Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Koottanchoru
Kottanchoru Logo
அக்டோபர் 2005 - மார்ச் 2006

ஹெரால்ட் பிண்டர்: யுத்த எதிர்ப்பாளருக்கு நோபல் பரிசு

எழுத்தாளனுக்கு எதற்கு அரசியல் என்று வினா எழுப்பும் நிலை இப்போதும் நீடிக்கிறது. அரசியலில் ஈடுபட்டு ஒரு கோட்பாட்டுச் சட்டத்துக்குள் வந்து விட்டால் கருத்து சுதந்திரம் பறிபோய் விடும் என்று சொல்லிக் கொண்டு பறந்து சென்று ரெக்கை ஒடிந்து விழுந்தவர்களும் உண்டு.

harold pinter ஆனால் அரை நூற்றாண்டு காலமாய் யுத்த எதிர்ப்பு, மனித நேயம், எகாதிபத்திய எதிர்ப்பு என்கிற உலகப் பொதுமையான அரசியல் கோட்பாட்டில் நின்று கொண்டு தொய்வின்றி இயங்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒரு இலக்கியவாதி.

தன்னிடம் உள்ள ராணுவ வல்லாண்மையைக் கொண்டு இளைத்தவர்களைத் தாக்கி அழிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை அவர் சமரசமின்றி சாடுகிறார். அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷையும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரையும் யுத்தக் குற்றவாளிகளாக்கி விசாரிக்க வேண்டும் என்று சொல்கிற நெஞ்சழுத்தம் கொண்டவர் அவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போதும் நாம் சோம்ஸ்கியையும், ஆர்தர் மில்லரையும் அமெரிக்க மக்களின் மனசாட்சிகள் என்று அடையாளம் காட்டுகிறார். தனது கருத்துக்களைத் திரித்தும் தவறாகவும் வெளியிடும் பிரிட்டிஷ் நாளேடுகளான ‘தி இன்டி பென்டன்ட்’, ‘தி கார்டியன்’ ஆகிய ஏடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ‘என் வாயை எந்த சக்தியாலும் அடைக்க முடியாது’ என உறுதியாகச் சொல்கிறார்.

கருத்தில் தெளிவு, சொல்லில் உறுதி, செயலில் நேர்மை என்ற உயரிய பண்புகள் தொடர்வதால் பாராட்டுக்கள் இவரைத் தேடி வருகின்றன. 1957ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய இவருக்கு 1962ம் ஆண்டிலிருந்தே பரிசுகள் குவியத் தொடங்கின. இதற்கெல்லாம் உச்சமாக சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை இவர் பெற்றிருக்கிறார். இவர்தான் ஹெரால்ட் பிண்டர்.

லண்டனின் கீழ்க் கோடியில் உள்ள ஹாக்னியில் 1930ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தையல் தொழிலாளர் ஒருவரின் மகனாகப் பிறந்தார் ஹெரால்ட் பிண்டர். இவரின் பெற்றோர்கள் இருவரும் யூதர்கள். அப்பா மிகவும் கண்டிப்பானவர் என்பதால், அம்மாவின் செல்லமாகவே வளர்ந்தார். இவரது இளம் வயதில் இரண்டாம் உலகப்போர் வெடித்ததால் ஹாக்னியிலிருந்து வெளியேறி கார்ன்வால் என்ற இடத்துக்குக் குடும்பமே சென்றது. ‘‘அப்போது பொழிந்த குண்டு மழையின் சோகம் என்னை விட்டு அகலவே இல்லை” என்று பிற்காலத்தில் அவர் நினைவு கூர்ந்தார். ஆழமாய்ப் பதிந்துபோன இந்த எண்ணங்களே அவரை மிகத் தீவிர யுத்த எதிர்ப்பாளராக ஆக்கியது போலும்!

பிண்டர் தனது பள்ளிப் பருவத்தில் ஆங்கில இலக்கியத்தில் குறிப்பாகக் கவிதைத்துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஃப்ரான்ஸ் காஃப்கா, எர்னஸ்ட் ஹெமிங்வே ஆகியோரின் நூல்களையும் படித்தார்.

பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும் என்பதை ஏற்க மறுத்ததால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அந்த நீதிபதி இரக்க குணம் கொண்டவர் என்பதால் அபராதம் விதித்ததோடு விட்டு விட்டார். இந்த அனுபவம் இவருக்கு 1949 இல் ஏற்பட்டது.

1950 ஆம் ஆண்டு ‘கவிதை’ இதழில் இவரது கவிதைகள் வெளிவந்தன. ஹெரொல்ட் பிண்டா என்ற பெயரில் இவர் கவிதைகள் எழுதினார். பிபிசி வானொலியில் பகுதிநேர நடிகராகவும் வேலை செய்தார். நாடகப்பள்ளியில் பயின்று 1951, 1952 ஆகிய ஆண்டுகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்தும் குழுவுடன் அயர்லாந்தில் பயணம் செய்தார்.

பல்வேறு நாடகக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றிய நான்கு ஆண்டு அனுபவத்துக்குப்பின் 1957ஆம் ஆண்டு “தி ரூம்” என்ற நாடகத்தை இவரே பிரிஸ்டன் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைக்காக எழுதினார். நான்கே நாட்களில் இதனை அவர் எழுதி முடித்தார் என்பது இதன் சிறப்பம்சம். பிபிசி வானொலியில் நடித்துக் கொண்டிருந்த இவர் 1959ஆம் ஆண்டில் முதலாவதாக ‘ ஏ ஸ்லைட் ஏக்’ என்ற வானொலி நாடகத்தை எழுதினார். இப்படியாக இவர் 29 மேடை நாடகங் களையும் இதே எண்ணிக் கையிலான வானொலி நாடகங்களையும் எழுதிக்குவித்தார்.

நாடகத் துறையில் நாட்டம் கொண்ட இவருக்கு விவியன் மெர்ச்சென்ட் என்ற நடிகையே வாழ்க்கைத் துணைவியானார். 1980ஆம் ஆண்டு இவர் விவியனை விவாகரத்து செய்தார். பின்னர் அன்டோனியா ஃபிரேசரைத் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து காரணமாக எழுத்தாளரும், இசையமைப்பாளருமான தனது மகன் டேனியலை, பிண்டர் பிரிய நேர்ந்தது.

இப்படி நாடக இலக்கியத்துறையில் ஏற்றம் கொண்டிருந்த பிண்டர் இன்று புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இவருக்குப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பிறகும் இவரது படைப்புத் பணி நிற்கவில்லை. 2002ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த கொடூரத்தை ‘போர்' என்ற கவிதைத் தொகுப்பில் பதிவு செய்தார்.

ஈராக் மீது போர் தொடுத்ததற்கு எதிராக உலகம் தழுவிய விவாதம் ஒன்று 2002 நவம்பரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிண்டர் கூறியது அனைத்து மக்களையும் கவர்ந்தது. “புஷ் சொன்னார்: “உலகத்தின் மோசமான ஆயுதங்கள் உலகத்தின் மோசமான தலைவர்களின் கைகளில் இருக்க நாம் அனுமதிக்க முடியாது” நான் சொல்கிறேன்: “இது மிகவும் சரியானது. ஒரு முறை கண்ணாடி முன் நின்று பாருங்கள்; அது நீங்கள்தான்”

harold pinter ஈராக் மீதான யுத்தம் பற்றி இவர் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றும் மிகவும் பிரபலமானது. “நமது (பிரிட்டிஷ்) நாட்டுப் பிரதமர் ஒரு சிறந்த கிருஸ்துவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் ஈராக் மீது குண்டு பொழிந்து-திட்டமிட்டு-ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்கிறார். இப்படி நான் சொல்லக் காரணம் இவர்கள் போடும் குண்டுகள் சதாம் உசேனைக் கொல்லப் போவதில்லை. அவர் தப்பித்துக் கொள்ள அவருக்கே உரித்தான பல வழிகள் இருக்கும். இவர்கள் கொல்லப் போவது ஏதுமறியாத மக்களைத்தானே” என்ற இவரது வாதம் சாதாரண மக்களையும் கவர்ந்தது; சிந்திக்க வைத்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும் அந்நாட்டு மக்களிடம் அவர் நேசம் வைத்திருந்தார். ஆனால் அமெரிக்கர்கள் ஒருவேளை தன்னை வெறுப்பார்களோ என்ற ஐயமும் அவருக்கு இருந்தது. இது பற்றி ஒரு சம்பவத்தையும் இவர் தனது பேட்டியில் நினைவு கூர்கிறார் “ 1986 ஆம் ஆண்டு நான் நிகரகுவாவில் இருந்தேன். பிறகு அங்கிருந்து திரும்பி வரும் போது மியாமியில் ஒரு நாள் இரவு தங்க வேண்டியதாயிற்று. இங்குள்ள விமான நிலையத்தில் பாஸ்போர்ட், இமிகிரேஷன் கவுண்டரில் ஒரு பருமனான அமெரிக்கப் பெண் அமர்ந்திருந்தார். இவரை அணுகும் போது “நிகர குவாவில் என்ன செய்தீர்கள்" என்று கேட்பார். “உங்கள் வேலையை பாருங்கள்” என்று பதில் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அவரது மேசையருகே சென்ற போது பாஸ்போர்ட்டைப் பார்த்த அந்தப் பெண் “ நீங்கள்தான் ஹெரால்ட் பிண்டரா?” என்றார். திகைத்துப் போன நான் “ஆமாம்” என்றேன். “அமெரிக்கா உங்களை வரவேற்கிறது” என்றார் அந்தப் பெண். இது அமெரிக்காவின் இன்னொரு பக்கம் என்று தெரிந்து கொண்டேன்.

1973 ஆம் ஆண்டு சிலி நாட்டில் அலெண்டே சுட்டுக் கொல்லப்பட்ட பின் மனித உரிமைகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தினார். செர்பியாவின் ஸ்லோபதான் மிலோசெவிச் ஐநா நடுவர் மன்றத்தால் கைது செய்யப்பட்ட போது அதற்குத் தூண்டுதலாக இருந்த நாடோ (NATO)வை எதிர்த்துக் குரல் கொடுத்தார். குற்றவாளிகளின் நீதி மன்றத்திற்கு இன்னொரு குற்றவாளியை விசாரிக்க அருகதை இல்லையென்று முழங்கினார். இது வெறும் முழக்கமாக நிற்காமல் 2001ஆம் ஆண்டு மிலோசெவிச் பாதுகாப்புக்கான சர்வதேசக் குழுவிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.

புற்று நோய் பாதிப்பு காரணமாகவே ஹெரால்ட் பிண்டர் நோபல் பரிசைப் பெற்றுக் கொள்ள நேரில் செல்லவில்லை. தனக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான நோயையும் அவர் லகுவாக எடுத்துக் கொண்டு நகைச் சுவையுடன் பேசுவார்

“எனது கட்டியின் மரணத்தை
நான் காண்பது அவசியம்
அந்தக் கட்டியோ
மரணிக்க மறந்து விட்டது
ஆனால் அதற்குப் பதிலாக
என்னைக் கொல்ல திட்டமிடுகிறது”

என்று நோயின் தன்மையையே கவிதையாக்கினார். இப்படி நோய்வரும் போது உங்களுக்கு புத்திசாலித்தமான மருத்துவரும் புத்திசாலித்தனமான மனைவியும் கிடைக்க வேண்டும். நல்ல வேளையாக எனக்கு இருவருமே இப்படி அமைந்துவிட்டார்கள் என்று கூறி சிரிக்கிறார் பிண்டர்.

மக்களுக்குப் போரால் மரணம் நேரக் கூடாது என்று ஆண்டுகள் பலவாய் குரல் கொடுக்கும் 75 வயதான ஹெரால்ட் பிண்டர் தற்போது மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார். 'மரணம்' என்ற தலைப்பில் கவிதையையும் சென்ற ஆண்டு எழுதியிருக்கும் இவர், இலக்கியம் படைப்பதை நிறுத்திக் கொள்வதாக 2005 பிப்ரவரியில் ஒரு பேட்டியில் அறிவித்தார். "29 நாடகங்கள் எழுதியிருக்கிறேன். போதாதா?" என்பது இவரின் கேள்வி. இதற்குப் பொருள் ஓய்வோ மரண பயமோ அல்ல. இனிமேல் தனது ஆற்றலை அரசியலுக்குப் பயன்படுத்தப் போவதாக அவர் அறிவித்தார். இது ஒரு இலக்கியவாதியின் அரசியல் பிரவேசம் அல்ல; வலுத்தவர்கள் இளைத்தவர்களை எப்போதும் நசுக்கிக் கொண்டே இருப்பதைக் கண்டதால் ஏற்படும் ஆவேசம்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com