பெ.கோ. மலையரசன் கவிதைகள்
பெயர் நிலைக்கும்
சுட்டெரிக்கும் கதிரவனாய்ச் சுடர்ந்தே; வானின்
சுடர்மதியாய் ஒளியலையில் மலர்ந்தே! எங்கள்
கட்டறுத்தே இனவாழ்வில் அடிமை தூர்க்கக்
கடனாற்றல் இலட்சியமாய், பகைவர் சூழ்ச்சி
முட்டறுத்தே தமிழீழ விடுதலையை
முன்னெடுத்த தமிழ்ப்பிரபா படையாள் நின்னை
சுட்டெரித்தான் வான்குண்டால் பகைவன், என்ற
துயரத்தை வரிப்புலியே பொறுத்த லுண்டோ!
படைபெரிய சிங்களத்தை எதிர்ந்தே, அந்தப்
படையாட்கள் முதுகெலும்பை முறிக்குங் காலை
இடைபுகுந்த வல்லரசுச் சூழ்ச்சிப் பேய்கள்
எந்தமிழர் உரிமைநலம் கிட்டா வண்ணம்
தடைபுரிந்த வேளையிலும் தலைவர் காட்டும்
தன்னுரிமை வெற்றிப்போர்க் களத்தில் நின்ற
படைப்புலியே தமிழ்ச்செல்வ, அமைதித் தூதே
பகைவருனை வீழ்த்தியதால் அமைதி கொன்றார்!
காலத்தால் பறிபோன தமிழர் ஆட்சி
கவின்பூத்து எழில்கொஞ்சும் அறிவின் மாட்சி!
ஈழத்தை வென்றெடுக்க அமைதிப் பேச்சை
எடுத்தாளும் படிநிக ராளி யாகி;
மீளத்தாய் நாடடைய வினைக ளாற்றும்
மின்னுலக அமைதி-வெண் புறாவே நின்னை
காலந்தான் பறிக்கவில்லை; எம்கண் முன்னால்
களப்புலியே வஞ்சகரால் மடிந்தாய் அந்தோ!
நிலவரையில் ஐம்புலிகள் சூழப் போரின்
நிலை குறித்து போர்த்திட்டம் வகுக்குங்காலை
நிலவரையை ஊடுருவிப் பாயும் குண்டால்
நிலம்பிளக்க அறுவரையும் கொன்றார்! இன்று
கலவரத்தில் சிங்களம்அக் கொடிய வர்க்கே
கயவர்சிலர் உதவுகிறார், விரைந்தன் னாரின்
நிலவரந்தான் மாற்றமுறும் தமிழ்ப்போர் வெல்லும்
நீனிலம்மா வீரர்களின் ஈகம் பேசும்!
தமிழினத்தின் தாகம்தமி ழீழத் தாகம்
தண்டமிழர் உயிராகக் கொண்ட மோகம்!
இமிழ்கடல்சூழ் வரைப்பில்வாழ் தமிழர் தம்மின்
எழில்நாடு தாய்நாடு! இ*தை மீட்க
தமிழ்ப்புலிகள் உயிர்க்கொடையின் ஈகப் போரில்
தமிழ்ச்செல்வ! நீயும்ஓர் மறவ னன்றோ?
இமிழ்கடலோ உளவரைக்கும் தமிர்வரைக்கும்
இனியவன்நின் பெயர் நிலைக்கும்; புகழ் நிலைக்கும்.
தமிழ்க்குலத்தை வாழ்த்தாயோ!
மண்ணுலவும் மொழிக்குலங்கள் சாடை காட்டும்
வரிவடிவம் பேச்சின்றி ஊமைப் பாட்டும்
எண்ணியலும் எழுத்தியலும் தோன்றாக் காலை
எண்ணியதை வாயாட முடியா வேளை
விண்ணுலவும் புகழ்க்குரிய அரிய பேறாய்
வியனுலகில் எண்ணெழுத்தைக் கொண்ட சீராய்
மண்ணுலவும் பீடார்ந்த தமிழத் தாயே!
வையமொழிக் கேதுநீ யன்றி வாயே!
கழிபலவும் வூழிகளாய்க் கணக்கற் றோரின்
கருதியலின் வழிபடர்ந்து, மொழிப்பற்றாளர்
வழிமொழியாய் வளர்ந்தோங்கி வாழ்வு கொண்டாய்
வையத்தில் நினக்குநிகர் நீயே கண்டாய்!
பழிமொழியார் நின்னெழிலைத் தீய்க்கப் பாடு
பட்டவர்கள் வினையெல்லாம் வெறுமைக் கூடு!
வழிவழியாய் எமைப்புரக்கும் மொழியே வாழி!
வனப்புறுத்தும் வைப்பகம்நீ கருத்தின் ஆழி!
அன்பூட்டம் எமக்களித்தாய் அறிவின் ஊட்டம்
அருங்கல்வி பயிலஎம்பால் வைத்தாய் நாட்டம்
பண்பூட்டம் இனிதளித்தாய் பரிவின் ஊட்டம்
பாசத்தைப் பரிந்துரைத்தாய் உயர்வு நாட்டம்
தென்பூட்டம் அளித்தனைநீ சோர்வில் ஆற்றும்
தெளிவூட்டம் கொளவைத்தாய் தோல்வி மாற்றும்
இன்பூட்டும் தமிழ்நீயே சுவைசேர் கட்டம்
இவ்வுலக மொழிக்குலங்கள் நின்முன் மட்டம்!
அறிவடர்ந்த பல்கலைசேர் கல்வி கற்றோம்
அன்பறிவு தேற்றம்அவா நின்பால் பெற்றோம்!
செறிவடர்ந்த நின்மறத்தை சிறக்க வார்த்தாய்
செருபகைக்கு அஞ்சாநெஞ் சுரத்தைச் சேர்த்தாய்
நெறிபடர்ந்த வாழ்க்கையிலே ஒழுகி நின்றோம்
நெடுந்தமிழர் பண்புநலம் பேணி வென்றோம்
திருவடர்ந்த தனித்தமிழே, இனிய சால்பே
தென்னவர்க்கு நீ இலையேல் ஏது வாழ்வே!
பண்பெழிலார் தாலாட்டில் தூங்க, வைப்பாய்
பழச்சாற்று இலக்கியத்தில் கிறங்க வைப்பாய்
அன்பெழிலார் சொல்லாலே கட்டி வைப்பாய்
அறிவழகால் நெஞ்சத்தை தொட்டு நிற்பாய்
இன்பெழிலை எமக்கூட்டி இனிமை காட்டும்
இனமான நல்லுணர்வை நெஞ்சில் ஊட்டும்
தண்பொழிலார் தாமரையே! தமிழே வாழ்வே
தமிழ்க்குலத்தை வாழ்த்தாயோ இனிய சால்பே!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|