Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 1
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

31. "திருடர்! திருடர்!"

விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தரசோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹா வீரர்கள்! உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள்! கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே? இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம்.

மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்தரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள்.

முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்த போது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானைமீது பாய்ந்து வல்லப அபராஜிதவர்மனைக் கொன்ற போது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக்கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும்போது அவனை ஒரு பழுவேட்டரையர் தம் மடியின் மீது போட்டுக்கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தான்.

இதையெல்லாம் சித்திரக் காட்சிகளில் பிரத்யட்சமாகப் பார்த்த வல்லவரையன் சொல்ல முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தரசோழர் எது விஷயத்திற்கும் அவர்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை.

ஆனால், தான் இப்போது பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது என்னமோ நிச்சயம். சின்னப் பழுவேட்டரையருக்குத் தன் பேரில் ஏதோ சந்தேகம் ஜனித்துவிட்டது. பெரியவர் வந்துவிட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிடும். முத்திரை மோதிரத்தின் குட்டு வெளியாகிவிடும். பிறகு தன்னுடைய கதி அதோகதிதான்! சின்னப் பழுவேட்டரையரின் நிர்வாகத்திலுள்ள தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையைப் பற்றி வல்லவரையன் கேள்விப் பட்டிருந்தான். அதில் ஒருவேளை தன்னை அடைத்துவிடக்கூடும். பாதாளச் சிறையில் ஒருவனை ஒரு தடவை அடைத்து விட்டால், பிறகு திரும்பி வெளியேறுவது அநேகமாக நடவாத காரியம். அப்படி வெளியேறினாலும், எலும்பும் தோலுமாய், அறிவை அடியோடு இழந்து, வெறும் பித்துக்குளியாகத் தான் வெளியேற முடியும்!

ஆகா! இத்தகைய பேரபாயத்திலிருந்து தப்புவது எப்படி? ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய்விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வெளியேறிவிட்டால் போதும்! ஓலையில்லா விட்டாலும் குந்தவைப் பிராட்டியை நேரில் பார்த்துச் செய்தியைச் சொல்லி விடலாம். நம்பினால் நம்பட்டும்; நம்பாவிட்டால் போகட்டும்; ஆனால் தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு என்ன வழி?

தான் உடுத்திருந்த பழைய ஆடைகள் என்ன ஆயின என்ற சந்தேகம் திடீரென்று வந்தியத்தேவன் மனத்தில் உதயமாயிற்று. தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள்! குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திருப்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஒரு ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா! ஒரு யுக்தி! உடனே ஒரு யுக்தி கண்டு பிடிக்க வேண்டும்! - இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி! பார்க்கவேண்டியதுதான் ஒரு கை! வீரவேல்! வெற்றிவேல்!

வந்தியத்தேவன் சித்திர மண்டபத்தின் பலகணி வழியாக வெளியே பார்த்தான். சின்னப் பழுவேட்டரையர் பரிவாரங்கள் புடை சூழக் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார். ஆகா! இது தான் சமயம்! இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது.

வாசற்படிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சொக்கட்டான் ஆடிய ஏவலாளர்கள் மூவரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்தார்கள். மாளிகை வாசலில் சின்னப் பழுவேட்டரையர் வரும் சத்தம் அவர்களுடைய காதிலும் விழுந்தது.

வந்தியத்தேவன் அவர்கள் அருகில் நெருங்கி, "அண்ணன் மார்களே! நான் தரித்திருந்த உடைகள் எங்கே?" என்று கேட்டான்.

"அந்த அழுக்குத் துணிகள் இப்போது என்னத்துக்கு? எஜமான் உத்தரவுப்படி புதிய பட்டுப் பீதாம்பரங்கள் உனக்குக் கொடுத்திருக்கிறோமே!" என்றான் ஒருவன்.

"எனக்குப் புதிய உடைகள் தேவையில்லை; என்னுடைய பழைய துணிகளே போதும். அவற்றைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள்!"

"அவை சலவைக்குப் போயிருக்கின்றன. வந்த உடனே தருகிறோம்!"

"அதெல்லாம் முடியாது! நீங்கள் திருடர்கள், என்னுடைய பழைய உடையில் பணம் வைத்திருந்தேன். அதைத் திருடிக் கொள்வதற்காக எடுத்திருக்கிறீர்கள். உடனே கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால்..."

"இல்லாவிட்டால் என்ன செய்துவிடுவாய், தம்பி! எங்கள் தலையை வெட்டித் தஞ்சாவூருக்கு அனுப்பிவிடுவாயோ! ஆனால் இதுதான் தஞ்சாவூர்! ஞாபகம் இருக்கட்டும்!"

"அடே! என் துணிகளை உடனே கொண்டு வருகிறாயா? இல்லையா?"

"இருந்தால்தானே தம்பி, கொண்டு வருவேன்! அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோ ம்! முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா?"

"திருட்டுப் பயல்களே! என்னுடன் விளையாடுகிறீர்களா! இதோ உங்கள் எஜமானரிடம் சென்று சொல்கிறேன். பாருங்கள்!" என்ற வந்தியத்தேவன் வாசற்படியைத் தாண்டத் தொடங்கினான். மூவரில் ஒருவன் அவனைத் தடுப்பதற்காக நெருங்கினான். வந்தியத்தேவன் அவனுடைய மூக்கை நோக்கிப் பலமாக ஒரு குத்துவிட்டான். அவ்வளவுதான்; அந்த ஆள் மல்லாந்து கீழே விழுந்தான். அவன் மூக்கிலிருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது.

இன்னொருவன் வந்தியத்தேவனுடன் மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக் கொண்டுவந்தான். நீட்டிய கைகளை வந்தியத்தேவன் பற்றிக் கொண்டு, தன் கால்களில் ஒன்றை எதிராளியின் கால்களின் மத்தியில் விட்டு ஒரு முறுக்கு முறுக்கினான். அவ்வளவுதான்; அந்த மனிதன் 'அம்மாடி' என்று அலறிக்கொண்டு கீழே உட்கார்ந்து விட்டான். இதற்குள் மூன்றாவது ஆளும் நெருங்கி வரவே, வந்தியத்தேவன் தன் கால்களை எடுத்துக் கொண்டு ஒரு காலால் எதிரியின் முழங்கால் மூட்டைப் பார்த்து ஒரு உதை விட்டான். அவனும் அலறிக் கொண்டு கீழே விழுந்தான்.

மூன்று பேரும் சட் புட்டென்று எழுந்து மறுபடியும் வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு வளைத்துக்கொண்டு வந்தார்கள். வெகு ஜாக்கிரதையாகவே வந்தார்கள்.

இதற்குள் மாளிகை வாசலில் குதிரை வந்து நின்ற சத்தம் கேட்டது.

வந்தியத்தேவன் தன் குரலின் சக்தியையெல்லாம் உபயோகித்துத் "திருடர்கள்! திருடர்கள்!" என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் மீது பாய்ந்தான். மூன்று பேரும் அவனைப் பிடித்து நிறுத்தப் பார்த்தார்கள். மறுபடியும் "திருட்டுப் பயல்கள்! திருட்டுப் பயல்கள்!" என்று பெருங்குரலில் கூச்சலிட்டான் வந்தியத்தேவன்.

அச்சமயம் சின்னப் பழுவேட்டரையர், "இங்கே என்ன ரகளை?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com