Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kathaisolli
Kathisolli Logo
பிப்ரவரி - ஏப்ரல் 2007
நாட்டார் கதை
காது அறுபடும்
சி. ஷஸ்டின் செல்வராஜ்

ஒரு ஊர்ல அண்ணன் தம்பிங்க ரெண்டு பேர் இருந்தாங்க. அண்ணனுடைய பேரு வெள்ளையன், தம்பியோட பேரு கருவண்டன். இருவரும் பெயருக்கேத்த நிறம் இருப்பாங்க. அண்ணன் வெள்ளையன் ஓரு நாள் அந்த ஊரில் உள்ள செட்டியாரிடம் போய் வேலைக்குச் சேர்ந்தான். செட்டியாரோ அவனிடம் நான் உனக்கு வேலை தர்றேன், ஆனா நான் சொல்லும் வேலைகளை நீ செய்ய வேண்டும், இல்லையேல் உன்னுடைய காது அறுபடும் என்றார். அதற்கு ஒப்புக்கொண்ட வெள்ளையன் என்ன வேலை அதனைச் சொல்லுமாறு செட்டியாரிடம் கேட்டான். அதற்கு செட்டியார் அழுத பிள்ளைத் தொட்டில்ல ஆட்டணும், பாட்டிக்கு மேல் கொசு, ஈச்சு வந்தா விரட்டணும், எச்ச உலக்கைப் பிடிக்கணும் (உலக்கை குற்றுபவர்கள் சோர்வடைந்திருந்தால் அவர்களுக்குப் பதிலாய் உலக்கை குற்றுவது). வயலில் களை பறிக்கணும் ஆக இவ்வளவு வேலையையும் மேலும் அப்பப்ப நான் சொன்ன வேலையையும் சரியாய்ச் செய்யணும்னு சொன்னார். வெள்ளையனும் அதற்கு சரின்னு ஒத்துக்கிட்டான். ஆனா அவனுக்கு அழுத பிள்ளையைத் தொட்டில்ல போட்டு ஆட்டத் தெரியல... பாட்டிக்கு மேல ஈ, கொசு எல்லாம் மொய்ச்சிச்சு ஆனா ஈச்சும் விரட்டத் தெரியல... எச்ச உலக்கப் பிடிக்கத் தெரியல... வயல்ல களை பறிக்கத் தெரியல. மொத்தத்திலே கொடுத்த வேலையைச் சரியா செய்யல. செட்டியாரு வேற வழியில்லாம வெள்ளையனுடைய காத அறுத்துட்டு விட்டுட்டாரு. காது அறுபட்டு வீடு வந்தான் வெள்ளையன். இந்த விஷயத்தை தம்பிக் கருவண்டன் அண்ணனிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டான்.

பிறகு ஒரு நாள் கருவண்டன் செட்டியாரிடம் போய் தனக்கு வேலை தரும்படியாகக் கேட்டான். மேலும் தனக்குத் தரும் வேலையைச் சரியாச் செய்வேன்னு கருவண்டன் ஒத்துக்கிட்டான். ஆனா தான் வெள்ளையனின் தம்பி என்பதைச் சொல்லவில்லை. செட்டியாரும் வெள்ளையன்கிட்ட சொன்ன எல்லாத்தையும் சொல்லி... கொடுத்த வேலையைச் சரியா செய்யலன்னா உன் காத அறுத்துவிடுவேன்னார். அதற்கு சரின்னு ஒப்புக்கொண்டான் கருவண்டன். அன்று முதல் அவனுடைய வேலையை ஆரம்பிச்சான் கருவண்டன்.
உறங்கிகிட்டு கிடந்த பிள்ளையை நுள்ளி (கிள்ளி) விட்டுட்டு தொட்டுல்ல ஆட்டினான், செட்டியாரு பாத்தாரு. பிறகு ஒரு நாள் படுத்துக் கிடந்த பாட்டிக்கிட்ட வந்து விளக்குமாறினை எடுத்துக்கிட்டு வந்து சூ... சூ... சூ...ன்னு ஈச்சு விரட்டுறேன்னு சொல்லிகிட்டு விளக்கமாறாலே பாட்டியை அடி வெளுத்து வச்சு வாங்கினான்.

பாட்டி சத்தம் போடவே செட்டியாரு வந்து என்னன்னு கேட்க, பாட்டி மேலே ஈச்சு வந்துச்சு அதான் விரட்டுனேன்னான் கருவண்டன். செட்டியார் அப்படியான்னுட்டு போயிட்டாரு. பிறகு ஒரு சமயம் எச்ச உலக்கை போடுறேன்னு சொல்லிக்கிட்டு, உலக்கைப் போட்டுக்கொண்டிருந்த எல்லாப் பெண்களையும் கட்டிச் சேத்து பிடிச்சுக்கிட்டான். ஒருத்தரும் உலக்கைப் போட்டு மாவு இடிக்க முடியல. செட்டியாரு பாத்தாரு. இந்தப் பய என்ன எல்லாத்துலயும் விகடனா இருப்பாம் போலுக்குன்னு நெனச்சி அவனை வயலுக்குக் களை பறிக்க கூட்டிக்கிட்டுப் போனாரு. அங்கே போய் அவனுகிட்ட லேய் இந்த வயல்ல இறங்கி களை பறின்னு சொன்னாரு. அதுக்கு கருவண்டன், வயல்ல எது களைன்னு கேட்டான். செட்டியாரு வயலில் இருந்த நெல் செடியைக் காண்பிச்சு லேய் பாத்தியா இது தவிர மீதியெல்லாம் களைதான்னு சொன்னார்.

மேலும் களைய ஒழுங்காப் புடுங்கிப் போட்டுகிட்டு வீடு வந்துசேருன்னு கிளம்பினார் செட்டியார். கருவண்டன் என்ன செய்தான் தெரியுமா? செட்டியாரு காண்பிச்ச அந்த செடியை மட்டும் ஒரு மண் கலயத்தைப் போட்டு மூடி வச்சுக்கிட்டு மீதி வயல்ல உள்ள நல்ல நாத்து, களை எல்லாத்தையும் புடுங்கிப் போட்டுகிட்டு சீக்கிரமே வீடு வந்து சேர்ந்தான். அதப் பார்த்த செட்டியாரு இந்தப் பய என்ன நேரமே வீடு வந்துட்டான்னு ஆச்சரியப்பட்டு லேய்... வயல்ல வேலை முடிஞ்சான்னு கேட்க, அதுக்கு அவன் ஆமா வயல்ல களை புடுங்கியாச்சுன்னான்.
அடுத்த நாள், வயலப் போய் பார்க்கப் போன செட்டியாருக்கு பெரிய இடி. அவருடைய வயல்ல ஒரே ஒரு கலயத்தை மட்டும் சுமத்தி (மூடி) வச்சிருந்தது. அத எடுத்துப் பாத்தாரு செட்டியாரு. அவரு காண்பிச்ச செடி மட்டும் அப்படியே இருந்தது. வீட்டுக்கு வந்து கருவண்டனை ஏசினார். அதற்கு கருவண்டன், தனக்குச் சொன்ன வேலையைத் தான் ஒழுங்காகச் செஞ்சுருக்கேன்னான்.

செட்டியாரு இவனோட பெரிய ஓத்திரமா (தொந்தரவாக) இருக்குன்னு நெனச்சி கொஞ்ச நாள் இவன தூரத்தில் வைக்கணும்னு நெனச்சி தன் மகள் வீட்டுக்கு பண்டம் பலகாரம் எல்லாம் செய்து கருவண்டனிடம் கொடுத்து விட்டார். அவன் கொண்டுபோகிற பானையில் ஒண்ணு எழுதியும் வேற ஒட்டினாரு. அது அவனுக்கு ஒண்ணுமே புரியல. நடந்துக்கிட்டேயிருந்தான். போகிற வழியில் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக்கிட்டு இருந்தார்கள். அவர்களிடம் பானையில் என்ன எழுதியிருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டான். அதாவது பானையில ‘‘பானையைக் கொண்டுவர்ற கருவண்டனுக்கு எட்டு நாள் முந்தி உள்ள கேப்பையும், அப்பாவுக்கு கோழி அடிச்சு குழம்பும் வைக்கவும்”ன்னு எழுதியிருந்தது.

இத கருவண்டன், ஏ... செட்டி... உனக்குக் கோழிக் குழம்பு கேட்குவாக்கும். உன்னை இப்ப என்னப் பண்ணப் போறன் பாருண்ணுகிட்டு அதனை மாத்தி எழுதச் சொல்லி பையன்களிடம் சொன்னான். அதாவது ‘‘பானையை சுமந்து வர்ற கருவண்டனுக்கு கோழி அடிச்சுக் குழம்பும், அப்பாவுக்கு எட்டு நாள் முந்தி உள்ள கேப்பைக் கூழும்னு” எழுதி வைக்கச் சொன்னான். கருவண்டன் செட்டியார் மகள் வீட்டை வந்தடைந்ததும் பலகாரம் கொண்டுவந்த பானையைச் செட்டியார் மகளிடம் கொடுத்தான். மகள் பானையில் எழுதியிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கருவண்டன்கிட்ட இது என்ன! அப்படின்னுக் கேட்டாள்... கருவண்டன் இதுதான் சமயம்ன்னுகிட்டு உங்க அப்பாவுக்கு புத்தி சுவாதீனம் சரியில்ல. அதனால கேப்பை நல்ல குளுமையாய் இருக்கும்லா அதனாலதான் அப்படி எழுதியிருப்பாரா இருக்கும்னான். அதுமட்டுமல்ல! சாணியைக் கலக்கி அதுல விளக்குமாற தோச்சி எடுத்து அவருமேல அடிச்சா பேய் பிடி எல்லாம் போயிடும்னுட்டு கருவண்டன் சொன்னான்.

அப்பாவின் மேல் பாசமுள்ள மகளும் அப்பா வந்தவுடன் சாணியைக் கலக்கி விளக்குமாறால தெளிச்சா. செட்டியாருக்கு (அப்பாவுக்கு) ஒண்ணுமே புரியல. துள்ளித் துள்ளி விலகிப் போனாரு கருவண்டன் அதப் பாத்து செட்டியாரு ஓடுறாரு ஓடுறாருன்னு சொன்னான். பின்னர் செட்டியாரைப் பிடிச்சு வச்சு செட்டியார் மகளும், கருவண்டனும் சாணியை அவர் மேலத் தெளிச்சாங்க.

செட்டியார் சத்தம் போட்டுக்கிட்டே ஏசிகிட்டே வந்தாரு. பின் அவருக்கு கேப்பைக் கூழ் கொடுத்தாள் மகள். என்னம்மா கேப்பையைத் தர்றன்னு கேட்டார். அதற்கு அவள் பேய் பிடி போய் மனம் சரியா வரணும்னா இதத்தான் சாப்பிடணும்ன்னு சொன்னாள். என்னது எனக்கு பேய் பிடிச்சிருக்கா! என்ன சொல்றீங்க... அப்படின்னுட்டு சே... இது என்ன சாப்பாடுன்னு தூக்கி எறிஞ்சாரு. அப்பாவுக்கு உண்மையாகவே பேய்தான் பிடிச்சுருக்குன்னு நினைச்சுக்கிட்டா மகள். இதுதான் சமயமுன்னு நினச்சு கருவண்டன் சொன்னான் இதுக்கெல்லாம் ‘‘காதறுத்தா சரியாகிவிடும்”னு. ஆமா அதுவும் நல்ல ஐடியாதான், எங்கப்பாவுக்கு உடம்பு சரியான்னா மட்டும் போதும்னு சொன்னாள். காதறுப்பு நிகழ்வும் நடந்தது. கருவண்டன் தன் அண்ணன் வெள்ளையனுக்கு ஈடா செட்டியாரப் பழிக்குப் பழி வாங்குன சந்தோசத்தில் வீடு திரும்பினான்.

(இக்கதை கன்னியாகுமரி மாவட்டம், இராஜாவூரில் ம. சிறில் (65) என்பவரிடம் சேகரித்தது. இக்கதை நாகர்கோவில் வட்டார வழக்குமொழி நடையில் உள்ளது.)




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com