Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2009

அர்ப்பணிப்பு அரசியலின் அடிச்சுவடுகள்
நா.வைகறை

“அன்பார்ந்த வாக்காள பெருமக்களே” ஒலிபெருக்கியின் அலறல் சத்தம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. சூதாட்டத்தில் சீட்டுகளை கலைத்துப்போட்டு ஆட்டம் தொடங்குவதுபோல் தேர்தல் கட்சிகள் தங்கள் ஆட்டத்தை தொடங்கிவிட்டன. நண்பர்களாய் இருந்தவர்கள் எதிரிகளாகவும், எதிரிகளாய் இருந்தவர்கள் நண்பர்களாகவும் கைகோத்து உலா வருகிறார்கள்.

சீச்சீ இதுவும் ஒரு பிழைப்பா? இப்படியும் ஒரு வாழ்வா? என்று கேட்டால் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை - நிரந்தர பகைவனும் இல்லை என்று பதிலளிப்பார்கள். தேர்தல் கட்சிகளிடத்தில் நிரந்தரக் கொள்கை இல்லாத காரணத்தால் இவர்களுக்கு நண்பனும் இல்லை - பகைவனும் இல்லை. இசை நாற்காலி போட்டி போன்று நடைபெறுகிற தேர்தல் கட்சிகளின் பதவிச் சண்டை, அரசியலே அசிங்கம் என்ற கருத்தை பலரிடத்தில் உருவாக்கியுள்ளது.

சிங்கம் கர்ஜிக்காத காட்டில் நரிகள் நாட்டாண்மை செய்வது போல் நல்லவர்கள் நமக்கென்ன என்று ஒதுங்கி கொண்டதால் அரசியலே குற்றவாளி மயமாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்றார் அறிஞர் பெர்னாட்ஷா. ஆனால் அரசியல் அயோக்கியர்களின் முதல் புகலிடமாக மாறியுள்ளது. அரசியல் என்றாலே தேர்தல் திருவிழாவில் பங்கெடுக்கும் கட்சிகளும், தலைவர்களும்தான் நினைவுக்கு வருகிறார்கள். வண்ண வண்ணச் சுவரொட்டி விளம்பரங்கள், பல வண்ண பிளக்ஸ் தட்டிகள், நாள்தோறும் பேட்டிகள், இவைதான் அரசியல் செயல்பாடுகள் என்று பலர் கருதுகிறார்கள். இந்த விளம்பர நடிவடிக்கைகளைத்தான் புகழ் தரும் செயல்பாடுகள் என்று சிலர் எண்ணுகிறார்கள்.

விளம்பரத்திற்கும் புகழிற்கும் வேறுபாடு தெரியாமல் புலம்பித் தவிக்கிறார்கள். உயர்ந்த கோபுரங்களைப் பார்த்து பிரமிப்பு அடைகிற நாம் கோபுரங்களை தாங்கிநிற்கிற அடிக் கற்கள் குறித்து கவலை கொள்வது இல்லை. மரத்தின் நிழலில் இளைப்பாறுகிற நாம் மரத்தின் வேர்களுக்கு மரியாதை செய்வது இல்லை. அரசியல் என்பது எந்தவொரு பிரதி பலனையும் எதிர்பாராமல் மக்கள் நலனுக்கு உழைப்பது, பாடுபடுவது, போராடுவதாகும். மக்கள் நலனுக்கான போராடும்போது உயிரையும் இழக்க அணியமாயிருக்க வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு உணர்வில் நடக்கிற செயல்பாடுகளும் அரசியல் நடவடிக்கைகளே.

பதவி நலனுக்காக பணம் சம்பாதிப்பதற்காக, உள்ளது தேர்தல் அரசியல், உண்மையான புகழ் சார்ந்த வாழ்வுக்காக போராடுவது அர்ப்பணிப்பு அரசியல். உலகெங்கும் சமூக மாற்றத்திற்காக போராடக் கூடியவர்கள் மறக்காமல் படிக்கவேண்டிய வரலாற்று நாயகர்கள் சேகுவேரா, பகத்சிங், பிரபாகரன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர் சேகுவேரா, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர் பகத்சிங். சிங்கள இனவெறி அரசை மட்டுமல்ல, இந்திய ஏகாதிபத்தியத்தை, சீன வல்லாதிக்கத்தை உலகின் பல்வேறு நாட்டு இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பவர் பிரபாகரன். சேகுவேரா அர்ஜென்டினா நாட்டில் ரோஸாரியோ (ஜுன்14,1928) பகுதியில் பிறந்து மருத்துவப் பட்டம் பெற்றவர். 1955இல் மான்கடா தாக்குதலை அடுத்து மெக்ஸிகோ வந்த கியூபத் தலைவர் பிடல்காஸ்ட்ரோவை சேகுவேரா சந்திக்கிறார். 1956 நவம்பர் கிராண்மா பயணம் தொடங்கி கியூபப் போராட்டத்தின் பல்வேறு களங்களில் திறம்பட செயலாற்றுகிறார் சேகுவேரா.

1959 ஜனவரியில் கியூப விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுகிறது. பிப்ரவரியில் சேவுக்கு கியூபக் குடியுரிமை வழங்கப்படுகிறது. கியூபாவின் விவசாய சீர்திருத்தத்துக்கான தேசிய நிறுவனத்தின் தொழில்துறைத் தலைவராக, கியூப தேசிய வங்கியின் தலைவராக சேகுவேரா நியமிக்கப்படுகிறார். 1964 திசம்பர் தொடங்கி மூன்று மாதம் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்கிறார்.

ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார். இப்படி செல்வாக்கான நிலையில் இருந்த சேகுவேரா இவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பொலிவியாவில் புரட்சி செய்யப்போனார். பிறந்ததில் இருந்தே தன்னை விரட்டிய ஆஸ்த்துமாவோடு மழையும், வெயிலுமாய் உயர்ந்து கிடக்கிற மலைவெளிகளில் நடக்கிறார். பசிக்கு வேறுவழி இல்லாமல் குதிரைக் கறியை
சாப்பிட்டு வயிற்றுவலியால் அவதிப்படுகிறார். காட்டுப்பூச்சிகள் கடித்து உடம்பெல்லாம் வீங்கிப் போன நிலையில் அமெரிக்க சி.ஐ.ஏ.யால் பொலிவியாவில் கைது செய்யப்பட்டு 1967 அக்டோபர் 9 அன்று சேகுவேரா சுட்டுக் கொல்லப்படுகிறார்.

சேகுவேரா என்றால் விடுதலை, சேகுவேரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கோபம்,. சேகுவேரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். இந்த இதயத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுட்டுக் கொன்றது. அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றல்ல இரண்டல்ல பலநூறு வியட்நாம்களை உருவாக்க வேண்டும் என்றார் சேகுவேரா. யுத்த நடவடிக்கை ஒரு வழிமுறையே. நமக்கு முக்கியமானது புரட்சி. புரட்சிகர கருத்துகள் புரட்சிகர உணர்வு மற்றும் புரட்சிகர பண்புகள் என்பதை வலியுறுத்தினார் சேகுவேரா. “சுதந்திரம் என்பது போராடாமலேயே கிடைத்து விடும் என்ற கனவை நாம் வளர்த்துக் கொள்ளக் கூடாது அதற்கு நமக்கு உரிமையும் கிடையாது” என்ற சேகுவேரா “உலகத்தில் நடக்கிற அநீதி கண்டு ஆத்திரத்தில் பொங்கி எழுவாய் என்றால் நீ என்னுடை நண்பன்” என்று தோழமைக்கு புது விளக்கம் தந்தார். சேகுவேரா பிடலுக்கு எழுதிய கடைசி கடிதத்தில், “எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகிற உணர்வை ஏந்திச் செல்கிறேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக உள்ளது. ஆழமான காயங்களை சரி செய்கிறது” என்றும், “என்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் எதையும விட்டுச் செல்லவில்லை என்று எந்த வருத்தமும் கிடையாது. மகிழ்ச்சிதான். வாழ்வதற்கு தேவையானவற்றையும், கல்வியையும் கொடுப்பதற்குமான ஒரு அரசு இருக்கிறது”. என்று குறிப்பிட்டுவிட்டு இறுதியாக முடிக்கும்போது “நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே வெற்றி அல்லது வீரமரணம்” என முழங்குகிறார்.

சேகுவேரா கைது செய்யப்பட்டு வாலேகிராண்டாவில் ஒரு பள்ளிக் கூடத்தில் வைக்கப்படுகிறார். பள்ளியின் ஆசிரியை ஜீலியஸ் கோர்ட்டஸ் சேகுவேரா கொல்லப்படுவதற்கு முன் சேகுவேராவிடம் கேட்கிறார். “இப்படியொரு புத்திசாலித்தனமும் நல்ல உடலும் கொண்ட நீங்கள் ஏன் இப்படி?” “எனது இலட்சியங்களுக்காக” என்றார் சேகுவேரா (இந்த இடத்தில் முத்துக்குமாரை நினைவில் கொள்ளவும்). உங்கள் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள் என்று கேட்டதற்கு எனது இலட்சியங்களே முதலில் என்ற சேகுவேரா ஜீலியஸைப் பார்த்து சொன்னார், “இப்படியொரு மோசமான சூழலில் எப்படி குழந்தைகள் படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்திருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம கட்டித் தருகிறேன்”. சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டவுடன் பள்ளிக்கூடம் நோக்கி மக்கள் திரண்டு வர பள்ளிக்கூடம் ஆதிக்க சக்திகளால் இடிக்கப்பட்டது. பிறகே புதிதாகக் கட்டப்பட்டது..

சேகுவேராவை ஆதிக்க சக்திகள் அழித்துவிட்டதாக நினைக்கலாம். புரட்சியாளர்களின் வரலாறு இறப்பில் இருந்துதான் தொடங்குகிறது. அதேபோல்தான் பகத்சிங்கும். பகத்சிங் என்பது தனிமனிதனின் பெயரல்ல. பகத்சிங் நண்பர்களை தனித்தனியாக சொல்லாமல் பகத்சிங் என்றால் அவர் காலத்தில் வாழ்ந்த புரட்சி கர இளைஞர்கள் அனைவரும் நம் நினைவுக்கு வருவார்கள். பகத்சிங் என்றால் புரட்சிகர இளைஞர்களின் குறியீடு என்று தோழர் பெ. மணியரசன் சொல்லுவார். 1907 அக்டோபர் 7-இல் லாகூருக்கு அருகில் லாயல்பூர் மாவட்டத்தில் பாஸ்கா கிராமத்தில் பிறந்தார் பகத்சிங். 1931-மார்ச் 23 அன்று வெள்ளைஏகாதிபத்திய அரசால் தூக்கிலிடப்பட்டார். 24 வயதுக்குள் அவர் படித்துள்ள புத்தகங்களின் பட்டியல், அவரின் தியாக வாழ்வு எண்ணியெண்ணி பிரமிக்கத் தக்கவை. 30.10.1928 அன்று சைமன் எதிர்ப்புப் பேரணியில் நடைபெற்ற தாக்குதலில் லாலா லஜபதிராய் தாக்கப்படுகிறார். 17.11.1928இல் இறந்துவிடுகிறார்.

பகத்சிங் மற்றும் நண்பர்களால் உருவாக்கப்பட்ட இந்திய சமதர்மக் குடியரசு ராணுவம் லாலாலஜபதிராய் படுகொலைக்கு தண்டனை தர முடிவெடுக்கிறது. 1928 திசம்பர் 17 அன்று பகத்சிங், சந்திரசேகர், ஆசாத், ராஜகுரு, ஜெயகோபால் ஆகியோர் லாலாலஜபதிராய் சாவுக்கு காரணமான காவல்துறை அதிகாரி சாண்டர்சை சுட்டுக் கொன்றனர். அன்றுமுதல் பகத்சிங்கின் தலைமறைவு வாழ்க்கை தொடங்கியது. தேடப்படுகிற பட்டியலில் பகத்சிங் பெயரும் உள்ளது. வெள்ளையரசு கொண்டு வந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் கருப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 8.4.1929 அன்று சட்டசபையில் குண்டு வீச முடிவுசெய்யப்படுகிறது.

யாருக்கும் காயம் ஏற்படாத வகையில் குண்டு வீசவேண்டும். சட்டசபையை பிரச்சார மேடையாக பயன்படுத்த வெண்டும். தப்பித்து போகக் கூடாது என்று பகத்சிங் நண்பர்கள் முடிவெடுக்கின்றனர். தேடப்படுகிற குற்றவாளி; கிடைத்தால் தன் உயிருக்கு ஆபத்து என்ற நிலை தெரிந்தும் பகத்சிங் வெடிகுண்டு வீசும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சாண்டர்ஸ் படுகொலைக்கும் பகத்சிங்குக்கும் தொடர்பு இல்லை என்று பகத்சிங் தந்தை அரசிடம் மனு கொடுத்தார். இதைக் கண்டித்து பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில், நான் என் முதுகில் குத்தப்பட்டுள்ளதாக உணர்கிறேன். இதே காரியத்தை வேறு யாரேனும் செய்திருந்தால், அது துரோகத்திற்குச் சற்றும் குறைவான தன்று என்றே நான் கருதி இருப்பேன். ஆனால், உங்களைப் பொறுத்தவரையில் அதை ஒரு பலவீனம் என்று - மிக மோசமான வகையைச் சார்ந்த பலகீனம் என்றே நான் சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சேகுவேராவைப் போலவேதான் பகத்சிங்கும. அவரும் ஆயுதங்களை ஆராதிக்கிற நபரல்லர். சாண்டர்ஸின் கொலைக்கு பின் பகத்சிங் எழுதிய இந்துஸ்தான் சமதர்மக் குடியரசு ராணுவ அறிக்கையில் சொல்கிறார், “அடித்தளத்தில் ஒடுக்கப்பட்டுள்ள தேசத்தின் உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள். இத்தகைய அரக்கத்தனமான செயல்களைச் செய்யுமுன் மீண்டும் சிந்தியுங்கள். மேலும், ஆயுதச் சட்டத்தையும், ஆயுதக் கடத்தலை தடுக்கும் கடுமையான காவலையும் தாண்டி, எப்போதும் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஆயுதப் புரட்சிக்குப் போதுமான அளவு இப்போது இல்லை என்றாலும் தேசத்தின் அவமானத்துக்கு; பழி தீர்த்துக் கொள்ளும் அளவிற்காவது அவை போதுமானதாக உள்ளது.... மனித ரத்தம் சிந்தப்படுவதற்காக வருந்துகிறோம். ஆனால் மனிதனை மனிதன் சுரண்ட முடியாத விடுதலையை நோக்கிய புரட்சியின் தொடக்கத்தில் இத்தகைய தனி மனித உயிர்ப்பலிகள் தவிர்க்க முடியாதவை”. தப்பித்துப் போய் உயிர் வாழ விரும்புகிறாயா? என்று சிறை தோழர்கள் ரகசியமாக அனுப்பிய துண்டுச் சீட்டிற்கு சாவிற்கு முதல் நாள் பகத்சிங் எழுதிய கடிதத்தில், “சிறைக் கைதியாகவோ, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டோ நான்
வாழ விரும்பவில்லை. இந்தியப் புரட்சிகர இயக்கத்தின் கொள்கைகளும், தியாகங்களும் நாள் வாழ்ந்தாலும் எட்ட முடியாத உயரத்திற்கு என்னை உயர்த்தியுள்ளன. இன்று மக்களுக்கு என் பலவீனங்கள் தெரியாது. தூக்கு மேடையில் இருந்து தப்பிவிடுவேனாயின் அப்பலவீனங்கள் இவர்களுக்கு முன்வரும்போது புரட்சியின் அடையாளம் மங்கலாம் அல்லது ஒட்டுமொத்தாய் மறைந்தும் போகலாம். மாறாக புன்னகையோடு நான் தூக்குமேடை ஏறுவேனாயின் அந்நிலை தங்களது குழந்தைகளும் பகத்சிங்காக வேண்டுமென்ற எண்ணத்தை இந்தியத் தாய்மார்களிடம் உருவாக்கும” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சேகுவேரா பகத்சிங்கை படித்தாரா என்று நமக்கு தெரியாது. பகத்சிங் சேகுவேராவை படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பகத்சிங்கையும் படித்து, சேகுவேராவையும் படித்து தனக்கான போராட்ட பாதையை திறம்பட போராடிக் கொண்டிருக்கிறார் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்.

சிங்களர்களை கண்டு அஞ்சி நடுங்கி வாழ்ந்த ஈழத்தமிழினத்தின் விடிவெள்ளி பிரபாகரன். செல்வா தலைமையிலான அறப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் தேவையானது. கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக்க தலைசிறந்த விடுதலைப் போரை புலிகள் நடத்தி வருகிறார்கள். யாரையும் முன்மாதிரியாக கொள்ளாமல், எந்த தனிப்பட்ட நபரிடத்தும் பயிற்சியெடுக்காமல் ‘சுயம்பு’ வான தலைவராக செயல்படுகிறார். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மட்டுமின்றி, துரோகிகளுக்கு எதிராக முகம் கொடுத்து போராடி வருகிறார்.

பதவி, பணம், என்று பிரபாகரன் ஆசைப்பட்டிருந்தால் ஈழத்தின் முதலமைச்சராக இருந்திருக்கலாம். கோடிக்கணக்கான ரூபாய் பணத்துக்கு அதிபராக இருந்திருக்கலாம். 1986 நவம்பர் 16 அன்று பெங்களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் பேசி சில முடிவுகளை எடுத்தார்கள். 1. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அங்கீகாரம். 2. வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் மாநிலமாக ஏற்கப்படும். 3. பிரபாகரன் முதலமைச்சராக நியமிக்கப்படுவது.
இந்த முடிவுகளுக்கு பிரபாகரன் ஒத்துக் கொள்ளவில்லை.

ராஜீவ் எம்.ஜி.ஆரிடம் சொல்லி பிரபாகரனிடம் பேசச்சொன்னார். எம்.ஜி.ஆரும் பிரபாகரனை சந்தித்து “தம்பி, ராஜீவ் சொல்வதை ஏற்றுக்கொள். அப்படி ஏற்றுக் கொண்டால் தமிழினத்திற்கு மூன்று முதலமைச்சர்கள், புதுச்சேரி, தமிழ்நாடு, தமிழ் ஈழம் என மூன்று முதல் அமைச்சர்கள்” என்றார். உடனே பிரபாகரன் சொன்னார், “அண்ணா, கேவலம் மாகாண முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை. என் அருமைத் தோழர்கள் பலர் எங்கள் மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்திருக்கிற அந்த வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை. நாளை நானும் மடிய நேரலாம். மரணத்தோடு போராடும் வேளையில் முதலமைச்சர் பதவிக்காக இலட்சியத்தை விட்டுக் கொடுத்தேன் என்ற பழிக்கு நான் ஆளாகவிரும்பவில்லை.”

1987 அக்டோபர் 10இல் புலிகள் இயக்கத்தற்கு எதிரான போர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்தது, புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தின் மூலம் தாக்குதலை நடத்திக் கொண்டே இன்னொரு புறத்தில் இந்திய அரசு பேரம் பேசியது. போரை நிறுத்தி பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைக்க முன் வருவாரென்றால் மக்கள் புனர்வாழ்வுக்கென்று ரூ 500 கோடியும், இயக்கத்திற்கென்று ரூ 200 கோடியும் தரத் தயாராக உள்ளதாக இந்திய உளவுத் துறை ரா அமைப்பின் தலைவர் ஜெனரல் வர்மா மூலம் பேரம் பேசினார்கள். பிரபாகரன் ஒத்துக்கொள்ளவில்லை.

பதவியையும், பணத்தையும் காட்டி இனத்தின் தலைவர்களை, அரசியல் தலைவர்களை வளர்ப்பு நாயாக மாற்றும் இந்திய அரசின் ஏற்பாடு பிரபாகரனிடத்தில் எடுபடவில்லை. இனத்தின் உரிமைகளை காவு கொடுத்து அடிமையாய் வாழ்கிற தலைவர்களுக்கு நடுவில் இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமக்கிற தன்னிகரற்ற தலைவராக இருக்கிறார் பிரபாகரன். விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி, பிரபாகரன் பற்றி பேசுகிறோம் என்றால் அவர்களின் இலட்சியத்திற்காக தன்னையே அர்ப்பணிக்கிற உணர்வை, தன்னல மறுப்பை, நாற்காலி அரசியலை நாடாத போராட்ட அரசியலைப் பின்பற்ற வேண்டும்.

தமிழீழ விடுதலைக் களத்தில் இழந்த தியாக தீபங்கள் எத்தனையோ? பட்டியல் போதாது. அந்த தியாகங்களை வீணாக்கக்கூடாது என்ற இலட்சிய போர் அங்கே நடக்கிறது. மொழிப்போர் ஈகிகள், அதற்குப்பிறகு அப்துல் ரவூப், முத்துக்குமார் தொடங்கி நாம் இழந்த உயிர்கள் சாதாரணமானது அல்ல.

பதவி, பணம், விளம்பரம் ஆகியவற்றுக்கு ஆசைப்படாத இளைஞர்கள் தான் தமிழ்த்தேச போராட்டத்திற்கு வேண்டும். அடிமைப்பட்டத் தமிழினத்தின் விடுதலைக்கு அவர்களது அணிவகுப்பே அடிப்படை. அந்த அர்ப்பணிப்பு அரசியல்தான் இளம் சமூகத்த்தின் திசைவழியாக வேண்டும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com