Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Koottanchoru
Kottanchoru Logo
அக்டோபர் 2005 - மார்ச் 2006

வரலாறு - புதினம் - ஆய்வு

- எஸ்.வி. வேணுகோபால்

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நூல்களை ஒரே நேரத்தில் வாசிக்க நேர்ந்தது. வாசித்து முடித்தபின், ஏதோ கண்ணுக்குப் புலப்படாத தொடர்பு மூன்றுக்குமிடையே இருக்கக் கூடுமோ என்று பட்டது. இத்தனைக்கும் ஒன்று ஓர் ஆய்வு நூல். அடுத்தது கவிதைத் திறனாய்வு, மூன்றாவது கதை - நெடுங்கதை.

(1)

Tamil book ‘தமிழகத்தில் அடிமை முறை’ என்ற சிறு நூல். அதன் தோற்றத்தை விடப் பன்மடங்கு ஆழமான - அடுக்கடுக்கான விஷயங்களை உள்ளடக்கி வந்திருக்கிறது. ஆ. சிவசுப்பிரமணியன், அறிமுகம் தேவைப்படாத சமூக ஆய்வாளர். இந்த நூல் மிக முக்கியமான வரலாற்றுத் தடங்களை ஆதாரங்களோடு பதிவு செய்கிறது.

வேறு யாருடைய கற்பனைகளை விடவும் தமிழரின் கற்பனை மேலானது என்பார் உண்டு. ஒரு விஷயத்தில் அது ஒப்புக்கொள்ள வேண்டியது. எதிர்காலத்தை விடவும், கடந்த காலத்தைப் பற்றிய கற்பனை தமிழருக்கு விசேஷமானது. உலகிலேயே தமிழ்க் குடி மட்டும் சுதந்திர ஜீவிகளாக அவதரித்தவர்கள் எனவும், ‘அடிமை’ என்ற பேச்சே இல்லை எனவும் பேசிக் கொண்டிருப்பது கற்பனையின்றி வேறென்ன.

இரண்டு முக்கிய ஆராய்ச்சியாளர்கள் (வி. கனகசபை, இ. ராமகிருஷ்ணன்) தமிழகத்தில் அடிமைத்தனமில்லை என்று நிறுவி இருப்பதை விசாரணைக்கு உட்படுத்தித் துவங்குகிறது பேராசிரியர் சிவசுப்பிரமணியத்தின் ஆய்வு. கல்வெட்டுக்கள், ஆட்சி யாளர் கோப்புகள், சுவடிகள், வெளி நாட்டிலிருந்து வந்து திரும்பியோர் குறிப்புகள் மட்டுமல்லாது, சுவாரசியமான சான்றாக சங்கப் பாடல்கள் தொட்டு ஆழ்வார் பக்தி இலக்கியம் வரை நூதனமான ஆதாரங்களை பகுதி, பகுதியாகக் கோர்த்து வழங்குகிறார் ஆசிரியர்.

நுழைவாயிலில் ‘அடிமை முறையின் தோற்றம்’ என்ற கச்சிதமான எழுத் தாக்கத்தில், பல்வேறு நாடுகளில் நிலவிய அடிமை முறைகளின் கொதிப்பான பதிவுகள், இப்படி குறிப்பிட்டுச் சொல்கின்றன.

உலக அதிசயங்களுள் இடம் பெறும் சீனாவின் நீண்ட பெருஞ்சுவரும் எகிப்து நாட்டின் பிரமிடுகளும் அடிமைகளின் நிணத்தாலும், ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டன. பாபிலோன் மன்னன் ஹெமுமுராபி ‘அடிமைகள்’ குறித்தாக வகுத்த சட்டங்கள், ‘பேசும் கருவி’ என்று அடிமைகளை (அரிஸ்டாடில்) வருணித்த காலம், தசைகளை கிள்ளிப் பார்த்து, பாரத்தை தூக்கச் செய்து... பரிசோதித்துப் பார்த்து அடிமைகளை வாங்கிய கொடூரம் என தமிழக அடிமை முறை ஆய்வுக்கான பின்புலம் இந்த முதல் கட்டுரையில் படியமைக்கப்பட்டு விடுகிறது. ‘நாகரீக சமூகங்களின்’ அடித்தளத்தில் உறைந்திருக்கும் குருதி அடையாளம் காட்டப்படுகிறது.

பல்லவர் காலம், பிற்காலச் சோழர், விஜயநகரப் பேரரசு, தஞ்சை மராத்தியர் - நாஞ்சில் நாடு என்கிற தலைப்புகளின் கீழ் மிகச் சுருக்கமாக தமிழர் அடிமையின் கொடுமைகள் வெவ்வேறு ஆவணங்களினின்றும் விரிகின்றன.

இறையுணர்வுப் பாடல்களிலிருந்து ‘அடிமை’ முறையின் வேரை கெல்லி எடுக்கும் பல்லவர் காலப் பகுதி அற்புதமானது. ‘ஆளாயினி அல்லேன்’ என்கிற சுந்தரரின் தேவாரம் ‘ஆள்’ என்பதை அடிமை என்றும், ‘ஆளோலை’ என்பதை அதற்கான அத்தாட்சி என்றும் சொல்லி விடுகிறது. இன்றைக்கும், நீ என்ன நான் வச்ச ஆளா? என்ற கோப மொழியில் அந்தச் சொல் இடம் பெறுவதை நூல் சுட்டுகிறது.

திருப்பாவையில் ஆண்டாள் பாடியவை நமக்கும் நினைவில் வந்தது, நிற்க, ‘குற்றவேல்’ என்ற இடத்தும் ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்ற இடத்தும் பக்தியின் பின்னணியில் அன்றைய அடிமைத்தன விளக்கமாக புழக்கத்தில் இருந்த சொற்கள் புரிபடுகின்றன.

தேவரடியாள் சித்ரவதையை அருளாளர்கள் கூட மிக இயல்பாகப் பார்த்ததை விவரிக்கும் இன்னொரு பகுதி பெண்ணடிமையின் பல்வேறு முகங்களை வரிசைப்படுத்துகிறது. தனி ஆய்விற் கான களம் அதில் பொதிந்திருக்கிறது.

ஆங்கில ஆட்சியில் அடிமை முறை குரூரமானது. அதிகார பீட அங்கீகாரத்தின் தொடர்ச்சி அது. அதில் “கிழக்கத்திய அடிமை முறையைப் பொறுத்தவரை மனிதாபிமான உணர்ச்சிகளும் தேவைகளும் ஒரு திசையைக் காட்டினாலும் சமுதாயத்தின் தேவைகள் இன்னொரு திசையையே காடடின” என்ற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியின் குறிப்பு, சாதி, பிரிவினை, - குறிப்பாக பள்ளர் முறை அழிக்கப்படக் கூடாது என்ற உள் நோக்கத்தைப் பட்டவர்த் தனமாக்குகிறது. தஞ்சை பண்ணையாள் விஷயங்கள் விவரமாகப் பதிவாகின்றன நூலில்.

முத்தாய்ப்பாக, தீண்டாமை என்பது தமிழக அடிமை முறையின் கொடூர வடிவம் என்பதை நூல் நிறுவுகிறது. 29 ஆவணங்கள் கொண்ட பின்னிணைப்பும், அடிக்குறிப்புகளும், துணை நூல்கள் பட்டியலும் நூலின் ‘கனத்தைக்’ காட்டுகின்றன. இத்தனைச் சுருக்கமாக இந்த விஷயத்தை வடிக்க முடிந்ததன் மலைப்பு அகலுவதேயில்லை.

(2)

Tamil book அடுத்த நூல், ஒடுக்கப்படும் மக்களின் வாழ்வியல் களத்தின் மீதானதொரு கதை. பெருந்தினை.
கங்கையும் காவிரி வைகையும் பாயுது
கற்பகச் சோலையில் குயில் கூடக் கூவுது
கஞ்சிக்கு வழியின்றி எம் வயிறு காயுது
கைக்கொரு வேலையில்லே
ஒரு முழக் கந்தைக்கும் நாதியில்லே.........

என்ற (‘வானத்துச் சந்திரன்’ எனும்) பாடல் வரிகளில் கசிந்துருகி நின்று கனன்ற கண்களாகிய காலம் மீண்டும் எதிரே வந்து நிற்கிறது. சோறு உடைத்து என்னும் பெயருக்குரிய சோழ நாட்டு உழவனின் பட்டினிச் சாவை சட்டமன்றப் பெரும்பான்மை மரியாதையின்றி நிராகரித்தது. எலிக்கறியைப் பாரம்பரிய உணவு வகை என்று கீழ்மைப்படுத்தி பெருமிதம் கொண்டார் மாநில முதல்வர்.

பஞ்சத்தையும் துயரத்தையும் விஞ்ஞானிகள் ஒரு முறையில் அலசினால், எழுத்தாளன் வேறு விதங்களில் கால வெளிகளில் புகுந்து வெளியேறி சித்திரங்களைத் தீட்டி விடுகிறான். வறுமையிலும் தமது செம்மையை இழந்துவிடாத மக்கள் பற்றிய ஒரு உருக்கமான படைப்பை வழங்கியிருக்கிறார் சோலை. சுந்தரபெருமாள்.

‘பெருந்திணை’யின் முதல் வாக்கியத்திலிருந்தே கதையின் களம் புலப்படத் துவங்கி விடுகிறது. வறட்சி அற்ற வருணனைகள் வறண்ட பிரதேசத்தைப் பதிய வைக்க போட்டி போடுகின்றன. புதிய தாவரங்களின் பெயர்களையும், பறவைகளின் பெயர்களையும் அவற்றை அறியாத வாசகருக்கு அறிமுகப் படுத்திக் கொண்டே செல்லச் செல்ல, அவற்றோடு தானும் வாடிய முகத்தினராய் வாசகரும் கதையோடு ஒன்றிப் போகிறார்.

பெரியவர் ஆறுமுகம் பார்வையிலிருந்தே துவங்குகிறது பெருந்திணை. அவர் ஒரு போராளி. கம்யூனிஸ்டு என்பதை முதல் பகுதியிலேயே தெரிவித்து விடுகிறது கதை. அவரது பின்னோக்கிய பார்வையில் விரிகிற அவருடையதான கடந்த காலம், அந்த மண்ணின் காலத்தையும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு வருகிறது. பண்ணைகளின் ஆளுகையில் விவசாயக் கூலிகளின் அன்றாடப் பாடுகளை, அவர்களது வியர்வையை, கண்டும் காணாமலும் இழையோடுகிற காதலை, துணிச்சலை... என அடுக்கடுக்காய் தொகுத்து விடுகிறார் சோலை.

ஆறுமுகத்தின் ‘நினைவில் வாழும்’ கிளியம்மா - அவர்களது உறவை எந்த ஜோடனைகளுமின்றி இயல்பாகப் படைக்கிறது கதை. கீழ் சாதிகளுக்கும் கீழ் சாதி அதன் இரு முனைகள் கூட சேர்ந்து விட முடியாது. உழைப்பாளிக்குள்ளான பிரிவினைமேட்டில் உலர்கிறது பண்ணையாரின் அம்பார நெல். கிழவன் உத்தண்டி சாம்பானுக்கு பேரன் காதலை நிராகரிக்கவும் முடியாமல், பண்ணையார் வீட்டு கார்வாரியின் சொல்லை துணிந்து எதிர்க்கவும் முடியாமல் போகிறது.

ஆனால், காதலர்கள் வயக்காட்டில் உலகு மறந்து பேசிக் கொண்டிருக்கையில். வழக்கமான ராகத்தில் ‘உசார்படுத்தும்’ பாடலைப் பாடி விடுகிறார் - தாமாக..

“செம்பரத்தைச் சேவல் கூவுறது
எம்புட்டுத் தூரம் கேக்கிறது
பந்தடி கோலு பம்பரமா போவுது
முந்தானை நழுவுறத கழுகு
கழுத்து நீட்டிப் பாக்குதேடா...”

கிளியம்மா, ஆறுமுகம் வாழ்வில் இணைந்து விடுகிறாள். அதெல்லாம் பழைய கதை. இப்போது மகனுக்குத் திருமணமாகி அந்தக் குடும்பம் தனித்துப் போய், ‘அடிக்கடி வந்து மல்லு கொடுக்காதே’ என்கிற அளவில் நிற்கிறது. பஸ்சிலிருந்து இறங்கித் தள்ளாடும் தாத்தாவைப் பரிகசித்து ஓடுகிறான் பேரன்.

ஆனால், இது ஏதும் பெரியவரைத் திண்ணையில் உட்கார்த்தி விடுவதில்லை. காவிரி நீர்வரத்துக்குப் போராட்டம் ஒரு புறம். உள்ளூர் மனுசர்களிடம் கரிசனையும், கையுதவியும் ஒரு புறம்.

மண்ணில் தலைசாயற வரை உடல் உழைப்பிற்குச் சளைக்காத சம்சாரிகளை ஆறுமுகம் காட்டிக் கொண்டு போகிறார். உள்ளூர்ப் பண்ணை சிவசங்கரம் பிள்ளை தாமே நொடிந்துகிடப்பவர். அவரது மருமகன் பழனி குமார் அழைப்பிற்கு அடுத்த ஊர் போய் வைக்கோல் பிரிகளை சீர் செய்து வருகிறது ஆறுமுகத்தின் ‘செட்டு’. அவர்களது வாழ்க்கை நொடிப்பும் ஆதுரப்படுத்துகிறது ஆறுமுகத்தை. சிவசங்கரம்பிள்ளையின் குடும்ப உறுப்பினராகவே மாறி இயங்குகிறார் ஆறுமுகம்.

ஒரேயடியான வறட்சியில் காய்ந்து போன பூமியும், காயம் பட்ட வாழ்க்கையுமாகத் தவிக்கிற மக்களைப் பெருமழையாகப் பெய்து இன்னும் தண்டிக்கிறது இயற்கை. சேரி சனம் எல்லாவற்றையும் தொலைத்துத் திக்கு முக்காடிப் போகிறது. ஆறுமுகம் வீட்டுச் சுவர் இடிந்து பேரப் பிள்ளைகள் நசுங்கி மாண்டு விடுகின்றனர். அவருக்கு ஆறுதல் சொல்லப் போய்த் திரும்புகிற சிவசங்கரம் பிள்ளை வாழ்க்கையில் வேறு இடி வந்து விழுகிறது. கடன்காரன் ஏச்சுக்கு மானம் விழப் பொறாது மருமகன் பழனிகுமார் தூக்கில் தொங்கி விடுகிறான். மனிதர்களின் கஷ்ட காலங்களிலேயே கதை நிறைவுறாத சோகமாக நிறைவுற்று நிற்கிறது.

கதையினூடாக, கைவினைக் கலைஞர்களின் திறனையெல்லாம் தமது எழுத்தால் கௌரவப் படுத்துகிறார் சோலை. முருகையா வேளார் பானை, மடக்கு வனைவதை வாசிக்கையில், வாசகரே குயவராகி விடுகிற அளவிற்குக் குழைக்கப்படுகிறது மொழி நடை. நாட்டார் தெய்வமான குட்டிச் செலான் கதை, வழிபாட்டின் பின்புலமாக மணவாழ்க்கை ஒப்பந்தமும், நாற்று செழிக்க வழங்கும் மண்ணின் மரபும் பதிவாகிற அழகு அற்புதமானது. ஆறுமுகம், கிளியம்மா திருமணத்திற்கு பெரியாளுக ஒப்புதல் தரும் சுயநலம் கூட பட்ட வர்த்தனமாக வெளிப்படுகிறது.

ஒரு முக்கிய பலவீனமாக. சமகால அரசியல் குறித்த பார்வை பாத்திரங்களின் போக்கில் இயல்பாக வடிக்கப்படாமல், படைப்பாளியின் குரலாகச் சிதைந்து விடுவது கதைக்குள்ளான இலகுவான பயணத்தைத் துவக்கப் பகுதிகளில் சிரமமாக்குகிறது. ஆனால், போகப் போக, கதை நிலத்தின் வெடிப்புக்குள் வெப்ப மூச்சு வாங்கி வாசகர் கலக்க, மழையும் வெள்ளமும் அவரையும் திணறடிக்கிற போக்குக்கு எழுத்து ஆட்படுத்தவல்லதாக அமைந்து விடுகிறது. வட்டார வழக்கு கதையின் பலமாகிறது. ஆட்சியாளரின் சாதுரிய மொழிகளுக்கு மிகச் சாதாரண முறையில் அழுத்தமான பதிலடியாகவே விளங்குகிறது பெருந்திணை.

(3)

Tamil Book ஒடுக்கப்பட்ட மக்களின் கவிதைக் குரலான மூன்றாவது, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாட்டுப் பயணம் பற்றிய திறனாய்வு.

‘சும்மாக் கெடந்த சொல்லை’யெடுத்து ‘அவன்’ செய்த ரசவாதத்தை நவகவியின் பாடல் ஒரு சிற்பமாகவே செதுக்கியது. ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பேராசிரியர் மு. சுதந்திர முத்து அவர்களின் தலைப்பே ‘தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’ - கருத்தூக்கமாக அமைந்திருக்கிறது. ஆய்வின் களமாக, திரை உலகு செய்த பயணத்தையும் - அதே காலத்தில் சமூகத்திற்குள் நிகழ்ந்த

மாற்றங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருப்பது வித்தியாசமானது. வேறு பாடலாசிரியர்களின் பார்வையும், சொல்லாட்சியும் ஒப்பீடாக அமைய பட்டுக்கோட்டையின் தரம் தெளிவான சித்திரமாகப் புலப்படுகிறது.

இன்றைய பாடல்களில் சாகும் தமிழோடு அன்றைய திரைத்தமிழை ஒப்பிடுகிற முதல் அத்தியாயம் பல தகவல்களைப் பட்டியலிடுகிறது. பின் தொடருகிற பகுதிகளில், பட்டுக்கோட்டையை, திரைக் கவிஞர், இயல்புக் கவிஞர், இயக்கக் கவிஞர் என்ற பரிணாமத்தில் மக்கள் கவிஞர் என்ற அடையாளப் படுத்துவதோடு நிறைவுகிறது நூல்.

மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்ற ‘குமுதத்தின் கேள்விக்கு’ கவிஞர் வாலி, இரண்டும் இல்லை, துட்டுக்குப் பாட்டு என்று எண்பதுகளில் பதில் சொன்னார். இந்த ‘மெட்டு’ படுத்துகிற பாட்டின் அலுப்பு பட்டுக்கோட்டைக்கும் நேரவே செய்தது. ‘ஷூட்டிங்’ நேரம் வரை பாடல் தயாராகாத வேளையில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். தன்னருகே வந்தமர்ந்து பாட்டெழுதச் சொல்லவும் கூச்சமடைகிறார் கவிஞர். நான் பக்கத்துல தான் இருப்பேன். நீ பாட்டு எழுதணும். நான் ரசிக்கணும் என்றாராம் இலட்சிய நடிகர். உடனே அதுவரை அமையாத பல்லவியை, நீ பக்கத்துல இருப்பே, நான் பார்த்துப் பார்த்து ரசிப்பேன் என்று கவிஞர் எழுதிய சுவையான அனுபவம் நூல் நேர்த்திக்கு ஒரு ‘மாதிரி’ தான்.

1947-1956 காலத்தில் எடுக்கப்பட்ட 282 தமிழ்ப் படங்களில் 184 படங்கள் சமூகப் படங்கள் என்பது கவனத்திற்குரியது. பட்டுக்கோட்டையின் திரை வரவு நேரம் திராவிட இயக்கம், பகுத்தறிவு - சமூக சீர்திருத்தம் ஆகிய இயக்கக் கருத்துக்களின் பிரச்சாரம் செய்த நேரம், அவர்கள் சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கிய தருணம் நிகழ்வது முற்போக்குச் சிந்தனை சிதறலாக பாடல்கள் அமைய வாய்ப்பான களமாகிவிடுகிறது.

நூலாசிரியர், பாடல்களை மட்டுமல்லாது, திரைக்கதை, வசன அமைப்பு, நடிகர்களின் வெவ்வேறு பாணி ஆகியவற்றையும் ஆய்வில் கொண்டு வருவது முழுமையான பார்வை கிடைக்க ஏதுவாகிறது. சுப. வீரபாண்டியன் ‘சுட்டி’ இதழில், 56 மாத கால அரசியல் அல்ல, எம்.ஜி.ஆரின் 300 மாத கால திரைப்படங்கள் தான் அவருக்கு கோட்டையைப் பிடித்துக் கொடுத்தது என்று கட்டுரை வந்திருந்தது. இந்த நூல், பழைய வசனமொன்றை இதை உறுதிப்படுத்தும் வண்ணம் தேடித் துருவி எடுத்து வைக்கிறது.

நாம் (1953) படத்தில், கலைஞரின் வசனம் அது. கதாநாயகன் எம்.ஜி.ஆர். வாதிடும் போது அதைப் பொறுக்காத ஜமீன்தார் ‘என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்?!’ என்பாராம். உடனே கதாநாயகன் ‘ஆச்சரியக் குறிதான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாக மாறிவிடும், ஞாபகம் இருக்கட்டும், அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசமில்லை’ என்று பதில் கூறுவாராம். எப்படி கதை?

இந்தப் பின்புலத்தில், மதுரகவி பாஸ்கரதாஸ், மருதகாசி, கலைஞர், கம்பதாசன் பாடல்கள் ஏழை குமுறல்களின் வெடிப்பாய்ப் பிறக்கின்றன. மேடைப் பாடகர் - நாடக நடிகர் - பாடலாசிரியர் - விவசாய சங்க அனுபவ பின்னணியோடு நுழைகிற பட்டுக் கோட்டைக்கு வயது வெறும் 23. அடுத்த ஆறு ஆண்டுகளில் 59 படங்களில் 205 பாடல்களைக் குவித்து மறைந்துவிடுகிறான் இந்த மாகவிஞன். இறந்த ஆண்டான 1959ல் தான் நிறைய படங்களில் நிறைய பாடல்கள். ‘தேனாறு பாயுது, வயலில் செங்கதிரும் சாயுது - ஆனாலும் மக்கள் வயிறு காயுது’ என்ற பாடலை நூலாசிரியர் ரசனையோடு இதர பாடலாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். அதற்கும் மேல் விளக்கமாக பட்டுக்கோட்டை பாடலில் மையக் கருத்தாக,

1. முதலாளித்துவ சமுதாயம் நன்மை தராது என்ற உணர்வை ஏற்படுத்துதல்.

2. இந்தச் சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டியது என் பதை உணர்த்துதல்,

3. இது மாற்றப்படக் கூடியதுதான் என்ற நம்பிக்கையை ஊட்டுதல்.

என்று அழகுற நிறுவுகிறார் பேராசிரியர்.

ஜீவாவை மேற்கோள்காட்டி, பட்டுக்கோட்டை தொழிலாளியாக, இட்லி வியாபாரி, மாம்பழ வியாபாரி இன்னோரன்ன வேலை செய்பவராக 17 தொழில்களைச் செய்த அனுபவம் அவரை மக்களில் ஒருவராக இருக்கச் செய்ததை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். குழந்தைகளுக்கு அவர் தந்த இனிய அறிவுரையிலிருந்து (நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி) தொழிலாளர்களுக்குக் கொடுத்த நம்பிக்கை வரை இதன் தடத்தைப் பார்க்க முடிகிறது.

இயக்கப் பாடல்களாக ஜனசக்தியில் எழுதியவை திரைக்குப் போகையில் ‘திருத்தப்’ பட்டதான குற்றச் சாட்டு பற்றியும் நூல் பேசுகிறது. அதன் விரிவான பதிவும், வேறு ஆய்வாளர்கள் கருத்தும் இடம் பெறுவது நூலின் முக்கியப் பகுதியாகும். கருத்திலோ, கொள்கையிலோ வீரியம் குறையவில்லை என்பது ஏற்கப்பட வேண்டியதென்றாலும், திராவிட நடிகர்கள் புரட்சிப் பாதையை விட சீர்திருத்தப் பாதையை முன்வைக்க, பாடலின் வரிகள் மாற்றப்பட்டது என்பதைக் குறிப்பிடுகின்றனர் பல ஆய்வாளர்கள்.

கோவைத் தொழிலாளர்களே பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு ‘மக்கள் கவிஞர்’ என பட்டம் தந்தது; பல்கலைக்கழகமல்ல. எனவே, அவன் நீங்காப் புகழடைகிறான் என்பதை நூல் ஜீவாவின் சொற்களிலேயே பதிகிறது.

இன்றைய இளைய தலைமுறை தேர்வு செய்து வாசிக்க வேண்டிய இனிய ஆழமான ஆய்வை எளிமையாக வழங்குகிற நூல்Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com