Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூலை 2009

ஒபாமா : கெய்ரோ பேச்சும் ஆப்கான் குண்டு வீச்சும்
கி.வெங்கட்ராமன்

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கெய்ரோ பல்கலைக்கழக மைய மண்டபத்தில் பாரக்ஒபாமா பேசத் தொடங்கிய உடனேயே எழுந்த ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. ‘அமெரிக்காவுக்கும், இஸ்லாமிய உலகத்திற்கும்இடையில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வை நீக்கும் நோக்கோடு’ ஒழுங்கு செய்யப்பட்டதாக அமெரிக்க அரசு இக்கூட்டம் பற்றி பரப்புரை செய்திருந்தது. எகிப்து நாட்டின் பழம்பெருமை வாய்ந்த கெய்ரோ பல்கலைக்கழக மண்டபத்தில் 2009, சூன் 4 அன்று அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஒபாமாவின் உரை. உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த உரையைத்தான் இஸ்லாமிய கடவுள் வணக்கத்தோடு ஒபாமா தொடங்கினார். கூடியிருந்த இஸ்லாமிய இளைஞர்களும், அறிஞர்களும் கையொலி எழுப்பி உணர்ச்சிப் பொங்கப்பாராட்டினர். இப்போதெல்லாம் ஒபாமாவின் ஒவ்வொரு அசைவும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கின்றன. அண்மையில் சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு ஒபாமா நேர்காணல் அளித்துக்கொண்டிருந்தபோது விடாமல் ஒரு ஈ அவரைச் சுற்றிக் கொண்டிருந்தது.அந்த ஈயை ஒரே அடியில் ஒபாமா கொன்றார். அதுகூட உலகச் செய்தியாகிவிட்டது. ஜார்ஜ்பு‘ ஆட்சிக்காலத்தில் உலக இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்தக் கோபத்தையும் அமெரிக்கா ஆட்சி சம்பாதித்துக்கொண்டது. அந்தப் பகைமை தன் ஆட்சிக்குக்காலத்தில் தொடரக்கூடாது என்ற நோக்கில் கெய்ரோ உரை ஏற்பாடு செய்யப்பட்டதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகை அச்சுறுத்தும் ‘வன் தீவிரவாதம்’ (Violent Terrorism) பாலஸ்தீனம், அணு ஆயுதம், சனநாயகம், மதச் சுதந்திரம், பொருளியல் வாய்ப்புகள் என ஆறு தலைப்புகளை வரையறுத்துக் கொண்டு ஒபாமா உரையாற்றினார். அவரது உரை சிறந்த பேச்சாளருக்குரியதாக அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை.

ஆயினும் அவர் வெளியிட்ட கொள்கை அறிவிப்புகள் பெரும்பாலும் புதியன அல்ல. இசுரேல்- பாலஸ்தீனம் சிக்கல் குறித்து ஒபாமா அறிவித்தவை அடிப்படையில் புதியன அல்ல என்றாலும் பாலஸ்தீன தனி அரசு இசுரேலுக்கு அருகிலேயே நிலைபெற வேண்டும் என அவர் தெளிவுப்படுத்தினார். பாலஸ்தீன தாயகத்திற்குள் இசுரேலின் யூத குடியேற்ற விரிவாக்கம் தொடரக்கூடாது என வலியுறுத்தினார்.

ஆயினும் ஜெருசலேம் இரு நாட்டுக்கும் பொதுவான புனித நகராக இருக்கலாம் என்றும், ஆயுதமற்ற அமைதி வழிப்பாலஸ்தீனப் போராட்டம் என்றும், அவர் கூறியது யூத வெறி இசுரேல் சார்பை ஒபாமாவும் தொடருகிறார் என்பதை சுட்டிக்காட்டியது.

ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான் பற்றியும், அல்கொய்தா குறித்தும் பேசுகிறபோது வழக்கமான பாணியில் ‘பயங்கரவாதம்’ என்று அழைக்காமல் ‘வன் தீவிரவாதம்’ என்ற சொல்லை ஒபாமா திட்டமிட்டேப் பயன்படுத்தினார். அண்மைக் காலமாக பயங்கரவாதம் என்ற சொல் இஸ்லாமியர்களை குறிவைத்தே பயன்படுத்தப்பட்டது.

அதன்காரணமாகவே அச்சொல்லை ஒபாமா தவிர்த்திருக்கக் கூடும். ஆனால் ஆப்கானிஸ்தானத்தில் புதிய போர் முனையை அவர் திறக்க முனைகிறார் என்பது கெய்ரோ பேச்சில் தெளிவானது. தாலிபான்களை அழிப்பது என்ற போர்வையில் மீண்டும் ஆப்கானிஸ்தானத்தின் மீது அமெரிக்க வல்லரசு ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்போகிறது என்பதை அவருடைய பேச்சு உலகத்திற்கு அறிவித்தது.

உண்மையில் கெய்ரோ பேச்சுக்கு முன்னாலேயே அமெரிக்காவின் ஆப்கான் படையெடுப்புத் தொடங்கிவிட்டது. அமெரிக்க வான்படை ஸ்வாத் பள்ளத்தாக்கில் கண்மண் தெரியாத குண்டு வீச்சைத் தொடங்கிவிட்டது. ஒபாமா பதவிக்கு வந்து 100 நாட்களுக்குள் ஸ்வாத் பள்ளத்தாக்கில் ஆப்கான் மக்கள் ஏறத்தாழ 30 இலட்சம் பேர் அகதிகளாக விரட்டப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானோடு இணைந்து அமெரிக்கா நடத்தும் இந்த கொடும் போர் பக்தூன் மக்கள் செறிந்து வாழும் வாசிரிஸ்தான் பகுதி மீது திரும்பியுள்ளது. நாள்தோறும் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த ஆப்கான் ஆக்கிரமிப்புக்கு இயல்புக் கூட்டாளியாக ஜார்ஜ்பு‘ காலத்திலிருந்தே இந்திய அரசு விளங்குகிறது. அமெரிக்காவின் ஆதரவோடு நடக்கும் இந்தியச் சார்பு ஆட்சியாக ஆப்கானிஸ்தானத்தின் அமீது கர்சாய் பொம்மை ஆட்சி விளங்குகிறது.

இந்திய அமெரிக்க கூட்டணியை உறுதிப்படுத்திக்கொள்ள 26.06.2009 அன்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் தில்லி வந்தார். இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அவரது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் ஆப்கானிஸ்தான் போர் பற்றி ஜோன்ஸ் ஆலோசனை நடத்திவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

இதற்கு முன்பே இந்தியா - பாகிஸ்தான் முறுகல் நிலையை தளர்த்திக்கொள்ள அமெரிக்க அரசு இந்த இரு நாட்டு அரசுகளையும் வலியுறுத்தியது. ஒபாமாவின் சிறப்புத் தூதர் தில்லிக்கும், இசுலாமாபாத்திற்கும் சென்று திரும்பினார். அதற்கு பிறகே மன்மோகன் - சர்தாரி சந்திப்பு ரஷ்யாவில் நடந்தது. அதற்கு முன்பு வரை ‘மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்காதவரை பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தான் அரசுத் தலைவர்களை சந்திப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என இந்திய அரசு கொக்கரித்து வந்தது.

அமெரிக்கா வலியுறுத்தியதற்கு பிறகே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் , பாகிஸ்தான் பிரதமர் சர்தாரியும் ர‘யாவின் யாக்கடெரின்பர்க் நகரில் சந்தித்துக் கொண்டனர். “பேச்சுவார்த்தைக்கான வழிகளை எந்த சந்தர்ப்பத்திலும் மூடிவிடக்கூடாது”. என்று மன்மோகன்சிங் இங்கிதம் பேசியது இதற்குப் பிறகுதான். ஆப்கான் படையெடுப்பில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் கூட்டாளியாக இணைத்துக்கொள்ள வேண்டிய உடனடித் தேவை மட்டுமின்றி சீன - இந்திய நல்லுறவு அமெரிக்க வல்லாதிக்க நலனுக்கு இடையூறானது என்ற எச்சரிக்கை உணர்வும்தான் ஒபாமா அணுகுமுறைக்கு அடிப்படையாகும். இந்திய அரசைப் பொறுத்தவரை ராணுவ வகையில் அமெரிக்க வல்லாதிக்கத்தோடு இளைய பங்காளியாக இணைந்துகொள்கிற அதே நேரத்தில், பொருளியல் துறையில் தனக்குத் தோதான பிரதேசக் கூட்டணிகளை வலுப்படுத்திக் கொண்டு, அமெரிக்காவுடன் பொருளியம் கூட்டணிக் காண்பது என்ற இரட்டை அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

யாக்டரின்பர்க் நகரில் நடைபெற்ற சாங்காய் கூட்டமைப்பு மாநாட்டிலும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற பிரேசில் - ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பு மாநாட்டிலும் இந்தியாவின் அணுகுமுறை இதற்குச் சான்றாக அமைந்தது. ‘பிரிக்’ மாநாட்டில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு ஒரு பொது நாணயத்தைப் பயன்படுத்துவது குறித்து இந்நாடுகள் தீவிரமாக விவாதித்தன. மாற்றுப் பொது நாணயம் பற்றி உடனடியாக புதிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லைn யன்றாலும், அதுபற்றி தீவிரமாக ஆய்வு செய்து விரைவில் தீர்மானிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் சீனாவும், ர‘யாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் தங்கள் தங்கள் நாட்டு நாணயங்களைப் பயன்படுத்துவது என தீர்மானித்துவிட்டன.

ஜார்ஜ்புஷ் ஆட்சியைப் போலவே ஒபாமாவின் ஆட்சியும் இந்திய அரசோடு வல்லாதிக்கக் கூட்டணி காண்பதிலேயே கவனமாக இருக்கிறது. ஒபாமாவின் கெய்ரோ பேச்சும் அதனை உறுதி செய்கிறது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com