Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2009

பீ.ட்டி. கத்தரி: வேளாண்மை மீது மேலும் ஒரு தாக்குதல்
கி.வெங்கட்ராமன்

மரபீனி மாற்றுப்பயிர்களில் முதல் முறையாக ஒரு உணவுப் பயிர் இந்தியாவில் சந்தைக்கு வர இருக்கிறது. பி.ட்டி. கத்தரிக்காய்தான் அது. மரபீனி மாற்றம் செய்யப்பட்ட நெல், கோதுமை, கரும்பு, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, சூரியகாந்தி, மிளகாய், இஞ்சி, முட்டைக்கோசு, பப்பாளி, மாதுளை, வாழை போன்ற பல பயிர்களும் வரிசையில் நிற்கின்றன. மொன்சன்டோ, சின்ஜெண்டா, டூபாண்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இவற்றை இந்தியச் சந்தையில் எப்படியாவது திணித்துவிட வேண்டும் என்று முனைப்பாய் உள்ளன. இந்திய ஆட்சியாளர்கள் இவற்றை இருகரம் கூப்பி வரவேற்கிறார்கள். ஆயினும் இவையெல்லாம் ஆய்வு நிலையிலேயே உள்ளன.

ஆய்வு நிலையிலேயே இதன் ஆபத்துகளை அறிந்து உழவர் நலனிலும், மக்களின் உடல் நலனிலும், சூழல் வளத்தின்பாலும் அக்கறை உள்ள அறிவியலாளர்களும், தன்னார்வ அமைப்புகளும் இவற்றைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன. விழிப்புணர்வுள்ள உழவர் அமைப்புகளும் அரசியல் குழுக்களும் மரபீனி மாற்றப்பயிர்களுக்கு எதிராகப்போராடி வருகின்றன.

ஆயினும் இவற்றையெல்லாம் மீறி மொன்சன்டோவின் பி.ட்டி பருத்தியை இந்திய அரசு ஏற்கெனவே சந்தையில் அனுமதித்துவிட்டது. இப்போது இவ்வாறான முதல் உணவுப் பயிர் என்ற வகையில் பி.ட்டி கத்தரியை அனுமதிக்க முடிவு செய்துவிட்டது.

‘மகாராஷ்ட்டிரா ஒட்டுவிதை நிறுவனம’- மஹய்கோ (Mahyco) என்ற தனது துணை நிறுவனத்தின் வழியாக அமெரிக்காவின் மொன்சன்டோ விதைக் கம்பெனி இதனைக் கொண்டுவந்திருக்கிறது. இந்திய அரசின் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக்குழு (Genetic Engineering Approval Committee -GEAC) இதற்கு அனுமதி கொடுத்துவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது பி.ட்டி கத்தரி விதைகள் இந்தியச் சந்தைக்கு வந்துவிடும’; என மஹய்கோ நிறுவனத்தின் ஆராய்ச்சித்துறை இணை இயக்குநர் உஷா பார்வலே ஜெர் அம்மையார் அறிவித்தார்.

கொல்கத்தாவில் 14.04.2009 அன்று செய்தியாளர்களிடத்தில் இதனைத் தெரிவித்த பார்வலே ஜெர் “இனி உழவர்களின் பூச்சிக்கொல்லிச் செலவு 70% குறையும்; கத்தரிவிளைச்சல் 16% கூடும். கத்தரி உழவர்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும் நுகர்வோருக்கு சொத்தையில்லாத நல்ல கத்தரிக்காய் கிடைக்கும்”; என்று இதன் அருமை பெருமைகளை அடுக்கினார். தங்களது நிறுவனத்திற்கும், மொன்சன்டோவுக்கும் கிடைக்கப்போகும் கொள்ளை இலாபம் பற்றி மட்டும் அவர் தன்னடக்கமாக வாய்திறக்கவில்லை.

பி.ட்டி கத்தரிக்கு எதிரான மக்கள்சார் அறிவியலாளர்களின் போராட்டம் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக நடந்து வருகிறது. பேசில்லஸ் துரின்ஜெனிசிஸ் என்ற பாக்டீரியா நுண்ணுயிரியிலிருந்து எடுக்கும் கிரிஸ்டலின் டெல்டா எண்டாக்ரின் என்ற மரபீனியை கத்தரியில் செலுத்தி பி.ட்டி கத்தரி உருவாக்கும் முயற்சி 2002இல் தொடங்கி, அதன் ஆய்வுகள் கமுக்கமாக நடைபெற்றன. மொன்சன்டொ பகாசுர நிறுவனத்துக்கும் - ஆட்சியாளர்களுக்கும் நிலவும் கையூட்டுக் கூட்டணி இந்தச் செய்தியை வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டது.

இந்தியாவிலேயே கத்தரி அதிகம் விளையும் மேற்குவங்க மாநிலத்தில், அம்மாநில அரசுக்குத் தெரியாமலேயே பி.ட்டி கத்தரி ஆய்வுப் பண்ணைகள் நிறுவப்பட்டு, திறந்தவெளி ஆய்வுகள் நடத்தப்பட்டன. ‘வேளாண்மை’ மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் மேற்கு வங்க மாநில அரசைக் கேட்காமல் இந்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறை இவ்வாறு திறந்தவெளி ஆய்வு நடத்தியது சட்டவிரோதமானது.

மொன்சன்டோவின் முகவராக இந்திய அரசு செயல்பட்டு, இவ்வாறு ஆய்வுப் பண்ணை நிறுவியது தற்செயலாக மேற்குவங்க வேளாண்துறையின் கவனத்துக்கு வந்ததாக அம்மாநில வேளாண் ஆணைய உறுப்பினர் பேராசிரியர் டி.கே.போஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பரவலாகப் பயன்படும் உணவுப் பொருளானாதால் பி.ட்டி. கத்தரி குறித்த ஆய்வுமுடிவுகள் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும். எனவே மொன்சன்டோ - மஹய்கோ மேற்கொண்ட ஆய்வு முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கிரின்பீஸ் இயக்க ஆய்வாளர் திவ்யாரகுநந்தன் உயிர்தொழில் நுட்பத்துறையைக் கேட்டிருந்தார். 2006 பிப்ரவரி 23-இல் இவர் அளித்த மனுவை ஒரு சில நாட்களிலேயே மார்ச் மாதத்தில்
அத்துறை நிராகரித்தது. காப்புரிமைச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் செய்தி இது.

இதனை வெளியிட்டால் மொன்சன்டோவின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படும் என்பதால் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட முடியாது என்று இந்திய அரசு கூறியது. இதனை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகள், தில்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எனத்தொடர் முயற்சிகளை திவ்யா ரகுநநந்தன் கிரின்பீஸ் சார்பில் மேற்கொண்டார். இறுதியில் உச்சநீதிமன்றத்தின் ஏப்ரல் 8,2008 நாளிட்டத் தீர்ப்பு பி.ட்டி கத்தரி குறித்த உயிர்மப் பாதுகாப்பு ஆய்வு முடிவுகளை தொடர்புடைய நிறுவனமும், அரசின் உயிர் தொழில் நுட்பத்துறையும் தெளிவாக இணையதளத்தில் வெளியிட்டு, அவற்றை பொதுமக்கள் படி எடுத்துக்கொள்ள ஆவன செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதனடிப்படையில் பி.ட்டி கத்தரி குறித்த ஆய்வு முடிவுகள் 2008, ஆகஸ்டில் வெளியிடப்பட்டன.

இந்த ஆய்வு முடிவுகளைப் பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவற்றின் மீது கருத்து கேட்டிருந்தார் திவ்யா ரகுநந்தன்.

இதற்கிடையில் பி.ட்டி கத்தரி கள ஆய்வுகள் பல கட்டங்களைத்தாண்டி விட்டன. இந்திய அரசின் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு பி.ட்டி கத்தரிக்கு ஒப்புதல் கொடுத்து. சந்தைக்கு அனுமதிக்கும் நிலையும் வந்துவிட்டது.

இந்த நிலையில் கடந்த 2009, சனவரி 14 அன்று நடந்த மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழுக்கூட்டத்தில் பி.ட்டி கத்தரி குறித்து மொன்சான்டோ-மஹய்கோமுன்வைத்த ஆய்வு முடிவுகள் ஒருதலைபட்சமானவை என வலியுறுத்தி மனு ஒன்றை கிரின்பீஸ் சூழல் இயக்கம் சார்பில் திவ்யா ரகுந்தன் தாக்கல் செய்தார். கம்பெனியின் ஆய்வு முடிவுகளுக்கு மாற்றான முடிவுகளை அறிவிக்கும் இரண்டு அறிக்கைகளைத் தமது வாதத்திற்கு ஆதாரமாக இணைதத் ிருநத் hர். எரிகச்ச் ிராலினி எனற் உயிர்வேதியியல் வல்லுநரின் மாற்று அறிக்கை, உடல்நலம் மற்றும் சூழலியல் ஆய்வுமைய இயக்குநர் முனைவர் ஜீ.கார்மேன் என்பவரின் அறிக்கை ஆகியவை அவை.

மொன்சான்டோ-மஹய்கோ அறிக்கை சில உண்மைகளை மறைத்துவிட்டது என சிராலினி குற்றம் சாட்டினார். பி.ட்டி கத்தரியை தின்ற ஆடுகளுக்கு இரத்தம் உறைவதற்கு அதிகநேரம் ஆனது. அவற்றின் கல்லீரல்கள் பாதிப்பு அடைந்தன. செரிமானக்கோளாறு காரணமாக தீனி தின்பது குறைந்தது. ஆடுகளின் எடைகுறைந்தது. பி.ட்டி கத்தரியைத் தின்ற முயல்களின் இரத்தத்தில் உப்பு அளவு அதிகரித்து, சர்க்கரை அளவு குறைந்தது. இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து இரத்த சோகை ஏற்பட்டது. ஆடுகளைப்போலவே முயல்களுக்கும் இரத்தம் உறையும் நேரம் அதிகரித்தது. காயம் ஏற்படும்போது, இரத்தப்போக்கு அதிகமானது.

பி.ட்டி கத்தரி சாப்பிட்ட கறிக்கோழிகளின் இரத்த சர்க்கரைஅளவு குறைந்தது. பி.ட்டி கத்தரி தின்ற எலிகளுக்கு வயிற்றுப்போக்கு, கல்லீரல் பாதிப்பு ஆகியவைக் கண்டறியப்பட்டன. இயற்கையாக பாலூட்டிகளுக்குக் குடலில் சுரக்கும் கனமைசின் என்ற நோய் எதிர்ப்பு நொதியம் சுரப்பதை பி.ட்டி கத்தரி மட்டுப்படுத்தி விடுகிறது.

இதுமட்டுமன்றி மொன்சன்டோ - மஹய்கோ ஆய்வு முடிவுகள் 90 நாள்களில் எடுக்கப்பட்டவை. எனவே, புற்றுநோய் வாய்ப்புகளைப் பற்றி அறியப்படவில்லை.

இவ்வாறு சிராலினி அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தெரிவித்தது.

முனைவர் சிராலினி புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார். இதற்கு முன்பு மொன் 863 என்ற மொன்சன்டோ மக்காச்சோள மரபீனி மாற்ற விதையை எதிர்த்து பிரெஞ்சு நாளிதழ் லே மாண்டேயில் 2004-இல் சிராலினி வெளியிட்ட ஆய்வறிக்கை பல நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பல ஐரோப்பிய நாடுகள் இந்த மக்காச்சோளத்தை தடை செய்ய இவரது ஆய்வறிக்கை வழிகோலியது.

தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது ஆய்வறிக்கை கார்மேனுடையது. கார்மேன் அறிக்கை மொன்சான்டோ - மஹய்கோ ஆய்வு முறையின் போதாமையைச் சுட்டிக் காட்டிது. பி.ட்டி கத்தரி மனிதர் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை அறிய வேண்டுமானால் அதனை பாலூட்டி விலங்குகளுக்குக் கொடுத்து ஆய்வு செய்யவேண்டும். மாறாக மொன்சான்டோ பி.;ட்டி கத்தரியை மீனுக்கும், கோழிக்கும் மட்டுமே கொடுத்து ஆய்வு செய்துள்ளது.

வெவ்வேறு பருவ நிலைகளிலும், வெவ்வேறு பருவ மையங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பாலூட்டிகளின் இனப்பெருக்கத்தின் மீது பி.ட்டி. கத்தரி ஏற்படுத்தும் பாதிப்பு பற்றி மிகக்குறைவான அளவிலேயே ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்த முடிவுகளிலும் இனப்பெருக்கத்தில் பாதிப்பு- அதாவது மலட்டுத்தன்மை அதிகரிப்பது தெரிகிறது. பி.ட்டி கத்தரியின் நச்சுத்தன்மை, ஒவ்வாத்தன்மை ஆகியவற்றின் ஆய்வு முடிவுகளை முன் வைக்காமல் பி.ட்டி பாக்டீரியாவின் நச்சுத்தன்மை குறித்து மொன்சான்டோ அறிக்கை விவரிக்கிறது. இது மோசடியான அணுகுமுறை ஆகும்.

பல்வேறு புள்ளிவிவர முடிவுகளும் மொன்சான்டோ - மஹய்கோ ஆய்வறிக்கையில் மறைக்கப்பட்டிருந்தது. மேற்கண்டவாறு சிராலினி அறிக்கையும், கார்மேன் அறிக்கையும் மொன்சான்டோ-மஹய்கோ ஆய்வு முடிவுகளின் மோசடியையும், போதாமையையும் வெளிப்படுத்தின. இதைப்பார்த்த மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு பி.ட்டி கத்தரியைச் சந்தைக்கு வர அனுமதிக்காமல், தடை செய்திருக்கவேண்டும். ஆனால் இறுதி முடிவவெடுப்பதை ஏப்ரல் 14 வரை தள்ளிப்போட்டது.

சிராலினி, கார்மேன் அறிக்கைகளுக்குத் தகுந்த பதில் விளக்கம் ஏதும் தராமலேயே ஏப்ரல் 14- இல் பி.ட்டி கத்தரிக்கு அனுமதி அளித்து விட்டது. ஆட்சியாளர்கள்-மொன்சான்டோ கையூட்டுக் கூட்டணி அவ்வளவு வலுவானது!

மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக்குழு இதற்காக மேற்கொள்ளும் வழிமுறை ஒருதலைச்சார்பானது. பொதுமக்கள் நலனையோ, உழவர்களின் நலன்களையோ அவர்கள் தரப்பில் வைக்கப்படும் கருத்துகளையோ ஆய்வு செய்வதே இல்லை. உச்சநீதிமன்றத்தின் ஆணை காரணமாக இந்த ஏற்பிசைவுக்குழுவில் நியமிக்கப்பட்ட சுயேச்சைப் பார்வையாளரான புகழ்பெற்ற மூலக்கூறு உயிரியல் அறிஞர் புஷ்;ப மித்ரா பர்க்கவா இதுபற்றி கூறுவது கவனிக்கத்தக்கது.

“மரபீனி மாற்றுப்பயிர்களின் உற்பத்தியாளர்களே அதன் உயிர்ப்பாதுகாப்புக்குக் காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களது ஆய்வு முடிவுகளை மீளாய்வு செய்யும் திறனுள்ள ஆய்வுக்கூடங்கள் அரசிடம் இல்லை. மீளாய்வுக்கான பொறுப்பை சில தனியார் ஆய்வகங்களிடம் அரசு ஒப்படைக்கிறது. இதன் ஆய்வுக்குத் தரப்படும் மாதிரிகள் (சாம்பிள்கள்) சரியானவைதானா என்ற ஐயம் வலுவாக எழுகிறது. எடுத்துக்காட்டாக மஹய்கோ கொடுத்தனுப்பிய பி.ட்டி கத்தரியும், பி.ட்டி அல்லாத கத்தரியும் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இரண்டு மாதிரிகளிலுமே ஊசல1யுஉ புரோட்டீன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பொருள் என்ன? ஒப்பீட்டு ஆய்வு செய்ய முடியாமல் மஹய்கோ சீர்குலைத்து விட்டது என்பதுதானே. பி.ட்டி கத்தரியின் நச்சுத்தன்மை, ஒவ்வாத்தன்மை பற்றி மஹய்கோ தனது ஆய்வகத்தில் நேர்மையாக ஆய்வு நடத்தும் என்றோ, அது வெளி ஆய்வுக்கு உண்மையான மாதிரிகளைக் கொடுத்து ஒத்துழைக்குமென்றோ நம்ப முடியவில்லை. வெளி ஆய்வுக்குக் கொடுக்கும் இரண்டு மாதிரியுமே பி.ட்டி அல்லாத கத்தரியாக இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறான நிலையில் ஒப்பீட்டு ஆய்வு சாத்தியமில்லை. ஏனெனில் வெளித்தோற்றத்தில் இரண்டுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. இந்நிலையில் பி.ட்டி அல்லாத சாதாரண கத்தரியை ஆய்வுக்குக் கொடுத்து, நல்ல முடிவுகளைப் பெற்று, அதன் அடிப்படையில் பி.;ட்டி கத்தரிக்கு ஒப்புதல் பெற வாய்ப்பு உண்டு” என்கிறார் பர்க்கவா (ஆதாரம் GEAC ஏப்ரல்-2008 கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, ஜீன் 2 2008இல் பர்க்கவா ஏடுகளுக்கு வெளியிட்டது).

பி.ட்டி கத்தரி அதை உண்கிற நுகர்வோருக்குத ;தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது மட்டுமல்ல, உழவர்களுக்கும் இலாபம் தரக்கூடியது அல்ல. பி.;ட்டி கத்தரி விதை விலை சாதாரண விதையைவிட 15 மடங்குஅதிகம். விளைச்சல் சாதாரண வகையைவிட 16 விழுக்காடு மட்டுமே கூடுதலானது. சொத்தைகள் பெருமளவு குறைந்துவிடும் என மொன்சான்டோ சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அதற்கேற்ப இலாபம் கிடைத்துவிடாது. ஏனெனில் பி.ட்டி கத்தரிக்கென்றே மொன்சான்டோ தயாரித்து அளிக்கும் பூச்சிக்கொல்லியைத்தான் பயன்படுத்த முடியும். அதன் விலையும் மிக அதிகம். மேலும், முதல் மூன்றாண்டுகளுக்குத்தான் சொத்தைக் குறைவாகவும் விளைச்சல் அதிகமாகவும் கிடைக்கும். அதற்குள் காய்த்துளைக்கும் பூச்சி, தண்டு துளைப்பான் ஆகியவை பி.ட்டிக்கு எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுகின்றன.

அதற்குப்பிறகு பழையபடி பூச்சி கத்தரி விளைவது பி.ட்டி கத்தரியிலும் தொடரும். எனவே, மொன்சான்டோ-இந்திய ஆட்சியாளர்கள் கையூட்டுக் கூட்டணியின் தன்னலத்திற்காக மக்கள் நல்வாழ்வையும் உழவர்களின் வாழ்வையும், சுற்றுச்சூழல்நலத்தையும்,அந்தந்த மண்ணின் மரபான உணவுமுறையையும் ஒரு சேரச் சூறையாடும் பி.ட்டி கத்தரியை எதிர்ப்போம்! மக்கள் விரோதக் கூட்டணிக்கு எதிராக சமூகப் பொறுப்புள்ள அறிவியலாளர்களும், நுகர்வோரும், உழவர்களும், மண்ணின் வாழ்முறையில் அக்கறை கொண்டோரும் ஓரணியில் திரள்வோம்! தொழில்நுட்ப வல்லாதிக்கத்தை எதிர்கொள்வோம்!

கருவி நூல்கள்
• Genetic Gamble - Greenpeace வெளியீடு அக்டொபர் 2008
• Savvy Soumya Misra, Kirtiman Avasti -Down to Earth - ஏப்ரல் 1.15.2009



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com