Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Koottanchoru
Kottanchoru Logo
ஜூலை 2005

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களும் ஏதுமறியா பாமரர்களும்

ஆதவன் தீட்சண்யா

தமது படைப்புகளுக்காக கடும் கண்டனங்களையும் தீவாந்திர தண்டனைகளையும் பட்வாக்களையும் எதிர்கொள்ள நேரிட்ட படைப்பாளிகள் உலகெங்கும் காத்திரமாய் காலந்தோறும் இயங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். தனது சொந்த சமூகத்தில் புரையோடிருக்கும் பழமைவாதத்தையும் போலித்தனங்களையும் அதிகாரவெறியையும் ஒடுக்குமுறைகளையும் படைப்பின் வழியே அம்பலப்படுத்துவதனாலேயே அவர்கள் அப்படியான தாக்குதல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அவர்களது ஓவியங்கள் சூறையாடப்பட்டுள்ளன. புத்தகங்கள் கொளுத்தப் பட்டுள்ளன. கட்டற்ற வன்முறையின் மூலம் படப்பிடிப்புகள் திரையிடல்கள் தடைபட்டுள்ளன. நாடகமேடையிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரூபமாக, பெயரளவில் அல்லது மறுக்கப்பட்டிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நடைமுறையில் உணரவும் உணர்த்தவும் முயற்சிக்கிற படைப்பாளி அதன் பொருட்டு தனக்கேற்படும் இழப்புகளையும் தாக்குதல்களையும் உவப்போடு ஏற்றுக்கொள்கிறான். தொடர்ந்து படைப்புரீதியாக கலகக்குரலோடு இயங்குகிறான். எனவேதான் அப்படியானவர்களின் சர்ச்சைக்குரிய படைப்புகளை தேடிப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறது உலகம். ஆனால் இப்படியான தகுதியாம் சங்கள் எதுவுமில்லாத ஒரு பாடாவதி கதையை எழுதி சர்ச்சைக்குள்ளாகி மாபெரும் கலகவாதியாகப் பிரபலமடையத் துடிக்கிறார் சுந்தரராமசாமி.

Woman உண்மையிலேயே சுந்தரராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ கதை அதன் தரத்திற்கும் இருப்பிற்கும் மீறிய பிரபல்யத்தை அதற்கெதிரான கண்டனங்களின் வழியே அடைந்துவிட்டது என்பது சகித்துக்கொள்ள முடியாத விசயமே. இப்படியொரு மலிவான உத்தியை அவரும் காலச்சுவடினரும் விரும்பியே மேற்கொண்டார் களா என்று குற்றப்படுத்த நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. ஆனால் அந்தக் கதை எல்லாவற்றுக்குமான சான்றாதாரமாய் இருக்கிறது. எந்தப் பார்வையும் போர்வையும் இல்லாமலே ஒரு எளிய வாசிப்பின் மூலம் அதன் உள்ளுறை பொக்கைகளையும் பொருக்குகளையும் எவரொருவரும் அறியக்கூடும்.

கதை வெளியானதுமே பாமா உள்ளிட்ட தலித் எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். தலித்திய பெண்ணிய நோக்கிலான வாசிப்பில் கண்டனத்தைப் பெறுமளவுக்கு கதையில் கோளாறிருப்பதை அப்போதேனும் சுந்தரராமசாமி உணர்ந்திருப்பாரேயானால், கதாசிரியன் என்ற பொறுப்பிலிருந்து வருத்தம் தெரிவித்திருக்கலாம். அல்லது உண்மையில் தான் சொல்ல வந்தது எதுவென்பதையாவது விளக்கியிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட பண்பான நடவடிக்கை எதுவும் அவரிடமிருந்து வெளிப்படவில்லை.

படைப்பாளிகளின் கண்டனவுரைகளும் (தலித்முரசு) பதிவுகளும் இணைய இதழில் வெளியான ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரைக்கு ஆதரவாக யமுனா ராஜேந்திரன் மற்றும் புதிய மாதவி ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் தீராநதியில் சாருநிவேதிதா, செம்மலரில் மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோரது கட்டுரைகளும் நுட்பமான பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் பொறுப்பான பதிலளிக்காமல் தலித்களிடமிருந்தும் தலித்திய ஆதரவாளர்களிடமிருந்தும் வரும் எதிர்ப்பை தானே நேரடியாக எதிர்கொள்ளாமல் ஒரு தலித்தை (ரவிக்குமார்) வைத்தே முறியடிக்கும் காலச்சுவடின் இந்த குயுக்தியான தந்திரம் ஒன்றே போதும், அதன் பிராமணியத் தன்மையை நிரூபிக்க.

கதையின் ஆதரவாளர்களான ரவிக்குமார், அ.ராமசாமி, ஆர்.பி.ராஜநாயகம், முனைவர் பஞ்சாங்கம் (பஞ்சு சார், கட்டுரைத் தொகுப்பு எப்போ வருது?) ஆகியோரும், எதிர்வினையாற்றிய ஜெயமோகன், கவிதாசரண் ஆகியோரும் தாயம்மா ஒரு தலித் பெண்ணல்ல, அவள் நாடார் பெண் என்று சொல்வதற்கு அடிப்படை ஏதுமில்லை. எனில், நாடார் பெண்ணென்றால் கேவலப்படுத்தலாமா என்றொரு கேள்வி எழுமானால் அப்போது கதையின் ஆதரவாளர்கள் இன்னும் என்னென்ன அபத்தங்களை முன்வைப்பார்களோ தெரியவில்லை. ஒருவேளை நாடார் பெண்ணென்றால் இழிவுபடுத்தலாம் என்றும்கூட இவர்கள் வாதிடக்கூடும். எல்லாச் சாதியைச் சார்ந்த பெண்களும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் தலித்களாகத்தான் சிறுமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற குறைந்தபட்ச அரசியல் பிரக்ஞையைக் கூட கைவிட்டுவிட்டு தலித் என்பதை வெறுமனே சாதிச்சான்றிதழோடு தொடர்புடைய விசயமாக குறுக்கிப் பார்க்குமளவுக்கு சுந்தரராமசாமியின் வாசிப்படிமைகளுக்கு கண்களில் புரையேறி மறைக்கிறது.

கதையின் ஆதரவாளர்கள் தங்களது வெல்லற்கரிய வியாக்கியானங்களின் மூலம் இக்கதையின் மகோன்ன தத்தை நம்புமாறு வாசகனைக் கெஞ்சியலைகின்றனர். ஆனால் கதை அதற்கு நேரெதிராய் இருக்கிறது. ஆனாலும் எழுதியவர் சு.ரா. என்பதால் வலிந்து புனையும் முட்டுத்தாங்கிகளாய் மாறி புகழ்கின்றனர். அம்மணமாய் பவனி வந்த அரசனொருவனைப் பார்த்து அவனது ஆடையலங்காரம் மிகப் பிரமாதம் என்று போற்றிப் புகழ்ந்த அரண்மனை விசுவாசிகளை நினைவூட்டுகின்றனர். பேருந்தில் ஏறி மட்டமான தயாரிப்புகளை விற்பவனின் கூட்டாளிகள் பயணிகளோடு கலந்து நின்று விரலை உயர்த்தி சரக்கின் மதிப்பைக் கூட்டுகிற மோசடித்தனத்தோடு இதை ஒப்பிடலாம்.

ஒரு பிரதியை அப்படி வாசிக்க வேண்டும்... இப்படி வாசிக்க வேண்டும்..... கட்டுடைக்கவேண்டும்... கபாலத்தை பிளக்க வேண்டும் என்றெல்லாம் இதுவரை வாசகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச ஆலோசனைகளை சௌகரியமாக மறந்துவிட்டு ப்ளெய்ன் ரீடிங் என்பது பற்றியெல்லாம் பேசத்தொடங்கியுள்ளனர். மற்றவருடையதைக் கட்டுடைப்பது இவர்களுடையதை பொத்திப் படிப்பது... ஆஹா என்னே இவர்களது கோட்பாடு! பிறத்தியார் எழுதினால் பீறிடும் கோபம், சு.ரா. எழுத்தென்றதும் 'சும்மா கிட சவமே' என்று எல்லோரையும் அதட்டி அடங்கிவிடுவது ஏன்? தமிழ்நாட்டிலிருந்து கடத்திக் செல்லப்பட்டு சிங்கப்பூர், மலேயா, பினாங்கு பகுதிகளில் கொத்தடிமைகளான தலித்களின் வரலாற்றை நெஞ்சம் பதற பேசும் இளங்கோவனின் 'ஊடாடி' நாடகப் பிரதியில் பறையன் என்கிற வார்த்தை இருப்பதனாலேயே, அதை வெளியிட்டால் கலவரம் பண்ணுவோம் என்று கர்ஜித்து முடக்கியவர்கள், மிக வெளிப்படையாக ஒரு தலித் பெண்ணை அவமதிப்பதையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட கதையை உன்னதம் என்று உச்சியேற்றிக் கொண்டாடுகின்றனர்.

தான் எழுதியதெல்லாம் எழுத்து, அதை எதிர்க்கும் உரிமை யாருக்குமில்லை என்கிற சுந்தரராமசாமியின் - காலச்சுவட்டின் இறுமாப்பை இக்கதை மீதான எதிர்வினைகள் சிதைத்துள்ளன. அனேகமாக படைப்பாளிகள் வாசகர்களில் பெரும்பாலோர் இக்கதையின் மீது எழுப்பப்பட்டுள்ள கேள்விகளை அக்கறையோடு விவாதித்தனர். இணைய இதழ்களில் விவாதம் நடைபெற்றதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் அவர்கள் இதுவரை காட்டிவந்த பிம்பங்கள் நொறுங்கியுள்ளன. நடுநிலையாளர்கள் என்று தம்மைத்தாமே நம்பிக்கொண்டு பஞ்சாயத்து பேசியவர்களின் சார்புநிலைகள் கூட அம்பலமாகியுள்ளன. ஏன் இந்தாள் இவ்வளவு மோசமாகிவிட்டார்.... அவர்களிடம் இவ்வளவு விசுவாசம் கொண்டிருப்பதற்கு பகிரங்கப்படுத்திக் கொள்ள முடியாத ரகசியக் காரணங்கள் இருக்கக்கூடும் என்று சிலரைப்பற்றி மதிப்பீடுகளை மறுவரையறை செய்து கொள்ளவும் கூட இப்போது வாய்ப்பேற்பட்டுள்ளது.

உயர்சாதி நலனில் அக்கறையும் பிறமதங்களின் மீது துவேஷமும் பெண்ணிய ஒடுக்குமுறையில் நாட்டமும் கொண்ட இந்துத்வ கட்சியென்று தன்னை யாரும் குற்றம்சாட்டினால் மறுப்பதற்காக பங்காரு லட்சுமணன், முகம்மது அப்பாஸ் நக்வி, சுஷ்மா சுவராஜ் என்று பா.ஜ.க வைத்திருப்பதை போலவே காலச்சுவடும் சில சாம்பிள்களை கைவசம் வைத்திருப்பதன் கபட ஒப்புமை குறித்தும்கூட இப்போது பகடிகள் உலா வரத் தொடங்கியுள்ளன. தம்மை விமர்சிக்கும் இலக்கியவாதிகள் விமர்சகர்கள் பத்திரிகைகள் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுத்தடிப்பதன் மூலம் மன உளைச்சலையும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப் போகும் மனநிலையையும் உருவாக்கி பணியவைக்கத் துடிக்கின்ற காலச்சுவடின் கோர்ட் கலாச்சாரம் பற்றிய விமர்சனங்களும் கூட இக்காலத்தில் வெளிப்பட்டுள்ளன. இவர்களால் அவமதிக்கப்பட்டவர்களெல்லாம் வழக்குத் தொடுத்தார்களென்றால் ஆயுள் பரியந்தம் வக்காலத்தில் கையெழுத்துப் போடவும் வாய்தாவுக்கு அலையவும்தான் நேரமிருக்கும். பத்திரிகை, துணிக்கடை, புத்தகக்கடை, பதிப்பகம், அற்றைத்திங்கள் என்று எதையும் நடத்தமுடியாது. ஆனால் அவர்களைப்போன்ற கீழான வன்மம் நிறைந்த மனநிலை தமிழ்நாட்டில் மற்றெவருக்கும் வாய்க்காத நற்பேறு நீடிக்கிறது.

இந்துத்வ எதிர்ப்பு, சாதியொழிப்பு, நிலவுரிமைப் பிரச்சனைகளில் இணைந்து களமிறங்க வேண்டிய தலித், இடதுசாரி, பெரியாரிய இயக்கங்களுக்குள் ஒரு மோதல் போக்கை தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலம் சமூக மாற்றத்திற்கான கருத்தியல் ஒத்திசைவு கொண்டதொரு இயல்பான அணிசேர்க்கை நடைபெறாமல் தடுப்பதில் காலச்சுவடு கவனமாக செயல்படுகிறது. மாற்றுக் கருத்துள்ளவர்களோடும் உரையாடி மனங்களை வெல்ல வேண்டும் என்கிற காலத்தின் தேவையை பகையால் நிரப்பி திசைமாற்றும் அதன் தந்திரங்களை புரிந்துகொள்வதும் கூட கைக்கொள்ள வேண்டிய அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியே.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com