Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo


சூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும்

நா. மம்மது

சமய வரலாறு

“சமயங்களின் வரலாறு எல்லாம், ஒரு கோணத்திலிருந்து பார்த்தால், புரோகிதர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் வரலாறே” என பிரித்தானிய மார்க்சியரான ஜான்லூயி குறிப்பிடுகிறார்.1

சமயத் தலைவர்கள் யாவரும் அவர்கள் காலத்தில் நிலவிய சமயத்தை எதிர்த்த கலகக்காரர்களே.

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். முகமது நபி, தாயூப் என்ற ஊரில் கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதிருந்த சமயக் கொள்கைகளையும் ஆதிக்கத்தையும் எதிர்த்த கலகத்திற்கான தண்டனைகளே இவை.

சமயத் தலைவர்களின் காலத்திற்குப்பின் அவர்கள் நிறுவிய சமயங்களும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமயப் படுகின்றன. புதிய கலகக்காரர்கள் தோன்றுகிறார்கள். நிறுவன இசுலாம் மன்சூர் ஹல்லாஜ் என்ற பெரும் சூஃபியப் பிரிவுத் தலைவரை இவ்வாரே படுகொலை செய்கிறது.

வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் சித்தர்கள், சூஃபிகள், மறை ஞானிகள் (Mystics) என நிறுவனச் சமயங்களை எதிர்த்த கலகக் குரல்கள் தோன்றிய வண்ணமாகவே சமய வரலாறு தொடர்ந்து வருகின்றது.

இரட்டைச் சமயங்கள்

நிறுவன மயமான மதங்கள் யாவும் இரட்டைச் சமயங்களாகவே இயங்கி வருகின்றன. ஒரே காலத்திலும் கூட மதங்களின் கொள்கைகளை அப்படியே கடைப்பிடிக்கும் மேட்டுக்குடிச் சமய மரபும், சற்று நெகிழ்ந்த தன்மையுடன் அச்சமயத்தை ஏற்று வாழும் பொதுமக்கள் சமய மரபும் என இரட்டைச் சமயமாகவே பெரும் சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வைதிக இந்து சமயம் மற்றும் பொதுமக்கள் இந்துசமயம் (Popular Hinduism) என்ற சொல்லாடல்கள் பொருள் பொதிந்தவை.

தமிழகத்தில் சித்தர் மரபும், வடநாட்டில் பல்வேறு ‘பந்தி’ மரபுகளும், கிறித்துவத்தின் மறைஞான மரபும், இசுலாத்தின் சூஃபிய மரபும் இவ்வாறுதான் தோற்றம் பெற்று இரண்டுவித சமய மரபுகள் சேர்ந்தே இயங்கி வருகின்றன.

இறைஞான சுதந்திரச் சிந்தனையாளர்கள் (spiritual free masonry) எல்லாக் காலங்களிலும் அனைத்துச் சமயங்களிலும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். கிறித்துவத்தின் பிரான்சிஸ் அஸிஸி இதற்கான சிறந்த சான்றாவார்.

முகமது நபிகளாரின் காலத்திலேயே "உவைஸ்” என்ற சூஃபி ஆசான் வாழ்ந்திருக்கிறார்.2 திண்ணைத் தோழர்கள் என்றழைக்கப்பட்ட நபிகளாரின் சம காலத்தவர்கள் சூஃபியர்களே.

இசுலாமியச் சூஃபிய மரபு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டு கி.பி. 12ஆம் நூற்றாண்டில் உச்சத்தை அடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டாலும், சூஃபியச் சிந்தனையாளர்கள் (சுதந்திரச் சிந்தனையாளர்கள்) எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

சூஃபி என்ற சொல்லாட்சி

இசுலாமிய மரபில் "சூஃபி” என்ற சொல்லாட்சியின் தோற்றம் குறித்து ஆய்வாளர்கள் பலவிதமாகக் கூறுகின்றனர்.

1) முகமது நபிகளாரே, அவருடைய காலகட்டத்தில் அரபிய, குறைசிகுல, காபாவிலுள்ள இறைவணக்க மேலாண்மையை எதிர்த்தவராக அடையாளம் கொள்கிறார். எனவே ஒவ்வொரு சூஃபியும் முகமது நபியைத் தமது முதல் குருவாக வரித்துக் கொள்கிறார். நபிகளார் கம்பளி ஆடையை விருப்பமுடன் அணியும் வழக்கமுள்ளவர். எனவே சூஃபியரும் கம்பளி ஆடை அணியும் வழக்த்தைப் பின்பற்றத் தொடங்கினர். அரபு மொழியில் "சூஃபி” என்றால் கம்பளி என்று பொருள். எனவே இச்சொல்லிலிருந்து "சூஃபி” என்ற சொல்லாட்சி வந்ததாகச் சில ஆய்வாளர் கூறுகின்றனர்.

2) "சஃபா” என்றால் வரிசை. ஒவ்வொரு சூஃபியும் தான் பின்பற்ற வேண்டிய ஆன்மீகப் படிநிலை வரிசைகளைக் கடைப்பிடிக்கின்றனர். எனவே இந்த "சஃபா” என்ற சொல் சூஃபி என்ற சொல்லிற்கு மூலமானது என்று சிலர் கருதுகின்றனர்.

3) நபிகளாரின் காலத்தில், மக்காவிலுள்ள பெரிய பள்ளியான "காபா”வின் திண்ணையிலும், நபிகளார் போன்ற பெரியோர்களின் வீட்டுத் திண்ணையிலும் தங்கி வாழ்ந்த ஒருவகைத் துறவிகளை "அஸ்காபுஸ் சஃபா” என்று அழைத்து வந்துள்ளனர். இச்சொல்லிலிருந்து, சூஃபி என்ற சொல் தோற்றம் கொண்டதாகச் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

4) "சஃபூ” என்ற அரபியச் சொல்லுக்குத் "தூய்மை” என்பது பொருள். இதுவே சூஃபி என்பதின் மூலமாகவும் கொள்ளப்படுகிறது.

5) மக்காவின் பெரிய பள்ளியான காபாவின் பணியாளர்கள், "பணுசூஃபா” என்றழைக்கப்பட்டுள்ளனர். இச்சொல்லே "சூஃபி” யின் முதல் சொல் என்ற கருத்தும் உள்ளது.

6) "சோஃபியா” என்ற கிரேக்கச் சொல்லிற்கு "அறிவு” என்று பொருள். (Philo sophy = அனைத்து அறிவு). இந்த கிரேக்கச் சொல்லில் இருந்தே அறிவாளர் - சிந்தனையாளர் என்று பொருள்படும் சூஃபி என்ற சொல் வந்ததாக ஆய்வாளர் சிலர் கருத்துரைக்கின்றனர்.

7) "தஸ் உப்” என்ற சொல்லில் இருந்தும் சூஃபி என்ற சொல்லாட்சி ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. தஸ் உப் என்ற சொல்லின் அரபியக் குறியீடான ‘TSVF’ என்பதைக் கீழ்க்கண்டாறு விரித்து உரைக்கின்றனர்.

T - TARK - துறவு
S - SABF - பொறுமை
SABA - தூய்மை
V - VAD - அன்பு
F - FANA - தனிமை
FARD - நிர்மூலம்

சூஃபி என்ற சொல்வரலாறு எப்படி இருப்பினும் அதன் அடையாள மூலங்களை இச்சொல்லாட்சி ஒருவாறு நமக்கு உணர்த்துகின்றது.

சூஃபி அடையாளம் / நெறி

துறவு, பற்றற்ற தன்மை, உடைமை இன்மை, பயணம், மருத்துவம், இசை, சமய நல்லிணக்கம், நாயகிபாவம், பரிபாஷை, யோகம், படைப்பு அவதார நம்பிக்கை என சூஃபியரின் அடையாளங்கள் பற்பல தளங்களில் இயங்குபவை.

1) துறவு: ஒருவித துறவு சூஃபியரின் இயல்பூக்கமாகியுள்ளது. சூஃபியரின் பற்றற்ற தன்மை, தன்னல மறுப்பு, உடைமை இன்மை (non possessiveness) அன்னாரின் வாழ்முறையாகிறது.

சூஃபியரின் துறவு "இல்லறத் துறவு” என்ற சிறிய கூண்டிற்குள் அடைபடுவதல்ல. தனக்கான ஆசைகளைத் துறத்தல், பொருள் மயமான வாழ்வின் மீதான பற்று நீக்கம் என்றெல்லாம் பரந்து விரிந்த பொருள் கொண்டது சூஃபியரின் துறவு. இத் துறவுநிலையே சூஃபியரின் இறைப் பயணத்திற்கான விடுதலையை ஒவ்வொரு சூஃபிக்கும் அளிக்கின்றது.

2) மருத்துவம்: உலகில் சாதி, சமயம், நாடு, மொழி என்ற மானிட எல்லைகளைக் கடந்தது மருத்துவம். இந்த எல்லைகளை யெல்லாம் கடந்தவன் சூஃபி. அத்துடன் அவன் சமூக நலத்தை நாடும் ஏழைகளின் நண்பன். எனவே மருத்துவத்தை சூஃபியர் அடையாளமாகக் கைகொள்கின்றனர். உடல் மருத்துவம், ஏன் உள்ள மருத்துவமும் கூட சூஃபியரின் அடையாளமாகிறது. தமிழர் மருத்துவம் சித்த மருத்துவம் என்றே அழைக்கப்படுகிறது.

மருத்துவத்தை ஒரு சேவையாகவே சூஃபியர் மேற்கொள்கின்றனர். ஒரு சூஃபி மருத்துவன் தன்னுடைய மருத்துவச் சேவைக்காக ஒரு கைப்பிடி தானியத்திற்கு மேல் பெறக்கூடாது என்பதை சூஃபியர் பொது வரையறையாகக் கொள்கின்றனர்.

3) பயணம்: "சித்தர் போக்கு சிவன் போக்கு” என்று ஒரு பழமொழி உண்டு. சிவனை நாம் பித்தன் என்று கூறுவது மரபு. இப்பழமொழியில் சிவன் போக்கு என்பது பித்துப்பிடித்த பைத்தியக்காரனின் போக்கு. அதாவது சித்தப்பிரமை பிடித்தவனின் பயணம் போன்றது என்று பொருள்.

பயணம் எந்த ஒரு சாதாரண மனிதனையும் கூடப் புடம் போட்டுவிடும் வல்லமை கொண்டது. பயணத்தின் புதிய இடம், புதிய பண்பாடு, புதிய வடிவங்கள், புதிய மனிதர், புதிய அனுபவம் என்று பல புதுமைகளைச் சந்தித்து மானிடர் புதிய சிந்தனைத் தளத்திற்குச் செல்கின்றனர்.

ஒரு சூஃபியின் பயணம் இரண்டு தளங்களில் இயங்குகிறது. அது உடல் பயணமாகவும் (physical travel) ஞானப் பயணமாகவும் (mystic travel) அமைகின்றது.

ஒரு பயணாளி, பயணித்து தனது இலக்கான சேர வேண்டிய இடத்தை அடைவதுபோல ஒரு சூஃபியானவன் தனது ஞானப் பயணத்தால் சூஃபியப் படிநிலை ஞானத்தை அடைகின்றான்.

பல்வேறு இடங்களுக்கான, பல்லாண்டுப் பயணம் சித்தார்த்தரைப் புத்தராக்கியது. போதி மரத்தடியில் புத்தர், நிர்வாணம் (ஞானம்) அடைந்ததாகச் சொல்வது ஒரு குறியீட்டு விளக்கம் மட்டுமே. மக்காவிலிருந்து ஷாம் (சிரியா) நாட்டிற்கு நபிகள் நாயகம் சென்று வந்தது வெறும் வணிகப் பயணம் மட்டும் அல்ல. இயேசு பெருமானின் வாழ்வை ஒரு பயண வாழ்வாகவே விவிலியம் விவரிக்கின்றது.

குணங்குடி மஸ்த்தான் தான் பிறந்த இடம் நீங்கி, தமிழகத்தின் பற்பல இடங்களுக்கும் பயணித்து சென்னைக்கு அப்பாலுள்ள இடங்களுக்கும் சென்று தம் வாழ்வின் இறுதிக் காலத்தில் மட்டுமே சென்னையில் தங்கியுள்ளார். இவ்வாறு குணங்குடியாரின் வாழ்வு பயண வாழ்வாகவே அமைந்துள்ளது.

4) சமய நல்லிணக்கம்: இசுலாம் அரேபிய வட்டாரம் தாண்டி பயணம் செய்யத் தொடங்கும் நிலையில், புதிய சமூகங்களின் சமய, பண்பாட்டுத் தளங்களுடன் உறவாட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே வட்டாரப் பாதிப்பு இசுலாத்தில் ஊடுருவிய காலகட்டத்தில் அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்ற வகையில் இசுலாம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இத்தேவையை சூஃபியர் நிறைவு செய்கின்றனர். இத்தகைய பங்களிப்பினால், இசுலாமிய மத ஒழுங்கு முறைக்கு முரணாக சூஃபியத் தத்துவ தரிசனம் இருப்பதாக அதன் மேல் ஒரு குற்றச் சாட்டும் வரலாற்றில் உண்டு.

சூஃபியர் பலர் தூய-நிறுவன இசுலாத்தினால் (institutionalized islam) துன்புறுத்தப்பட்டதற்கு இத்தகைய பார்வையே காரணமாகி உள்ளது.

மாபெரும் சூஃபி ஞானியராகிய "மன்சூர் அல்லாஜ்” சித்திரவதை செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு இத்தகைய பார்வையே காரணமாகி யுள்ளது. இமாம் கஸ்ஸாலி போன்ற மாபெரும் இசுலாமிய சூஃபி அறிஞர்களால் இத்தகைய வேற்றுமை மிகுந்த அளவு சரி செய்யப்பட்டது.

சூஃபியர் அடக்கமாகியுள்ள தர்க்காக்களின் கந்தூரி விழாக்கள் இன்றும்கூட இசுலாத்திற்கு விரோதமானது என்ற கருத்தே முன்வைக்கப் படுகிறது. "தர்கா கலாச்சாரம்” எனச் சில வேளைகளில் கொச்சையாக விமர்சனம் செய்யப் படுகின்றது. ஆனால் நடைமுறையில் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரே அடையாளமாகப் பெருந்திரள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது தர்காக்களே. அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் விழாக்களாக தர்காக் கந்தூரி விழாக்கள் அமைந்துள்ளன.

"காஸ்கா” என்ற சூஃபி சத்திரங்களில் சைவ உணவே பரிமாறப்படுகின்றது. அக்மீர் காஜா மொய்னுதீன் சிஸ்தியின் மடைப் பள்ளியில் சைவ உணவே வழங்கப் படுகின்றது. சகோதரச் சமயமான இந்து பெருமக்களும் உண்ணுமாறு சைவ உணவு படைப்பது மேலான சமூக நல்லிணக் கத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதின் அடையாளம்.

மேலும் சூஃபிகள் உள்ளூர் மொழிகளுக்கும், கலாச்சாரத்திற்கும் பெரிதும் முக்கியத்துவம் தருகின்றனர் என்பது சமூக நல்லிணக்கத்திற்கான மேலும் ஒரு நகர்வாகிறது.

பள்ளிவாசல்கள் நிறுவன இசுலாத்தின் ஆன்மீக மையமாகவும், தர்காக்கள் பெருந்திரள் அனைத்து மதத்தினரின் ஆன்மீக மையமாகவும் நம் சமூகத்தில் மாறியுள்ளதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

நிறுவனச் சமயத் தலைவர்களுடன் உறவாடினால், நம்மை மதமாற்றம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் பிற சமயத்தாருக்கு உண்டு. ஆனால் சூஃபியர்கள் மதம் மாற்றி விடுவார்கள் என்று யாரும் அச்சப்படுவதில்லை. ரிஸ்வி, ஹபீப் போன்ற வரலாற்றாசிரியர்கள், மத மாற்றத்தைச் சூஃபியர் செய்வதில்லை என்றே தெரிவிக்கின்றார்கள்.

மதத்தலைவர்களைவிட சகோதர சமயத் தவர்களுக்கு சூஃபியர் மேல் ஒரு நம்பிக்கை உள்ளது. பல சமயத்தவர் வாழும் இந்திய சமூகத்தில் சமய நல்லிணக்கத்திற்கு தர்காவையும் சூஃபியரையும் நாம் நாட வேண்டியுள்ளது என்பதில் இருவித கருத்து இருக்க முடியாது.

குணங்கடி மஸ்த்தானுக்கு மகாவித்வான் திருத்தணிகை சரவணப்பெருமாள் அய்யர், கோவளம் சபாபதி முதலியார் மற்றும் வேங்கிட இராயப்பிள்ளை முதலானோர் சீடர்களாக இருந்துள்ளனர். தமிழகத்துச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான "கோணங்கி”, சென்னையில் குணங்குடியாரின் அடக்க இடத்தை அடையாளம் கண்டு வெளிப்படுத்தியுள்ளார். இதிலிருந்தே சூஃபியர் கற்பித்த சமய நல்லிணக்கம் எவ்வாறு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்பதை அறியலாம்.

5) யோகம் / தியானம்: தவம், யோகம், தியானம், மூச்சுப் பயிற்சி என்பன உலகப் பொதுவானவை. சித்த யோகம் என்றே தமிழகத்தில் யோகம் வழங்கப்படுகின்றது.

புத்தர், இயேசு, முகமது நபி ஆகியோர் தவம், தியானம் என்ற இறைசிந்தனையில் மூழ்கியவர்களே. குணங்குடி மஸ்த்தான் தான் பயணம் செய்யும் ஊர்களில், ஊருக்கு வெளியே தங்கியிருந்து தவம் செய்த செய்திகள் கிடைக்கின்றன. மதுரை நாகமலை, யானை மலைகளில் தவம் செய்ததும், சிக்கந்தர் அவுலியா அடக்கமாகியுள்ள சிக்கந்தர்மலை என வழங்கும் திருப்பரங் குன்ற மலையில் யோகநிலையில் ஆழ்ந்திருந்ததும் தெரிய வருகின்றது.

6) பரிபாஷை: சித்தர் பரிபாஷை என்றே ஒரு வழக்கு தமிழகத்தில் உண்டு. இதே போல் குணங்குடியார் ஏனைய சூஃபி ஞானியர் போல் பரிபாஷைகளைத் தம் பாடல்களில் பதித்து வைத்திருக்கின்றார். சிவம், உமை, தட்சிணாமூர்த்தி, வாலை, மனோண்மணி போன்ற பரிபாஷைச் சொல்லாடல்களை உள்ளூர் மொழியான தமது தாய் மொழியிலேயே வைத்துள்ளார். வாலை, மனோண்மனி என்பவை குண்டலினி சக்தியைக் குறிப்பிடுகின்றன. இறைவனையும் குறிப்பிடுகின்றன. இவ்வாறு பரிபாஷை என்பது சித்தர், சூஃபியரின் அடையாளமாக உள்ளது.

7) படைப்பின் அவதார நம்பிக்கை: அவதாரம் என்பது மேலிருந்து கீழாக இறங்குவது என்று பொருள்படுவது. எட்டாத உயரத்தில் இருப்பதாக நம்பப்படும் இறைவனை, பூமிக்கு வரவழைத்து மனிதனுடன் உலவவிடும் ஒரு முயற்சியே அவதாரக் கொள்கை. இது வைணவ சம்பிரதாயத்தில் பெரு வழக்குப் பெற்றது. இதன் மாற்றாக "திருவிளையாடல்” என்பது சைவத்தின் வழக்காகியுள்ளது. இறைவன் நேராகவே வந்து நம்முடன் திருவிளையாடல் புரிவது இது.

அவதாரக் கொள்கையிலோ, இறைவன் நேரடியாக வருவதிலோ இசுலாம் நம்பிக்கை கொள்வதில்லை. ஆயினும் ஒருவித அவதாரக் கொள்கையில், "தனஸ் ஸீலத்” - சூஃபியம் நம்பிக்கை கொள்கிறது. உலகப் படைப்புகள் யாவும் பரம்பொருளின் அவதாரமே என்பது சூஃபியர் கொள்கை.

மிகச் சிறந்த பாரசீக சூஃபி ஞானியும், கவிஞருமான ஜலாலுதீன் ரூமியின் "மஸ்னவி சரிப்” என்ற நூலிலுள்ள ஒரு இசைப் பாடல் இவ்வாறு செல்கிறது:

“நானே நற் செய்தியாளன் (நபி);
நானே தாவீதின் இசைப்பாடல்;
நானே குர்-ஆன்;
நானே உஸ்ஸா சரலாத்து (Arabic deities);
நானே வன தேவதை;
நானே சாத்தான்;
நானே ஆவி;
நானே மனிதன்”4

புகழ்பெற்ற தமிழகச் சூஃபி ஞானி தக்கலை பீர்முகமது இவ்வாறு பாடுகிறார்:

“காணும் எழுகாடு உயர் கானமும் நீயே
காசினியும் வான் உலகும் கடல் மலையும் நீயே
தானம் ஒரு சொர்க்கம் எரி நரகமும் நீயே
கருதிய நெஞ்சத்தருளிய
கஃபத்துல்லாவே”5
குணங்குடியார்,

“ஆதிமுன்னிற்கவே அகது உகதுவாகி
---------------------------------
அத்துவித வஸ்து முன்னிற்கவே
-------------------------------
நாதமுன்னிற்கவே நாதனொளி பெற்ற நபி
நாயகம் முன்னிற்கவே...”
(முகியத்தின் சதகம் பாடல் 1)

என்று பாடி, படைப்பு எல்லாம் நபிகள் உட்பட இறைவனின் வெளிப்பாடாகவே காண்கின்றார்.

8) நாயகி பாவம்: நாயக நாயகி பாவம் என்பது இறைக்காதலைக் குறிப்பது. ஆன்மாவை நாயகியாகவும் இறைப் பேரான்மாவை நாயகனாகவும் பாவிப்பது நாயக நாயகி பாவம் (Bridal Mysticism).

ஆனால் தன்னை ஆணாகவும், இறைவனைக் காதலியாகவும் பாவித்துப் பாடுவது சூஃபியர் மரபு. இறைவனை வாலைக்குமரி என்றும், மனோண்மணி என்றும் காதலியாகப் பாடுவது சித்தர், சூஃபியர் மரபு.

“கல்வி நிறை வாலைப் பெண் காதலி...”6
என்றும்,

“வாலைக்கு மேலான தெய்வமில்லைஃஃ7

என்றும், கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி பாடுவார்.

இங்கு வாலை என்பது இறையைக் காதலியாகப் பாவித்துப் பாடுவது. பாரதியும்

“.... வாலைக் குமரி யோடி கண்ணம்மா...”

என்று இறைவனைக் கண்ணம்மா என்று காதலியாகப் பாவித்துப் பாடுகிறார்.

“வீண் காதல் தந்ததல்லால் வேற்றில்
உனைக் கண்ணாலும்
காண்க அரிதாகிவிட்டாய் கண்ணே
பராபரமே” 8

என்று கண்மணி மாலைக் கண்ணியிலும்,

“என்னைவிட்டால் மாப்பிள்ளைமார்
எத்தனையோ உந்தனுக்கே
உன்னைவிட்டால் பெண் எனக்கும்
உண்டோ மனோண்மணியே” 9

என்றும் இறைவனைக் காதலியாகப் பாவித்தே குணங்குடியார் பாடுகின்றார்.

என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணவில்லை நான் காதலிக்க.

என்று பிற்காலக் கவிஞரும் பாடுகிறார்.

ஓர் எல்லையில்,

“வேத வேதாந்த மெல்லாம்
விட்டேறியே கடந்து
காதலித்து நின்றேன் கண்ணே ரகுமானே”

என்று வேத வேதாந்தங்களையெல்லாம் தூக்கியடித்து விட்டு இறைக்காதலுக்குக் குணங்குடியார் முதன்மை தருகிறார். இவ்வாறு இறைவனைக் காதலியாகவும், தன்னைக் காதலனாகவும் பாடுவது என்ற மாற்று மரபு சூஃபிய மரபாகிறது.

9) இசை: சாதி, சமய, மொழி, நாடு என்று எந்த பேதமும் இல்லாதது இசை. எந்த பேதமும் இல்லாத சூஃபிய மரபும் இசையைக் கையில் எடுத்துக் கொண்டதில் அதிசயமில்லைதான். இறையை நாதமாகக் கண்டு நாதம் மூலமே இறையை அடைய வழி கண்டது சூஃபிய மரபு.

குணங்குடியாரும் மற்ற எந்த சூஃபியையும் போல தம்மை ஒரு பாட்டுக்காரராகவே அடையாளம் காட்டுகிறார். புலவர் மரபிலான வெண்பா, ஆசிரிய விருத்தம், சதகம், பத்து பாடியிருந்தாலும், ஆனந்தக் களிப்பு, நிராமயக் கண்ணி, பராபரக்கண்ணி, இரகுமான் கண்ணி, எக்காலக் கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி, என்று மக்கள் இசையான, இசைப்பாடல்களையும் பாடுகிறார்.

குணங்குடியார் காதரிய்யா தரீக்கா என்ற சூஃபி பிரிவைச் சேர்ந்தவர். தனது சூஃபியக் குருவான முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி மீது முகியித்தீன் சதகம் பாடுகிறார். ஒவ்வொரு சூஃபியும் தனது முதல் குருவாக முகமது நபியையே வரித்துக் கொள்கிறார். குணங்குடியார் தனது முகியித்தீன் சதகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்,

“வள்ளல் இற சூல் வருகவே”
என்றே பாடுகிறார். ஈற்றடிகளில்,

“வளம் அருள் நிறை குணங்குடி வாழும் என் இருகண்மணியே முகியித்தீனே”
என்று தனது சூஃபிய ஞான குருவை வாழ்த்துகிறார்.

குணங்குடியார் வாழ்ந்த காலம் தமிழிசை மரபில் கீர்த்தனைகள் கோலோச்சிய காலம். மிகச்சிறந்த கீர்த்தனைப் பாடல்கள் பாடிய சூஃபியர்களில் ஒருவர் குணங் குடியார்.

பாடல்களின் ஈற்றில் ஒத்த சொற்கள் இயைந்து வருவது "இயைபு” என்ற அணி. சொற்களுக்குச் சிறந்த ஓசை நயம் அளித்து, பாடல்களின் இனிமையை அதிகப் படுத்துவதில் இந்த இயைபுகளுக்குப் பெரும் பங்கு உண்டு. சான்றாக, “யானே உனை நம்பினேன்” என்று தொடங்கும் கீர்த்தனையில், “செய்வையோ” எனும் இயைபுச் சொல்லை 36 தடவைகள் பயன்படுத்திக் காட்டுகிறார்.

“இந்த அமைப்பு பெரும் வியப்பை உண்டாக்குகிறது” 11 என்பார் தமிழிசை ஞாயிறு வீ.ப.கா. சுந்தரம். குணங்குடி மஸ்த்தான் பிறந்த ஊர் தொண்டிக்கு அருகிலுள்ள குணங்குடி. குணங்குடியாரை மக்கள் தொண்டியார் என்றும் அழைத்திருக்கின்றனர். சென்னையில் அவருடைய அடக்கத்தை தொண்டியார் பேட்டை என்றே மக்கள் அழைத்துள்ளனர். அது இன்றைய தண்டையார் பேட்டை. குணங்கள் அனைத்தும் குடி கொண்டவன் இறைவன் என்ற பொருளில், இறைவனைக் குணங்குடியார் என்றும் பாடுகிறார். தனது பாடல்களில்

“ஆண்டவன் என் செய்வானோ - குணங்குடி
ஆண்டவன் என் செய்வானோ”
என்றெல்லாம் பல இடங்களில் இறைவனைக் குணங்குடி என்றே அழைக்கிறார்.
“கத்திக்கத்தித் தொண்டையும் கட்டிச்
செத்தேனே
காணும் எங்கள் குணங்குடிச் சித்தனே”

என்று தனது கீர்த்தனை ஒன்றில் குணங்குடி எனும் சித்தனாகவே தன்னை அடையாளம் காட்டுகிறார்.

இசுலாமும் சூஃபியமும்

ஒவ்வொரு சூஃபியும் இசுலாத்தின் தலையாய கொள்கையான ஓர் இறைக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறார். ஆயினும் உலகிலுள்ள படைப்புகள் அனைத்தையும் இறையின் அம்சமாகவே சூஃபியர் கருதுகின்றனர். இசுலாமிய ஓர் இறை நெறியிலிருந்து, பிறழாதும் சற்றுப் பிறழ்ந்தும் சூஃபிய மரபு நிற்கிறது.

“வானாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய்” என்று தொடங்கும் பாடலில், “கானாகி, மலையாகி...” என்று அனைத்துப் படைப்புகளையும் இறைவனாகவே பாடுகிறார். இசுலாமிய ஏக இறைக் கொள்கைக்கு இது மாறுபட்டதே.

பிரம்மம் மட்டுமே உண்மை; ஏனையயாவும் மாயை என்று வைதிகம் கூறும்.

கடவுள் உண்மை; கடவுளின் வெளிப் பாடான உலகும் உண்மை என்று சூஃபியம் கூறும்.

ஜீவாத்மா - பரமாத்மா ஒன்றிக் கலத்தல் (FANA Extinction) என்பதில் வைத்ல்கத்தைச் சூஃபியம் நெருங்குகிறது. குர்-ஆன் மறையை இறை ஞானத்தின் வெளிப்பாடு (spiritual revelation) என இசுலாம் கூறுகின்றது. காடு, மலை, ஆறு, கடல் என்றிவைகளை இறைவனின் பொருள்நிலை வெளிப்பாடு (Material revelation) என்று சூஃபிய மரபு கருதுகிறது.

குருமுறை இசுலாத்தில் இல்லை. நபிகள் நாயகம் ஒரு இறைத்தூதர் மட்டுமே. ஆனால் குருமுறை என்பது சூஃபியத்தில் மிக முக்கியமானது. குருவின் பெயராலேயே சூஃபியப் பிரிவுகள் பெயர் பெறுகின்றன.

இவ்வாறு இசுலாத்தைத் தழுவியும் சற்றே விலகியும், நெகிழ்ந்த தன்மையான ஓர் இசுலாமிய மரபாகச் சூஃபியம் தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.

சாமுன் காதல்

"நான்” என்ற செருக்கை அறுக்க வேண்டும் என்பதே நம் நாட்டில் தோன்றிய முனிவர், சித்தர், சூஃபியரின் முதன்மைக் கொள்கை.

“நான் சாமுன் நான் சாக நாடினேன் நான் சாமுன்
நான் சாக அருள் புரியவும்
நான் வருமுன் நான் சாக நான் வந்து நான் சாக
நான் வருமுன் அருள் புரியவும்”

என்று மடித்து மடித்துப்பாடி, சூஃபியர்க்கே உரிய செருக்கு அறுக்கும் கொள்கையைப் பாடுகின்றார் குணம் குடிகொண்ட குணங்குடியார்.

"மஸ்த்” என்றால் இறைக்காதல் போதை என்று பொருள். இறைக்காதலாளன் என்று பொருள்படும் "மஸ்த்தான்” என்றே தன்னைப் புணைந்து கொள்கிறார். (இயற்பெயர் சுல்த்தான் அப்துல்காதர்.)

தமது 17ஆம் வயதில் சூஃபியப் பயணத்தை மேற்கொண்டு, சமய நல்லிணக்கத்திற்கு ஓர் அடையாளமாக வாழ்ந்து,

“சொல்லு மெய்ஞ்ஞானச் சுகக்கடலை
உண்டுயான்
சும்மா இருக்க அருள்வாய்”

என்று இரக்கத்தின் ஆனந்தம் பாடி, தம் 47ஆம் அகவையில் இறைக்காதலியுடன் இரண்டறக் கலந்து விடுகிறார் குணங்குடி மஸ்த்தான்.

மேற்கோள் பட்டியல்:

1) இராஜதுரை எஸ்.வி. எக்ஸிஸ்டென் சியலிசம் 1983. பக்.38.

2) ஹாமீம் முஸ்தபா (தொ.ஆ), சூஃபிகள் தர்காக்கள் - சிலமாற்று உரையாடல்கள், பக்.18.

3) Indies shah. Sufis p.xii - 1990,

4) Thomas Patrick Hughes Islamic encyc 2002, ட,752,

5) சூ*பி ஞானி தக்கலை பீர்முகமது, ஞானப் புகழ்ச்சி, பாடல் 70

6) கொங்கணச் சித்தர் - வாலைக்கும்மி காப்புச் செய்யுள்

7) மேலது பாடல் 75.

8) குணங்குடியார் பாடல் கோவை. கண்மணி மாலைக் கண்ணி 24.

9) குணங்குடியார் பாடல் கோவை. மனோண்மணிக் கண்ணி 73.

10) குணங்குடியார், இரகுமான் கண்ணி 88.

11) வீ.ப.கா. சுந்தரம், தமிழிசைக் கலைஞர் பக்.148/II

அருஞ்சொல் விளக்கப்பட்டியல்

1. தர்கா - அடக்க இடம் Grave yard

2. கந்தூரி - நினைவு நாள்

3. ருஹு - உயிர் மூச்சு

4. வஹி - இறைச்செய்தி

5. சுப் - கம்பளி

6. சஃபா - தூய்மை

7. முரீது - தீட்சை

8. தவ்ஹீத் - ஓர் இறைக்கோட்பாடு

9. ஷிர்க் - இறைக்கு இணைவைத்தல்

10. ஷரீயத், தரீக்கத், ஹகீகத், மரீஃபத் - சூஃபி ஞானப்படித்தரம் சைவ சமயத்தின் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவைக்கு ஒப்பானது.

11. சஃபர் - பயணம்

12. சாலிஃகு - பயணி

13. மரி*பத் - மூதறிவு

14. தரிக்கா - வழிமுறை, பள்ளி (school). குருமுறை

15. திக்ரு - இறை தியானம்

16. "ஜகிலியா” - அறியாமைக்காலம் - நபிகளாரின் காலத்திற்கு முந்திய காலத்தை அரபிய வரலாற்றில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

17. பாங்கு - ஐங்கால இறைத் தொழுகைக்கான அழைப்பு

18. மூசா - மோசஸ்

19. ஈசா - இயேசு

20. ரசூல் - முகமது நபி

21. தௌராத் - யூத மறை

22. இஞ்சீல் - திருவிவிலியம்

23. புறுக்கான் - திருக்குர் ஆன்

24. சபூர் - தாவூதின் சங்கீதம்

25. இத்திஃகாத் - பேரின்ப நிலை (பரவசநிலை)

26. காஃபா - மக்காவிலுள்ளபள்ளிவாசல்

27. பராபரம் - அருஉரு - உறுவமற்றது

28. நிராமயம் - நோயின்மை

29. மனோண்மணி - குண்டலினி, இறை

30. வாலை - குண்டலினி, இறை

31. சந்ததம் - நிரந்தரம்

32. நூறு - ஒளி

33. சிர்க் - மாறானது

34. ஆலிம் - சமயக் கல்வி அறிஞர்

35. சப் - வரிசை

36. பனுசூபா - காஃபா பணியாளர்

37. மகாமத் - ஆன்மப் படிநிலை

38. முரீது - தீட்சை

39. கல்வத் - யோகநிட்டை

40. மஸ்த்து - பித்து, போதை, சித்து,

41. மஸ்த்தான் - சித்தன், பித்தன், இறைக்காதலன்

42. சோபியா - அறிவு

43. மஜ்னு - காதல் பித்தன்

44. தைக்கா - ஆசிரமம்

45. பாத்திகா - நேர்ச்சைப் படையல்

46. தனஸ்ஸீலத் - அவதாரம்

47. மகபூபு சுபஹானி - இறைவனின் காதலர்

48. இஷ்க் - காதல்

49. கீகத் - துறவு

50. வஸல் - ஒருமை

51. பஃனா - கலத்தல்

52. பஃகா - ஒருமை நிலையில் நிலையாகத் தங்குமிடம்

(குறிப்பு: குனங்குடியாரின் அடக்க இடத்தை கோணங்கிதான் முதலில் கண்டு சொன்னார் என்பதுபோலக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். அது அவ்வளவு சரியல்ல. எழுத்தில் புழங்கும் பலருக்கும் அதற்கு முன்பே தெரியும். எனக்கும் தெரியும். 1964இல் 6 மாத காலம் ஒரு நூறு முறையாவது நான் அந்த இடத்தைத் தேடி இளைப்பாறியிருப்பேன். குனங்குடியாரின் அடக்க இடம் தண்டையார்பேட்டை அல்ல. அது இராயபுரம் மேற்குப் பகுதி - பள்ளம் என்று சொல்வார்கள். அதற்கு மேற்புறம் வண்ணைப் பகுதி. இராயபுரம் - வண்ணைக்கு வடக்கேதான் தண்டையார்பேட்டை உள்ளது. எல்லா மகான்களுக்கும் போல் குனங்குடி யாருக்கும் இப்படியொரு தொன்மம் புனையப்பட்டிருக்கலாம் - இதழாசிரியர்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com