Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
அக்டோபர் 2008 - மார்ச் 2009


ஜெயந்தனின் "இந்தச்சக்கரங்கள்...” குறு நாவல் - ஒரு திறனாய்வு
அறிவுச் செல்வன்

எழுத்தாளரும், சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய திரு. ஜெயந்தனின் காத்திரமான படைப்புகளில் ஒன்றாகிய ''இந்தச் சக்கரங்கள்...” என்ற குறுநாவலைத் திறனாய்வு செய்ய முயல்கிறேன்...

முதலில், இது எழுதப்பட்ட காலத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்வோம். ஒரு படைப்பின் உன்னதம், அதன் உள்ளடக்கத்தில் மட்டுமில்லை. படைக்கப்பட்ட காலச் சூழலோடும் மிகத் தொடர்புடையது. அவ்வகையில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

அன்றைய நிலை என்ன? இன்றைய தொலைக்காட்சிகளின் மெகாதொடர்கள் வகிக்கும் இடத்தை அன்று வகித்த கல்கி, சாண்டில்யன் போன்றோரால் எழுதிக் குவிக்கப்பட்ட காகிதமலைகளின் மீது வேர்க்க விறுவிறுக்கத் தமிழ்வாசகன் கால் வலிக்க ஏறி நடந்து களைத்திருந்த காலம். தொடர்ந்து, ஒருபுறம் ரஷ்ய, மார்க்ஸியப் பாதிப்புகளில் உருவாக்கப்பட்ட இடதுசாரிச் சிந்தனையாளர்களின் வரிசையும், மறுபுறம் திராவிட, பெரியாரியச் சிந்தனைகளால் உருவான முற்போக்குச் சிந்தனையாளர்களின் வரிசையுமாக இரண்டு அணியினரால் தமிழ் வாசகனுக்கு இரட்டைக் கண் திறப்புச் செய்யப்பட்ட காலம் அது. சிறுகதைச் சிகரமேறி ஆடிய ஜெயகாந்தன்களும், சிலரும் களமாடிய காலம். அப்போது முளைக்கிறார் ஜெயந்தன். தன் பேனாவை ஒரு தூரிகையாக, ஆயுதமாக ஏந்தியபடி படைப்புலகில் நுழைகிறார். நுழைந்து சில சிறுகதைகளுக்குப் பிறகு ''இந்தச் சக்கரங்கள்...” என்ற இக்குறுநாவலை எழுதுகிறார்.

இதை ஏன் எழுதியிருக்கிறார்? எனக் கேட்டால், அவரால் எழுதாமலிருக்க முடியவில்லை. அதாவது, இக்கதை அவரை எழுதாமலிருக்க விடவில்லை. கதைக் கருவின் சுமையைத் தாங்க இயலாமல் அந்த அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக இதை எழுதியிருக்கிறார் என்பதைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.

'ஒரு தரமான படைப்பு, படைப்பாளியையே தனது பேனாவாக்கிக்கொண்டு, தன்னைத்தானே பிரசவித்துக் கொள்கிறதோ!” என்று நான் வியந்து யோசிப்பதுண்டு. அப்படி என்னைப் பலநூறு படைப்புகள் யோசிக்க வைத்திருக்கின்றன. ஆனால் முதன்முதலாக வியப்படைய வைத்த முதல் சிறுகதைத் தொகுதி, இதே ஜெயந்தனால் எழுதப்பட்ட “'அரும்புகளை...” என்ற படைப்பாகும். அதை வாசிக்கும்போது எனக்கு வயது 14. படித்தது ஒன்பதாம் வகுப்பு. ஊர் சிறுகுடி. அந்தச் சிற்றூரின் அரசு நூலகத்தில் நான் முதலாகச் சந்திந்த அரூப ஜெயந்தனை என் வாழ்நாளில் எப்போதேனும் நேரடியாகச் சந்திப்பேன், அன்போடும் நட்போடும் சம தகுதியோடும் பழகுவேன் என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்தச் சிறுகதைத் தொகுதியைத் தொடர்ந்து, அவருடன் எனது இரண்டாவது சந்திப்பு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது. அந்தப் பருவத்தில் அவரால் எழுதப்பட்ட ''பாவப்பட்ட ஜீவன்கள்” என்கிற நாவல் தூக்கத்தை என்னிடமிருந்து பறித்துக்கொண்டு, பல நாட்கள்வரை என் இதயத்தின்மீது பாறாங்கல்லாய்க் கிடந்து அசைய மறுத்தது. அதைத் தூக்கிக்கொண்டு ரசனைக்கார நண்பர்கள் சிலரிடமும் அரசனைக்கார நண்பர்கள் பலரிடமும் மணிக்கணக்காகப் பேசிப் பேசிக் கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை. அப்போது, இவரைப் பற்றி என்ன புரிந்திருக்க முடியும் என்று யோசிக்கிறேன். 'இந்த ஜெயந்தன் என்கிற ஆசாமி லேசுப்பட்டவரில்லை. சராசரியும் இல்லை. இவர் கதை எழுதுகிறார். கதை விடவில்லை. எனவே இவர் கதைசொல்லி அல்ல. இவர் கதை சொல்வது கதைக்காக அல்ல. கதை என்ற வடிவத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அதைப் பயன்படுத்தி இவர் வாசகனுக்குத் தர விரும்புவது வேறு ஏதோ ஒன்று!” என்று மட்டுமே புரிந்தது.

இப்போது புரிகிறது, இவர் கதையைப் பயன்படுத்தி வாழ்க்கையை எழுதுகிறார் என்னும் உண்மை. எதனோடும் ஒப்பிட முடியாத, எதனோடும் உவமிக்க முடியாத 'வாழ்க்கை”யை எழுதுகிறார். வாழ்வின் வலியை எழுத்தில் பிழிகிறார். வாழ்தலின் மகிழ்ச்சியைப் பேனாவால் பிரசங்கம் செய்கிறார். வாழ்க்கையைப் பேனாவால் விமர்சிக்கிறார், கொண்டாடுகிறார். இலக்கியத்தைக் கண்ணாடியாக்கிச் சமூகத்தின் மூஞ்சிக்கு முன்னே வெறுமனே பிடித்தபடி நிற்கிறார். இந்தச் சமூகம் தனது முக விலாசத்தை, முக விகாசத்தை, அழகைத் தானே கண்டுகொள்ளும் கண்ணாடி களைத் தயாரித்துத் தருகிறார். சுருங்கச் சொன்னால் வாசகனிடம் வந்து 'சமூகத்தில் வாழ்!” என்றும், 'சமூகத்தையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்!” என்றும் இரட்டைக் குதிரைகள் மீதேறிச் சவாரிசெய்யக் கற்றுக் கொடுக்கிறார். அப்படிப்பட்ட இவரது மற்றொரு முயற்சிதான் ''இந்தச் சக்கரங்கள்” என்ற இக்குறுநாவல்.

முதலில், வழக்கம்போல, பழக்க தோஷத்தில் 'ஹீரோ யார்? ஹீரோயின் யார்?” என்று தேடினால், ஹூம்... கதாநாயகர்களாக, பாட்டுடைத் தலைவர்களாக, பெத்தம் பெரிசுகளாகக் கடவுள்கள் காட்சியளித்த காலம் மலை யேறித்தான் போய்விட்டது. என்ன செய்வது? கடவுள்களை இழுத்துக் கீழே தள்ளிவிட்டுப் பேரரசர்களும், அரசர்களும், சிற்றரசர்களும் ஒருவர் பின் ஒருவராய் அந்தப் பீடத்தில். அவர்களையும் நிம்மதியாய் வாழ விடவில்லை இந்த ஜமீன்தாரர்களும், நிலப் பிரபுக்களும், பெரும் பணக்காரர் களும், செல்வாக்குள்ள முக்கியஸ்தர்களும்...

ஆக, கதாநாயக பீடம் கரைந்து, காலப் போக்கில் மூட்டை சுமப்பவரை, துணிவெளுப்பவரை, கூலித் தொழிலாளியை, குப்பை வண்டிக்காரரை, மலம் அள்ளுகிறவரைப் பற்றி யெல்லாம் அர்த்தமும் பொறுப்பும் மிக்க படைப்புகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஏனென்றால், ஆசீர்வதிப்பவர்களுக்கும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களுக்கும் மட்டும் உரியதல்ல வாழ்க்கை. சபிக்கப்பட்டவர்களுக்கும் தண்டிக்கப்பட்டிருப்பவர்களுக்கும்கூட வாழ்க்கை வழங்கப் பட்டிருக்கிறது. அதை அவர்கள் முழுமையாக வாழ்ந்து நிறைவேற்றுகிறார்கள். வேறுவழியில்லை. வாழ்க்கையை வாழ்ந்துதான் தீர்த்தாக வேண்டும். வேறெந்த வகையில் அதை விட்டு விலகிவிட முடியும்?

எனவே 'கீழ்கள்” என்று அடையாளப்பட்டவர்களின் வாழ்க்கை இடம் பெறாத இலக்கியம் இன்று முழுமை பெறாது. சமூகம் என்பது அவர்களைச் சேர்த்துத்தான். வாழ்க்கை என்பது அவர்களுக்கும் உரியதுதான். இலக்கியம் என்பது அவர்களைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களுக்கும் உரியது. அந்த அடிப்படையில் நமது ''இந்தச் சக்கரங்கள்” குறு நாவலில் 'ஹீரோ”வைத் தேடுகிறோம். காணவே காணோம். பதிலாகக் கதாநாயகி வருகிறாள். ஆம்! கிருஷ்ணவேணி என்கிற ஒரு பெண்ணின் கதைதான் இந்தக் குறுநாவல்.

முதல் வரியிலிருந்தே நேரடியாகக் கதை தொடங்கிவிடுகிறது. கடைசி வரியிலும் கதை முடியவில்லை. மறுபடி தொடங்குகிறது பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தைப் போல. ஆனால் 'முற்றும்” என்ற புள்ளியிலிருந்து மறுபடி தொடரும் இந்தக் கதையின் முடிவில் கிருஷ்ணவேணி தொடங்க தனது தாயார் பாத்திரத்தைக் கிருஷ்ணவேணி வகிக்க ஆரம்பிக்கிறாள். இப்படியாக அந்த முடியாத கதை முடிகிறது.

அவர்களை நீங்கள் புத்தகத்தில் சந்தியுங்கள். அவர்களைச் சந்தித்தபின், இங்கே நான் வந்திருக்கிறேன். ஒரு பெண்ணின் வாழ்க்கையை இவ்வளவு நுட்பமாக, இவ்வளவு கூர்மையாக, இவ்வளவு நேர்மையாக, இதுவரை எழுதப்பட்டிருக்காத தரத்தில் தமிழில் முதன்முதலில் படைத்துக் காட்டிய ஜெயந்தனைப் பெண்கள் உலகம் எத்தனை பாராட்டினாலும் தகும்.

பெண்ணை முதன்மைப்படுத்துகிற முதல் எழுத்தாளர் ஜெயந்தனில்லை. ஜெயகாந்தனின் 'அக்கினிப் பிரவேசம்” முதல் "சில நேரங்களில் சில மனிதர்கள்” வரை பெண்களே பிரதானப்படுத்தப்பட்ட இலக்கியங்கள் உண்டு. ஏன்? சிலப்பதிகாரக் கண்ணகி தொட்டு, மாதவி, மணிமேகலை எனப் படைப்புகள் தமிழில் உண்டுதானே? என்றாலும், முதல் வரியிலிருந்தே நேர்கோட்டில் செல்லுகிற முழுமை யான ஒரு பெண்ணின் கதையாக, கடைசிவரை அவளது கதையாக மட்டுமே முடிந்து விடுவதால், பெண்களுக்கு நேர்மை செய்கிறது இந்தக் கதை.

அவ்வகையில் இன்றைய பெண்ணியவாதிகளால் 'எங்களது முன்னத்தி ஏர்பிடித்த முதல் உழவாளி” என்று கொண்டாடப் பட்டிருக்க வேண்டியவர் எழுத்தாளுமை கொண்ட இந்த ஜெயந்தன். பெண்ணைத் தனது போகப் பொருளாக மட்டுமே பார்க்கத் தெரிந்த நிலப்பிரபுத்துவச் சிந்தனையிலிருந்து தொடங்குகிறது நம் சிந்தனை மரபு. அதிலிருந்து விலகி, பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்றன பேசி சம உரிமையும், சம வாழ்க்கையும் கொண்டவர்களாகப் பெண்களைப் புரிந்துகொள்ளச் சொல்கின்றன நமது திராவிட யுகம் தந்த மறுமலர்ச்சி இலக்கியங்கள். அதிலிருந்து வேறுபட்டு, பெண்ணைப் புரட்சிக்காரியாக, வீராங்கணையாக, போராட்டக்காரியாக ஆக்கிவிட முயலுகின்றன மார்க்ஸியப் பெண் பாத்திரங்கள் கொண்ட ரஷ்யப் படைப்புகள்.

''ஆண்களே, 'உங்கள்” உலகத்திலிருந்து 'நமது உலகத்திற்கு” வாருங்கள். சமூகவாதியாகிய பெண்ணை சக மனுஷியாக, ரத்தமும் சதையும் உணர்வும் அறிவும் கொண்ட பூரணத்துவமானவளாகப் பாருங்கள்!” எனப் பொறுப்புடன் பேசுகின்றன பெண்ணியவாதிகளின் குரல்கள். 'பெண்களே, ஆண்கள் உங்கள் எதிரிகள். அவர்களை ஒரே நேரத்தில் உங்கள் உடலாலும் மூளையாலும் வீழ்த்தித் தோற்கடிக்கப் போரிடுங்கள்!” என்று அறைகூவுகின்றன ஆவேசப் பெண்ணியத்தின் அவசரக் குரல்கள். இவற்றிலிருந்தெல்லாம் விலகி- ஒதுங்கியல்ல - வேறுபட்டு - உயர்ந்து, இவற்றுக்கு மாறாக, எவ்விதப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல், கருத்துத் திணிப்பின்றி, பாடம் நடத்தாமல், இயல்பாகவும், சரளமாகவும், முழுமையாக கிருஷ்ணவேணி என்கிற பெண்ணின் வாழ்க்கையைப் பிரதானப்படுத்தி மட்டுமே காட்டுகிறது ஜெயந்தனின் பேனா.

ஆம்! இந்தக் கதை அவளுக்காகப் பரிந்து பேசவில்லை. அவள் புகழ் பாடவில்லை. அவளைக் கதாநாயகியாக உயர்த்திப் பிடிக்கவில்லை. வெறுமனே அவள் கதையைச் சித்தரிக்கிறது. எவ்வித உள் நோக்கமுமின்றி, ஒரு பார்வையாளரைப் போல, மானசீகமாக அவளை நம் கண்முன் வாழ வைத்து, வாசகனைப் பார்க்கச் சொல்லிவிட்டு தான் இருக்குமிடம் தெரியாமலேயே நின்று கொள்கிறார் ஜெயந்தன். இதில் அவரது எழுத்து யுக்தி (பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீ) யும் இருக்கிறது. ஆனால், அதையும் மீறிய நேர்மை தூக்கலாகவே தெரிகிறது. அவர் ஒளிந்துகொண்டாலும், அவரது இலக்கியத் தரத்தை அவரால் மறைக்க முடியவில்லை. அது, வரிக்குவரி - பாரதியின் கவிதைகளில் போலவே, பிரகாசித்துக் கொண்டே உடன் வந்தபடியிருக்கிறது.

அது, அப்படித்தான் இருக்க முடியும். தாழம்பூ ஒளிந்து கொண்டாலும் அதன் வாசத்தை ஒளித்துக்கொள்ள முடியாதல்லவா? ஓர் எழுத்தாளனின் தரத்தை எழுத்து மேலும் மேலும் வெளிக்கொணருமே தவிர, ஒருபோதும் அதில் அவன் தன்னை ஒளித்துக்கொள்ள முடியவே முடியாது. இன்றைக்கு ஜெயந்தன் இருக்கும் உயரத்தை அவர் அடைவதற்கான தகுதியும், முயற்சியும் அவரது எல்லாப் படைப்புகளிலும் போலவே இந்தப் படைப்பிலும் அன்றைக்கே அடையாளங்கொண்டிருக்கின்றன. விளையும் பயிர் முளையிலல்லவா?

சரி, கிருஷ்ணவேணியின் கதை மட்டுமா இந்தப் படைப்பு? இல்லை. குடும்பம் - கூட்டுக் குடும்பம் - தனிக்குடும்பம் - என்கிற பாங்குகள் மீது ஜெயந்தனுக்கு இருக்கும் கூர்மையான பார்வை- கவனிக்கவும்- அவரது விமர்சனமல்ல, - அவரது பார்வை - படைப்பெங்கும் பரவி நிற்கிறது. குடும்பம் என்கிற அமைப்பின்மீது இந்தப் படைப்பில் ஜெயந்தன் எவ்வித விமர்சனமும் செய்யவில்லை. எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால், படைப்பின் முடிவில் அந்த வேலைகள் வாசகனின் தலையில் வந்து விடிகின்றன. குருவி தலையில் பனங்காய் போல வாழ்க்கை பற்றிய கனமான கேள்விகளும் சமூகச் சிக்கல் மற்றும் சிக்கல் சமூகம் பற்றிய சிந்தனைகளும் 'டன் டன்”னாக நமது மூளைக்குள் உற்பத்தியாகத் தொடங்கிவிடுகின்றன. அதுதான் எழுத்தின் வெற்றி. எழுத்தாளனின் வெற்றி.

ஓர் உன்னத எழுத்தாளனின் 'இருத்தல்” எதிலிருக்கிறது தெரியுமா? அது, புன்னகையுடன் சிரித்தபடி - அல்லது பேனாவை பிடித்தபடி - அல்லது பேனாவைக் கடித்தபடி - அல்லது முகவாயைக் கைவிரல்களால் தாங்கி யோசனை யில் லயித்தபடி - இப்படி விதவிதமாக 'போஸ்” கொடுப்பதில் இல்லை. ஒரு தரமான எழுத்தாளனின் இருப்பு விதவிதமான விருதுகளைப் பெற்றோ - அல்லது விதவிதமான விருதுகளை வாங்கியோ- கவனிக்கவும்- 'வாங்கியோ” பிரபலமாவதில்லை. தன்னைப் பிரச்சாரம் செய்துகொள்ளும் வாய்ப்பாகத் தனது எழுத்துத் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் மலினமான யுக்தியில் இல்லை ஒரு எழுத்தாளனது இருப்பு. மாறாக, தனது எழுத்தின் முற்றுப்புள்ளிக்குப் பிறகு, தனது சிந்தனையின் தொடர்ச்சியை வாசகனுக்கு மடைமாற்றி விட்டு, அடுத்த கட்டத்திற்குத் தான் நகர்ந்துவிடுவதில்தான் இருக்கிறது அவனது இருப்பு.

தான் அடைந்த உயரத்தை, தான் உணர்ந்த வாழ்க்கையை, வாசகனிடம் பரிபூரணமாக ஒரு வள்ளல்போல் வழங்கி விடுபவன்தான் எழுத்துக்கு நேர்மை செய்யும் இலக்கியவாதி. அவன் வழங்கிய கொடையை முதலீடாக்கிக் கொண்டு உழைக்கின்ற பெரும்பணி தற்போது வாசகனின் தலையாய வேலையாகிவிடுகிறது. எழுத்தாளனோ தற்போது மீண்டும் வேதாளம் வீழ்த்தும் விக்கிரமாதித்தன்போல் முதலிலிருந்து மற்றொரு படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கி விடுகிறான். இந்த நாவலில் நடுநடுவே பளிச்சிடும் சில வரிகளையேனும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

''எங்க சின்னம்மா யாரையாச்சும் ஒரு ரெண்டு இட்டிலிக் கடனுக்கு ஒரு வார்த்தை கேட்டுச்சுன்னா அவன் மூணு தரம் தூக்குப் போட்டுக்கணும்.” - (பக்:6)

''அவள் பாடலைக் கேட்டால், உண்மையில் மலட்டு மேகமும் கண்ணீர் சுரக்கவே செய்யும்.” - (பக்:7)

''அவர்கள் போராட்டத்துக்கு இரண்டு நிரந்தரக் காரணங்கள் உண்டு. முதல் காரணம்: அவர்கள் இரண்டு பேரும் சம்பாதித்தது, இரண்டாவது காரணம்: அவர்கள் இரண்டு பேருமே போதாமல் சம்பாதித்தது...” - (பக்:8)

''ஜோசியர் கூற்றை அம்மா நம்பினாளோ, இல்லையோ, கிருஷ்ணவேணி நம்பினாள். அதற்கு முக்கிய காரணம், அதை நம்புவதில் இருந்த சந்தோஷம்.” - (பக்:13)

''மாப்பிள்ளை தலைக்கு மேலே முக்கால் பங்கு இடம் காலியாக இருந்தது. தலைக்கு உள்ளேயும் இதே நிலைதான் இருக்க வேண்டும் என்பதை முக விலாசம் பேசியது. உயரம் நாலடி ரெண்டங்குலம். நிறம் நெய்வேலி.” - (பக்:14)

''தங்கள் வறுமையை ஏதோ ஒரு பாவச் செயல்போல் பொத்திப் பொத்தி மறைப்பார்கள். - (பக்:24)

''ஒரு குழந்தையால் எப்படி தன் தாயின் சகல ஈடுபாடுகளையும் தன்பால் இப்படி ஈர்த்து வைத்துக்கொள்ள முடிகிறது? (பக்:29)

''ஒரு பெண் உரத்த குரலெடுத்து அதன் உச்சத்தில் எவ்வளவு வெளிப்படுத்த முடியுமோ அதைப் போல் பத்து மடங்கு அழுத்தத்தை சாதாரணமாக வாயிலுக்குக்கூடக் கேட்காத தொண்டையில், தன் தொனியிலும் சொல்லிலும் ஏற்றி அவள் பேசினாள். - (பக்:32)

''இதெல்லாம் ரெம்ப வசதியான வீட்டுப் பெண்களுக்கே லாயக்கான காரியங்கள். வந்து உட்கார்ந்து கொண்டால், வருஷம் பத்தானாலும் தாங்குகிற போக்கியதை தாய் தகப்பனுக்கு இருக்க வேண்டும். - (பக்:35)

''சிலருக்கு தாட்சண்யத்துக்குப் பயந்து கொண்டு கடன் கொடுக்க வேண்டி வரலாம். அப்புறம் முகத்தை முறைத்துக்கொண்டு கடன் வசூல் செய்ய வேண்டும். கடைசியில் சிநேகிதமும் கெட்டு, வியாபாரமும் கெட்டு, காசும் போய்விடும். - (பக்:53)

''அது சரி. வியர்வை மட்டுமே யாருக்கு தங்கத்தை உருட்டித் தந்திருக்கிறது? - (பக்:56)

''அந்தப் பால், பாத்திரத்தில் மட்டுமல்ல, கிருஷ்ணவேணியின் நெஞ்சிலும் இறங்கிய ஒன்று. - (பக்:58)

''இவன் எங்கம்மா பொளைக்கப் போறான்? இவனுக்கு ரெண்டு கணக்கெழுதத்தான் தெரியும். அது மாதிரியே வியாபாரம் நடத்தத் தெரியாது: கடையில் வாங்கவும் விக்கவும் ஒரு தராசு வச்சிருக்கானே. இவன் உருப்படுவானா? - (பக்:63)

''எந்த மூலையிலிருந்து எந்த மாயக்கை வந்து இருக்கிற காசைப் பிடுங்கும் என்று சொல்ல முடியவில்லை. குடும்பம் என்பது அட்சய பாத்திரத்திற்கு எதிர்ப்பதமாக இருந்தது. அட்சய பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறைவதே இல்லை. குடும்பத்தில் போடப்போட நிறைவதே இல்லை. - (பக்:65)

''வாழ்க்கை ஓட்டத்தை வாழ்க்கைச் சக்கரமென்று சொல் கிறார்கள். அது அவரவர் தலைக்குமேல், படுக்கை வாக்கில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும், செல்வம், வறுமை, நல்லது, கெட்டது, லாப, நஷ்டம் என்பவையெல்லாம் அதன் ஆரக்கால்களேயென்றும், அந்தக் கால்கள் அவர்கள் தலைக்கு மேலாக வரும்போது அவையவைகளுக்குரிய பலாபலன்கள் அவரவர்களுக்குச் சித்திக்கும் என்றும் விளக்கப்படுகிறது. இந்தச் சக்கரம் நிற்பதே இல்லையாம். சுழன்று கொண்டேதான் இருக்குமாம்...” (பக்:71)

''இங்கே சந்தோஷம், நிம்மதி என்பதெல்லாம் ஒரு கஷ்டத்திற்கும் அடுத்த கஷ்டத்திற்கும் இடையில் விட்டுக்கொள்ளும் ஆசுவாசப் பெருமூச்சுகள் மட்டும்தானா? - (பக்:94)

''அவளது அந்தக் கனவுகளும் நம்பிக்கைகளுமோ ஓர் உடலை அண்டி, அதை உண்டு முடித்ததும் வேறோர் உடலைத் தேடிப் போய்விடும் நோய்க் கிருமிகளைப் போல, தாயைக் கபளீகரம் செய்துவிட்ட திருப்தியில் இப்போது மகளை அண்டியிருந்தன. - (பக்:95)

இவை யாவும் சம்பவங்களால் நிரம்பி வழிகிற சராசரிக் கதைகளிலிருந்து இக்தையை மேன்மைப்படுத்தும் வாசகங்கள். தீவிர வாசகர்களே தீவிர எழுத்தாளனின் இலக்கு. கொழுத்த மீன்களை அடைந்துவிட அவன் இடுகின்ற தூண்டில்களே அவனது படைப்புகள். அப்படி, ஜெயந்தனின் தூண்டிலில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படும் அறிவுப் பசியெடுத்த அவசர மீன் நான்.

(24-08-2008இல் மணப்பாறையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நீண்ட, சுவையான பேச்சிலிருந்து கத்தரித்தெடுத்த சொற்கோவை இது.)

"இந்தச் சக்கரங்கள்”, குறுநாவல், ஜெயந்தன், விலை ரூ.70/- தோழமை வெளியீடு, 5-டி, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com