Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2009

குட்டை குழப்பி குவிஸ்லிங்
பெ.மணியரசன்

சிற்றூர்களில் பலருக்கும் ஏதாவதொரு சிறப்பு அடையாளப் பெயர் இருக்கும். அவ்வாறான சிறப்புப் பெயர்களில் ஒன்றுதான் “குட்டை குழப்பி” என்பது.

கடுங்கோடையில் எங்கும் வறட்சி. ஒரே ஒரு குட்டையில் (குளத்தை விடச் சிறியது) கொஞ்சம் தண்ணீர் கிடக்கிறது. உள்ளே இறங்கி சேற்றைக் கலக்கிவிடாமல் கரையோரம் நின்று அந்நீரைப் பயன்படுத்த வேண்டும்.

ஆரவாரப் பேர்வழிகள் சிலர் குட்டைக்குள் இறங்கி சேற்றைக் கிளறிவிடுவார்கள். கொஞ்ச நீரும் கலங்கி சேரும் தண்ணீரும் ஒன்றாகி விடும். அந்நீரைப் பயன்படுத்த முடியாது. இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டப் பேர்வழிகளைக் “குட்டை குழப்பி” என்பார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்கு ‘குட்டை குழப்பி’ என்ற அடையாளப் பெயர் பொருத்தமாக இருக்கும். தானும் செய்யாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல் சீர்குலைக்கும். குட்டை குழப்பி இவர்.

“போர் நிறுத்தம் அறிவிக்காததால் என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்கிறேன்” என்று கூறி சென்னை அண்ணா நினைவிடம் அருகே 27.4.09 அன்று சாகும் வரை உண்ணாப்போராட்டம் தொடங்கினார் கலைஞர் கருணாநிதி. காலை 6 மணிக்குத் தொடங்கிய உண்ணாமை பகல் 12.30 மணிக்கு முடிவுக்கு வந்து விட்டது. சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவித்துவிட்டதாக ப.சிதம்பரம் முதல்வருக்குக் கைபேசியில் தெரிவித்தாராம். அத்துடன் உண்ணாமையை முடித்துக் கொள்ளச் சொல்லி சிதம்பரம் கேட்டுக் கொண்டாராம். உடனே உண்ணாமையை முடித்துக் கொண்டார் முதலமைச்சர். இவ்வாறு முதிய அகவையில் இவர் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். இவராக முடிவெடுத்து, “உயிரையே அர்ப்பணிக்கப் போவதாக” முழங்கி தொடங்கிய “பட்டினிப் போரை” ஒரு முடிவும் வராமல் 6 1/2 மணி நேரத்திற்குள் முடித்துக் கொண்டதுதான் கசப்பைத் தந்தது. இவரை மேலும் அம்பலப்படுத்தியது.

இனி மேல் விமானத் தாக்குதலோ, தரைவழி கனரகக் கருவிகள் தாக்குதலோ இருக்காது என்று சிங்கள அரசின் பாதுகாப்புக் குழு முடிவெடுத்து விட்டதாக ப.சிதம்பரம் அறிவித்த 27.04.2009 இல் மட்டும் விமானத் தாக்குதலாலும் கனரகப் பீரங்கித் தாக்குதலாலும் 272 தமிழர்கள் புதுக்குடியிருப்புப் பகுதியில் கொல்லப்பட்டார்கள். அதற்கு அடுத்த நாளான 28.04.09 அன்று 270 தமிழர்கள் விமானக் குண்டு வீச்சாலும் கனரக எறிகணைத் தாக்குதலாலும் கொல்லப் பட்டார்கள். இது பற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்கு, “போர் நிறுத்தம் நடைபெறும் போது இப்படி நடக்கத்தான் செய்யும் மழைவிட்டும் தூவானம் விடவில்லை” என்றார். நூற்றுக்கணக்கான தமிழர்களின் உயிர் இவருக்கு வெறும் தூவானம்!

மகிந்த இராசபக்சே, தான் போர் நிறுத்தம் அறிவிக்க வில்லை என்று திரும்ப திரும்பக் கூறினார். கலைஞா; கருணாநிதியின் இது போன்ற சித்து வேலைகள்தாம் குட்டை குழப்பும் நடவடிக்கைகளாகும். கலைஞர் கருணாநிதியின் அறிவார்ந்த ரசிகர்கள், “50 ஆண்டுகளாக தீராத ஈழத்தமிழர் சிக்கலை 6 1/2 மணி நேரப்பட்டினிப் போராட்டத்தால் கலைஞர் தீர்த்து விட்டார்” என்று ஆர்ப்பரித்துத் தோள்புடைத்தனர். 2008 அக்டோபர் 14ஆம் நாள் முதல் அமைச்சர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து, தூவானம் “நிற்கவில்லை” வசனம் வரை அவர் விளையாடிய சொற்சதுரங்கத்தை வரிசைப்படுத்தினால், அவரின் போலித் தனங்கள் பரிதாபமாய்ப் பல்லிளிக்கும்.

15 நாட்களுக்குள் போர் நிறுத்தம் வரவில்லை என்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவர் என்றார். அப்போது பிரணாப் முகர்ஜி சென்னை வந்து அவரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியபின், போர்
நிறுத்தம் கோரமுடியாது என்று அவர் வீட்டுவாசலில் செய்தியாளர்களிடம் கூறினார். அது பற்றி முதல்வரிடம் கேட்ட போது பிரணாப் உறுதி மொழி ஆறுதல் அளிக்கிறது; நாடாளுமன்ற உறுப்பினா;கள் பதவி விலகத் தேவை இல்லை என்றார்;. அதன்பிறகு போர் தீவிர மடைந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த சில நாள்கள் கழித்து சட்டமன்றத்தில் “இறுதித் தீர்மானம்” நிறைவேற்றினார். அப்போதும் இந்திய அரசு இலங்கைக்கு அளித்து வரும் ஆயுத உதவிகளை மேலும் அதிகப்படுத்தியது.

பிறகு சோனியாவிடம் “அம்மா தாயே, போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூக்குரலிட்டார்;. சில நேரங்களில் கண்களைத் துடைத்துக் கொண்டு நா தழுத்தார். அடுத்த நாட்டு விவகாரத்தில் இந்தியாவால் ஓரளவு தான் தலையிட முடியும் என்றார். அடுத்த நாட்டிற்கு ஆயுதங்கள் கொடுப்பதையும், நிதிஉதவி செய்வதையும் இந்திய அரசு நிறுத்திக் கொள்வதை உலகச்சட்டம் எதுவும் தடுக்கவில்லை என்ற உண்மையைக் கூட மூடி மறைத்தார்.

பிறகு, பிரபாகரனைத் தளைப்படுத்தினால், அலெக்சாண்டர் போரஸ் மன்னனைக் கௌரவமாக நடத்தியது போல் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றார். நானே ஓர் அடிமை; நான் இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்றார்.

அதன்பிறகு ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் பிரபாகரன் கொல்லப்பட்டால் நான் வருத்தப்படுவேன் என்றார். பிரபாகரன் பயங்கரவாதி இல்லை என்றார்; காங்கிர சார் எதிர்ப்புத் தெரிவித்ததும் நான் அப்படிச் சொல்லவில்லை என்றார்.

கடைசியில் காலை உணவுக்கும் பகல் உணவுக்கும் இடைப்பட்ட வேளையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தி உலகச் சாதனை படைத்தார். இவ்வாறு குட்டை குழப்பும் கருணாநிதி “அனுகூலச் சத்துரு” வகையைச் சேர்ந்தவர். “ஆதரவாளர் போல் இருக்கும் பகைவர்” என்பது இதன் பொருள்.

இந்தக் காலத்தில் தமிழ் இன உணர்வாளர்கள் மீது, ஈழப்போர் நிறுத்தத்திற்கு உண்மையாகப் பாடுபட்டவர்கள் மீது இவர் ஏவி விட்டிருக்கும் அடக்குமுறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 26 பேரைக் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தார். ஈரோட்டில் 2008 திசம்பர் 14 இல் பேசிய தோழர்கள் சீமான், கொளத்தூர் மணி, பெ.மணியரசன் ஆகியோரைக் கோவைச் சிறையிலடைத்தார். பின்னர் சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைத்தார்.

ஈழத்தமிழர்கள் இனப் படுகொலைக் காட்சிகளைத் தொகுத்து, காங்கிரஸ் ஆட்சி இதற்குக் காரணம் என்பதை விளக்கும் குறுவட்டுகளை வழங்கியோரைச் சிறையிலடைத்தார். அவர்களின் அலுவலகத்தை இழுத்துப் பூட்டி சீல் வைத்தார். “காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்” என்று துண்டறிக்கைகள் கொடுத்தோரைத் தளைப்படுத்தினார். தமிழ்நாடெங்கும் அவ்வாறு துண்டறிக்கை கொடுப்போரை சிறைப்படுத்தி வருகிறார். காங்கிரஸ் - தி.மு.க. அணிக்கு எதிராகப் பேசுவோர் நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார்.

உலகமே மெச்சும் தேர்தல் சனநாயகம் இந்தியாவில் இருப்பதாகப் பீற்றிக் கொள்கிறார்கள். காங்கிரஸ் தி.மு.க. அணிக்கு எதிராகப் பேசுவோரை சிறைப்பிடித்தும், மிரட்டியும், இன உணர்வாளர்களை மிரட்டி அச்சமூட்டுகிறார். குட்டை குழப்பியாக நடந்து கொள்ளும் அதே வேளையில் கொடிய எதேச்சதிகாரியாக ஆட்சி புரிகிறார். இட்லர் நார்வேயை ஆக்கிரமித்த போது, அந்நாட்டில் வித்குன் குவிஸ்லிங் என்பவன் படைத்தளபதியாக இருந்தான். இட்லர் படை நார்வேக்குள் புகுந்ததும் அந்நாட்டைக் காத்திடப் போரிட வேண்டிய தளபதி குவிஸ்லிங், இட்லர் படையை வரவேற்று ஆதரவு தெரிவித்தான். இட்லர், நார்வேயின் ஆட்சிப் பொறுப்பை குவிஸ்லிங்கிடம் ஒப்படைத்தான். இட்லரை எதிர்த்த சொந்த மக்களையே அடக்கிச் சர்வாதிகாரம் செய்தான் குவிஸ்லிங். இரண்டாம் உலகப் போரில் இட்லர் வீழ்த்தப்படும் வரை இனத்துரோகி குவிஸ்லிங் நார்வேயை ஆண்டு வந்தான்.

குட்டை குழப்பியாக உள்ள கருணாநிதி தமிழ்நாட்டின் குவிஸ்லிங்காக ஆட்சி புரிகிறார். தில்லி ஏகாதிபத்தியத்தின் கங்காணியாகச் செயல்படுகிறார். தில்லி ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசை ஒழிக்கும் போது குட்டை குழப்பி குவிஸ்லிங்குகளும் வீழ்வார்கள்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com