Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kathaisolli
Kathisolli Logo
மே - ஆகஸ்ட் 2006
மகாத்மாக்கள்
சூரங்குடி. அ. முத்தானந்தம்

ஆட்டுக்காரி அழகம்மாவின் பேரேட்டில் லாபக் கலமே இருக்க வேண்டும். நஷ்டக்கலம் வந்து விட்டால் வேலெடுத்து ஆடாமல் விடமாட்டாள்.

அவளது வீட்டுக்கு ஆடுமேய்க்க வந்தவர் ஆறுமுகப்பாட்டையா. மேற்கே வெகுதூரத்திலிருந்து வந்த மனிதர். அவர் வரும் போது அய்ம்பது வயது இருக்கும். இப்போ இருபது வருசமாச்சு. ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் உழைத்தவர்.

இவ்வளவு காலம் அந்த வீட்டில் காலம் தள்ளிய ஒரே நபர் இவரைத் தவிர வேறு யாரும் இருந்திருக்க முடியாது.

.....ஆறுமுகப் பாட்டையா ஒரு முருக பக்தர். எல்லாமே அவன் செயல் என்று நம்புகிறவர். அவரது நெற்றியில் எந்நேரமும் திருநீறு வாடாமல் இருக்கும். விபூதிப்பை அவரது மடியை விட்டு இறங்கியதே கிடையாது ... உடம்புக்கோ, மனசுக்கோ ஒரு சங்கடம் வந்தால் முருகனின் திருநீறுதான் அவருக்குக் காப்பு !

இந்த இருபது வருச அனுபவத்தில் இப்போ வந்திருக்கும் சோதனை மாதிரி இதற்கு முன்னால் வந்ததில்லை அவருக்கு!

பத்து நாட்களுக்கு முன்பு -

அன்று அவருக்குச் சரியான உடல் நலமில்லை. அதைப் பொருட்படுத்தாமல் ஆடுகளைப் பத்திக் கொண்டு போனார். போன இடத்தில் காய்ச்சலும், தலை சுற்றலும், குமட்டலும் வந்ததால் ஆடுகளை மேயவிட்டு விட்டு, ஒரு மரத்தடியில் போய் படுத்து விட்டார். மத்தியானக் கஞ்சி கொண்டு போன தூக்குச் சட்டி திறக்கப்படாமல் தலைமாட்டியிலேயே இருந்தது. ஆடுகள் வீட்டுக்குப் போகும் நேரம் போலும். மே. மே என்று கத்தின. அந்தச் சத்தம் கேட்டு, கட புடா வென்று எழுந்த பாட்டையா மேற்கே பொழுதைப் பார்த்தார். அது மலை வாயில்விழும் தருவாயி லிருந்தது.

கண் வெளிச்சத்திலேயே ஆடுகளைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

அவசர, அவசரமாக இனம் பிரித்து எண்ணிச் சரி பார்த்தார்.

ஒரே ஒரு குட்டியை மட்டும் காணோம்! மனம் பதறியது. இனிமேல் அதை எங்கு போய்த் தேடுவது? இது ஆட்டுக்காரிக்குத் தெரிந்தால், கடித்துக் குதறி விடுவாளே!

நேரம் இருட்டி வெகு நேரமாகியிருந்தது. ஆடுகளைக் கொண்டு கொட்டாரத்தில் அடைத்து விட்டு, அழகம்மாவிடம் போய் விசயத்தைச் சொன்னார் பாட்டையா. அவர் நினைத்தது போலவே அந்த அம்மா கொடுத்த கொடை ஜென்மத்துக்கும் காணும் அவருக்கு!

பத்து நாட்களுக்குப் பின்...

அன்றைய தேதியோடு பாட்டையாவின் ஆண்டுக் கணக்கு முடிகிறது. ராத்திரிச் சாப்பாடு முடிந்த பின், உள் வீட்டுக்குள் வாசலை ஒட்டியுள்ள திண்ணையில் வந்து உட்கார்ந்தார் பாட்டையா. அதுதான் அவருக்கென ஒதுக்கப்பட்ட ஜாகை! அதற்கு எதிரேயுள்ள திண்ணையில் உட்கார்ந்த அழகம்மா, நான்காக மடிக்கப்பட்ட ஒரு தாளை அவரிடம் நீட்டினாள். அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தார் அவர். அதில், வருசச்சம்பளம் இவ்வளவு என்றும், காணாமல் போன ஆட்டுக்குட்டியின் கிரயமாகப் பிடித்தம் செய்த தொகை இவ்வளவு என்றும், மொத்தச் சம்பளத்தில் பிடித்தம் போக மீதமுள்ள ரூபாய் இவ்வளவு என்றும் குறிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் பாட்டையா எந்த வித அதிர்ச்சியும் கொண்டதாக இல்லை. ரொம்ப இயல்பாகவே இருந்தார்.

கையிலிருந்த மிச்சத் தொகையைப் பாட்டையாவிடம் கொடுத்துக் கொண்டே, அவள் சொன்னாள்: “ஒங்களுக்கும் வயசாகிப் போச்சு; இனி,கண்ணும் கருத்துமா ஆடு மேய்ச்சுட்டு வர ஒங்களால முடியாது. மேலும் இப்படி ஆடுகள் காணாமல் போய்க்கிட்டு இருந்தா எல்லாருக்குமே நஷ்டம் தான். அதனால் கையில இருக்கிற காசை வச்சுக்கிட்டு ஒங்க ஊரப்பாத்துப் போய்ச் சேருங்க! இன்னைக் கோட ஒங்க கணக்கு சரி.

மேலும் அவள் தொடர்ந்து சொன்னாள் : “ஏற்கனவே ஒரு மாசத்துக்கு முன்னாலேயே நாங்க ஒரு முடிவு எடுத்திருந்தோம். அந்த முடிவுப் படி இப்போ எங்க வீட்டுக்கு ஆடு மேய்க்க ஒரு இளவட்டப் பையன் தான் தேவை. ஒரு நல்ல பையனாப் பார்த்து கூட்டிக்கிட்டு வர, எங்க வீட்டுக்காரர் மேற்கே கிளம்பிப் போயாச்சு. நாளை ராத்திரிக்குள்ள பையன் வந்திருவான். நாளை ஒரு நாள் மட்டும் நான் ஆட்டுக்குப் பின்னால போய்க்கிருவேன்.

“சரிம்மா. சந்தோஷம்.”

“அப்படின்னா நான் கிளம்புகிறேன்” என்று சொல்லிக் கொண்டே, அவர் வைத்திருந்த துணிமணிகளை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பாட்டையா.

வாசல் படியைக் கடந்து வந்து வெளியே நின்றபடி கொஞ்ச நேரம் யோசித்தார். பின், கையிலிருந்த துணிகளை எதிர்வீட்டுத் திண்ணையில் போட்டு விட்டுத் தனது இஷ்டக்காரர்கள் சிலரைப் பார்த்துச் சொல்லி விட்டு வரப் புறப்பட்டார். மறுநாள் காலை ஊரைவிட்டு வெளியேறத் திட்டம் !

ஊருக்குள் போய்த் திரும்பி வரும்போது ஊர் ஒடுங்கியிருந்தது எந்த அரவாட்டமும் இல்லை.

துணிமணிகளைப் போட்டு விட்டுப் போன திண்ணையில், சற்றுநேரம் உட்கார்ந்திருந்தார். முருகப் பெருமானின் நினைப்பு வந்தது. மடியிலிருந்த திருநீற்றுப் பையிலிருந்து கொஞ்சம் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, அப்படியே அதே இடத்தில் சாய்ந்து விட்டார்.

அன்று இரவு அவருக்கு சரியான தூக்கமில்லை. அடிக்கடி எழுந்து அந்த ஆடுகள் அடைந்து கிடக்கும் கொட்டாரத்துப் பக்கம் ஒன்னுக்குப் போய் விட்டு வந்தார். பழக்க தோசத்தாலோ, அனிச்சையாகத் தானோ அவரது பார்வை அந்தக் கொட்டாரத்திலுள்ள ஆடுகளின் மேல் விழுந்தது ஒவ்வொரு தடவையும்.

தலைக் கோழி கூப்பிடுகிற நேரம். எப்போதும் அந்நேரமே எழுந்து விடும் பாட்டையா, தற்செயலாகக் கொட்டாரத்துக்குப் பக்கம் போனார். அது வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு ஆட்டைக்கூட காணோம். மனம் குபீரென்றது.

... ஆடுகள் எல்லாம் களவு போயிருந்தன.

இதை இன்ன ஊர்க்காரர்கள் தான் செய்திருக்க வேண்டும்.

அவர்கள் தான் இதில் கைதேர்ந்தவர்கள்.

இந்தச் சோலியை அவர்கள், ஒரு வீரவிளையாட்டு என்றும், திறமைக்கு விடப்படும் சவால் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.

குறிப்பிட்ட தூரத்திலுள்ள அவர்கள் எல்லைக்குள் ஆடுகள் போய் விட்டால், அது யானை வாய்க்குள் போன கரும்பு தான். மீளவும் அதை மீட்டி வருவது என்பது அவ்வளவு சுலபமல்ல.

அது நல்ல நிலவுக்காலம்.

கொட்டாரத்தை விட்டு வெளியேறிய ஆடுகள் வண்டிப் பாதை வழியாக அவர் நினைத்தது போலவே போயிருந்தன.

தடம் பார்த்துத் தெளிவு பண்ணிக் கொண்டார் பாட்டையா.

கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் இது நடந்திருக்க வேண்டும்.

சிறிது நேரம் பாட்டையாவுக்கு எதுவுமே ஓடவில்லை.

அப்புறம் அவர் எடுத்த முடிவின்படி, ஊருக்குள் போய்த் தெருத் தெருவாகத் “திருடன், திருடன், திருடன் ...” என்று சத்தம் போட்டுக் கத்திவிட்டுத் தான் மட்டும் ஆடுகள் போய்க் கொண்டிருக்கும் திசையை நோக்கிப் பாய்ந்தார்.

ஊர் எல்லையை ஒட்டியுள்ள முத்து ஊருணிக் கண்மாய்ப் பக்கமாகத் தான் ஆடுகள் போய்க் கொண்டிருந்தன. இரண்டு பேர்களின் தலைகள் மட்டுமே தெரிந்தன. பாட்டையா ஓடிப்போன வெறிச்சியில், ஆடுகளை மேலே செல்ல விடாமல் மடக்கினார்.

திருடர்களுக்கு அவர் மேல்க் கடுங்கோபம்.

பாட்டையாவைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு, ஆடுகளை வேக, வேகமாகப் பத்தினார்கள். உடனே ‘டக்’ கென்று எழுந்து வந்த பாட்டையா, திரும்பவும் ஆடுகளைப் போக விடாமல்த் தடுத்தார். பாட்டையாவுக்கு நல்ல அடி. உதை. கீழே தள்ளி மிதி, மிதி என்று மிதித்து வண்டிப் புழுதியில்ப் புரட்டி எடுத்தார்கள், அந்த இரண்டு பேர்களும் பாட்டையாவும் விடவில்லை. வெட்ட, வெட்டத் தளிர்க்கும் மாய அரக்கனின் தலைபோல, திரும்பத் திரும்ப எழுந்து வந்து ஆடுகளை ஊரைப் பார்த்துத் திருப்ப முயன்றார். பெரியவர் வலுவான கட்டைதான்! அவரைக் குத்திச் சாய்த்தால் தான் நம்ம காரியம் கை கூடும் என்று எண்ணிய திருடர்களில் ஓருவன், தன் இடுப்பிலிருந்து சூரிக் கத்தியை உருவினான். இதைப் பார்த்துக் கொண்ட பாட்டையாவுக்கு அந்த முருகப் பெருமான் தான் கை கொடுத்திருக்க வேண்டும்... முருகா, இவர்களுக்கு நல்ல புத்திக் கொடு! என்று மடியிலிருந்த விபூதிப் பையிலிருந்து ஒரு கை திருநீற்றை அள்ளி, அந்த இரண்டு பேர்களின் நெற்றியிலும் போட்டு விட்டார். அது அவர்களின் கண்களிலும் சிதறி விழுந்ததால் கண்களைத் திறக்க முடியாமல் தவித்தார்கள், ஒரே உறுத்தல்.

இதற்குள் ஊருக்குள்ளிருந்த ஜனங்கள், கம்பு தடிகளோடு ’விடாதே! பிடி! அடி, குத்து, கொல்லு’ என்ற பெரிய இரைச்சலோடு நெருங்கி வந்து விட்டார்கள்.

திருடர்களுக்குப் பயம். இன்னைக்கு நாம சட்டினி தான்; என்று எண்ணிக் கொண்டார்கள்.

கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்தது. கூட்டத்தோடு கூட்டமாக வந்த ஆட்டுக்காரி அழகம்மா, திருடர்களைப் பார்த்துக் கேட்காத கேள்விகளை எல்லாம் கேட்டாள்.

பாட்டையா அவர்களைத் தடுத்து நிறுத்தி, நடந்ததைச் சொன்னார்.

அதற்கு மேல் அவரால் நிலை கொண்டு நிற்க முடியவில்லை. அப்படியே சோர்ந்து தரையில் சாய்ந்து விட்டார்.

இரண்டு பேர்கள் அவரது உடம்பிலுள்ள புழுதியைத் தட்டி விட்டு, அவரை ஆசுவாசப்படுத்தினார்கள்.

திருடர்கள் கண் விழிக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலமையைப் பார்த்து, ஊர்க்காரர்களுக்கு ரொம்ப மனச் சங்கடம். உடனே பக்கத்திலுள்ள முத்து ஊருணிக் கண்மாயைப் பார்த்து கூட்டிக் கொண்டு போனார்கள். கண்மாய்த் தண்ணீரால் கண்களைக் கழுவிச் சுத்தப்படுத்தி சுகப்பட வைத்தார்கள்.

பொழுது விடியப் போகிற நேரம்.

ஆடுகள் கத்தின. அது ஆடு திருட வந்தவர்களுக்கு நகைப்பது போல பட்டதோ என்னமோ, வெட்கம் பிடுங்கித் தின்றது, அவர்களுக்கு. குனிந்த தலை நிமிராமலிருந்த அவர்களை, ஊர்க்காரர்கள் திரும்பவும் பாதைக்கு அழைத்து வந்து, நாலு நல்ல வார்த்தைகள் சொல்லி, முதுகில்ச் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, அவர்களை வந்த பாதை வழியாகப் போகும்படி அனுப்பி வைத்தார்கள்.

ஆடுகள் எல்லாம் ஊரைப் பார்த்துத் திருப்பப்பட்டன.

துவண்டு போய்க் கிடந்த பாட்டையாவை இரண்டு பேர்கள் கைத் தாங்கலாகக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

ஆட்டுக்காரி அழகம்மா, ஊரோடு சேர்ந்து ஆடுகளுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஒருவர், அருகில் வந்த மற்றவர்களிடம் கேட்டார் : “ஆமா ... பாட்டையாவுக்கு அழகம்மா வீட்டுல ஆடு மேய்க்கிற வேலை நேற்றோட போச்சாமே !”

“வரும் போது பேசிக்கிட்டாக”

‘ம்’

“நல்ல விசுவாசமா உழைச்சவர் தானெ?”

“பத்து நாளைக்கு முன்னால ஒரு ஆட்டுக் குட்டி காணாமல் போச்சாம்! அது அவரது...”

“அட பாவமே! இது எங்கேயும் நடக்கிறது தானெ?”

“அன்னைக்கு ஒரு ஆடு தான் காணாமல் போச்சு; இன்னைக்கு ஒரு கிடை ஆடுமில்ல காணாமப் போகப் பாத்துச்சு!”

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வந்தாள், அழகம்மா.

ஊர் வந்தாயிற்று.

ஆடுகள் கொட்டாரத்தை நோக்கிப் போயின.

இனி அவரவர் வீடுகளுக்குப் போக வேண்டும்.

அப்போது பாட்டையா பற்றிய பேச்சு வந்தது.

எல்லோரும் ஒரு நிமிசம் அந்தப் பாதை மேலேயே நின்றார்கள்.

அப்போது அங்கிருந்த ஒருவர் சொன்னார் : “பாட்டையாவை ஊர்மடத்துல கொண்டு உக்கார வச்சு வைத்தியம் பார்ப்போம். உடம்பு நல்லாச் செளகரியப்பட்டதும், அவரது ஊரைப் பார்த்துப் போகச் சொல்லி அனுப்பி வைப்போம்!”

“அட, நீ ஒன்னு. அவர் சொந்த ஊரை வெறுத்துத்தானெ இங்க வந்து வேர்ப் போட்டிருக்காரு! நான் எங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போய் வச்சுக்கிர்றேன்” என்றார், அவரது இஷ்டக்காரர் ஒருவர்.

அதுவரையிலும் வாயே திறக்காமலிருந்த ஆட்டுக்காரி அழகம்மா, “மன்னிக்கணும். பாட்டையாவை நான் எங்கேயும் அனுப்ப இஷ்டப்படல. எங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய், அவர் ஆயுள் பரியந்தமும் உக்கார வச்சுச் சோறு போடுவேன்” என்றாள்.

“அப்டின்னா எல்லாருக்கும் சந்தேசம் தான் தாயி” - கூட்டத்திலிருந்த அனைவருமே சொன்னார்கள்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com