Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2009

கருத்துரிமையை விழுங்கும் அரச பயங்கரவாதம்
செவ்வேள்

சிங்கள வெறி இராபக்சே கட்டவிழ்த்துவிட்டுள்ள அரச பயங்கரவாதம் தமிழர்களின் உயிரை மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கையின் கருத்துரிமையையும் பறிக்கிறது. 2008 சனவரி முதல் போர் தீவிரம் அடைந்ததிலிருந்து தமிழ் இதழாளர்கள் ஆள்தூக்கி சட்டங்களில், பொய் வழக்குகளில் கைது செய்யப்படுவதும் , வெள்ளைவேன்களில் கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. போர் பகுதிக்குள் இதழாளர்களை இராசபக்சே அரசு அனுமதிப்பதில்லை. போர்க்களச் செய்திகளை ஊடகவியலாளர்கள் தாமே சென்று சேகரிப்பதை சிங்கள அரசு தடை செய்துள்ளது. வெற்றிச் செய்தித் தவிர வேறெதுவும் மக்களைச் சென்றடையக் கூடாது என்பதில் இலங்கை அரசு பிடிவாதமாக இருக்கிறது. சிங்களப்படை சந்தித்து வரும் இழப்புகள் குறித்தோ, தமிழர்கள் தொகை தொகையாக கொன்றொழிக்கப்பட்டுவது குறித்தோ செய்தி ஏதும் வெளிவராமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்கிறது.

இலங்கையில் இயங்கி வந்த வெளிநாட்டு ஊடகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேற்றப்படுகின்றன. “பொறுப்பாக செய்திகளை வெளியிடவில்லை என்றால் வெளிநாட்டு ஊடகங்கள் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று கோத்தபய இராஜபக்சே மிரட்டி வருகிறார். சிங்களத் தொலைக்காட்சியான ‘சிரசா’ தொலைக்காட்சி நிறுவனம் அரசின் ஒத்துழைப்போடு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. பத்திரிக்கை அலுவலகங்கள் அவ்வப்போது சூறையாடப்படுகின்றன.
வான்கரும்புலிகள் கொழும்பில் 2009 பிப்ரவரியில் நடத்திய தாக்குதலுக்கு துணை புரிந்தார் என்று பொய் குற்றம் சாட்டப்பட்டு ‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி” ஆசிரியர் வித்யாதரன் கைது செய்யப்பட்டார். அவர் மீது உருப்படியான எந்தக் குற்றச்சாட்டையும் ஆதாரத்தோடு இலங்கை அரசினால் முன்வைக்க முடியவில்லை. வித்யாதரனை சிங்கள நீதிமன்றம் கடந்த 24.04.09 அன்று குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று கூறி விடுதலை செய்தது. விடுதலையான வித்யாதரன் செய்தியாளர்களை சந்தித்த போது “இது இலங்கை அரசின் திட்டமிட்டச் சதிச்செயல். தமிழர்களின் துன்பங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கவே என்னை இவ்வரசு கைது செய்தது” என்று குற்றம்சாட்டினார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘சண்டே லீடர்’ இதழாசிரியர் லசந்தா விக்ரமதுங்கா ‘அடையாளம் தெரியாத ஆட்களால்’ குத்திக் கொல்லப்பட்டார். தான் இராஜபக்சே ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து வெளிப்படையாகவே விமர்சித்து வருவதால் எந்த நேரமும் நான் கொல்லப்படலாம் என்று தனது ‘சண்டே லீடர்” இதழில் முன்கூட்டியே எழுதி வைத்தார். ஆட்சியாளர்களை இடித்துக் கூறியதற்காக லசந்தவிற்கு மரணம் பரிசாக தரப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இலங்கை இதழலாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 பேர் காணாமல் போயுள்ளனர். 25 பேர் கைதாகியுள்ளனர். ஒவ்வொரு அமைச்சரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பத்திரிக்கையாளர்களை மிரட்டி வருகின்றனர். இதனால் தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமின்றி சிங்கள இதழாளர்களும் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் ஒளிந்து வாழுகின்றனர். ‘சண்டே டைம்ஸ்’ ஏட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் இலங்கையை விட்டு வெளியேறி எங்கோ ஒரு வெளிநாட்டில் பதுங்கியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக இலங்கை இதழ்களுக்கு அவர் எழுதுவதில்லை.

இவ்வாறு வாய்ப்பூட்டு நடவடிக்கையின் மூலமே தான் விரும்பும் பரப்புரையை மக்களிடத்தில் இராஜபக்சே ஆட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஒடுக்குமுறையின் காரணமாக சிங்களப்படை அன்றாடம் நடத்தும் சித்திரவதைகளையும் தமிழர்கள் உணவு, மருந்து ஏதுமின்றி அல்லல் படுவதையும் உலகத்தின் கண்களில் இருந்து மறைக்க முடிந்துள்ளது. பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னும் மனிதப்பேரவலம் சூழ்ந்த பின்னும் உலக சமுதாயம் இக்கொடுமைகளுக்கு எதிராக வாய்திறக்காமல் போனதற்கு இந்தக் கருத்துரிமை பறிப்பு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. அரச பயங்கரவாதமும் கருத்துரிமை பறிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். சிங்கள இனவெறிக்கு ஆட்பட்டு இக்கருத்துரிமை பறிப்புக்கு அமைதி சாட்சியாக சிங்கள ஊடகவியலாளர் மாறிப்போனால் கடைசியில் அவர்களையும் அது விழுங்கி விடும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com