Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூன் 2009

ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை அரசுக்கு ஆதரவு: கியுபா, பொலிவியாவிற்கு கண்டனம்
அமரந்த்தா

(லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம் சார்பில் 25.5.09 அன்று எழுத்தாளர் அமரந்த்தா கியுபத் தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுக்கும் அனுப்பியக் கடிதத்தின் தமிழாக்கம்.)

________________________________________

அன்பார்ந்த தோழருக்கு...

இலங்கைத் தீவு நாட்டில் வாழும் தமிழர்களை முழுமையாக துடைத்தழிக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஐ.நா.மனித உரிமை அமைப்பில் கியூபா, நிகராகுவா, பொலீவியா ஆகிய நாடுகளும் வாக்களித்திருப்பதை அறிந்து தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்ற முறையிலும், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஆதரவாளர் என்ற முறையிலும் நான் மிகுந்த வேதனைக்கும் விரக்திக்கும் ஆளாகியிருக்கிறேன். வீரஞ்செறிந்த கியூ+பப் புரட்சி, நிகராகுவா புரட்சி குறித்தும் இன்றைய கேள்விமுறையற்ற ஒற்றை ஆதிக்க உலகில் வெனிசுவேலா, பொலிவியா, சிலே போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக – ஜனநாயக இயக்கங்கள் குறித்தும் எழுதியும் மொழிபெயர்த்தும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டில் செய்திகளைப் பரப்பி வருகிறேன் நான். பத்து புத்தகங்களுக்கு மேல் எழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கிறேன், வேறு பல நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்திருக்கிறேன்.

உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம் ஆகியவற்றின் உதவியோடு உலகை விழுங்க முற்படும் வட அமெரிக்க ஒற்றை வல்லரசு ஆதிக்கத்திற்கு சவாலாக உருவாக்கப்பட்டிருக்கும் லத்தீன் அமெரிக்காவிற்கான பொலிவேரிய மாற்றுத்திட்டம் தென் அமெரிக்க வங்கி வெனிசுவேலாவின் ஒன்றுபட்ட சோசலிச கட்சி ஆகியவற்றால் உலகின் இப்பகுதி முழுவதும் சோசலிச மாற்றத்திற்கு ஆளாகி விடும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இச்செய்திகளைத் தொடர்ந்து தமிழில் பரப்பி வருகிற சக எழுத்தாளர்களும், நண்பர்களும், தமிழ்நாட்டில் இந்தியாவில் நான் பிறந்திருந்தாலும் எனது உயிரும் இதயமும் கியூபாவிலோ வெனிசுவேலாவிலோ அலைந்து கொண்டிருக்கின்றன என்றென்னை கேலி செய்வதுண்டு. ஆனால் இன்று இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக்கு எதிராக கியூபாவும் நிகராகுவாவும் பொலிவியாவும் கையெழுத்திட்ட பிறகு, உண்மையிலேயே எனக்கு நிற்க நிலமில்லாது ஆகிவிட்டது...

இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு ஆதரவாக இலங்கைப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக மேற்குறிப்பிட்ட நாடுகள் ஐ.நா.மனித உரிமை அமைப்பில் கையெழுத்திடக்கூடும் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை.

ஆம். மார்த்தியும் சாந்தினோவும், பொலிவாரும் நடமாடிய பூமியில் தோன்றிய ராவுல் காஸ்த்ரோவும் தானியேல் ஆர்த்தோவும் ஈவோ மொரேல்சும் விடுதலை இயக்கமொன்று அழித்தொழிக்கப் படுவதை எவ்வாறு ஆதரிக்க முடியும்?

இச்செயல் கியூபாவின் ஜூலை 26 இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றழைப்பதற்கு சமமல்லவா?

இச்செயல் நிகராகுவாவின் சாந்தினிஸ்தா இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று சொல்வதற்குச் சமமல்லவா?

பொலிவியாவில் 2001ஆம் ஆண்டு நிலத்தடிநீர் உரிமை காக்கப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என்றழைப்பது முறையாகுமா?

வெனிசுவேலாவில் 2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகை முன்னே வட அமெரிக்க கைக்குலிகளிடமிருந்து ஹூகோ சாவேசைக் காப்பாற்றக் குழுமிய மக்களை பயங்கரவாதிகள் என்றழைக்க நாம் சம்மதிப்போமா?

லத்தீனீன் அமெரிக்க மார்க்சிய அறிஞரான ஹொலய மாரியாதெருய் “ஒவ்வொரு நாடும் தம் மண்ணக்கேற்ற விடுதலைப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்” என்று கூறியதை நாம் அனைவரும் மறந்துவிட்டோமா?

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மிகச் சுலபமாக பயங்கரவாதிகள் என்று எவ்வாறு முடிவு செய்ய முடிந்தது? ஒரு பயங்கரவாத அமைப்பினால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லாணா இழப்புகளைத் தாங்கி இடையறாது போராட இயலுமா? தங்கள் நியாயமான வாழ்வுரிமைக்காக இலங்கை அரசுடன் நேர்மையான வழியில் தீர்வுகாண பல்லாண்டுகளாக முயன்று தோற்றுப் போனது விடுதலைப் புலிகள் இயக்கம். இறுதியாக வேறு வழியின்றி கெரில்லாப் போர் முறையைத் தேர்ந்தெடுத்த விடுதலைப்புலிகள், சமீப காலம் சரை இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்ததை உலகறியும்.

இன்று இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கப்பல் கப்பலாக ஆயுதங்களை இலங்கை அரசுக்கு வழங்கி, இலங்கை வாழ் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க வழி செய்து விட்டன. வர்த்தகம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இராணுவ மேலாண்மைப் பெறுவது ஆகிய காரணங்களுக்காக திரிகோணமலை துறைமுகத்தின் மீது உரிமை கொண்டாடும் நோக்கில் இலங்கை அரசுடன் இந்நாடுகள் தமிழ் இன அழிப்பில் பங்கேற்கின்றன. ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் அவற்றுக்கு ஏன் துணை போகின்றன?

தற்போது சீனா லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் வர்த்தக உறவு கொண்டிருப்பதாலா? ஆனால் இது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சோசலிச கியூபாவில் பல்துறை சாதனைகளையும், கல்வி - மருத்துவம் - மனித உரிமைகள் ஆகிய துறைகளில் கியூபாவின் கொடையையும் விளக்கும் 8 நூல்களை வெளியிட்டு தமிழ்நாட்டில் தமிழர்கள் நாங்கள் தோழர் ஃபிதெல் காஸ்த்ரோவின் 80வது பிறந்தநாள் கொண்டாடினோம். தற்போது கியூபப் புரட்சியின் 50 ஆண்டு நிறைவையும், சே குவேராவின் 80வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு இன்றைய சூழலில் பொலிவார் கனவு கண்ட தென்னமெரிக்க ஒருங்கிணைவுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை மதிப்பீடு செய்யும் நிகழ்ச்சிக்காக 10 நூல்களை வெளியிடும் முயற்சியில் உள்ளோம். இந்நிலையில்தான் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் கியூபா, நிகராகுவா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைத் தமிழர் அழித்தொழிப்புக்கு ஆதரவாக கையொப்பமிட்டிருக்கும் செய்தி நஞ்சு தோய்ந்த கத்தியாக எங்கள் இதயத்தைத் தாக்கியது. இனி மேற்கொண்டு நாங்கள் எவ்விதம் செயற்படுவது?

எதிர்காலத்தில் இருபத் தொன்றாம் நூற்றாண்டு சோசலிசத்தை நிறுவப்போதாக எந்த இலத்தீன் அமெரிக்க நாடுகளை நம்பினோமோ அவை செய்த இத்தகைய செயலால் நம்பிக்கையிழந்து நாங்கள் ஊமையாகிவிட்டோம். தமிழருக்குச் சொந்தமான இலங்கை மண்ணில் தமிழினம் துடைத்தழிக்கப்பட வேண்டும் என இந்நாடுகள் விரும்பக் காரணமென்ன? தமிழினத்துக்கு எதிராகவும் இலங்கைப் பேரினவாத அரசுக்கு ஆதரவாகவும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் குரல் கொடுக்கும் கொடூரமான முடிவை எடுக்கும்படி இவர்களுக்கு இப்பிரச்சினை குறித்து பிழையான வரலாற்றுத் தகவல்களை அளித்தது யார்?

தமிழ்நாட்டில் நாங்கள் ஆறரைக்கோடி மக்கள் இருக்கிறோம் - எங்களிடம் கேளுங்கள் நாங்கள் சொல்கிறோம் உண்மைகளை...

விடுதலைப்புலிகளை வேட்டை யாடுவதான போர்வையில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களை கொடூரமாகக் கொலை செய்கிறது, முடமாக்குகிறது இலங்கை அரசு. ‘பாதுகாப்புப் பகுதி’ என்ற பெயரில் முள்கம்பி வேலிக்குள் ஆடுமாடுகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 3.2 லட்சம் தமிழ் மக்களில் பலரும் பட்டினியாலும் மருத்துவ உதவியின்மையாலும் கூட்டங்கூட்டமாக மடிகிறார்கள். ஆதரவற்ற இம்மக்களை இலங்கை இராணுவம் ரசாயண ஆயுதங்களும் கொத்து வெடிகுண்டுகளும் கொண்டு அழிக்கின்றது, முடமாக்குகின்றது, நிரந்தர பீதியில் ஆழ்த்துகின்றது. பாதுகாப்புப் பகுதி எனப்படும் படுகொலை முகாம்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற யாருமே அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு தான் தமிழினப்படுகொலை சாட்சியின்றி நடைபெற்றது. 2009 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 11 வரை மட்டுமே தமிழ் மக்களில் 15,000 பேர் கொல்லப்பட்டனர், 10,000 பேர் கைகால்களை இழந்துள்ளனர். இதுவரை ரத்தவெறி கொண்ட இலங்கை இராணுவத்திற்குப் பயந்து 10 லட்சம் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உலகெங்கும் அதிகளாகக் காலந்தள்ளி விடுகின்றனர். தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் உங்களது தவறான செயல்பாட்டின் காரணமாக ஆழ்ந்த விரக்திக்கு ஆட்பட்டுள்ளோம்.

இவ்வுலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான சர்வதேசியவாதியான மாவீரன் சே குவேராவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் முன்னெப்போதைக் காட்டிலும் இக்கணத்தில் எம்மைத் திணறச் செய்கிறது...

அமரந்த்தா,
லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்,
176/10, வைகை வீதி,
நகராட்சிக் குடியிருப்புச் சாலை,
வீரப்பன் சத்திரம் அஞ்சல்,
ஈரோடு - 603004.
தொடர்புக்கு : 944330681.

அமரந்த்தாவின் கடிதத்திற்கு தோழர் ரான் ரெட்னூர் அனுப்பிய பதில் (ரான் ரெட்னூர் வட அமெரிக்காவில் பிறந்து, போர் எதிர்ப்பு இயக்கங்களில் பணியாற்றியவர், தற்போது கியூபாவில் இருக்கும் மார்க்சிய எழுத்தாளர்)

உங்கள் விமர்சனத்தை எனக்கு அனுப்பியதற்கு நன்றி. நமது ஆயுதப்போராளி நண்பர் ஆயுதப் போராட்டத்தில் சோர்வுற்றுப்போய் தற்போது நடைபெறுகின்ற பூர்சுவா - ஜனநாயகப் போராட்டங்களினால் சாதகமான விளைவுகளை சந்தித்து வரும் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளின் கதகதப்பான நட்புறவில் இளைப்பாற முயல்கின்றார். ஆயுதப் போராட்டமென்னவோ கைக்கெட்டிய தொலைவில்தான் இருக்கிறது - காரணம் பெரும்பான்மையான மக்கள் ஜனநாயகத்தையும் அமைதியையும் நலவாழ்வையும் விரும்புவதால் மட்டுமே பூர்சுவாக்களோ, வட அமெரிக்க ஏகாதிபத்தியமோ ஒருபோதும் மாறப்போவதில்லை.

மார்ச் மாதத்தில் கொலம்பிய ஆயுதப் போராட்டக் குழுவின்(குயுசுஊ) பின்னடைவுக்கு ஃபிடெலும் சாவேசும் என்ன எதிர்வினையாற்றினார்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இன்றைய லத்தீன் அமெரிக்காவில் மீதியிருக்கும் ஒரே ஆயுதப் போராட்ட இயக்கம் குயுசுஊ மட்டுமே. இந்நாளில் கியூபாவும் அதன் நேசநாடுகளும் இரத்தம் சிந்தாமல் வெற்றி பெறுவதையே விரும்புகிறார்கள். அதுபோன்ற தியாகங்களுக்கு மக்கள் தயாராக இல்லாதபோது அவ்வாறு முடிவு செய்வது சரியே.

உங்களது(ஆசிய) கண்டத்தில் பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்குமான சாத்தியபாடுகள் முற்றிலும் வேறானவை. கியூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவாதமானது என்று வருத்தத்துடன் தெரிவிக்கும் இவ்வேளையில், அதன் சில உள்நாட்டுக் கொள்கைகளும் கூட அவ்வாறானவை என்பதைத் தெரிவிக்கிறேன். இதில் நாமென்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை.

உங்கள் விமர்சனத்தை இதுவரை ஜேம்ஸ் பெட்ராஸ் அவர்களுக்கு அனுப்பவில்லை யென்றால், இப்போது அனுப்புங்கள். நேர்மையான உறுதியான அவரது குரல் பரவலாக ஒலிக்கவல்லது. எனது குரல் நேர்மையான உறுதியான குரலாயினும், எனது குரல் செய்தியாக வெகுதொலைவு ஒலிக்கக்கூடியதல்ல. தமிழர் நிலைமை தொடர்ந்து கவனித்து வருவேன்.

போராட்டத்தில் என்றும்
துணையாக,
ரான் ரெட்னூர்.

கியூபாவும் இலங்கையும் - க்ரிஸ் ஸ்லீ (இவர் ஆஸ்திரேலியாவின் சோசலிச கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனநாயக சோசலிச கண்ணோட்டம் எனும் அமைப்ப்பின் உறுப்ப்பினர்)

கியூபாவுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாளன் என்றளவில் நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் இதில் ஆச்சரியமடையவில்லை. இயன்றளவு பல நாடுகளுடன் நட்புறவு கொள்ள எண்ணும் கியூப வெளியுறவுக் கொள்கை, இந்த நாடுகளிலுள்ள அரசின் தன்மையை கணக்கில் கொள்வதில்லை.

வட அமெரிக்காவின் தடைகளை எதிர்கொண்டு தாக்குப் பிடிக்க கியூபா மேற்கொள்ளும் வழி இது. இதன் வெற்றியை ஐ.நா.சபையில் கியூபா மீதான வட அமெரிக்காவின் தடைகளை நீக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்நாடுகள் தமது மக்களை ஒடுக்குவதைக்கூட கியூபா விமர்சிக்காமல் இருப்பதே இதன் மறுபக்கம். கியூபாவில் வெளியுறவுக் கொள்கை பொதுமக்கள் விவாதத்திற்கு உட்படுவது கிடையாது.

புரட்சியின் தொடக்க ஆண்டுகளில் வட அமெரிக்க ஏகாதிபத்தியதத்தின் பகைமையினால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தனது மிகச்சில ஆதரவாளர்களுக்கு கோபமூட்டி விடாதிருப்பதற்காக (குறிப்பாக சோவியத் யூனியனை) கியூபா ஊடகங்களில் பொது விவாதத்தை அனுமதிக்கவில்லை. நாம் கியூபாவை தொடர்ந்து ஆதரிக்கவேண்டும். ஆனால் விமர்சனங்களோடு ஆதரிக்க வேண்டுமென்று கருதுகிறேன். தமிழர் போராட்டம் போன்ற பிரச்சினைகள் குறித்த நமது கருத்தை கியூபா அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கியூபா ஓரினப்பாலுறவு உரிமைகள் போன்றவற்றில் தனது முந்தைய தவறுகளைத் திருத்திக் கொண்டிருக்கிறது; எனவே வெளியுறவுக் கொள்கையிலும் அவ்வாறு திருத்திக் கொள்வார்களென எதிர்பார்க்கிறேன்.

பொலிவியா, நிகராகுவா அரசுகளின் நோக்கம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவைகூட கியூபா போன்றே இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளுடன் நட்புறவை விரும்புகிறார்களென்று நினைக்கிறேன். அவர்களும் தமது நிலையை மாற்றிக்கொள்ளும்படி நாம் அறிவுறுத்த வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com