Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூன் 2009

அரசியலில் நட்பும் பகையும்
முனைவர் து.மூர்த்தி

(அலிகர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக உள்ள முனைவர் து.மூர்த்தி அவர்களின் “1989 அரசியல் சமுதாய நிகழ்வுகள்” என்ற நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும் இந்நூல். சிறந்த கட்டுரைகள் பல இத்தொகுப்பில் இருக்கின்றன. அவற்றுள் காலப்பொருத்தம் கருதி கீழ்வரும் கட்டுரையை வெளியிட்டுள்ளோம். “அரசியலில் நட்பும் பகையும்: தத்துவ மோசடியும் மக்கள் தத்துவமும்” என்ற தலைப்பில் இக்கட்டுரை அந்நூலில் இடம் பெற்றுள்ளது. நூலின் பக்கங்கள் 592. விலை ரூ. 350.00. கிடைக்குமிடம் : விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளிப்பாளையம்(வடக்கு), கோயம்புத்தூர் - 641015.)

நாலாந்தரமான பற்பொடியைத் தனது நாவன்மையால் நல்ல இலாபத்திற்கு விற்றுப் பிழைக்கும் நடைபாதை – முச்சந்தி வியாபாரிகளுக்கும் திராவிட அரசியலாளர்க்கும் வேறுபாடு இல்லாமல் போயிற்று! மனிதர்களின் பலவீனங்களை, கூச்சத்தை, அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, பாலியல் நோய்களுக்கு மருந்து விற்கும் பரதேசி மருத்துவனைப் போல, இன்றைய அரசியலில் கொள்ளைக் கும்பல்கள் ‘கொள்கை முழக்கங்களோடு’ வெளிவருகின்றன. “கர்ப்பக் கிருக” அர்ச்சனைகளைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பாதித் தேங்காய் மூடியையும் பணத்தையும் பறிகொடுத்துவிட்டு வரும் அப்பாவி மக்களைப் போல, இன்றைய தமிழ் மக்கள், திரைப்பாடல்கள், தெருச்சுவரொட்டிகள், ‘வாழ்க! வருக!’ வரவேற்புகள் ஆகியவற்றில் புதைந்து சுயமரியாதையையும் அடிப்படை வாழ்வுரிமையையும் இழந்து வருகிறார்கள்.

நம்பிய தலைமைகள் யாவும் ‘சாராய – சங்கர மட’ நட்டாற்றில் கைவிட்டுவிட்ட பின்னால் மக்களின் நாட்டம் நச்சுப் பண்பாடுகளில் மூழ்கிவிட்டது. “அடைந்தால் திராவிட நாடு, அடையாவிட்டால் சுடுகாடு”; “ஒன்றே குலம், ஒருவனே தேவன்”. “பார்ப்பனியம் ஒழிக!”; “மாநில சுயாட்சி”; “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” – என இப்படிப்பட்ட ஒவ்வொரு முழக்கத்தின் பின்னாலும் ஓடிய தமிழ் மக்களின் முதுகுகளை எதிரிகள் உடைக்கவில்லை, இப்படி முழங்கியவர்களே உடைத்து நொறுக்கினார்கள்.

திராவிட அரசியலாளர் முன்வைத்த மோசடித் தத்துவங்களில், ‘மூளையை நிரந்தரமாக மழுங்கடிக்கும்’ தத்துவம் ஒன்று உண்டு. அது என்ன: “அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை!”. மோகனமான இந்தச் சொற்சேர்க்கைக்குப் பின்னால் - முழக்கத்திற்கு உள்ளே மறைந்திருக்கும் மோசமான அரசியலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்வியல் அறங்கள் அல்லது விழுமியங்கள்(ஏயடரநள) எவ்வாறு நம்மைப் படுகுழியில் தள்ளினவோ அவ்வாறே நமது அரசியல் முழக்கங்களும் சிந்தனை முறைகளும் நம் கண் முன்னாலேயே துரோகிகளுக்குக் தலைமை அளிக்கின்றன. “ஒவ்வொரு அரசியல் போராட்டமும் ஓரு வர்க்கப்போராட்டமாகும்” என்கிறது மார்க்சியம்.

எனவே ஒவ்வொரு அரசியல் போராட்டத்திலும் முன்வைக்கப்படும் முழக்கங்களில் வர்க்கங்களின் நலன்கள் வெளிப்படையாய் அமைகின்றன. ‘என் சொந்தச் சுகங்களுக்காக எவ்வளவுக் கேவலமான சமரசத்தையும் நான் செய்து கொள்வேன்’ என்ற அரசியல்வாதியின் கபட முகம் “அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை” என்ற கோட்பாட்டிற்குள் ஒளிந்து கொண்டிருப்பது வெளிப்படை. இந்தக் கோட்பாட்டை நன்கு விளங்கிக் கொள்வதற்கு முன்பு, இந்தக் கோட்பாட்டின் தனிவாழ்க்கைப் பிரதிபலிப்பாகிய “எல்லோர்க்கும் நல்லவனாக இருத்தல்” என்ற இன்னொரு கோட்பாட்டையும் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

I

‘மனிதன் பொய் பேசக்கூடாது, திருடக்கூடாது’ முதலிய நல்லொழுக்கங்களைப் புரிந்து கொள்வதில் எந்த இடரும் ஏற்படவில்லை. ஆனால் ‘எல்லோர்க்கும் நல்லவனாக இருக்க வேண்டும்’ என்ற ஒழுங்கு, சமுதாய வளர்ச்சியில் எத்தகைய மக்களின் குரல் என்பதில் சிக்கல்கள் தோன்றுகின்றன. இன்றைய சமுதாயம் தனிமனிதன், குடும்பம், குழு, நிறுவனம், கருத்தியல், சாதி, வர்க்கம், எனப் பலவாறாகப் பிரிந்திருக்கிறது.

இதில் ஒவ்வொரு மனிதனின் பாத்திரமும் பிற மனிதனின் இயக்கத்தோடு சேர்த்துப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. மனிதனின் நியாயங்கள் என்பன அந்தரத்தில் தொங்காமல், இந்தச் சமுதாயத்திலும் சக மனிதனிலும் வேர்விட்டிருக்கின்றன. எனவே ஒரு மனிதனால் எப்படி எல்லோர்க்கும் நல்லவனாக இருக்க முடியும்? எல்லோர்க்கும் நல்லவர் மனிதன் கண்டிப்பாக யாருக்கேனும் தீயவனாக இருந்துதான் ஆகவேண்டும் என்று இதனைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ‘மனிதன் பிறர்க்குத் தீங்கு செய்யக்கூடாது, கூடிய மட்டும் நன்மையே செய்ய வேண்டும்’ முதலிய பண்புகளுக்கும் ‘எல்லோர்க்கும் நல்லவனாக இருத்தல்’ என்பதற்கும் பெரிய இடைவெளி இருக்கின்றது.

ஒரு நிறுவனத்தில் பலர் பணியாற்றுகின்றனர். நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் எல்லோர்க்கும் நல்லவர்களாக இருக்கிறார்கள். அதாவது கெட்டவர்களுக்கும் தீயவர்களுக்கும் நல்லவர்களாககூட இருக்கிறார்கள். இதுதான் எல்லோர்க்கும் நல்லவர்களாக இருத்தலின் சூட்சமம் ஆகும்! ஆனால் ஆர அமர எண்ணிப் பார்த்தால், வெகுமக்கள் புரட்சியை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டுள்ள நிலையில், கெட்டவர்களைவிட, ‘எல்லோர்க்கும் நல்லர்’ என்ற நச்சரவினரே, புரட்சிக்கு அதிகத் தீங்கு விளைவிக்கக்கூடியவராக இருப்பர்.

கலப்படக்காரனிடமும் கையூட்டு வாங்கிக் கொண்டு, மேலதிகாரியிடமும் காட்டிக் கொடுத்துவிடும் வஞ்சக அதிகாரியின் முகம் நினைவுக்கு வருகிறதல்லவா? நியாயங்களுக்காகப் போராடு கின்றவர்கள், தனக்குச் சொந்தப் பாதிப்பு இல்லையென்றாலும்கூடத் தனது சக மனிதனின் பாதிப்பிற்காகக் குரல் கொடுப்பவர்கள், தாங்கள் இருக்கும் நிறுவனங்களின் தீமைகளோடு சமரசமாகிப் போகாதவர்கள், சொந்த இலாபங்களுக்காகப் பொது நியாயங்களை அடகு வைக்காதவர்கள் பொதுவாகப் பலர்க்கும் கெட்டவர்களாகி விடுகிறார்கள். இவர்களால் எல்லோர்க்கும் நல்லவர்களாக வாழ முடிவதில்லை. இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இவர்கள் பலராலும் பகைக்கப்படுவர்.

இவர்களின் இருத்தலே கூட பலர்க்கும் தீங்காக அமைந்துவிடும். எனவே இவர்களால் ஒரு போதும் எல்லோர்க்கும் நல்லவராக வாழவே முடியாது. வேறு சிலர் தீயவர் பட்டியலில் நேரடியாக இருக்க மாட்டார்கள். யாருக்கும் தீமையும் செய்ய மாட்டார்கள்,அதே சமயம் தீமையை எதிர்க்கவும் மாட்டார்கள்; ‘தானுண்டு, தன் வேலை உண்டு’ என்றிருப்பார்கள். தன் வீட்டில் திருடுபோகும்போது மட்டுமே, “திருடன், திருடன்” என்று கதறுவார்கள். இந்தச் சமயம் எல்லோரும் வந்து இவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் பக்கத்து வீட்டில், தெருவில், வேலை செய்யும் இடத்தில், சமுதாயத்தில், நாட்டில் என்ன கொடுமை எங்கே எப்படி நடந்தாலும் பெருமூச்சைக் கூட அமுக்கி அமுக்கி விடுவார்கள். காரணம், இவர்கள் எல்லோர்க்கும் நல்லவராயிற்றே!

அப்படிப் பெயர் எடுப்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவராயிற்றே! ஆனால் இப்பண்பு, மானிடச் சமுதாயத்தின் வளர்ச்சிகளை “வளர வேண்டிய இளம் தலைமுறையை எந்த அளவிற்கு ஊனப்படுத்துகிறது என்பது தான் வினா! வேதனை! தனி மனிதர்களின் அனுபவங்கள் குறையுடையவையாக இருக்கலாம்! ஆனால் வரலாற்றின் அனுபவம் பழுத்த ஒன்றாகும். இதிலிருந்து “வரலாற்றிலிருந்து“ பெறப்படும் அனுபவங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, ‘எல்லோர்க்கும் நல்லவனாக இருத்தல்’ என்ற தத்துவத்தின் உட்கிடக்கைகளை நன்கு பிரித்தறிய முடியும்.

அவை என்னென்ன: 1) தனிமனிதர்களுக்கு மட்டும் கட்டுப்பட்டிருத்தல். நிறுவனங்களுக்கோ, கருத்தியலுக்கோ, பொது நியாயங்களுக்கோ நேர்மையாய் இல்லாதிருத்தல் (டழலயட வழ iனெiஎனைரயடள் டழலயட ழெவ வழ வாந iளெவவைரவழைளெ யனெ னைநழடழபல் ரதெரளவ வழ யெவரசயட தரளவiஉந)இ 2) தங்கள் இயலாமைகளைப் பொது நியாயப்படுத்தும் பண்பு, 3) தீமைக்கு எதிராகப் போராடும் நியாயவான்களின் அங்கீகாரத்திற்காகவும் ஏங்கும் உணர்ச்சியும் கபட நடிப்பும், 4) தனது சுயநலமும் இயலாமையும் வெளியே தெரிந்துவிடாதபடிக்குப் புதிய தலைமுறையைத் திசை திருப்பல் அல்லது தவறாக வழிகாட்டல், 5) முறையற்ற வழிகளில் தனக்குக் கிடைத்த பதவிகளை – சுகங்களை நியாயப்படுத்த, காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் இழிமனம்! - இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த முழக்கம்தான் ‘எல்லோர்க்கும் நல்லவனாக இருத்தல்’ என்ற தத்துவம் ஆகும்.

பாசிச அமைப்பு

இன்றைய இந்தியச் சமுதாய ஆட்சி அமைப்பு, வெளிப்படையான பாசிச ஒடுக்குமுறை அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது. தாவது அனுமதிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டு, அடிமை வாழ்வு நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எல்லோர்க்கும் நல்லவனாக இருக்கும் தத்துவம் எவ்வளவுத் தீமை பயக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தனது மக்களுள் பெண்களை, முதியோர்களை, குழந்தைகளை எப்படி நடத்துகின்றது என்பதிலிருந்து அது ஆரோக்கியமான சமுதாயமா இல்லையா என்று கண்டுபிடித்துவிட முடியும்.

மத்தியதர வர்க்கத்தில் இருந்து தோன்றும் கல்வியாளர்கள், அறிவாளிகள், ஒழுக்க சீலர்கள், உபதேசிகள் மற்றும் இன்ன பிறர் தங்கள் அறிவுக்கும் வாய்க்கும் தாங்களே “லாடம்” அடித்துக் கொண்டு “தாம் மட்டும் இன்புற்றிருக்கச் செயல்படுவதல்லாமல் வேறொன்றும் யாமறியோம் ஆட்சியாளரே” என்று புன்னகைக்கிறார்கள். இவர்கள் புன்னகையின் அனல் இளைஞர்களின் இரத்தத்தைச் சுண்டச் செய்கிறது. இந்த இளைஞர்களும் மதிமயங்கி, “அவரு தப்புத் தண்டாவிற்குப் போகமாட்டாரப்பா! எல்லோர்க்கும் நல்லவர்’பா” எனப் பிதற்றுகிறார்கள். தப்புத்தண்டாவிற்குப் போக வேண்டாம்; நல்லதற்குப் போராட வேண்டும், அவ்வளவுதான்! நல்லனவற்றிற்காகப் போராட வேண்டும் என்றால், தீயனவற்றிற்கும் தீயவர்க்கும் கொடுங்கோல் அமைப்புக்கும் கெட்டவனாக ஆகித்தான் தீரவேண்டும். ஒரு மனிதன் ஈ எறும்புக்குக் கூட ஊறு செய்யாதவனாக வாழ்தல் வேறு! ஒரு போலீஸ்காரன் திருடனுக்குக் கெட்டவனாக ஆகித்தான் தீரவேண்டும் என்பது வேறு. ‘ஈ’க்கு வேண்டுமானால் மலரும் மலரும் ஒன்றாகலாம்; சுயமரியாதை உள்ள மனிதனுக்குச் சங்கராச்சாரியும் அம்பேட்கரும் ஒன்றாகிவிடமுடியாது!

II

இனி நாம் இக்கட்டுரையின் தொடக்கமான, “அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை” என்ற விவாதத்திற்கு வருவோம். ‘நல்லவனாக இருத்தல்’ விவரத்தைப் பிழையற, பிசகின்றிப் புரிந்து கொண்டவர்களுக்கு, இந்தத் தத்துவமும் எளிதாகப் புரிந்துவிடும். ‘எந்தவொரு தனிமனிதனும் பிற எந்தவொரு தனிமனிதனுக்கும் அடிப்படையில் பகைவனில்லை’ என்ற பொதுவான கருத்தை, மேலோட்டமாகப் புரிந்து கொண்டு ‘அரசியலில் பகை – நட்பு’ என்பதுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. அரசியல் என்பது தனிமனிதன் ‘புண்ணியவான்’ ஆவதற்கு மார்க்கம் கூறும் சாமியார் மடம் அன்று; ஒரு சமுதாயம் தன் வர்க்கப் பகைமைகளை வென்று, தன் அரசை நிறுவுவதற்கு வழி வகுத்துக் கொடுக்கும் தத்துவம் மற்றும் நடைமுறையாகும். அதில் நட்பு – நட்புச் சக்திகள் வேண்டுமானால் தொடராமல் போகலாம்;

ஆனால் பகைச்சக்திகள் - பகைவர்கள் நிரந்தரமாக உண்டு. இதைத் தெளிவாக விளங்கிக் கொள்வோம். நட்பு;பும் பகையும் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர்களாக விளங்கிய டிராட்ஸ்கி, டாங்கே முதலியோர் தங்கள் வாழ்நாளின் இறுதியில் கட்சியைச் சீர்குலைப்பவர்களாகவும், புரட்சியின் துரோகிகளாகவும் மாறிப்போனார்கள். திராவிடர் இயக்கத் துப்பாக்கியின் இன்னொரு குழல் என்று பிரிந்து சென்ற அண்ணாத்துரை முதல் இன்றைய கால் நக்கித் தொண்டரடிப் பொடிகள் வரை, பெரியாரிசத்தின் பகைவர்களாகிப் போனவர்களே ஆவர்! இதன் பொருள் தான் என்ன? எந்தவொரு தத்துவத்திற்கும் அல்லது அரசியலுக்கும் நிரந்தரமான நண்பர்கள் - விசுவாசிகள் இல்லை என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது.

கம்யூனிசத்தின் - புரட்சியின் ஒரு காலத்துத் தோழர்கள் பகை முகாமுக்கு மாறிப்போனார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். புரட்சி முகாம் இருக்கிறது – பகை முகாமும் இருக்கிறது. நட்புச் சக்திகள் பகைமுகாமிற்குள் சென்றுவிட்டன! இந்திய மக்கள் புரட்சி என்பது தொடர்ந்து செல்வது. இதன் நிரந்தரமான பகை முகாமிற்குள் ஒரு காலத்துக்குப் புரட்சியாளர்களும் உள்ளனர். அவ்வளவுதான்! எனவே புரட்சிச் சக்திக்கு நட்பும் பகையும் கிடையாது என்ற தவறாக முடிவுக்கு வரக்கூடாது. இந்தியப் பாராளுமன்றக் கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் அடிக்கடிக் குலாவிக் கொள்வதை வைத்துக் கொண்டு, ‘நட்பு-பகை’யைத் தீர்மானிக்கக்கூடாது. அரசியல் சிக்கல் குறிப்பிட்ட வடிவம் எடுக்கும்போது, புரட்சியின் நண்பர்களாக நடித்தவர்களின் தோலுரிந்து, உண்மை முகம் வெளிப்பட்டுவிடுகிறது.

இப்படிப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் ‘அரசியலில் நிரந்தர நட்பும் பகையும் கிடையாது’ என்ற தத்துவத்தால், தொழிலாளர்களின் சந்தாக்களாலும், முதலாளிகளின் இலஞ்சத்தாலும் கொழுத்துப் புழுத்துத் துரோகிகள் ஆயினர்; தொழிற்சங்கத்தைப் புரட்சியின் ‘நாற்றுப் பாத்தி’ ஆக்காமல், வாக்குச் சீட்டு வியாபாரத்தின் ‘ஏஜென்சி’ ஆக்கினார்கள். இதனால் புரட்சிக்குத் துரோகமிழைக்கப்பட்டது என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர, புரட்சி – பகை முகாம்கள் பாலம் கட்டிக் கொண்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது. இவர்கள் அரசியலில் நிரந்தரப் பகையுண்டு வர்க்கப் பகையுண்டு என்ற முடிவுக்கு வந்திருப்பார்களேயானால், பம்பாயின் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் புரட்சிகர அரசியலால் அணிதிரட்டப்பட்டு, ஆயத்தப்
படுத்தப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு நிரந்தரப் பகைவர்களான சிவசேனா, பி.ஜே.பி., வி.எச்.பி., கும்பலின் முதுகெலும்பை உடைத்திருப்பார்கள்.

ஆதி சூத்திரர்களாலும் சூத்திரர்களாலும் மாபெரும் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள் - கறைவேட்டித் துண்டர்கள் - சங்கர மடத்தோடு சமரசமாகி விடுவதாலேயே வர்க்க அரசியலில் நிரந்தரப் பகை இல்லை என்று அர்த்தமாகாது. ஆதனூரில் நந்தனுக்குச் சங்கராச்சாரி கோயில் எழுப்பலாம்; ஆனால் காஞ்சி மடத்தின் தலைமைப் பீடத்தில் ஆதி சூத்திரன் அமரவே முடியாது. ‘ஸ்ரீ ரங்கமும், தில்லையும், காஞ்சியும் எமக்கே சொந்தம்’ என்று உழைக்கும் மக்கள் உள்ளே புகுந்து சனாதனத்தின் வேரை அறுக்கும் போது, ‘இந்தா உனக்கும் ஒரு கோயில்’ என்று சங்கர மடம் திசை திருப்பியது. எனவே அரசியிலில் நிரந்தரப் பகைவர்களும் நட்புச் சக்தியும் உண்டு என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும். மக்கள் புரட்சி மக்களும் மக்களின் எதிரிகளும் இரண்டு முகாம்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். (இப்பிரிவினை அவ்வளவு எளிதாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை). இந்த இரண்டு முகாம்களுக்கான இறுதிச் சண்டை இன்னும் தொடங்கப்படவில்லை.

மக்களின் எதிரி முகாமிற்குள் பல குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்கள், மக்களை அடக்கியாள்வதற்கான முழு உரிமை ‘உனக்கா? எனக்கா?’ எனக்குடுமிபிடிச் சண்டை போட்டுக் கொள்கின்றன. இந்தச் சண்டையின் உச்சக்கட்டம்தான் பொதுத் தேர்தல் ஆகும். அவ்வாறு மக்களை ஒடுக்கும் முழு உரிமையைத் தங்கள் ஒரு குழுவால் மட்டுமே பெறமுடியாதபோது – பெறமுடியாத சூழல் ஏற்படும் போது ‘அரசியலில் நிரந்தரமான நட்பும் இல்லை, பகையும் இல்லை’ என்று யாரோடு வேண்டுமனாலும் கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள். மொத்தத்தில் இந்தத் தத்துவம், மக்களின் எதிரிகள் தங்கள் கொள்ளையடிக்கும் உரிமைக்காக மக்கள் முன்னால் போட்டுக் கொள்ளும் புதிய புதிய முகமூடிகள் ஆகும். இந்தப் புதிய முகமூடிகள் அணிந்தோர், வேறொரு கறாரான உண்மையை மறைக்கப் படாதபாடு படுகிறார்கள். அது என்ன: யாராலும் தவிர்க்கவியலாத மக்கள் புரட்சி! கல்வியின்மை, வேலை யின்மை, அறியாமை, நோய், வறுமை, பசி முதலிய சமூக வன்முறைகளால் (ளுழஉழை-எழைடநnஉந) சிதறுண்ட மக்கள் இனியும் இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாது என அவ்வப்போது திரண்டெழுகிறார்கள். கலகங்களும் போராட்டங்களும் புரட்சிகளும் வேர் கொள்கின்றன. இவை ஏதேனும் புரட்சிகர இயக்கத்தின் தலைமையில் பூகம்பமாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில், குழுக்களாகப் பிளவுபட்டுள்ள எதிரிகள், ‘புதிய முகமூடிகளோடு’ மக்களுக்கு நன்மை செய்யவே இந்தக்கூட்டு எனப் பொய்யுரைக்கின்றனர். உண்மையில், மக்களின் எதிரி முகாம்கள் கலகலத்துப் போயுள்ளன என்பதன் வெளிப்பாடே இத்தத்துவம் ஆகும்.

எனவே, “அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நண்பர்களும் இல்லை” என்ற இக்கூப்பாடு அடிப்படையில், சந்தர்ப்பவாதக் கொள்ளைக் கூட்டம் மக்களின் ஆட்சி அங்கீகாரப் புதுப்பித்தலுக்காக முன்வைக்கும் அத்தர் தடவிய பல கயிறுகளைக் கொண்ட சாட்டையாகும்! இது அவர்களின் உயிர் வாழ்தலுக்குத் தேவையான அரசியல் நடவடிக்கை என்பதில் குழப்பம் வேண்டாம். இத்தத்துவத்தின் கொடுமையான உள்நோக்கம் மற்றும் விளைவு என்னவென்றால், மக்கள் தங்கள் எதிரிகளுக்கு எதிராக ஒரு வர்க்கமாகப் புரட்சியணியில் எப்போதும் ஒன்று திரளாமல் கவனமாகப் பார்த்துக் கொள்வதாகும்.

III

இப்போது “எல்லோர்க்கும் நல்லவனாக இருத்தல்” என்பதையும் “அரசியலில் நிரந்தரமான பகையுமில்லை, நட்புமில்லை” என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். முதலாவது தத்துவம் மனிதனைத் தனிமனிதன் என்ற நிலையில் சமரசவாதி (தப்பித்தல்-திசைதிருப்புதல் அநீதிகளுக்கு மறைமுகமாகத் துணை போதல்) ஆக்குகின்றது. இரண்டாவது தத்துவம், மக்களை நியாயத்திற்கான நிறுவனமாகிச் சமரசமற்றுப் போராட முடியாதபடி மாற்றுகின்றது. இரண்டுமே அடிப்படையில் மக்களின் எதிரிவர்க்க முழக்கங்களாகும். இவை சமூகம் என்ற கூட்டுச் சிந்தனையில் இருந்து, மனிதனைத் தனிமைப்படுத்திச் செயலற்றவனாக்குதல் ஆகும்!

மேற்கண்ட விவாதத்தின் அடிப்படையில், மக்களுக்கான எழுச்சி முழக்கங்களின் பொதுத்தன்மை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு விடை கூற முயலுவோம். என் அறிவில் பட்டவை: 1. நியாயங்களுக்காகப் போராடுபவனே நல்லவனாக இருக்க முடியும்; அவனால்தான் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும்! 2. சமரசமற்ற வர்க்கப் போராட்டத்தில் நண்பர்கள் இடம் மாறலாம்; பகைமையின் தன்மை தொடர்கிறது! 3. எல்லா அடிமைத் தனங்களில் இருந்தும் அனைத்து மக்களையும் விடுதலை செய்வோம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com