Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
அக்டோபர் 2008 - மார்ச் 2009


பாரதியின் வாழ்வில் புதுச்சேரி
பாரதி வசந்தன்

பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் 1915ஆம் ஆண்டு 'சித்திக் கடல்” எனும் ஒரு சிறுநூலை எழுதி வெளியிட்டான். 'ஜூலை 1ஆம் தேதி” என்று தேதியிட்ட குறிப்புடன் அந்த நூலில்: 'இந்த மனமாகிய கடலை வென்று விடுவேன். பலநாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வெல்ல நான் படும்பாடு தேவர்களுக்குத்தான் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை, சோர்வு முதலிய ஸம்ஸ்காரங்கள் மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும். புகையிலைச் சாற்றினால் தலை கிறுகிறுக்கிறது. 20 தரம் புகையிலையை நிறுத்திவிடுவதாக ப்ரதிக்கினை செய்திருக் கிறேன். இதுவரை கைகூடவில்லை. ஸம்ஸ்காரம் எத்தனை பெரிய விலங்கு பார்த்தாயா...? மகனே, ஸம்ஸ்காரங்களைச் சக்தியினால் வென்று விடு. வயிறு வேதனை செய்கிறது, உஷ்ண மிகுதியால். நோயற்று இருப்பதற்குச் சக்தியை ஓயாமல் வேண்டிக்கொள். நோயில்லையென்று மனத்தை உறுதிசெய். மனம் போல் உடல். மகனே, உடலை வெற்றிகொள். அது எப்பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன். அது யந்திரம். நீ யந்திரி...” என்று குறிப்பிடுகிறான்.

அதே நூலில் 'ஜூலை 2” தேதியிட்டு: 'மனமாகிய குரங்கு செய்வதைசெயல்லாம் எழுதிக்கொண்டு போனால் காலக் கிரமத்தில் அதை வசப்படுத்திவிடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளை யெல்லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்துமுன் சித்தத்தை அறியவேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வந்தால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகு மென்பது என்னுடைய தீர்மானம்.

பராசக்தீ, ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லா மலும், வஞ்சகமில்லாமலும் எழுதுவதற்கு எனக்குத் தைரியம் கொடுக்க வேண்டும். நாம் எழுதுவதைப் பிறர் பார்க்க நேரிடும் என்று கருதி துர்ப்பலங்களை எழுத லஜ்ஜை யுண்டாகிறது. பராசக்தி, என் மனத்தில் அந்த லஜ்ஜையை நீக்கிவிட வேண்டும். பாரதியினுடைய மன நடைகளை எழுதப் போகிறேன். நான் வேறு, அவன் வேறு, நான் தூய அறிவு. அவன் ஆணவத்தில் கட்டுண்ட சிறு ஜந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை எழுத அவன் லஜ்ஜைப் படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட்படுத்தாதபடி அருள் செய்ய வேண்டும்.

"எழுது. பராசக்தியின் புகழ்ச்சிகளை எழுது. அடா! பாரதீ, அதைக் காட்டிலும் உயர்ந்த தொழில் இவ்வுலகத்தில் வேறொன்று இல்லை. பராசக்தி வாழ்க. அவள் இந்த அகில உலகத்துக்கும் ஆதாரம். பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுத வேண்டும். கடிதங்கள் எழுத வேண்டும். சோம்பர் உதவாது. எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப் போய்விடும்.

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆத்மா நீ. உனக்கு அறிவில்லையா...? உனக்குக் காது கேட்காதா...? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களை யெல்லாம் கொடுத்து விடக் கூடாதா...? முதலாவது எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாகிவிட்டது. இரண்டு மாத காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழு துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம். பயம், பயம், பயம்! சக்தி உன்னை நம்பித்தான் இருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய். உன்னை வாழ்த்துகிறேன். கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் - தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

"பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா...? கடன்கள் எல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி எனது குடும்பத்தாரும், என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிர விதமாக புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்பு கிறேன். உலகில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச் சிவப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டொன்றை என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும். தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரசிக்கும் உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்...? எனது குடும்பப் பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சிப் புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது. தாயே, ஸம்மதந்தானா...? மஹாசக்தீ என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதையூற்று ஏற்படுத்திக் கொடு...”

என்று பாரதி பலவிதமாக எழுதுவது அவனின் உள்ளக் கிடக்கைகளை நாம் அறிந்து கொள்ளும் ஆதாரமாய் இருக்கிறது. அதே வேளையில் பாரதிக்குள் ஏற்பட்டிருந்த இத்தனை மன அதிர்வுகள், அல்லது மனப் பிறழ்வுகள், அல்லது மனக் காயங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், அவை பாரதியினுடைய புதுச்சேரி வாழ்க்கையின் துயரம் மிகுந்த, இடர்ப்பாடுகள் நிறைந்த சம்பவங்களின் சாட்சியமாகவும் திகழ்கின்றன.

உண்மையில் பாரதியின் இந்தச் 'சித்தக்கடல்” நூல்தான் அவனின் புதுச்சேரி வாசத்தை உள்ளது உள்ளபடி நமக்குக் சொல்லிக்கொண்டிருக்கும் காலக் கண்ணாடி; இலக்கிய சாசனம். 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே பாரதி புதுச்சேரி வந்திருக்கக்கூடும் என்பது பாரதி ஆய்வாளர்களின் முடிவு. அந்தக் காலம் பாரதியின் இலக்கிய வாழ்வில் மிகவும் நெருக்கடியான காலம். அவன் சூரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்ததும் திலகரின் கொள்கையையும், வழியையும் ஆதரித்துத் தம்முடைய 'இந்தியா” பத்திரிகையில் 'எரிமலையாய்...” எழுதிக் கொண்டிருந்தான். அப்போது திலகருக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர்களையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கியபோது பாரதி மீதும் அவர் நடத்திய 'இந்தியா” பத்திரிகை மீதும் சென்னை சர்க்கார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தலைப்பட்டதும் பாரதியின் நண்பர்கள் அவரை உடனே புதுச்சேரிக்குப் போய்விடும்படி ஆலோசனை வைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் பாரதி, தேச விடுதலைக்காகச் சிறை செல்வதைக் காட்டிலும் கவிதைத் தொண்டு மூலமாக விடுதலை வேள்வியை வென்றெடுக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட, அதன்படியே அவனும் புதுச்சேரி வர நேர்ந்தது.

இந்த அரசியல் பின்புலத்தை அறிந்து கொள்ளாது, 'பாரதியார் கோழை, பயங்கொள்ளி என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். சிலர் வாய்விட்டும் சொன்னார்கள். பாரதி பயங்கொள்ளி அல்ல. ஒரு மனிதனுடைய உள்ளத்தின் உண்மையான நிலைமையை, அவன் பேசுகிற பேச்சு தெளிவாகக் காண்பித்துவிடும். பாரதியின் எழுத்திலே அச்சத்தை, தாட்சண்யத்தை லவலேசமும் காண முடியாது. நெருக்கடியில் பயப்படுகிறவன் அவன் அல்லன். பாரதி புதுச்சேரி போவதற்குக் காரணம் அவனுடைய நண்பர்கள். நண்பர்களின் யோசனைத் திறனில், பாரதிக்கு எல்லையற்ற நம்பிக்கை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதி பட்ட கஷ்டங்கள், சிறைக் கஷ்டங்களைக் காட்டிலும் நிரம்ப ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும். 'எண்ணெய் காய்கிற இருப்புச் சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப் போல ஆயிற்று பாரதியாரின் புதுச்சேரி வாசம்...” என்று பாரதியால் 'தமிழ்நாட்டுத் தேசபக்தன்” என்று அரவிந்தரிடத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட வ.ரா. என்கிற வ. ராமஸ்வாமி ஐயங்கார் தம்முடைய 'மகாகவி பாரதியார்” நூலில் குறிப்பிடுவது பாரதியின் புதுச்சேரி வாழ்வின் இன்னுமொரு இலக்கியப் பதிவு.

பாரதி புதுச்சேரி வந்தபோது சிட்டி குப்புசாமி ஐயங்கார்தான் அவனுக்குத் தங்கும் இடம் அளித்து அவனை ஆதரித்தவர். இந்தச் செய்தி சென்னை அரசாங்கத்துக்குத் தெரியவந்ததும் அவர்களுடைய தூண்டுதலின் பேரில் புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கப் போலீசார் ஐயங்காரை மிரட்டவே அவர் பயந்துபோய் பாரதியைத் தம் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார்.

பாரதிக்கு ஊர் புதிது; கையில் காசு இல்லை; என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பாரதி பிரிட்டி ஷாருக்குப் பயந்து இங்கே ஓடிவந்துவிட்டார் என்று புதுச்சேரிவாசிகளில் சிலர் யோசனையின்றிப் பேசத் தொடங்கியிருந்தார்கள். அவனை ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரிந்து கொள்ளவே, ஒருவகையாக ஏற இறங்கப் பார்த்தார்கள். பாரதி புதுச்சேரிக் கடற் கரையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலத்தின் பெஞ்சியின் மேல் உட்காரப் போனால், அதற்கும் முன்பு வேறு எவரேனும் அங்கே உட்கார்ந்திருந்தால் அவர்கள் அவனைப் பார்த்ததும் பெஞ்சியைக் காலிசெய்துவிட்டு சொல் லாமல் கொள்ளாமல் அவ்விடத்தை விட்டுப் போய் விடுவார்கள். அதற்குக் காரணம் பாரதி மீதிருந்த மரியாதை அல்ல. அவனைப் பற்றித் தப்பும் தவறு மாகத் தெரிந்துகொண்டிருந்த மிதமிஞ்சின பயம்தான்.

இத்தகைய மோசமான சூழலில் குவளை கிருஷ்ணமாச்சாரியார் பாரதியைத் தம் நண்பர் சுந்தரேசய்யரிடம் அழைத்துப் போக, அவர் பாரதிக்குத் தகுந்த வீடமர்த்தி, வேண்டிய உதவியையெல்லாம் செய்து கொடுத்து ஆதரித்தார். அந்தச் சமயம் மண்டையம் சீனிவாசாச்சாரியாரும் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். புதுவையில் முன்னமே எல்லோரிடத்தும் பழகியிருந்த அவர் பாரதியைப் பல நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தார். அதோடு 'இந்தியா” பத்திரிகையை சென்னையிலிருந்து புதுவைக்குக் கொண்டுவர அவர் ஏற்பாடுகள் செய்ய, அதனைத் தொடர்ந்து அச்சு இயந்திரங்களும் மற்றவையும் இங்கு வந்து சேர்ந்தன. 'ரூய் துய்ப்ளேக்ஸ்” இலிருந்து (இன்றைய நேரு வீதி) ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து பாரதி அங்கிருந்தவண்ணம் 'இந்தியா” பத்திரிகையை நடத்தத் தொடங்கினான்.

சிவப்பு நிறத் தாளில் அச்சிடப்பட்ட 'இந்தியா” பத்திரிகை சற்றேறக்குறைய 16 பக்கங்கள் கொண்ட வார இதழாக விளங்கியது. ஒவ்வொரு இதழிலும் முதல் பக்கத்தில் ஒரு கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டது. வெளியூர்ச் செய்திகள், பொது வர்த்தமானங்கள், மக்களின் குறைகள் பற்றிய செய்திகள், புத்தக மதிப்புரைகள் ஆகியவற்றை வெளியிட்டு அது மக்களை உற்சாகப்படுத்தி வந்தது. அவ்வப்போது புதுவை வாழ்க்கை பற்றிய செய்திகளும் 'இந்தியா”வில் வெளிவந்தன. பாரதி, தம் கட்டுரைகளில் மக்களுக்கு ஓட்டுரிமை அளித்த பிரெஞ்சு அரசாங்கத்தைப் புகழ்ந்தும், பிரான்சானது 'சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்” ஆகியவற்றுக்குத் தாயகமென்றும் எழுதிவந்தான்.

'இந்தியா” வாரம்தோறும் தேசிய எழுச்சியைப் பற்றிய பல அரிய விஷயங்களைத் தாங்கிக்கொண்டு வந்தது. நாடு விரைந்து சுதந்திரம் அடைவதற்காகத் தீவிர தேசிய இயக்கத்தை நடத்திய தேசியவாதிகளுக்கு முட்டுக் கட்டைபோட்ட மிதவாதிகளை பாரதி தயக்கமின்றித் தாக்கி எழுதினான். கேலிச்சித்திரம் ஒன்றில் அவர்களைச் 'சுதேசிய ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்...” என்று பழித்தான்; அவ்வாறே பிரிட்டிஷாரின் அதிதீவிர ராஜவிசுவாசியான வி. கிருஷ்ணசாமி ஐயரின் 'கன்வென்ஷன்” முயற்சியைப் 'பசுத்தோல் போர்த்த புலிக்குட்டி...” என்று தன் சித்திரத்தில் நையாண்டி செய்தான்; 1908 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் மிதவாதிகள் நடத்திய கூட்டத்தைச் 'சென்னையில் ஆட்டு மந்தை...” என்ற தலையங்கத்தில் பரிகசித்தான்; 1908 அக்டோபர் 31ஆம் தேதி இதழில், 'அன்னிய பெசண்ட்” என்ற தலைப்பின் கீழ் அன்னிபெசண்ட் அம்மையார் இந்திய சுதந்திர விருப்பத்திற்கு எதிராகச் செய்துவந்த முயற்சிகளையெல்லாம் வரிசைப்படுத்தி எழுதினான். அதன்பின் ஒரு தலையங்கத்தில், 'ஸ்வதந்திரம் அடைய விரும்புவோர் செல்ல வேண்டிய பாதை மல்லிகை இதழ்கள் தூவிய பாதையன்று. கல்லும், முள்ளும் பரப்பிய பாதை. செங்குத்தான வழி. அதை வெகு சுலபமாக அடைந்துவிடலாமெனச் சில சுகவாசிகள் நம்புகின்றனர்.

நம் நோக்கம் எத்தனைக்கெத்தனை பெரிதோ, அத்தனைக்கத்தனை நம் முயற்சியும் பெரிதாயிருக்க வேண்டும். மந்திரத்திலே மாங்காய் விழாது. பயந்து செய்யும் ஓரிரண்டு செய்கைகளால் நம் நாட்டுக்குச் சுயாதீனம் கிடைக்காது. விடா முயற்சியும், சித்த சுத்தியுமே துணைகளாகும். வேறு துணையில்லை...” என்று எழுதிய பாரதி 'இந்தியா” பத்திரிகையில் எத்தனையோ சுவையுள்ள பல அரசியல், பண்பாடு, சமயம், சமூகம், கலை, மொழிகள் பற்றிய கட்டுரைகளையும், வரலாறுகளையும் எழுதினான். 'அமிர்த பஜார்”, 'வந்தே மாதரம்” போன்ற வடநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்த அரிய கட்டுரைகளை மொழிபெயர்த்தான். அரவிந்தர் வங்காளத்திலும், சூரத் காங்கிரசுக்குப் பின் பல இடங்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் 'வந்தே மாதரம்”, 'கர்மயோகின்” ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள், 'இந்தியா” நிருபர் அரவிந்தரை கல்கத்தாவில் பேட்டி கண்ட விஷயங்கள், அரவிந்தர் தம் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் ஆகியவை 'இந்தியா” பத்திரிகையில் மிகவும் சிறப்புடன் வெளியிடப்பட்டன. பாரதி, 'மலைப்பாம்பும் குரங்குகளும்”, 'ஓநாயும் நாயும்”, 'பஞ்சகோணக் கோட்டையின் கதை” ஆகிய சிறுவர் கதைகளையும் 'ஞானரதத்தின்” பகுதியையும் எழுதி புதுச்சேரியிலிருந்து வந்துகொண்டிருந்த 'இந்தியா”வுக்கு புதுப்பொலிவை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான்.

1909ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியிட்ட 'இந்தியா” இதழில் 'மாதாவின் கட்டளை” என்றொரு கட்டுரை. அதில் 'தொழிலாளிக்கும், விவசாயிகளுக்குமே பூமி சொந்த மானது; மனித சமூகத்தில் இவர்களே தேனீக்கள். மற்ற நம் போன்றோரெல்லாம் பிறர் சேகரித்து வைத்த தேனை உண்டு திரியும் வண்டுகள். தொழிலாளிகளையும், விவசாயிகளை யுமே நாம் 'வந்தே மாதரம்” என்ற மந்திரத் தால் வணங்குகிறோம். இவர்களுடைய எண்ணங்களும், ஆசைகளும், பிரார்த்தனை களும் மற்றோர்களால் கட்டளைகளாகப் பாராட்டிப் போற்றத் தக்கனவாகும்...”

என்று மிக அருமையாக எழுதிய பாரதி அதே ஆண்டு ஜூன் 12ஆம் தேதியிட்ட 'இந்தியா” இதழில் 'கடல்” என்ற தலைப்பில் அரவிந்தர் எழுதிய கவிதை ஒன்றின் மொழி பெயர்ப்பை வெளியிட்டிருந்தான்:

"வெள்ளைத் திரையாய், வெருவுதரு தோற்றத்தாய்
கொள்ளை ஒலிக்கடலே நல்லறம் நீ கூறுதிகாண்
விரிந்த பெரும்புறங்கள் மேல்எறிந்துஉன் பேயலைகள்
பொருந்தும் இடையே புதைந்த பிளவுகள்தாம்
பாதலம்போல் ஆழ்ந்திருப்பப் பார்க்கரிதாய் அவற்றின்
மீதுஅலம்பி நிற்கும் ஒரு வெள்ளைச் சிறுதோணி...”

என்று தொடங்கும் கவிதையில், 'ஸ்ரீமான் அரவிந்தகோஷ் 'கடல்” என்ற தலைப்பின்கீழ் ஆங்கில பாஷையில் சில கண்ணிகள் புனைந்து, அவற்றை 'மாடர்ன் ரெவியூ” (நவீன பரிசோதகம்) என்ற கல்கத்தா மாதப் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். தாய் நல்லுணவு சமைப்பதைப் பின்பற்றிக் குழந்தை மணற்சோறாக்கி விளையாட்டுச் சமையல் செய்வதைப் போல, அந்த மகானுடைய செய்யுளை நான் அன்பினால் மொழிபெயர்க்க நேர்ந்தது. இதில் எனக்குத் தெரிந்தே பல வழுக்கள் இருக்கின்றன. பாஷை வேறுபாடு முதலிய காரணங்களால் இவ்வழுக்களை நிவர்த்தி செய்வது மிக்க கஷ்டமாயிருக்கிறது. இவற்றையும் எனக்குத் தெரியாமல் வீழ்ந்திருக்கும் பிழைகளையும் கற்றோர் பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்...” என்று தம்முடைய மொழிபெயர்ப்புக்காக மிகவும் வருத்தப்படும் பாரதி, மீண்டுமாக, அதே குறிப்பில், 'இம்மொழிபெயர்ப்பைச் சகல ஜனங்களுக்கும் தெளிவாகும்படி மிக எளிய நடையிலே அமைக்க வேண்டுமென்று சிரமப்பட்டிருக்கிறேன். என்னையுமறியாமல் அகராதிப் பண்டிதர்களுடைய 'கற... கற....” மொழிகள் விழுந்திருக்கின்றன. செய்யுள் அமைதி நாடி அம்மொழிகளுக்கு எளிய பிரதிபதங்கள் போடாமல் இருந்துவிட்டேன். இதன் பொருட்டும் படிப்போர்கள் க்ஷமிக்குமாறு பிரார்த்தனை செய்கிறேன்...” என்று தன் மொழி ஆளுமையை, தன் புலமையைத் தாழ்த்திக் கொண்டு எழுதுவது பாரதியின் இலக்கிய அனுபவத்தில் மிகவும் அபூர்வமான இடமாகும்.

'எளிய பதங்கள்; எளிய நடை; எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம்; பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்...” என்கிற 'கவிதை இலக்கியக் கொள்கை” உடைய பாரதி, அரவிந்தரின் மொழிபெயர்ப்பில் தம்மைத் தாமே குறைத்து மதிப்பிடுவதும்ட, தம்முடைய 'சுயசரிதை”ப் பாடல்களின் முன்னுரையில், 'இச்சிறிய செய்யுள் நூல் விநோதமாக எழுதப்பட்டது. ஒரு சில பாட்டுகள் இன்பமளிக்கக் கூடியனவாகும். பதர் மிகுதியாகக் கலந்திருக்கக் கூடும்...” என்று எழுதுவதும் பாரதியின் 'தமிழ் குறித்த தன்னடக்கம்...” என்று கருதுவதற்கு இடமில்லாமல், இவை பாரதி தன் ஒட்டுமொத்த கவிதை இலக்கியம் குறித்துத் தமக்குத் தாமே செய்துகொண்ட சமநோக்குடைய ஒப்பீட்டு இலக்கியத் திறனாய்வு என்றே கருத இடமிருக்கிறது. பாரதி எப்போதும் மற்றவர்களுக்குத்தான் மகாகவி; தனக்கு மட்டும் அவன் தத்துவ விசாரங்களில் அகப்பட்டுச் சதாகாலமும் தன் தமிழில் எதையோ தேடிக் கொண்டிருக்கிற ஞானக்கிறுக்கன்.

'ஸ்வதந்தரமில்லா வாழ்க்கை ஓர் வாழ்க்கையன்று; அது பன்றி வாழ்க்கையினும் இழிந்தது...” என்ற பாரதியின் 'பிரகடனத்தோடு...” வெளிவந்த 'இந்தியா” வார இதழ் ஓராண்டு ஐந்து மாதங்கள் நடந்துவந்து அரசாங்கத்தின் அடக்கு முறையின் காரணமாக 13-03-1910 இல் வெளியான கடைசி இதழோடு நின்றுவிட்டது. அதற்கு முன்னரே பாரதி, தன் வீட்டை ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியின் கோடியில் இருந்த 'விளக்கெண்ணெய்ச் செட்டியாரின்...” வீட்டுக்கு மாற்றிக் கொண்டுவிட்டிருந்தான்.

இந்தச் செட்டியார் பாரதியிடத்தில் வீட்டு வாடகைப் பணத்தைக் கேட்டதே கிடையாது. செட்டியார் வருவார். பாரதி பாடிக்கொண்டிருக்கும் பாட்டைக் கேட்பார். பிறகு மௌனமாய் வெளியே போய்விடுவார். பாரதி பேச்சுக் கொடுத்தால் ஒழிய செட்டியார் தாமாக ஒன்றும் பேச மாட்டார். இவரின் வீடு பாரதிக்கு சங்கப் பலகை; கான மந்திரம்; அபய விடுதி; சுதந்திர உணர்ச்சிக் களஞ்சியம்; அன்னதான சத்திரம்; மோட்ச சாதன வீடு; ஞானோபதேச அரங்கம். அத்தகைய சிறப்புடைய விளக்கெண்ணைய்ச் செட்டியாரின் வீடு மட்டும் இல்லாது போயிருந்தால் பாரதியின் புதுச்சேரி வாசமும், அவனுடைய வாழ்க்கையும் பாழாய், பாலைவனமாய்ப் போயிருக்கும் என்பது நிதசர்னமான உண்மை.

இதற்கிடையில் அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து புறப்பட்ட 'துய்ப்ளேக்ஸ்” என்கிற கப்பலில் இரகசியமாக ஏறி புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்த ஆறு மாதங்களுக்கெல்லாம் வ.வே.சு. ஐயரும் புதுவை வந்து சேர்ந்தார். ஏககாலத்தில் யாவும் நடைபெற அரவிந்தரின் 'கர்மயோகின்” என்கிற ஆங்கில வாரப் பத்திரிகை 40 இதழ்கள் வந்து நின்று போனது. பாரதி அந்தப் பத்திரிகையைத் தழுவி 'கர்மயோகி” என்கிற மாதப் பத்திரிகையைத் தொடங் கினான். அது புதுச்சேரியில் சைகோன் சின்னையா அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. அச்சு முத்துமுத்தாய் அழகாயிருக்கும் என்பதும், அதில் எழுத்துப் பிழை எதுவும் இருக்காது என்பதும் 'கர்மயோகி” இதழின் பிரதான விசேஷங்களுள் ஒன்று. 'இந்தியா”, 'கர்மயோகி” தவிர பாரதி புதுச்சேரியில் வாழ்ந்திருந்த காலத்தில் 'சூர்யோதயம்”, 'விஜயா” ஆகிய பத்திரிகைகளையும் நடத்தியதாகத் தெரிகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்தப் பத்திரிகைகள் யாவும் அடியோடு நின்றுபோய்விட அதன் பின்னரே புதுவையில் பாரதியின் படைப் புகள் யாவும் 'காட்டாற்று வெள்ளம் போல...” கணக்கின்றி வெளிவரத் தொடங்கின. வேதாந் தப் பாடல்கள், சக்திப் பாடல்கள்; பெண் விடுதலைப் பாடல்கள், சுய சரிதை, வசன கவிதை போன்ற தமிழின் உன்னதமான படைப்பு களும், 'கண்ணன் பாட்டு”, 'குயில்பாட்டு”, பாஞ்சாலி சபதம்” ஆகிய மூன்று சிறு காப்பியங்களும் ஏறக்குறைய இக்காலத்தில்தாம் வெளிவந்து கவிதையை மக்களின் கௌரவம் மிகுந்த கலையாக்கமாக மாற்றி அமைத்தது. இவற்றிலெல்லாம் பாரதியின் கவிதை உணர்ச்சி பொங்கிப் பீறிட்டுக் கிளம்பியது; தடைகள் யாவற்றையும் உடைத்துத் தமிழை இலக்கிய சிகரத்தின் மேல் ஏற்றியது. பாரதி தம் படைப்புகளில் மக்களின் வாழ்வையும், அதன் இன்ப, துன்பங்களையும் பெரும் துயரங்களையும், மனித சமூகத்தின் விடுதலை வேட்கையையும், வாழ்வின் மகத்தான இலட்சியங்களையும், மனச் சித்திரங் களையும் அழகுபட, நேர்ப்பட, கவிதா மேன்மையோடு எவருக்கும் அஞ்சாது பதிவுசெய்த இடம் புதுச்சேரி என்பதை அவனின் படைப்புகளே நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

புதுச்சேரிக்கு வடக்கே முத்தியாலுபேட்டை என்ற ஊர் இருக்கிறது. பாரதியின் காலத்தில் அங்கே கிருஷ்ணசாமி செட்டியார் என்கிறவர் இருந்தார். அவர் ரொம்பவும் குள்ளம். நல்ல கெட்டியான, இரட்டை நாடி உடம்பு கொண்டவர். பாரதி அவரிடம் உடலிலோ, மனத்திலோ சோர்வை ஒருநாளும் பார்த்ததில்லை. அவருடைய உடல் உறுதியின் காரணமாகப் பாரதி அவருக்கு 'வெல்லச்சுச் செட்டியார்” என்கிற அருமையான செல்லப் பெயரைக் கொடுத்திருந்தார். அந்தச் செட்டியாருக்கு முத்தையாலு பேட்டையில் சொந்தமாக ஒரு தோப்பு இருந்தது. புதுச்சேரியில் பாரதி மிகவும் விரும்பிப் போகும் இடங்களுள் ஒன்றான அந்தத் தோப்புதான் பாரதி யின் புகழ்பெற்ற 'குயில் பாட்டு” உருவான களம்.

'காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தவழும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்...”

என்று இன்றளவும் புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிற இந்தக் கவிதையைத் தந்த அந்தத் தோப்பு 1914ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும் கடுமையான காற்றும், மழையும், புயலும் அடித்த காலத்தில் எந்தச் சேதாரமுமின்றி தப்பியது மிகவும் சிறப்பான செய்தியாகும். தப்பிப் பிழைத்த அந்தத் தென்னந்தோப்பைப் பற்றி பாரதி 'பிழைத்த தென்னந்தோப்பு...” என்ற தலைப்பில் அருமையான ஒரு கவிதையாய் எழுதியிருந்தான். பாரதியின் கவிதைக்கு காக்கையும், குருவியும், நீள் கடலும், மலையும் மட்டுமல்ல புதுச்சேரியில் இருந்த ஒரு தென்னந்தோப்புக்கூட பாடுபொருளாகி அவன் பாட்டுத் திறத்தை இந்த வையகத் திற்குப் பறை சாற்றியிருக்கிறது.

ஒரு சமயம் பாரதியின் வீட்டருகே ஒரு பாம்பாட்டி வந்தான். அவனைப் பார்க்கக் குழந்தைகளுக்குக் கொஞ்சம் பயமாகவும் அதே சமயம் வேடிக்கையாகவும் இருந்தது. ஒரு பிரெஞ்சுக்காரனின் வீட்டு வேலைக்காரன் பாம்பாட்டிக்குக் காலணா போட்டான். பாரதி தன் நண்பரும் மண்டையும் சீனிவாசாச்சாரியாரின் மகளுமான சிறுமி யதுகிரி மற்றும் சிலருடன் அந்தப் பாம்பாட்டி மகுடி வாசிப்பதையே கேட்டுக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்ததும் பாம்பாட்டிக்கு 'குஷியாகி...” விட்டது. உற்சாகமாக ஊதினான். அவன் மகுடி ஊதுவதையே நீண்ட நேரமாய்க் கவனித்துக் கொண்டிருந்த பாரதிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று தான் போட்டிருந்த மேலாடையைக் கழற்றி அவனிடத்தில் கொடுத்துவிட்டு வெறும் வேஷ்டியுடன் நின்றான். அதைச் சற்றும் எதிர்பாராத பாம்பாட்டி மனம் மகிழ்ந்து பாரதியை வணங்கி விட்டுச் சென்றான்.

வீட்டுக்குத் திரும்பியதும் பாரதியிடத்தில் யதுகிரி கேட்டாள்...

''ஏன் அந்தப் பாம்புப் பிடாரனுக்குப் போய் உங்கள் சட்டையைக் கழற்றிக் கொடுத்தீர்கள்...”

''எனக்கு நாலுபேர் கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள்... அந்த ஏழைப் பாம்பாட்டிக்கு யார் கொடுப்பார்கள். நானே அதைப் பற்றி யோசிக்கவில்லை... உனக்கெதற்கு அந்தக் கவலை...?” என்று பாரதி கொஞ்சமும் தாமதிக்காமல் சிரித்தபடி சொல்ல, யதுகிரி அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

மறுநாள் மாலையில் பாரதி, தான் எழுதிய சில தேசியக் கவிதைகளை நண்பர்களிடத்தில் பாடிக்காட்டிக் கொண்டி ருந்தான். அதிலே ஒன்று 'வந்தே மாதரம் என்போம் / எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்...” என்கிற அற்புதமான கவிதை. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நேற்று அந்தப் பாம்பாட்டி மகுடியில் வாசித்தானே அதே மெட்டில்தான் பாரதி அந்தக் கவிதையை எழுதியிருந்தான் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தி. பாரதி, தன் கவிதைகளுக்காக கண்களை மூடிக்கொண்டு வெறுமனே கனவுலகில் சஞ்சரித்தவன் இல்லை. மாறாக அவன் தன் கவிதைக்கான ஆன்மாவைத் தான் நேசிக்கும் மனித சமூகத்திடமிருந்தே தேர்வு செய்து கொண்டவன்.

ஆனால், அவன் காலத்துப் புதுச்சேரி பாரதியை ஒரு கவிஞனாக ஏற்றுக்கொள்ள முன்வராத ஓர் இலக்கியக் கொடுமையை ஏற்படுத்தியிருந்தது. 'இவனெல்லாம் இங்கிலீசு படிச்சுப்பிட்டுத் தமிழ்ப் பாட்டு எழுதறானுங்க. சுட்டுக்கு முன்னால் வல்லெழுத்து மிகும் என்கிற சாதாரண இலக்கணமே தெரியவில்லை. 'அங்கு கண்டான்...” என்று எழுதுகின்றான். இவனெல்லாம் கவியாம்...” என்று ஏளனமாகப் பாரதியைப் பழித்தவர்கள் உண்டு. அப்போது பாரதி அது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 'நமக்குத் தொழில் கவிதை...” என்று அவன்பாட்டுக்குத் தன் பாட்டுப் பயணத்தை நடத்திக் கொண்டிருந்தான். இன்றைக்கு அவனே ஒரு 'பாட்டுத் தத்துவமாக...”, 'பாட்டின் இயலாக...” எல்லாவற்றுக்கும் மேலாகப் 'பாட்டுக்கொரு புலவன்...” ஆக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

'பலர் இலக்கணப் பயிற்சிகூட இல்லாமல் பத்திரிகைக்கெழுதத் துணிகிறார்கள். அவற்றைப் பத்திராதிபர்கள் சில ஸமயங்களில் பிழை களையாமலே ப்ரசுரம் செய்து விடுகிறார்கள். இதுவுமன்றி இலக்கணப் பயிற்சியற்ற சிலர் பத்திராதிபராக இருக்கும் விநோதத்தையும் இந்நாட்டிலே காண்கிறோம்...” என்று பாரதி, தன் படைப்புகளைப் பிழைகள் நீக்கிய இலக்கண அறிவோடு வெளியிட்டதை அவன் எழுத்துகளின் வழியாகவே நாம் அறியமுடிகிறது. பாரதியின் கவிதை வாரிசான பாரதிதாசன், 'பத்திரிகைகளில் தம்முடைய கவிதை, கட்டுரை வெளிவந்திருக்குமானால் அவை சரியாக வெளியிடப் பெற்றுள்ளனவா என்று மூலப் பகுதிகளோடு வரிமேல் விரல்வைத்து வாசித்து ஒத்தறிவார். தம் படைப்புகள் பிழையின்றிச் சரியாக வெளியிடப்பெற வேண்டும் என்பதில் அவருக்கு அதிக அக்கறை இருந்தது...” என்று பாரதியின் இலக்கண, இலக்கிய அறிவின் மேன்மையை, அவை பற்றிய பாரதியின் வாக்குமூலத்தை அப்படியே வழிமொழிந்து உறுதி செய்கின்றார். ஒருமுறை, புதுச்சேரியில் 'வண்டை... வண்டை”யாகப் பேசிக்கொண்டு போனான் ஒரு குடிகாரன். அதனை நின்று கவனித்த பாரதியார், தம்மோடு அப்போது இருந்த பாரதிதாசனிடம்ட 'பிச்சேரிக்காரன் குடிவெறியிலும் தனித் தமிழை எப்படிப் பேசுகிறான் பார்...? என்று சொல்லி வியந்தார். பாரதியும், தாசனும் தமிழே கதியென்று கிடந்தவர்கள். அவர்களுக்குப் புதுச்சேரியில் குடிவெறிப் பிதற்றலும் கூட கொஞ்சு தமிழின் இனிமையை நினைவுபடுத்தியிருக்கிறது. குறை காண்கிறவர்களுக்கு வேறெதையோ 'வேடிக்கை” காட்டியிருக்கிறது.

'பாரதியார் இலக்கணம் அறியாக் கவிஞன் என்று பண்டிதர்கள் ஆதாரமும், பொருளுமின்றிப் பேசினார்கள். பாரதியார் வெறும் தேசியக் கவி என்று பலர் பேசிக் கொண்டார்கள். பாரதியார் பெண் விடுதலை நண்பன் என்று சிலர் ஆத்திரப்பட்டார்கள். பாரதியார் வெறும் கஞ்சாப் புலவர் என்று ஏசினதையும் என் காதால் கேட்டிருக்கிறேன். 'மார்க்கெட்டில் ஒன்றும் வாங்கத் தெரியாமல், ஒரு கூடை கீரையை வாங்கின பாரதிதானே...? என்ற சிலர் புரளி செய்வதைக் கேட்கும் துர்ப்பாக்கியமும் நான் பெற்றதுண்டு. ஆனால், இவைகளெல்லாம் யோசிக்காமல், ருசுவில்லாமல் எதையும் பேச முடியும் என்பதற்கு அத்தாட்சிகள் ஆகின்றனவே அல்லாமல், பாரதியைப் பற்றிய விமர்சனம் ஆக மாட்டா...” என்று புதுச்சேரியில் பாரதியோடு இருந்த வ.ரா.தம் எழுத்தில் குறிப்பிடுகின்றார். அவரே தொடர்ந்து, 'பாரதியார் புதுச்சேரி வாழ்வில் (அரசியல் கிளர்ச்சியில் தவிர) பூரணமாகக் கலந்துகொண்டு, பத்து வருஷம் அங்கே வாழ்ந்து வந்தார். யார் வீடு என்று பார்ப்பதில்லை; என்ன ஜாதி என்று விசாரிப்பதில்லை. கலியாணத்துக்கோ எந்த விசேஷத்துக்கோ அவரைக் கூப்பிட்டால் உடனே போய்விடுவார். சமூகப் பிரச்சினைகளைப் பற்றி புதுச்சேரியில் பல இடங்களில் பிரசங்கங்கள் செய்திருக்கிறார்.

பத்து வருஷ காலத்துக்குள் புதுச்சேரிவாசிகளின் பூரண அபிமானத்தையும் பாரதியார் பெற்றார் என்று தாராளமாகச் சொல்லலாம்...” என்று பாரதியின் பத்தாண்டுக் காலப் புதுச்சேரி வாழ்வு குறித்த செய்தியைப் பதிவு செய்பவர் கூடவே, 'தமது பாடல்களைத் தமிழர்கள் ஏராளமாக ரசிக்க முன்வரவில்லையே என்ற வருத்தத்தாலோ அல்லது புதுச்சேரியில் தமக்குச் சரியான தோழமை இல்லை என்ற எண்ணத்தாலோ, பாரதியார் மீண்டும் அபின் பழக்கத்தைப் பிடித்துக் கொண்டார். அவர் அபின் சாப்பிடுவது எனக்குத் தெரியவே தெரியாது. 'ஹோமத்துக்குச் சாமக்கிரியை வாங்கிக் கொண்டு வா...” என்று ஒரு நாள் அவர் பாஷையில் ஒரு பக்தனிடம் சொன்னார். அந்தப் பக்தனிடமிருந்துதான் விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். 'நீங்கள் இந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ளக்கூடாது...” என்று பாரதியாரிடம் சொல்ல, எங்களில் ஒருவருக்கும் துணிச்சல் வரவில்லை. அபின் பழக்கம் நாளாவர்த்தியில் அவருடைய உடம்பை நிரம்பவும் கெடுத்துவிட்டது...” என்றும் பாரதி என்கிற 'மகா புருஷனின் மறுபக்கத்தையும்...” நமக்கு மறைக்காமல் சாட்சிப் படுத்தியிருக்கிறார். அவ்வாறே யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்” என்னும் நூலில் 'பாரதி புதுவையில் வாழ்ந்த இறுதிக் காலங்களில் வீட்டுத் தொல்லைகள் காரணமாகவும், அவற்றை மறக்கவும் கடற்கரையில் சில நாட்கள் இரவெல்லாம் கழித்தார்...” என்றும், இதுகுறித்து அங்கே பாரதியைக் காணச் சென்ற வ.வே.சு.ஐயர், 'பாரதியாருக்குக் கஞ்சா சாப்பிடும் வழக்கம் குள்ளச்சாமியின் பழக்கத்தால் ஏற்பட்டது...” என்றும் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறே, 'பாரதி புதையல்” மூன்றாம் தொகுதியில் பாரதியுடன் நெருங்கிப் பழகியவரும், புதுவையில் 'இந்தியா”, 'விஜயா”, 'கர்மயோகி” முதலிய பத்திரிகைகள் நடந்துவந்த காலத்தில் பாரதிக்குத் துணை புரிந்தவருமான பரலி சு. நெல்லையப்பர் எழுதியுள்ள கட்டரையொன்றில் 'பாரதிக்கு வறுமையின் கொடுமையாலும், ஒரு சாமியாரின் கூட்டுறவாலும் புதுவையில் இருந்தபோது கஞ்சா பழக்கமேற்பட்டது...” என்று அதனை உறுதி செய்கின்றார். பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை அவனுக்கு 'கவிதை மகுடத்தையும்”, 'கஞ்சா பழக்கத்தையும்” ஒரு சேர ஏற்படுத்தித் தந்தது அவன் வாழ்வின் விதியன்றி வேறு என்னவாக இருக்க முடியும்...?

புதுவையில்பாரதி வாழ்ந்த இறுதி நாட்களுக்கு அருமையான தொரு ஆதாரமாயிருப்பது யதுகிரி அம்மாள் எழுதிய "பாரதி நினைவுகள்”. பாரதி பற்றிய பல நூல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது. பாரதியின் சொந்த மகளைப்போல் வளர்ந்த யதுகிரி அம்மாள் பாரதிமேல் அளவுகடந்த அன்பும் மரியாதையும் பக்தியும் கொண்டவர். பாரதி பாடிய பாடல்களையெல்லாம் ஒன்றுவிடாமல் தம் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு வந்த அவர் பாரதியின் புதுச்சேரி வாழ்க்கையினுடைய எல்லா விஷயங்களையும் தம் நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

"ஸ்ரீ பாரதியாருக்குச் சங்கீதக் கச்சேரிகளைக் காட்டிலும் பாம்பாட்டி, வண்ணான், நெல் குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர் இவர்களுடைய நாடோடிப் பாட்டுகள் என்றால் மிகவும் இஷ்டம். ஒருநாள் மாலை புதுச்சேரிக் கடற்கரையில் எங்கள் வீட்டுக் குழுந்தைகள் நாங்கள் ஆறு பேர், ஸ்ரீமதி செல்லம்மா, பாரதியார் ஆக எட்டுப் பேரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம். செம்படவர்கள் மீன்களை நிரப்பிக்கொண்டு சந்தோஷமாகப் பாடியபடி தோணியைக் கரையேற்றிக்கொண்டிருந்தார்கள். எங்களோடு பேசிக்கொண்டிருந்த பாதியார் அவர்களுடைய பாட்டுக்குச் சபாஷ் சொல்ல ஆரம்பித்தார். நான், "இது என்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம், ராகம் ஒன்றுமில்லாமல் பாடும் பாட்டை நீர் இவ்வளவு மெச்சுகிறீரே! எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை...” என்றேன்.

“செல்லம்மா: அவர் சுபாவம் உனக்குத் தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக்கொண்டு உடுக்கை அடிப்பவன் வந்தால் இவர் கூத்தாடுகிறார். தன் நினைவே கிடையாது. இப்போது சாயங்கால வேளை, கடற்கரை, அலைகளின் ஒலி, இத்தோடு தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு, கேட்க வேண்டுமா...?”

“உடனே பாரதி எழுந்தார். ஒரு பென்சில், காகிதம் எடுத்துக்கொண்டு அந்தச் செம்படவர்களிடம் போனார். அங்கே இருந்த ஒரு கிழவனை அவர்கள் பாடும் பாட்டை அடிஅடியாகச் சொல்லும்படி சொன்னார். அதில் இருக்கும் பிழைகளைத் திருத்தி எழுதிக்கொண்டு எங்களிடம் வந்தார். "நீங்கள் எல்லோரும் என்னைக் கேலி செய்தீர்களே. பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு உபதேசம் பண்ணினான்...” என்றார் பாரதியார்.

"'செல்லம்மா: ஆகா! நீங்கள் பறையன் முதல் செம்படவன் வரையில் எல்லாருக்கும் சிஷ்யர்தாம். முதல் தெய்வமாகிற மடத்துக் குருவுக்கு மாத்திரம் சிஷ்யர் அல்ல!...

“பாரதி: இதோ பார், செல்லம்மா, அர்த்தமில்லாத மூட வழக்கத்தை எனக்குச் சொல்லாதே. இந்தச் சாரமில்லாத விஷயங்களை என் உயிர் போனாலும் நம்ப மாட்டேன். செம்படவன் அவன் தொழில் செய்தாலும் அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே...” என்று பாரதி சொன்னதோடு இல்லாமல் அதன்படியே வாழ்ந்தும் நமக்கெல்லாம் தன் வரலாற்றின் வழியாகவே வழி காட்டிவிட்டுப் போயிருக்கிறான். அந்த நடைமுறை எடுத்துக்காட்டுக்கு புதுச்சேரி என்கிற புதுவை ஒரு ஞான பூமியாக பாரதிக்கு இருந்திருக்கிறது. "காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள்சூழ் புதுவை” என்று தன் காவியத்தில் பாரதி பாடிய, போற்றிய, புகழ்ந்துரைத்த புதுச்சேரி, பாரதிக்கு எவருக்கும் கிடைக்காத இலக்கிய சிம்மாசனத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் தன்னுடைய தனித்தன்மை மிக்க பிரெஞ்சு மொழிப் புலமையையும் அவனுக்கு இலக்கியக் கொடையாக வழங்கியது. அதன் காரணமாக பாரதி பிரெஞ்சு நூல்களைப் படிக்கவும், பிரெஞ்சுக் கவிதைகளை மொழிபெயர்க்கவும், பிரெஞ்சு அதிகாரிகளுடன் அந்த மொழியில் சரளமாகப் பேசவும் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டான். புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் அவன் எழுதிய "சின்னச் சங்கரன் கதை” கையெழுத்துப் பிரதி காணாமல் போய்விட்டது ஒன்றுதான் அவனுக்கு ஏற்பட்ட இழப்பு. ஆனால், பத்தாண்டுகள் பாரதிக்கு புதுச்சேரி அடைக்கலம் தந்ததே, அதுவும் புதுவைக்குப் பாரதி தன் கவிதைகளினால், எழுத்துகளினால், தன் சிந்தனைகளினால் மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கிறானே, அவ்விரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத இலக்கிய அதிசயமாக இன்றைக்கும் இருந்துகொண்டிருக்கிறது. இனி என்றைக்கும் அந்தப் பெருமை புதுச்சேரியின் திசைகள் தோறும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.

(புதுச்சேரியில் தங்கியிருந்த பாரதியின் பத்தாண்டு வாழ்க்கை கடந்த செப்டம்பர் மாதத்தோடு நூற்றாண்டாக நிறைவடைகிறது. அதனை நினைவு கூரும் கட்டுரை இது.)

துணை நின்ற நூல்கள்:

1. மகாகவி பாரதியார், வ.ரா., சந்தியா பதிப்பகம், சென்னை.
2. பாரதியார் பெருமை, முல்லை முத்தையா, பாரதி பதிப்பகம், சென்னை.
3. பாரதிதாசன் பார்வையில் பாரதி, ச.சு.இளங்கோ, அன்னம் பதிப்பகம், சிவகங்கை.
4. புதுவையில் பாரதி, ப.கோதண்டராமன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
5. பாரதியார் கவிதைகள், சீனி.விசுவநாதன், பூங்கொடி பதிப்பகம், சென்னை.
6. பாரதியார் நூற்றாண்டு மலர், பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு, பாரீஸ்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com