Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூன் 2009

நேபாளத்தில் நிலைகுலையும் சனநாயகம் - இந்திய ஏகாதிபத்திய சதி
கி.வெங்கட்ராமன்

“போராட்டத்திற்கு அணியமாகுங்கள்” என்று நேபாள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நேபாள மாவோவியத் தலைவர் பிரச்சண்டா. அந்நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து 2009 மே 4-ஆம் நாள் பிரச்சண்டா விலகிவிட்டார். நேபாள அரசியல் மீண்டும் ஒரு நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. “வாய்ப்பிருந்தால் அமைதி வழி; தேவையெழுந்தால் ஆயுத வழி” என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட புதிய தமிழர் கண்ணோட்டம் 2008 சூன் இதழ் ஆசிரியவுரையை இப்போதைய நேபாள நிலைமைகள் நினைவூட்டுகின்றன.

நேபாளத்தின் இராணுவத் தலைமைத் தளபதி ருக்குமாங்கத கட்டுவால் மக்களாட்சிக்கு உட்பட மறுத்ததே இந்நெருக்கடிக்கு உடனடிக் காரணம் ஆகும். ஆயினும் தொடக்கத்திலிருந்தே நேபாள சனநாயகப் புரட்சியை சீர்குலைப்பதில் பல்வேறு சக்திகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

நேபாள மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் தலைமையில் 2006-ல் நடைபெற்ற ஏப்ரல் எழுச்சியின் வெப்பம் தாங்காமல் போராட்டத்தில் இணைந்து கொண்ட நேபாளி காங்கிரசுக் கட்சி எப்போதுமே அரண்மனையை அண்டிப்பிழைத்து வந்த அமைப்பாகும். நேபாளத்தில் இயங்கிவந்த ஐக்கிய மார்க்சிய-லெனினியக் கட்சியும் அரண்மனை அனுமதிக்கும் அளவுக்குப் புரட்சி பேசிய ‘வீரர்களைக்’ கொண்டது.

இதேபோல் இந்திய அரசு கடைசிவரை மன்னராட்சிக்கு முட்டுக்கொடுத்து வந்தது. மாவோயிஸ்டுகள் தலைமைக்கு வருவதை அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இவ்வளவு தடைகளுக்கு இடையேதான் நேபாளத்தில் சனநாயகப் புரட்சி முன்னேறியது. மக்கள் எழுச்சியின் தீவிரம் காரணமாக மன்னர் ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. நாடாளுமன்ற சனநாயக ஆட்சி நிறுவுவதற்கு ஏற்ற ‘ஒருங்கிணைந்த அமைதி ஒப்பந்தம்’ 2006 நவம்பரில் கையெழுத்தானது. இடைக்கால அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் 2008 ஏப்ரலில் தேர்தல் நடந்தது. அரசமைப்பு அவை உருவாக்கப்பட்டது. இந்திய அரசும், அமெரிக்காவும் கணித்ததற்கு மாறாக மாவோயிஸ்டுக் கட்சி இத்தேர்தலில் மக்களின் பேராதரவோடு 40மூ இடங்களைக் கைப்பற்றி முதற்பெரும் கட்சியாக வந்தது.

புஷ்பகமல் தகால் என்ற இயற்பெயர் கொண்ட தோழர் பிரச்சண்டா பிரதமர் ஆனார். அரசமைப்பு அவையே இந்த இடைக்காலத்திற்கு நேபாளத்தை ஆளும் நாடாளுமன்றமாகவும் செயல்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் புதிய அரசமைப்புச் சட்டத்தை அரசமைப்பு அவை முடிவு செய்யவேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத்தில் மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலைப்படை நேபாள அரசின் தேசிய இராணுவத்தில் இணைக்கப் படவேண்டும். மாவோயிஸ்டுகளுக்கும் பிற கட்சியினருக்குமிடையேயான ஒருங்கிணைந்த அமைதி ஒப்பந்தம் விதி 5.1.2. இதற்கான வழிமுறையைத் தெளிவாக வரையறுத்துள்ளது. மக்கள் விடுதலைப் படையில் உள்ள 28,000 போரில் 8000 பேரை தேசிய இராணுவத்தில் இணைத்து, மீதுமுள்ளோரை துணை இராணுவ அணிகளில் இணைக்கவும் பிரச்சண்டா இணைக்கம் தெரிவித்தார்.

இந்த இணைப்பு நடந்து முடிவதற்குள் புதிதாக இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது கூடாது. யாருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது. விரைவில் நேபாள இராணுவப் படையாட்களின் எண்ணிக்கைக் குறைக்கப்படவேண்டும். ஒப்பந்த விதி 5.1.2. இதனைத் தெளிவாக்குகிறது. ஆனால் இந்த ஒப்பந்த நிபந்தனையை மீறுவதிலேயே நேபாள இராணுவத் தலைமைத் தளபதி ருக்குமாங்கத கட்டுவால் குறியாக இருந்தார். நேபாள இராணுவத்தில் 2008 டிசம்பரில் 2000 பேரை புதிதாக நியமிக்க ஆள் சேர்ப்புக்கு ஆணையிட்டார். இது 5.1.2.-க்கு எதிரானது என பிரதமர் பிரச்சண்டா சுட்டிக்காட்டி, ஆள் சேர்ப்பை நிறுத்துமாறு ஆணையிட்டபிறகும் அதனை அவர் சட்டை செய்யவில்லை. அதுமட்டுமின்றி இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 கட்டளைத் தளபதிகளின் பணிகளை நீட்டித்து ருக்குமாங்கத கட்டுவால் ஆணையிட்டார்.

கடைசியில் நேபாள தேசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை கலந்துகொண்டுவந்த இராணுவத்தினர் இப்போது கலந்து கொள்ளமாட்டார்கள் என அறிவித்தார். இப்போட்டியில் இராணுவத்தினருக்கு இணையாக மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலைப் படையினரும் கலந்து கொள்ளுவர் என்பதே இவரது முடிவுக்குக் காரணம் இவையெல்லாம் ஒப்பந்த மீறல் மட்டுமின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சிக்கு இராணுவம் கட்டுப்பட வேண்டும் என்ற சனநாயக சட்ட நெறிக்கும் எதிரானது என எடுத்துக்காட்டி, தனது செயல்களுக்கு தலைமைத் தளபதி கட்டுவால் விளக்கம் அளிக்கவேண்டும் என குற்றக் குறிப்பாணை அனுப்பியது நேபாள அரசு.

தனது செயல்களுக்கு நியாயம் கற்பித்து பதிலறிக்கை அனுப்பினார் தளபதி கட்டுவால். அவரது அடாவடிக்கு நேபாளி காங்கிரசும், ஐக்கிய மார்க்சிய லெனினியக் கட்சியும் பக்கத் துணையாக நின்றன. தேர்தலில் மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத இந்திய வல்லரசு, இவ்வாட்சியை சீர்குலைப்பதில் முனைப்புக் காட்டியது. நேபாளத்தில் உள்ள மாதேசிகளின் தன்னாட்சிப் போராட்டத்தைத் தனது விாிவாதிக்க சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது. “இது நேபாளத்தின் உள்நாட்டுச் சிக்கல். இதில் எங்களுக்குத் தொடர்பில்லை” என்று பசப்பிக்கொண்டே இராணுவத் தளபதி கட்டுவாலின் அப்பட்டமான சட்டமீறலை இந்திய அரசு மறைமுகமாக ஆதரித்தது.

இச்சூழலில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டிய கடமை பிரதமர் பிரச்சண்டாவுக்கு ஏற்பட்டது. அமைச்சரவையைக் கூட்டி, அதில் விவாதித்தார். இந்திய அரசின் ஆலோசனைக்கு இணங்க, இந்த அமைச்சரவைக் கூட்டத்தை நேபாளி காங்கிரசும், ஐக்கிய மார்க்சிய லெனினிய கட்சியும் புறக்கணித்தன. ஆயினும் எஞ்சிய உறுப்பினர்களின் ஆதரவோடு, தளபதி கட்டுவாலை பதவிநீக்கம் செய்வது என பிரச்சண்டாவின் அமைச்சரவை முடிவு செய்தது. அதனடிப்படையில் ருக்குமாங்கத கட்டுவாலை தலைமைத் தளபதி பதவியிலிருந்து நீக்குவதாக பிரதமர் பிரச்சண்டா ஆணைப்பிறப்பித்தார்.

இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த ஆணையை ரத்து செய்து நேபாளக் குடியரசுத் தலைவர் ராம்பரன் யாதவ் மறு ஆணை பிறப்பித்தார். கட்டுவால் பதவியில் நீடிக்கிறார். சட்டப்படி அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர் குடியரசுத் தலைவர். அதுவும் நேபாளத்தில் மீறப்பட்டது. இந்த நிலையில்தான் மே 4- ஆம் நாள் நேபாளத்தின் பிரதமர் பதவியிலிருந்து மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சண்டா விலகினார்.

மாவோயிஸ்ட்டுகள் தவிர மீதமுள்ள 21 கட்சிகள் ஆதரவோடு ஐக்கிய மார்க்சிய லெனினியக் கட்சித் தலைவர் மாதவ் குமார் நேபாள் 25.5.2009 அன்று புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் நடக்கின்ற சனநாயகப் படுகொலையைப் பின்னிருந்து இந்திய வல்லாட்சியே இயக்குகிறது. இந்திய அரசு ஆதரிக்கிற இராணுவத் தளபதி ருக்குமாங்கத கட்டுவால் வெறும் தளபதி மட்டுமல்ல. நேபாளத்தில் அரசியாக இருந்த இராணி ரெத்தினா விருப்பத்திற்கிணங்க மன்னர் மகேந்திராவால் பி;ள்ளையாகத் தத்தெடுக்கப்பட்டவர். சனநாயகத்திற்கான மக்கள் எழுச்சி நடந்தபோது படைகளை ஏவி கொடிய அடக்குமுறை செய்தவர் அவர்.

“குழப்பமான சனநாயகத்தைவிட அறிவார்ந்த சர்வாதிகாரம் மேலானது; மக்களை அவர்களிடமிருந்தே பாதுகாக்கவேண்டியிருக்கிறது” என இதழ்களில் கட்டுரை எழுதியவர் கட்டுவால். அரசமைப்பு அவைக்கான தேர்தலைச் சீர்குலைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர் அவர். மன்னராட்சியை மீட்க நினைக்கும் இந்த கடைந்தெடுத்த பிற்போக்குவாதியைத்தான் நீக்கக் கூடாது என்று தனது நேபாள தூதர் ராகே‘; சூத் மூலம் பலமுறை வற்புறுத்தியது இந்திய அரசு. இந்திய அரசு தனது நிலைப்பாட்டிற்கு இரண்டு காரணங் களைக் கூறுகிறது.

ஒன்று: “பிரச்சண்டாவின் மாவோயிஸ்ட்டுக் கட்சி ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவவே விரும்புகிறது. அதற்கேற்ப இராணுவத்தை கைப்பற்ற பிரச்சண்டா சதி செய்துகொண்டிருக்கிறார். மாவோயிஸ்ட்டுகளின் மேலாண்மை நேபாளத்தில் நிறுவப்பட்டால் அது இப்பிரதேசத்தில் நிலையற்ற தன்மையை உண்டாக்கிவிடும்”. இரண்டு : “மாவோயிஸ்ட்டுகளுக்குப் பின்பலமாக சீனா இருக்கிறது. அது இந்திய நலனுக்கு எதிரானது” இலங்கையில் தனது தலையீட்டுக்கு எதனைக் காரணமாகக் கூறியதோ அதைப்போன்ற ஒன்றைத்தான் நேபாள சிக்கலிலும் இந்திய அரசு முன் வைக்கின்றது. ஆனால் இந்திய வல்லாட்சியின் உண்மையான நோக்கம் தெற்காசியாவில் சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டு தனது மேலாதிக் கத்தை நிறுவுவதுதான். மன்னர் ஆட்சி நேபாளத்தில் நீடித்தவரை அது இந்துமத ஆட்சி என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது பார்ப்பன மேலாதிக்கத்தை சட்டப்படி ஏற்றுக்கொண்ட ஆட்சி மாவோயிஸ்டுகள் தலைமையேற்ற பிறகு நேபாளம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டு விட்டது. பார்ப்பனிய - இந்தியத் தேசியத்திற்கு இது உவப்பாக இல்லை. மாவோயிஸ்டுகள்தலைமையில் இருக்கும்வரை இந்தியாவில் உள்ளதுபோல் மதசார்பின்மை பேசிக்கொண்டு பார்ப்பனிய மேலாண்மையை நேபாளத்தில் நிறுவுவதும் சாத்தியமில்லை.

எனவேதான், நேபாளத்தில் ஏப்ரல் எழுச்சியைத் தொடர்ந்து நடைப்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் “மன்னராட்சியும் இருக்கட்டும்; வரம்புக்குட்பட்ட நாடாளுமன்ற சனநாயகமும் இருக்கட்டும்’ என்ற “இரு தூண் கொள்கையை” கடைசிவரை வலியுறுத்தியது இந்திய அரசு. அதற்காக ஒருபக்கம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியையும். மறுபக்கம் காசுமீாின் மன்னர் மரபைச் சேர்ந்த டாக்டர் கரன்சிங்கையும் நேபாளத்திற்கு அனுப்பி வைத்தது. மாவோயிஸ்ட்டுக்களின் கொள்கை உறுதியும், மக்களின் போராட்ட எழுச்சியும் இந்தியாவின் இச்சதித் திட்டத்தை முறியடித்தன. தொடர்ந்து நடந்த அரசமைப்பு அவைத் தேர்தலில் “நேபாளிக் காங்கிரசு வெற்றியடைவதையும், அதன் தலைவர் சி.பி. கொய்ராலா பிரதமராவதையும் நாங்கள் விரும்புகிறோம்” என இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் வெளிப்படையாக அறிவித்தார்.

இந்திய உளவு அமைப்பு “ரா” மூலம் இதற்கேற்ப அனைத்து சதி வேலைகளையும் இந்திய அரசு செய்தது. ஆயினும் அத்தேர்தலில் 40மூ வாக்குகளைப் பெற்று நேபாள மாவோயிஸ்ட்டுக்கட்சி முதற்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. நேபாள மக்களின் இந்த முடிவு இந்திய ஏகாதிபத்தியக் கனவுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது. அதனால் அங்கு அரசமைப்புச் சட்டம் உருவாவதையும், சனநாயகம் நிலை கொள்வதையும் முடிந்தவரை சீர்குலைத்து வருகிறது இந்திய அரசு.

புரட்சி நடக்கும்போது பாராமுகமாக இருந்த சீன ஆட்சி, பிரச்சண்டா தலைமையில் நேபாளத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக நேபாள விவகாரத்தில் தலையிட தொடங்கியது. செங்கொடியைப் பிடித்துக்கொண்டிருக்கிற சீன ஆட்சியாளர்களுக்கும், தெற்காசிய மேலாதிக்க கனவுதான் மேலோங்கி இருக்கிறது.

சீனா கால் ஊன்றிவிடும் என சாக்குச்சொல்லியே இந்தியா எந்த சர்வதேச சட்டங்களையும், அறநெறிகளையும் பற்றி கவலைப்படாமல் நேபாளத்தில் தலையிட்டு வருகிறது. “அசாதாரண சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அசாதாரண எதிர்வினை” என்று இதற்கு நியாயம் சொல்கிறது.

அரசமைப்பு அவையில் மாவோயிஸ்ட்டுக் கட்சியின் ஆதரவில்லாமல் எந்த முன்மொழிவுக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது. அவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அரசமைப்புச் சட்டம் உருவாக முடியாது. இது தெளிவாக தெரிந்திருந்தும் அரசமைப்பு அவையிலிருந்து மாவோயிஸ்ட்டுகளை வெளியே வைப்பதற்கு இந்திய அரசு அனைத்து சதிச் செயல்களையும் செய்கிறது. சனநாயகம் நிலைக்கொள்வதை சீர்குலைத்து அதன் மூலம் தனது இரு தூண் கொள்கையை மீண்டும் புகுத்தி நேபாளத்தை தனது சிறப்பு மாநிலம் போல நடத்துவதே இந்திய ஆட்சியாளர்களின் உள்நோக்கம் ஆகும்.

வங்காள தேசத்திலும், மாலத் தீவிலும், இலங்கையிலும் செய்வதைப்போலவே, நேபாளத்திலும் தனது ஆரிய மேலாதிக்க நோக்கத்திற்காக இந்திய அரசு நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. இதன் போக்கில் அந்நாடுகளில் நிலவும் அரைகுறை சனநாயகம் சீர்குலைந்து இராணுவ மேலாண்மை தலை தூக்கினாலும் இந்தியாவுக்கு தயக்கமில்லை. ஆனால் மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் நேபாள மக்கள் மீண்டும் போராட்டப் பாதைக்கு திரும்பும் போது இந்திய ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க சதி நொறுங்கிப்போகும் என்பது திண்ணம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com