Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மார்ச் 2009

கலைஞர் கருணாநிதியும் வடிவேலுவும் ஒரு கற்பனை சந்திப்பு
நா. வைகறை

ஈழச்சிக்கலில் கலைஞரின் நடவடிக்கைகள் நம்மை மயிர்க் கூச்செரிய வைக்கின்றன. ராசீவ்காந்தி கொலைக்கு முன், பின் என்று கொஞ்சநாள் பேசினார். சகோதர யுத்தம் என்று சில நாள் விளக்கமளித்தார். ஈழமக்கள் துயர்தீரும் நாளே தன் வாழ்வின் சாதனை நாள் என்று பிரமிப்பூட்டினார்.

நாளை ஈழம் மலரும் என்றால் இன்றே இந்த ஆட்சியை இழக்க தயார் என்று சவால் விட்டார். பல்வேறு சங்கடங்களுக்கு இடையிலும் இந்த ஆட்சியில் தான் இருப்பதே தமிழகத் தமிழர்களை பாதுகாக்க மட்டுமல்ல ஈழத் தமிழர்களையும் பாதுகாக்கத்தான் என்று பரவசப்படுத்தினார். நாளொரு நாடகமும், பொழுதொரு பொய்யும் சொல்லி நாட்களை கடத்துகின்றார்.

“அய்யகோ ஈழமக்கள் அழிகின்றார்களே இறுதித்தீர்மானம்” என்று அலறினார். மறுநாளே தி.மு.க பொதுக்குழு இறுதி முடிவெடுக்குமென்றார்.தி.மு.கபொதுக்குழுவிலே பிரபாகரனை வசைபாடினர்.
காங்கிரசு எடுபிடிகளின் ஏவல்களுக்கு அஞ்சி; பெ. மணியரசன், சீமான், கொளத்தூர் மணி போன்றோரை கைது செய்தார். ஓ. பன்னீர்செல்வம் கூட செயலலிதாவிற்கு மட்டும்தான் பயந்தார். செயலலிதாவின் மிரட்டலுக்கு அஞ்சி வைகோ, நெடுமாறன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றோரையும் கைது செய்தார்.

ஆனால் கருணாநிதியோ? முதுகுத் தண்டுவடத்தில், அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ‘மல்லாக்க’ படுத்துக்கொண்டு ‘வீடியோ கான்பரசிங்’ மூலம் நடத்திய அரசியல் நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. இந்திய இறையாண்மை குறித்து அவர் பேசும்போதெல்லாம், ‘வேண்டாம் வலிக்குது விட்டுரு அழுதிடுவேன், என்ற நடிகர் வடிவேலுவின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.

தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி பரிதாபமாய் மருத்துவமனையில் படுத்திருக்கும் கருணாநிதியை வடிவேலு சந்தித்தால் உரையாடல் எப்படி இருக்கும்? இதோ கற்ப்பனை நேர்க்காணல் :

வடிவேலு : அய்யா, வணக்கம்

கலைஞர் : வாஙக் தம்பி வடிவேலு. ஓய்வு நேரத்துல உங்க நகைச்சுவை காட்சிகள் தான் மனதுக்கு ரொம்ப ஆறுதலா, தெம்பா இருக்கு.

வடிவேலு : எப்படி இருக்கீங்க அய்யா?

கலைஞர் : முடியல. கண்ணக்கட்டுது. (சிரிக்கிறார்)

வடிவேலு : முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குக் குப்புற படுக்கச் சொன்னதுக்கு நான் எதுக்காகவும் குப்புற விழமாட்டேன்னு சொன்னீ;ங்களாமே?

கலைஞர் : இந்த பத்திரிக்கைகாரங்க ஏன்தான் இப்படி எழுதுறாங்களோ. உட்கார்ந்து யோசிப்பாங்களோ தம்பி. இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திதான் என்னை ரணகளப்படுத்துறாங்கப்பா.

வடிவேலு : எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மத்தவங்க உணர்ச்சிய உருவாக்கினாலும் , உசுப்பேத்தினாலும் நீங்கதான் ‘பொசுக்’;குன்னு இறக்கிவிட்டுருங்களே?

கலைஞர் : எதச் சொல்ற தம்பி? வடிவேலு : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராகப் போராடிய கன்னடர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் திரையுலகினர் நாங்களும் உங்களுக்கு ஆதரவா உண்ணாவிரதம் இருந்தோம். ஆனா நீங்க கர்நாடக தேர்தல் முடிஞ்சவுடன் பேசிக்கலாமுன்னு சொல்லித் தமிழக உணர்ச்சியை மடைமாற்றி விட்டுட்டீங்க.

கலைஞர் : நான் சமயோசிதமா சிந்தித்து; எடுதத் முடிவாலதான் கர்நாடக- தமிழக மத்தியில் பகையுணர்ச்சி வளராம தடுக்க முடிஞ்சது. இந்திய இறையாண்மைக்கு வரவிருந்த ஆபத்தை என்னுடைய ராஜதந்திர நடவடிக்கையால தடுத்து நிறுத்தினதை நீங்க புரிஞ்சிக்கனும். நீங்க புரிஞ்சுக்காம போனா பரவாயில்ல. என்னுடைய ராஜதந்திரத்தை தோழர் என். வரதராஜனும், தம்பி வீரமணியும் வரவேற்று பாராட்டியதை நான் எப்பவும் மறக்க மாட்டேன்.

வடிவேலு : அய்யா வரதராசனும் - அய்யா வீரமணியும் உங்கள பாராட்டியதை என்னுடைய திரைப்படத்துல பயன்படுத்தியிருந்தேனே - பார்த்தீங்களா?

கலைஞர் : நீங்க நடிச்ச படத்துலேயே நான் அதிகம் ரசித்த படமாச்சே இம்சை அரசன் 23-ம் புலிகேசி . எதிரி மன்னன் படையெடுத்து வந்தவுடன் வீரர்களிடம் ஆவேசமாக பேசிவிட்டு, வௌ;ளைக் கொடியோடு ஒரு ஆட்டம் போட்டு சரணடைவீங்க. உடனே இரண்டு புலவர்கள் வந்து உங்களப்பாத்து வெள்ளைக் கொடியோடு வந்து எதிரியை விரட்டிய மாமன்னா என்று பாராட்டுவாங்க. இந்த காட்சியதான சொல்றீங்க.

வடிவேலு : ரொம்ப சரியா சொன்னீங்க அய்யா.

கலைஞர் : இநத் படத்துல வௌ்ளைக்காரன்கிட்ட இனாம் அது ரொம்ப முக்கியமுன்னு சொல்லுவீங்களே அந்தக் காட்சியில நடிப்பும் முகபாவனையும் ரொம்ப அருமை.

வடிவேலு : பல்வேறு பணிகளுக்கு இடையிலும் என்னுடைய படங்களையெல்லாம் பார்க்குற நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அய்யா.

கலைஞர் : என் காதுபட என்னைப் புகழாதீங்க தம்பி, கவியரங்கம் ஏற்பாடு செய்கிறேன். அங்க வந்து பேசுங்க. ஆஸ்தான கவிஞர்கள் பட்டியல்ல உங்களையும் சேர்த்துக்கிறேன்.

வடிவேலு : அய்யா இந்த முத்துக்குமார் அறிக்கையை பார்த்தீங்களா?

கலைஞர் : என்ன, சின்னப்புள்ளத்தனமா கேக்குற, அறிக்கையா தம்பி அது ! இல்லப்பா என்னைப் போன்றவர்களுக்கு வைத்த பெரிய ஆப்பு. நீங்க நடித்த வின்னர் படத்து கைப்புள்ள கதாபாத்திரத்தோடு என்னை கனக்கச்சிதமாப் ‘பொசுக்’குன்னுபொருத்திட்டானே.

வடிவேலு : ஆமாங்கய்யா. நீங்களும் அனைத்துக்கட்சி கூட்டம், சட்டமன்றத் தீர்மானம், பேரணி, மனித சங்கிலின்னு செய்றீங்க. ஒண்ணும் எடுபடலையே.

கலைஞர் : நல்லா கேட்கிறாங்க டீடெய்லு. இருப்பது ஒர் உயிர். அது போவது ஒருமுறை. அது தமிழுக்காக போகட்டுமுன்னு நான் ஆயிரத்து நானூறு முறை சொல்லியிருந்தேன்.

வடிவேலு : எத்தனைபேர் அடிச்சாலும் வலிக்காத மாதிரி நான் நடிப்பது போல நீங்களும் நல்லா சமாளிக்கிறீங்க அய்யா.

கலைஞர் : உண்மை தம்பி. அதுமட்டுமல்ல. கைப்புள்ள நீங்க அடிபட்டு சட்டைகிழிஞ்சு நடக்க முடியாம பாலத்துல உட்கார்ந்து இருப்பீங்க. அந்த வழியா நடந்துபோற ரெண்டு பேர் உங்களப் பார்த்துச் சொல்லுவாங்க அடி கொடுத்த கைப்புள்ள நிலையே இப்படின்னா, “அடி வாங்குனவன் கதி என்னவாயிருக்குமோ?” அப்படின்னு சொல்லும்போது, “இன்னுமாடா நம்பள நம்புறாங்க”ன்னு நீங்க சொல்வது போலத்தான் என் நிலையும்.

வடிவேலு : எதிர்ப்புகளை எப்படி எதிர் கொள்றீங்க.

கலைஞர் : உடம்புல எங்க வேண்ணாலும் அடிச்சுக்குங்க. ஆனா ஃபேசுல மட்டும் அடிக்காதீங்க, பர்சனாலிட்டி முக்கியமுன்னு நீங்க சொல்லுவீங்க. அதுமாதிரி தான் நானும் என் குடும்ப உறுப்பினர்களை யாராவது குறை சொன்னா உடனே கவிதை எழுதிடுவேன். கண்டன அறிக்கை கொடுத்துடுவேன். “பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கு. பேஸ் மட்டம் வீக்கா இருக்குறதால வேகமா செயல்பட முடியல.” மருதமலை படத்துல போலீசுகாரர் உங்கள அடிச்சு கத்திக்குத்து கந்தன், பீடா ரவியெல்லாம் பெரிய ரவுடிகளா ஆனது போல பலர் என்னைப் பேசி பெரிய ஆளா வரப்பார்க்குறாங்க. போகட்டும் தம்பி, உங்களுக்கும் ஏதாவது ஒரு பட்டம் தரணும்னு ரொம்ப நாளா ஆசை.

வடிவேலு : (தனக்குள்) (பார்க்க வந்தது ஒரு குத்தமாடா) பட்டமெல்லாம் ஒண்ணும் வேண்டாங்கய்யா. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.

கலைஞர் : எதுக்குப்பா?

வடிவேலு : நான் 23-ம் புலிகேசி, தீப்பொறித் திருமுகம், கைப்புள்ளன்னு பல கதாபாத்திரங்கள்ள நடிச்சிருக்கேன். நீங்க என்னுடைய கதாபாத்திரங்களுக்கே உயிர் கொடுத்து வாழ்ந்துகிட்ருக்கீங்க. அதுக்காகத்தான்.

“என்னை வைச்சு காமெடி - கீமெடி பண்ணலயே” - என்றவாறு கலைஞர் முறைக்க வடிவேலு வேகமாக வெளியேறுகிறார்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com