Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2009

ஈழத்தமிழர் இனப்படுகொலை: கலைமாமணி விருதை திருப்பி அனுப்பினார் கவிஞர் இன்குலாப்


ஈழத்தமிழர்ப் படுகொலையில் இந்திய அரசு பங்கேற்பதைக் கண்டித்தும், இந்தக் காங்கிரசு அரசில் தி.மு.க. இன்னமும் கூட்டணி சேர்ந்திருப்பதை எதிர்த்தும் தனது ‘கலைமாமணி’ விருதை கவிஞர் இன்குலாப் திரும்ப அனுப்பினார். இவ்விருதைத் துறைந்து 27.04.2009 அவர் விடுத்துள்ளக் கடிதத்தின் சுருக்கம் வருமாறு:

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும். ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கிறது.

வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற் கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. இன்று இலங்கையில் போர்நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணா நோன்பைமேற் கொண்டிருக்கிறார்.

அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும். தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான். இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன. கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா? கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும். இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது, இந்த வகையில் 2006-ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட ’கலைமாமணி’ விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர் தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது. அதனால் இம்மடலுடன் எனக்களிக்கப்பட்ட கலைமாமணி விருதுக் கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புகிறேன்.

கவிஞர் இன்குலாப் அவர்களின் இந்த இனமானச் செயலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பாராட்டுகிறது - பொதுச் செயலாளர்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com