Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூலை 2009

ஈழப்பிணக்காட்டில் வட்டமிடும் வல்லூறுகள்
வான்முகில்

“போர் முடிந்து விட்டது. ஆனால் ஸ்ரீலங்காவின் வடக்குப் பகுதியிலுள்ள மக்களுக்குப் பொருளாதார ரிதியாகத் தாக்குப்பிடித்து நிற்பதற்கான போராட்டம் தொடங்கியுள்ளது. அமைதி ஏற்பட்டுவிட்டது. எனவே புத்தமதத்தின் வழி இந்தியாவுடன் ஆன்மீக ரிதியாக இணைந்துள்ள அழகிய நாடான ஸ்ரீலங்காவின் பெருமை மிக்க குடிமக்களாக வாழ்வதற்கு, ஸ்ரீலங்காவின் தமிழ் மக்களுக்குத் தன்மானத்துடன் அமைதியும், உணவும் தேவையாகிறது. இத்தகையப் பிரச்னைகள் அரசியல் ரிதியாகத் தீர்க்கப்படவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் இன்றைய உடனடித் தேவை அவர்களுக்கான வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதுதான்” என்ற முன்னோட்டத்துடன் முனைவர் எம்.எஸ்.சாமிநாதன் அவர்கள் ஈழத்தமிழர்களின் வாழ்வாதரங்களை மீட்பதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார். தமிழர்களை வாழவைக்க வந்துள்ள. ஷசிங்களரத்னா’ என்.ராமின் மதிப்புமிக்க நண்பரான இந்த ரட்சகர் இலங்கை சென்று ராஜபக்சேயுடன் கலந்தாலோசித்துவிட்டு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

“கடந்த காலத்தில் ஷவியட்நாமிற்கு’ அமெரிக்காவுடனான அதன் போர் முடிந்த பின்பும் கம்பூசியாவிற்கு போல்பாட்டின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்த பின்பும் அந்நாடுகளின் வேளாண்மையை அதிக வளர்ச்சி அடையச் செய்ய இந்தியா சரியான தருணத்தில் உதவி செய்துள்ளது. இன்று இருநாடுகளும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கின்றன. இதே போன்ற உதவியை இந்த சரியான தருணத்தில் ஸ்ரீலங்காவிற்கு அளிக்க வேண்டும்” என்று இந்திய அரசிடம் இவர் முறையிடுகிறார்.

சிங்கள இனவெறி அரசு, இந்திய அரசின் ஆதரவோடு நிகழ்த்திவரும் தமிழினப்படுகொலையை மூடிமறைத்து தமிழர் மறுவாழ்விற்கானத் திட்டம் என்ற போர்வையில் ஈழத்தமிழர்களின் மீது எம்.எஸ்.சுவாமிநாதன் தொடுத்துள்ள வன்முறை மிகவும் கொடூரமானது. இவரது மென்பொருள் வன்முறையை (software violence) - ஐ சொல்லாடல்களில் வரலாற்று உண்மைகளை மறைத்து இவர் தமிழினத்தின் மீது நிகழ்த்தியுள்ள வன்முறையை 'தமிழ்நெட்’ (Tamilnet.com) இணையதளத்தில் 'அடித்தளமற்ற கூரை’ (Roof without foundation) என்ற கட்டுரை தோலுரித்துக் காட்டியுள்ளது. அக்கட்டுரையின் முக்கியமான பகுதிகள் கீழே தரப்படுகின்றன:

முனைவர் சுவாமிநாதன் அவரது திட்டத்தால் பயனடையப் போவதாக அவர் கருதுகின்ற ஈழத்தமிழ் மக்களிடம் இத்திட்டம் குறித்து முதலில் விவாதித்து இருக்கவேண்டும். அவர் ஈழமக்களுக்கு குற்றம் இழைத்துள்ள இந்திய அரசின் பிரதிநிதியாக இலங்கை வந்துள்ளார். இத்திட்டம் குறித்து அவர் ஈழமக்களிடம் நேரடியாக விவாதித்திருந்தால். இந்திய அரசு தங்களது தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்டாலே போதுமானது என்றும் தங்கள் தேசத்தை புனரமைக்கும் பணியை எவருக்கும் தொந்தரவு தராமல் தாங்களே செய்து முடிப்போம் என்றும் கூறியிருப்பார்கள்.

ஒரு தேசத்திற்கு சொந்தமானவர்கள் என்ற பற்றுணர்வைப் பறித்துவிட்டு, வளர்ச்சிக்கான கட்டுமானத்தை வலிந்து திணிப்பது ஒரு அடிமைப்பட்ட மக்கள் சமூகத்தையே உருவாக்கும். ஷபுதுடெல்லியும்’, ஷகொழும்புவும’ தாங்கள் ஷதோற்கடித்துள்ள’ ஈழத்தமிழர்களுக்கு இந்த நிலைதான் ஏற்படவேண்டும் என விரும்புகின்றன. ஈழத்தமிழர்களை அரசியல் உரிமையற்ற அடிமைகளாக்க விரும்பும் இந்திய, இலங்கை அரசுகளின் உள்ளக்குரலாகவே சுவாமிநாதன் செயல்பட்டுள்ளதாக தமிழ்மக்கள் கருதுகின்றனர்.

இந்தியா, வியட்நாமிற்கும், கம்பூசியாவிற்கும் அளித்த உதவியை. ஈழமக்களுக்கும் தரவேண்டும் என்று அவர் கூறியுள்ளது மிகவும் தவறானது வன்மமானது. சுவாமிநாதன் வல்லரசிய ஆக்கிரமிப்புகளிலிருந்தும், போல் பாட்டுகளிடமிருந்தும் விடுதலை பெற்ற ஈழ மக்களுக்குத் தனது திட்டத்தைத் தரவில்லை. ஈழமக்களை ஒடுக்கும் போரில் இந்திய அரசு முதன்மையான பங்கு வகித்துள்ளது என்பதை அவர் மூடிமறைக்கிறார். அவரது இன்றைய இந்தியா ஈழமக்களின் இனப்படுகொலையில் தனது பங்கேற்பிற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.

ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யும் அரசியல் தீர்வு இன்னும் எட்டப்படாத நிலையில் போர் முடிந்து அமைதி ஏற்பட்டுவிட்டது என்று சுவாமிநாதன் கூறுவது மிகவும் தவறான அணுகுமுறை, அரசியல் நீதியற்ற வளர்ச்சியைத் திணிக்கும் வல்லரசிய வட்டாரங்களின் ஒடுக்குமுறைக் கருத்தியலுக்கு உறுதுணையாக இருப்பது இந்திய-ஈழத்தமிழர்களின் உறவுக்கு ஒருபோதும் உதவாது.

ஈழத்தமிழர்களின் நிலஉரிமை இந்திய அரசின் உதவியுடன் பறிக்கப்பட்ட பின்பே, சாமிநாதன் இந்தியா விதைகளைத் தந்துஉதவும் என்கிறார். ஈழமக்களின் இன்றைய தேவை கருத்துக்களோ, விதைகளோ, உரமோ, அங்கன்வாடிகளோ அல்ல. தங்களுக்கு உகந்த வளர்ச்சிமுறையை வடிவமைத்துக் கொள்ளவும், தங்களது நலனை தாங்களே கவனித்துக் கொள்வதற்குமான அரசியல் சுதந்திரமே அவர்களது இன்றைய தேவை. ஈழத்தமிழர்கள், வேளாண்துறையில் தங்களுக்கே உரிய நீண்ட செழுமையான மரபினை உடையவர்கள். அவர்கள் வேளாண்மையில் எவரிடமும் பாடம் கற்கத் தேவையில்லை.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்காத இந்திய அரசின் பிரதிநிதியாக உள்ள முனைவர் சுவாமிநாதனை வரவேற்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சகதமிழராக, தமிழரின் தன்மானத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கத்துடன் ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட விரும்பினால், அவரை வரவேற்று ஏற்க ஈழத்தமிழினம் என்றும் தயாராக உள்ளது. ஈழத்தமிழர்களை ஷவாழ்விக்க’ திட்டம் தந்துள்ள எம்.எஸ். சுவாமிநாதன் கடந்த கால வரலாற்றை இந்திய வேளாண்மைக்கு அவர் செய்த, செய்து வரும் மன்னிக்கவே முடியாத மாபாதகங்களை நினைவு கூர வேண்டியது இன்று தேவையாகியுள்ளது.

சுவாமிநாதன் பொய்யான ஆய்வு முடிவுகளை வெளியிட்டே 1971ஆம் ஆண்டிற்கான மகாசேசே விருதினைப் பெற்றார். அறிவியல் உலகில் மிகவும் மதிப்புமிக்க ஷநியூ சயன்டிஸ்ட்’ (New Scientist) என்ற ஆய்விதழ் “இந்திய முதன்மை உணவு விஞ்ஞானி பொய்யான தரவுகளை வெளியிடுகிறார்’’ என்ற தலைப்பில் சுவாமிநாதன் ஆய்வுகள் குறித்து 1974ஆம் ஆண்டு இரண்டு பக்கக் கட்டுரை வெளியிட்டது. இந்தக் கட்டுரையின் முடிவில் கட்டுரையாசிரியர் எழுப்பியுள்ள கேள்வி மிகவும் முக்கியமானது.

“அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுகளை அதிக அளவிற்கு வெளியிட்டுள்ள ஒரு விஞ்ஞானியை, அதே துறைக்கான ஆலோசனைக் குழுவின் உச்ச பதவியில் ஐ.நா. சபை அமர்த்தியுள்ளது. இத்தகைய ஆபத்தான முடிவை ஐ.நா. அமைப்பால் எவ்வாறு எடுக்க முடிந்தது?’’ பொய்யான தரவுகளை வெளியிட்டு மகாசேசே விருது பெற்ற விஞ்ஞானியே இன்றளவும் நமது தேசிய வேளாண் கொள்கையை தீர்மானிக்கும் பொறுப்பில் இருப்பது நமது விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.

2005ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கும், வட அமெரிக்க அதிபர் ஜார்ஜ்பு‘‘{ம் இரண்டாவது பசுமைப்புரட்சி என்ற பெயரில் உயிரியல் தொழில்நுட்பத்தை குறிப்பாக மரபீனி மாற்றுத் தொழில் நுட்பத்தை நம் விவசாயிகளின் மீது திணிப்பதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் வேளாண்மைக்கான இந்தியஅமெரிக் க அறிவுசார் முன்முயற்சி என்றழைக்கப்படுகிறது (Indo-Us Knowledge Initiative for Agriculture).

இந்த இரண்டாவது பசுமைப்புரட்சிக்கான திட்டக்குழுவில் இந்தியாவின் தரப்பில் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் கௌரவ ஆலோசகராக உள்ளார். வடஅமெரிக்கா தரப்பில் சுவாமிநாதனின் குருவாகிய பசுமைப்புரட்சிக்காக நோபல் பரிசு பெற்ற ஷநார்மன் போர்லாக்’ கௌரவ ஆலோசகராக உள்ளார். முதல் பசுமைப்புரட்சியால் இந்திய வேளாண்மையை அழித்தவர்களே இரண்டாம் பசுமைப்புரட்சிக்கும் தலைமையேற்று உள்ளனர்.

இவர்களைத் தவிர, இக்குழுவில் வடஅமெரிக்க பன்னாட்டு கூட்டுக் குழுக்களான ஏ.டி.எம்., மான்சான்டோ,வால்மார்ட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். முதல் பசுமைப்புரட்சியால் இந்திய விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த ஆய்வுமின்றி மீண்டும் இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண்மை வடஅமெரிக்க பன்னாட்டுக் குழுமங்களின் லாப வேட்டைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. முதல் பசுமைப்புரட்சியால் நமது நிலம் நீர் மாசுபட்டு, விவசாயிகள் சாவின் விளிம்பிற்கேத் தள்ளப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பசுமைப்புரட்சியின் தாக்கங்களிலிருந்து எந்த ஒரு படிப்பினையும் பெறாமலே இரண்டாம் பசுமைபுரட்சி நம்மீது திணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த அறிக்கை குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்படவில்லை. இந்த அறிக்கை குறித்து விவசாயிகளிடமோ, அவர்களது சங்கங்களிடமோ எத்தகைய கலந்தாய்வும் நடத்தப்படவில்லை. இந்திய வேளாண் விஞ்ஞானிகளுக்கும்,குறிப்பாக இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தை (ICRA) சார்ந்த விஞ்ஞானிகளுக்கும் இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரியவில்லை.

சனநாயகமற்ற முறையில் மேலிருந்து எத்தகைய விவாதமுமின்றி மரபீனி மாற்றுத் தொழில்நுட்பம் நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த அறிக்கையில் ஒருஇடத்தில் கூட தப்பித்தவறி ஷவிவசாயி’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பதை ஹைதராபாத்திலுள்ள நீடித்த வேளாண்மைக்கான ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த கவிதா குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்து கொண்டே ஷவிவசாயி’ என்ற சொல்லையே பயன்படுத்தாத, இந்திய வேளாண்மையையும், விவசாயி களையும் வடஅமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் ஒப்பந்த அறிக்கையை உருவாக்கி யுள்ளார் சுவாமிநாதன். இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான ஒப்பந்தம் குறித்து 2006ஆம்ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹைதராபத்திலுள்ள நீடித்த வேளாண்மைக்கான ஆய்வு மய்யம் (Center for Sustainable Agriculture) இரண்டுநாள் கருத்தரங்கை நடத்தியது. அக்கருத்தரங்கில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளையில் ’உயிர்மப்பன்மயத்திற்கான“ ஆலோசகராகப் பணியாற்றும் முனைவர் பாலாரவி ஷவளர்ந்து வரும் புதியதொழில் நுட்பங்களும், அவற்றின் அறிவு சார் சொத்துரிமை சார்ந்த சிக்கல்களும’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரது ஆய்வறிக்கையில் இரண்டாம் பசுமைப்புரட்சிக்கான ஒப்பந்தம் நம்நாட்டின் அரிய உயிர்மவளங்களை வட அமெரிக்கா கொள்ளை அடிப்பதற்கு வழி செய்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். நமது விவசாயிகளின் உழைப்பினால் உருவான அரிய உயிர்மவளங்கள் பறிபோகும் நிலையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, நம்நாட்டு வேளாண் பல்கலைகழகங்கள், வட அமெரிக்கப் பல்கலை கழகங்களுடனும், அந்நாட்டின் தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து ஆய்வில் ஈடுபடுகின்றன. இந்த ஆய்விற்காக நமது நாட்டின் உயிர்மவளங்கள் இருநாட்டு ஆய்வு நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் நமது நாட்டின் அரிய முக்கிய உயிர்மவளங்கள் மிகப்பெரிய அளவில் வடஅமெரிக்க தனியார் நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. நமது பயிர்களின், விலங்குகளின் மீன்களின் மரபீனி வளங்கள் வடஅமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

நம் நாட்டின் உயிர்ம வளங்களை வடஅமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதற்கான இருதரப்புப் பரிமாற்ற ஒப்பந்தம் (Mutual Tranfer Agreement) எதுவும் கையெழுத்திடப்படவில்லை என்பதை முனைவர் பாலா ரவி சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாம் பசுமைப்புரட்சிக்கான ஒப்பந்தம் நமது உயிர்ம வளங்களை வடஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் எத்தகைய கட்டுப்பாடுமின்றி எடுத்து செல்ல வழிவகை செய்துள்ளது.

நம்நாட்டு வேளாண் விஞ்ஞானிகள் நம்நாட்டு உயிர்ம வளங்களை ஆய்விற்காக வடஅமெரிக்காவிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவில் உண்டாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறப் போவது யார் என்பதும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில், நமது பொதுத்துறை அமைப்புகள் வடஅமெரிக்கத் தனியார் நிறுவனங்களுடனும், பல்கலைக் கழகங்களுடனும் இணைந்து செய்துள்ள ஆய்வுகளின் அனுபவங்களிலிருந்து தக்க பாடங்களை நாம் கற்றிருக்க வேண்டும்.

காநாடக மாநிலத்திலுள்ள தார்வார் வேளாண் பல்கலைக்கழகம், வட அமெரிக்க ராக்பெல்லர் அறக்கட்டளையிலிருந்து பிட்டி மரபீனியைப் பெற்று புதிய ரக பிட்டி பருத்தியை உருவாக்கியது. இவர்கள் உருவாக்கிய பி.ட்டி பருத்தி விதைகளை, மான்சாண்டோ போல்கார்டு பி.ட்டி விதைகளை விட குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்ய முடியும் என்று கருதியே இந்த ஆய்வினை மேற்கொண்டனர். புதிதாக உருவாக்கிய பிட்டி பருத்தியை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அனுமதிகேட்டு தார்வார் பல்கலைக்கழகம் ராக்பெல்லர் அறக்கட்டளையை அணுகியபோது, அவர்கள தாங்கள் தந்த பிட்டி மரபீனி மான்சாண்டோ பன்னாட்டுக் குழுமத்திற்குச் சொந்தமானது எனக்கூறி விற்பனைக்கு அனுமதி தரவில்லை.

அவர்கள் உருவாக்கிய பிட்டி பருத்தியை இன்றுவரை நம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யமுடியவில்லை. மேற்சொன்ன அனுபவங் களிலிருந்து எந்த படிப்பினையும் பெறாமல், இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேளாண்மைக்கான அறிவுசார் ஒப்பந்தம் வட அமெரிக்க வேளாண் மாதிரியை இந்தியாவில் அதிவேகமாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமேயன்றி வேறல்ல. வட அமெரிக்காவில் விவசாயிகள் நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு விவசாயம் பன்னாட்டுக் கூட்டுக் குழுமங்களிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. 1940களின் இறுதியில் வட அமெரிக்காவில் விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதமாக இருந்தது. 2000ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், அதன் வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகளின் எண்ணிக்கைக் குறிப்பிடப்படவில்லை.

விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. உலகவங்கியின் ஒரு ஆய்வு இந்தியாவில் 2015ஆம் ஆண்டு ஏறக்குறைய 40 கேடி விவசாயிகள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்வார்கள் எனக் கணக்கிட்டுள்ளது. இந்த இhண்டாம் பசுமைப்புரட்சித் திட்டம் விவசாயிகளை முற்றிலுமாக கிராமங்களிலிருந்து வெளியேற்றும் திட்டமே. டாடா கார் தயாரிப்பிற்காக மக்களின் நிலங்களை பறிமுதல் செய்த மேற்கு வங்க இடது சாரி அரசின் ஆலோசகராக எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளார்.

இவரது ஆலோசனையின் அடிப்படையிலேயே மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் அம்மாநிலத்திற்கான விவசாயக் கொள்கையை உருவாக்கியுள்ளார். நம் நாட்டின் வேளாண்மை யையும், விவசாயிகளையும் முற்றிலுமாக அழித்தொழிக்கும் இரண்டாம் பசுமைப்புரட்சித் திட்டத்தை உருவாக்கிய கௌரவ ஆலோசகர் சுவாமிநாதன், ஈழத்தமிழர்களுக்கு ஷமறுவாழ்வு அளிப்ப்பதற்க்காக’ ராஜபக்சேவுடன் இணைநது ஒரு வேளாண் திட்டத்தைத் தந்துள்ளது வேடிக்கையான செய்தி.

சொந்த நாட்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் வட அமெரிக்க பன்னாட்டுக் குழுமங்களுக்கு அடிமைப்படுத்தியுள்ள இந்த சுவாமிநாதன் ஈழத்தமிழர்களின் பாதுகாவலரா?



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com