Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2008

மே நாள் சூளுரை

இந்தியாவைத் தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்கிறார்கள் மார்க்சிய ஆய்வாளர்கள். அந்தச் சிறைக்கூடத்திலும், முற்றுகைக்குள்ளான ஒரு தனிச்சிறைக் கொட்டடியில் தமிழ் இனம் உள்ளது. இந்திய அரசு காஷ்மீர் மக்களின் தேசிய விடுதலையை மறுப்பதுடன் காஷ்மீரத்தையே இராணுவச் சிறைக் கூடமாக மாற்றிவைத்திருக்கிறது; நாகர்கள், அசாமியர்கள் போன்ற வடகிழக்குத் தேசிய இனங்களைப் படை கொண்டு தாக்கி, அந்த மண்டலத்தை நிரந்தரப் போர்க்களமாக்கியுள்ளது. இக்கொடுமைகளையெல்லாம் எண்ணிப்பார்த்த பின்னும் ஒரு வினா எழுகிறது. தமிழ் இனம் போல் தாக்குதலுக்குள்ளான இன்னொரு இனம் இந்தியாவில் உண்டா?


ஆசிரியர் குழு

ஆசிரியர்
பெ.மணியரசன்
இணை ஆசிரியர்
கி.வெங்கட்ராமன்

குழு உறுப்பினர்கள்
நெய்வேலி பாலு
கவிபாஸ்கர்
க.அருணாபாரதி

தமிழர் கண்ணோட்டம்,
2ம் தளம்,
20/7, முத்துரங்கம் சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை - 600 017.

தொலைப்பேசி: 044- 2433 7251

[email protected]

ஆண்டுக் கட்டணம்: ரூ.120
மூன்றாண்டுக் கட்டணம்: ரூ.300
வாழ்நாள் கட்டணம்: ரூ.1200

சென்ற இதழ்: ஏப்ரல் 2008
தேசிய விடுலைப் போராட்டம் அங்கெல்லாம் தீவிர வடிவமெடுத்துள்ளதால் இந்திய அரசு நேரடியாகப் படையனுப்பி அம்மக்களைத் தாக்குகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டம் இல்லை. இந்தியப் பேரரசின் பாதந்தாங்கி, பணிவிடைகள் செய்து, பண்டிகை இனாம்கள் பெறும் கட்சிகள் தாம் இங்கு பெரிய அமைப்புகள். கங்காணிகளின் சேவைக்கு எஜமானர்கள், கூலி தருவார்களே தவிர, நன்றி காட்டமாட்டார்கள் அல்லவா! அதேபோல்தான், கங்காணிகளின் தலைமையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியப் பேரரசு நன்றி காட்டுவதில்லை. நன்றி காட்டாவிட்டாலும் அமைதியாக வாழ அனுமதிக்கிறதா? அதுவும் இல்லை.

இந்திய ஆளும் வர்க்கத்திற்குத் தமிழர்களின் மீது வரலாற்று வழிப்பட்ட இனப்பகை இருக்கிறது. அதனைத் தீர்த்துக் கொள்ள இந்த அமைதிக் காலத்தில் படை அனுப்ப முடியாது. அதனால் பக்கத்தில் உள்ள கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், சிங்களர்கள் ஆகியோரைத் தனது படைப் பரிவாரங்களாகப் பயன்படுத்துகிறது. கன்னடர்கள், தமிழ்க் காவிரியைத் தடுத்ததுடன் கர்நாடகதில் தமிழர்களை 199192இல் இனக்கொலை புரிந்தார்கள். தமிழ்ப் பெண்களை வல்லுறவு கொண்டு மானபங்கப்படுத்தினார்கள். வீடு வாசல் இழந்து பல இலட்சம் தமிழர்கள் அகதிகளாக ஓடிவந்தார்கள். இப்பொழுது ஒக்கேனக்கலில் ஓடும் நீர் மட்டுமின்றி, ஒக்கேனக்கலும், ஓசூரும் கர்நாடகத்திற்கே சொந்தம் என்று கலகம் செய்கிறார்கள்.

இதுபோல் பக்கத்து மாநிலங்களிலிருந்து காஷ்மீர் மக்களுக்கு தாக்குதல்கள் வருகின்றனவா? இல்லை மாறாகப் பக்கத்து நாட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு வழிகளில் உதவிகள் வருகின்றன. கணிசமான மலையாளிகளின் பிழைப்பு தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆனால் மலையாளிகள் அவர்களின் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாகத் தூக்கி எரிந்து முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் தண்ணீர் தேக்குவதை மறுப்பதுடன் அவ்வணையை உடைக்கும் உள்நோக்கத்தோடு புதிய அணை கட்டப் போவதாக அறிவிக்கிறார்கள்.

அசாமியர்களுக்கோ அல்லது நாகர்களுக்கோ இப்படி ஒரு அநீதியை அண்டை மாநிலங்கள் இழைக்கின்றனவா? இல்லை; அண்டை நாடுகள் தாம் இப்படியான அநீதியை இழைக்கின்றனவா? இல்லை. மேற்கு வங்கம், குசராத் போன்ற மாநிலங்களின் கடலில் கூப்பிடு தொலைவில் வங்காளதேசமும் பாகிஸ்தானும் இருக்கின்றன. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு எத்தனை முறை போர் மூண்டது?

அரசுகளுக்கிடையிலான உறவுகள் முறிந்து, தூதரகங்களின் மூடப்பட்ட கதவுகளில் நூலாம்படை படர்ந்து கிடப்பதுண்டு. குசராத் பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதியில் என்றைக்காவது குசராத்தி மீனவரைப் பாகிஸ்தான் கப்பற்படை சுட்டுக் கொன்றதுண்டா? இல்லை. வங்காளக் கடலில் மேற்கு வங்க மீனவர்களை வங்காள தேச கடற்படை சுட்டுக் கொன்றதுண்டா? இல்லை. ஏன்?

குசராத்தி மீனவர்களையும் மேற்கு வங்க மீனவர்களையும் பக்கத்து நாட்டினர் சுட்டுக் கொன்றால், இந்தியக் கப்பற்படை திருப்பிச் சுடும். போர் மூளும். சிங்களக் கப்பற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றால் இந்தியக் கப்பல்படை திருப்பிச் சுடாது ஏன்? சாகின்ற மீனவர்கள் தமிழர்கள்; ஆரியத்தின் இனப் பகைவர்கள்.

கன்னடர்களால், மலையாளிகளால், சிங்களவர்களால் தாக்கப்பட்டும், உரிமை பறிக்கப்பட்டும் இனக் கொலைக்கு உள்ளாக்கப்பட்டும், திருப்பி அடிக்காத தமிழ் இனத்தைப் பார்த்துக் கேலிச் சிரிப்பு சிரித்தார்கள் தெலுங்கர்கள். இந்திய அரசின் எண்ணத்தைப் புரிந்து கொண்டார்கள். தமிழகத்திற்குள் கசிந்து வரும் பாலாற்று நீரையும் கணேசபுரத்தில் தடுக்க அணை கட்டுகிறார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் நடுவண் ஆட்சியாளர்கள் உறுதிபடச் செயல்படுத்தித் தமிழர்களின் உரிமைகளை மீட்டுக் கொடுத்தால், கர்நாடக, கேரள மாநிலங்களில் காங்கிரசுக்கோ, பா.ஜ.க.வுக்கோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று அஞ்சுகிறார்கள் என்று சிலர் காரணம் கூறுகிறார்கள்.

அப்படியானால், இவ்வளவு இழப்புகளுக்கும் தாக்குதல்களுக்கும், கேவலங்களுக்கும் உள்ளான தமிழர்களுக்குரிய நீதியை நிலைநாட்டவில்லை என்றால், காங்கிரஸ், பா.ச.க. கட்சிகள் மீது தமிழக மக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு வாக்களிக்க மறுக்க மாட்டார்களா? தமிழக மக்களைக் குழப்பி, தமிழ் இனத்தின் பகைச் சக்திகள் தமிழ் நாட்டிற்குள் மட்டுமே இருப்பதுபோல் சித்தரித்து காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் வாக்கு வாங்கித் தரக் கங்காணிக் கட்சிகள் இங்கு இருப்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே முழுக்காரணம் அல்ல. இந்திய ஆளும் வர்க்கம் தமிழர்களைத் தங்களது வரலாற்று வழிப்பட்ட பகைவர்களாக இனங்காண்பதே முதன்மைக் காரணம்.

இதனால் இந்திய அரசு, சிங்களர், மலையாளி, கன்னடர், தெலுங்கர் ஆகியோரைத் தமிழ் இனத்தை முற்றுகையிடும் பகைவர்களாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பக்கத்து இனத்தவர்களோ ஆரியத்தையும் வடமொழியையும் நேசிப்பார்களே அன்றி தமிழர்களை உடன் பிறப்புகளாகவோ, நண்பர்களாகவோ கருத மாட்டார்கள். இப்பொழுது எண்ணிப் பாருங்கள். இந்தியாவில் மிக அதிகமாக மிக மோசமாக இன ஒடுக்குமுறைக்கும், இன இழப்புகளுக்கும், பகை இன முற்றுகைக்கும் உள்ளாகியுள்ள ஒரு இனம் தமிழ் இனம் மட்டுமே!

இந்த இனத்தில் பிறந்துள்ள ஒவ்வொருவரும் இந்த உண்மையை உணரவேண்டும். உணர்ந்ததும் அக்கம் பக்கம் உள்ள தமிழர்களுக்கு விளக்க வேண்டும். தமிழ்த் தேசியப் புரட்சியே அடிமைத்தனம் அறுக்கும் வாள் என அடையாளம் காட்ட வேண்டும். வீறு கொண்டு எழ வேண்டும்; விடியலுக்குத் திரள வேண்டும்; நம் தலைமுறையோடு அடிமைத்தனம் ஒழியட்டும்! அடுத்த தலைமுறை அனைத்துரிமையும் பெற்ற தமிழர்களாகத் தலை நிமிரட்டும்!

இதுவே, புதிய தமிழர் கண்ணோட்டம் உங்களுக்கு வழங்கும் புரட்சிகர மே நாள் சூளுரையும் வாழ்த்தும்!

இதழ் தொடர்பாக ஒரு பகிர்வு

அன்புகெழுமிய வாசகப் பெருமக்களே,

தமிழர் கண்ணோட்டம் தொடர்பான நிர்வாகச் சிக்கல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இதழின் வெளியீட்டாளராக இருந்த தோழர் அ.பத்மநாபன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து 17.3.2008 மடல் வழி விலகி வெளியேறி விட்டார். இதன் மூலம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திவரும் தமிழர் கண்ணோட்டம் இதழிலிருந்தும் அவர் வெளியேறி விட்டார் என்று பொருளாகும். இது குறித்த அறிவிப்பைக் கடந்த ஏப்ரல் இதழில் வெளியிட்டிருந்தோம்.

இதழைப் பதிவு செய்தபோது, பதிவுத்தேவை கருதியும், தோழர் பத்மநாபன் மீது கட்சி வைத்திருந்த நம்பிக்கையைப் பொறுத்தும் அவரை வெளியீட்டாளராகப் பதிவு செய்தோம். த.தே.பொ.க.வை விட்டுப் போய் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து விட்டதாகக் கடிதம் மூலமும் நேர்முகமாகவும் அவர் தெரிவித்தார். போகும்போது தமிழர் கண்ணோட்டம் பதிவு தொடர்பான மூல ஆவணங்களை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

பத்மநாபனைத் தொலைபேசி வழிக் கேட்டபோது “எல்லாம் அங்கு அலுவலகத்தில் தான் இருக்கின்றன” என்றார். பிறகு நம் தோழர்கள் அவரிடம் பேசியபின், அவரே முன்வந்து அந்த மூல ஆவணங்களைத் தம் வீட்டிலிருந்து 24.3.2008 அன்று எடுத்துவந்து தமிழர் கண்ணோட்டம்/ தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அலுவலகத்தில் என்னிடம் ஒப்படைத்தார். நான் பெற்றுக் கொண்டதற்கான கையொப்பமும் போட்டுக் கொடுத்தேன். தவறுதலாக மற்ற பொருள்களோடு சேர்ந்து இந்த ஆவணங்களும் தம் வீட்டுக்கு வந்து விட்டதாக அப்போது அவர் சொன்னார்.

அத்துடன் வெளியீட்டாளர் பொறுப்பை கட்சியின் முடிவுப்படி என் பெயருக்கு (பெ.மணியரசன்) மாற்றித் தருவதாகவும் சொன்னார். “இருபது ரூபாய் முத்திரைத்தாளில் அதற்கான ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள் கையொப்பமிட்டுத் தருகிறேன். நீதிமன்றத்திற்கு வரவேண்டிய நாளைத் தெரிவியுங்கள், வந்து அங்கும் நேரடியாக ஒப்புதல் தெரிவித்து விடுகிறேன்'' என்று சொன்னார்.

மகிழ்ச்சியாகப் பேசி விடைபெற்றுச் சென்றார். அப்போது அலுவலகத்தில் இருந்த மற்ற தோழர்களுக்கு அவரது இச்செயல் வியப்பளித்தது. ஆனால் 17.4.2008 அன்று கட்சியின் தஞ்சை மாவட்ட அலுவலக முகவரிக்குப் பத்மநாபனிடமிருந்து கடிதம் வந்திருப்பதாகச் சொன்னார்கள். நான் சென்னையில் இருந்தேன். அதில் “தமிழர் கண்ணோட்டத்தின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து பெ.மணியரசனை நீக்கிவிட்டு, தணிகைச்செல்வனை புதிய ஆசிரியராக நியமித்துள்ளேன்'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அ.பத்மநாபன் அனுமதி இல்லாமல் தமிழர் கண்ணோட்டம் தொடர்பான எப்பணியிலும் பெ.மணியரசன் ஈடுபடக் கூடாது என்றும் எழுதியிருந்தார்.

அதன்பிறகு பத்மநாபன் த.தே.பொ.க. தோழர்கள் சிலருக்கு அடிக்கடி தொலைபேசி வழி தமது முயற்சிகளை ஒன்றுவிடாமல் கூறிவருகிறார். இராசேந்திரசோழன், தணிகைச் செல்வன், அ.பத்மநாபன் மூவரும் தமிழர் கண்ணோட்டத்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

2005 அக்டோபர் மாதம் த.தே.பொ.க.விலிருந்து வெளியேறியவர் இராசேந்திரசோழன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் த.தே.பொ.க.வுடன் ஆன அமைப்பு வழித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டவர் தணிகைச் செல்வன். அவ்விருவரும் கட்சியை விட்டுப் போனபின் அவர்கள் வழியில் நாம் குறுக்கிட்டதே இல்லை. அவர்கள் இருவரும், த.தே.பொ.க. தலைமை குறித்த, எவ்வளவோ, கொச்சையாகக் குற்றம் கூறி எழுதினார்கள். அதற்குக் கூட நாம் எதிர்வினை புரியவில்லை. இவர்கள் மூவரும் த.தே.பொ.க. தலைமை மீதுள்ள தங்களின் சொந்தக் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழி வாங்கும் நோக்கில் ஒரு "தொழில்நுட்பக்' காரணத்தைப் பயன்படுத்தி, தமிழர் கண்ணோட்டம் இதழை முதலில் அபகரித்து, பின்னர் நிரந்தரமாக முடக்கிவிடத் திட்டமிடுகிறார்கள்.

தமிழர் கண்ணோட்டம் எனக்கோ அல்லது வேறு எவருக்குமோ தனிப்பட்ட சொத்து அல்ல. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற ஓர் இலட்சிய இயக்கத்தின் சொத்து. த.தே.பொ.க. எம்.சி.பி.ஐ. என்ற பெயரில் செயல்பட்ட போது “கண்ணோட்டம் எம்.சி.பி.ஐ. செய்தி மடல்'' என்ற பெயரில் என்னை ஆசிரியராகக் கொண்டு சிதம்பரத்திலிருந்து 1986 சனவரியில் உருட்டச்சு இதழாக முதல் முதல் வெளிவந்தது. அவ்விதழ் இன்று உள்ளடக்கம், உருவம், வாசகர் ஆதரவு ஆகியவற்றில் அடைந்துள்ள வளர்ச்சிக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. த.தே.பொ.க. தோழர்களின் சலியாத உழைப்பும், கட்சிக்கு வெளியே உள்ள ஆதரவாளர்களின் கொள்கை சார்ந்த அரவணைப்பும் உதவியும் தாம் இவ்வளர்ச்சிக்குக் காரணங்கள். தமிழர் கண்ணோட்டத்துக்கு ஆசிரியர் வெளியீட்டாளர் என்பதெல்லாம் கட்சி கொடுத்த பொறுப்பு அல்லது வேலை தவிர வேறல்ல. எங்களில் யாருக்கும் தனிப்பட்ட உரிமை அவ்விதழில் இல்லை.

நம்பிக் கொடுத்த ஒரு வேலையைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர் கண்ணோட்டத்தைத் தனதாக்கிக் கொள்ள பத்மநாபன் முயல்வதும், அதற்கு இராசேந்திரசோழன், தணிகைச்செல்வன் போன்றோர் துணைபோவதும் அறங்கொன்ற செயலாகும். “வாயில் காத்துநிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும் கோயில் பூசை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும்'' என்ற பாரதி வரிகள் தாம் நினைவுக்கு வருகின்றன.

பிறர் உழைப்பைச் சுரண்டுவதும் திருடுவதும் முதலாளி வர்க்கக் குணம். மார்க்சியம் பேசிக் கொண்டிருந்த இத்தோழர்கள் த.தே.பொ.க. என்ற மக்கள் இயக்கத்தின் சொத்தைத் திருடி உள்ளார்கள். பத்மநாபன் கட்சியை விட்டுப் போனா÷ர தவிர அவரோடு யாரும் த.தே.பொ.க.விலிருந்து போகவில்லை. திருட்டு உரிமையை நிலைநாட்டிக் கொள்ள அ.பத்மநாபன் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். அதுகுறித்து அவரது வழக்குரைஞரிடமிருந்து எனக்கு ஓர் அறிவிப்பும் வந்துள்ளது.

தமிழர் கண்ணோட்டம் குறித்துத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒரு முடிவு எடுத்துள்ளது. நீதிமன்றத்தில் முடிவாகும் வரை இனி “புதிய தமிழர் கண்ணோட்டம்” என்ற பெயரில் இதழைத் தொடர்ந்து நடத்துவது என்பதே அம்முடிவு.

அன்புமிக்க வாசகப் பெருமக்களே,

சிலர் இதழின் பெயரைத் திருடலாம்; இலட்சியத்தைத் திருடமுடியாது; தமிழர் கண்ணோட்டம், தற்சார்புள்ள புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தை தனிச் சிறப்பான பாதையில் வளர்த்து வருகிறது.

அந்தத் தத்துவப் பயணம் மேலும் மெருகேறித் தொடரும். பணம், பதவி, தற்புகழ்ச்சி மூன்றுக்கும் சோரம் போகாத த.தே.பொ.க. தோழர்களே இவ்விதழின் அடித்தளம். “தமிழர் கண்ணோட்டம் அறக்கட்டளை” சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள அமைப்பாகும். அதன் நிறுவனத் தலைவர் நான் (பெ.மணியரசன்). அதன் பெயரில் சென்னைத் தியாகராயர் நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் சேமிப்புக் கணக்கு உள்ளது. எனவே வழக்கம்போல் நீங்கள் “தமிழர் கண்ணோட்டம் அறக்கட்டளை” என்ற பெயரில் இதழுக்கான தொகைகளை வரைவோலை, காசோலை பணவிடை வழி இப்பொழுதுள்ள முகவரிக்கே அனுப்புங்கள். அறிவார்ந்த வாசகப் பெருமக்களாகிய உங்கள் ஆதரவு, இப்பொழுது முளைத்துள்ள சில்லரைச் சிக்கல்களைத் தவிடு பொடி ஆக்கிவிடும்.

நன்றி
பெ.மணியரசன்
ஆசிரியர்/ வெளியீட்டாளர்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com