Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மார்ச் 2009

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்க்கீடிட்டை மறுக்கிற மோசடி மசோதா
கி.வெங்கட்ராமன்

மன்மோகன்சிங் அரசு மேலும் ஒரு மோசடி மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியினருக்கு இந்திய அரசின் குடிமைப்பணிகள் உள்ளிட்ட உயர் அலுவல் வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க உறுதியான சட்ட ஏற்பாடு செய்வதாக சொல்லிக்கொண்டு உயர் பணி வாய்ப்புகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை விலக்கி வைக்கும் சூதான சட்ட முன்வடிவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. ‘பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு பதவிகள் மற்றும் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு, 2008 என்ற பெயரில் கடந்த 2008 டிசம்பர் 19-ஆம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 2009 பிப்ரவரி 19-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது

இம்மசோதா. உயர் பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு உட்பட்ட பணி எண்ணிக்கையை அவ்வப்போது அரசு அறிவிப்புகளின் வழி செய்ததற்கு மாறாக, உறுதியான சட்ட ஏற்பாடு செய்வதாக இம்மசோதாவின் “நோக்கங்களில்” கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இச்சட்ட முன்வடிவு விதி-4 உயர் பதவி வாய்ப்புகளை பெருமளவில் தாழ்த்தப்பட்டபழங் குடியினருக்கு கிடைக்காமல் தட்டிப்பறிக்கும் ஏற்பாடாக உள்ளது. விதி-4 (1) இடஒதுக்கீட்டி லிருந்து விலக்கப்பட்ட பணி மற்றும் பதவி வாய்ப்புகளை வரையறுக்கிறது. 45 நாட்களுக்குக் கீழ் உள்ள தற்காலிக பதவி மற்றும் பணி வாய்ப்புகள், இடர்நீக்க பணிகளுக்காக அவசரத் தேவைகளுக்கு உருவாக்கிக் கொள்ளப்படும் பதவி வாய்ப்புகள் இடஒதுக்கீடடிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன.

மேலும் இந்திய அரசு மற்றும் அரசு சார் பணிகளில் யு-குரூப் பதவிகளில் கீழ்மட்ட பதவிகள் தவிர உள்ள உயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது. இதுதவிர “அறிவியல் அல்லது தொழில் நுட்பப் பதவி’ என்று இச்சட்ட முன்வடிவின் விதி 2(த) வரையறுக்கிற பணிகளுக்கும் இடஒதுக்கீடு கிடையாதாம். “அறிவியல் அல்லது தொழில் நுட்பப் பதவி” என்பது தெளிவாக வரையறுக்கப்படாமல் பலவற்றையும் இவ்வரையறையில் சேர்த்துக்கொள்வதற்கு ஏற்றாற்போல் தொளதொளப்பான “உள்ளிட்ட” என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. “இயற்கை அறிவியல் அல்லது துல்லிய அறிவியல் அல்லது செயல்பாட்டு அறிவியல் அல்லது தொழில்நுட்பம் போன்ற கல்வி அறிவு தேவைப்படக்கூடிய பணிகள் உள்ளிட்டவை” என பிரிவு 2(j) விளக்கம் அளிக்கிறது. இதன்மூலம் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த இந்திய அரசு நிறுவனங்களின் பெரும்பாலான பணி மற்றும் பதவி வாய்ப்புகள் தாழ்த்தப்பட்ட - பழங்குடியினருக்கு மறுக்கப்படுகின்றன.

இதுபோதாதென்று விதி-4(1) (iஎ) தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படவேண்டிய “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள்” பட்டியல் ஒன்றை அறிவிக்கிறது. இதில் சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் உள்ள ஐ.ஐ.டி.கள், திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உள்ளிட்ட 14 என்.ஐ.டி.கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகிய 47 நிறுவனங்கள் உள்ளன.

கல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம், விக்டோரியா நினைவகம், தில்லியில் உள்ள போர்நினைவு அருங்காட்சியகம் போன்றவை கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்ற பெயரால் இடஒதுக்கீட்டிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு விலக்கி வைக்கப்பட்டுள்ளன. புதுதில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குனர் பார்ப்பன வெறியர் வேணுகோபால் விருப்பத்தை இந்த மசோதா விரிவாக நிறைவேற்றி வைத்திருக்கிறது. இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., போன்ற கல்வித்தகுதியில் உள்ள பணி வாய்ப்புகள் கூட தாழ்த்தப்பட்ட பழங்குடியின இளைஞர்களுக்கு இந்த மசோதா மூலம் மறுக்கப்படுகிறது.

இந்திய அரசின் அருங்காட்சியக நூலகங்களில் கூட மேலாளர் அல்லது நூலகர் நிலையிலான பணிகளிலும் இம்மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்று பொருள். இதுமட்டுமின்றி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பதவிகள் என்ற வரையறுப்பில் இந்திய அரசின் பாலிடெக்னிக்குகளில் கூட ஆசிரியர் பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன. புதுவை போன்ற ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளில் (யு+னியன் பிரதேசங்களில்) உள்ள பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றின் ஆசிரியர்ப் பணிகளும் இடஒதுக்கீட்டி லிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன.

இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை அவ்வப்போது நீட்டவும், மாற்றவும் இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விதி. 4(1) கூறுகிறது. இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள குறைவான இடஒதுக்கீடு வாய்ப்பு களையும் உறுதியாக செயல் படுத்துவதற்கான ஏற்பாடு இல்லை. ஏனெனில் இச்சட்ட முன்வடிவின் விதி 18 ஆனது, “வேண்டுமென்றே” இடஒதுக்கீட்டை செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது மட்டும்தான் துறைசார் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட முடியும் என்று கூறுகிறது. சாதிவெறியோடு வேணு கோபால் போன்ற ஓர் அதிகாரி இடஒதுக்கீட்டை செயல்படுத்த மறுத்தாலும், அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்தார் என்று மெய்பிக்கும் வரையில் அவர் மீது ஒரு துரும்பும் படாது. அதுகூட துறைசார் ஒழுங்கு நடவடிக்கைகள் என்று கூறப்படுகிறது.

அதாவது பணி இடமாற்றம் உள்ளிட்ட மென்மையான நடவடிக்கைகள் கூட ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரால் குறிக்கப்படும். சாதிவெறியர்கள் தப்பித்துக்கொள்ளலாம். மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு உயர் நிறுவன பதவிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வதாக அறிவித்துக்கொண்டே இடஒதுக்கீட்டை பறிக்கிற மோசடி மசோதாவாகும் இது.

இவ்வளவு கொடுமையான சட்ட முன்வடிவு நாடாளுமன்ற மாநிலங்க ளவையில் எந்த விவாதமும் இல்லாமல் கண் சிமிட்டும் நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் நமது சனநாயக அவலம். இம்மசோதா தாக்கல் செய்யப்படும்போது பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபித்து குரல் எழுப்பினாலும், அது சில வினாடிகள் கூட நீடிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று பிரதமருக்கு ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியதோடு தமது எதிர்ப்பை முடித்துக்கொண்டார். பிற கட்சியினர் இதுகூட செய்யவில்லை.

ஆயினும் இச்சட்ட முன்வடிவு நாடாளுமன்ற மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டால்தான் சட்டமாக மாறும் என்ற ஒரு இறுதி வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு பிறகு நிறுவப்படுகிற மக்களவையின் கூட்டத்தில் இம்மசோதா முன்வைக்கப்படலாம். அப்போதாவது சமூக அநீதியான இம்மசோதாவை நிறைவேற்றவிடாமல் அனைத்து கட்சியினரும் விழிப்புடன் தடுக்கவேண்டும்.

அதைவிட உருவாகிற புதிய அரசு இம்மசோதாவை சட்டமாக்காமலேயே விட்டுவிடுவதே நல்லது. சனநாயக நெறியிலும், சமூக நீதியிலும் அக்கறை உள்ள அனைத்து அமைப்பினரும், ஏடுகளும், ஓசையில்லாமல் நடந்துள்ள இந்த மோசடியை வெளிப்படுத்தி விழிப்புணர்வை உருவாக்கவேண்டும். மசோதா என்ற நிலையிலேயே இது புதைக்கப்படவேண்டும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com