Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2008

பிரியங்கா நளினி சந்திப்பு - ஒரு பார்வை
பெ.மணியரசன்

“கடவுளிடம்” கூட கட்டுத் தளையற்று பேசலாம்; ஆனால் காங்கிரசாரிடம் விடுதலைப்புலிகள் பற்றியோ, ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான மனித உரிமை குறித்தோ பேச முடியாது என்று எழுதப்பாடாத “புனிதக் கட்டளை” போடப்பட்டுள்ளது. வேலூர்ச் சிறையில் நளினியைப் பிரியங்கா காந்தி பார்த்து உரையாடினார். “நேரடிப் பகைவர்கள்” நெருங்கி அமர்ந்து, நிகழ்வுகளைப் பகிர்ந்து, பரிவு காட்டிக் கொண்டார்கள். ராஜீவ் காந்தி கொலையைச் சாக்காக வைத்து, வரலாற்று வழிப்பட்ட தங்களின் இனப்பகையால், தமிழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் ‘துக்ளக்’ சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றோருக்கு இச்சந்திப்பு, அதிர்ச்சியை அளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீது போலிப் பகைமை காட்டி, காங்கிரஸ் தலைமையை அண்டிப் பிழைக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போன்ற இனத்துரோகிகளும் அதிர்ந்து போயுள்ளார்கள். ‘துக்ளக்’ சோவை மதியுரைஞiராகக் கொண்டு செயல்படும் சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் குழம்பிப்போய் கருத்துக் கூறியுள்ளார். தனிமையில் சந்தித்த போது நளினி, பிரியங்காவை கொலை செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று அவர் பதறுகிறார். ச்(ஜுனியர் விகடன் - ஏப்ரல் 23, 2008).

ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமானச்வர்களில் ஒருவராகத் தண்டிக்கப்பட்ட நளினியை மரண தண்டனையிலிருந்து மீட்டவர் ராஜீவின் மனைவி சோனியா காந்தி ஆவார். இதனால் சோனியாவுக்குப் ‘பதிபக்தி’ (கணவர் பக்தி) இல்லையென்று செயலலிதா கண்டித்தார். சோனியா காந்தி காட்டிய பரிவு, உலகத்தில் நடக்காத புதுமை இல்லை. தமது இரு குழந்தைகளோடு தம் கணவர் ஸ்டெயின்ட்ஸ் பாதிரியார் ஒரிசாவில் இந்துத்வா வெறியர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். பாதிரியாரின் மனைவி அக்கொலையாளிகளை மன்னித்து விட்டதாகச் சொன்னார்.

பிரியங்கா நளினியைப் பார்த்ததற்கு வேறொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலையை வைத்து, தமிழ் இனமே காங்கிரஸ் கட்சிக்கு எதிரி இனம் என்பது போல் 1991 லிருந்து இன்றுவரை நடந்து கொண்டு விட்டோம்; இதனால் தமிழர்கள் அடிமனதில் காங்கிரஸ் எதிர்ப்பு கனன்று கொண்டுள்ளது. இம்முரண்பாட்டை இணக்கப்படுத்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களிடம் கணிசமான வாக்குகள் பெற வேண்டும் எனக் கருதியே பிரியங்கா- நளினி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்கின்றனர்.

அப்படியே, தேர்தல் உத்தி கருதி இச்சந்திப்பு நடந்திருந்தாலும் அதனால் குற்றமொன்றும் இல்லை. தமிழ் இனத்தை இணக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்து காங்கிரஸ் தலைமையில் தோன்றி இருந்தால், அது, ராஜீவ் கொலைக்குப் பிறகு பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே, அடக்குமுறைகளுக்கிடையே சிறைவாசத்துக்கிடையே ஈழ விடுதலையையும் விடுதலைப்புலிகளையும் விட்டுக் கொடுக்காமல் ஆதரித்து வந்த தமிழ் இன உணர்வு அமைப்புகளுக்கும், சான்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கருதலாம்.

தமிழ் இன உரிமைக்குப் போராடுவோர் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. சோனியா காந்தியும், பிரியங்காவும் தனிநபர்கள் அல்லர்; காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆவர். அதனால் அவர்கள், தமிழ் இனத்தைத் தனது பகை இனமாகக் கருதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளும் ஆவர். “இந்திய தேசிய” அரசியலில் தனிநபர் குணத்தைவிட, அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் வர்க்க குணமே செயல்படும். இந்த எச்சரிக்கைத் தேவை. அதே வேளை பிரியங்கா - நளினி சந்திப்பை வரவேற்போம்.

நன்றி : கிளர்ச்சியாளன் மே இதழ் 2008



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com