Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூன் 2009

ஈழம்: தமிழகக் கட்சிகளின் பார்வைக் குறைவும் நேர்மைக் குறையும்
முனைவர் த.செயராமன்

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் ஒரு பெரும் பின்னடவை அடைந்து விட்ட காலக்கட்டம் இது. மே மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலான காலப் பகுதியில், விடுதலைப்புலிகள் களத்தில் பின்னடைவுகளைச் சந்தித்தார்கள்.

இலங்கைப் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதான வரைமுறையற்ற சிங்களப் படைத்தாக்குதலில் பல ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்தனர். காயம்பட்டு மருத்துவ உதவியின்றி இறந்தவர்கள் மட்டும் இருபத்தையாயிரம் தமிழர்கள். ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய விடுதலைப்புலிகளைப் பற்றிய அச்சம் சிங்கள இனவெறியர்களுக்கு நீங்கிய அடுத்த கணமே, நாட்டின் பல பகுதிகளிலும் சிங்கள அடாவடித்தனப் போக்கு வெளிப்படத் தொடங்கியது. எதிர்காலம் பற்றிய அச்சத்தில் தமிழர்கள் உறைந்து போயிருக்கிறார்கள்.

கொடூர இனப்படுகொலையை நிகழ்த்தியிருக்கும் சிங்கள அரசுக்கு பெருமளவில் போர்ப்படைத் தளவாடங்களையும், இராணுவ உதவியையும், இராணுவ உளவு உதவியையும், ஆயிரக்கணக்கான கோடிகள் கடனுதவியையும் அளித்து, இலங்கையின் இனப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்த இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பன்னாட்டு செயல்பாட்டுத் தளத்திலும் இலங்கையின் இனவாத அரசைக் காப்பாற்ற முனைந்து நிற்கின்றன. தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடித் தமிழர்களின் தொடர்ந்த பன்முகப் போராட்டங்கள் இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டையும், இராணுவ, நிதி உதவிகளையும் தடுத்து நிறுத்திவிடவில்லை. தமிழகத் தமிழர்களையோ, இங்குள்ள தலைவர்களையோ, நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களையோ ஒரு பொருட்டாகவே இந்திய அரசு கருதவில்லை.

அதன் உச்சகட்டமாக, தற்போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் தேவையற்றது என்றும், இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு என்றும் கூறியதுடன் ‘ஒரு பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்பினால் நடத்தப்பட்டு வந்த துன்பமான நீண்டகால மோதலுக்கு இப்போது தான் இலங்கை முடிவு கண்டிருக்கிறது’ என்றும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு நியாயம் கற்பித்தும் இந்தியாவின் பேராளர் கோபிநாதன் அச்சம் குளங்கரே பேசியிருக்கிறார். (தமிழ் ஓசை, 28.05.09) இவர் ஒரு மலையாளி!.

ஈழத்தமிழர்களைத் தான் காப்பாற்றாவிட்டாலும், ஏனைய நாடுகளாவது காப்பாற்றி விட்டுப் போகட்டும் என்று விடக்கூட இந்திய அரசு தயாரில்லை. இலங்கையில் மனித உரிமை மீறலை விசாரிக்கக் கூடக் கூடாது என்று இந்தியா கூறுகிறது. மனித உரிமை மீறல் பற்றிய விசாரணையை நடத்தினால் யாருடைய குடி மூழ்கிவிடும்? இந்தச் சூழலில், தமிழக மக்கள் தமிழக அரசியல் கட்சிகளின் போக்கையும், புரிதலையும் ஒரு மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும். பேரவலத்திற்கு ஆட்பட்டுப்போன ஈழமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இவர்கள் என்ன கூறுகிறார்கள்?

தமிழகக் கட்சிகளில் தமிழர் நலம் பேசாத கட்சிகள் இல்லை. ஆனால், நடைமுறையில் அவை எவ்வகையான போக்கினைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ‘மைய அரசின் கொள்கைதான் எங்களுடைய கொள்கை’, சொற்கள் வேண்டுமானால் வேறுபடலாம் கொள்கை ஒன்றுதான் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி முன்னமே தெளிவுபடுத்தியிருக்கிறார். தற்போது நடந்த ஐ.நா. மனித உரிமை அமைப்பு சிறப்புக் கூட்டத்தில், இலங்கைக்கு இந்தியா அளித்த ஆதரவு அதிர்ச்சியை அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறுகிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் ‘இராஜபக்சே மற்றும் அவரது சகாக்கள் மீது போர்க்குற்ற வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என இந்திய அரசைத் தமிழக அரசும், அதன் முதலமைச்சரும் வலியுறுத்த வேண்டும்’ என்று இராமதாசு கோருகிறார். இது மிகவும் வேடிக்கையானது. ஏனென்றால், பா.ம.க. மற்றும் தி.மு.க. உறுப்பு வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த பிப்ரவரி மாதம்(2009) இந்திய நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட செயல்பாடுகள் சிங்கள பேரினவாத அரசுக்கு இந்திய அரசு எந்த அளவிற்கு ஆதரவாக கருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தியது.

இந்தியக் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்கள் அவையில் விவாதம் நடைபெற்ற போது (17.2.2009), அ.திமு.க. உறுப்பினர் மைத்ரேயன், “இலங்கையின் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. அங்கே தமிழர்கள் நிர்மூலமாக்கப்படுகின்றனர். இந்த இனப்படுகொலையை மத்திய அரசு மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மேலவையின் துணைத் தலைவர் இரகுமான் கான், ‘இனப்படுகொலை‘ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த சொல்லை அவைக்குறிப்பிலிருந்து தாம் நீக்கப் போவதாகவும் கூறினார். ஆனால் அந்த சொல்லைத் திரும்பப் பெற மைத்ரேயன் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்த குழப்ப சூழலில், தி.மு.க. உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்து குரலெழுப்பினர். ‘இனப்படுகொலை’ என்ற சொல் பதிவாகாமல் நீக்கப்பட்டது. (தினகரன், 18.2.2009).

காங்கிரஸ் அரசு, இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்து வருவது மட்டுமின்றி, இராஜபக்சே இதுவரை செய்துள்ள மனித உரிமை மீறல் குற்றங்கள் மட்டுமின்றி இனிமேல் செய்யப்போகும் குற்றங்களிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் ‘இனப்படுகொலை’ என்ற சொல் எந்த ஆவணததிலும் பதிவாகாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது.

டில்லியின் காங்கிரசு அரசுக்கு இந்தத் துணிவு எங்கிருந்து பிறந்தது? கமுக்கமாக ஒரு உண்மை டில்லி அரசுக்குத் தெரிந்து விட்டது. தமிழக அரசியல்கட்சிகள் எது இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள், பதவி இல்லாமல் அவர்களால் வாழமுடியாது, பதவிகளுக்காக எந்த துரோகத்தையும் தயக்கமில்லாமல் செய்வார்கள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்து போனது.

ஒருபுறம் ஈழத்தமிழின உரிமைகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவதும், மறுபுறம் சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதமும், இராணுவமும், நிதியுதவியும் அளித்து ஈழத்தமிழர் மீது இனப்படுகொலையை நிகழ்த்தும் இந்திய அரசில் பங்கேற்பதும், பதவிசுகம் அனுபவிப்பதும் - ஆகிய நேர்மையற்ற அரசியலைக ; கைக ; கொணடு; ளள் ‘நடிபபு;பு; - இன உணர்வு’ கட்சிகளைச் சரியாக அடையாளம் கண்டுள்ளது இந்திய ஆளும் வர்க்கம். தமிழ் இன உணர்வு கொண்டு தமிழக மக்கள் எந்தவித போராட்டம் நடத்தினாலும், டில்லி அரசு கவலை கொள்ளாது. தமிழின உணர்வை அறுவடை செய்து கொள்ளும் தமிழக கட்சிகள், பதவி பேரம் நடத்தி நல்ல விலைக்கு தமிழினத்தை அடமானம் வைக்க டில்லிக்கு வருவார்கள் என்பது இந்திய ஆளும் வர்க்கத்துக்குத் தெரியும்.

இன்று நிலைகுலைந்து கிடக்கும் ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்குத் தீர்வாக இக்கட்சிகள் எதை முன்வைக்கின்றன? அவை சரியானத் தீர்வுகள் தானா? அல்லது சிங்களப் பேரினவாத அரசு நிலைபாட்டை ஆதரிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலாக ஒலிக்கிறார்களா என்பவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். ஈழத்த்தமிழர் பிரச்ச்சினைக்கு;கு இவர்கள் கூறும் தீர்வு 1948-இல் இலங்கை விடுதலை பெற்றவுடனேயே, சிங்களர்களின் தமிழின ஒடுக்குமுறை தொடங்கிவிட்டது. 1949- இல், தந்தை செல்வா இலங்கைக்கு ஒரு கூட்டாட்சி முறை வேண்டுமெனக் கோரினார். அது ஏற்கப்படவில்லை. 1972- இல் புதிய அரசியலமைப்பு மூலம் தமிழர்களின் உரிமைகளெல்லாம் பறிக்கப்பட்டன. ஆகவே, தமிழர் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கியக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1976-இல் தமிழீழத் தனியரசு என்ற இலக்கு தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானம் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. 1977 பொதுத்தேர்தலில் தமிழீழத் தனியரசு என்ற இறையாண்மையுள்ள அரசு என்ற இலக்கை ஆதரித்து வாக்களித்து 19இல் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈழத்தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இதுவே ஈழத்தமிழர் விரும்பும் தீர்வு. இதை மக்களாட்சி முறையில் தெரிவித்துவிட்டனர். அதை வென்றெடுக்கும் முறையில்தான் ஈழப்போராளிகளுக்கும், தேர்தல் அரசியலாளர்களுக்கும் வேறுபாடேயன்றி இலக்கில் அல்ல.

இனப்படுகொலைக்கு இலக்காகி, இனி சிங்கள இனவெறியர்களுடன் வாழவே முடியாது என்ற நிலையை அடைந்து விட்ட நிலையிலும், தமிழகத் தேர்தல் கட்சிகள் தங்கள் விருப்பத்திற்கும், நலனிற்கும் ஏற்ற தீர்வுகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களது பார்வைக் குறையால் அல்லது நேர்மைக் குறைவால் நிகழ்கிறது. தாங்கள் கூறும் தீர்வை அவர்கள் திறந்த மனத்துடன் மீண்டும் பரிசீலிக்க வேண்டும். களத்தில் பின்னடைவுகளைச் சந்தித்து விட்ட காரணத்தாலேயே வெற்றி பெற்ற சிங்கள.இனம் கிள்ளிப்போட்டதை எடுத்துக் கொண்டு ஈழத்தமிழினம் மனநிறைவடைய முடியாது. ஒடுக்கப்பட்ட ஓரினம் விடுதலை அடையும் வரைத் தொடர்ந்து போராடும் என்பதுதான் வரலாறு.

இனப்படுகொலையா, இல்லையா?

ஈழத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பது என்ன? அது இனப்படுகொலையா, இல்லையா என்பதைப் பொறுத்தே பிரச்சினைக்கான தீர்வும் அமைய முடியும். அது இனப்படுகொலை என்றால், ஊனப்பட்டுக் கிடக்கும் ஈழத்தமிழினத்தை மேலும் சிங்கள இனவெறியர்களுடன் கூடி வாழச்சொல்வது நேர்மையற்ற செயலாகும்.

ஈழத்தமிழர் மீதான சிங்களப் படுகொலையை ‘கொடூரமான இனப்படுகொலை’ என்று இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி 1983-இல் சரியாக அடையாளப்படுத்தினார். அன்று இவ்வளவு பெரிய தாக்குதல்கள் ஈழத்தமிழர் மீது நடந்துவிடவில்லை. ஆனால் இன்று ஈழத்தில் நடந்தேறியிருப்பது முற்று முதலான இனப்படுகொலை என்பதை உலகே ஏற்றுக் கொள்கிறது. அதனால்தான் போர்க்குற்றவழக்குத் தொடர உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. அதன் முதற்படி ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் விசாரணை. ஆனால் இலங்கையின் நட்புறவோடு இந்தியப் பெருங்கடல் பகுதியில் புவிசார் அரசியல் ஆதிக்க வேலாண்மையை நிறுவிக் கொள்ள சீனா, இந்தியா ஆகிய நாடுகளை இலங்கையை ஆதரிக்கின்றன. மேலும் பல நாடுகளை ஆதரிக்குமாறு வற்புறுத்தி வருகின்றன.

இனப்படுகொலை

இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தலுக்கான ஐ.நா.வின் மாநாடு 1948 ( UN Convention on the Prevention and Punishment of the Crime of Genocide - 1948) கீழ்க்காணும் செயல்பாடுகளை இனப்படுகொலை என்று அடைளாங் கண்டது.

“முற்றாகவோ பகுதியாகவோ அழித்துவிடும் நோக்குடன், ஒரு தேசிய இனத்தையோ, மரபினத்தையோ அல்லது பண்பாட்டு சமூகத்தையோ சமய சமூகத்தையோ - கொல்லுதல்; உடலளவில், உள்ளத்தளவில் அக்குழுவினரை காயப்படுத்துதல்; தன் இருப்பு அழிந்து;து போகும்ப்படி வாழ்க்i;கைச் சூழலை அளித்தல், அக்குழுவினரின் பிறப்பைத் தடுத்தல் மற்றும் அக்குழுவைச் சேர்ந்த்த குழந்i;தைகளைப் பிரித்து;து வேறொரு குழுவுடன் சேர்த்த்தல்”;

இவற்றை விசாரணை செய்ய 2002இல் பன்னாட்டு நீதிமன்றமும் உருவாக்கப்பட்டது. இந்நீதிமன்றம், இதன் உறுப்பு நாடுகளை மட்டுமே விசாரிக்க முடியும். ஐ.நா.வின் பாதுகாப்பு அவை 2006ஆம் ஆண்டு, போர் நடவடிக்கைகளின் போது சாதாரண மக்கள் இறக்காமல் தடுக்கவும், இனப்படுகொலை, போர் குற்றங்கள், இனத்தை முற்றொழித்தல், மனித வர்க்கத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும் - தீர்மானம் இயற்றியது. ஐ.நா. வகுத்துள்ள வரைமுறைகளின்படி, ஈழத்தில் நடைபெற்றிருப்பவை இனப் படுகொலை ஆகும்.

இலங்கை அரசு தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் முப்படைகளின் உதவியுடன் தமிழர்கள் மீது பெரும் போரை நடத்தி, ஆயுதமற்ற அப்பாவிகளை பல்லாயிரக்கணக்கில் கொன்றழித்திருக்கிறது. இலண்டன், டெலிகராப் எழுத்தாளர் ரிச்சர்டு டிக்கன்ஸ், இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“சீனாவின் ஆயுதங்கள், இந்தியாவின் உளவுத்துறையினர், சிங்கள இராணுவ அதிகாரிகள் ஆகியோர் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய மிகக் கொடூரமான போர். பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்க் குழந்தைகளும், பெண்களும் வலி நிறைந்த மெதுவான இறப்பை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது, இலங்கையில் தெற்குப் பகுதியில் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தங்களது வெற்றிக் கொடியை அசைத்தும், வெடிகள் வெடித்தும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.”

“போர்முனையில் இறந்துபோன பொதுமக்களின் உடல்கள், சக்திவாய்ந்த வேதிப்பொருட்களால் எரியூட்டப்பட்டு சாம்பலாக்கப்பட்டன. போரினால் இறந்து அழுகிப் போன பொதுமக்களின் எண்ணிக்கையை மறைப்பதற்காக இப்படிச் செய்தார்கள்”. “கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றார்கள். காயப்படுத்தினார்கள். அப்பாவிப் பொதுமக்கள் மீது இரசாயண ஆயுதங்களையும் கொத்தெறி குண்டுகளையும் கொண்டு தாக்குகின்றார்கள்.” (ஜனசக்தி, 26.5.2009)

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சுரே‘;, இவ்வாறு பதிவு செய்கிறார்: “2009 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் வரை வௌ;ளை ஊர்தி கடத்தல் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்”.

“அப்பாவி மக்கள் மீது கனவகை ஆயுதங்கள் பயன்டுத்தியதை அமெரிக்காவின் ஓர் அமைப்பு செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. உணவு, மருந்துகளைத் தடை செய்து மக்களை பட்டினி, நோய் போன்றவற்றால் சாகடிக்க இலங்கை அரசு திட்டமிட்டதை ஐ.நா. அமைப்பு உறுதிப்படுத்தி 8 அறிக்கைகள் வெளியிட்டுள்ளது”.

அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள பெதஸ்டா ஜியோ ஸ்பேசியல் புலனாய்வு முகமை எடுத்துள்ள செயற்கைக் கோள் படங்கள், அப்பாவி மக்கள் மீது இலங்கை அரசு நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்கு சான்று பகர்கின்றன. இலங்கைப் படையினர் நோயாளிகளை தனிக் கொட்டடிக்குள் கொண்டு சென்று, அடைத்துள்ளனர். உயிருக்குப் போராடும் நோயாளிகளின் கண்கள், சிறுநீரகங்கள், ஈரல், எலும்பின் உட்சத்து, இதயம் - ஆகியவற்றை மயக்க மருந்து தராமலே வெட்டி எடுத்து விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். பாதுகாப்பு வலயப்பகுதிக்கு வந்த பெண்களை பாலின வல்லுறவுக்கு ஆட்படுத்தினர்.

போரில் வீழ்ந்த போராளிப் பெண்களின் பிணங்களையும் சிங்கள இராணுவத்தினர் புணர்ந்தார்கள். ‘தமிழ்ப் பெண்கள் உங்களுக்கு, தமிழ் ஆண்கள் கடலுக்கு’ என்று கூறி தலைமைத் தளபதி பொன்சேகா வரைமுறையற்ற பாலுறவுக் கொடூரங்களைக் கட்டவிழ்த்துவிட்டார். தமிழ்ப் பெண்களில் 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சிங்களப் படையினரின் தேவைகளை நிறைவு செய்ய அனுப்பப்பட்டனர். தமிழ்ப்பெண்களுக்கு கட்டாயக் கருச்சிதைவு செய்யப்பட்டது. பெண்களுக்கு வரைமுறையின்றி கருத்தடை அறுவை செய்யப்பட்டது. குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. குழந்தைகள் பெற்றோரிடமிருந்தும், மனைவியர் கணவர்கள், பெரியோர்களிடமிருந்தும் பிரித்து சிதைக்கப்பட்டனர். ஆண் குழந்தைகள் எதிர்காலத்தில் போராட வியலாதவாறு முடமாக்கப்பட்டனர். (தமிழ் ஓசை, 4.5.2009).

ஈழத்தில் நடந்தேறியது அப்பட்டமான இனப்படுகொலை. ஈழத்தமிழ் மக்கள் வெளியேறிய பகுதிகளில் எல்லாம் சிங்களக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் நிரந்தரமாக அச்சத்தில் வாழும் அடிமைகளாக இனி வாழும் நிலை உருவாகியுள்ளது. இவ்வளவிற்குப் பிறகும், ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவதை ஏற்க முடியாது, சிங்களர்களுடன் தான் வாழ வேண்டும்; அதற்குப் பெயர்தான் ஒற்றுமை - என்று எந்த அரசியல்வாதியாவது பேசினால் அவர்களது அறிவையோ அல்லது நேர்மையையோ சந்தேகிக்க வேண்டியிருக்கும். ஈழம் விடுதலை பெற வேண்டியதற்கான காரணங்கள் முழுமையாக உள்ளன.

இந்தியக் கட்சிகள் பேசும் தீர்வுகள் இனப்படுகொலைக்கு உள்ளாகி சிங்களர்களுடன் சேர்ந்து வாழ முடியாத நிலையில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வைத் தீர்வாகக் காட்டுகிறார்கள். “இலங்கைத் தமிழர் சிக்கலுக்கு ஒன்றுபட்ட கூட்டாட்சி அமைப்புக்கு உட்பட்ட அரசியல் தீர்வு காண வேண்டும்” என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் கூறுகிறார்(தமிழ் ஓசை, 10.5.2009).

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பத்திரிக்கை யாளர்களிடம் இவ்வாறு கூறினார்: “இலங்கையில் ஏற்பட்டுள்ள மோதலுக்கான அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்றால் அந்நாட்டின் அரசியல் சாசன வரம்புகளுக்கு உட்பட்டு அதிகாரப் பரவல் செய்ய வேண்டும். அண்டை நாடுகளுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதே இந்திய அரசின் முன்னுரிமை...” (தமிழ் ஓசை, 24.5.2009)

1987-இந்திய இலங்கை உடன்பாட்டை ஒட்டி செய்யப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தம் உருவாக்கிய அதிகாரமற்ற மாகாண கவுன்சில்கள், ஆலோசனை மட்டும் கூற அனுமதிக்கப்படும் அமைச்சரவை ஆகியவை ஈழத்தமிழர்களால் முன்னமே நிராகரிக்கப்பட்டவை. இலங்கை அரசியல் சட்டம் முழுக்க முழுக்க ஓர் ஒற்றையாட்சி அரசியல் சட்டம். சிங்கள மொழிக்கும், புத்த மதத்திற்கும் சிறப்பிடம் அளிப்பது. இந்த அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு உண்மையான அதிகாரப் பகிர்வும், தன்னாட்சி உருவாக்கமும், கூட்டாட்சி முறைமையும் சாத்தியமே இல்லை.

தமிழகத்தின் பெரிய கட்சிகளுள் ஒன்றான அ.தி.மு.க.வின் தலைவர் ஜெயலலிதா, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது “தமிழ் மக்களுக்கு தனிஈழம்தான் தீர்வு; அவர்களுக்கு நான் தனி ஈழம் அமைப்பேன்” “கிழக்குப் பாகிஸ்தானுக்குள் இந்தியப் படையை அனுப்பி பங்களா தேசம் என்ற புதிய தேசத்தை உருவாக்க முடியும் என்றால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி தனி ஈழத்தை உருவாக்க ஏன் முடியாது” என்று கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழ் மக்களுக்குத் தனி ஈழம்தான் தீர்வு என்பது மிகச்சரியானது; நிகழப்போவதும் அதுதான். ஆனால், இந்தியப் படைகளை அனுப்பி அதை சாதிப்பது என்பது ஒரு போதும் நிகழாது. ஏனெனில், வங்காள தேசம் விடுதலை அடைவது இந்திய ஆரிய இன மேலாதிக்கத்திற்கு, இந்தியப் பெருமுதலாளிய நலன்களுக்கு நல்லது; அது தேவை. ஆனால் ஒன்றுபட்ட இலங்கை என்பது தான் இந்திய ஆளும் சக்திகளுக்கும் இந்திய வல்லரசியத்திற்கும் உகந்தது.

தேர்தல் பரப்புரையின்போது ஜெயலலிதாவின் அதிரடியான ஈழ ஆதரவு அறிவிப்பைக் கண்டு கலங்கிப்போன தி.மு.க.வின் தலைவர் கலைஞர் கருணாநிதி, “இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தையும் பெற்றுத் தருவதற்கு நம்மாலான முயற்சிகளைச் செய்வேன்” என்று அறிவித்தார். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க. செயற்குழு 18.5.2009 அன்று இவ்வாறு தீர்மானம் போட்டது: “நமது மத்திய அரசு இருதரப்பினருக்குமிடையே நடக்கும் போர் முற்றிலுமாக நிறுத்தப்படவும், பேச்சுவார்த்தை மூலம் இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லி வரும் கோரிக்கைக்கு மேலும் அழுத்தம் கொடுத்து வலியுறுத்தி இலங்கையில் தமிழர்கள் உரிமைகளைக் காப்பாற்றவும், அமைதியான சக வாழ்வுக்கு வழி வகுக்கவும், தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக கேட்டுக் கொள்கிறேன்“ ‘சமஉரிமை’ என்றும் ‘அமைதி யான சக வாழ்வு’ என்றும் கூறி, இலங்கை என்ற கூண்டுக்குள் தமிழர்களுக்கு ஏதாவது அளித்தால் சரி;; மைய அரசு எது செய்தாலும் தங்களுக்கு ஏற்புடையதே என்ற கருத்தைத் தி.மு.க. வெளியிட்டிருக்கிறது. ஈழத்தமிழர் உரிமையானாலும், தமிழகத் தமிழர் உரிமையானாலும் அவற்றுக்காகக் குரல் கொடுப்பதில்லை என்பதில் தி.மு.க. தெளிவாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா “தமிழர்கள் சமஉரிமை பெற வேண்டும். அதற்கு இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்” என்று மாற்றிப் பேசினார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஒரு திருப்பத்தையும் முடுக்கத்தையும் அளித்து வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை. அது 2.10.2008 இல் நடத்திய உண்ணாநிலை போராட்டம் ஈழ ஆதரவுப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குத் தள்ளியது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களிடம் காணப்படும் உணர்வு அதன் அனைத்து இந்தியத் தலைவர்களிடம் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை(2009), ஈழமக்களின் இனச்சிக்கலுக்குத் தீர்வாக காங்கிரஸ் கட்சியைப் போன்றதொரு அல்லது சற்று கூடுதலான தீர்வையே வைத்தது. “ஒருங்கிணைந்த இலங்கைக் குள் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களைத் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாநிலங்களாக அறிவிக்க வேண்டும்”(தமிழ் ஓசை, 22.3.2009). போரை நிறுத்த வேண்டும், அரசியல் தீர்வு காண வேண்டும், அனைத்து வகையான மனிதநேய உதவிகளும் செய்ய வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் தீர்வு பிரச்சினைக்கான தீர்வாக இல்லாமல், தங்கள் நிலைபாட்டைக் கூறுவதாகவே இருக்கிறது. ஆனால், பிரச்சினையின் பரிமாணத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் சரியாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு மார்க்சியராக இருந்து தீர்வைக் கூற தயங்குகிறார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இவ்வாறு எழுதுகிறார்: “இலங்கை அரசு நடத்திக் கொண்டிருக்கும் போர் உள்நாட்டு மக்கள் மீது என்பது மட்டுமல்ல, ஒரு இனத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற கொலை வெறி படுபாதகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” (ஆர்.நல்லக்கண்ணு, ‘இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு’, தீக்கதிர், 9.4.2009). இனப்படுகொலைக்கு உள் ளாகும் ஓர் இனம் தன் விடுதலைக்காகப் போராடும் போது, அதன் விடுதலையையோ அல்லது அந்த இனத்தின் தன்னுரிமையையோ ஆதரிப்பதில் மார்க்சையும் லெனினையும் ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்ன வெட்கம் அல்லது தயக்கம்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு கேவலமானது. தேசிய இனப் பிரச்சினையில் லெனினையும், ஸ்டாலினையும் முற்றிலும் மறுதலிப்பதையே தங்கள் நிலைப்பாடாகக் கொண்டவர்கள் இந்திய மார்க்சிஸ்ட்டுகள். காங்கிரஸ் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வேறுபாட்டை அறிவதற்காகவே சிவப்பு நிறக்கொடியில் வௌ;ளை அரிவாள் சுத்தியல் பொறித்து வைத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண தனி ஈழ கோரிக்கை எழுப்புவதால் பயனில்லை என்று கூறும் என்.வரதராஜன், “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டை 1983-ம் ஆண்டில் இருந்தே எடுத்து வருகிறோம்” என்று கூறுகிறார். அதோடு விடவில்லை. தாம் ஒரு மார்க்சிஸ்ட் அல்லர் என்பதையும் தெளிவுபடுத்திவிடுகிறார்.

“சுயநிர்ணய உரிமை என்ற கோஷத்தை நாங்கள் ஏற்கவில்லை. தனி ஈழம் என்பதற்கும் சுயநிர்ணய உரிமை என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒரே நாட்டுக்குள் இரண்டு மக்களும் நிரந்தரப் பகையாளியாக மாறி மோதிக் கொண்டிருக்கும் சூழலுக்கே இட்டுச் செல்லும்” (தீக்கதிர், 4.11.08). “ஒருங்கிணைந்த இலங்கைக் குள் கூடுதலான சுயாட்சியோடு, தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்” (ஜனசக்தி, 10.3.2009) என்றும் கூறுகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு நம்மைத் திகைக்க வைக்கிறது. ஒரு மார்க்சியர் எப்படி சிந்திக்க வேண்டுமோ அதற்கு நேர் எதிர்த்திசையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் சிந்திக்கிறார்கள். அயர்லாந்து தன் விடுதலைக்காககப் போராடிய போது கார்ல் மார்க்ஸ் அதை ஆதரித்தார். ஐரி‘; விடுதலை ஏற்பட்டால்தான், ஐரி‘; - பிரிட்டி‘; பாட்டாளி ஒற்றுமை ஏற்பட முடியும் என்ற கருத்தை மார்க்ஸ் வெளியிட்டார். லெனின் அதே திசையில்தான் சிந்தித்தார். தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய சிந்தனை வடிவங்களை வழங்கிய லெனின் தன்னுரிமைக் கோட்பாட்டை செப்பமாக வடிவமைத்தார்.

‘தேசிய இன முரண்பாடுகள் ஒடுக்குமுறை வடிவத்தைப் பெறும் போது, விடுதலை என்ற வடிவம் தாங்கும் நிலை ஏற்படுகிறது’ என்றார் லெனின். “ஒரு தேசிய இனம் பிறிதொரு தேசிய இனத்தை ஒடுக்குவது தொடருமேயானால் ஒடுக்கப்படும் தேசிய இனம் சுதந்திரமாக வாழ முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பினார். தேசிய இனப் பிரச்சினையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை லெனின் வரையறுத்துக் கூறியிருக்கிறார்:

“தேசிய இனங்களின் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும் எல்லாவிதமான தேசிய இன ஒடுக்கு முறையையும் சமத்துவமின்மை யையும் எதிர்த்துப் போராடாத எவரும் மார்க்சியவாதி அல்ல, ஜனநாயக வாதியும் கூட அல்ல, அது சந்தேகத்துக்கிடமில்லாதது” (தேசிய இனப்பிரச்சினைகளும், பாட்டாளி வாக்க சர்வதேசியவாதமும், பக். 34).

ஈழத்தமிழினத்தின் இறையாண் மையும் தன்னுரிமையும் ஏற்கப்பட வேண்டும். கடந்த 6.4.09 முதல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகளுள் முக்கியமானது: “தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நா.வின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்” (ஜனசக்தி, 9.4.2009). இதுதான் தீர்வு. இதை ஏற்பதுதான் ஜனநாயகம். இதை உரத்துக் கூறுபவர்தான் மார்க்சியராக இருக்க முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com