Keetru KuthiraiVeeran
Ani Logo


பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

நிழலின் ஆழம்

Night மலை முடியில்
மத்தியானத்தைக் கொளுத்தி
இசை விரல்களின் நுனி நகங்களை
மெது மெதுவாக கடித்து
இமைத் தாளங்களின் தெறிப்பை
வெளியெங்கும் துழாவும் விழிகளுக்கு
நிழல்கள், ஒலியின் காயங்கள்.
நிழலின் ஆழத்தை அளந்து அறுதியிட
தொடங்குகின்றன சுவர்கள்
நிலத்திலிருந்து வானத்தை நோக்கி.
இப்போதும் கற்பானை பாறையின்
ஒற்றை வட்ட உதட்டில்
கால் முளைத்த மச்சமாக
கலையாமல் அமர்ந்திருக்கும் பெயரற்ற குருவி
பூவின் எல்லையில் ஓர் புன்னகை.


மீதங்கள்

ஒரு நாள் முடிய
இன்னும் ஒரே ஒரு வினாடியே மீதமிருக்கிறது
ஒரு இரவு விடிய
சேவலின் ஒரே ஒரு கூவல் மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு கனவு கலைய
இன்னும் ஒரே ஒரு பார்வை மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு உறவு முறிய
இன்னும் ஒரே ஒரு சொல் மாத்திரமே மீதமிருக்கிறது
மண்டியிட்டால் மன்றாடினால்
உன் கடிகாரப் பைக்குள் கை நுழைத்து
அள்ளி எறியக் கூடும்
சில சில்லறை வினாடிகளை...
வேண்டாம்
ஒரு வாழ்வு முடிய
இன்னும் ஒரு உயிர் மீதமிருக்கிறது.

சிரசில் தைத்த முள்

நிலத்தில் நீர் விரித்து
படுத்த ஆகாயமாக கடல் பார்த்து
கண் களைத்த பிறகு
உலரும் பன்னீர் ஓவியமாக
தன் படகை செலுத்தியது
காலை நிலவு.
வில்லில் பூட்டி அன்பை
செலுத்த முடியா துயரம்
சிரசில் தைத்த முள்ளாக
கண்ணாடியில் உடைத்த முத்தத்திலிருந்து
சொட்டுகிறது நீல ரத்தம்.
ஒளியை கீழே பொழிந்து
சூரியன், உலகை கொஞ்சிய வெறியில்
என் நிழல் விலகி போகிறது
நெடியதொரு இரவாகி
மீன்களான பின்
மீண்டும் கடலுக்குள் துள்ளின
பித்தமுற்ற விழிகள்.

மயக்கம்

இங்கு யாரும்
இல்லாத நேரம்
இதழ்கள் திறந்து
மலராகும் கல் மொட்டின்
சுகந்தம் வீசுகிறது எல்லோரிடமும்
அதோ அது
மரத்து நிழலா
மழலை இருளா
மயக்கம் தீரவில்லை.
நாற்றங்கால் கொக்கின்
கால் விரலில்
மெட்டியாகவோ, மோதிரமாகவோ
மாறியிருக்கிறது ஒரு மண்புழு
சில எட்டுகள் வரை.
எல்லோரும் மறுத்து விடுவதால்
இந்த தனிமை
என்னுடையதாகிவிடாது.
தேன் திண்ணத் தெரிந்த
சிட்டு வகைப் பறவைகளும்
சட்டென்று திடுக்கிட்டு
பைத்தியமடித்து விடுகின்றன
கல் மொட்டின் சிரிப்பில்.

*

சிகரத்திற்கும் பள்ளத்தாக்கிற்கும் நடுவில்
அர்த்தத்திற்கும் அனர்த்தத்திற்கும் இடையில்
எத்தனையோ யுகங்களாக
தொக்கி நின்ற கனவை
ஒரு நொடியில் உடைத்துவிட்டது
இந்த முன்னிரவு.
தூரதூரத்தில் மேகங்கள்
தொடமுடியாத வானங்கள்
மின்னிக் கொடியாகத் துடிதுடித்த
ஏழை மின்னல் மீண்டும் ஏமாந்தது.
பாதரசச் சூரியன் நாளைக் காலை
எத்தனைத் துண்டுகளாக உடைந்து உதிக்குமோ
என்ற கவலையில் விம்முகின்றன விண்மீன்கள்.
பட்டில் நெய்த பாவாடை
உப்பு நீரில் கெட்டுவிடக் கூடாதென்று
உடுப்பைத் தூக்கிப் பிடித்தபடி
அலைகளில் கால்கள் மட்டும் நனையவிட்டு
கரையில் அவள் நின்றிருந்த வேளை
ஈரப் பாதத்தின் முதுகிலேறி
ஒளிரத் தயாராயிருந்தது ஏழை மின்னல்
பால் நிலவும் செழித்துக் கொதித்தது.
அவளோ இலக்கின்றி திரும்பிவிட்டாள்
கடல் விட்டு.

*

என் கனவுகள் கூம்பும்
விடிகாலை உன் கனவுகள்
மலரத் தொடங்குகின்றன
செழித்த பனியுடன், உரத்த வெயிலுடன்
கனத்த காற்றுடன், கொழுத்த மழையுடன்.
விரிந்த விழிக் கனவுகளுக்குத்
திறந்ததெல்லாம் வாசல்கள்.
ஒரு கனியைப்போல் நறுக்கி
இலையில் வைக்க முடிகிறது உன் கனவுகளை.
காற்றலையில் செதுக்கிய கானல் சிற்பங்களை
காட்டுவது எப்படி?
பகல்களையெல்லாம் கத்தரித்து நீக்கிவிட்டு
இரவுகளை மட்டும்
கோர்த்துத் தைத்துக்கொள்ள
ஏங்கும் ஒரு பகல்கனவு.
கலைந்த கனவுகளுக்கு
கிழிந்த பொழுதுகளே நிரந்தரம்.
தயங்கி நின்றது போதும்
மிதந்து செல்லட்டும் அந்த நீர்க்குமிழி.

*

புயலைக் கண்டிராத இளைய நதி
தன் இதயத்துடன் எழுந்துவிட்டது.
படுகையை விட்டு வெளியேறி
கால்மேல் காலிட்டு
கரையில் படுத்திருக்கும் நதியை
கற்பனைக்கு மேல் திருப்ப
உரிமையில்லை யாருக்கும்.
கரையோர சோலைப் பறவைகளின்
குரல்களை மலராகப் பறித்து நிழலாக்கி
நீருக்குள் நீந்தும் மீன்களுக்குச்
சூடி விளையாடும் சூரியனை
யார் என்ன சொல்லக் கூடும்?!

*

சென்ற இரவைக் கொன்றுவிட்டு
மொட்டோடும் மலலோடும்
உதிரிகளாகவும் சரமாகவும்
நறுமணம் வீசிய கனவுகளை
கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியவனை
துரத்தியபடி
அதிகாலை மதில் மேல் ஏறிக்குதித்து
வெயில் மஞ்சள் பாதைகளில்
ஓடி வியர்த்து விறுவிறுத்து
மத்தியானத்தை மோதிப் பிளந்துகொண்டு
மாலை வரை போராடியும்
பிடிபடவில்லை அவன்.
இரவு வந்துவிட்டது.
சென்ற இரவைப்போல
இந்த இரவும், கனிந்த இருளும்
கவரும் அமைதியுமாக அற்புதம்தான்.
ஆனாலும்,
சென்ற இரவைக் கொன்றவனை
மன்னித்துவிட முடியாது.
தேடித்திரிவேன் இரவின் தெருவெங்கும்.
கனவுகளுக்காக இரவுகளைக் கொல்லும்
இரக்கமற்ற அவன்
தான் திருடிய கனவுகளில்
ஏதாவது ஒன்றில்தான் ஒளிந்திருக்கக் கூடும்.