Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு 2007 - பிப்ரவரி 2008


கவிதை வாழ்வு
வீ. அரசு

''இந்த முப்பது வயது கால படைப்புலக வாழ்வை மதிப்பீடு செய்ய முனைந்தால் ஈழத்தின் கவிதைப் பரப்பில் எனது சாதனை இன்னது. கவிஞர்களின் பட்டியல் வரிசையில் எனது இடம் இது என்று நிறுவுவது அல்லது அதனை அவாவுவது எனது நோக்கமல்ல.

ஆனால். நான் ஈடுபாடு கொண்ட துறையில் மெய்யுடை ஒருவனாய் தொழிற்பட்டிருக்கிறேனா என்பதொன்றே எனது அக்கறைக்குயதாக எப்போதும் இருந்திருக்கிறது. ஏனெனில் கவிதைக்கு மெய்யழகு எனக் கருதுபவன் நான். கவிதைத் துறையில் ஈடுபாடு கொள் வதற்கு முன்பாகவே ஆத்மீக ஈடுபாடும், சமூகப் பணிகளில் உணர்வு பூர்வமான செயற்பாடும் கொண்டிருந்தவன். அவற்றில் ஈடுபட்டபோதெல்லாம் என்னை நோக்கிய கவன ஈர்ப்பை மையமாக வைத்துத் தொழிற்பட்டவனல்ல. அதுபோலவே எனது கவிதைத் துறையிலான படைப்பாக்க ஈடுபாடும் இருந்ததே அன்றி என்னைச் சூழ ஒரு மாய வலைப் பின்னலை உருவாக்கி அதில் வலம் வர விரும்பும் பூச்சியாக இருக்க நான் விரும்பியதில்லை. அது எனது நோக்கமுமல்ல’. (சு. வில்வரத்தினம்: நெற்றி மண். முன்னுரை: 2000)

கவிஞர் வில்வரத்தினம் 09.12.2006 இல் மறைந்தார். அவர் மறைவில். அவரைப் பற்றிப் பேசும் நாம். அவரது அடையாளங்களாக எஞ்சி நிற்பன எவையெவை? என்னும் உரையாடலில் அமைதி கொள்ளவேண்டியுள்ளது. அவர் விட்டுச் சென்றுள்ள கவிதை வரிகளுக்குள் அவரையும் நம்மையும் தேடிச் செல்லும் பயணம் நமக்கு வாய்த்திருக்கிறது.

'கவிதைக்கு மெய்யழகு என்பது வில்வரத் தினம் சொற்கள். அவர் சொன்ன மெய்கள் எவை? அவை கவிதை அழகோடு இருக் கின்றனவா? என்று நாம் பேசிக்கொள்ளலாம். அந்தப் பேச்சின் மூலம் அவர் நம்மோடு இருப்பதை நமக்கு நாமே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வில்வரத்தினம் கவிதைகளில் இடம்பெற்றி ருக்கும் ஒவ்வொரு சொல்லும். ஒவ்வொரு ஓசையும். ஒவ்வொரு புள்ளியும் பரந்து விந்த உணர்வுலகத்தில் நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது. மனிதர்களின் உணர்வுலகம் என்பது. இன்னொரு அநுபவத்தைத் தன் அநுபவமாக உள்வாங்கிக்கொள்ளும் உலகம்.

அவ்விதமான உணர்வுலகம் கவிதையில்தான் ஆழமாகச் செயல்படுகிறது. இவரது கவிதை களில் செயல்படும் உலகம் என்பது 'வெளிஃ குறித்த தேடலாக இருக்கிறது. அந்த வெளி காற்றுவெளியாகவும் மண் வெளியாகவும் கடல்வெளியாகவும் பரந்து கிடக்கின்றது. ஈழத்து மண்சார்ந்த அவரது அநுபவவெளி என்பது. மனித நேயம் குறித்த பாடலாக காற்றில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த ஒலியை. கவிதைகளின் வாசிப்பின் ஊடாகக் கேட்க முடிகிறது. இவரது கவிதை கள் அச்சு வடிவத்தில் பதிக்கப்பட்டிருந்தாலும். உண்மையில் அவை ஒலி வடிவமாகவே நமக்குப் பதிவாகின்றன.

எழுத்து வரிகளைப் பார்க்கும் கண்கள்... அந்தக் கருத்த உருவத்தின் முகத்தையும் பார்க்கின்றன. பல்வேறு ரச அநுபவங்களுடன் கவிதையின் சொற்கள் ஒலிகளாக நம் காதுகளில் ஒலிக்கின்றன. ஆம்... கவிஞர் வில்வரத்தினம் நம்முன் பாடிக் கொண்டு திகிறார். நமது மனவெளிகளில் அவர் பாடல் தொடர்ந்து ஒலிக்கிறது... அற்புதமான சாகாவரம் பெற்ற கவிஞராக. கவிதைகளில் சஞ்சக்கிறார் கவிஞர் வில்வரத்தினம். அவரோடு நேரடி அநுபவம் உள்ளவர்களுக்கு இக்காட்சி மற்றும் ஒலிப்பமாணம் கூடுதலாகவே தொழிற்படும்.

வில்வரத்தினம் கவிதைகளில் ஏதேனும் ஒரு சொல்லை. கவிதை அழகு கருதி எடுத்து விடலாம் என்ற முயற்சி தோல்வியாகவே முடிகிறது. ஏனெனில், அந்த மனிதர் கவிதை களில் வெறும் சொற்களைப் பயன்படுத்த வில்லை; சொற்கள் சார்ந்த உணர்வுகளையே எழுத்து வடிவத்தில் இடம்பெறச் செய்திருக் கிறார். இவ்விதம். கவிதையின் அடிப்படையான உணர்வுகளேயே பெய்து கவிதையாக்கம் நிகழ்ந்தியிருப்பது ஏன்? இந்தக் கேள்விக்கு பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. ஈழம் என்ற மண்ணும் அதன் வெளியும் அங்கு வாழ்ந்த/வாழுகின்ற மக்களும். அம்மக்களுள் ஒருவராக வில்வரத்தினமும் நம் மனவெளிகளில் தெகிறார்கள்...

பண்டைய தமிழ்ச்சமூகம் பற்றிய உரையாடலுக்குச் சங்கக் கவிதைகள் அடிப்படை ஆவணங் களாய் இருக்கின்றன. அக் கவிதைகளை விட்டுவிட்டு. அம்மக்களைக் காண முடியாது.

போலவே. கடந்த முப்பது ஆண்டுகளில் ஈழத்து மக்களை வில்வரத் தினம் தமது கவிதை களில் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். சங்கக் கவிதைகளில் உணர்வுப் பமாணமும் மெய்யழகும். வில்வரத்தினம் கவிதைகளில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கால ஈழ மக்களின் உணர்வுப் பமாணம் மற்றும் மெய்யழகாக வடிவம் பெற்றுள்ளன. சங்கக் கவிதை இயற்கை அழகை. அதன் உணர்வுப் பமாணத்தில் பேசினால். வில்வரத்தினம் கவிதை ஈழ மண்ணின் அவலத்தை ஓசை களாக வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். கவிதை என்ற மெய்யழகு இரண்டிலும் ஒன்றாக இருக்கும் விநோதத்தை நம்மால் உணர முடிகிறது.

சங்கக் கவிதையின் வீரமும் காதலும் வில்வரத்தினத்தின் ஈழப் போன் வீரமாகவும் காதலாகவும் வடிவம் பெற்றிருக் கிறது. சங்கக் கவிதைகளுக்கான வாழ்வெளி இவரது கவிதைகளுக் குள்ளும் சாத்தியமாவ தைக் காணலாம். இயற்கைக்கும் மனிதனுக் கும் உள்ள உறவுகளும். அவை சிதையும் அவலமும் எல்லாக் காலங்களிலும் கவிதை களில் இடம்பெறும். கவிதை மனிதனைப் பாடும் பட்சத்தில்...

ஈழப் போராட்டத்தின் ஆவணமாய் அமையும் வில்வரத்தினம் கவிதைகள். பக்திப் பாடல் களின் உணர்வுத் தளத்தை உட்கொண் டிருப்பதையும் காணலாம். நமது மரபின் செழுமை. அனைத்துத் தளங்களிலும் இவடம் தனதாக்கப்பட்டிருக்கிறது. உள்வாங்குதலும் புதிது ஆக்குதலும் நிகழ்ந்திருக்கின்றன. வில்வரத்திரனத்தின் கவிதைச் சொற்கள் ஒவ்வொன்றையும். மரபு சார்ந்த சொல்லாடலுக் குள் இணைத்து உரையாட முடியும். சங்கக் கவிதையின் சொற்செட்டு. உணர்வுச் சுழிப்புகள். சிலம்பின் கதை கூறல் மற்றும் காவி. வைகை ஆகிய நதிகளின் பாடல் ஒலிகள். பக்தி இலக் கியங்களின் மனித நேயம். கலிங்கத்துப்பரணி போன்ற ஆக்கங்களின் ஒலிநயம்.

பாரதியின் சொற்கள் ஆகிய அனைத்தும் தன்வயமாகி யிருக்கும் அற்புதம். இருபது நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் வளம் அறிந்தோரால். வில்வரத்தினம் கவிதைகளில் கண்டுகொள்ள முடியும். கலிங்கத்துப்பரணி. ஈழத்துப் பரணி யாக அவடம் இடம் பெற்றிருப்பதைக் கீழ்க் காணும் வரிகளில் கேட்கலாம்.

''இடிபடுவன மனைகள்
பொடிபடுவன சுவர்கள்
முறிபடுவன பனைகள்
நுங்கின் குலை
தெங்கின் குலை
எங்கும் தெறித்தோட
இடையுருள்வன
மனிதத்தலை
தறிகெட்டும் மிதிபட்டும் நெரிபட்டும்
தப்பியோடுகிற மனிதரிடை
யாருறவு?
யார் சுற்றம்?
அவரவர்க்குத் தம்தம்முயிர்’’.

இவ்விதம். வாழ்வை அதன் குருதியோடும் நிணத்தோடும் சந்திக்கும் கலைஞன் ஒருவனுக்கு அவனது மரபு எப்படியெல்லாம் கைகொடுக்கிறது என்பதை வில்வரத்தினம் கவிதைகளில்தான் காணமுடிகிறது.

வில்வரத்தினம் கவிதைகளுக்குக் கொடுத் திருக்கும் 'அடிக்குறிப்புகள்’. அவரது கவிதை வரலாற்று ஆவணம் என்பதை ஒரு பக்கம் பதிவு செய்ய. இன்னொரு பக்கம் கவிதையின் பரிமாணத்தைப் புரிந்து அதற்குள் பயணம் செய்யவும் வழிகாட்டுகின்றன. அடிக் குறிப்பு களைப் போலவே. கவிதைகளுக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்புகளும் தனித் தன்மையானவை.

'சூழலின் மையம் தேடி’, 'மீண்டும் உயிர்த்தல்’, 'காலத் துயர்’, 'தொல்லிருப்பு, 'காற்றுக்கு வந்த சோகம்’, 'வேற்றாகி நின்ற வெளி’ , 'நெற்றிமண்’, 'நீள நடக்கின்றேன்’, 'உயிர்த்தெழும் காலத்திற்காக’, 'உண்மை ஓர் உயிர் கமழ்கிறது’, 'வெளியிடைப் பறவை’, 'காற்றுவெளி ஆடல்’. 'ஒளியின் பேச்சுஃ. 'எனது பிண நிழல்’. 'உயிர்த்தழல்’. 'மெத்தலம்’. 'பாழிற் புலரும் வழிஃ. 'இருள் வெளி’, 'விழித்தழல்’. ஆகிய பிற கவிதைகளின் தலைப்புகள். வில்வரத்தினம் கவிதை ஆளுமைகளைப் புந்துகொள்ள வாய்ப்பாக அமைகின்றன. இவ்வகையான கவிதைகள். காலத்தைக் கடந்து நிற்கும் தன்மையையும் அவற்றுள் கொண்டிருப் பதைக் காணமுடியும். ஈழப் போராட்டம் என்ற சமகால நிகழ்விற்குப் பிறகு. இக்கவிதைகளின் இருப்பு என்ன? என்ற ஒரு கேள்வி. வில்வரத்தினம் கவிதைகளைப் பொறுத்த வரையில் பொருளற்றுப் போவதாகவே கருத வேண்டும். ஏனெனில். சமகால நிகழ்வை. காலம் கடந்த பொருண்மையிலும் மொழியிலும் அவர் பதிவு செய்கிறார். நமது கவிதையின் மரபு வளத்தின் சாரத்தை உள்வாங்கியதால் அது சாத்தியமாகிறது.

கவிதைகள். அடிப்படையில் மனித குலத்தின் நிலையான விழுமியங்களைப் பேசுபவை. இவ்வகையான விழுமியங்களில் தலையாயது மனிதர்களுக்கிடையேயான அன்பு. சங்கக் கவிதைகள், காதலாக அதனைப் பேசியதாகக் கருதமுடியும். வைதீக மரபு சார்ந்து உருவான பக்திக் கவிதைகள், இவ்வகையான அன்பை, சமயம் என்னும் கட்டுக்குள் அடக்கின.

சமயம் அன்பைப் போதிப்பதாக பிரமைகள் உருவாக்கப் பட்டன. சமயங்கடந்த பார்வை என்பது தனிப்பட்டவர்களின் நடவடிக்கைகளாக இருந்தன. சமயங்களின் நடவடிக்கைகள் அப்படி இருக்க முடியாது; ஏனெனில் 'சமயம்’ என்பது ஓர் அதிகார நிறுவனமும்கூட.

அதனால்தான் பக்திப் பாடல்களின் மனித நேயம் மற்றும் அன்பு என்பது சொற்களில் இருக்கும் அளவிற்கு நடைமுறையில் இல்லாமல் போனது. வில்வரத் தினம் கவிதைகள். மனித அன்பைப் பேசுவதில். பல்வேறு பரிமாணங்களில் தனித்தே நிற்கின்றன. போர்ச்சூழல் சார்ந்த அவலத்திலிருந்து பேசப்படும் 'அன்பு’ என்னும் விழுமியம். 'போர்’ என்ற எதார்த்தத்தையும் மீறி நிற்பதை உணரமுடியும். 'தூய அன்பின் துளி போதும் தொடங்கு’... 'ஒரு பிடி அன்பு செய்வோம்’ என்று பல இடங்களில். பல தளங்களில் 'அன்பு’ சார்ந்த விழுமியத்தை அதன் உண்மையான பரிமாணத்திலும் கவிதைப் பமாணத்திலும் மிக வன்மையாகப் பதிவு செய்திருக்கிறார். 'கவிதை பொய் சொல்லாது’ என்னும் சொல்லாடலை. வில்வரத்தினம் கவிதைகள் பேசும் அன்பு தொடர்பான விழுமியங்களில். ஆழமாக நாம் கண்டுகொள்ள முடியும்.

வில்வரத்தினம் கவிதைகளில் வெளிப்படும் மண், கவிதையின் பொருண்மையை, கவிதைக் கான அழகியலோடு இணைப்பதில் மிகமிக லாவகமாகச் செயல்படுகிறது.

இதனால் என்றும் வாழும் தகுதியை கவிதை தனக்குத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

ஒரு கிராமத்தின் 'வெளி’யைக் காட்டும் கீழ்வரும் கவிதை மேலே நாம் விவரித்த மண்ணைப் பார்க்கும் வாய்ப்பைத் தருவதாகவே கருதலாம்.

'இதோ காற்று வருகிறது
இலையுதிர் காலக்காற்று
சருகுகளின் உலர்ந்த மொழி பேசி
முன்னைப் போல் பதந்தூக்கிய பாட்டோசை
ஏற்ற இறக்கங்களோடு இசைக்கூடப் பாடாய்
குறைகின்ற குரல்கள்
குத்தல். இடித்தல். கொழித்தல். புடைத்தலென
கிராமத்து வாழ்வின் படைப்போசை எதுவுமின்றி
பசையற்ற பாலையின் புடைபெயர்வாய் அலைகிறது.’’ (1994)

வில்வரத்தினம் அவர்களின் 'நெற்றிமண்’. (2000) இருபதாம் நூற்றாண்டின் காவிய வடிவமாய் அமைந்திருக்கிறது. வ.ஐ.ச. ஜெய பாலனின் 'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’ என்னும் காவியத்திலிருந்து 'நெற்றிமண்’ காவியம் வேறு பரிமாணத்தில் செயல்படுகிறது. ஈழத்துப் போர்க்கால படைப்பாளிகளிடம் 'புதிய காவியங்கள்’ உருப் பெற்றிருப்பதை நெற்றிமண் உறுதிப்படுத்துகின்றது. காவிய நேர்த்தியும் கவிதை நேர்த்தியும் செயல்படும் புள்ளிகள் இப்படைப்பில் இணைந் திருப்பதைக் காணமுடியும். தமிழின் வளமான குறுங்காவிய மரபிற்கு 'நெற்றிமண்’ சான்றாக இருக்கிறது. ஈழப் போர் தொடர்பான இவ் வகையான குறுங்காவியங்களை மட்டும் தொகுத்து தனித்தொகுப்பாக வெளியிடும் தேவை இருப்பதாகவே கருதுகிறேன்.

வில்வரத்தினம் காட்டும் 'மண்’ குறித்த புதலை அவரது கீழ்வரும் கவிதை உறுதிப் படுத்துகிறது.

''இந்த மண்
எனது கால்களின் கீழுள்ள தூசிப் படலம் அல்ல
உணர்வார்ந்த பிடிப்பின்
தூர்ந்து போகாத
உயிர்த்தளம்.
வேலியடைப்பிற்குள்ளும்
வெறும் பற்றுக்களின் சுற்றுகைக்குள்ளும்
இது இல்லை
பண்பாடென்னும் வாழ்வு ஊட்டம்
பருகப் பெற்றோமே
அந்தப் பச்சைக் கடனுக்கான
உறுதிப் பத்திரமாய
வாழ்விற்தான் உள்ளது
- ஈரப் பதன்: (1992)

வில்வரத்தினம் கவிதைகள் காற்றும் மண்ணும் கலந்த வெளிக்குள் பயணம் செய்து, உயிர்த்து எழுவதற்கான பேராசையை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. ஒரு கலைஞனின் ஆசைக்கு எல்லையேது? அது வரலாற்று நிகழ்வுகளைப் புறந்தள்ளிய தப்பித்தலாகவோ. வெறும் அழகுணர்வு சார்ந்த முருகியலாகவோ தம்முள் செயல்படாதிருப்பது தான் அதன் பலமாகிறது. அவர் சொல்கிறார்...

''கவனியுங்கள்
நாம் ஏதாவது செய்தாக வேண்டும்
காளான் குடை நிழலில்
சித்தாந்தங்களை செபித்துக் கொண்டிராமல்
செயன் முறையில் ஏதும் முனைந்தாக வேண்டும்
சின்ன விழிகளுக்குள் மிதமாயிருக்கின்ற
கனவுகளையேனும்
மெய்ப்படுத்தித் தருவதற்கு
அதுவும்
விழியளாவும் இடமெல்லாம்
வெள்ளெருக்குப் பூத்துப் படர்வதின் முன்பாக. (மறுபடி: 1996)

வில்வரத்தினம் அவர்களின் 'அகங்களும் முகங்களும்’ 1985). 'காற்று வழிக் கிராமம்’ (1995). 'காலத்துயர்’ (1995). 'நெற்றிமண்’ (2000) ஆகிய இத்தொகுப்புகள் அனைத்தையும் மேலும் பிற்காலங்களில் எழுதிய கவிதை களையும் இணைத்து 'உயிர்த்தெழும் காலத் திற்காக’ (2001) என்னும் முழுத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இக்கவிதைகளை தொடர்ச்சி யாக வாசிக்கும் போது, அவரது ஆன்மிகம் தொடர்பான மனநிலையும். பின்னர் அதனை மீறிய வெளியும், தொடர்ந்து போர் என்னும் எதார்த்தத்தைக் காணும் பமாணமும் கவிதை களாக வடிவம் பெற்றுள்ளன. வாழ்க்கையின் கோபங்கள். சோகங்கள் ஆகிய இரண்டும் சமமான பரிமாணத்தில் மொழியில் வெளிப் படுவதைக் காண்கிறோம். கோபங்களின் மொழி எள்ளல் மொழியாகவும் வடிவம் பெற்று விடுகிறது. கோபத்தின் உச்ச கட்ட வெளிப்பாடு தான் எள்ளல் மொழி. வில்வரத்தினம் கவிதைகளின் சொல்லாட்சிப் பரிமாணங்களின் வளர்ச்சி பிரமிப்பைத் தருவதாக அமைகின்றது. இவ்வகையில் ஒவ்வொரு தொகுப்பும் அதன் முன்னைய தொகுப்பிலிருந்து வேறுபட்ட மொழியாய் இருப்பதைக் காண முடிகிறது. வாழ்க்கையாய். கவிதையாய். வாழ்க்கையும் கவிதையுமாய் எனப் பலப்பல பமாணங்களுக்குள் வில்வரத்தினம் கவிதை களைத் தரிசிக்க முடிகிறது. ஆம். அவர் சொல்லுகிறார். . .

''நான் கொண்ட எழுதுகோன்மை
எனது வாழ்நெறியின்
வலப் பாகத்திலிருந்தோ
இடப் பாகத்திலிருந்தோ
எழுந்தது அல்ல!
ஊடறுத்து நடுநின்று
ஊன்றி எழுந்தது.
எல்லோர்க்குமான விடுதலை வாழ்வை
அவாவுறும் எனது நெஞ்சின்
உறுதிப் பாட்டிலிருந்து
உருவியிழுத்த எழுது கோலை
மண்ணின் நடுகின்றேன்
உரம்பாய்ந்த முதுகெலும்பாக
உள்நின்ற நிமிர்வே
உயிரின் ஊடு பாவியெழுகின்ற
ஒளிப்பிழம்பே!
உனை நிறுவ வல்வேன் ஆயின்
வாழ்வேன் என் எழுத்தில். (எழுதுகோன்மை: 2000)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com