Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு 2007 - பிப்ரவரி 2008


பாலை
நீலமணி

எல்லாம் இந்த பாரதியால் வந்தது. அவருடைய நூற்றாண்டுக்காகவென்று ஒரு கவிதையெழுதி வானொலிக்கு அனுப்ப, அதை அவர்கள் ஏற்க, ஆடிக்கு ஒன்று ஐப்பசிக்கு ஒன்று என்று ஏதாவது கவிதை எழுதியனுப்புவதும் ஏற்றதாக இருந்தால் அவர்கள் ஏற்பதுமாக ஒரு இது...

காடுகள் காணாமற்போவதைப்பற்றி எனக்கு எப்போதுமே ஒரு கவலை. இதைப்பற்றி ஒன்று எழுதியனுப்ப, அழைப்பு வந்தது இரண்டு நாள் படிக்கச் சொல்லி. ஒரு கவிதையை எப்படி இரண்டு நாள் படிப்பது? போனால், காட்டுக் கவிதை ஒரு நாளைக்கு, மற்றொரு நாளைக்கு வேறு ஒன்று வேண்டும். இங்கேயே இடமெல்லாம் இருக்கிறது. உட்கார்ந்து எழுதிவிடுங்களேன். குடும்ப நயம். சேமிப்பு... இப்படி எதுவாவது - என்றார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். குடும்ப நலம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. சேமிப்புபற்றி எழுதிப்பார்க்கிறேன் என்று தொடங்கியதில் நாலைந்து கருத்துகள் தட்டுப்பட்டன. உட்கார்ந்தால் எழுதிவிட நாம் என்ன ஆசுகவியா? ''வீட்டுக்குப்போய் ராத்திதி எழுதிக் கொண்டு காலையில் வருகிறேனே...’’
'சரி; என்றார்கள். அப்படியே இரவு எழுதியது காலையில் பதிவு செய்து கொள்ளப்பட்டது.

பல மாதங்களுக்குப் பிறகு ஒரு கடிதம் வந்தது. டெல்லியில் நடக்கிற அனைத்துமொழிக் கவியரங்கில் படிக்க அந்தக் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று. குடியரசு தின சமயத்தில் வருடா வருடம் அனைத்து மொழிக் கவியரங்கு நடக்குமாம்.

என்னவோ தப்பு நடந்திருக்கிறது. இப்படிப் பயணம், பாராட்டு, பரிசு இதெல்லாம் பெறுவதற்கு என்று தனிஜாதி இருக்கிறதே. நமக்கு எப்படி....?

''நம்ம மாநிலத்திலுள்ள நிலையங்களில் அந்த ஆண்டில் படிக்கப்பட்ட கவிதைகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம்.’’

'' ஷுட் பி ப்ரௌட்.’’

''கவிதாயினி. கவிதாயனர்களுடைய போட்டியினிடையே உங்கள் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.’’

''இந்த டைரக்டர் மலையாளக் கவிஞர். படைப்பை மட்டுமே கருதித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.’’

''கன்கிராசுலேஷன்ஸ்.’’

''நிறைய வேலை இருக்கிறது எங்களுக்கு. கவிதையை எல்லா நிலையங்களுக்கும் அனுப்பவேண்டும். அங்கங்கே மாநில மொழிகளில் கவிதை வடிவில் மொழி பெயர்க்க வேண்டும்.’’

கையையும் காலையும் வைத்துக்கொண்டு சும்மாயிருந்திருந்தால் இந்த வம்பெல்லாம் வந்திருக்குமா? கவிதை எழுதுகிறேன். கவிதை எழுதுகிறேன் என்று எதையாவது செய்துவைக்க வேண்டியது. இப்போது யார் டில்லிக்குப் போவது?

கிக்கின்பாதம்சில் புத்தகங்களை வேடிக்கை பார்க்கவென்று பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் போனதுண்டு. அதைத்தவிர ரயிலில் எல்லாம் ஏறியது இல்லை; அதுவும் பெரிய ரயிலில் குழுவாக வடநாடு டூர்போன மைத்துனரை (மனைவியின் தமையனார்) வழியனுப்பப் போனபோது சிமெண்ட் பிளாட்பாரத்தில் தள்ளுவண்டிகளின் இரும்புச் சக்கரங்களின் கர்ண கடூரமும். அரக்கத்தனமான சக்தியுடன் வந்து நின்ற வண்டித் தொடரின் அமானுடமும் அசத்தினது உண்மை.

மொழி தெரியாத பிரதேசத்தில் அவ்வளவு தூரமா? ஒன்றரைநாள் போக, ஒன்றரைநாள் வர. இரண்டாயிரம் கி.மீ. தனியே இவ்வளவு தூரமா. இவ்வளவு நாளா? இதுவே இராத்தூக்கத்தைப் பறித்தது. எவ்வளவு செலவு ஆகும்? ரயில்வே அட்டவணையைப் பார்த்தால் போக 475ரூபாய். வர 475 ரூபாய். தங்க 5நாள் ஒரு இரண்டாயிரம் ரூபாய் ஆகலாம். உறவினர்களிடம் கேட்டு எங்காவது வாங்கித் தரச்சொல்லலாம். கடன் கிடைத்தது. ஒரு சீட்டு பதிவுசெய்து கொண்டும் ஆயிற்று.

எங்கே தங்குவது? வானொலியில் செய்தி வாசிப்பவன் வீட்டு முகவரி தந்தார் ஒரு நண்பர். தமிழர் வாழும் பகுதியில் அறிமுகமான ஓட்டல் முகவரி தந்தார் மற்றொரு நண்பர். தமிழ்நாடு ஹவுசில் இருப்பிடம் கேட்டு விண்ணப்பித்ததில் தலைமைச் செயலகத்தில் பெரிய தமிழ் அதிகாரியாக இருக்கும் நண்பர் தனியாகவா போறீங்க? யாராவது துணை இருந்தால் நல்லது. இருபத்தொன்றாம் தேதியா போறீங்க? வேறு யாராவது அன்று போறாங்களா என்று பார்க்கிறேன் என்றவர். '' ஹேவ் பீன் ச்சோசன் öபார் தி சிங்குலர் ஆனர் ஆöப் ரெப்ரசென்ட்டிங் டமில்நாடு இன்தி ஆல் இந்தியா செமினார் ஆöப் பொயட்ஸ்....’’ என்று உச்ச சலுகைக் கட்டணத்தில் இருப்பிடம் ஒதுக்கப் பரிந்துரைத்தார். சம்பந்தப்பட்ட இடஒதுக்கீடு அலுவலர். டியூட்டியில் போனால்தான் உச்ச சலுகை, லீவு போட்டுத்தானே போறீங்க. உங்களுக்கு இடைநிலைச் சலுகைதான் உண்டு. இடம் நிச்சயம் - என்றார்.

நல்ல உடம்பாயிருந்தால் பரவாயில்லை. ஒரு நாளைக்கு நல்லாயிருந்தால் ஒரு நாளைக்கு தகராறு பண்ணும். இந்த மொழியைச் சொல்கிற பொறுப்பைத் தந்திருக்கிறார்கள். ஒழுங்காய் அதை நிறைவேற்ற வேண்டும். டாக்டரிடம் சோதித்துக்கொண்டதில் 'லேசா பிரசர் இருக்கு’ என்று சிப்லார் 10 எம். ஜி. அரைமாத்திரை வீதம் எழுதிக்கொடுத்தார்.

மிசஸ்ஸையும் அழைத்துப்போங்களேன். பஸ்ட் கிளாசைக் கேன்சல் பண்ணிவிட்டு செகண்ட் கிளாஸ் இரண்டு டிக்கெட் எடுத்துக்கொள்ளுங்கள். ஆக்ரா எல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள். தெரிந்த டூரிஸ்ட் கம்பெனிக்கு லெட்டர் தருகிறேன் என்றார்.

வடநாட்டு டூர்கள் நடத்தியிருந்த நண்பர், டில்லி நகர மேப் முதலிய டூரிஸ்ட் பிரசுரங்களைத் தந்தார். நாளாகிவிட்டதே, சீட்டு கிடைக்குமா? எதற்கும் பார்ப்போம். சீட் இருந்தது. இரண்டு டிக்கட் வாங்கிக் கொண்டேன். முதல் வகுப்பை ரத்து செய்துவிட்டேன். நன்றாகத் தூங்க முடிந்தது.

ஜவுளிக் கடை வைத்திருந்த நண்பரிடம் மூன்று செட் சட்டை பேண்ட் துணி கடனுக்கு வாங்கித் தைத்துக் கொண்டாயிற்று. இன்னொரு நண்பர் ரக் என்று சொல்லப்படுகிற கனமான கம்பளிப் போர்வை, ஸ்வெட்டர், குல்லாய், இரண்டு சால்வை, லேடிஸ் ஸ்வெட்டர் எல்லாம் தந்தார். இவையே ஒரு பை ஆகிவிட்டன. பையும் அவரே தந்தார்.

வடக்கே மசூதிகளுக்கெல்லாம் நிறையப்போய்வருகிற நண்பர். நீங்கள்போகிறபோது அங்கே குளிர் உச்சமாக இருக்காது. குளிரைத் தாங்க அங்கே எல்லாரும் அதிகம் நான்வெஜ் சாப்பிடுவார்கள். நீங்கள் சாப்பிடமாட்டீர்கள். பதிலுக்கு நிறைய ஸ்வீட் சாப்பிடுங்கள். குளிரில் உதடு வெடிக்கும். அதற்கு வாசலின் தடவிக்கொள்ளுங்கள் என்றார்.

நான்கு நிமிடக் கவிதையை மூன்று நிமிடமாக வெட்ட வேண்டும் என்றார்கள். வெட்டினேன். ஏ.எஸ்.டியைப் பார்க்கவேண்டும் என்றார்கள். அங்கே பிரபல இலக்கிய மாத இதழின் நிறுவன ஆசியர் பேசிக் கொண்டிருந்தார்.

'மரபுக் கவிதை எழுதுவதும் நீங்கள்தானா?’

'ஆமாம்.’

'இப்போது நீங்கள் படிக்கப்போவது மரபா. புதிதா?’

'புதுக்கவிதைதான்.’

'இந்தத் தொகுப்பு நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.’

'உங்கள் பத்திரிகைக்குக்கூட விமர்சனத்துக்கு அனுப்பியிருக்கிறேன். விமர்சனம் எழுத யாருக்கோ அனுப்பியிருப்பதாகப் பொறுப்பாசியர் எழுதியிருந்தார்.’

'சரி. நிறையக் கம்பளி எடுத்துப்போங்கள். அங்கே நல்ல குளிர்.’ இவ்வளவு பிரபல இலக்கியவாதி நம் குளிர்பற்றியும் நினைத்ததைப் பற்றி எனக்கே ரொம்ப இதாக இருந்தது.

எஸ்.டி.யைப் பார்க்கலாம் ஒரு பார்மாலிட்டிக்கு என்றார் ஏ.எஸ்.டி. நிறையத் திரைபோட்டுக்கொண்ட இருட்டறை. 'எத்தனை தொகுதி வந்திருக்கிறது?’ 'மூன்று. நான்காவது அச்சிலிருக்கிறது.’ 'இந்தப்பிரதிகளை நூலகத்தில் சேர்த்துக் கொள்கிறோம்.’ அவர் பதிமூன்றோ முப்பத்தொன்றோ தொகுதி எழுதியிருக்கிறாராம். 'சரி, இது ஒரு அனுபவமாக இருக்கும்’ என்றார்.

எஸ்.டி அறிவுறுத்தியதன்பேரில் புகைப்படம் எடுத்தார்கள்.

தங்க இடம் ஒதக்கத் தகவல் அனுப்பப்பட்டதா என்று பார்க்கவேண்டியிருந்தது. நல்ல வேளையாக அந்தப் பிரிவு அலுவலர் முன்பு மதுரையில் பயிற்சி பெற்றபோது பயிற்சி நிலையத் தோழர். பக்கத்து வீட்டில் தங்கியிருந்தவர். ஒரு தடவை அவருக்கு ஜுரம் வந்திருந்தபோது கஞ்சியெல்லாம் வைத்துக் கொடுத்ததாக மனைவி சொல்லியிருக்கிறாள். அங்கிருந்து வந்தபோது கண்டு பேப்பர் போடுபவர்க்குய பணத்தைக்கூட அவரிடம்தான் தந்து சேர்ப்பிக்கச் சொல்லியிருந்தோம். குடும்பத்துடன் தங்க இடம் ஒதுக்க டெலக்ஸ் பண்ணி நகல் தந்தார்கள்.

என்னென்ன உடை எடுத்துப்போகிறீர்கள்? ஸ்வெட்டர் மட்டுமா? அதெல்லாம் போதாது. வீடுவரைக்கும் வரமுடியுமா. கோட்டு தருகிறேன் என்றார் மற்றொரு நண்பர். இடார்சி தாண்டினால் காலெல்லாம் சிலிர்க்கும் என்று வேறு சொன்னார்.

புறப்படுவதற்குமுன் வந்துபோகச் சொன்னபடி டாக்டரைப் பார்த்துச் சில மாத்திரைகள் வாங்கிக்கொண்டு, நண்பன் வீடு சென்று கோட்டு வாங்கிக்கொண்டு ஒரு காவலுக்காக அமிர்தாஞ்சனம், அனால்சின், இன்டஸ்டோபான் எல்லாம் மருந்துக்கடையில் வாங்கிக்கொண்டு... தயார்.

விடியலில் புறப்பட்டோம் பஸ்ஸில். அலுவலக இலக்கியச் சங்க நண்பர்கள் வழியனுப்ப நிலையத்துக்கு வந்தார்கள். இட்டிலி, புளி சாதம், தயிர் சாதம், பிஸ்கெட் பொட்டலங்களை உறவினர்கள் எடுத்துக் கொண்டுவந்திருந்தார்கள்.

சரியாக 7.21க்கு சென்னையிலிருந்து கழன்று கொண்டது ரயில். மண்ணின் மைந்தர்கள் என்பது ஒன்றும் பொருளற்ற பிரயோகம் அல்ல. மண்ணின் தாய்மையைத்தானே பிரிவின் தனிமை மெய்ப்பிக்கிறது. சிறிது குடுமி வைத்துக்கொண்டிருந்த பக்கத்து சீட்காரர் உ.பி. காரரைப்போல் தோன்றினார். எதிர் சீட் இளவயதுக்காரர்கள் (சகோதரர்களோ) அளவான வருமானமுடையவர்கள் போலிருந்தார்கள். நிறைய பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள். ராஜஸ்தான் போகிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் தமிழ்நாடு பின்தங்கிவிட்டது. ஆந்திரம் அப்படியில்லை. ஜன்னலுக்கு வெளியே அங்கங்கே ஜனங்கள் செம்பை எடுத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். பள்ளிக்கூட நேரத்தில் (பள்ளிக்கூடம் போகாத) ஒரு சிறுமி கழனிமேட்டில் அமர்ந்துகொண்டு ரயிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். எதற்கு இவர்கள் இவ்வளவு வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விளங்கியிருக்காது அவளுக்கு.

ராஜோபசாரம் என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது. சோஷலிசக் குடியரசில் இத்தனை வருடம் பழகியும் பழைமையின் வாசனை இன்னும் போகமாட்டேனென்கிறதே... என்றாலும் காப்பி, டீ, குளிர்பானம், பிரட், முட்டை என்று பத்து நிமிடத்துக்கு ஒன்றாக வேண்டி விசாப்பதை வேறு என்னவென்று சொல்வதாம்? ஒரு அடுக்களையையும் ரயிலோடு கட்டிப்போட்டு உடன் ஓடிவரச் செய்திருக்கும் மனிதன் கெட்டிக்காரன்தான். அவ்வப்போது காபி வாங்கிக் குடித்துக்கொண்டோம். எடுத்து வந்திருந்த இட்டிலியைச் சாப்பிட்டோம். சக பயணிகள் சீட்டாட்டத்தில் மூழ்கி விட்டார்கள்.

இன்னும் ஆந்திரம்தான். லாரிகளில் சிவப்புக் கொடிகள் ஏந்தியவர்கள் தூர வீதிகளில் தெந்தனர். நமக்குத் தண்ணீர் 'தரப்போகிற’ கிருஷ்ணாவில் கொஞ்சம் தண்ணீர் காணப்பட்டது. எங்கேயுமே தண்ணீருக்கு உரிய மயாதையைக் கொடுக்க மனிதனுக்குத் தெரியவில்லை.

பயணம் முழுவதிலுமே நாங்கள் பொட்டல இட்டிலியையும் புளிசாதத்தையுமே சாப்பிட்டோம். உ.பி.காரர் ஒரு முப்பது சப்பாத்திகளை ஒரு பாலிதின் உறையில் வைத்திருந்தார். தொட்டுக்கொள்ளத் தனி உறையில் கருப்பாக என்னவோ. வேளைதோறும் அதையெடுத்து வேண்டியதைத் தின்றுவிட்டு மீதியை பத்திரப்படுத்திக்கொள்ளுவார். ராஜஸ்தான்காரர்கள் ரயிலில் பரிமாறியதைச் சாப்பிட்டார்கள். பிற்பகலில் டீ மறுத்த உ.பி.காரர் தலைவலி என்றார். எங்கள் அமிர்தாஞ்சனத்துக்கு உபயோகப்படுகிற வாய்ப்பு கிடைத்தது. சொன்னதுபோலவே இடார்சியோ எதுவோ வந்ததும் குளிர ஆரம்பித்தது. ஸ்வெட்டருக்குள் (தொளதொள) புகுந்து கொள்ள வேண்டியதாயிற்று. மேற்பலகையில் படுத்தால் தண்டவாளச் சத்தம் தூங்கவிடுவதாயில்லை. உணவாளன் உபசரிப்பு பத்துமணியோடு முடிந்துபோகிறது.

ஏதோ ஒரு நள்ளிரவு நிலையத்தில் மிலிட்டிக்காரர்கள் ஏறுகிறார்கள். காவலர்கள் ஏறி எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்.

விடிந்ததும் விருந்தோம்பலுடன் விழிப்பு. காரேஜையெல்லாம் கூட்டிச் சுத்தப்படுத்திவிட்டுப் பத்துப் பைசாக்களுக்கு எல்லோடமும் கை நீட்டுகிறான் வெறும் பனியனில் நடுங்கிக் கொண்டிருந்த சிறுவன். நசுக்கலுக்குத் திசைகள் இல்லை.

வெளியே சின்னச் சின்னக் கோயில்கள் தென்படுகின்றன. சதுரமான சிலேட்டு போன்ற ஓடுகள் தரித்து. முன்புறம் ஒரு முக்கோணக் கொடி பறத்திக்கொண்டு.

விவசாயம் எப்போதுமே ஒர மந்தமான கதியில் நடக்கிற விஷயம். இவர்களுக்கு முழு உடை அனுமதிக்கப்பட்டிருந்தது சீதோஷ்ணத்தின் கட்டாயத்தால் தானிருக்க வேண்டும். இந்த மண்ணிடமிருந்து எதையோ பெற மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு நிலையம் சமீபிக்கும்போதும் விலகும்போதும் ஒன்று புலப்பட்டது. வால்போஸ்டர் தகரக் கோணிக் குடிசைகள்- ஓட்டு வீடுகள்- மாடிவீடுகள்- பலமாடிக் கட்டிடங்கள் என்று உயர்ந்து, மீண்டும் மாடிவீடுகள்-ஓட்டுவீடுகள்-வால்போஸ்டர் குடிசைகள் என்று தேய்ந்தது மாறுதலில்லாமல். நிலையத்தை மையமாகக்கொண்டு இந்த உச்ச நீசம் இருந்தது.

பிளாட்பாரத்து ஸ்டாலிலும் சர். தள்ளுவண்டியிலும் சர்- ஹிண்டுவைக் காணோம். மற்றவைதான் இருந்தன. ஒன்றரைப்பக்க நியூசும் பத்தரை பக்க விளம்பரங்களுமாக. ராஜஸ்தானிகள் பழைய ஷூக்களைக் கழற்றிவிட்டுப் பாலிஷ்செய்த புதிய ஷூக்களை அணிந்துகொண்டார்கள். தகரப்பெட்டியில், கண்ணாடி வளைகள் முதலிய மலிவான பளபளப்புகளை வைத்திருந்தார்கள். ஆக்ராவில் நின்றால் அவர்கள் வண்டி மாறி நேராக ஜெய்பூர் போக முடியும். நிற்கவில்லை. போய்த்தான் திரும்பவேண்டும். உயர்ந்த புகைபோக்கி தீ கக்கியது. மதுராவாயிருக்கும். இன்னும் கொஞ்சநேரந்தான் பயண சுகம். மூன்று மணிக்கெல்லாம் உணவாளிகளும் மூட்டை கட்டிக்கொண்டார்கள். இவ்வளவு நேரம் (நாள்) பொறுமையாக இருந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முந்திக்கொண்டு வாயிலருகே திணிந்து கொண்டார்கள்.

இறங்கி மேம்பாலம் ஏறியதும் விடுதிகளுக்கு அழைத்துப் போவதாகப் பல ஆட்கள் மொய்த்துக்கொண்டார்கள். ஒரு ஆட்டோக்காரர் 40 ரூபாய் கேட்டார். பிறகு 20க்கு வந்தார். சீக்கியர். விடுதியை அடைந்தபோது இருட்டிவிட்டிருந்தது. விடுதியின் வரவேற்பாளர் சிக்கலில் இருந்தார். நிறையபேர் வந்திருக்கிறார்கள். இடம் 'இல்லை’. ஏதோ பயிற்சிக்கு அனுப்பப்பட்டு அதே வண்டியில் வந்திருந்த நான்கு அலுவலர்கள் நின்றிருந்தார்கள். தொலைபேசி ஒலித்து இரவு பிளைட்டில் ஒரு அலுவலர் வருவதைத் தெவித்தது. பயிற்சிக்கு வந்தவர்களைப் பக்கத்திலிருந்த கர்நாடக பவனுக்கு அனுப்பித் தங்கவைத்தார். எங்களுக்குத் தற்காலிகமாக ஏ.சி. இல்லாத பழைய கட்டிடத்தில் அறையைத் தந்து அடுத்த நாள் மாறிக் கொள்ளாலாம் என்றார். அறை தூந்திரம்போலக் குளிர்ந்தது.

காப்பி எடுத்து வந்தவரிடம் கேட்டு குளியலறையிலிருந்த தண்ணீர் சுடவைக்கும் கருவியை எப்படி இயக்குவது என்று தெந்துகொள்ள முடிந்தது. எடுத்துவந்த இட்டிலியின் மிச்சங்களைக் காலையில் தின்றுவிட்டு வெளியே போய்ப் பார்க்கப் புறப்பட்டோம். மீதமிருந்த ஒரு தயிர்சாதப் பொட்டலத்தைத் தூக்கிப்போட்டு விட்டோம். திசை ஒன்றும் தெயவில்லை. ஆட்டோவில் கண்ணாடி பிளேசுக்கு வந்து சுற்றி நடந்தோம். எடுத்து வந்திருந்த கார்டில் வீட்டுக்கு எழுதித் தெருத்தபால் பெட்டியில் போட்டோம். சினிமா பார்க்கலாமா? கம்பங்களிலெல்லாம் அர்த் சத்யா. ஓரண்டு தியேட்டர்கள் தென்பட்டன. எப்போது காட்சி தொடங்கும்? ஒன்றும் பிரயோசனமில்லை. பாதாளத்தில் கடைகள். ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டோம். ஒரே புகை. காப்பி இல்லையாம். காப்பி இல்லாமல் ஒரு ஓட்டலாம். வெளியே வந்து இன்டியன் டூஸத்தில் பழைய டில்லி சுற்றிப்பார்க்க இரு டிக்கெட் வாங்கிக்கொண்டோம்.

இரண்டுமணிக்கு பஸ் வரும் என்றார்கள். திரும்ப ஒரு பிரதட்சணத்துக்குப் பிறகு பஸ் ஏறி அமர்ந்துகொண்டோம். எல்லாம் வெளிநாட்டுக்காரர்கள் பெரும்பாலும். காந்தி சமாதி, நேரு சமாதி... வயதான வழிகாட்டி காந்தி டெம்ப்பிள் என்றார். ஏதோ பழைய நகர மதிலைப் பார்க்க இறக்கிவிட்டு நின்ற கைடு நிலக்கடலை சாப்பிட்டது ஆப்பிக்கப் பயணிக்குப் பிடிக்கவில்லை; ''ஸீ. தி கைட் இஸ் டேக்கிங் மங்க்கி நட்ஸ்’’. அது என்ன இபிகோ குற்றமா? இந்தியச் சாடையுள்ள அந்த ஆப்பிக்கர். நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம் என்றதும், குத்து விளக்கு எங்கே கிடைக்கும் என்று விசாத்தார். அண்ணாசாலை பூம்புகாரில் என்றோம். ஜும்மா மசூதியில் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு போகவேண்டும். ஒரு அயல் நாட்டுக்காரர் போட்டோ பிடிக்க. பூட்சைக் கீழே வைக்க. காவலர் துடித்துவந்து அப்படி வைக்கக்கூடாது. பக்கவாட்டில் சாய்த்து வேண்டுமானால் வைக்கலாம் என்றார்.

மசூதியைச் சுற்றி ஒரே மக்கள் நெரிசல். மார்க்கெட்டில் எதைத்தான் விற்பது என்று இல்லை. முழு நீளத் தோல் சாட்டைகளைக்கூட ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். இந்தியாவில் அதற்கு உபயோகம் இருக்கிறதா? இறுதியாக. செங்கோட்டை. இதைப் பார்ப்பதற்குள் கால்கள் ஓய்ந்துபோகின்றன. அவைக்கூடங்கள், குளியல் ஹால்கள், உடைகள், வாட்கள்ம், பெட்டகங்கள் நிரம்ப விரிவான ஏற்பாடுகள்தான் இருந்திருக்கின்றன. யமுனை ஒருகாலத்தில் இதற்குப்பின்னால் ஓடியதாம்.

வெளியே வந்தால் தமிழர்கள் லிம்கா விற்கிறார்கள். பஸ் கன்னாட்பிளேசிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. பேருந்தில் எங்கு போனாலும் 40 காசுதானாம். திசைதெரியாமல் எங்கே போவது? மரியாதையாக ஆட்டோ ஏறி விடுதி அடைந்தோம்.

இந்த இரவும் குளிராலானது. வரவேற்பில் கேட்டோம்: 'இன்று வேறு அறை தருவதாகச் சொன்னீர்களே. அங்கே ரொம்பக் குளிர்.’ தருகிறேன் என்று 315ஐத் தந்தார். உடனே அறைமாறிவிட்டோம். அதற்கும் இதற்கும் நரக-சொர்க்க வித்தியாசம்.

உணவுக்கூடத்தில் நிறையப் பெரிய மனிதர்கள்.

காலையில் வானொலி நிலையம் சென்றோம். இயக்குநரைப் பார்க்கக் கேட்டோம். சுற்றிச்சுற்றி மாடி ஏறுகையில் மராட்டியக் கவிஞர் வந்தார். (சுதாகர் கைதானி.) சேர்ந்து கண்டு பிடித்தோம் இந்திப் பேச்சுப் பிரிவு அலுவலர் பொறுப்பாளர் என்று சந்தித்தோம். உங்கள் பயோ டேட்டா எல்லாம் இன்னும் வரவில்லையே சென்னையிலிருந்து என்றார் அலுவலர். (மோகினி.) காண்ட்ராக்டின் என்னுடைய நகலைக் கொடுத்தேன். பயோ டேட்டாவை மறுநாள் தரச் சொல்லி இரு அழைப்பிதழ்கள் தந்தார்.

மறுநாள் காலை டைரக்டரேட் ஜெனரலில் நடக்கும் அறிமுகச் சந்திப்புக்குத் தனியாக வருமாறும் (நூறு பேருக்குத்தான் ஏற்பாடு செய்திருக்கிறோம்.) மாலை ஜன்பத்திலிருக்கும் நேஷனல் மியூசியம் ஆடிடோரியத்தில் நடக்கும் கவியரங்கத்துக்கு நண்பர்களும் வரலாம் என்றும் சொன்னார். 'எங்கே தங்கியிருக்கிறீர்கள்?’ தமிழ்நாடு அவுஸ் என்றதும் சாணக்கிய புயா. இருப்பிடம் செல்ல வண்டி தருவோம் என்றார். வெளியே வந்து சென்னைக்காரர்கள் கடிதம் கொடுத்தனுப்பிய செய்தி வாசிப்பாளரையும் (அவருக்கு மாலை தான் டியூட்டி) அயல்நாட்டு ஒலிபரப்பாளரையும் (ஆளையே காணோம். சென்னை போய்விட்டிருந்ததாகப் பிறகு அறிந்தோம்.) டைரக்டரேட் அலுவலக ஊழியரையும் (மாற்றிவிட்டிருந்தார்கள்) காணமுடியவில்லை. அலுவலகங்களில் ஹீட்டல் குளிர்காயும் சேவகர்கள்.

மீண்டும் கன்னாட் பிளேசைச் சுற்றினோம். ஹெலிகாப்டர் பிட்நோட்டீஸ் வீசியது. இந்தி. குடியரசு தின விழா பற்றியதாக இருக்கும். சிறுகடையில் சப்பாத்தி. ஸ்வெட்டர் முதலியன இந்தியனாயில் பக்கம் சாலை ஓரத்தில் நேபாளிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். கலைப்பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய. புத்தகக் கடைகள் கண்ணாடிக் கூண்டுக்குள். தெருவோரங்களிலேயே ஸ்டால்களில் போலீஸ்.

மறுநாள் காலை மீண்டும் வானொலி நிலையம். நீ...ள்வட்ட மேசையைச் சுற்றிய நாற்காலிகள். டாக்டர் கைலாஸ் வாஜ்பேய் கைகுலுக்குகிறார். இந்திக் கவிஞர்; ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டி இந்திப் பேராசியர். நீங்கள் ஏன் இந்தி கற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்றவர் பதில் சொல்வதற்குள். நீங்கள் ஒரு இந்திப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்றார். வேறொரு கவிஞர் வரவே அவரை விசாரிக்கலானார். அருகில் இருந்தவர் 'இவர் பெயர் கைலாஸ் வாஜ்பய்’ என்று அறிமுகப்படுத்தியதை ஆட்சேபித்து 'இந்தச் சரீரத்தின் பெயர் கைலாஸ் வாஜ்பய்’ என்று தெளிவுப்படுத்தினார் வாஜ்பாய். விரைவில் சைன் செய்யப் போகிறார் என்றார் அருகிலிருந்தவர்,நாட் ஒன்லி சைன் பட் ஆல்சோ ரினௌன்ங் (பதவி விலகமட்டுமல்ல. துறவுகொள்ளவும் போகிறேன்) என்றார் வாஜ்பாய்.

துடிப்புள்ளவராயிருந்த அவரை எனக்குப் பிடித்தது. அசாமியக் கவிஞர் ராம் கோகோய் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அமைதியானவர். எதையாவது பேசலாமென்று அங்கெல்லாம் புதுக்கவிதை வந்திருக்கிறதா என்று கேட்டேன். என்ன பதில் சொன்னார் என்று புயவில்லை. டைரக்டர் ஜெனரல் (மிலிட்டரி பாணி மீசை) வந்து கைகுலுக்கி அமர்ந்தார். காப்பி தந்தார்கள். ஒவ்வொருவர் பெயரை அழைத்ததும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம். என் கவிதையை இந்தியில் மொழி பெயர்த்தவர் என்று டாக்டர் ரவீந்திர பிரமர் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

உயரம், தொப்பி, மூத்தவர், அலிகர் முஸ்லிம் யுனிவர்சிடியில் இந்திப் பேராசிரியராம். நீங்கள் ஒரு noble subject ஐப் பாடியிருக்கிறீர்கள் என்றார். நான் என்ன சொல்வது? நீங்கள் இதை இசையாகப் பாடப்போகிறீர்களா? என்றார். இல்லை; இது புதுக்கவிதை; உரைநடைபோலப் படிக்கவேண்டியதுதான் என்றேன். நான் உங்கள் கவிதையை இந்தியில் ஒரு இசைப் பாடலாக அமைத்திருக்கிறேன் உங்களுக்கு இந்தி தெயுமா? (''தெரியாது’) அதுவும் இலக்கிய இந்தி உங்களால் புரிந்து கொள்ள முடியாது. எனவே என் பாடலை உங்களுக்குப் படித்துக் காட்டுவதில் பயனில்லை. எங்கள் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியடம் கலந்து உங்கள் கவிதையின் நுணுக்கங்களை அறிந்து மொழி பெயர்த்திருக்கிறேன்.

மொழிபெயர்ப்பு என்பதைவிட இதை மறு ஆக்கம் என்றே சொல்ல வேண்டும் - என்றார். எல்லோரும் டாக்டர்கள். பெரியவர்கள் என்னைத் தவிர.

ஜன்பத்தில் நேவுனல் மியூசியம் எங்கேயிருக்கிறது என்று ஆட்டோக்காரருக்கும் தெரியவில்லை. அதையும் தாண்டிச் சென்று, பாதசாரிகளை விசாரித்து அறிந்து திருப்பிக் கொண்டுவந்து சேர்த்தார். மராட்டியக் கவிஞர் சுதாகர் கைதானி தம்மோடு வந்திருந்த நண்பருக்கு 'பாபுலர் தமிழ் பொயட்’ என்று தாராளமாக அறிமுகப்படுத்தினார். உங்கள் மனைவி ஏன் சால்வை போர்த்திக்கொள்ளாமல் இருக்கிறார். உடம்புக்குக் கெடுதல். ஆக்ராவெல்லாம் அழைத்துப் போய்க் காட்டுங்கள் என்றார். ஒரு தியேட்டர் மாதிரி இருந்தது. ஏ.சி.தான். மேடையில் மேசை நாற்காலிகளுக்குப் பதிலாகத் திண்டுகள். ஜமக்காளம். ஓரத்தில் மேசையிட்டு ஒலிப்பதிவுக் கருவிகளுடன் வானொலி அறிவிப்பாளர்.

முதலில் வடமொழிக்கவிதை. பிறகு அகர வசைப்படியான மொழிகளில் மூலக்கவிதையும் ஒவ்வொரு மூலக் கவிதையை அடுத்தும் அதன் இந்தி வடிவக் கவிதையும் என்ற முறையில் கவிஞர்கள் கவிதை படித்தார்கள். பெரும்பாலும் இசையோடு பாடினார்கள். மூலக்கவிதைகள் அவ்வப்போதும் இந்தி வடிவக்கவிதைகள் அடிக்கடியும் கைதட்டல் பெற்றன. என்னுடைய கவிதையை மொழி பெயர்த்திருந்தவர் நன்றாகவே செய்திருந்தார். அங்கங்கே கைதட்டல். என் கவிதையின் கடைசிவரிகளைப் பல்லவியாக்கியிருந்தார். இருமொழிக்கும் பொதுவான சில சொற்கள் என் கவிதையிலிருந்து அவர் கவிதைக்குத் தாவியிருந்தன. அந்தச் சொற்கள் ஒரு ஜன்னலைப்போல அவரை நமக்குத்திறந்தன. என் மூன்று நிமிடக் கவிதையைத் தவிர அந்தக் கவியரங்கின் மூலக் கவிதைகளோ இந்திவடிவக் கவிதைகளோ எனக்கு எதையும் தெவிக்கவில்லை. என்கவிதை என் மனைவியைத்தவிர அரங்கில் யாருக்கும் தெரிந்ததா என்று தெரியவில்லை. என் கவிதை முடிந்தபோது கைதட்டியவர்கள் முடித்ததற்காக சம்பிரதாயமாகத் தட்டினார்களா. பொருள்தெரிந்து தட்டிய தமிழர்களா என்று தெரியவில்லை.

(சகமாணவர் ஒருவருடன் பிளாசாவில் ஸ்ரீ 420 பார்த்தபோது ராஜ்கபூரும் நர்கிசும் மழையில் குடைபித்துப் பாட. மழைக்கோட்டு அணிந்த மூன்று சிறுவர் நடக்கும் காட்சியில் 'இந்தி தெயாமல் போயிற்றே’ என்ற ஏக்கம் ஏற்படுவதாக நண்பர் சொல்லியிருக்கிறார். எனக்கென்னவோ அதைவிட பியாசா பாடல் காட்சிகளைப் பார்த்தபோதுதான் அப்படி எண்ணம் தோன்றிற்று. சாந்தாராமின் ஸ்த்ரீ படம் பார்த்த போது உடன்வந்த இந்தி தெந்த நண்பர் கவுன்ஹோதும் பாடலில் ஈடுபட்டு வசந்தத்தின் முதல் மழையோ என்றெல்லாம் பொருள் விளக்கினார். பொதுவாக அயல் மொழிப்படம் பார்ப்பதோடு கதை வசனம் எழுதிக் கொள்வதும் நம் வேலையாகிவிடுகிறது.)

கிட்டத்தட்ட எட்டரைக்குக் கவியரங்கம் முடிந்ததும் வாஜ்பாய் முன்னின்று அவரவர் செக்கை விநியோகிக்க உதவினார். காஷ்மீரிக் கவிதை படித்த பெண்மணி, இவர் மூலக்கவி என்று என்னைத் தம் சீக்கியக் கணவருக்கு அறிமுகப்படுத்தினார். நன்றி சொன்னேன். உறுதியளித்தபடி பொறுப்பாளர் மோகினி வண்டி ஏற்பாடு செய்திருந்தார். கூட வந்த ஒரியக்கவிஞன் மனைவி ஏதோ சொல்ல, கவிதையெல்லாம் எழுதாமல் கவிஞன் மனைவியாக இருப்பதாலேயே இதில் பங்கு பெறமுடிந்ததே என்று தம் மனைவி மகிழ்கிறார் என்று அவர் மொழிபெயர்த்துச் சொன்னார்.

மறுநாள் காலை டிபன்முடித்து ஆட்டோவில் டெல்லி டூரிசம் சென்று புதுடெல்லியைச் சுற்றிப்பார்க்க இரு டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டோம். பழைய மன்னர் அமைத்த வானியல் ஆய்வுக்கூடம் காட்டினார்கள். இளம் வழிகாட்டி. நல்ல ஆங்கிலம் பேசினார். அழுக்காகச் சூழ்ந்து கொண்ட உள்ளூர்ச் சிறுவர்களை இந்தியில் அகற்றினார். சிமெட்டிக் கடிகாரத்தில் மணிபார்த்துச் சொன்னார். மேலும் சில விசித்திரக் கோணமானிகள். பிர்லா கட்டிய கண்ணன் கோயிலுக்குப் போனோம். விஸ்தாரம் இருந்தது. அழகு இல்லை. சாமியேயானாலும்கூட அழகு வேண்டாமா? பணத்தை எப்படி அசிங்கமாகச் செலவழிக்க முடியும் என்பது அங்கே தெரிந்தது. சப்தர் அல்லது வேறு ஒரு ஜங்கின் சமாதி பார்த்தோம். படிக்கட்டில் இறங்கினால் சுரங்கத்தில் இருப்பது உண்மைச் சமாதி. மேலே போலி. கீழே காற்று சுத்தமில்லை. கடைசியாகக் குதுப்மினார்.

கைடு இரும்புத் தூணைப் பின்புறமாக அணைத்தார். தான் அதிருஷ்டசாலி என்று அறிவித்தார். இந்துச் சிற்பங்களைப் பெயர்த்து முகமதியக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அடிமை வம்சங்களை விளக்கினார். குதுப் உள்ளே ஏற இப்போது அனுமதி இல்லை. முன்னே மின்தடை இருட்டில் பள்ளிக் குழந்தைகள் சந்து நெந்து இறந்திருக்கிறார்கள். பக்கத்திலேயே இன்னொரு குதுப் ஆரம்பித்து நின்றுபோயிருந்தது. வெளியே பல விற்பனைகள். உணவுகள். வழிகாட்டி பந்துரைத்த குதுப் ஓட்டலில் அவரும் நாங்களும் மட்டுமே காப்பி குடித்தோம். வெளியே வந்து இரண்டு ரூபாய்க்குத் தகரக்கிளி வாங்கிக்கொண்டோம். நல்ல பால் வெளியிலேயே குடித்திருக்கலாம். தமிழகத்திலிருந்து ஸ்கௌட் சிறுமிகள் வேன் நிறைய வந்திருந்தார்கள். எங்கும் நிற்காமல் வேன் திரும்பிய ஓட்டத்திலேயே வசந்த் விகார். காணக்கியபு. அலுவலங்கள்- காட்டினார்கள்.

பாதாளக் கடையில் எதையெடுத்தாலும் 25 ரூபாயில் டீ ஷர்ட்டுகளும். எதையெடுத்தாலும் 40 ரூபாயில் சல்வார்கமிசும். இந்தியன் ஆயில் அருகே 3 ரூபாய் வீதம் மணிமாலைகளும் வாங்கிக் கொண்டோம். குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. குதிரைப் படை. ஒட்டகப் படை... தலைப்பாகைகளைக்கூட இத்தனை வகைகளில் கட்டிக்கொள்ள முடியுமா?. . .

ஒரு தூரத்துக்கே வெவ்வேறு கட்டணம் வசூலித்தார்கள் ஆட்டோக்காரர்கள். விடுதியிலிருந்து வானொலி நிலையத்துக்குப் பத்து ரூபாயும் வாங்கினார்கள். எட்டு ரூபாயும் வாங்கினார்கள். ஒரு முதிய சீக்கியர். மீட்டர் காட்டிய இரண்டரை ரூபாய் மட்டுமே வாங்கினார். டூரிசம் இங்கே பெரிய தொழிலாக இருக்கிறது. தெருவில் வெயில்படுகிற இடத்தில் குளிர் சற்றுக் குறைவாகவும் கட்டிட நிழல்படுகிற இடத்தில் குளிர் அதிகமாகவும் இருந்தது. நிலக்கடலை விற்பதுபோல வீதிகளில் காரட் முதலிய சில காய்களை வைத்து விற்கிறார்கள். விடுதியின் மாடி அறையின் பின்புறச் கண்ணாடிச் சன்னல் வழியே வெளியே கீழே பார்த்தால் காலைக் குளில் கூரைஇல்லாதவர்கள் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தார்கள். பேப்பர் பொறுக்கி வாழ்பவர்கள். தமிழர்கள் போல்தானிருந்தார்கள். அவர்களைக் குளிர் ஒன்றும் செய்வதில்லையா. . .?

வந்த வேலை முடிந்துவிட்டது சரி. நாளைக்கு ஆக்ரா பார்ப்பது. மறுநாள் காலை 6மணி ரயிலுக்கு ஊருக்குப் புறப்படுவது.

செம்ஸ்போர்டு சாலை வழியே நடந்துபோய் ரயில் நிலையம் சேர்ந்தோம். டிக்கட் கிடைத்தது. விடுதி திரும்பியதும் வரவேற்பில், மறுநாள் ஆக்ரா சொல்ல டூஸ்ட் பஸ்ஸில் இடம் ஒதுக்கக் கட்டணம் செலுத்திவிட்டு அடுத்தநாள் விடியலில் ஊருக்குப் புறப்படுவதையும் சொல்லிவிட்டோம்.

நாலு மணிக்குத் தயாராகி சப்ஷனில் வந்து உட்கார்ந்து கொண்டோம். 'வண்டி வந்ததும் நாங்களே சொல்லியிருப்போமே’ என்றார்கள். கொஞ்ச நேரத்தில் வண்டி வந்தது. பணிக்கர் டிராவல்ஸ். பெரும்பாலும் சீக்கியப் பயணிகள். ஒருவர்மட்டும் எங்களோடு விடுதியிலிருந்து ஏறினார்.

ஒன்றரை மணி நேரத்துக்குமேல் ஓடி நின்றது. இறங்கினால் குளிர் நடுக்கியது. மாட்டுக் கொட்டில் போன்ற இடம் சிற்றுண்டிச் சாலையாம். இட்டிலி வடை சாம்பார் பூ சப்பாத்தி கிடைக்கும். இட்டிலி சாப்பிட்டோம். இட்டிலி மாதி இல்லை.

பஸ்ஸில் வீடியோ போடப்பட்டது. கைலாசமும் சிவனுமான டிரேட் மார்க்குடன் படம் தொடங்கியது. திலிப்குமார் விதாதா என்று பழிவாங்கக் கிளம்புகிறார். இந்திப் படங்கள் வித்தியாசமாகச் சிந்திப்பதில்லை. தொடர்ந்த பயணத்துக்குப் பின் ஒரு கோட்டை(?)க்கு அழைத்துவந்தார்கள். உயர்ந்த நுழைவாசலில் தொல்பொருள் இலாகா டிக்கட் விற்றது. குரங்குகள் இறங்கி வந்து பயணிகள் கொடுத்ததை வாங்கித் தின்றன. உள்ளே போனோம். வெளியே வந்தோம். தரைத்தளத்தில் அரசன் அரசி அவர் இவர் என்று வசையாகப் புதைக்கப்பட்ட சிறு மேடைகள்.

மேலும் கொஞ்ச தூரத்துக்குப்பிறகு இன்னொரு கோட்டை. இது கோட்டையாகவே இருந்தது. பல பாதுகாப்பு ஏற்பாடுகள். சவான தளங்கள். ஆயிரங்கால் மண்டபங்கள். யமுனை நதிக்கரையில் இது. தூரத்தில் தெந்தது தாஜ்மஹால். ஷாஜகான் இங்கே சிறையிருந்தார். இந்தச் சன்னல் வழியாக தாஜ்மஹாலைப் பார்த்தபடி வயோதிகத்தைக் கழித்தார். விடுதியிலிருந்து வந்தவர் தமிழர். தமிழ்பேச ஆள்கிடைத்து விட்டார் என் மனைவிக்கு. எஞ்சினீயராம். பசங்கள் துபாயிலாம். வாங்க என்ன இருக்கிறது இங்கே? எல்லாம் துபாயிலிருந்து வந்துவிடுகிறது.

இந்த வழிகாட்டிகள் இந்தியில் விளக்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள்கூட வந்த எஞ்சினீயர் அங்கிரேசி மே போலோ என்றார். சரி சொல்கிறோம் என்று இந்திவிளக்கம் முடிந்ததும் ஆங்கில விளக்கம் சொன்னார்கள். தாஜ்மஹால் சற்றுப்பெரிய அளவில் இருந்தது. போட்டோ பிடிக்கிறோம் வாங்க என்றார்கள் நிறையப் பேர். தபாலில் அனுப்பிவைப்பார்களாம். அங்கீகரிக்கப்பட்டவர்களாம். பதினைந்து ரூபாய் தானாம். முன்புறம் பார்த்தால் அவ்வளவு உயரத்தில் இருப்பது தெரியவில்லை. பின்புறம் ஓரம் சென்று பார்த்தால் இரண்டு மாடி ஆழத்தில் யமுனையின் மணல்தரை தெரிந்தது. தண்ணீர் இல்லை. இங்கும் மேலே போலி சமாதி. கீழே உண்மை சமாதி. அரசனும் அரசியும் பக்கத்தில் பக்கத்தில். ஊதுவத்தி வைத்துக் கொண்டிருந்தவர்கள் சில்லறை வாங்கிக்கொண்டார்கள்.

வெளியே 'மலிவாக’ விற்ற செருப்பு. தமிழ்ச்சிறுவன் விற்ற சோளத்தட்டை கிலுகிலுப்பை. வாங்கிக்கொண்டோம். ஓட்டலில் தென்னிந்திய சாப்பாடு ஏழரை ரூபாய்க்கு நல்லதாகக் கிடைத்தது. உ.பி. கைவினைப்பொருள் கடைகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டன வாங்குபவர்கள் வாங்கலாமென்று. பஸ்திரும்பியது. நீண்ட பயணத்துக்குப்பிறகு படே பூர்சிக்கி வந்தோம். கால்கள் ஏற்கெனவே ஓய்ந்துவிட்டன. இன்னொரு கோட்டையா? அக்பர் வாழ்ந்த இடம் ஒரு பகுதி. வணங்கிய இடம் ஒன்று. எல்லா மதப்பெண்டிரையும் மணப்பதன் மூலம் ஒற்றுமைக்குச் சிரமப்பட்டிருக்கிறார் அக்பர்.

அந்தந்த மத மனைவிகளுக்கு என்று வழிபாட்டு வசதிகள். பூவேலைச் சிற்ப சாளரங்கள் உள்ள குருவின் சமாதி முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள நிறையப் பயணிகள் ஆர்வங் கொண்டனர். காற்று வராத கடுங்காவல் சிறை அறைகள் போன்ற வசைக்கடைகள் கலைப்பொருள்கள் விற்றன. தெற்குவாசல் வழியே வெளியே பார்த்தால் பொட்டலான வெட்டவெளி. இந்த அநாதரவான பொட்டலில் பாவம் அக்பர் ரொம்பவும் அனாதையாகத் தனிமையாகவே உணர்ந்திருக்க வேண்டும். இங்கே ஏன் இவர் வந்து அரண்மனை கட்டிக்கொண்டு கஷ்டப்பட்டாரோõ ஊரோடு ஜனங்களாய் இருந்திருந்தால் பாதுகாப்பாய் இருந்திருக்காதா?

இருட்டிவிட்டது. எட்டுமணிக்கு மதுரா கொண்டுவந்தார்கள். கண்ணன் பிறந்த இடமாம். சிறய கோயில் உயரத்தில். குறுகிய இடத்தில் மிகச் சத்தமான மேளதாளத்தோடு சுறுசுறுப்பான ஒரு பக்தகோஷ்டி சந்நிதியைச் சுற்றிவந்தது. கோயிலை அடுத்து ஒரு மசூதி ஒட்டிக்கொண்டிருந்தது.

கீழே வந்து மண் செம்பில் சூடான பால் வாங்கிச் சாப்பிட்டோம். வீட்டுக்கு என்று ஸ்வீட் பாக்கெட் வாங்கிக் கொண்டோம். திரையில் ரஜினி இந்தி பேசத் தூங்கியபடி பதினோரு மணிக்கு விடுதியில் இறக்கப்பட்டோம். நாலுமணிக்குக் காப்பியுடன் எழுப்பினார்கள். வரவேற்பில் கணக்குத் தீர்த்துவிட்டு விடுதிக்கால் நிலையம் வந்தோம். திருச்சிக்குப்போகிற தமிழர் எதிர் சீட்காரர். பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது என் கருத்து. என் மனைவிக்கு ஏதாவது பேசியாக வேண்டும். பிரம்பு மோடா. இரும்பு நாற்காலியெல்லாம் வாங்கிப்போகிறாராம் அவர். நான் இந்தியன் எக்பிரசை நாலைந்து தடவை படித்துக் கொண்டி ருந்தேன். ஒரு தமிழ் ஆர்மிக்காரர் பக்கத்திலிருந்த வடம் உளவாளிகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்துத் தடுப்பில் மற்றொரு ஆர்மித் தமிழர் முட்டை வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு மயிலாப்பூருக்குப் போய்ப் போவதா. நேராக மாயவரம் போவதா என்று மனைவியுடன் முடிவு பண்ணிக் கொண்டிருந்தார்.

பொட்டலங்கள் இல்லாத இந்தப் பயணத்தில் ரயில் உணவே முற்றிலுமாக, ஒன்றைத் தூக்கிப்போட்டபின் மற்ற பிளாஸ்டிக் ஸ்பூன்களை சேர்த்து வைத்துக்கொண்டோம், உபயோகப்படும். நேரம் விரைந்துபோவதாக உணர்வு. விடிந்தபோது ஆந்திரத்தில் இருந்தோம். இடதுபக்க சன்னலில் சூயன் சிவப்பு வட்டமாக... ஒரு ஆந்திர நிலையத்தில் சாத்துக்கொடி வாங்கிக்கொண்டோம்.

இரண்டு மணிக்குச் சென்னையில் இறங்கி வெளிவந்தோம். அலுவலக நண்பர்கள் எதிர்ப்பட்டார்கள். 'எப்படிசார் தெரிஞ்சது உங்களுக்கு நாங்கள் வருவது?’ 'டெலக்சில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர்மூலம் விசாரித்தோம். நீங்கள் புறப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள்.’

அன்று மாலை போய் இலக்கியச் சிந்தனைக்கூட்டம் கேட்டுவிட்டுவந்து படுத்தால் நல்ல தூக்கம் வந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com