்ததேயில்லை. இங்கே வெகுத்தூரத்துக்கு ஆழமே கிடையாது. அரைக்காத தூரம் கடலில் போனாலும் இடுப்பளவு தண்ணீர் தான் இருக்கும். ஆகையினாலே தான் ஒவ்வொரு நாள் இரவும் கலங்கரை விளக்கு எரிய வேண்டியிருக்கிறது!"

வந்தியத்தேவன் தயங்கித் தயங்கி தண்ணீரில் இறங்கினான். சேற்றைக் கழுவிக் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு கரை ஏறினான். சற்றுத் தூரத்தில் வைத்தியருடைய மகன் குதிரை மேலேறி வருவதைக் கண்டான். வந்தியத்தேவனுடைய குதிரையும் பக்கத்தில் வந்தது. "ஐயையோ! குதிரை சேற்றில் இறங்கி விடப் போகிறதே!" என்றான் வந்தியத்தேவன்.

"இறங்காது; மனிதர்களைவிடக் குதிரைகளுக்கு விவேகம் அதிகம்!" என்றாள் பூங்குழலி.

"ஆனால் ஒரு குதிரையின் பேரில் மனிதன் இருக்கிறானே? அவன் என் குதிரையையும் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறானே?"

"அது கொஞ்சம் அபாயந்தான்! ஓடிப்போய் எச்சரிக்கை செய்!"

"நில்லு! நில்லு!" என்று கூச்சலிட்டுக் கொண்டே வந்தியத்தேவன் ஓடிப்போய்த் தடுத்து நிறுத்தினான்.

பூங்குழலியும் சற்று நேரத்துக்கெல்லாம் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

மூவரும் கலங்கரை விளக்கத்தை நோக்கி நடந்தார்கள்.

"நீ குதிரையில் ஏறிக்கொள்ளலாமே?" என்றாள் பூங்குழலி.

"இல்லை; உன்னுடன் நடந்தே வருகிறேன்."

பூங்குழலி குதிரையின் அருகில் சென்று அதன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள். அதனால் மகிழ்ச்சி அடைந்ததைப் போல் குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு சற்று இலேசாகக் கனைத்தது.

"உன்னை என் குதிரைக்குப் பிடித்துவிட்டது! இது மிக்க நல்லது."

"என்ன விதத்தில் நல்லது?"

"நான் இலங்கைக்குப் போகவேண்டும். இந்தக் குதிரையை உன்னிடம் ஒப்புவித்து விட்டுப் போகலாம் என்று எண்ணுகிறேன். பார்த்துக் கொள்கிறாயா?"

"ஓ! பார்த்துக் கொள்கிறேன். எல்லா மிருகங்களும் என்னிடம் சீக்கிரம் சிநேகமாகிவிடும். மனிதர்களுக்கு மட்டுந்தான் என்னைக் கண்டால் பிடிக்காது."

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? சேந்தன் அமுதன் உன்பேரில்..."

"எனக்கும் மிருகங்களின் பேரில்தான் பிரியம்; மனிதர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது!"

"மனிதர்கள் அப்படி என்ன உனக்குச் செய்து விட்டார்கள்?"

"மனிதர்கள் பொல்லாதவர்கள். பொய்யும் புனை சுருட்டுமே அவர்களுக்கு வேலை!"

"எல்லோரையும் சேர்த்து அப்படிச் சொல்லிவிடக் கூடாது. சேந்தன் அமுதன் நல்லவன். இதோ வருகிறானே, வைத்தியர் மகன், இவன் ரொம்ப நல்லவன்..."

"நீ எப்படி?"

"நானும் நல்லவன்தான். என் பெருமையை நானே சொல்லிக் கொள்ளக் கூடாது அல்லவா?"

"நீங்கள் இருவரும் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?"

"சக்கரவர்த்திக்கு உடம்பு குணம் இல்லை அல்லவா? அவருடைய நோயைக் குணப்படுத்தச் சில மூலிகைகள் வேண்டியிருக்கின்றன. இந்தக் காட்டில் அபூர்வ மூலிகைகள் இருக்கின்றனவாமே? அதற்காகத் தான் வைத்தியர் மகனும், நானும் வந்திருக்கிறோம்..."

"சற்று முன் இலங்கைக்குப் போக வேண்டும் என்று சொன்னாயே?"

"இங்கே கிடைக்காத மூலிகைகளை இலங்கையிலிருந்து கொண்டுவர வேண்டும். இலங்கையில் அனுமார் கொண்டு வந்த சஞ்சீவி பர்வதம் இன்னமும் இருக்கிறதாமே?"

"ஆமாம், இருக்கிறது அதனாலேதான் அங்கே ஆயிரக்கணக்கான ஜனங்கள் விஷக்காய்ச்சலில் இப்போது செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள்..."

"அதுவும் அப்படியா? எனக்குத் தெரியாதே? எங்களை அனுப்பிய அரண்மனை வைத்தியருக்கும் அது தெரியாது..."

"ஆண்பிள்ளைகளைப் போல் பொய் சொல்லுகிறவர்களை நான் கண்டதேயில்லை. இரண்டு நாளைக்கு முன் இரண்டு பேர் இங்கே வந்தார்கள். அவர்களும் இப்படித்தான் ஏதோ பொய் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னது கொஞ்சம் நம்பக் கூடிய பொய்யாக இருந்தது."

"அவர்கள் யார்? என்ன பொய் சொன்னார்கள்?"

"அவர்கள் தங்களை யாரோ மந்திரவாதி அனுப்பியதாகச் சொல்லிக் கொண்டார்கள். சக்கரவர்த்திக்கு ரட்சை கட்டுவதற்காகப் புலி நகமும், யானை வால் ரோமமும் வேண்டும் என்றும், அதற்காக இலங்கை போவதாகவும் சொன்னார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு என் அண்ணன் படகோட்டிக் கொண்டு இலங்கைக்குப் போயிருக்கிறான்..."

"ஓ! ஓ! அதுவும் அப்படியா?" என்றான் வந்தியத்தேவன். அவனுக்கு ரவிதாஸன் என்னும் பயங்கர மந்திரவாதியின் நினைவு வந்தது. இரவில் படுத்திருந்த பாழும் மண்டபத்தில் அடைந்த பயங்கர அநுபவமும் நினைவுக்கு வந்தது.

'கடவுளே! இந்த மாதிரி காரியங்களிலெல்லாம் ஏன் சிக்கிக் கொண்டோ ம்? போர்க்களத்தில் நேருக்கு நேர் பகைவனுடன் நின்று போர் புரிய வேண்டும்! அப்போது நம் வீரத்தையும், தீரத்தையும் காட்ட வேண்டும். இந்த மாதிரி தந்திர மந்திர சூழ்ச்சிகளில் எதற்காக அகப்பட்டுக் கொண்டோம்?'

'நமக்கு முன்னாலேயே இலங்கைக்குப் படகில் சென்றிருப்பவர்கள் யாராயிருக்கக் கூடும்! இந்தப் பெண்ணை எவ்வளவு தூரம் நம்பலாம்? இவளும் ஒருவேளை அந்தச் சதிகாரக் கூட்டத்தில் சேர்ந்தவளாயிருக்கக் கூடுமோ!... இராது, இராது! இவள் கள்ளங்கபடம் அற்ற பெண். இவளை எப்படியாவது சிநேகிதம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.'

"பூங்குழலி! உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். சற்று முன் மூலிகை கொண்டு போக நான் வந்திருப்பதாகச் சொன்னேனே, அது பொய்தான்! மிக முக்கியமான இரகசியமான காரியத்துக்காக நான் இலங்கைக்குப் போகிறேன். அதை உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்."

"வேண்டாம்! முக்கியமான இரகசியமான காரியங்களைப் பெண்களிடம் சொல்லக்கூடாது என்று உனக்குத் தெரியாதா? என்னிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம்..."

"சாதாரணப் பெண்களைப்பற்றித்தான் அப்படிச் சொல்லுவார்கள். உன்னிடம் இரகசியத்தைக் கூறினால் அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது."

"நான் சாதாரணப் பெண் இல்லையென்று உனக்கு எப்படித் தெரிந்தது? என்னை நீ பார்த்து ஒரு நாழிகைகூட ஆகவில்லையே."

"பூங்குழலி! உன்னை அந்தக் கோவிலில் மதிலின் மீது முதன் முதலில் பார்த்த உடனேயே எனக்குப் பிடித்துப் போய்விட்டது. உன்னை ஒன்று கேட்கிறேன். அதற்கு உண்மையாக மறுமொழி சொல்கிறாயா?"

"கேட்டுப் பார்!"

"சேந்தன் அமுதன் உன்னுடைய காதலன் அல்ல என்பது நிஜமா? அவனை நீ மணந்து கொள்ளப் போவதில்லையா?"

"எதற்காகக் கேட்கிறாய்?"

"சேந்தன் அமுதன் என் சிநேகிதன், அவனுக்கு எதிராக ஒன்றும் நான் செய்யக் கூடாது. ஆனால் அவன் உன் காதலன் இல்லையென்றால்..."

"சொல்லு! ஏன் தயங்குகிறாய்!"

"அந்த ஸ்தானத்துக்கு நான் விண்ணப்பம் போடலாம் என்று பார்க்கிறேன். பூங்குழலி! காதலைப்பற்றி நீ குறைவாகப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் காதலைக் காட்டிலும் தெய்வீகமான சக்தி வேறு ஒன்றும் கிடையாது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் எல்லோரும் கடவுளைக் காதலனாகக் கொண்டு பாடியிருக்கிறார்கள். தொல்காப்பியரும், வள்ளுவரும், மற்றும் தமிழ்ப் பெரும் புலவர்களும் காதலைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். காளிதாஸன் காதலைப் பற்றிப் பாடியிருக்கிறான். பிருந்தாவனத்தில் கண்ணன் கோபியரின் காதலுக்கு வசப்பட்டான்..."

"ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை நன்றாய்க் கேட்டு மனத்தில் வாங்கிக் கொள்ளும்!"

"அது என்ன?"

"எனக்கும் உம்மைக் கண்டால் பிடித்துத்தான் இருக்கிறது. இரண்டு நாளைக்கு முன் வந்தவர்களைப் பார்த்ததும் உண்டான வெறுப்பு உம்மிடம் உண்டாகவில்லை..."

"ஓ! ஓ! நான் யோகசாலிதான்!"

"ஆனால் காதல், கீதல் என்ற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம்!"

"ஏன்? ஏன்?"

"சேந்தன் அமுதன் என் காதலன் இல்லை. ஆனால் எனக்கு வேறு காதலர்கள் இருக்கிறார்கள்..."

"அடடா! அடடா! வேறு காதலர்களா? யார்? எத்தனை பேர்?"

"இரவு நடுநிசியில் நான் வீட்டிலிருந்து எழுந்து செல்வேன். என்னைப் பின்தொடர்ந்து வந்தால் அவர்களை உமக்குக் காட்டுவேன். நீரே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்!"

இப்படிச் சொல்லிவிட்டுப் பூங்குழலி 'ஹாஹாஹா' என்று சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு வந்தியத்தேவனுடைய நெஞ்சை என்னமோ செய்தது.

'பாவம் இந்தப் பெண்ணுக்குச் சித்தப் பிரமை போலும்! நம்முடைய காரியத்துக்கு இவள் மூலமாக எந்தவித உதவியையும் எதிர்பார்ப்பது வீண்! இவளிடம் ஒன்றும் சொல்லாமலிருப்பதே நலம்."

கலங்கரை விளக்கின் அருகிலிருந்த வீட்டை அவர்கள் நெருங்கினார்கள். வீட்டுக்குள்ளிருந்த ஒரு பெரியவரும், வயது முதிர்ந்த ஸ்திரீயும் வெளியே வந்தனர். பூங்குழலியையும், மற்ற இருவரையும், குதிரைகளையும் பார்த்துவிட்டுப் பெரியவர் திகைத்து நின்றார்.

"பூங்குழலி! இவர்கள் யார்? எங்கே இவர்களைப் பிடித்தாய்?" என்று கேட்டார்.

"நான் இவர்களைப் பிடிக்கவில்லை, அப்பா! இவர்கள்தான் என்னைப் பிடித்தார்கள்!" என்றாள் பூங்குழலி.

"எல்லாம் ஒன்றுதான். 'பொழுது போவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்துவிடு' என்று சொன்னால் நீ கேட்பதில்லை. முந்தாநாள் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு வந்தாய். இன்றைக்கு இரண்டு பேரை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய். இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்?"

"சக்கரவர்த்தியின் வைத்தியத்துக்காக மூலிகை கொண்டு போவதற்கு இவர்கள் வந்திருக்கிறார்கள், அப்பா!"

"ஏன் ஐயா, இந்தப் பெண் சொல்லுவது உண்மை தானா?" என்று அந்தப் பெரியவர் வந்தியத்தேவனைப் பார்த்துக் கேட்டார்.

"ஆம், பெரியவரே! இதோ சீட்டு!" என்று சொல்லி, வந்தியத்தேவன் இடையில் கட்டியிருந்த துணிச்சுருளிலிருந்து ஓலை ஒன்றை எடுத்துப் பெரியவரிடம் கொடுத்தான்.

அதே சமயத்தில் இன்னொரு ஓலை தரையில் விழுந்தது. அதை அவசரமாகக் குனிந்து எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான்.

"பெரிய மூடன் நான்! ஒரு தடவை காரியம் கெட்டும் புத்தி வரவில்லை!" என்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டான்.

பெரியவர் அந்த ஓலையை வாங்கிக் கொண்டார். கலங்கரை விளக்கின் வெளிச்சத்தில் அதைக் கவனமாகப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது. தமது மனையாளை நோக்கி, "இளையபிராட்டி ஓலை கொடுத்து அனுப்பியிருக்கிறாள். இவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். உள்ளே சென்று உன் மருமகளிடம் சொல்லு! சோற்றுப் பானையைக் கவிழ்த்து உருட்டிவிடப் போகிறாள்!" என்றார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com