Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLawGeneral
சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா?
சுந்தரராஜன்

அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949. இந்த நாள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கான சட்ட நாளாக நினைவுகூறப்படுகிறது.

அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைப் பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. குடி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குரியதே என்பதை உணர்த்தி, தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கு வழி வகுத்தவர் தோழர் பெரியார்.

பெரியாரின் தோழரான திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடி” என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் அவர் எழுப்பியுள்ள பல விவகாரங்களுக்கு இன்னும் பதில் அளிக்க முடியாத நிலையே உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும், அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் நடுவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கார் முன்வைத்த பல கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்தக் கொள்கைகளுக்கு எதிரான திசையிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4, அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY) என்ற பிரிவின்கீழ் பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவையாவன...

38. மக்களின் நலமேம்பாட்டிற்காக அரசு சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல்:

(1) பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும், அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.

(2) அரசு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையில், தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்தல்.

39. சில கொள்கைகளை அரசு பின்பற்றுதல் வேண்டும்:

அரசு குறிப்பாக-
(அ) குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்;

(ஆ) உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் சமுதாயத்தின் பொதுநலன் கருதி அனைவருக்கும் கிடைப்பதற்காக அவற்றின் உரிமை - கட்டுப்பாடு பொதுவாக பகிர்ந்தளிக்கப்படுவதற்கும்;

(இ) செல்வமும், உற்பத்தியும் பொதுத்தீங்கின்றி, தேக்கமடைவதைத் தவிர்க்கும் பொருளாதார அமைப்பை செயல்படுத்துவதற்கும்;

(ஈ) ஆண், பெண் இருபாலாருக்கும் இணையான வேலைக்கு, இணையான ஊதியம் அளிப்பதற்கும்;

(உ) வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்;

(ஊ) குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையைத் தேர்வு செய்ய வேண்டும்.

40. கிராம ஊராட்சி அமைப்புகள்:

கிராம ஊராட்சிகளை அமைக்கவும், அவை தன்னாட்சி பெற்று செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும்.

41. சில தறுவாய்களில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமை:

வேலை, கல்வி உரிமையின் பொருட்டு, வேலையில்லாதபோது முதிய வயதினர், நோயுற்றோர், தொழில் புரிய இயலாதோர் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோர் ஆகியோரைப் பாதுகாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்.

42. நியாயமானதும், மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களுக்கான வகையங்கள்:

நியாயமானதும் மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, அரசு வகையங்களை உருவாக்க வேண்டும்.

43. வேலையாட்களுக்கான வாழ்வூதியமும் இன்ன பிறவும்:

வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வூதியம், நாகரிகமான வாழ்க்கைத்தரத்திற்கு உறுதியளிக்கும் வகையிலான தொழில்கள், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்பு ஆகியன கிடைப்பதற்கு உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் வகையிலும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

43அ. தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்றல்:

தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்களின் நிர்வாகப்பணியில், தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில், அரசு தகுந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும் வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

44. குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம்.

குடிமக்களுக்கு இந்திய நிலவரை முழுவதும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்திற்கு அரசு முயற்சித்தல் வேண்டும்.

45. ஆறு வயதுக்கு உட்பட்ட இளங்குழந்தைகளைப் பாதுகாப்பதும் கல்வி அளிப்பதும்:

ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.

46. பட்டியல் மரபினர், பட்டியல் பழங்குடி மரபினர் மற்றும் வேறு பலவீனப் பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்:

பலவீனப் பிரிவு மக்களிடையே பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகப் பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடி மரபினரின் பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். மற்றும் அவர்களை சமூக அநீதியினின்றும், அனைத்து வித சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும்.

47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:

ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தை உயர்த்துவதையும் அரசு தமது கடமையாக கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள், போதைமருந்துகள் ஆகியன மருந்துக்காகப் பயன்படுத்துவதைத் தவிர வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

48. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கான அமைப்பு:

வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்ரகக் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவற்கும் பசுக்கள், கன்றுகள் மற்ற பால்தரும் விலங்குகள் வறட்சியுள்ள கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுத்தல் வேண்டும்.

48அ. சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், மேம்படுத்தலும் மற்றும் வனங்கள் வனவிலங்குகளை பாதுகாத்தலும்:

நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். மற்றும் நாட்டின் வனங்கள், வனவிலங்குகளைப் பாதுகாத்தல் வேண்டும்.

49. தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னம், இடங்கள், பொருள்களைப் பாதுகாத்தல்:

தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், அல்லது இடம் அல்லது கலைப் பொருட்கள் அல்லது வரலாற்றுச் சின்னங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிதைப்பது, நீக்குவது, முடிவு செய்வது அல்லது ஏற்றுமதி செய்வதினின்று பாதுகாப்பது ஆகியவை அரசின் கடமை.

50. நிர்வாகத்தினின்று நீதித்துறையைத் தனியே பிரித்தல்:

அரசின் பொதுப்பணியிலிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

....என்பன உள்ளிட்ட மக்கள் நல அம்சங்கள் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, “இந்தப் பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது சுதந்திர இந்தியாவின் வயது இரண்டுதான். அந்த நிலையிலேயே மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கோரி வழக்குகள் தொடரப்பட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடும் என்ற நிலையில் இந்த பிரிவு 37 எழுதப்பட்டது. காலப்போக்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் சொல்லப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அம்சங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு இந்த அம்சங்களுக்கு எதிரானதும், மக்கள் விரோதத் தன்மை கொண்டதுமான பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 37 நீடிப்பது மக்களுக்கு எதிரானது.

இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும். ஆனால் இன்றைய நிலையில் உலகமயம்; தனியார்மயம்; தாராளமயம் என்ற அடிப்படையில் இயங்கும் அரசு அமைப்புகள் உலக வர்த்தக கழக நிபந்தனைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு நேரெதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத் துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்ற தேவையற்ற துறைகளில் அரசு ஈடுபடுகிறது. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் செயலற்றுப்போகும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. அனைத்துத் துறை பணியாளர்களும் எந்தவிதமான சமூக பாதுகாப்புமின்றி நிராதரவான நிலையில் உள்ளனர். இந்த நிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை உருவாகி வருகிறது.

கல்வி தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக விலை கொடுத்தே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதைச் செய்தாவது பொருள் ஈட்டுவதே பிழைக்கும் வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்பவன் சாமர்த்தியசாலி என்ற கருத்தாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பெரிய தவறுகளை செய்பவர்கள், அரசியல் தலைவர்களாகவும், சிறிய தவறுகளை செய்பவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சமூகத்தில் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. உலக வர்த்தக கழகத்தின் முன்னோடியான காட் (General Agreement on Trade and Tariff) ஒப்பந்தத்தை வரைந்த டங்கல் என்பவரின் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது. “சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப் பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”

“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விமரிசனம் விழ வேண்டியவர்களின் காதுகளில் இன்று வரை விழவில்லை. எனவே மக்கள் எக்கேடு கெட்டாலென்ன? என்ற போக்கிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் இயங்குகின்றன. மாநில சுயாட்சி குறித்து உரத்து முழங்கிய கட்சித் தலைவர்கள்கூட பில்கேட்ஸூக்கும், அவரது உள்நாட்டு எடுபிடிகளுக்கும் காவடி தூக்கும் அவலநிலை நிலவுகிறது.

இதற்குத்தானா இந்தியா சுதந்திரம் பெற்றது? அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே ஒரு மோசடிதானா? இந்த கேள்விகளுக்கான பதில் அரசியல்வாதிகளிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமும், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமே இல்லை. இந்தியாவில் உருவாகும் அனைத்து சட்டங்களும், பொது மக்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே நல்ல சட்டங்களோ, கெட்ட சட்டங்களோ - அவை உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.

என்ன செய்யப்போகிறோம்?

- சுந்தரராஜன் ([email protected])

(நன்றி: மக்கள் சட்டம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com