Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Koottanchoru
Kottanchoru Logo
அக்டோபர் 2005 - மார்ச் 2006

தமிழ் ஒளி கவிதையின் தனித்தன்மை
செ.து. சஞ்சீவி

காலத்தால் நிழலடிக்கப்பட்ட மாக்கவிஞர் தமிழ் ஒளி. அவர் பிறவிக் கவிஞர். கவி மனத்தோடு தமிழ் கற்றவர். கவி மணங்கமழ கவிதை படைத்தவர். கவிதைக் கலைநயம் பொலிய காவியங்களை படைத்தவர். எப்போதும் கவிதையே நினைவாய் வாழ்ந்து மறைந்தவர்.

சார்பு நிலை நோக்கி அவரை பாரதிதாசன் பரம்பரை என்றும், பாரதி பாதையில் காலூன்றியவர் என்றும் அடையாளம் காண்பார் பலர். உண்மையில், நெடிய பாரம்பரியம் மிக்க தமிழ்க் கவிஞர் மரபில் தோன்றிய தனிப்பெருங்கவிஞர் என்பதே உறுதிப்படும் உண்மையாம்.

அகவை இருபது வரை அவர் புதுவையில் வாழ்ந்தார். பாரதிதாசன் இல்லத்தில் இருந்தார். தமது படைப்புகளை ஆசான் பார்வையில் வைத்து பாராட்டுப் பெற்றார்.

அந்நாட்களில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாக உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார்.

இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளி வருவதா? ” என்ற அவரின் எண்ணம் தெரிய வந்தது.

புலமைக் காழ்ப்பு பொறி பறந்ததைப் புரிந்து கொண்டார் தமிழ் ஒளி. வலிமைப் படைத்தவர்களை எதிர்க்க வாய்ப்பில்லாமல் சென்னைக்குப் பயணமானார். இது நிகழ்ந்தது 1945ல்.

கவிஞர் தமிழ் ஒளி தோற்றத்தில் எளியவர். ஆயினும் தெளிவானவர். திடசித்தம் உடையவர்.

புதிய நோக்கில் புதிய போக்கில் தமது பாதையை வகுத்துக் கொண்டு ‘கவிப்பயணத்தைத்’ தொடங்கியவர்.

இரண்டு ஆண்டுகளின் பின்னர், தனக்கிருந்த கருப்புச் சட்டை அடையாளத்தைக் களைந்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் காலூன்றினார்.முழு நேர உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

இந்தக் காலகட்டத்தை 1947-54 எனத் தெளிவு படுத்திக் கொள்ளலாம். 1947ல் தமிழ் ஒளி படைத்த மூன்று குறுங்காப்பியங்கள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு நூல்களின் அட்டைகளிலும் ‘சுத்தி அரிவாள்’ சின்னம் இடம் பெற்றிருந்ததும் அவரை அடையாளப்படுத்தின.

இவை தவிர அவர் படைத்த தனிக் கவிதைகளின் திரட்டாக, ‘நீ எந்தக் கட்சியில்?’-‘மே தினமே வருக!’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறு நூல்களும் வெளிவந்தன.

மே தினத்தைப் போற்றி முதலில் தமிழ்க் கவிதை செய்த தமிழ் ஒளி அதில் தொழிலாளர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்வதோடு புரட்சிக்கும் அதுவே பாதை வகுக்கும் என்பதையும் சொல்கிறார். “கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக் கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!” “மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க பொங்கி வந்த மே தினமே!”

“தாழ்வைத் தகர்க்கத் தலைநிமிர்ந்த மேதினியில்
வாழ்வின் சமாதானம் வாய்ந்த நெடுந்திரையில்
ஜீவியமாய் நின்றதொரு சித்திரம் நீ; வானமரர்
காவியம் நீ; கற்பனை நீ; காணுமொரு காட்சியும் நீ!
தீரா இருளொழிந்து திக்கு விளங்க
இதோ வாராய் வளர்பொருளே
மே தினமே வாராய் நீ!”
“பொந்தில் உயிர்வாழ்ந்தார்;
போக்கற்றார்; இன்பமிலார்
கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்
ஏற்றி வைத்த நின்பெருமை
என்னுயிர்க்கும் மேலன்றோ!
போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக!’

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு காவியங் களும் கவிதைத் திரட்டுகள் இரண்டும், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு அவர் செலுத்திய காணிக்கை என்றே கூற லாம். தமிழ் ஒளியின் புரட்சிகரமான வர்க்கப் போராட்டக் கவிதைகளை இன்றைய தலைமுறையினரின் கவனத்திற்குக் கொண்டு வருவது காலத்தின் தேவை.

“தமிழனே நான் உலகின் சொந்தக்காரன்
தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து!
அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்!"
அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்!"

என்று தன்னைப் பற்றி பிரகடனப் படுத்திக் கொண்டார் தமிழ் ஒளி.

"இமை திறந்து பார்! விழியை அகலமாக்கு!
என் கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்
திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்!
சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வா நீ!"
என்று அழைப்பு விடுத்தார்.

1948 இறுதியில் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டபோது, கட்சி பிரச்சார சாதனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அந்தச் சூழலில் ‘முன்னணி’ ஏடு முகிழ்ந்தது. கவிஞர் குயிலனும், தமிழ் ஒளியும் இணைந்து செயல்பட்டனர்.

அந்த ஏடு தமிழ் ஒளிக்கு நல் வாய்ப்பாய் அமைந்தது. உணர்ச்சிமயமான கவிதைகள், கதைகள், ஓரங்க நாடகங்கள் என இதழ்கள் தோறும் அவருடைய எண்ணங்கள் பதிவாகி வந்தன.

குறிப்பாக, சீனாவில் நடை பெற்று வந்த மக்கள் யுத்தம், மாசேதுங் தலைமையில் வெற்றி வாகை சூடியதை வரவேற்று அவர் படைத்த கவிதைகள் நான்கு. அத்துடன், உலகத் தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை வென்றெடுத்த வீர வரலாற்றை-மே தினச் செய்தியை வீர காவியமாகப் படைத்துள்ளார் தமிழ் ஒளி.

இவை வரலாற்றுக் கருவூலங்கள்.

குடந்தையில் (1948) நகர் சுத்தித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தில், காவலர்கள் கடுமையாக நடந்துகொண்டார்கள். அதனைக் கண்டித்து கவிஞர் படைத்த கவிதை, அதே ஆண்டில், ஈரோடு நகர சுத்தித் தொழிலாளர் நடத்திய போராட்டத்தின்போதும் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்தக்காலகட்டத்தில், தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு தோழரைப்பற்றி கவிஞர் படைத்த கவிதை ‘தாய் செய்த குற்றம்’ என்ற தலைப்பில் ‘அமுதசுரபி’ ஏட்டில் வெளி வந்தது. (1949).

அந்தக் கவிதை அடக்குமுறைக்கு எதிரான மனித நேயம் பற்றி பேசுகிறது. தலைமறைவாக இருந்துவந்த தோழர் ஒருநாள் தாயைக் காண வீட்டிற்கு வருகிறார். இரு தினங்கள் இருந்துவிட்டுச் செல்கிறார்.

இந்தச் செய்தி காவலர்களுக்கு எட்டிவிடுகிறது. விரைந்து வந்த அவர்கள் வீட்டைச் சோதனையிட்டனர். தோழர் இல்லாததால் தாயிடம் வாக்குவாதத்தில் இறங்கினர்.

காவலர்: இங்குன் மகனும் ஒளிந்திருந்தான், எமை ஏமாற்றி நீயிங்கொளித்து வைத்தாய்; அந்தப் பயலுக்குச் சோறுமிட்டாய், மிக ஆபத்தான குற்றம் செய்துவிட்டாய்!

தாய் சீறுகிறாள்: மூச்சும் பேச்சும் அவன் எய்து முனம், ஒரு முந்நூறு நாளாக நான் அவனைப் பத்திரமாக ஒளித்து வைத்தேன், மண்ணைப் பார்க்க அவன் ஒருநாள் பிறந்தான்!

“பாம்புக்குப் பாலிடும் மாந்தரையும் இங்குப்
பாதகர் என்பவர் யாரு மில்லை!
பாம்பல்ல, என்னுடை அன்பு மகன்; அவன்
பாயும் விலங்கல்ல, ஆசை மகன்!”
“பெற்று வளர்த்திட்ட என்மகனை, இங்குப்
பேணி வளர்ப்பது குற்றமென்றால்
தாய்க்குலம் மாண்டு மடிவதுவோ? அன்றி
தர்மம் தலைசாய்ந்து வீழ்வதுவோ?
என்னுடைப் பிள்ளைக்குச் சோறிடவும், அவன்
இளைப்பாறி நிற்க இடம் தரவும்
அன்னை யெனக்கிங் குரிமை யுண்டாம், இதை
ஆண்டவன் வந்தாலும் விட்டுக் கொடேன்!”

- தாயின் கோபம் அடங்கவில்லை, ‘தாய் தன் மகனை அரவணைப்பது நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் உறவு முறை. இதைக் குற்றமெனக் கூறுவது மனிதத் தன்மையற்ற செயல். இதுதான் சட்டம் என்றால் அதனை எதிர்ப்போம்’ என்றும் கூறுகிறாள். காவலர்கள் மறு மொழி கூறாமல் சென்று விடுகின்றனர்.

கவிஞர் ஆவேச உணர்வுடையவர் மட்டுமல்ல, வாழ்க்கையின் அடிப்படை கூறுகள் இன்னதென்பதும் தெளிவுபடத் தெரிந்தவர்.

அந்த நோக்கில்தான் பாட்டாளி மக்களின் வாழ்க்கை அவலங்களை உயிர்ச்சித்திரமாக வரைந்து காட்டினார்.

‘உழவனின்’ பொங்கல் கனவு, ‘நெசவாளி’ விரும்பாத தீபாவளி, துயரச் சுமை தூக்கும் ‘துறைமுகத் தொழிலாளி’ கடலைப்பார்த்து கண்ணீர் சிந்தும் ‘மீனவர்’, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் ‘சலவைத் தொழிலாளி’, எப்போதும் ஏக்கப் பெருமூச்சுவிடும் ‘அரிசன மக்கள்’, வீதியில் நின்று கையேந்தும் ‘கழைக்கூத்தாடி’, விதியை நொந்து விடிவு காணாத விதவையர் பற்றிய கவிதைகள் அனைத்துமே தமிழ் ஒளியின் புரட்சிப் பாடல்கள் தாம். கவிஞன் அடிப்படையில் ஒரு கலைஞன். கற்பனை ஊற்றெடுக்கும் அவன் உள்ளம், பரந்த உள்ளம். அங்கே உவமைகள் ஒளி வீசும். அணி நலன்கள் அலை புரளும். கலை ஓவியமாகக் கவிதை வடிவம் பெறும்.

தமிழ் ஒளி பிறந்து வளர்ந்த இடம் புதுவை சாமிப்பிள்ளைத் தோட்டம். அதனை அடுத்துள்ள குயில் தோப்பு புதுவையின் எழிற் பூங்கா என்றே பேசப்படும். பாரதியைக் கவர்ந்த அந்த பூங்கா, பாரதிதாசனுக்கும் தமிழ் ஒளிக்கும் பழகு தமிழ்ச் சோலை என்றே சொல்லலாம்.

தமிழ் ஒளியின் உள்ளத்தைப் பக்குவப்படுத்திய பெருமை அந்தப் பூங்காவுக்கு உண்டு எனில், அவர் படைத்த கவிதைகளில் அதன் எழிற்கோலத்தை முழுமையாகக் காணலாம் அல்லவா?

இங்கே சில கவிதைகளின் தலைப்புகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். குயில், தென்றல், இளவேனில், மழை, மழைத்துளி, தென்னம்பந்தல், மின்மினி, நிலா, விண்மீன்கள், ரோஜா மகள், தாமரைப்பெண்-

இவற்றுடன், பொங்கல் விழா, புது நெல் குற்றும் பெண்டிற்பாடும் ‘வள்ளைப் பாட்டு’ மலைவாழ்ப் பெண்களுடன் மன்னர் ஆடும் ‘சேரன் கூத்து’, ஓடை நீரில் நீராடும் ‘கண்ணம்மா’, காதல் சின்னம் தாஜ்மஹால்-

இன்னும் பட்டியலில் அடங்காப் பாடல் கள் பல உண்டு. இங்கே சான்றுக்கு ஒரு கவிதையைக் குறிப்பிடுவேன். தலைப்பு ‘இயற்கை அன்னையின் கோபம்’.

பேய்க்காற்றும் பெருமழையும் இணைந்து இடியோசை எழுப்பி இப் புவியினை அதிர வைக்கிறது. இதனைக் காணும் நம் கவிஞருக்கு எண்ணம் எங்கே செல்கிறது தெரியுமா?

கொடுங்கோலாட்சியை எதிர்த்து மக்கள் தொடுத்த யுத்தம் வெற்றி கொள்ளுவதையே நினைவூட்டுகிறது.

“கொட்டி கொட்டி எழுந்தாள்-அன்னை
கோபத்திலே மின்னல் தீயை யுமிழ்ந்தாள்!
கட்டிக் கிடந்திடும் மேகம்-எனும்
கார்மலை யாம்குடம் எற்றிப் புரட்டிக்
கொட்டினாள் கால வெள்ளத்தை-அவள்
கொக்கரித் தாள் திசை எட்டும் நடுங்க
தட்டி எழுப்பினள் காற்றை-அது
தாவி யுருட்டுது மாமரக் காட்டை!”
- முடிவில்,
“மக்கள் தொடுத்திடும் யுத்தம்-என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க
செக்கென ஆட்டுது காற்று-பெருஞ்
செல்வர், மணிமுடி, சட்டம், சிறைகள்
பொக்கென வீழ்வது போலே-யாவும்
போயின பொட்டென்று விட்டது காற்று!
செக்கச் சிவந்தது வானம்-அன்னை
சேல்விழி காட்டினள் வந்தது காலை!"

இந்தக் கவிதையில் வரும் சந்தம் போர்க்களத்தில் நிகழும் கோர தாண்டவத்தை நம் கண்முன் நிறுத்தும்.

தனிக் கவிதைகள் தவிர ‘தமிழ்ஒளி’ படைத்த காவியங்கள் ஒன்பது. அவற்றுள் ‘மாதவி காவியம்’ தவிர்த்த ஏனைய எட்டும் குறுங்காப்பியங்கள். இவற்றில் ‘புத்தர் பிறந்தார்’ துறவுக் காப்பியம்.

கவிஞர், புத்தர் வரலாற்றை முழுக்காவியமாகப் படைக்கவே விரும்பினார். எதிர்பாராத இடர்ப்பாடுகள் அடிக்கடி எழுந்து முயற்சியைத் தடைப்படுத்தி வந்தன. இதன் விளைவாக, புத்தர் ஜனனம் என்ற அளவில் காவிய முயற்சி நின்றுபோனது.

‘புத்தர் பிறந்தார்’ என்ற காவியப் பகுதியை “தமிழ் ஒளியின் கவிதைகள்” தொகுப்பில் கண்ட டாக்டர் மு.வரதராசனார் அவர்கள்: “புத்தர் பிறந்தார்” என்ற அருமையான காவியம் முடிக்கப்படாமலே குறையாக நின்று விட்டது, தமிழிலக்கியத்தின் குறையாகவே ஆகிவிட்டது’ என்றார். மு.வ.மொழிந்தபடி இது பெருங்குறையே ஆயினும், பாடல்களின் அருமை கருதி இந்நூல் பெருமைக்குரிய படைப்பு என்றே கருதுகின்றோம்.

புத்தர் தம் ஜன்ம பூமியாம் கபிலை நகர், உரோகிணி ஆறு, உலும்பினி வனம் பற்றிய வருணனைகள் வெகு சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

காவிய வரிசையில் முதலில் வரும் ‘கவிஞனின் காதல்’ காவியப் படைப்புகளுக்கு முன்மாதிரியாக எழுந்த நூல். புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் இயற்றிய ‘பாண்டியன் பரிசு’ காவியத்தை நகல் எடுக்கும் பேறு பெற்றவர் தமிழ ஒளி. அப்போது உள்ளத்தில் பதிவான எண்ணங்களே ‘கவிஞனின் காதல்’ எழுதக் காரணமாயிற்று என நாம் கருதுகிறோம். ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘மே தின ரோஜா’ ஆகிய மூன்றும் புரட்சிகரமான தலித் இலக்கியங்கள் எனலாம்.

இவற்றுள் ‘வீராயி’ காவியத்திற்கும், பாரதியார் பாடிய ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாடலே அடித்தளம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் ‘செங்கொடி’ ஏற்ற வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுந்த நூல் ‘மே தின ரோஜா’. கம்யூனிஸ்ட் கட்சியில் காலூன்றாத காலத்தில் எழுதப்பட்ட ‘நிலை பெற்ற சிலை’யில் பொதுவுடைமைப் பூங்காவாகிய சோவியத் யூனியனின் பெருமை பேசப்படுகிறது.

சிலப்பதிகார வேனிற்காதை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இசை நாடக நூலாக எழுந்தது ‘விதியோ, வீணையோ?

மாதவி காவியத்தில் கோவலன் கூற்றாக வரும் ஒரு ‘வெண்பா’வை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் ‘கண்ணப்பன் கிளிகள்’. இது உருவகக் காப்பியம்.

பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் படைத்துள்ள புகழ் பெற்ற நூல் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. அதில் இடம் பெற்றுள்ள ‘பிரபா’ என்ற கதையினை அடிப்படையாக வைத்து புனைந்த புரட்சிகரமான குறுங்காப்பியம் ‘கோசலக்குமரி’.

தமிழ் ஒளியின் கவிதைகள் அனைத்தும் அவரின் புகழ்பாடும். காலத்தை வென்றவை தமிழ் ஒளியின் கவிதைகள். இந்தக்காலத்துக்கும் தேவையானவை தமிழ் ஒளியின் கவிதைகள்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP