Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Koottanchoru
Kottanchoru Logo
அக்டோபர் 2005 - மார்ச் 2006

கானாப்பாடல்கள்

வை. ராமகிருஷ்ணன்

மனிதன் நாகரிகமடைந்தது முதல் வாழ்க்கைச் சூழலில் வாய் மொழிப் பாடல்கள் வழக்கத்தில் உள்ளன. இவை பல படிநிலைக்கொண்டு மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்து உருவானது சென்னை கானா. விளிம்புநிலை மக்களிடம் உருவாகி அடித்தள மக்களிடம் வந்தடைந்து, இன்று வெகு சனங்களிடம் பரவலாக்கப்பட்டுள்ளது.

Gaana அடித்தள மக்களிடத்தில் சடங்கு, கேலி, கிண்டல், கலாய்க்கும் தன்மை ஆகியவற்றுடன் இரங்கலின் துன்பநிலை பாடலாகப் பரிணமித்தது. அத்துடன் வெகுசன மையத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஓர விளிம்பில் தொங்கிக் கொண்டு, மன வேதனை/துன்பம், குமுறலுணர்வின் வெளிப்பாடு கானா. சென்னை நகரக் குடிசை வாழ் மற்றும் சாலையோர மக்கள் இருப்பிடத்தில் இறப்பு நிகழும் போது, உற்றார் உறவினர்கள் சூழ்ந்து இருப்பார்கள். இவர்கள் இரவில் கண் விழித்திருப்பதற்காகவும், அவர்களின் துயரத்தை மறக்க/கவனத்தைத் திசை திருப்ப ஒருசில பெரியவர்கள் கூடி புராணக்கதைகள் அல்லது கர்ண மோட்சக்கதையினைப் பாடுவது வழக்கம். தற்பொழுது அந்நிலை மாறி இறப்பன்று பிணம் இரவில் இருக்குமேயானால், அப்பகுதியில் பாடக் கூடியவர்களை அழைத்தோ அல்லது பாடுவோர் விரும்பி வந்தோ, கானா நிகழ்த்தப்படும். இந்நிகழ்வில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் வட்டமாக அமர்ந்து ஒருவர் தொடுக்க மற்றொருவர் எடுத்துக்கொடுக்க, ஒருவர் பின் ஒருவராகப் பாடுவதுடன் ஒலி ஒப்புமையுடன் பாடு வார்கள். இக்கானாவிற்கு இசைக்கருவிகளாக, தீப்பெட்டி, சில்வர் பாத்திரங்கள் மற்றும் கையில் கிடைக்கும் எப்பொருளையும் இசைப்பொரு ளாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

கானாப் பாடல்கள் பல நூற்றாண்டு காலமாக இடையறாது பாடப்பட்டு வரினும் இதற்கு ‘கானா’ என்ற சொல்லாட்சி சுமார் ஒரு நூற்றாண்டு காலத் திற்குள் சூட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

சென்னை நகரக் குடிசைவாழ் மற்றும் சாலையோர மக்களின் இறப்புச் சடங்குப் பாட லாக இதனைக் காண முடிகிறது. ஆகையால் தமிழ்ச் சூழலில் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்த்தப்பெறும் இறப்புச் சடங்கு தாக்கத்தின் ஊடாகக் ‘கானா’ உருப்பெற்ற நிலையினைப் பின்வரும் வரைபடம் மூலம் காணலாம்.

சென்னை நகர அடித்தள மக்களின் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினரின் காரண, காரியங்களின் ஊடாக பல நிகழ்ச்சிப்பாடல் மெட்டுக்களின் தொகுப்பு அல்லது தாக்கம், தனி மனித உணர்வின் கூட்டு வெளிப்பாடே கானாப் பாடல்கள் எனலாம்.

சென்னை நகரக் கானாப்பாடல் பல்லாண்டு களாகப் பாடப்பட்டு வருவதற்குச் சில சான்றா தாரங்கள் உள்ளன. அவை பின்வரும் நிகழ் வினைக்கொண்டு யூகிக்கலாம்.

சென்னை நகரில் கானாக்கச்சேரி குழுவாகச் சேர்ந்து பல சந்ததியினருக்குப் பின்னரும் பாடி வருகின்றார்கள். ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை பன்னிரு மாதங்களிலும் ஆண்டுக்கொரு முறை, மாதத்திற்கொருமுறை, வாரத்திற் கொருமுறை என விழாக்கால கானாப்பாடலாக நிகழ்த்தப்படுகின்றன.

தமிழர் திருநாள் திருவள்ளுவர் தினத்தன்று சென்னை மயிலை திருவள்ளுவர் சிலையருகில் கானாப்பாடகர் ஏ.அந்தோணி (ஆல்தோட்ட பூபதி கதைப்பாடல் பாடியவர்) கானாக் கச்சேரி நிகழ்த்தி வந்தார். அவர் இறந்த பிறகு அந்நிகழ்வினை யாரும் தொடர்ந்து நிகழ்த்தவில்லை (அந்தோணி மனைவி கொடுத்த தகவல்). இவ்வாறான கானாப் பாடல் நிகழ்வுகள் சென்னையில் பல பகுதிகளில் கலை வடிவமாக நிகழ்த்தப்படுகின்றன.

மார்ச்-மூலக்கொத்தளம்-சென்னை-21

ஏப்ரல்-தமிழ் வருட பிறப்பு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு.

மே-சித்ரா பௌர்ணமி சுடு/இடு காடுகளில்

ஜூன்-மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார் குருபூசை.

ஜூலை-வடசென்னை வள்ளலார் நகர்-சாகின் ‘ஜ’ பாபா விழா.

ஆகிய இடங்களில் நிகழ்த்துக்கலைகள் ஆண்டுக் கொரு முறை நடைபெறுகின்றன.

மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிண்டி-சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஜீவ சமாதியில் கானா நிகழ்த்தப்படுகிறது. இதனை ஒத்த நிலையோடு வ.உ.சி.சாலை; சென்னை-3; வி.வி. ஹியானா லாரி சர்வீஸ் இருக்குமிடத்தில் அமாவாசை அன்று கானா நிகழ்த்தப்படுகிறது. வாரத்திற்கொருமுறை செங்குன்றத்தை அடுத்து பூதூர் என்ற இடத்தில் சாகின் ‘ஜ’ பாபா என் பவர் ஜீவ சமாதி அடைந்துள்ளார். அவ்விடத்தில் வியாழக்கிழமை தோறும் இரவு முழுக்க கானா நடைபெறும் (தற்பொழுது நடைபெறவில்லை). இவ்விடத்திற்கு இந்து முஸ்லீம், கிறித்தவர் போன்ற மதங்கடந்த மக்கள் திறள் வந்து செல்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினருக்கு சொந்தமாகக் கருதப்பட்டு வந்த பாடல் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளின் மூலம் வெகு சனங்களிடம் சென்றடைந்து, ஊடகத்தில் ஊடுருவின. அடித்தள மக்களின் பண்பாட்டுக் கூறுகள், இழிவான தன்மை கொண்டதாகக் கருதப்பட்டு வந்தன. சமீப காலத்தில் இவர்களின் வாழ்க்கைமுறை, மொழி காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர்களின் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்றான கானாப் பாடலும் காட்சியோடு பாடப்பட்டன. 1960-70களில் சென்னை நகரக் குடிசைவாழ் மற்றும் சாலையோர மக்களின் சொற்கள் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டாலும் (சுராங்கனி சுராங்கனி), ஜெயபாரதியின் ‘குடிசை’ (1979) படத்தில்தான் கானாப்பாடலை, கானாப்பாடகர்கள் பாடியுள்ளனர். அடுத்து ‘அமரன்’ (1992) படத்தில் காண லாம். இவ்வாறு பல படங்களில் கானாப் பாடல் தாக்கம் காணப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த ‘குத்து’, ‘சச்சின்’ போன்ற படங்களிலும் கானாப்பாடலை அவதானிக்க முடிகிறது. திரை இசைக் காட்சியில் காட்டப்படுவது கானாப் பாடலா? என்கிற இயல்பான விழுமியஞ் சார்ந்த கேள்வி எழலாம். அடித்தள மக்களின் உணர்ச்சி வெளிப் பாட்டுடன் சொற்கட்டுகள் கொண்டு கட்டி அமைப்பதே கானாப் பாடலாகும். ஆனால் திரை ஊடகத்தில் பெண்ணுடலை அரைகுறையாடைகளுடன் வெகு சனம் அரு வெருக்கத்தக்க சொற்களைப் பயன்படுத்தி திரையிடப்படுகின்றன. இதனைப் பார்ப்பவர்கள் (மேல் சாதி எண்ணங்கொண்டவர்கள்) இழிசன மொழி என நினைக்கின்றார்கள். இவ்வாறு நினைப்பது மட்டுமில்லாது இச்சிந்தனையை மற்றவர்களிடமும் பரப்பும் தன்மையைக் காணலாம். பரப்புவதைத் தடை பண்ண வேண்டுமென்றால் ‘கானா’ என்னும் பாட்டிசையை பின்புலப் புரிதலோடும், மானிடவியல் மற்றும் சமூகவியல் புரிதலோடும் அறிதல் வேண்டும்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com