Keetru KuthiraiVeeran
Ani Logo


அந்தரக் கயிறு
பெருமாள் முருகன்

கண்களை மூடுவதற்கே பயமாக இருந்தது. தூங்கச்செல்வதே பீதியூட்டும் காரியமாயிற்று. மனதை எத்தனை கட்டாயப்படுத்தி வேறெதிலாவது குவிக்க முயன்றாலும் கொஞ்சநேரம்தான். ஆழ்மனம் திட்டமிட்டுக் கட்டும் கற்பனையா எந்தச் சம்பந்தமும் இன்றி எங்கிருந்தோ வந்து பரவும் கனவா என்பதை அவனால் தெளிவாக உணர முடியவில்லை. சிலசமயம் எல்லாமே உண்மை போலவே தோன்றிற்று. தொடக்கத்தில் மனதுக்கு ரொம்பவும் திருப்திகரமானசெயலாக இருந்தது அது. தன்னைப் பற்றிய பிம்பங்கள் கட்டி எழும்புவதை மனதாரநேசித்தான். அதன் விரிவு இப்படிப் போகும் என்று கருதவில்லை. இப்போது தன் முன்னே தன் தசைகள் ரத்தம் பெருக துடித்துத் துவள்வதைக் கண்டு அதிர்ந்து போகிறான். முன்பெல்லாம் எப்போதோ ஒருமுறை தேடிவரும் தூரத்து நண்பனைப் போல அபூர்வமாக வந்து மனதை இதமாகத் தடவிச்சென்றது. இப்போது அப்படியில்லை. எப்போதும் தன்னுடனேயே, தானாகவே மாறிப்போய்விட்ட ஒன்றாகத் தோன்றுகிறது. மனம் வெறுத்து விலக்கித் தள்ளும்படியான ஒட்டுண்ணி ஒன்றாக இருக்கிறது அது.

Man முதலில் பயணத்தின்போதுதான் தொடங்கியது. பேருந்துப் பயணம். அப்போதெல்லாம் பயணம் என்பது அவனுக்கு உவப்பாக இருந்ததில்லை. பேருந்து வடிவமும் அதனுள்ளிருந்து கிளம்பும் டீசல் புகை நாற்றமும் அவன் உடலைச் சிலிர்க்கச் செய்யும். குடல் புரண்டு எல்லாவற்றையும் வெளித்தள்ளும். பலமுறை பேருந்தினுள்ளும் அதன் ஜன்னல் சதுரத்தின் வெளியிலும் எக்கி எக்கி வாந்தியெடுத்து நாறச் செய்திருக்கிறான். அதனாலேயே பேருந்துப் பயணம் கொடுமை நிறைந்த பெரும் தண்டனையாக இருந்தது. எந்த வகையிலாவது அதனைத் தவிர்க்க முயல்வான். அவனுடைய தந்தை பழனி முருகன் மேல் மிகு பக்தி கொண்டவர். கிருத்திகை தவறாது வெகுதூரம் பேருந்தில் பயணம் செய்து தரிசித்து வருவார்.

ஆண்டுக்கு ஒருமுறை குடும்பம் முழுவதையும் கூட்டிச் செல்வது அவர் வழக்கம். அந்தச் சமயங்களில் அவன், உடன்வரும் எல்லோருக்கும் எரிச்சலாக மாறிப்போவான். அந்த வாந்தியைத் தவிர்க்க எததனை வழிமுறைகள். எலுமிச்சம் பழத்தை உருட்டி உருட்டி முகர்ந்து கொண்டே செல்வான். அதன் வீர்யம் கொஞ்ச தூரம்தான். பின் வயிற்றை வெறுமையாக வைத்திருக்கப் பழகினான். சுத்தமாகத் தண்ணீர் கூடப் பருகுவதில்லை. அப்படியே இருந்தாலும் குடல் எங்கே சேமித்து வைத்திருக்குமோ தெரியவில்லை. காப்பி நிறத்தில் உள்ளிருந்து வந்து கொட்டும். "பித்த உடம்பு' என்று தன் வைத்திய அறிவைக் காட்டுவார் அவன் தந்தை. மறுநாள் பயணம் என்றால் முதல்நாள் இரவு முழுக்கத் தூங்குவதில்லை. பின் பேருந்தில் ஏறி உட்கார்ந்ததும் கண்களைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வரும். அந்த உத்திதான் ஓரளவு பயனளித்தது. பேருந்துப் பயணத்தின் பெரும் நேரத்தைத் தூக்கத்தில் கழித்துவிட்டால் வாந்திக்கு நேரமில்லாமல் போய்விடும் என்னும் கணக்கு ஓரளவுபயன் தந்தது.

அவன் பேருந்தில் தூங்கிப் பழகியது அப்படித்தான். ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரம் நகர்வதற்குள் கண்கள் கிறங்கிப்போகும். பேருந்துக் குலுங்கலிலோ இடைவிடாது எழுப்பும் ஒலிப்பான் சத்தத்திலோதிடீரெனக் கண் விழிக்க நேரும். பின் சூழலைப் புரிந்து கொள்ளவும் தன்னை உணரவும் சில கணங்கள் எடுக்கும். அப்புறம் தூக்கம் சட்டென வராது.வெறுமனே கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும். பேருந்து ஜன்னலிலிருந்து நிழலும் ஒளியும்மாறி மாறி முகத்தில் வந்து விழுவதை உணர்ந்தபடியே உள்ளம் மெல்லத் தொடங்கிற்று. சில நிமிசங்கள் தூக்கம் பீடித்துக் கொண்டது. ஆனால் அவனுள்ளே உருவான அந்தக்காட்சி நிலைபெற்றிருந்தது. அது இப்படி வரும். அவன் போய்க் கொண்டிருக்கும் பேருந்து சட்டென பிரேக் பிடிக்காமல் போய்விடும். ஓட்டுநர் நிலைதடுமாறி சாலையோரப் புளியமரம் ஒன்றில் கொண்டு மோதினார்.

கோரமான விபத்து. எங்கும் ஓலம். அவனுக்கு மட்டும் ஒன்றும் ஆகவில்லை. உடனே ஓடிப்போய் பக்கத்திலிருந்த தொலைபேசியில் விபத்துச் செய்தியை காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தெரிவித்தான். கதறிக் கொண்டிருக்கும் பெண்கள் குழந்தைகள் எனப் பலரையும் வெளியே கொண்டு வந்து காப்பாற்றினான். பலத்த காயம் பட்டவர்கள், ஓரளவு காயம் பட்டவர்கள் எனப் பலர். கடைசியாக வந்து சேர்ந்த காவல் துறை, தீயணைப்புத்துறை வீரர்களோடு அவனும் சேர்ந்துகொண்டான். பேருந்தின் ஓட்டுநரைக் காப்பாற்றுவதுதான்பெரும் கஷ்டமாகப் போய்விட்டது. அவருடைய கால்கள், சிதைந்த பாகங்களுக்குள் நன்றாக மாட்டிக் கொண்டன. அவற்றை விடுவிக்க மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. அவரை விடுவித்து முடிக்கையில் பேருந்து, ஊர்வந்துசேர்ந்திருக்கும். சாவகாசமாக இறங்குகையில் ஓட்டுநரின் கால்களை நோட்டம் விடுவான். ரத்தச் சுவடுகள் எதுவுமின்றி முழுமையாக இருக்கும் அவற்றைப் பார்த்து, ரொம்பவும் சிரப்பட்டுக் காப்பாற்றியதால் அல்லவா இப்போது கால்கள் சரியாகி இருக்கின்றன என்று நினைத்துக்கொள்வான்.

சில சமயம் பேருந்து ஊர்வந்து சேரும்போது, காவல் துறையின் பெரிய அதிகாரி அவனோடு கைகுலுக்கி விடைகொடுத்துக் கொண்டிருப்பார். ஊர் மக்கள் பலர் அவனைச் சூழ்ந்துகொண்டு பாராட்டுத் தெரிவிப்பதுமுண்டு. இந்தக் காட்சி பழைய காலத் திரைப்படம்போல வளர்ந்து போய் முதலமைச்சர், ஜனாதிபதி ஆகியோரிடம் பதக்கம் பெறுவதில் வந்து நிற்பதுண்டு. விபத்துக்காட்சியின் கொடூரத்தைத் தாங்க முடியாது என்பதாலோ என்னவோ அந்தப் பகுதி சுருங்கிவிடும். ஓட்டுநரை மீட்பது மாத்திரம் சற்றே விரியும். மற்றபடி இரண்டாம் பகுதியான அவனுக்கான பாராட்டுக் காட்சிகள் ரொம்ப விஸ்தாரமான படம்போல் ஓடும். ஒரே புளிய மரத்தில் திரும்பத் திரும்ப மோதியதால் அம்மரம் வேர் பலவீனப்பட்டு சாய்ந்துவிட்டது போலும். அதன்பின் இருபுறமும் மரங்களே அற்ற சாலைகளே அவனுக்குக் காட்சியாயின. அந்தச் சாலைகளில் பெரும் பள்ளத்திற்குள் பேருந்து சரிந்து விபத்து ஏற்படும். எதிர்வரும் பேருந்து அல்லது லாரிகளோடு மோதுவதால் விபத்து ஏற்படும். விபத்துக்கு வாய்ப்புகள் எப்போதும் ஏராளம். லாரியோடோ பேருந்தோடோ மோதுவதால் ஏற்படும் விபத்துதான் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதில்தான் சேதம் அதிகம்.காப்பாற்றுவதற்கான, உதவுவதற்கான சந்தர்ப்பங்களை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டலாம்.

வெளியூரில் அவன்தொடர்ந்து தங்க நேரிட்டபோது காட்சிகள்மாறின. வீட்டின்மீது ரொம்பவும் பிடிமானம் உள்ளவன் அவன். பனைகள் சூழ்ந்த காட்டுவெளியில் அவனது ஒற்றை வீடு. அதுவும் சின்ன ஓலைக்கொட்டகை. மழைக்காலம் தவிர, வருடத்தின் பெரும்பகுதி நாட்களில் வெட்டவெளி வாசலில் கட்டில் போட்டுத் தூங்குவார்கள். காற்று ஆசையாய் வந்து தழுவும். நிலா அவனுக்கெனவே வானில் ஊரும். இருள் நாட்களில் விண்மீன் கூட்டம் பொரி இறைத்ததுபோலக் கொட்டிக் கிடப்பதைப் பார்த்துக்கொண்டே தூங்கிப்போவான். அந்தச் சூழலைத் தவிர வேறு இடங்கள் எதுவுமே நிம்மதியான தூக்கத்தை அவனுக்குக் கொடுத்ததில்லை. வெளியூரில் சிறு நகரங்களில் தொடர்ந்து அவன் தங்க வேண்டியிருந்தது. முன்னிரவுகளில் அவனுக்குத் தூக்கமே வருவதில்லை. காற்றோ வெளிச்சமோ இல்லாத அறைகள். இரவுப் பூச்சிகளின் ரீங்காரமோ மூத்திரத்தில் நனைந்த வாலடிக்கும் மாடுகளின் சிறு கனைப்புக் குரலோ கேட்டால்கூடப் போதும். அவனுக்குத் தூக்கம் வந்துவிடும். எதற்கும் வழியில்லாமல் வெறுமனே புரண்டு கிடப்பான். பின்னிரவில் எந்நேரம் என்றே தெரியாமல் தூக்கம் வந்திருக்கும்.

அப்படி ஒரு தூக்கத்தை வரவழைத்துக் கொள்வதற்கும் அவன் மனம் சில தந்திரங்களில் ஈடுபடுவதை அவன் எதேச்சையாகவே உணர்ந்தான். அவனுடைய அப்பாவைக் குடிகாரர் என்று சொல்ல முடியாது. குடிக்கும் பழக்கம்கொண்டவர். தன்னுடைய வேலைகளில் எப்போதும் சரியாக இருப்பார். அந்தச் சமயத்தில் அவனுக்கு மாதச் செலவுக்கான பணத்தை அனுப்பியதோடு குடும்பச் செலவுகள் முழுவதையும் அவரேதான் கவனித்தார். அவனது காட்சி, அப்பா நிறையக் குடிப்பதாகத் தொடங்கும். நினைவிழக்கும் அளவு குடித்துவிட்டு நிலாவற்ற இருளிரவில் தன் வழக்கமான மிதிவண்டியில் அவர் தள்ளாடியபடியே செல்வார். அடர்ந்த புளியமரங்கள் நிறைந்திருக்கும் சாலையில் ஒரே விளக்கோடு வெகுவேகமாக வரும் ஏதோ வாகனம் அவரது மிதிவண்டியில் மோதிவிட்டு நிற்காமலே சென்றுவிடும். நடுச்சாலையில் மிதிவண்டியும் அவரும் அனாதைகளாய்க் கிடப்பார்கள். பின், வீட்டுக்கும் ஊருக்கும்தகவல் தெரிந்து அவரை அள்ளிச் செல்வார்கள். தலைவிரிகோலமாய் வயிற்றில் அடித்துக்கொண்டு அம்மா அழுவாள். குடும்பமே அவரைச் சுற்றி ஒப்பாரி வைக்கும். சிதைந்துபோன உறுப்புகள் அதிக நேரம் தாங்காது என்று சொல்லி விரைவாகப் பிணத்தை அப்புறப்படுத்திவிடுவார்கள்.

எல்லாம் முடிந்தபின் அவன் வந்து சேருவான். அம்மா அலறிக்கொண்டு ஓடிவருவாள். சுற்றம் கதறும். ஊரின் பெரிய மனிதர்கள் என்று அவன் கருதும் ஆட்கள் அவனிடம் துக்கம் விசாரிக்க வருவார்கள். முகத்தைத் துக்ககரமாகவே வைத்துக்கொள்ள அவன் இம்சைப்படுவான். எல்லோரும் அவன்மீது இரக்கம் கொட்டும் வார்த்தைகளைப் பொழிவார்கள்.

“உம்மேல பெரிய பாரத்த தூக்கி வச்சுட்டு அவன் போயிட்டான்.''

“பையனுக்குக் கல்யாணம் ஆகற வரைக்கும் இருந்திருக்கக் கூடாதா?''

“அறியாப் பையன் குடும்பத்த எப்படி தாக்குவானோ''

மனிதகுலத்தின் ஒட்டுமொத்த இரக்கமும் அவனுக்குக் கிடைக்கும். லேசான விழிப்புத் தொடங்கும். ஆனால் அதைத் தவிர்க்கக் கடுமையாக உழைத்துக் குடும்ப பாரத்தைத் தாங்கிப் பாராட்டுப் பெறும் காட்சிகளைப் புனைய ஆரம்பிப்பான். தூக்கம் எப்படியோ தொடர்ந்துவிடும். அப்பா இறப்பதற்கான சூழல் மட்டும் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கும். குடிபோதையில் நெகா சிக்காமல் புளிய மரம் ஒன்றில் மிதிவண்டியை மோதித் தார்ச்சாலையில் மல்லாக்க விழுந்து தலையில் அடிபடும்.

தார்ச்சாலைகளைக் கடந்துவந்த பின் ஊர் நுழைவாயிலில் இருக்கும் அடர்ந்த மரங்கள் கொண்ட சுடுகாட்டுக்கு அருகே விழுந்திருப்பார். வாயில் ரத்தம் வடிந்திருக்கும். "பேயடிச்சிருச்சி' என்று ஊர் சொல்லும். இதைத் தவிர மற்ற எல்லாம் ஒரே மாதிரிதான்.

ஊருக்குப் போகையில் அப்பாவைப் பார்க்கச் சங்கடமாக இருக்கும். தெளிவும் குறுஞ்சிரிப்பும் நிலைத்திருக்கும் அவர் முகத்தைச் சின்னாபின்னப்படுத்திக் கற்பனை செய்ய நோய் பீடித்த மனம் கொண்டவனால்தான் முடியும் என்று நினைப்பான். "வாய்யா' என்று அவனை வரிசை வைத்து அழைக்கும் அப்பாவை ஏராளமான முறை பிணமாக்கிப் பார்த்தாயிற்று. அவர் முகம் நோக்கிப் பேசவே நாணப்படுவான். குற்ற உணர்வில் புழுங்கிச் சீக்கிரம் ஊரிலிருந்து புறப்பட்டுவிடுவான். விடைபெறும்போது அவனுடைய வசதிகள் பற்றி விசாரிப்பார். செலவுக்குப் பணம் போதுகிறதா என்று கேட்பார். அவன் மனம் அப்பா நெடுங்காலம் வாழ வேண்டும் என்று நினைக்கும். வாய், "அப்பா நல்லாருக்கணும் அப்பா நல்லாருக்கணும்' என்று தொடர்ந்து சொல்லியபடியே இருக்கும். தன் கனவு பலித்துவிடுமோ என்றஞ்சி நள்ளிரவுகளில் மெளனமாய் அழுவான். அப்பாவுக்காக ரொம்பவும் கவலைப்பட்ட நாளொன்றில் அவனுக்குள் காட்சி மாற்றம் நிகழ்ந்தது.

இப்போது அப்பாவுக்குப் பதிலாக அம்மா. அவன் நெகிழ்ந்து போகும் ஒரே உறவு அம்மாதான். அம்மா காடுமேடுகளில் இரவுபகல் பாராமல் திரிபவள். நாள் முழுக்கவும் இடைவிடாமல் வேலை செய்பவள். அவளுடைய வேலைகள் இவைதான் என்று வரிசைப்படுத்திவிட முடியாது. எப்போதும் ஏதாவது வேலை இருந்துகொண்டேயிருக்கும். இல்லாவிட்டால், அவளாக உருவாக்கிக்கொள்வாள். உழைப்பதற்கென்றே பிறந்தவள் அவள். புருசனுக்காக உழைப்பவள். பிள்ளைகளுக்காக உழைப்பவள். தனக்கென்று எதையும் செய்துகொள்ளாதவள். ஏன், எல்லாத் தாய்களும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்?

விடியற்காலையில், காற்றிலசையும் சேலை போல இருள் படர்ந்திருக்கும் நேரத்தில், அம்மா பனம்பழம் பொறுக்கப் போவாள். கரட்டுச் சந்துகளிலும் முற்புதர்களிலும் நின்றிருக்கும் பனைகளைக்கூட விடமாட்டாள். ஏரிமேட்டில் ஒருபனை உண்டு. அடிக்கறுப்புப் போலவே மேல்வரைக்கும் இருக்கும். அதற்குப் பெயர் "சட்டிப்பனை'. அதன் பழம் ஒவ்வொன்றும் பெரிய சட்டியைக் கவிழ்த்து வைத்தாற்போல் தோன்றும். அத்தனை பெரிய பழங்கள் அதிசயம். சிறு பழங்களைக் ளெகாண்டிருக்கும் மரங்கள் வயிற்றோட்டம் பிடித்தவை போலப் பழங்களைக் கொட்டும். சட்டிப்பனை அப்படியல்ல. தினம் ஒன்று. சில நாட்களுக்கு இல்லாமலும் போகும். அம்மா அந்தப் பனையடியில் போய்த் தேடுகிறாள். பழத்தைக் காணோம், அவளுக்கு முன்பே யாராவது வந்து எடுத்துச் சென்றிருப்பார்களா? ஒரு பழம் என்றாலும் சுட்டுச் சாப்பிட நன்றாக இருக்குமே.

இருளில் குனிந்து மரத்தைச் சுற்றிலும் அம்மா அலையும்போது மரம் பெரும்பழம் ஒன்றை உதிர்க்கிறது. கனமான, கல் போன்ற பழம் வேகமாக வந்து அம்மாவின் முதுகில் விழுகிறது. நெஞ்சடைக்க ஓசையற்றுச் சாய்கிறாள் அம்மா.

அவனுக்குத் தகவல் தெரிவித்து, அவன் வரும்வரை பிணம் காத்திருக்கிறது. எந்நேரமும் நடமாடிக் கொண்டிருக்கும் அம்மாவின் உடல் அசைவற்றுக் கிடப்பதைப் பார்க்கிறான். அம்மா எப்போதாவது அதிசயமாகப் பகலில் கொஞ்சநேரம் தூங்கக் கண்ணை மூடினால், அவன் பதறிப் போவான். அது அம்மாவின் இயல்பில்லையே. அம்மாவுக்கு என்னவோ ஆகிவிட்டதென்று தோன்றும். ஆனால் இப்போது அம்மா நிரந்தரமாக ஓய்வெடுக்கிறாள். பூக்களுக்கிடையே பாடையில் படுத்திருக்கும் அம்மாவின் பலகோணத் தோற்றங்கள். இப்போதுதான் புத்தம் புதுப் புடவை அணிந்திருக்கிறாள். மகனுக்காகக் காத்திருக்கிறாள். அவன் கையால் கொள்ளி வாங்கிச் சொர்க்கம் சேர ஆவல் கொண்டிருக்கிறாள். அம்மா நிச்சயம் சொர்க்கத்திற்குத்தான் போவாள்.

அம்மாவின் கிடப்பு அவனுக்குப் பெருந்துக்கத்தை மூட்டுகிறது. உடைந்து கதறி அழுகிறான். அவன் கதறல் கூட்டம் முழுவதையும் அழுகையில் தள்ளுகிறது. அவன் அழுகை நிற்கவேயில்லை. கானக்காடு போய் அம்மாவின் பிணத்தைப் புதைத்து, சடங்குகள் செய்து திரும்பும்போதும் அழுதுகொண்டேயிருக்கிறான்.
சொந்தக்காரர்கள் வந்து ஆறுதல் சொல்கிறார்கள். நண்பர்கள் அவன் கையைப் பற்றியபடி வெகுநேரம் பேசுகிறார்கள். ஊர்ப் பெரிய மனிதர்களில் பலர் அவன் தோளைத்தட்டி ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அவன் அழுகை அடங்கவில்லை. அது மேலும் மேலும் பீரிடும் ஊற்றாய்ப் பொங்கிக் கொண்டேயிருக்கிறது. அதைப் பார்த்து ஊரே பேசுகிறது.

“அம்மா மேல இப்படி ஒரு பாசமா''

“அவனுக்கு எங்கிருந்துதான் கண்ணீரு வருதோ''

“ரத்தமெல்லாம் கண்ணீராக் கொட்டுது''

“என்னதான் ஒழைச்சாலும் தாய் மேல இத்தன பிரியம் வெச்சிருக்கிற பசங்க இவனாட்டம் எவனிருக்கிறான்.''
புகழ் வார்த்தைகள் பெருகிப்பெருகி அவனை அந்தரத்தில் தூக்கும். ரொம்பவும் திருப்தியோடு உறங்கிப் போவான். இதிலும் அம்மாவின் உயிர் பிரிவதற்கான காரணம் மட்டும் அவ்வப்போது மாறும்.களையெடுக்கக் காட்டுக்குள் போகும்போது பாம்பு காத்திருந்து கடித்துவிடும். சந்தையில் வாங்கிவந்த பாய்ச்சல் மாடு தன் கூர்கொம்புகளை அம்மாவின் வயிற்றில் சொருகித் தூக்கித் தள்ளியிருக்கும். இப்படி ஏதாவது.

இந்தக் கனவுப்படம் சுவாரஸ்யமாக ஓடும் நாளிலும் அதற்கடுத்த நாட்களிலும் அச்சத்தால் வெளிறிப் போவான். அம்மா தூங்குவதைப் பார்த்தாலே தாங்கிக்கொள்ள முடியாத அவன்முன் அம்மாவின் பிணம். அம்மாவுக்கு உண்மையிலேயே ஏதாவது ஆகிவிடுமோ. அப்படி ஆகுமென்றால் அதற்குத் தான்தான் காரணமாக இருப்போம் என்றெல்லாம் நினைப்பான். அம்மா இல்லாத ஒர் உலகம் யதார்த்தத்தில் இல்லை. எந்தச் செயலும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பது பொதுவிதியாக இருக்கலாம். ஆனால் அம்மாவின் செயல்களை அம்மாதான் செய்ய முடியும். அதற்கு மாற்றாக ஒன்றுமில்லை. அம்மாவுக்குக் கடிதம் எழுதுவான். உடல் நிலையை நன்றாகப் பார்த்துக்கொள்ளுமாறும் வேளாவேளைக்குச் சாப்பிடும்படியும் கடிதத்தில் இருக்கும். ஊருக்குப் போகும்போது அதைச் சொல்லி அம்மா சிரிக்கும்.

“எவ்வளவு பெரிய மனுசனாயிட்டான் எம்மகன்'' என்கும். அம்மாவைப் பிணமாக்கும் தன் கனவுக்குப் பிராயச்சித்தம் கடிதம் ஒன்றுதான் என்று எண்ணுவான்.

ஒருமுறை கோடைகாலத்துக் காற்று அம்மாவை உயரத்திற்குத் தூக்கிப்போய் பெரும்பாறை ஒன்றில் படீரென்று போட்டுவிடுவதாகக் கண்டான். அன்றைய இரவு துளி தூக்கமில்லாமல் போயிற்று. தூக்கம் வரவைப்பதற்குத் தன்மனம் செய்திருந்த தந்திரம் இப்போது முழுமையாகத் தூக்கத்தைப் போக்குவதற்கு மாறிவிட்டதை உணர்ந்தான். தனியிருளில் வாய்விட்டு அழுதான். அம்மாவுக்கா தனக்கா என்று தெரியாத குழப்பம்.
அந்தச் சமயத்தில் அவன் ஒருதலைக் காதல் ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அவனோடு சின்ன வகுப்புப் பள்ளிக்கூடத்தில் படித்த பெண்ணொருத்தியை எதேச்சையாக பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தான். அவள்தானா என்று வியந்துபோனான். பூத்த சாம்பலின் நிறத்தில் அவள் இருந்தாள். முகமும் உடலும் கொண்டிருந்த பொலிவும் செழுமையும் அவனைத் தடுமாறச் செய்தன. அவன் மனதுக்குள் சட்டென அவள் நிறைந்துவிட்டாள்.

அவளோடு பேசவில்லை. அவன் சிரித்ததாகவும் அதை அங்கீகரித்து அவள் புன்னகை பூத்ததாகவும் நினைவு. அடுத்த சில நாட்கள் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தான். ஆனால் அவளைப் பார்க்க முடியவில்லை. ஒரு முழுநாள் நிறுத்தத்திலேயே நின்று பார்த்தான். அவள் வரவில்லை. மனம் வெறுமையாக இருந்தது. ஆனால் இரவுகள் சந்தோசமாகக் கழிந்தன. இளமையின் வசீகரம் கூடிய அந்த முகத்தைத் தனக்கு முன் கொண்டுவந்து பார்த்தபடியே இருந்தான். மென்கருமையோடும் அந்த இதழ்களில் லேசான முத்தம் வைத்தான். தினந்தோறும் அவள் மீதான காதல் கொள்ளையாகப் பெருகிற்று. அவள் உடலைத் தனக்கேற்றபடி பயன்படுத்த முனைந்தான்.

மீண்டும் ஒருமுறை அவளைச் சந்திக்கும்பேறு கிட்டிற்று. அவன் ஊருக்குப் போயிருந்தபோது உறவினர் வீட்டு விசேசம் ஒன்றிற்கு அவளும் வந்திருந்தாள். முன்னைவிடவும் சினேகபாவத்துடன் நீளமான புன்னகை சிந்தினாள். அளவாக விரிந்த இதழ்கள் அப்படியே அவனுள் காட்சியாக ஒட்டிக்கொண்டன. எல்லாவற்றையும் ஈர்த்துக்கொள்ளும் பெரும் சக்தி அந்த இதழ்களில் பொதிந்திருந்தது. அவன் மனச்சுவரில் ஆழமான ஆணி அடித்து, அந்த இதழ்களின் படம் எப்பேர்ப்பட்ட காற்றிலும் ஆடி அசையாமல் இருக்கும்படி நிரந்தரமாகப் பொருத்தினான். சின்ன வகுப்பில் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தன் சேகரிப்புக்குள் தேடிப் புதையலெனக் கண்டான். அந்தப் படத்தில் அவள் இரட்டைச்சடையும் தலை நிறையப் பூச்சரமுமாக நின்றிருந்தாள். முகம் வெளிறிப் பயத்தோடு இருப்பதாகப் பட்டது. அவளை அடுத்து இரண்டு பேர் தள்ளி அவன் நின்றான். அவளுக்கு அருகில் நின்றிருக்கக்கூடாதா என்று ஏக்கமாக இருந்தது. எவ்வளவு சின்னப்பெண், ஆனால் அவள் கண்களில் அப்போதே ஒரு விசை இருந்ததாகத் தோன்றிற்று.

இரவுகளில் அவள் விதவிதமாக அவனுக்குமுன் காட்சியானாள். அவள் கண்களை மட்டும் பார்த்துக்கொண்டே ஒரு இரவு முழுவதையும் கழித்தான். இன்னொருமுறை அவளை நேரில் பார்க்க வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. அவள் எல்லாவிதமாகவும் அவனுக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்தாள். இமை மூடி அவள் படுத்திருந்தாள்.இமைகளை அவள் திறந்துவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையோடு பூவை ஒற்றியெடுப்பதுபோல முத்தமிட்டான். அப்படியே கன்னம் ஊர்ந்து இதழ்களுக்கு வந்தான். அவை வறண்டிருந்தன. பதித்தபோது உயிர்ப்பில்லை. கருநீலம்கொண்டிருந்த இதழ்கள். அவளல்ல. அவள் பிணம்.
அதிர்ச்சியில் விழித்துக்கொண்டான். உடல் வியர்த்து யோசனைகள் அற்றவனாய் அப்படியே வெகுநேரம் கிடந்தான்.அதற்குமேல் துளியும் தூக்கமில்லை. பிணத்தை முத்தமிட்டவன் நிம்மதியாகத் தூக்கம்கொள்ள முடியுமா? ஈரம் கனிந்து பளபளக்கும் அவள் இதழ்களை உயிர்ப்பற்றதாக்கிப் பார்க்கும் மனம், நோய் பீடித்ததுதான். துக்கம் பெருக அழுவதைத் தவிர அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அடுத்த நாள் காட்சிகள் வேறாக விரிந்தன. முன்பகுதியில் அவனும் அவளும் உயிருக்குயிராகக் காதலிக்கும் புனிதக் காட்சிகள். அவன் ஆனந்தமாய்த் தலைவைத்துக்கொள்ள மடி விரித்துத் தந்தாள். அவன், அவளின் சிறுதேவைகளையும் குறிப்பறிந்து நிறைவேற்றிக் கொடுத்தான். அன்றைக்கு முத்தமிட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களின் சந்திப்பு அவளுடைய பெற்றோருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவள், அவனைவிடச் சற்றே உயர்ந்த சாதியைச் சேர்ந்தவள். கொஞ்சம் செல்வ வளமுடையவளும்கூட. அதற்குப்பின் அவளைச் சந்திக்க அவன் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. தூக்கிட்டுச் செத்துப்போன அவள் பிணத்தைத்தான் பார்த்தான். உடல் உருகிக் கரையும் அளவுக்குக் கதறினான். பார்த்தவர்கள் எல்லாம் அவன்மேல் அனுதாபம் கொண்டனர்.

“இப்பேர்ப்பட்ட பையனுக்குப் பொண்ணக் குடுத்திருந்தா என்ன''

“அடேங்கப்பா...இவந்தான் காதலன்''

“கண்ணுக்குள்ள வெச்சுப் பொண்ணக் காப்பாத்தியிருப்பானே''

“இவனவிட சாதியும் பணமுமா பெரிசு''

பிணவீட்டில் கூடிய கூட்டம் முழுக்க அவனைப் பற்றியேதான் பேசியது. பெண்ணின் தந்தை ஆள் வைத்து அவனை வெளியே இழுத்துவிட்டார். இல்லாவிட்டால் இன்னும் அவனைப் பற்றிய பேச்சுகள் காதில்விழுந்துகொண்டேயிருக்கும். ஆனால் என்ன, அங்கே அவனைப் பற்றிய பேச்சுகள்தானே இனிமேல் நடக்கும்.

அவன் தன்னை முழுவதுமாக வெறுத்தான். தன் எதிர்காலத்திலேயே கைவைத்துவிட்ட கற்பனையை எப்படி விரட்டி ஓட்டுவது என்று தெரியவில்லை. அவனும்அவளும் சேர்ந்திருக்கும் காட்சிகள் குறைந்துகொண்டே வந்தன. அவளுடைய பிணம், கூட்டம், வானத்தைப் பிளக்கும் அவன் கதறல், அவனைப் பற்றிய கூட்டத்தின் பேச்சு எனப் பிற்பகுதி விரிந்துகொண்டே போனது.அவள் பிணத்தின் முன் கிடந்த அவன், பைத்தியமாக எழுவதாகத் தோன்றிற்று. அன்று கூட்டத்தில் இரக்கம் ஒருசேர அவன்மேல் கவிந்தது. நெஞ்சை ஈர்க்கும் அழகான பெண்ணைப் பற்றிய கற்பனைக்குள்கூடத் தன்னால் சஞ்சரிக்க முடியவில்லை என்னும் வருத்தம் அவனை நிரந்தரத் துக்கத்துள் தள்ளியது.

அவனுடைய அன்றாட வேலைகள் அப்படியே கிடந்தன. பகலெல்லாம் வெறுமனே கண்மூடிப் படுத்திருந்தான். இரவுகளைக் கண்டு பயந்தான். வறண்டு நீலம் பாரித்த பிணத்தின் உதடுகளை முத்தமிடும் காட்சி அவன்முன் உருவாகிப் பதற்றம் கொடுத்தது. உயிர் பிளக்கும் வேதனைக்கு உள்ளானான். இரவைத் தூங்காமல் கழிக்க முயன்றான். அவனுக்கு எப்போதோ லேசாகப் பழக்கமாகியிருந்த மதுவைப் பருகினான். நகரத்தின் வீதிகளில் கூட்டம் நிறைந்திருக்கும் பகுதிகளாகப் பார்த்து நடந்தான். நடப்பது ஒன்றே அவனுக்கு ஆறுதல் தருவதாயிருந்தது. இரவுகள் பெருகின. அவன் கண்கள் ரத்தக் குழம்பாகி வெளித்தள்ளின. அவன் முகம் யாருடையதோ போலத் தோன்றிற்று. அவளின் இதழ்களுக்கு லேசான ஈரம் வந்தால், எல்லாம் உயிர்ப்பாகிவிடும் என்றுபட்டது. ஆனால் அதற்கு வழி தெரியாதவனாகத் திரிந்தான்.

சாரம் உறிஞ்சப்பட்ட வெற்றுச் சக்கையாகத் தன் வாழ்க்கை கிடப்பதைப் பார்த்தான். இனியும் இந்த உலகில்கால்கொண்டு உலவுவதில் எந்தப் பயனுமில்லை என்று நினைத்தான். தற்கொலை பற்றி அவன் தீவிரமாகச் சிந்திக்கலானான். எந்த வகையான தற்கொலை தனக்கு உகந்ததாக இருக்கும் என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை.விபத்தில் தன்னுடல் சிதறுவதாகக் கற்பனை செய்தான். அது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. ஏற்கனவே அவனுக்குப் பலவிதமாக அறிமுகமாயிருந்த விபத்துகளின் கோரக்காட்சிகள் சலிப்பூட்டுபவையாக இருந்தன. அவனுடைய ஊரில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்பவர்களில் எண்ணிக்கை அப்போது அதிகமாயிருந்தது. அவனும் பூச்சிக்கொல்லி மருந்தை மனத்தில் கொண்டுவந்து பார்த்தான்.அந்தப் பாட்டில்களின் வடிவங்களும் அவற்றின் நிறமும் அவனுக்கு வாந்தியைக் கொடுத்தன.

தற்கொலை சம்பந்தமான வழிமுறைகள் பலவற்றையும் இப்படிப் போட்டுக் குழப்பியபடி அன்றைக்கு இரவு படுக்கைக்குப் போனான். பலமுறை பெருமூச்சுகளை உதிர்த்துக்கொண்டிருந்தவன், அவனையறியாமல் உறங்கிவிட்டான். நெடுநாளைய உறக்கம் முழுவதையும் ஒருசேரத் தூங்கிக் கழித்தான். ஆழ்தூக்கம் லேசாகக் கலையத் தொடங்கியபோது, அவன் முன் நிழல்போலக் காட்சி ஒன்று தோன்றியது. தொய்ந்த கால்களுடன் தொங்கும் பிணம். அதன் கழுத்திலிருந்து மேலே போன கயிறு முடிவற்று வான்வெளியில் கலந்தது. காலுக்குக் கீழே விரிந்த பள்ளம். அதன் கீழ்த்தரை தென்படவேயில்லை. அந்தரத்தில் தொங்கும் பிணம். கயிற்றை மேகம் மூடிச் செல்கிறது. காற்றில் பிணம் அசைந்தசைந்து நிலைகொள்கிறது. எதிலிருந்து தொடக்கம், எங்கே முடிவு? ஒன்றும்தெரியவில்லை. லேசான தெளிவு பிறப்பதுபோல ஒளி. பிணத்தின் முகம் துலங்குகிறது. அது அவன்.
அவன் விழித்தெழுந்தபோது உற்சாகமாயிருந்தான்.