Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2009

தமிழீழம் பன்னாட்டு அரசியல் தாக்கம்
கி.வெ.

“அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர்; போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்” என்றார் மா-சே-துங். அரசியல் என்பது அதன் ஒரு வளர்ச்சிக் கட்டத்தில் போராக வடிவம் பெறுகிறது. போர்களின் உந்து சக்தியாக பெரிதும் அரசியல் தேவைகளே அமைகின்றன. இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை. வர்க்க முரண்பாடும், இனப்பகையும் இருக்கும் வரை இந்தப் போக்கு நீடிக்கவே செய்யும்.

சிங்களப் பேரினவாத அரசியல் ஒரு கட்டத்தில் இனக் கொலைப் போராக தீவிரம் பெற்றது. ஈழத் தமிழினத் தற்காப்பு அரசியல் ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டமாக வடிவம் கொண்டது. களமுனையில் விரிந்து, அரசியல் முனையில் தேங்கியிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டமானது. இப்போது தற்காலிகமாகக் களமுனையில் சுருங்கியபோதும் அரசியல் முனையில் விரிவடைந்து வருகிறது. நாளைக்கு களமுனையிலும் வேறு வடிவத்தில் விரிவடைய வாய்ப்பு உண்டு.

மூன்றாவது ஈழப்போரின் முடிவில் ஆனையிறவில் கொடியேற்றியதற்குப் பிறகு தமிழீழத் தாயகத்தின் 70 விழுக்காடு நிலப்பரப்பும், 80 விழுக்காடு கடற்பரப்பும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நார்வே முயற்சியில் 2002இல் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் நீடித்தது. பலசுற்று அமைதிப் பேச்சுகள் நீடித்த அமைதிக்கு வழிகோலுகின்ற தீர்வை நோக்கி நகராமல் தேங்கி நின்றன. அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்கள் விடுவித்த தாயகப் பகுதிகளில் ஒரு அரசுக்குரிய கூறுகளோடு நேர்த்தியான நிர்வாகக் கட்டமைப்பை நிறுவி நடத்தினர்.

இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டே அனைத்து சுற்றுப் பேச்சுகளும் நடந்தபோதிலும், இந்தியா நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்து வந்தது. ஆயினும், ஈழச்சிக்கலில் மேற்குலகின் பாத்திரத்தைக் குறைத்து, தனது பங்கேற்பை அதிகரிக்கும் திசையில் காய்களை நகர்த்தியது. நார்வே தலையீடு முற்று முழுதாகத் தனக்குச் சாதகமாக அமையவில்லையே என்ற ஏமாற்றத்தில் இருந்த சிங்கள அரசு இந்திய அரசோடு நெருங்கத் தொடங்கியது.

இந்த நிலையில் 2001 செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பிறகு மாற்றமடைந்திருந்த அரசியல் சூழலை இந்தியாவும், இலங்கையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. ‘9ஃ11’ என்று குறிக்கப்படுகிற இந்நிகழ்வுக்குப் பிறகு எல்லா விடுதலைப் போராட்டங்களையும், மக்கள் புரட்சிகளையும் பயங்கரவாதமாக சித்தரிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தீவிரம் காட்டின. ”பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற மேற்குலக அறிவிப்போடு ஈழச் சிக்கலையும் சிங்கள, இந்திய அரசுகள் வெற்றிகரமாக இணைத்தன. முக்கியமான மேற்கத்திய நாடுகள் பெரும்பாலானவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டதும் ஈழத் தமிழர்கள் சார்ந்த சில தொண்டு அமைப்புகள் உள்ளிட்ட பலவும் நெருக்குதலுக்கு உள்ளாயின.

போர் ஓய்வு, பேச்சுவார்த்தைச் சூழலைப் பயன்படுத்தி இந்தியாவின் ‘ரா ’வும், இந்திய,சிங்கள இராணுவங்களின் உளவுப் பிரிவுகளும் இணைந்து செயல்பட்டு கருணாவைக் கையாளாக மாற்றின. புலிகள் இயக்கத்தில் கிழக்குப் பகுதியில் ஒரு பிளவை ஏற்படுத்தின. அதே நேரம் தனது தென் கடல் பரப்பில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது என்ற போர்வையில் இந்திய அரசு புலிகளுக்கு எதிரான கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டது. ராஜபக்சேயின் சிங்கள அரசு புலிகளுடன் இறுதிப்போருக்கு நீண்ட தயாரிப்பில் இறங்கியது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புலிகளுக்கு எதிரான போரும் ஒரு கண்னிதான் என உலகநாடுகளை நம்ப வைத்தது. இந்தியா இப்பணியில் நெருக்கமாக உதவியது. ஏற்கெனவே திபெத் சிக்கலில் தலாய்லாமாவுக்கு இந்தியா மறைமுக ஆதரவு தெரிவிப்பதால் ஆத்திரமடைந்திருந்த சீனா இலங்கையில் தனது “பங்கேற்பை’ அதிகப்படுத்தியது. இந்தியாவைவிட தனது செல்வாக்கே மேலோங்கியிருக்க வேண்டும் என முனைப்பு காட்டியது. திபெத்தில் இந்தியா செலுத்தும் செல்வாக்கிற்கு எதிரடியாக இலங்கையில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்றது.

அணு ஒப்பந்தத்தின் வழி இந்திய - அமெரிக்க இராணுவ உறவு வலுப்பட்டதும் சீனாவின் ஆத்திகத்திற்கு இன்னொரு காரணமாக அமைந்தது இலங்கையில் சீனத்தலையீடு அதிகரித்தது. வளர்ந்து வரும் இருபெரும் பிரதேச வல்லரசுகளின் வல்லாதிக்கப் போட்டியில் ஈழத் தமிழினப் பிரச்சினை சிக்கியது. உலகநாடுகளிடம் பெறப்பட்ட ஆயுதங்கள், இந்தியாவும், சீனாவும் தரும் உதவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ராஜபக்சே அரசு முழுவீச்சில் தமிழின அழிப்புப் போரை நடத்தி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதழாசிரியர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் எனப் பலரும் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. உள்ளிட்ட அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன.

சாட்சிகள் ஏதுமற்ற இனத்துடைப்புப் போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கே நடந்து வருகிறது. உலகில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சிங்கள அரசு இப்போரில் பயன்படுத்துகிறது. போர் உத்தி வகையில் விடுதலைப் புலிகள் பின்வாங்கிச் செல்ல வேண்டியதாயிற்று. களமுனை சுருங்கி நின்றது.

அதே நேரம் நாள்தோறும் பலநூறு தமிழர்கள் கொல்லப்பட்டதானது தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்தத் தமிழர்களிடத்திலும் பேரெழுச்சியை உருவாக்கியது. குறிப்பாக தமிழகத்தில் முத்துகுமாரின் உயிர்த் தியாகம் இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது போலவே, ஜெனிவா ஐ.நா. அலுவலகம் முன்பு இலண்டன் முருகதாசன் தீக்குளித்து மாண்டது

புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே எழுச்சியைப் பற்ற வைத்தது. இன விடுதலைப் போரின் அரசியல் முனை இவ்வாறு விரிவடைந்தது. இலண்டன் பாரிசு கனடாவின் டொரண்டோ, நியூயார்க், டென்மார்க், நார்வே, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, மொரிசியஸ், தென்னாப்பிரிக்க நகரங்கள் எங்கும் நடைபெற்ற கவன ஈர்ப்புப் பேரணிகள், பல நாள்கள் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், சாகும்வரை உண்ணாப்போராட்டங்கள் ஆகியவை உலகத்தின் மனசாட்சியை உலுக்கத் தொடங்கின. இலண்டனில் நடைபெற்ற இரண்டு இலட்சம் பேர் பேரணி, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்னால் பல நாட்கள் நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம, உண்ணாப் போராட்டம் ஆகியவை வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இப்போராட்டங்களிலெல்லாம் புலம் பெயர் தமிழின இளைஞர்களே முன்னின்றனர். பெற்றோர்கள் புலம் பெயர்ந்த பின் வெளி நாடுகளில் பிறந்த 25 வயதிற்கும் குறைவான வயதுள்ள, தமிழை சரியாக உச்சரிக்கக் கூட தெரியாத இளந்தமிழர் சமூகம் தாயக உறவில் எழுச்சி கொண்டது. கையில் பாயும் புலித்தலைப்பொறித்த செங்கொடி ஏந்தி, பிரபாகரன் உருவப் படத்தை உயர்த்திப் பிடித்த வண்ணம் “விடுதலைப் புலிகள் விடுதலை வீரர்கள் அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர்” என்று
எழுதியப் பதாகைகளை தாங்கி அவர்கள் குடும்பத்தோடு நடத்தியப் பேரணி தடைகளைத் தூளாக்கியது.

இவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்பினர்,
ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். புலம்பெயர் தமிழர்; அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அந்தந்த நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து தாயகத்தில் ஈழத் தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தால் சந்திக்கும் பேரவலம் குறித்த ஒளிப்படக் காட்சிகளைக் காட்டி, விளக்கிப்பேசி ஆதரவு திரட்டினர்.

இவ்வாறு மேற்குலகிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஈழத் தமிழர் சிக்கல் என்பதை விவாதத்திற்கு கொணர்ந்தனர். அதேநேரம், பிராந்திய வல்லரசுகளான சீனா,இந்தியா ஆகியவற்றின் கை, அளவுக்கு அதிகமாக மேலோங்குவதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை. நார்வேயை ஈழப் பிரச்சினையிலிருந்து விலக்கி வைப்பதில் சிங்கள-இந்தியக் கூட்டணி முனைப்புக் காட்டியது. கொழும்பு நகரில் நார்வே தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்ற சிங்கள-புத்தத் துறவிகளின் ஆர்ப்பாட்டத்தின் போது, நார்வே தூதரை வெளியே இழுத்து வந்து, அவருக்கு வலுக்கட்டாயமாக விடுதலைப்புலிகளின் உடுப்பை அணிவித்து இழிவுபடுத்தினர்.

அரசின் ஆதரவோடே இது நடத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் தூதுக்குழுவில் இலங்கை வருவதாக இருந்த சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு கடவுச் சீட்டு மறுத்தது ராஜபக்சே அரசு. உடனே சுவீடன் நாடு தனது இலங்கைத் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டது. உலக அரங்கில் ஈழத் தமிழர் போராட்டம் பல நாடுகளை அசைக்கத் தொடங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்கஆளுங்கட்சியான ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்பது; தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலைப் போராட்ட அமைப்பாக ஏற்பது எனத் தீர்மானித்து விட்டது.

தமிழர்களின் போராட்டம் மட்டுமின்றி மேற்குலக நாடுகளுக்கும் இந்திய, சீன வல்லாண்மைக்கும் இடையே நடைபெறும் ஆதிக்கப் போட்டியும் இப்பிரச்சினையில் சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. சீன அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் நேபாளமும், இலங்கையும் தங்கள் சிறப்பான நட்பு நாடுகள் என்றும், இலங்கையின் பாதுகாப்பிலும், பிரதேச ஒற்றுமையிலும் சீனா தனித்த அக்கறை கொண்டிருக்கிறது என்றும், விடுதலைப் புலிகளை ஒழிப்பதிலும், பிரபாகரனை அகற்றுவதிலும் இலங்கை அரசுக்கு சீனா நெருக்கமாக உதவிபுரியும் என்றும் கூறியது.

இதனைப் பார்த்த இந்தியா, பசில் ராஜபக்சேவை வரவழைத்து இன்னும் கூடுதல் நிதி அளிக்க முன் வந்தது. சீனாவும், இந்தியாவும் இலங்கையை ஒட்டிய பிரதேசத்தில் அதிக முக்கியத்துவம் பெறுவது உலக வல்லரசான அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “உடனே போரை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் இலங்கைப் பிளவுபடுவதைத் தடுக்க முடியாது” என்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமாவின் அறிவிப்புக்கு ஈழத் தமிழர்களின் முயற்சி மட்டுமின்றி, இந்தப் பிரச்சினையும் ஒருகாரணம். வரலாறு எப்போதும் இப்படித்தான். நேர்கோட்டில் பயணிப்பதில்லை. பல நலன்களின் ஊடாகவே செயல்பாடுகள் தொடர்கின்றன.

ஆயினும, உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டம்தான் இதில் தீர்மானகரமான பாத்திரம் வகித்து வருகிறது என்பதை மறந்து விடக்கூடாது. அதேபோல், தமிழ்நாட்டில் கட்சி கடந்து நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள், தமிழ்த் தேசிய சக்திகள் அப்போராட்டத்திற்கு அளிக்கும் தெளிவான திசைவழி ஆகியவை ஓரளவுக்கு பயன்தரத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை யில்லாத அளவுக்கு ஈழத்தமிழர் சிக்கல் இப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முக்கியப் பிரச்சினையாக முன் வந்திருக்கிறது. “தனி ஈழம்தான் தீர்வு” என ஜெயலலிதாவே கூறும் அளவுக்கு இப்பிரச்சினை தேர்தலில் வாக்கு வங்கியை உருவாக்கியிருக்கிறது.

ஆயினும் இது போலித் தோற்றமாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உண்டு. களமுனையில் உயிராயுதத்தைப் பயன்படுத்தி இன்னும் அழிக்க முடியாத சக்தியாக விடுதலைப் புலிகள் வீறுகொண்டு நிற்பது அடிப்படை வலுவாகும். இது ஒரு வரலாற்று அதிசயம் என்பதை வருங்காலம் குறித்து வைக்கும்.

"விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழத் தனி அரசு’ என்ற ஒற்றை இலட்சியத்தை அறிவித்து புலம்பெயர் தமிழர்கள் நடத்திவரும் அரசியல் போராட்டங்கள் வலுவான அரசியல் அழுத்தங்களை உருவாக்கி வருவது அடுத்த முக்கியமான கூறு. ”தமிழ்த் தேசியம’; என்ற அரசியல் வடிவம் கொள்ளாது போனாலும், ஈழச்சிக்கல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் சிக்கலாக முதன்மை பெற்றிருப்பது மூன்றாவது முக்கிய கூறு. இது இந்திய அரசுக்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கிறது. புலிகளை அழித்துவிட்டுப் போரை முடித்துவிடுவது என சிங்கள -இந்தியக் கூட்டணி பேயாய் அலைகிறது.

வல்லரசுகளுக்கு இடையே யான நல மோதல் சரியாகப் பயன்படுத்தப்பட்டால் ஈழத் தமிழர்களுக்குச் சாதகமான விளைவுகளை உருவாக்கும் புதிய வாய்ப்பு தலைப்பட்டு வருகிறது. அந்தந்தக் களத்தில் அவரவர் பணி செவ்வனே நடந்தால் தமிழீழம் நோக்கிய பயணம் சரியாக நடக்கும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com