Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Koottanchoru
Kottanchoru Logo
அக்டோபர் 2005 - மார்ச் 2006

பாட்டாளிகளைப் பாடிய பாவலன்
ப. சரவணன்

சோஷலிஸக் கருத்துக்கள் ஐரோப்பாவில் வளர்ந்துவந்த காலங்களில், சுரண்டும் வர்க்கத்தினர் அதனை ஒழித்துக்கட்டுவதற்காகப் பல வழிகளில் முயன்றனர். இவர்களைப் பார்த்து பாரதி கேட்டான்,

“கான்யூட் ராஜாவின் கட்டளைக்கு, கடல் அலை கீழ்ப்படியுமா?”-என்று. அதாவது சோஷலிஸக் கருத்துக்கள் எங்கும் பரவிச் செல்வதை எவராலும் தடுக்க முடியாது என்பதையே பாரதி இவ்வாறு உணர்ந்து கூறினான். பாரதியைத் தொடர்ந்து பாரதிதாசனும் “பொதுவுடைமைக் கொள்கையினை திசையெட்டும் சேர்ப்போம்” என்று பாடித்திரிந்து சோஷலிஸக் கொள்கைகளை பரப்பினான்.

இவ்விருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு அதாவது பாரதியை ஞானத்தந்தையாகவும்-பாரதிதாசனை குருவாகவும் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தில்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞன் “தமிழ் ஒளி”.

‘கவிஞர் தமிழ்ஒளி’ தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா - செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 21.09.1924ல் பிறந்தார்.

கவிஞருக்கு பெற்றோர் இட்ட பெயர் “விஜயரங்கம்” செல்லமாக அழைத்ததோ ‘பட்டுராசு’; இவையிரண்டையும் தாண்டி நிலைத்த பெயர், விஜயரங்கம் தனக்குத் தானே சூட்டிக்கொண்ட “தமிழ் ஒளி” என்ற புனைப்பெயர்தான். இந்தப் புனைப்பெயரை பாரதிதாசனின் கவிதை ஒன்றிலிருந்தே எடுத்து தனக்குச் சூட்டிக்கொண்டார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பணியாற்றிய புதுவை முத்தியாலுபேட்டை கல்வே கல்லூரியில் தான் தமிழ்ஒளியும் தமது ஆரம்ப காலக் கல்வியைத் தொடங்கினார். பாரதிதாசனைத் தனது வகுப்பு ஆசானாக மட்டுமின்றி வாழ்க்கை ஆசானாகவும் கொண்டார் தமிழ்ஒளி. புகுமுக வகுப்பான ‘கொல்லேம்’, ‘கொலேனியால்’ முதலியன படித்துத் தேறினார்.

பள்ளிச் சிறுவனாக இருந்தபோதே தமிழ் ஒளிக்குக் கவிபுனையும் ஆற்றல் இருந்தது. அவர் தினமும் அதிகாலையில் எழுந்து, தமது வீட்டுத் தோட்டத்திலுள்ள நாவல் மரத்தின்மீது ஏறி அமர்ந்துகொண்டு சூரியனைப் பார்த்து கவிபுனைவதில் மூழ்கிவிடுவாராம். இரவிலும் ராந்தல் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு எதையாவது எழுதிக்கொண்டே இருப்பாராம்.

போராட்ட வீரர்களின் புகலிடமாகவும்-புரட்சிச் சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் விளங்கிய புதுவை மண்தான் தமிழ் ஒளிக்கு புதிய கனவுகளும், கருத்துகளும் உருவாவதற்கு களமாக-உரமாக அமைந்தது. ஆம்! அந்த மண்ணில்தான் தமிழ்ஒளி முதன் முதலாகப் பாடல் எழுதி பலரால் பாராட்டப் பெற்றார். அந்தப் பாடல் ஒரு சுயமரியாதைத் தோழர் மரணம் அடைந்தபோது எழுதப்பட்ட இரங்கற் பாடலாகும். இளமைக்காலந்தொட்டே தமிழ்ஒளிக்கு சமூக அக்கறையும் உண்டு என்பதை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக அறியலாம். பள்ளிச்சிறுவனாக தமிழ்ஒளி இருந்த காலத்தில் புதுவை பிரஞ்சு ஆளுநர் “போன் வேன்” (Bonvan) மக்களிடம் கொடுங்கோலனாக நடந்துகொண்டான். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் புதுவை அரசியலில் தீவிரமாக இருந்த தோழர் வி.சுப்பையாவை ஆளுநர் பொன்வேன் புதுவையை விட்டு வெளியேற்றினான்; சுப்பையா நாடு கடத்தப்பட்டார்.

ஆளுநரின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அவனுடைய குடும்பத்தாரின் கும்மாளத்தைக் கண்டு இளைஞர் பட்டாளம் எரிச்சலடைந்தது. போன்வேனின் மகளும் ஆணவத்திமிரால் அலைந்து திரிந்தாள்.

ஒருநாள், புதுவை மணக்குள விநாயகர் கோயில் பக்கமாக தமிழ்ஒளி போகும்போது போன்வேன் மகளின் அதிகாரம் நிறைந்த ஆணவத் திமிரைக் கண்டு, ஆத்திரம் கொண்டு அவளைப்பற்றி “துண்டுப் பிரசுரம்” எழுதி நகர் முழுதும் விநியோகம் செய்து விட்டார். இதனைக் கண்டு கோபமுற்ற ஆளுநர் போன் வேன் தமிழ்ஒளியைச் சிறையில் அடைத்தான். இரு வாரங்கள் சிறைவாசத்தை அநுபவித்த கவிஞர் மாணவராக இருந்ததால் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கப்பட்ட பின்பு விடுவிக்கப்பட்டார்.

தமிழ்ஒளிக்கு பாண்டிச்சேரி படிக்க முடியாத சூழலை உருவாக்கியதால் பாரதிதாசனின் பெருமுயற்சியோடு அவர் தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்க்கல்லூரிக்குப் படிக்க அனுப்பப்பட்டார். கரந்தையில் படித்துக் கொண்டிருந்த போதுதான் “சிற்பியின் கனவு” என்னும் நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் சக்தி நாடக சபாவினரால் அரங்கேற்றப்பட்டது. பின்னாளில் இது ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. ஆனால் திரையில் மூலக்கதை: தமிழ்ஒளி என்று குறிப்பிடப்படாமலேயே இருட்டடிக்கப்பட்டது.

கரந்தையில் கவிஞர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழுக்கு முதலிடம் இருந்ததைவிட, சாதிக்கே முதலிடம் இருந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தமிழ் ஒளிக்கு இந்நிலை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியதால் கரந்தையில் தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, மீண்டும் புதுவைக்குத் திரும்பிவிட்டார்.

புதுவையில் பாரதிதாசனின் இல்லமே தமிழ் ஒளிக்குப் புகலிடம் அளித்தது. பாரதிதாசனின் இல்லத்தில் கவிஞர் தங்கியிருந்தபோது, பாரதிதாசனின் மகன் “கோபதி”, தமிழ் ஒளிக்கு உற்ற தோழனாக இருந்தார்.

1944ல் கோபதி ‘முரசு’ என்னும் பெயரில் கையெழுத்துப்பிரதி ஒன்றை நடத்தி வந்தார். அந்தக்காலத்தில் தமிழில் கைப்பிரதி நடத்தக்கூடாது என்று புதுவை அரசு சட்டம் போட்டிருந்தது. அதனால் கோபதி பாரதிதாசனின் முன்னிலையிலேயே கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு ஆறு மாத காலம் நடந்தபோதிலும், அடுத்த இதழைக் கொண்டு வருவதற்காக கோபதி, ‘மன்னர் மன்னன்’ என்று தமது பெயரை மாற்றிக்கொண்டார். அந்தச் சமயத்தில் தமிழ்ஒளி முரசு பத்திரிகைக்கு வலக்கரமாக இருந்திருக்கிறார்.

பாரதிதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றிய கால கட்டத்தில் புதுவை குயில்தோப்பிற்கு கவிஞர் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அங்கே நிலவிய நிழலின் குளுமையும், குயில்களின் இன்னோசையும் இவரது நெஞ்சைக் கவ்வின. அதனால் எழுந்த கவிதைகள் பற்பல. அவற்றை எல்லாம் எழுதிய பின்பு பாரதிதாசனிடம் காட்டி மகிழ்வார் தமிழ்ஒளி. பாரதிக்கு ‘குயில்பாட்டு’ கருக்கொண்ட இடமும் இந்த மாஞ் சோலைதான் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

புதுவை-குயில்தோப்பில் கருக்கொண்டு எழுதிய கவிதைகள் பலவற்றை பெரியாரின் ‘குடியரசு’, அண்ணாவின் ‘திராவிட நாடு’ போன்ற இதழ்களில் தமிழ்ஒளி பதிவு செய்திருக்கிறார்.

மாணவப் பருவத்திலேயே பெரியாரின் சுய மரியாதைக் கருத்துக்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த தமிழ்ஒளி 1945ல் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் “தீவிரகருஞ்சட்டை வீரராகத் திகழ்ந்தார். 1947இல் சுதந்திர நாளை துக்க நாளாகக் கொண்டாடுமாறு பெரியார் கூறியதை ஏற்க முடியாத நிலையில் தி.க.கொள்கையில் வெறுப்புற்று தோழர் ப.ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்து “கம்யூனிஸ்ட் கட்சியில்” உறுப்பினரானார். அந்தச் சமயத்தில்தான் பதினேழு வயது இளைஞரான எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ஒளியை சந்தித்தார்.

தமிழ்ஒளிக்கும்-ஜெயகாந்தனுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி, ஜெயகாந்தனே இப்படிக் கூறுகிறார்:

“நான் தமிழ் இலக்கியப் பாடம் யாரிடமாவது முறையாக நெடுநாட்கள் பயின்றிருப்பேன் என்றால், அது தமிழ்ஒளி அவர்களிடம்தான். படிக்கிற விஷயத்தில் எனது சனாதனத்தை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்வதோடு அன்றி, எத்தனையோ விஷயங்களில் எனது கண்களைத் திறந்தவர் அவர்; பாரதியின் படைப்புகளையே தாண்டிவரக்கூடாது என்றிருந்த என்னை புதுமைப்பித்தன் வரை இழுத்துவந்தவர் தமிழ் ஒளிதான்”.

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ‘ஜெயகாந்தன் காலம்’, ‘ஜெயகாந்தன் பாணி’ என்றெல்லாம் போற்றுமளவிற்குச் சிறுகதைகளைத் தமக்கே உரிய யதார்த்தமான பாணியில் எழுதி, பெருமையின் உச்சியில் நின்றவர் ஜெயகாந்தன். இப்படிப்பட்ட படைப்பாளி தமிழ்ஒளியின் கருவறையிலிருந்து உருவானவர் என்பதை நினைத்துப்பார்க்கும்போது நமக்கு உடம்பே சிலிர்த்துப்போகிறது.

தமிழ் ஒளி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோது எழுதியதைவிட, கம்யூனிசத்திற்கு வந்தபிறகுதான் பொதுவுடைமைக் கொள்கைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். புதுவையிலிருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் சென்னையின் பல்வேறு இடங்களில் கால்நடையாகவே சுற்றிவந்தார். குறிப்பாக சென்னை-வால் டாக்ஸ் சாலையில் இருந்த பட்டறைகளை ஒட்டினாற்போன்று வசித்து வந்த கூலித் தொழிலாளிகளின் வாழ்வு அடிக்கடி இவரது கண்களில் பட்டது.

வெய்யிலுக்கும்-மழைக்கும் பாதுகாப்பு இல்லாத அந்தக் குடிசைகளில், வாழ்வுக்கும் பாதுகாப்பு இன்றி வாழும் ஏழை மக்களின் அவலம் தோய்ந்த வாழ்க்கைச் சித்திரம் கவிஞரின் நெஞ்சை உலுக்கியது. அதனால் தான் சென்னைக்கு வரும் போதெல்லாம் உழைக்கும் மக்களின் வசிப்பிடங்களையே இவரது கால்கள் சுற்றிச்சுற்றி வந்தன. முடிவாக, வர்க்க எழுச்சியைத் தோற்றுவிக்கவும், களப்பணிகளில் ஈடுபடவும் சென்னையே சிறந்த இடம் எனக்கருதியதால்தான் 1945 முதல் சென்னை அவருக்கு நிரந்தர வசிப்பிடமாகி விட்டது.

இந்தக்காலகட்டத்தில் தமிழ்ஒளி எழுதியவைதான் ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘கவிஞனின் காதல்’ என்னும் மூன்று காவியங்கள். இந்த மூன்று நூல்களும் 1947இல் ஒரே சமயத்தில் வெளியாகி தமிழ் ஒளியின் ‘இலக்கியப் போக்கை’ இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தின.

சென்னைக்கு வந்த தமிழ்ஒளி தாம் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு வரை தமது பெற்றோர்களைப் பார்ப்பதற்காகவோ, அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகளுக்காகவோ புதுவைக்கு செல்லவே இல்லை. அவருக்கு குடும்பம் என்ற ஒன்றும் இல்லை; உறவினர்களையும் நாடவில்லை.

கவிஞருக்குத் திருமணம் செய்து வைக்க (1948இல்) அவரது பெற்றோர்கள் விரும்பியபோதும் அவர் அதை மறுத்துவிட்டார். தமது எண்ணங்களைப் புரிந்து நடக்கக்கூடிய ஒரு பெண்ணைத் தமது பெற்றோரால் தேர்ந்தெடுக்க முடியாது என்று கருதியதால் திருமணத்தை நிராகரித்தார்.

சென்னையில் தனிமனிதனாகவும் அதே சமயத்தில் ஒரு நண்பர்கள் வட்டத்தையும் அமைத்துக்கொண்டு செயல்பட்டார் தமிழ்ஒளி. அந்த வட்டத்தில், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், தொழிற்சங்கத் தோழர்கள்... என பலரும் இருந்தனர். குறிப்பாக, ஜார்ஜ்டவுனில் அவருக்கு நண்பர்கள் அதிகம்இருந்தனர். தற்போது ‘மின்ட்’ என்று அழைக்கப்படும் தங்கசாலையிலும், திருவொற்றியூரிலும் கட்சித் தோழர்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததால், அங்கெல்லாம் தமிழ்ஒளி தங்கினார். ஆனால், ஓரிடத்திலேயும் நிலைத்திருந்ததில்லை. அதேபோல பத்திரிகைகளுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்தபோதிலும்கூட எந்த ஒரு பத்திரிகையிலும் அவர் மாத ஊதியத்திற்காகப் பணியாற்றியதில்லை.

தமிழ்ஒளி எப்போதும் எவருக்கும் கட்டுப்பட்டு எழுதியதில்லை. அவருக்கு எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது எழுதினார். மற்ற நேரங்களில் நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்துத் தமிழ் ஒளியே கூறுகிறார்:

“நான் எந்த நேரத்தில் எதை எழுதுவேன் என்பது எனக்கே தெரியாது. ஏனெனில் எதையும் நான் திட்டமிட்டு செய்வதில்லை... அவ்வாறு செய்வது ஒரு கலைஞனின் பணியுமன்று. அது ஒரு எந்திரத்தின் போக்கு. நான் எந்த நேரத்தில் எதைப் படிக்கிறானோ, எதைப் பார்க்கிறேனோ அதுவே என்னுள் கிளர்ந்தெழுந்து கவிதை, கதை, கட்டுரை என்று பரிணமிக்கின்றன.
அதனால்தான் இந்த நேரத்தில் இதை எழுது என்று எவர் பணித்தாலும் எனக்கு எரிச்சலாக இருக்கிறது; அப்படி எழுதுவது இலக்கியமாக இருக்காது என்றும் தோன்றுகிறது"

கவிஞரின் இந்த வாக்கு மூலத்தை எண்ணிப் பார்க்கும்போது எழுத்துத் துறையில் அவர் எவருக்கும் கட்டுப்பட்டு வாழவில்லை என்பதை அறிய முடிகிறது. “கவிஞர்கள் சுதந்திரப் பறவைகள்” என்று எமர்ஸன் கூறியது பொய்க்குமா என்ன?

1948இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. “ஜனசக்தி” பத்திரிகை அலுவலகமும் மூடி சீல் வைக்கப்பட்டது. கட்சித் தலைவர்களும் ‘தலைமறைவு வாழ்க்கை’ நடத்தினர். அந்த சமயத்தில் “முன்னணி” என்னும் இதழ்தான் தலைமறைவாளர்களுக்குத் தொடர்பு சாதனமாக விளங்கியது. இவ்விதழைக் ‘கவிஞர் குயிலன்’ தொடங்கினார். அவருடன் இணை ஆசிரியராக பொறுப்பேற்று கவிஞர் தமிழ்ஒளி கடுமையாக உழைத்தார்.

வாரந்தோறும் கவிதை, கதை, ஓரங்க நாடகம், விமர்சனம்... என்று பலவாறு, ஏட்டில் எண்ணத்தை நிரப்பி வாசகர்களை எழுச்சிபெறச் செய்தார் தமிழ்ஒளி. அந்த நாட்களில் பொதுவுடைமைக் கருத்துக்களை மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே மக்கள் அறிந்து வந்தனர். ஆனால் தமிழ்ஒளி அந்த நிலையை மாற்றியமைத்தார். படைப்பிலக்கியத்தின் மூலம் பொதுவுடைமைக் கருத்துக்களைப் பறை சாற்றினார்.

முன்னணியில் வெளிவந்த படைப்புகள் ஒவ்வொன்றும் புரட்சிக்கனல்கள், புதிய சிந்தனைகள். இந்தப் பத்திரிகை எப்படி செயல்பட்டது? கருத்துக்களை எங்ஙனம் கொண்டு சேர்த்தது... என்பதைப்பற்றி அநுபவிக்காத நாம் கூற முடியாது. ஆனால் முன்னணியைப் பற்றி அறிந்த சுதந்திரப் போராட்ட வீரர் திரு.சு.மு.கண்ணன்,

“அந்நாளில் தலைமறைவாய் இருந்த என் போன்றோர்க்கு கிடைக்கப்பெற்ற பத்திரிகைகளில் முன்னணி தான் முதலிடம் பெற்றது. இந்தப் பத்திரிகையில் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய கவிதைகள் மகா சக்தி வாய்ந்தவை; மறக்க முடியாதவை. அந்த அளவிற்கு பாரதி போன்று உலகு தழுவிய பார்வையும்-உரத்த சிந்தனையும் உடையவை தமிழ்ஒளியின் கவிதைகள்” என்று கூறியுள்ளார்.

முன்னணி பத்திரிகையில் மட்டுமன்றி எழுத்தாளர் ‘விந்தன்’ நடத்திய ‘மனிதன்’ பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இதற்கிடையில் தாமே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணம் கவிஞருக்கு உதயமானதால், ‘ஜனயுகம்’ என்னும் பத்திரிகையை 1950இல் தொடங்கினார். இவ்விதழின் இரு வெளியீடுகளை மட்டுமே தமிழ்ஒளியால் வெளியிட முடிந்தது. கையிலிருந்த பணமோ இரு இதழ்களை வெளிகொணர்வதற்குள் கரைந்துபோனது.

‘ஜனயுகம்’ பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற வெறி தமிழ்ஒளிக்குள் தாண்டவ மாடியது. எனவே தமது கிராமத்திற்குச் சென்று பெற்றோரின் உதவியை நாடினர். அவர்கள் உதவ மறுத்ததால் குடும்பச் சொத்தாக இருந்த தென்னந்தோப்பை விற்க முயன்றார். அதிலும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அதனால் மனம் உடைந்த அவர் பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்னை திரும்பினார்.

அன்று சென்னைக்கு வந்தவர்தான் தமிழ்ஒளி. அதன் பிறகு பன்னிரெண்டு ஆண்டு காலம், அதாவது 1962 வரை தமது பெற்றோர்களை மறந்து-சுத்தமாக மறந்து, “போகும் வழி நீளமென்று புத்தி உணர்ந்தாலும் போகும்வழி எனது போக்குக்கு இயைந்த வழி” என்று அவர் போக்கில் போய்க்கொண்டிருந்தார்.

1951இல் ‘விஜயன்’ என்னும் புனைப்பெயரில் தமிழ்ஒளி, “மாமாவின் சாகசம்” என்ற சிறுநாவலை எழுதினார். இதனை சக்தி வை.கோவிந்தன் வெளியிட்டார். ‘சிறுகதை, நாவலில் சொல்ல முடியாத விஷயத்தை எனது பத்துவரி கவிதை சொல்லும்’ என்று கவிதையில் மட்டுமே உறுதியுடன் இருந்த தமிழ் ஒளியின் இந்த நாவல் அன்றைய மலிவுவிலைப் பதிப்பாக விற்பனையில் பெரிய சாதனையைப் படைத்தது.

சோவியத் நாட்டில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டின் தாக்கத்தால் தமிழகத்திலும், ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ முதலிய அமைப்புகள் உருவாயின. இச்சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராக தமிழ்ஒளி செயல்பட்டுள்ளார். இந்த ஈடுபாட்டின் காரணமாக, தேசியக்கவி பாரதி ரஷ்யப் புரட்சிக்கும், ஐரோப்பிய நாடுகளின் விடுதலைச் சூழலுக்கும் முதன் முதலில் குரல் கொடுத்ததைப் போல, மக்கள் கவி, தமிழ்ஒளியும் 1952-இல் ‘மே தினத்தை’ வரவேற்று முதன்முதலில் குரல் கொடுத்தார். அத்துடன் சீனப் புரட்சியையும்-ஆசிய நாடுகளின் விடுதலைச் சூழலையும் பாடினார். பொதுவுடைமை என்றால் பாமர மக்கள் அறியாத காலத்தில் லெனினைப் போல, ஏங்கல்ஸ் போல தாமாகவே சிந்தித்து முடிவுகள் மேற்கொண்டு எதிர்நீச்சல் போட்டு பொதுவுடைமை இயக்கத்தின் பாவலனாக விளங்கினார் தமிழ்ஒளி என்று நாம் கூறினால் அது மிகைஅல்ல; உண்மை. இந்த நேரத்தில் நம் முன்னே ஒரு கேள்வி எழும். அதாவது பொதுவுடைமையைப் பற்றி பாரதியோ-பாரதிதாசனோ பாடவில்லையா என்று. இவர்கள் பாடியிருக்கிறார்கள் என்றாலும், பாரதியின் பொதுவுடைமை விடுதலைச் சூழலை ஒட்டியது. பாரதிதாசனின் பொதுவுடைமை அவர் சார்ந்திருந்த திராவிடர் கழகத்தை ஒட்டியது. ஆனால், தமிழ்ஒளியின் பொதுவுடைமை அப்படிப்பட்டதல்ல. அவருடைய கவிதைகளில் நேரடியாகவே ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி பேசப்பட்டிருக்கும். மேலும், சமூக-பொருளாதாரத்திற்குத் தனியிடம் கொடுத்து நிரப்பப்படாத இலக்கிய வெற்றிடத்தை முதன் முதலில் நிரப்பியவர் தமிழ்ஒளி. அதனால்தான் அவiரைப் ‘பொதுவுடைமைப் பாவலன்’ என்று அழைப்பது பொருத்தமாகவே உள்ளது.

மே தினத்தை முதன்முதலில் கொண்டாடியவர் தோழர் சிங்காரவேலர் என்றால், அதனை வரவேற்று முதன்முதலில் கவிதை வடித்தவர் தமிழ்ஒளி. அதனால் தான் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், “பாரதி-பாரதிதாசன் இருவரையும் தாண்டி உலகத் தொழிலாளர்களின் இயக்கமாகிய பொதுவுடைமைப் போர்க்களத்தில் களப்போர் வீரனாக விளங்கியவன்” என்று புகழ்மாலை சூட்டியுள்ளார்.

மே தினத்தைப் பாடி வெளியிட்ட நூலின் விற்பனையில் பாதித்தொகையை அப்போது மலேசியாவில் நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு தமிழ்ஒளி வழங்கியுள்ளார். இது அவரின் தமிழ் உணர்வுக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். இதனைத் தொடர்ந்து அவர், “விதியோ? வீணையோ?” என்னும் இசை நாடகத்தை 1955 இல் எழுதினார். இதன் சிறப்பை உணர்ந்த அப்பாதுரையார், திரு. என்.எஸ். கிருஷ்ணனிடம் அரங்கேற்றும்படி வேண்டிக்கொண்டார். ஆனால் அது நடைபெற வாய்ப்பின்றி போய் விட்டது.

இந்த நேரத்தில் கவிஞரின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு திருப்பு முனையையும் சொல்லியாக வேண்டும். அதாவது, தமிழ்ஒளி ஒரு பெண்ணை மனதாரக் காதலித்தார். ஆனால் அந்தக்காதல் கைகூடவில்லை. அதனால் மனம் ஒடிந்து பல துன்பங்களுக்கு ஆளானார். அந்தச் சமயத்தில் உருவானது தான் “கண்ணப்பன் கிளிகள்”, “மாதவி காவியம்” என்னும் இரு படைப்புகள். இவற்றில் முழுக்க முழுக்க தமிழ் ஒளியின் சோகம் ததும்புவதைக் காணலாம்.

“பாரதியின் குயிலுக்குப் ‘பூர்வ ஜன்ம ஞானம்” இருந்தது. என் கிளிகளுக்கு மனிதருடன் பரிச்சயமும், தமிழ்மொழியில் நல்ல ஞானமும் இருக்கின்றன” என்று கண்ணப்பன் கிளிகள் நூல் முகவுரையில் கவிஞர் எழுதியுள்ளார். இந்த உருவகக் காப்பியத்தில் ஒலிக்கின்ற ஆண் கிளியின் சோகம் தமிழ்ஒளியின் குரலே என்பது படிக்கின்ற எவருக்கும் விளங்காமல் போகாது.

‘தமிழ்ஒளி’ என்று தாம் புனைந்து கொண்ட பெயருக்கு ஏற்ப தமிழுக்கும்-தமிழருக்கும் அவர் ஆற்றியுள்ள பணிகளை எந்த அளவுகோல் கொண்டும் அளந்தறிய முடியாது. அந்நாளில் சி.பா.ஆதித்தனார் தொடங்கிய “நாம் தமிழர்” என்னும் இயக்கத்தில் தீவிரமாக செலாற்றிய தமிழ்ஒளி அவ்வியக்கத்தின் சார்பாக வெளிவந்த ‘தமிழன்’, ‘சமநீதி’ ஆகிய இதழ்களில் இந்தி எதிர்ப்புக் கவிதைகள் பல எழுதினார்.

தமிழ்ஒளி ஏறக்குறைய 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களை ஊ.கோவிந்தன், மா.சு. சம்பந்தன், பெண்ணாடம் வீ.இராமசாமி, செ.து.சஞ்சீவி முதலிய தோழர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போதுவரை தமிழ்ஒளியின் படைப்புகளை பெரியவர் செ.து.சஞ்சீவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

கவிதை-நாடகம்-ஆராய்ச்சி என்ற வட்டத்திற்குள் மட்டும் தமிழ்ஒளி இயங்கவில்லை. திரைப்படத் துறையிலும் அவர் கால் பதித்தார். 1957இல் வெளியான ‘உலகம்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல் எழுதினார். ஆனால் திரைத்துறை அவருக்கு ஒத்து வராததால் விலகிவிட்டார்.

1962க்கு பிறகு தமிழ்ஒளி காசநோய்க்கு ஆளானார். உடல் நலம் குன்றிய போதிலும்கூட கடைசிவரை எழுதிக் கொண்டேதான் இருந்தார். 1964இல் பாரதிதாசன் இறந்தபோது, “உயிரில் உணர்வில் கலந்த கவிஞன், என் உயிரில் உயிர் கொண்டு உலவுகிறான்” என்று மிகவும் வருந்தி எழுதினார். இது தான் அவர் எழுதிய கடைசி கவிதை என்று சொல்லப்படுகிறது.

“மண்ணில் முளைத்தவன் நான்-அதன்
மார்பில் திளைத்தவன் நான்!
எண்ணித் துணிந்துவிட்டேன்-இனி
எங்கும் பறந்து செல்வேன்”

என்று பாடித் திரிந்த நமது பாட்டாளிக் கவிஞன் தாம் பிறந்த மண்ணிலேயே 29.03.1965 அன்று மறைந்தார். பாட்டாளிகளைப் பாடிய பாவலனின் தொடர் ஓசை இனி வருமா? காலம்தான் பதில் சொல்லும்.



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://semmalar.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP